அரித்துவார் கும்பமேளா
அரித்துவாரில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நீராட்டு சடங்கு From Wikipedia, the free encyclopedia
அரித்துவாரில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் நீராட்டு சடங்கு From Wikipedia, the free encyclopedia
அரித்துவார் கும்பமேளா (கிண்ணத் திருவிழா) (Haridwar Kumbh Mela) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாவட்டத்திலுள்ள அரித்துவாரில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கும்பமேளாவாகும். இந்து சோதிடத்தின்படி சரியான தேதி தீர்மானிக்கப்படுகிறது : வியாழன் கும்பத்தில் இருக்கும் போதும் சூரியன் மேழத்தில் நுழையும் போது இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது.[1]
அரித்துவார் கும்பமேளா | |
---|---|
14 ஏப்ரல் 2010 அன்று ஹரனின் படித்துறையில் புனித நீராட்டத்திற்காக யாரீகர்கள் கூடியுள்ளனர் | |
நிகழ்நிலை | நடைமுறையில் உள்ளது |
வகை | திருவிழா, மதக் கூட்டம் |
காலப்பகுதி | ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை |
நிகழ்விடம் | கங்கை ஆற்றங்கரை |
அமைவிடம்(கள்) | அரித்துவார், உத்தராகண்டம் |
ஆள்கூறுகள் | 29.958°N 78.171°E |
நாடு | இந்தியா |
முந்தைய நிகழ்வு | 2021 |
அடுத்த நிகழ்வு | 2033 |
பங்கேற்பவர்கள் | அகாராக்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் |
வலைத்தளம் | |
kumbhmelaharidwar |
இந்த நிகழ்வு இந்துக்களுக்கும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட பிறருக்கும் ஆழ்ந்த மத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. வரலாற்று ரீதியாக, இது ஒரு முக்கியமான வணிக நிகழ்வாக இருந்துள்ளது. அரேபியாவிலிருந்து வணிகர்கள் இந்தத் திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.[2]
கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை அரித்துவார் கும்பமேளா நடத்தத் திட்டமிடப்பட்டது.[3] ஒரு கும்பமேளா முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அர்த்த கும்ப மேளா ("அரை கும்பம்") நடைபெறுகிறது. கடந்த அர்த் கும்ப மேளா 2016இல் நடந்தது
கும்பமேளா நடைபெறும் நான்கு இடங்களில் அரித்துவாரும் ஒன்று. பிரயாகை (அலகாபாத்), திரிம்பகம் (நாசிக்) , உஜ்ஜைன் ஆகியவை பிற இடங்களாகும்.[4] பண்டைய இந்திய இலக்கியங்களில் ஆற்றங்கரையில் குளிக்கும் திருவிழாக்கள் பற்றி பல குறிப்புகள் இருந்தாலும், கும்பமேளாவின் சரியான காலம் நிச்சயமற்றது.
அரித்துவாரில் நடைபெறும் திருவிழா அசல் கும்பமேளாவாகத் தோன்றுகிறது. ஏனெனில் இது 'கும்பம்' என்ற சோதிட அடையாளத்தின்படி நடத்தப்படுகிறது. மேலும் இதன் 12 வருட சுழற்சியைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.[5] அரித்துவார் கும்பமேளா குறைந்தது 1600களின் முற்பகுதியில் இருந்து தொடங்குகிறது. குலாசத்-உத்-தவாரிக் (1695), சாஹர் குல்ஷன் (1789) ஆகியவை "கும்ப மேளா" என்ற பெயரைப் பயன்படுத்தும் ஆரம்பகால நூல்கள். இந்த இரண்டு நூல்களும் அரித்துவாரின் திருவிழாவை மட்டுமே விவரிக்க "கும்பமேளா" என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன. இருப்பினும் அவை அலகாபாத் (வருடாந்திர மக கும்பமேளா) , நாசிக் கும்பமேளா போன்ற திருவிழாக்களையும் குறிப்பிடுகின்றன.[6] மற்ற மூன்று இடங்களில் நடைபெறும் கும்பமேளா அரித்துவாரின் கும்பமேளாவை தழுவியதாகத் தெரிகிறது. [7]
முஸ்லிம் படையெடுப்பாளர் தைமூர் 1398இல் அரித்துவாரை ஆக்கிரமித்தார். மேலும் கும்பமேளாவில் பல யாத்ரீகர்களை படுகொலையும் செய்தார்.[8]
ஈரானைச் சேர்ந்த ஒரு குறிப்பிடத்தக்க பாரசீக வரலாற்றாசிரியரான மொக்சின் பானி தபெஸ்தான்-இ மசாஹேப் என்ற தனது படைப்பில் 1640இல் அரித்துவாரில் அகாராக்களிடையே நடந்த ஒரு மோதலைப்பற்றிக் குறிப்பிடுகிறார். ஒருவேளை இது கும்பமேளாவாக இருக்கலாம்.[9][10]
குலாசத்-உத்- தவாரிக் (1695) என்ற முகலாய ஆட்சியின் தில்லி பகுதிகளைப் பற்றிய ஒரு விளக்கத்தில் திருவிழா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைசாகி காலத்தில் சூரியன் மேழ ராசியில் நுழையும் போது, அருகிலுள்ள கிராமப்புற மக்கள் அரித்துவாரில் கூடுவார்கள் என்று அது கூறுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சூரியன் கும்பத்தில் பிரவேசிக்கும் போது, அரித்துவாரில் தொலைதூர மக்கள் கூடுவார்கள். இத்தருணத்தில் ஆற்றில் நீராடுவதும், அன்னதானம் செய்வதும், முடியை மொட்டையடிப்பதும் புண்ணியச் செயல்களாகக் கருதப்படும். இறந்தவர்களின் இரட்சிப்புக்காக மக்கள் இறந்தவர்களின் எலும்புகளை ஆற்றில் வீசுவார்கள் என்றும் அது கூறுகிறது.[11]
வியாழன் கும்பத்தில் நுழையும் வைசாகி மாதத்தில் அரித்துவாரில் மேளா நடைபெறும் என்றும் சாஹர் குல்ஷன் (1759) என்ற நூல் கூறுகிறது. இந்தத் திருவிழா 'கும்பமேளா' என்று அழைக்கப்பட்டது என்றும் அதில் லட்சக்கணக்கான பக்கிரிகளும். சன்யாசிகளும் கலந்து கொண்டனர் என்றும் குறிப்பிடுகிறது. மேளாவில் கலந்து கொள்ள வந்த பிரயாகையின் (அலகாபாத்) பக்கிரிகளை உள்ளூர் சன்யாசிகள் தாக்கியதாகவும் அது கூறுகிறது.[12]
18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், வடமேற்கு இந்தியாவில் அரித்துவார் கும்பமேளா ஒரு முக்கிய வணிக நிகழ்வாக மாறியது.[9]
1760இல் நடந்த திருவிழாவில் சைவ சன்னியாசிகளுக்கும் வைணவ பைராகிகளுக்கும் இடையே வன்முறை மோதல் ஏற்பட்டது. 1760 மோதலுக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் திருவிழாவைக் கட்டுப்படுத்தி சைவர்களை நிராயுதபாணியாக்கும் வரை, வைணவ சாதுக்கள் அரித்துவாரில் பல ஆண்டுகளாக நீராட அனுமதிக்கப்படவில்லை.[13] கிழக்கிந்திய நிறுவனத்தின் புவியியலாளர் கேப்டன் பிரான்சிஸ் ராப்பரின் 1808 கணக்கின்படி, 1760 மோதலில் 18,000 பைராகிகள் கொல்லப்பட்டனர். நிகழ்வில் பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பின்னணியில் ராப்பர் இதனைக் கூறினார். [7] 1888ஆம் ஆண்டில், அலகாபாத்தின் மாவட்டத் குற்றவியல் நடுவர், இறந்தவர்களின் எண்ணிக்கை "சந்தேகத்திற்கு இடமின்றி ரேப்பரால் மிகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்" என்று எழுதினார். [7] வரலாற்றாசிரியர் மைக்கேல் குக்கின் கூற்றுப்படி, இந்த எண்ணிக்கை 1800 ஆக இருக்கலாம்
1783ஆம் ஆண்டு அரித்துவாரில் நடந்த கும்பமேளாவின் போது வாந்திபேதி ஏற்பட்டது.[14] அந்த ஆண்டு 1-2 மில்லியன் பார்வையாளர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர். இவர்களில், முதல் எட்டு நாட்களில் 20,000க்கும் மேற்பட்டோர் அரித்துவார் நகரத்தில் மட்டுமே இறந்தனர். மேலும் திருவிழாவுடன் இந்த நோய் முடிந்தது. நகரத்திலிருந்து சுமார் 8 மைல் தொலைவில் இருந்த பக்கத்து கிராமமான சுவாலாபூரில் (இப்போது ஒரு நகரம்) இந்த நோய் கண்டறியப்படவில்லை.[15]
கும்பமேளாவை முதலில் நேரில் பார்த்த கேப்டன் தாமஸ் ஹார்ட்விக் என்ற பிரித்தானியர் ஏசியாடிக் ரிசர்சஸில் ஒரு கட்டுரையாக எழுதியுள்ளார். இந்த நேரத்தில், அரித்துவார் மராட்டியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. யாத்ரீகர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட வரிகளின் பதிவேட்டின் அடிப்படையில், ஹார்ட்விக் மேளாவில் கலந்து கொண்ட மக்களின் அளவை 2-2.5 மில்லியன் என மதிப்பிட்டார். அவரது கூற்றுப்படி, "எண்ணிக்கையிலும், சக்தியிலும்" சைவ சாதுக்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தினர் எனத் தெரிகிறது. அடுத்த மிக சக்திவாய்ந்த பிரிவினராக வைணவ பைராகிகள் இருந்துள்ளனர். சைவ சாதுக்கள் வாள், கேடயங்கள் ஆகியவற்றை ஏந்தி மேளா முழுவதையும் நிர்வகித்தார்கள். அவர்களின் தலைவர்கள் அனைத்து புகார்களையும் கேட்டு முடிவெடுக்க குழுக்கூட்டத்தை தினமும் நடத்தினர். சாதுக்கள் தாங்கள் வசூலித்த வரிகளை மராட்டிய கருவூலத்தில் செலுத்தவில்லை.
மேளாவில் சீக்கியக் குழுவில் ஏராளமான உதாசி துறவிகள் இருந்தனர். அவர்களுடன் சுமார் 12,000-14,000 கால்சா குதிரைப்படை வீரர்கள் இருந்தனர். பாட்டியாலாவைச் சேர்ந்த சாகிப் சிங், ராய் சிங் பாங்கி , சேர் சிங் பாங்கி ஆகியோர் குதிரைப்படையை வழிநடத்தினர். சீக்கிய வீரர்கள் சுவாலாபூரில் முகாமிட்டனர். அதே நேரத்தில் உதாசிகள் திருவிழா நடக்கும் இடத்திற்கு அருகில் ஒரு இடத்தில் தங்கள முகாமைத் தேர்ந்தெடுத்தனர். உதாசி தலைவர் சைவ சாதுக்களின் தலைவரிடம் அனுமதி பெறாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் தங்கள் கொடியை நிறுவினார். இதனால் கோபமடைந்த சைவ சாதுக்கள் உதாசிகளின் கொடியை கீழே இழுத்து அவர்களை விரட்டினர். பின்னர் இவர்களுக்குள் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அடுத்த சில நாட்களில் இரு குழுக்களிடையே எந்த மோதலும் இல்லை. இருப்பினும், ஏப்ரல் 10, 1796 அன்று காலை 8 மணியளவில் (மேளாவின் கடைசி நாள்), சீக்கியர்கள், சைவ சாதுக்களையும் உதாசி அல்லாத பிற யாத்ரீகர்களையும் தாக்கினர். இதற்கு முன், அவர்கள் தங்கள் முகாமில் இருந்த பெண்களையும் குழந்தைகளையும் அரித்துவார் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு மாற்றிவிட்டனர். சைவ சாதுக்களின் தலைவர்களில் ஒருவரான மௌன்புரி உட்பட சுமார் 500 சாதுக்களை சீக்கியர்கள் கொன்றனர். படுகொலையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் ஆற்றைக் கடக்கும் போது பலர் நீரில் மூழ்கினர். பிரிட்டிசு கேப்டன் முர்ரே, தலைமையில் ஒரு படைப்பிரிவு படித்துறையில் நிறுத்தப்பட்டது.[16][17][18]
1804இல், மராத்தியர்கள் சகாரன்பூர் மாவட்டத்தை (அந்த நேரத்தில் அரித்துவார் இதன் ஒரு பகுதியாக இருந்தது) கிழக்கிந்திய நிறுவனத்துக்கு விட்டுக் கொடுத்தனர். நிறுவனத்தின் ஆட்சிக்கு முன், அரித்துவாரில் கும்பமேளாவை சாதுக்கள் என்று அழைக்கப்படும் இந்துத் துறவிகளின் அகாராக்கள் (பிரிவுகள்) நிர்வகித்து வந்தனர். மராட்டியர்கள் மற்ற அனைத்து மேளாக்களுக்கும் வரும் வாகனங்களுக்கும் பொருட்களுக்கும் வரி விதித்தனர். ஆனால் கும்பமேளாவின் போது, அவர்கள் அனைத்து அதிகாரத்தையும் தற்காலிகமாக அகாரக்களுக்கு மாற்றினர்.[19] சாதுக்கள் வணிகர்களாகவும் போர்வீரர்களாகவும் இருந்தனர். வரி வசூலிப்பதோடு மட்டுமல்லாமல், காவல் பணியையும் நீதித்துறை பணிகளையும் மேற்கொண்டனர். பெருகிய முறையில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட சாதுக்களின் வணிகர்-வீரர் பாத்திரத்தை கிழக்கிந்திய நிறுவனத்தின் நிர்வாகம் கடுமையாகக் கட்டுப்படுத்தியது. [7]
1857 சிப்பாய் கிளர்ச்சிக்குப் பிறகு, கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டு, அதன் பகுதிகள் பிரித்தானியப் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பிரிட்டிசு அரசு ஊழியர் இராபர்ட் மான்ட்கோமெரி மார்ட்டின், தனது தி இந்தியன் எம்பயர் (1858) என்ற புத்தகத்தில், அரித்துவாரில் நடக்கும் கும்பமேளாவின் பிரம்மாண்டத்தையும் அழகு பற்றிய போதுமான யோசனையையும் தெரிவிப்பது கடினம் என்று குறிப்பிடுகிறார். அவரைப் பொறுத்தவரை, திருவிழாவில் பார்வையாளர்கள் ஏராளமான இனங்களையும், பிராந்தியங்களையும் சேர்ந்தவர்கள். பூசாரிகள், வீரர்கள், மத போதகர்கள் தவிர, ஏராளமான வணிகர்களும் கலந்து கொண்டனர்: குதிரை வியாபாரிகள், யானை வியாபாரிகள், தானிய வியாபாரிகள் ( பண்யாக்கள் ), மிட்டாய் வியாபாரிகள், துணி வியாபாரிகள், பொம்மை விற்பனையாளர்கள். குதிரை வியாபாரிகள் புகாரா, காபூல், துர்கிஸ்தான், அரேபியா பெர்சியா போன்ற நாடுகளில் இருந்து வந்தனர். குதிரைகளும் யானைகளும் தவிர, "கரடிகள், சிறுத்தைகள், புலிகள், அனைத்து வகையான மான்கள், குரங்குகள், பாரசீக வேட்டை நாய்கள், அழகான பூனைகள், அரிய வகைபறவைகள்" உட்பட பல விலங்குகள் திருவிழாவில் விற்கப்பட்டன. ஐரோப்பியர்களும் தங்கள் பொருட்களை திருவிழாவில் விற்றனர். மேளாவில் நடனப் பெண்களும் கலந்து கொண்டு, பணக்காரப் பார்வையாளர்களுக்காக நடனமாடினார்கள்.[2]
பல இந்து மன்னர்களும், முஸ்லிம் நவாப்புகளும், சீக்கிய அரச குடும்பத்தினரும் இந்தத் திருவிழாவிற்கு வருகை தந்தனர். சர்தானாவின் பேகம் சம்ரு, 1,000 குதிரைப்படை, 1,500 காலாட்படை கொண்ட தனது பரிவாரங்களுடன் அடிக்கடி திருவிழாவிற்கு வருவார். ஒரு சில கிறித்துவ மறைபணியாளர்களும் மேளாவை பார்வையிட்டுள்ளனர். மேலும் "கீழை நாடுகளின் பல்வேறு பேச்சுவழக்குகளில்" மொழிபெயர்க்கப்பட்ட விவிலியத்தின் பிரதிகளையும் விநியோகித்தனர்.[2]
பிராமணர்கள் வரிகளை வசூலித்ததாக மார்ட்டின் குறிப்பிடுகிறார். ஆனால் பூசாரிகள் சடங்குகள் ஏதுமின்றி நடத்தப்பட்ட நீராட்டுச் சடங்குகளில் எந்தப் புனிதப் பாத்திரத்தையும் செய்யவில்லை.
ஆனால் எந்த பூசாரி சடங்குகளும் இல்லாமல் செய்யப்படும் நீராடும் சடங்குகளில் எந்த ஒரு புனிதமான பங்கையும் கொண்டிருக்கவில்லை. முந்தைய ஆண்டுகளில், பக்தர்கள் ஆற்றங்கரையை நோக்கி விரைந்தபோது நெரிசலில் சிக்கி பலர் இறந்ததாக அவர் கூறுகிறார். இருப்பினும், அரசு புதிய படித்துறை அமைத்து, அதற்கு செல்லும் சாலையை அகலப்படுத்தியதால், நெரிசல் அபாயம் குறைந்தது.[2]
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவலர்களும், நீதித்துறை நடுவர்களும் குவிக்கப்பட்டனர். தேராதூனிலிருந்த கூர்க்கா வீரர்களின் சிர்மூர் படைப்பிரிவு அமைதியை நிலைநாட்ட நிறுத்தப்பட்டது.[2]
1867 மேளாவில் ஆற்றங்கரையோர நிலத்தின் 9 மைல் அளவில் வெவ்வேறு இடங்களில் 2 முதல் 6 மைல் அகலத்தில் யாத்ரீகர்களுக்கான முகாம் அமைந்திருந்தது. 1867ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி இரவு ஆங்கிலேயர்களால் எடுக்கப்பட்ட யாத்ரீகர் முகாமின் தோராயமான கணக்கெடுப்பின்படி, யாத்ரீகர்களின் எண்ணிக்கை 2,855,966 ஆக இருந்தது. ஏப்ரல் 9க்கு முன்னும் பின்னும் முகாமுக்கு வருகை தந்த யாத்ரீகர்கள் உட்பட மொத்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை சுமார் 3 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.[23]
சகாரன்பூர் மாவட்ட நீதிபதி எச். டி. ராபர்ட்சன், மேளா நிர்வாகத்திற்கு தலைமை தாங்கினார். விலைவாசி உயர்வைத் தடுக்க நிர்வாகம் உணவுப் பொருட்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியது. மேலும், நோய்கள் பரவுவதைத் தடுக்க அசுத்தமான உணவை அழிக்கவும் உத்தரவிட்டது.[19] 1867 கும்பமேளா பிரித்தானிய இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையை அதிகாரப்பூர்வமாக ஈடுபடுத்திய முதல் திருவிழாவாகும். மக்கள் தங்கள் உறவினர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதை தவிர்க்க மறைத்துவைத்த தொற்று நோய்களைக் கண்டறிய பூர்வீகக் காவலர்கள் நியமிக்கப்பட்டனர். தொற்று நோய்கள் சட்டத்தின்படி, பதிவு செய்யப்படாத பால்வினைத் தொழிலாளிகளை காவலர்கள் வேட்டையாடி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும்படி கட்டாயப்படுத்தினர். 1867 மேளாவின் போது பொது கழிப்பறைகளும், கழிவுகளை அகற்றுவதற்கான அகழிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இருப்பினும், அவை யாத்ரீகர்களிடையே பிரபலமடையவில்லை, அவர்களில் பலர் திருவிழா நடக்கும் இடத்திற்கு அருகிலும் அருகிலுள்ள காடுகளிலும் திறந்தவெளியிலும் மலம் கழிப்பதைத் தொடர்ந்தனர். மக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுப்பதும் கழிவறைகளில் அடைத்து வைப்பது போன்ற "பாதுகாப்பு" பணிக்கு ஏராளமான காவலர்கள் நியமிக்கப்பட்டனர். பல யாத்ரீகர்கள், குறிப்பாக பெண்கள், மேளாவில் 2-3 நாட்கள் தங்கியிருக்கும் போது இவ்வாறு மலம் கழிப்பதைத் தவிர்ப்பார்கள்.[24]
முந்தைய மேளாக்களைப் போலவே, 1867 மேளாவில் வாந்தி பேதி வழக்குகள் பதிவாகின. ஆனாலும் தொற்றுநோய் தடுக்கப்பட்டது. ஏப்ரல் 9ஆம் தேதி, கன்கால் அருகே 14வது வங்காளக் குதிரைப்படையைச் சேர்ந்த புல் வெட்டும் தொழிலாளி ஒருவன் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டான். சிகிச்சையில் அவன் விரைவில் குணமடைந்தான். ஏப்ரல் 13 அன்று, யாத்திரை முகாமில் 8 வாந்திபேதி வழக்குகள் பதிவாகியுள்ளன. ஏப்ரல் 15ஆம் தேதிக்குள், வழக்குகளின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்தது. ஆனால் 1783இல் 20,000 வாந்திபேதி தொடர்பான இறப்புகளுடன் ஒப்பிடும்போது இது ஒரு சிறிய எண்ணிக்கையாகும். சுகாதார நிலைமைகளும், கழிவுகளை அகற்றும் வசதிகளும் மேம்பட்டிருந்தாலும், வாந்திபேதி தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு, நோய் வெடித்த நேரத்தில் விழாக்கள் பெரும்பாலும் முடிந்துவிட்டன என்பதற்குக் காரணமாக இருக்கலாம். ஏப்ரல் 12ஆம் தேதி மதியம் பக்தர்கள் புறப்படத் தொடங்கினர். ஏப்ரல் 15ஆம் தேதிக்குள், முகாம் மைதானம் காலியாக இருந்தது. புறப்பட்ட யாத்ரீகர்களில் பலர் பாதிக்கப்பட்டு, வட இந்தியா முழுவதும் இந்த நோயைப் பரப்பியிருக்கலாம். அடுத்தடுத்த மேளாக்களில், வாந்திபேதி தொடர்பான இறப்புகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன.[25]
1867 மேளா மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மைக்காகவும் குறிப்பிடப்பட்டது. முகாம்களில் இருந்து புனித நீராட்டும் படித்துறைக்கு பக்தர்கள் செல்வதற்கு சிறப்பு பாலங்கள் கட்டப்பட்டன. படித்துறைக்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் தனி வழிகள் அமைக்கப்பட்டன. மேலும் நெரிசலைத் தவிர்க்க வேறு திசையில் போக்குவரத்து பராமரிக்கப்பட்டது. முதன்முறையாக, புனித நீராடும் நாள் அன்று நகரத்தில் விலங்குகள் அனுமதிக்கப்படவில்லை. 1879ஆம் ஆண்டு நடந்த அடுத்த கும்பமேளாவின் போது, போக்குவரத்து ஏற்பாடுகள் மேலும் கட்டுப்படுத்தப்பட்டன. யாத்ரீகர்கள் காவல்துறையினரால் "ஒழுங்குபடுத்தப்" பட்டனர். 1885ஆம் ஆண்டு அர்த்த கும்பமேளாவின் போது, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், காவல் துறையினர் படித்துறைகளுக்கு நுழைவுத் தடைகளை அமைத்தனர்.[24]
ஆண்டு | மேளா | இறப்பு எண்ணிக்கை |
---|---|---|
1879 | கும்பம் | 35,892 |
1885 | அர்த்த கும்பம் | 63,457 |
1891 | கும்பம் | 169,013 |
1897 | அர்த்த கும்பம் | 44,208 |
1903 | கும்பம் | 47,159 |
1909 | அர்த்த கும்பம் | 21,823 |
1915 | கும்பம் | 90,508 |
1921 | அர்த்த கும்பம் | 149,667 |
1927 | கும்பம் | 28,285 |
1933 | அர்த்த கும்பம் | 1,915 |
1938 | கும்பம் | 70,622 |
1945 | அர்த்த கும்பம் | 77,345 |
அடுத்த சில கும்பமேளாக்கள் வாந்திபேதிகளும், தொற்றுநோய்களும் பரவுவதில் பெரும் பங்கு வகித்தன. பொதுமக்கள் நீராடல், அதே போல் பக்தர்கள் கங்கை நீரை (அசுத்தமான) உறவினர்கள் பருகுவதற்காக மீண்டும் கொண்டு வரும் நடைமுறையும் இந்த நோயை பரவலாகப் பரப்பியது. வால்டெமர் ஆப்கின் வாந்திபேதிக்கான தடுப்பூசியை உருவாக்கிய போதிலும், சாத்தியமான பொது எதிர்ப்புகளுக்கும் அரசியல் வீழ்ச்சிக்கும் பயந்து பிரித்தானிய இந்திய அரசாங்கம் நீண்ட காலமாக கட்டாய தடுப்பூசி பரிந்துரைகளை நிராகரித்தது. 1945இல் மற்றொரு வாந்திபேதி வெடித்ததைத் தொடர்ந்து, 1945 அரித்துவார் கும்பமேளாவில் கட்டாய வாந்திபேதி தடுப்பூசிகள் போடப்பட்டன.[25]
14 ஏப்ரல் 1986 அன்று நடந்த கும்பமேளாவின் போது ஏற்பட்ட நெரிசலில் நாற்பத்தேழு பேர் கொல்லப்பட்டனர். இரண்டு மணி நேரம், சுமார் 20,000 யாத்ரீகர்கள் ஹரனின் படித்துறைக்குச் செல்வதற்காக பந்த் தீவுக்கு அருகில் உள்ள பாலத்தை கடக்க, காவலர்கள் அங்கு தடுத்தனர். அவர்களில் சிலர் முன்னேறியபோது, காவலர்கள் லேசான தடியடி நடத்தினர் . பந்த் தீவு அருகே ஒருவர் தவறி விழுந்ததால் நெரிசல் ஏற்பட்டது.[13][31]
இருப்பினும், இந்தியா டுடேயின் இந்தர்ஜித் பத்வார், ஒட்டுமொத்த மேளா ஏற்பாடுகளைப் பாராட்டி, அரித்துவார் "எப்போதும் இல்லாத அளவுக்கு தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருக்கிறது" என்று குறிப்பிட்டார். மாவட்டத் குற்றவியல் நடுவர் அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான நிர்வாகத்தால், 35 கிமீ 2 மேளா பகுதியை தினமும் சுத்தம் செய்ய 5,000 துப்புரவு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். ஆயிரக்கணக்கான சிறுநீர் கழிப்பிடங்களும் மலக்கழிவறைகளும் கட்டப்பட்டன. நிர்வாகம் 20 பாலங்களையும் பல தற்காலிக சாலைகளையும் அமைத்தது. ஒரு சதுர அடிக்கு ஒரு கூடாரங்கள் நிறுவப்பட்டு 5 பைசா வீதம் வாடகைக்கு விடப்பட்டது. பத்து வடிகட்டும் கிணறுகள் கட்டப்பட்டு, மின் திறன் இரட்டிப்பாக்கப்பட்டது. எண்பது புதிய பொது விநியோகக் கடைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பால் சாவடிகளும் அமைக்கப்பட்டன. எண்பத்தைந்து மருத்துவர்களுடன் நாற்பது முதலுதவி நிலையங்கள் நிறுவப்பட்டன. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கமாண்டோ பிரிவுகள், உளவுப்பிரிவு என 10,000 காவலர்கள் குவிக்கப்பட்டனர்.[31]
இந்திய அரசு சுற்றுலாவை மேம்படுத்த இந்த கும்பமேளாவை பயன்படுத்தியது. செய்தித்தாள் விளம்பரங்கள் இதை "ஆன்மாவை தூய்மைப்படுத்தும் ஒரு அரிய வாய்ப்பு" என்று விவரித்தன. [32] தனியார் வணிகங்கள், உணவகங்கள், பூப்பந்து மைதானங்கள், நெருப்புக் குழிகள், தண்ணீர் விளையாட்டுகள், டைரனொசோரசு காட்சி ஆகியவற்றால் வழங்கப்படும் ஆடம்பர கூடார வசதிகள் மேளாவில் இடம்பெற்றன. [33]
அரித்துவாரில் மகர சங்கராந்தி (14 ஜனவரி 2010) முதல் சக பூர்ணிமா நீராடும் நாள் (28 ஏப்ரல் 2010) வரை பூர்ண கும்பமேளா நடைபெற்றது. லட்சக்கணக்கான இந்து பக்தர்கள் மேளாவில் கலந்து கொண்டனர். 14 ஏப்ரல் 2010 அன்று மட்டும் சுமார் 10 மில்லியன் மக்கள் கங்கை ஆற்றில் குளித்தனர்.[34] அதிகாரிகளின் கூற்றுப்படி, ஏப்ரல் 14, 2010 முதல் சுமார் 40 மில்லியன் மக்கள் குளித்துள்ளனர்.[35] உலகின் மிகப்பெரிய மதக் கூட்டமாக கருதப்படும் இந்த திருவிழாவில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் இந்திய யாத்ரீகர்களுடன் இணைந்தனர்.[35][36] அதிக எண்ணிக்கையிலான யாத்ரீகர்களுக்கு இடமளிக்க இந்திய இரயில்வே சிறப்பு தொடர் வண்டிகளை இயக்கியது.[37] புனிதர்களுக்கும் பக்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர்.[38]
எதிர்காலத்தில் விழா நடத்துவதை மேம்படுத்தும் நம்பிக்கையுடன் இந்திய விண்வெளி ஆய்வு மையம் கூட்டத்தின் செயற்கைக்கோள் படங்களை எடுத்தது.[39]
சுற்றுச்சூழல் மேம்பாடுகள் இருந்தபோதிலும், மகாகும்பமேளா மிகவும் சுகாதாரமற்ற நிகழ்வாகவே இருந்தது.[40][41][42]
2021 அரித்துவார் கும்பமேளா கோவிட் தொற்றுநோய்களின் போது நடத்தப்பட்டது. இது கோவிட் வழக்குகளின் அதிகரிப்புக்கு பெரும் மக்கள் பங்களிக்கும் என்ற கவலைக்கு வழிவகுத்தது. இது ஒரு விரிவான பரவல் நிகழ்வாக மாறியது. நிகழ்வை ரத்து செய்யவோ அல்லது நாட்களை குறைக்கவோ அரசாங்கம் மறுத்துவிட்டது.[43][44] மத்திய சுகாதார அமைச்சகம், நிகழ்வின் போது கோவிட் பரவுவதைத் தடுப்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின் பட்டியலை வெளியிட்டது, இதில் பங்கேற்பாளர்களுக்கான கட்டாய எதிர்மறை RT-PCR சோதனை அறிக்கையும் அடங்கும். இருப்பினும், பல பங்கேற்பாளர்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற மறுத்து, முகமூடிகளை அணிய மறுத்துவிட்டனர் அல்லது சமூக விலகலைத் தவிர்த்தனர். ஏப்ரல் 10-14 தேதிகளில், 1701 பங்கேற்பாளர்களுக்கு கோவிட் பரிசோதை செய்யப்பட்டது. உத்தரகாண்டில் அதிகரித்து வரும் கோவிட் வழக்குகள் காரணமாக ஏப்ரல் 27 அன்று திட்டமிடப்பட்ட சாகி நீராட்டத்திலிருந்து நிரஞ்சனி அகாராக்கள் விலகினர்.[3] பல சாதுக்களுக்கு செய்த சோதனையில் கோவிட் பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோடி , மிகப் பழமையானதும், மிகப்பெரியதுமான சுனா அகாராக்களின் ஆச்சாயர் மகாமண்டலேசுவர் சுவாமி அவதேசானந்த் கிரி என்பவரிடம் கும்பமேளாவை நிறுத்துமாறு தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பிறகு, பிரதமரை அழைத்த சில மணி நேரங்களிலேயே, பிரதமரின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து, உயிரைக் காப்பாற்றுவது புனிதமான செயல் என்ற நம்பிக்கையுடன் கும்பமேளாவை நிறுத்துவதாக சுவாமி அவதேசானந்த் கிரி அறிவித்தார்.[45][46][47][48]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.