இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர் From Wikipedia, the free encyclopedia
நாராயணகுரு (ஆகஸ்ட் 20, 1856 - செப்டம்பர் 20, 1928), இந்து ஆன்மிகவாதியும்[1][2] இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியா முழுவதும் பரவியிருந்த சாதிக் கொடுமைகளில் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்ட காலகட்டத்தில் ஈழவர் சமூகத்தில் பிறந்தவர் நாராயணகுரு. குருதேவன் என்று அவரது சீடர்களினால் அழைக்கப்பட்ட நாராயணகுரு சாதிக்கட்டுப்பாடுகளை சகித்து தாங்கள் ஏன் இவ்வுலகில் பிறந்தோம் என்று மனம் நொந்து வாழ்ந்து வந்தவர்களுக்கு வழிகாட்டவும் அவர்களை நல்வழிப்படுத்தவும் முனைந்தவர்[1][2]
1856 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள செம்பழந்தி எனும் கிராமத்தில் ஈழவ சமுதாயத்தில் விவசாயம் செய்து வந்த மாடன் ஆசான் - குட்டி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் நாராயணன். இவர் பெற்றோர்களால் நாணு என்று சுருக்கமாகவும் செல்லமாகவும் அழைக்கப்பட்டார்.
இவரது தந்தை மாடன் விவசாயம் செய்து வந்தாலும் சிறிது சமஸ்கிருதம் தெரிந்திருந்ததால் இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற கதைகளை அந்த கிராம மக்களுக்கு கிராமியக் கதைகளாகச் சொல்லி வந்தார். மேலும் கிராம மக்களுக்கு "ஆசான்" (ஆசிரியர்) ஆகவும் இருந்தார். தந்தை சொல்லும் கதைகளை ஆர்வமுடன் கேட்டு வந்த நாராயணன், தந்தை இல்லாத நேரங்களில் அவரது தந்தையைப் போல் அவரும் கிராம மக்களுக்கு கதைகளைச் சொல்லி மகிழ்ச்சி அடைவார்.
இவரது மாமாவான கிருட்டிணன் வைத்தியன் ஆயுர்வேத வழி மருத்துவர். சமசுகிருதம் தெரிந்த பண்டிதரும் கூட. இவருடைய பரிந்துரையில் உள்ளூர் பள்ளி ஆசிரியரும், கிராம அதிகாரியுமாக இருந்த செம்பழந்திப் பிள்ளை என்பவர் நாராயணனுக்கு வீட்டிலிருந்தபடியே அடிப்படைக்கல்வியைக் கற்றுக் கொடுத்தார். இதன் பிறகு அவரது தந்தை மற்றும் மாமா அவருக்குத் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளின் அடிப்படைகளையும் சிந்தனைகளையும் கற்றுக் கொடுத்தனர். அத்துடன் அவர்கள் தொழில் முறைப் பாடங்களான சித்தரூபம், பாலபுரோபதனம், அமரகோசம் போன்றவைகளையும் கற்றுக் கொடுத்தனர்.
15 வயதில் தனது தாயை இழந்த நாராயணன் அதிகமான நேரம் தனது தந்தையின் ஆசிரியப் பணியிலும், மாமாவின் ஆயுர்வேத மருத்துவப் பணியிலும் உதவியாக சில பணிகளைச் செய்து வந்தார். மீதமுள்ள நேரத்தில் அருகிலுள்ள கிராமக் கோவில் ஒன்றில் தெய்வ வழிபாடுகளில் கவனம் செலுத்தினார். அதன் பிறகு நாராயணனின் கூர்மையான அறிவுத்திறன் கண்டு அவரை அவரது வீட்டிலிருந்து 50 மைல் தொலைவிலிருந்த கருநாகபள்ளி எனுமிடத்தில் பிரபலமான பண்டிதராக விளங்கிய கும்மம்பிள்ளி ராமன் பிள்ளை ஆசான் என்பவரிடம் கல்வி கற்றுக் கொள்ள அனுப்பினர். அங்கு சமஸ்கிருதத்தை முழுமையாகக் கற்றுக் கொண்டார். அங்கு அவர் வேதங்களையும், உபநிஷதங்களையும் கற்றுத் தேர்ந்தார். அதன் பிறகு அருகிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணி செய்தார். இவருடைய திறனைக் கண்டு வியந்த அப்பகுதி மக்கள் அவரை "நாணு ஆசான்" என்று செல்லமாக அழைக்கத் துவங்கினர்.
பின் அங்கிருந்து தனது சொந்த ஊர் திரும்பிய நாராயணன் அந்தப்பகுதி சிறுவர்களுக்கு கல்வி அளிக்க குறுகிய காலத்திற்குள் அங்கு ஒரு பள்ளியைத் துவக்கினார். அந்த பள்ளியில் கல்வி வழங்கியது போக மீதி நேரம் கோவிலுக்குச் சென்று அங்கு கவிதைகள் எழுதுவது, கிராம மக்களுக்கு தத்துவம் மற்றும் நீதிக்கதைகள் சொல்வது என்பதாக ஒரு துறவியைப் போல் தனது சேவைகளைத் தொடர்ந்தார்.
நாராயணன் துறவியாகி விடக்கூடாது என்று அவரது குடும்பத்தினர் தொடர்ந்து அவரை வற்புறுத்தி தொழில் முறை கிராம மருத்துவர் ஒருவரின் மகளான காளியம்மா என்பவரை அவருக்கு எளிமையான முறையில் திருமணம் செய்து வைத்தனர். நாராயணன் துறவியைப் போல் அலைந்து திரிந்து கொண்டிருந்ததால் அவரது மனைவி அவருடைய தந்தை வீட்டிற்குச் சென்று விட்டார். சில காலத்திற்குப் பின்பு அவரது தந்தையும், மனைவியும் மரணமடைந்ததை அடுத்து ஆன்மீக சன்னியாசியாக பல இடங்களுக்குச் செல்லத் துவங்கினார்.
இப்படி திருவனந்தபுரத்திற்குச் சென்ற நாராயணனுக்கு பிரிட்டிசு அரசாங்கப் பணியாளராகப் பணிபுரிந்த தைக்காடு அய்யாவு என்ற தமிழர் பழக்கமானார். இவர் சிலம்பு, யோகக் கலைகள் போன்றவைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும் இருந்தார். இவரிடம் தியானம், யோகா போன்ற கலைகளுடன் தமிழில் ஆழமான அறிவையும் பெற்றார். திருமந்திரம் போன்ற தமிழ் நூல்களையும் கற்று அறிந்தார். 23 வது வயதில் துறவறம் மேற்கண்ட நாராயணன் கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி எனும் ஊரின் அருகிலுள்ள மருத்துவாமலையில் தனிமையில் தியானங்கள் செய்து எட்டு வருடங்கள் வரை இளம் துறவியாக வாழ்ந்தார்.
இந்த மருத்துவமலையில் தியானம், யோகா போன்ற கலைகளால் அவருக்குக் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு மலையாள மொழியில் ஆத்மோபதேச சதகம் எனும் நூறு செய்யுள்களை இயற்றினார். இதன் மூலம் அவருடைய கவி நயத்துடன் தத்துவார்த்தமான பல கருத்துக்களை அறிய முடிந்தது. தீண்டப்படாத சமூகத்தில் பிறந்தவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் மலையாளம், தமிழ், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் அதிகப் புலமையும் அம்மொழிகளில் உள்ள வேதங்களையும், உபநிடதங்களையும் கற்றுத் தேர்ந்த இவர் சன்னியாசியாகவே சுற்றித் திரிந்தார்.
சன்னியாசியாகத் திரிந்த நாராயணன் தனது கொள்கைகளை விரும்பும் சிலரை தனது சீடர்களாக்கிக் கொண்டார். அதன் பிறகு நாராயண குருவாக உயர்ந்தார். 1888-ல் திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள அருவிப்புரம் என்கிற மலைகளும் காடுகளும் சூழ்ந்த இடத்தில் நெய்யாறு ஓடும் இடத்திற்கு அருகில் ஒரு இடத்தைத் தேர்வு செய்தார். அந்த இடத்தில் தனது சீடர்கள் உதவிகளுடன் அந்த ஆற்றில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்து அந்தக் கல்லை சிவலிங்கமாகப் பிரதிஷ்டை செய்தார். இந்தக் கோவிலுக்கு முதலில் தென்னை மரக்கிளைகள் மற்றும் மாமரத்து இலைகளைக் கொண்டு மேற்கூரை அமைக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் தீண்டத் தகாதவர்களுக்குக் கடவுள் வழிபாடு மறுக்கப்பட்ட காலத்தில் இந்த அருவிப்புரம் சிவன் கோவில் அமைக்கப்பட்டது ஒரு புரட்சிகரமான செயலாக இருந்தது. அதே சமயம் உயர் சாதியினர்களுக்கு இது எரிச்சலையும் இந்தக் கோவிலில் தங்கள் தெய்வத்தை எப்படி பிரதிஷ்டை செய்யலாம்? என்கிற பிரச்சனையையும் எழுப்பினர். ஆனால் நாராயண குரு கடவுள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று சொன்னதுடன் இந்தக் கோவிலில் சாதி-மத பேதமில்லாமல் அனைவரும் வணங்கும் தலம் என்று எழுதி வைக்கவும் செய்தார். (மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவருடைய படைப்பில் இதை ஈழுவ சிவன் கோவில் என்று குறிப்பிட்டிருக்கிறார்.)
1904-ஆம் ஆண்டில் தனது சன்னியாசி வாழ்க்கையிலிருந்து புனிதமான வாழ்விற்கான பயிற்சிகளை மேற்கொண்டார். இதற்காக திருவனந்தபுரத்திற்கு வடக்கே 20 மைல் தொலைவிலிருந்த சிவகிரி எனுமிடத்தைத் தேர்வு செய்தார். இங்கு அம்பாள் ஆலயம் அமைத்து அதில் தெய்வ ஆராதனைகளைத் தொடர்ந்தார்.
இதன் பிறகு “வர்க்கலை” எனும் ஊரில் சமஸ்கிருதப் பள்ளி ஒன்றை அமைத்தார். இங்கு சாதிப் பாகுபாடுகளின்றி கல்வித்தகுதிகள் எதுவுமின்றி பலரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதில் ஏழைக் குழந்தைகள், அனாதையாக விடப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு ஆதரவளித்தார்.
நம்பூதிரிகளுக்கு அடுத்த நிலையிலிருந்த நாயர் வகுப்பினர்கள் கூட கோவில்களின் கருவறைக்குள் நுழைய முடியாத நிலையில் நாராயண குரு பல கோவில்களைக் கட்டி ஆலயப் பிரவேசத்திற்கு புதிய வழி முறையைக் கொண்டு வந்தார். கேரளாவில் திருச்சூர், கண்ணூர், அஞ்சுதெங்கு, கோழிக்கோடு போன்ற இடங்களில் கோவில்களைக் கட்டினார். கர்நாடகாவில் மங்களூர் பகுதியிலும், தமிழகத்தில் நாகர்கோவிலிலும் இலங்கையில் கொழும்பிலும் சில முக்கியமான கோவில்களைக் கட்டி அங்கு சிவன், விஷ்ணு, தேவி போன்ற தெய்வங்களை பிரதிஷ்டை செய்தார். இக்கோவில்களில் வழிபாட்டுப் பூஜைகளுக்காக இவரே சமஸ்கிருதம், மலையாளம் மொழியில் சில மந்திரங்களையும் உருவாக்கிக் கொடுத்தார். இவைகளில் சுப்பிரமணிய சதகம், காளி நாடகம், தெய்வ தசகம், சாரதா தேவி துதி போன்றவை முக்கியமானவையாகக் கருதப்படுகிறது.
ஈழவ மக்களிடையே இருந்து வந்த சிறு தெய்வ வழிபாடு எனும் குலதெய்வ வழிபாட்டு முறையை ஒழித்து பெரும் தெய்வ வழிபாட்டுக்கு வழிவகுத்துக் கொடுத்தார் என்று சொல்லலாம். ஏனெனில், குல தெய்வ வழிபாட்டு முறையில் கள், சாராயம் போன்றவைகளையும், மிருகங்களைப் பலியிட்டு மாமிசங்களைப் படைத்து அதை அனைவரும் குடித்தும் சாப்பிட்டு மகிழ்வதாக கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு இந்த வழிபாட்டில் குழந்தைகள், பெண்கள் போன்றவர்கள் கலந்து கொள்ள முடியாமல் இருந்தது. மேலும் இந்நிலை சமுதாயத்தின் அவமானச் சின்னங்களாகவும் இருந்தன. இதை மாற்றும் நோக்கத்தில் குலதெய்வ ஒழிப்பு முறையை கொண்டு வருவதற்காக சிவன், விஷ்ணு போன்ற பெரும் தெய்வங்களை ஸ்ரீ நாராயண குரு பிரதிஷ்டை செய்து புதிய கோவில்களைக் கட்டினார் என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1913 இல் ஆலுவா எனுமிடத்தில் அத்வைத ஆசிரமம் அமைக்கப்பட்டது. இந்த ஆசிரமத்தின் முக்கிய கொள்கையாக "கடவுளின் கண்களுக்கு அனைத்து மனிதர்களும் சமம்" என்கிற வாசகம் வலியுறுத்தப்பட்டது.
அருவிப்புரம் சிவன் கோவில் அமைத்து புதிய புரட்சியை ஏற்படுத்திய ஸ்ரீ நாராயண குருவின் செயல்பாட்டில் ஈர்க்கப்பட்ட மைசூரில் மருத்துவராக இருந்த டாக்டர் பல்பு என்பவர் (கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவருடைய உண்மையான பெயர் பத்மனாபன். தீண்டப்படாத சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் கடவுள் பெயர் வைத்துக் கொள்ள அந்தப்பகுதி நில உடமையாளரால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவராலேயே பெயர் மாற்றமும் செய்யப்பட்டது) ஸ்ரீ நாராயண குருவைச் சந்தித்தார். அவர் மூலம் கேரள மக்களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் நிலையை மாற்றம் செய்யவும் முன்னேற்றம் செய்யவும் 1903-ல் திருவனந்தபுரத்தை மையமாகக் கொண்டு அருவிப்புரத்தில் "ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா" எனும் அமைப்பு நிறுவப்பட்டது.
இந்த அமைப்பில் ஈழவர்கள் மட்டுமின்றி புலையர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் கல்வி, செல்வம், ஆன்மீகம் போன்றவற்றில் உயர்சாதியினரைப் போல் முன்னிலைக்கு வந்தால் உயர்வு தாழ்வு எனும் பாகுபாடு நிலை இல்லாமல் போய்விடும் எனவே அந்த நிலைக்கு உயர்வதற்கு முதலில் அவர்களிடையே அறியாமையைப் போக்க வேண்டும்.
இதற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமானதாக இருக்கும் சிறு தெய்வக் கோவில்களை எல்லாம் இடித்துவிட்டு அந்த இடங்களில் பலர் கூடும் பொது இடங்களாகவும், கல்வி வழங்கும் பள்ளிக்கூடங்களாகவும் உருவாக்கத் திட்டமிட்டார். சிறு தெய்வக் கோவில்களை இடித்தால் அந்தத் தெய்வங்களின் தீய செயலுக்கு உள்ளாகி பாதிக்கப்படுவோம் என்று பலரும் பயந்த நிலையில் தானே முன்னின்று அந்தக் கோவில்களை அகற்றி அந்த இடங்களைச் சமூகப் பொது இடங்களாகவும் பள்ளிக்கூடங்களாகவும் அமைக்க முற்பட்டார். இவர் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருவில்லிபுத்தூர் வரை இது போன்ற பல சிறு தெய்வக் கோவில்களை இடிப்பதற்கு முன்னின்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் வாழ்க்கையில் ஒன்றாக இருந்து வந்த அவர்களுக்குப் பிடித்த ஒன்றை அல்லது பயந்த ஒன்றை துணணயாக இருக்க வேண்டி தெய்வமாக வழிபட்டு வந்தனர். இது இடம், சாதி, மொழி என்று பல வழிகளில் பல பெயர்களில், பல தெய்வங்களாக வழிபடப்பட்டது. இது இன்னும் சிறு தெய்வங்களாக நீடித்துக் கொண்டிருக்கின்றன. இதிலிருந்து சற்று முன்னேற்றமடைந்த சிலர் இயற்கை அமைப்பில் அவசியத் தேவைகளை தெய்வங்களாக்கி அதை முழுமுதல் தெய்வங்களாக வைத்து வழிபட்டனர். இதில் குறிப்பிட்ட சில தெய்வங்கள் மட்டும் இடம் பெற்றது. இவைதான் வாழ்விற்குத் தேவையான அனைத்தையும் வழங்குவதாக சற்று முன்னேற்றம் கண்டது.
இவற்றை விட தத்துவார்த்தமான கடவுள் கொள்கைகளை சிலர் வலியுறுத்தியதுண்டு. இது போல் ஸ்ரீ நாராயண குருவும் தத்துவார்த்தமுடைய சில அடிப்படைகளைக் கொண்டு கோவில்களை அமைத்தார். சிவன், விஷ்ணு, சுப்பிரமணியர் போன்ற முழு முதல் தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து கோவில்களை உருவாக்கிய ஸ்ரீ நாராயண குரு அடுத்து இந்த தத்துவார்த்தமான கொள்கைகளை வலியுறுத்தும் வழியில் முதலில் விளக்கை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்தும், பின்பு சத்யம்-தர்மம்-தயை எனும் சொற்களை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்தும் கோவில்களை அமைத்தார். பின்னர் களவங்கோடு எனும் பகுதியில் நிலைக் கண்ணாடியை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்து புதிய கோவில் ஒன்றை அமைத்தார்.
ஆன்மீக வழியில் புதிய நடைமுறைகளை உருவாக்கி பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு ஒரு புதிய வழியைக் காட்டிய ஸ்ரீ நாராயண குரு ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபாவின் மூலம் ஏராளமான பள்ளிகளையும் கல்விக்கூடங்களையும் கட்டினார். ஈழவ சமுதாயத்தினர் செய்து வந்த குலத் தொழிலான ஆயுர்வேத மருத்துவத் தொழிலுக்கு சமஸ்கிருதம் கற்றவர்கள் அச்சமுதாயத்தில் சிலர் இருந்தாலும் அவர்களுக்கு அதில் முழுமையான அறிவு இல்லாமலே இருந்தது. எனவே பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் சமஸ்கிருதத்தை முழுமையாகக் கற்றுக் கொள்ள வலியுறுத்தினார். ஆங்கிலம் உலகம் முழுவதுமுள்ள பொது மொழியாக அவர் கருதியதால் அதையும் அனைவரும் கற்றுக் கொள்ள தனது சீடர்களில் ஒருவரான நடராஜ குரு என்பவரை மேலைநாட்டிற்கு அனுப்பி பல விஷயங்களைக் கற்று வரச் செய்தார்.
கல்வி, சமூக நிறுவனங்களை அதிக அளவில் கொண்ட ஒரு பெரிய அமைப்பாக ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா உருவானது. இதன் மூலம் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் அனைவரும் கல்வி கற்க முற்பட்டனர். இன்று இந்தியாவில் கேரளா மாநிலம் நூறு சதவிகிதம் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள், அனைவரும் கல்வி அறிவுடையவர்கள் என்கிற முதல் நிலையைப் பெற்றிருப்பதற்கு அடிப்படைக் காரணம் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபாவின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் ஆன்மீகம், கல்வி போன்றவற்றில் முன்னிலை பெற்றவர்கள் இதைத் தொடர்ந்து செல்வத்திலும் முன்னிலை பெறத் துவங்கினர். ஆனால் பிற்காலத்தில் இந்த சமூகச் சீர்திருத்த அமைப்பின் எல்லை விரிவு அடைய அடைய நிர்வாகச் சீர்கேடுகளும் அரசியல் தலையீடுகளும் உள்ளுக்குள் வரத்துவங்கின என்பதையும் இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது.
நாராயண குரு இந்தியாவின் குறிப்பிடத்தக்க சமூக சீர்திருத்தப் பெரியார்களில் ஒருவராக அறியப்படும் போது அவருடைய மலையாளம், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளில் எழுதிய 30 படைப்புகளுடன் மூன்று மொழிபெயர்ப்பு படைப்புகளையும் குறிப்பிட வேண்டும்.
-என்று மூன்று மொழிகளில் இவர் படைத்த படைப்புகளும் மொழிபெயர்ப்புப் படைப்புகளும் இன்றும் சிறப்பு மிக்கதாய் போற்றப்படுகிறது.
இந்திய சமூகச் சீர்திருத்தப் பெரியார்களில் ஒருவராகவும், ஆன்மீகத்தில் பல புதுமைகளைக் கொண்டு வந்தவரும் சிறந்த இலக்கியப் படைப்பாளியாகவும் அறியப்பட்டு தத்துவ ஞானியாகவும் உயர்ந்த ஸ்ரீ நாராயண குரு 1928-ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் தனது சிவகிரி மடத்தில் உடல் நிலை சரியின்றி இருந்து வந்தார். அந்த ஆண்டில் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியில் மகாசமாதி எனும் நிலையில் அடக்கமானார்.
ஸ்ரீ நாராயணகுருவின் உயிர் பிரிந்த அறையில் அவர் பயன்படுத்திய கட்டிலும், நாற்காலியும், தலையணைகளும் அப்படியே இருக்கின்றன. அங்கு ஒரு விளக்கு எந்நேரமும் எரிந்து கொண்டிருக்கிறது.[3]
தமிழ்நாட்டில் ஸ்ரீ நாராயணகுருவின் பெயரில் பல சமூக சேவை அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை ஸ்ரீ நாராயணகுருவின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பரப்புவதற்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.
நாராயணகுருவின் முதன்மைச்சீடர் நடராஜகுருவால் உருவாக்கப்பட்ட அமைப்பு. இதன் தலைமைப்பீடம் வற்கலாவில் உள்ளது. முதன்மைக்கிளை ஊட்டியில் உள்ளது[ நாராயணகுருகுலம் , மஞ்சணகொரே, ஃபெர்ன் ஹில், ஊட்டி]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.