From Wikipedia, the free encyclopedia
இராமசரிதமானஸ் (Ramcharitmanas, श्रीरामचरितमानस, சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: ŚrīRāmacaritamānasa), என்பது அவதி மொழியில் இயற்றப்பட்ட ஒரு இதிகாசம். இது இராமரின் மேல் அதீதமான பக்தி கொண்ட இந்தியாவைச் சேர்ந்த துளசிதாசர் என்பவரால் 16ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. “இராமசரிதமானஸ்” என்பதற்கு இராமரின் செயல்களைத் தொகுத்து எழுதப்பட்ட ஏரி என்று பொருள். இது இந்தி இலக்கியத்தில் ஒரு மிக பெரிய நூலாக கருதப்படுகிறது.[1]. இந்த நூல் “வாழும் இந்திய கலாச்சாரத்தின் தொகுப்பு”, “இடைக்கால அதிசய இந்திய சரித்திர தோட்டத்தின் உயரமான மரம்”, “பக்தி இலக்கியத்தின் மிகச் சிறந்த நூல்”, “இந்திய மக்களின் அசையாத நம்பிக்கைக்கு அத்தாட்சியாக விளங்கும் நூல்” என்று பெருமையாகக் கூறப்படுகிறது.[2]
இராமசரிதமானஸ் என்கிற சமசுகிருத சரித்திரம் இராமாயணத்தின் கவிதை வர்ணனையாகக் கருதப்படுகிறது. இராமாயணம் என்பது ராமனை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சரித்திரம். இராமன் இஷ்வாகு வம்சத்தை சேர்ந்தவர், அயோத்தியின் இளவரசர், இந்து மதத்தில் மஹா விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுபவர். எனினும் இந்த நூல் வால்மீகி இராமாயணத்தின் மறு ஆக்கமில்லை என்று துளசிதாசர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இராமசரிதமானஸ் சிவனின் இருதயத்தில் பதிந்த கதை, சிவனால் பார்வதிக்கு உபதேசிக்கப்பட்டது என்றும், இதை தனது குருவான நரஅரிதாசரிடமிருந்து தெரிந்து கொண்டதாகக் கூறியுள்ளார். எனவே இந்த நூலைச் சிலர் துளசி கீர்த்தி ராமாயணம்(துளசிதாசரால் எழுதப்பட்ட ராமாயணம்) எனவும் கூறுவார்கள்.[3]
இராமசரிதமானஸ் என்ற இந்த நூல் ஏழு காண்டங்களைக் (அத்தியாயங்கள் அல்லது பாகங்கள்) கொண்டது. துளசிதாசர் இந்த ஏழு காண்டங்களையும் புனிதமான மானசரோவர் ஏரிக்கு அழைத்துச் செல்லும் ஏழு படிக்கட்டுகளுக்கு ஒப்பிடுகிறார். இவை இரண்டுமே உடலையும் மனதையும் ஒரு சேர தூய்மை படுத்தும் ஆற்றல் படைத்தவை என்பதால் அவ்வாறு குறிப்பிடுகிறார்.[4][5]
இராமசரிதமானஸ் நூலின் தனித்துவமான சிறப்பு என்னவென்றால், இந்த நூலின் எல்லா வரிகளிலும் ச்,ர்,த்,ம் (சீதாராம) என்ற எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன.
இராமசரிதமானஸ் என்ற இந்த நூல் இராமரின் சரித்திரத்தை வட இந்தியாவில் உள்ள சாமானிய மக்கள் பாடவும் தியானிக்கவும் செய்ததில் முக்கிய பங்கு வகிக்கிறது. துளசிதாசர் ஒரு மிகப் பெரிய சமஸ்க்ருத மொழிக் கவிஞராக இருப்பினும், இராமரின் சரித்திரம் சமஸ்க்ருத மொழி வல்லுநர்களை மட்டுமல்லாது சாமானிய மக்களையும் சென்றடைய வேண்டும் என்று கருதியுள்ளார். எனவே, அவர் இந்த நூலை வட இந்தியாவின் அவாதி பேச்சு வழக்கில் இயற்றியுள்ளார். இவ்வாறு அவர் இயற்றியதற்கு வாரணாசியைச் சேர்ந்த பல்வேறு கவிஞர்கள் அப்பொழுது கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும், வேதங்கள் மற்றும் உபநிடதங்களின் சாராம்சம் சாமானிய மக்களுக்கு எளிதில் விளங்க வேண்டும் என்ற தனது கொள்கையில் உறுதியாக இருந்துள்ளார். இது பிற்காலத்தில், அனைவராலும் ஏற்றுக் கொள்ளவும் பட்டுள்ளது. இந்த நூல், ராம்லீலா போன்ற நாடகங்களின் தோற்றத்திற்கு காரணமாகவும் அமைந்துள்ளது.[6]
இந்த நூல் பக்தி இயக்கதைச் சேர்ந்த சகுணா பள்ளியால் [7][8] இந்தி இலக்கியத்தில் இயற்றப்பட்டதாகவும் சிலர் கூறுவார்கள்.[9][10][n 1]
துளசிதாசர் இந்த நூலை அயோத்தி நகரில் விக்ரம்_நாட்காட்டி 1631ல் (1574கி.பி) இயற்றியுள்ளார். [n 2] [16]இது சித்திரை மாதத்தின் ஒன்பதாவது நாள், அதாவது ஸ்ரீராமநவமி அன்று தொடங்கப்பட்டுள்ளது. [16] இந்த நூல் அயோத்தி, வாரணாசி, சித்ரகூட் ஆகிய மூன்று இடங்களில் எழுதப்பட்டுள்ளது. [17]
இந்த நூல் எழுதப்பட்டபோது இந்தியாவில் முகலாய மன்னர் அக்பர் கோலோச்சினார்((1556-1605 CE) ). இதிலிருந்து துளசிதாசரும் ஆங்கிலக்கவிஞரான வில்லியம் ஷேக்ஸ்பியரும் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வருகிறது.[n 3][n 4]
இந்த நூல் வால்மீகி இராமாயணத்தின் மறுஆக்கமாக கருதப்பட்டாலும்[23][24][25][26][27] [n 5], அவாதி என்ற பேச்சு வழக்கில் எழுதப்பட்ட இந்த நூல் [37][38][39], மொழி பெயர்ப்பு இல்லை. உண்மையில், இந்த நூல் சமஸ்க்ருதம் மற்றும் பிற இந்திய மொழியில் எழுதப்பட்டுள்ள பல்வேறு இராமாயணங்களையும், புராணங்களையும் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
இராமசரிதமானஸ் தாய்மொழி மறுமலர்ச்சிக்கு ஒரு தலைசிறந்த உதாரணமாகக் கருதப்படுகிறது. சிலர் இந்நூலை, சமஸ்க்ருத மொழிக்கு ஒரு சவாலாக எழுதப்பட்ட நூலாகக் கருதுகிறார்கள்[40][41][42][43]. ஆனால், இந்த நூல் சாமானிய மக்களுக்கு ஸ்ரீராமரின் சரித்திரத்தை எளிதில் புரிய வைப்பதற்காக எழுதியதாக ஆசிரியர் துளசிதாசரே கூறியுள்ளார்.
‘’இராமசரிதமானஸ்’’ ஏழு பாகங்கள் அல்லது காண்டங்களைக் கொண்ட நூல். முதல் இரண்டு பாகங்கள் – பால காண்டம்(குழந்தைப் பருவ அத்யாயம்), அயோத்யா காண்டம் (அயோத்தி அத்யாயம்) பாதி நூல் அளவிற்கு எழுதப்பட்டுள்ளது. மற்றவை – ஆரண்ய காண்டம் (கானக அத்யாயம்), கிஷ்கிந்தா காண்டம்(கிஷ்கிந்தா அத்யாயம்), சுந்தர காண்டம்(மகிழ்ச்சியான அத்யாயம்), இலங்கா காண்டம்(இலங்கை அத்யாயம்) மற்றும் உத்தர காண்டம்(ஏனைய அத்யாயம்). இந்த நூல் நான்கு அசைகளைக் கொண்ட சொற்றொடர்களால் எழுதப்பட்டுள்ளது. இதனை ஹிந்தியில் சௌப்பாய் என்று அழைப்பார்கள். இரு வரிக் கவிதைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியில் தோஹா என்று அழைப்பார்கள். [44]
இராமசரிதமானஸ் நூலின் ஒவ்வொரு அத்யாயமும் மங்களசரணம் அல்லது பிரார்த்தனைப் பகுதியுடன் தொடங்குகிறது. இவ்வாறு இறைப்பிரார்த்தனையுடன் நூலைத் தொடங்குவது இந்தியப் பரம்பரியமும் கூட. ஒவ்வொரு காண்டத்தின் முதல் மூன்று அல்லது நான்கு வரிகள் பிரார்த்தனைப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது.
பால காண்டம் அறிவு, ஞானம், பேச்சு மற்றும் மங்களத்திற்குரிய ஹிந்துக் கடவுளான சரஸ்வதி மற்றும் கணபதியின் புகழைப் பாடும் விதமாக எழுதப்பட்டுள்ளது.[45]
அயோத்யா காண்டம் சிவனைப் பிரார்த்திக்கும் பாடலுடன் தொடங்குகிறது. எவருடைய மடியில் மலையரசியின் மகள் பொலிவுடன் அமர்ந்திருக்கிறாளோ, எவர் ஆகாய கங்கையைத் தனது தலையில் சுமக்கிறாரோ, எவருடைய பிறையில் அந்த பிறைச்சந்திரன் ஓய்வெடுக்கிறானோ, எவருடய தொண்டை ஆலகால விஷத்தைப் பிடித்துக் கொண்டுள்ளதோ, எவருடைய மார்பு சர்பத்திற்கு இடமளிக்கிறதோ, எவருடைய உடலைச் சாம்பல் அலங்கரிக்கிறதோ, எவர் எல்லா கடவுளுக்கும் தலைவனாக விளங்குகிறரோ, எவர் இந்த உலகத்தை அழிக்கும் வல்லமை படைத்தவரோ, அப்படிப்பட்ட எங்கும் நிறைந்த சந்திரனைப் போன்ற சிவபெருமான் என்றும் என்னைக் காக்கட்டும்[45]
ஆரண்ய காண்டத்தின் முதல் பாடல் மீண்டும் சிவபெருமானைக் குறித்த பாடலாக அமைந்துள்ளது. இறைவன் சங்கரனை நான் வணங்குகிறேன். அவர் பிரம்மாவின் சந்ததியைச் சேர்ந்தவர், கருணையுடையவர், அன்பானவர், ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் மேல் அபிரிதமான பக்தி வைத்திருப்பவர், அறிவு எனும் கடலுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற முழுச் சந்திரனைப் போன்றவர், சாந்தம் எனும் தாமரையைத் திறக்கும் திறவுகோலான சூரியனைப் போன்றவர், அஞ்ஞானம் எனும் மேகத்தைக் கலைக்கின்ற காற்றைப் போன்றவர், பாவம் மற்றும் காமம், குரோதம், மோஹம் போன்றவற்றை அழித்து, பழியை நீக்குபவர்.[45]
கிஷ்கிந்தா காண்டம் இவ்வாறாகத் தொடங்குகிறது. மல்லிகை மற்றும் நீலத் தாமரைப் போன்ற மலர்ச்சி உடையவர்;அளவில்லா வீரம் கொண்டவர் ;அறிவுக் களஞ்சியமாக விளங்குபவர்; கருணையுடையவர்;வில் வித்தையில் வீரர்;வேதங்களால் போற்றப்படுபவர்;பசு மற்றும் பிராமணர்கள் மீது பற்று கொண்டவர்;அரச குலத்தில் ரகுவரனாக மானிடனாகப் பிறவிஎடுத்தவர்;அந்த ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியும் சீதாபிராட்டியும் நமக்கு பக்தியை வழங்கட்டும்.[45]
சுந்தர காண்டம் இராமனைக் குறித்த துதியுடன் தொடங்குகிறது. உலகத்தின் தலைவரான ஸ்ரீராமனை வணங்குகிறேன்; அவர் அரச குலத்தின் மாணிக்கத்தைப் போன்றவர்;கருணையுடையவர்; பாவங்களை அழிக்க வல்லவர்;மானிடனாகப் பிறவி எடுத்தவர்; கடவுளுக்கும் கடவுளாக விளங்குபவர்; வேதங்கள் மற்றும் உபநிடதங்களால் அறியப்படுபவர்;படைப்புக் கடவுளான பிரம்மாவாலும், அழிக்கும் கடவுளான சிவனாலும்,ஆதிசேஷனாலும் முக்காலும் வணங்கப்படுபவர்;பாவத்தை அழித்து வாழ்வில் பேரின்பத்தையும் அமைதியையும் வணங்க வல்லவர்[45]
இலங்கா காண்டம் இந்த பாடலுடன் தொடங்குகிறது. ஸ்ரீராமனை நான் வணங்குகிறேன்;அவர் மிகவும் உன்னதமானவர்; உலகில் உள்ள எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தவர்; அன்பு மிகுந்த அழிக்கும் கடவுளான சிவனாலும் போற்றி வணங்கப் படுபவர்;மறுபிறவி பயத்தைப் போக்க வல்லவர்; மத யானை எனும் இறப்பை அடக்குகின்ற சிங்கம் போன்றவர்;ஞானத்தால் அடையக்கூடியவர் ;யோகிகளின் தலைவர்;நல்ல வழக்கங்களைக் கொண்டவர்;யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர்;பிறப்பு இறப்பு இல்லாதவர்;அதர்மத்தை அழிப்பவர் ;பிராமணர்களைக் காப்பவர்;நீர்த்திவலைகளால் மூடப்பட்ட மேகத்தைப் போன்ற அழகு உடையவர்; தாமரை போன்ற கண்களை உடையவர்; மானிடனாக அரச குலத்தில் அவதாரம் எடுத்தவர் [45]
உத்தர காண்டம் இந்த பாடலுடன் தொடங்குகிறது. ஸ்ரீராமனை நான் இடைவிடாது வணங்குகிறேன்;அவர் ஜனகரின் புதல்வியான சீதாபிரட்டியால் வணங்கப்படுபவர்; மயில் கழுத்து நீல நிறமுடையவர்;பிரம்மாவின் தாமரை போன்ற பாதங்களுடையவர்;கடவுளுக்கும் கடவுளாக விளங்குபவர்; மஞ்சள் நிற உடையில், தாமரை மலர் போன்ற கண்களுடன், கையில் வில் அம்புடன் புஷ்பக விமானத்தில் தம்பி இலக்குவனுடனும் வானரங்களுடனும் வலம் வருபவர் [45]
துளசிதாசர் எல்லா காண்டத்தையும் ஒரே போலவே முடிக்கிறார்.[46]
எல்லா காண்டங்களும் முறையாக ஆசிரியர் கோஸ்வாமி துளசிதசாரால் இயற்றப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, கிஷ்கிந்தா காண்டம் இவ்வாறாக முடிகிறது:
"இதி ஸ்ரீராமசரிதமானஸ் சகல கலி கலுசவே த்வம்சேந சதுர்தஹ் சோபனஹ சமாப்தாஹ்"
மொழிபெயர்ப்பு : "இவ்வாறாக ஸ்ரீஇராமசரிதமானஸின் நான்காவது காண்டம் மானசரோவர் ஏரியின் நான்காவது படியையும் ஸ்ரீராமர் கலியுகத்தின் அதர்மங்களை அழிப்பார் என்பதையும் கூறி முற்றிற்று." இதில் சதுர்தஹ் எனும் சொல் நான்கு என்பதைக் குறிக்கும். ஒவ்வொரு அத்யாயமும் அந்த எண்ணை மட்டும் குறித்து முற்றுப் பெறுகிறது.
இராமசரிதமானஸ் என்ற இந்த நூல் மூன்று உரையாடலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. அவை சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நடந்த உரையாடல் , முனிவர்கள் பாரத்வாஜருக்கும் யாக்யவல்க்கியருக்கும் இடையே நடந்த உரையாடல், கக்புஷுன்டிக்கும் கருடனுக்கும் இடையே நடந்த உரையாடல். மேலும், சில கவிஞர்கள் இதனூடே துளசிதாசருக்கும் பகவான் இராமருக்கும் இடையே நடந்த உரையாடலும் இடம்பெற்று இருப்பதாகக் கூறுகிறார்கள் .[47]
குழந்தை அத்யாயம் துளசிதாசர் இந்த அத்தியாயத்தை தனது குரு மற்றும் முனிவர்கள் : தனக்கு முன் வாழ்ந்தவர்கள், பிற்காலத்தில் வாழப்போகிறவர்களை வணங்கி தொடங்குகிறார். இதில் வால்மீகியை இராமாயணத்தை இராம பக்தர்களுக்காக எழுதியதற்காகக் குறிப்பிட்டு வணங்குகிறார். அதன் பின்னர், ஒவ்வொரு கதாப்பதிரத்தையும் அறிமுகப்படுத்தி அவர்களின் பெருமையையும் எடுத்துக் கூறுகிறார். முதலாவதாக, ஸ்ரீராமர் பிறந்த அயோத்தி மாநகரத்தின் பெருமையைக் கூறுகிறார். பின்னர், இராமரின் தந்தை தசரதன் மற்றும் தசரதனின் மனைவி கோசலை, கைகேயி, சுமித்திரை ஆகியோரின் பெருமைகளை எடுத்து கூறுகிறார். பின்னர், அவர், சீதையின் தந்தை ஜனகரின் பெருமைகளைக் கூறுகிறார். இதனைத் தொடர்ந்து, இராமரின் சகோதரர்களான பரதன், இலக்குவன், சத்ருக்னன் மற்றும் இராமனுக்கு உதவிய வானர வீரன் அனுமன்,சுக்ரீவன்,கரடிகளின் தலைவன் ஜாம்பவானைப் பற்றி பாடுகிறார். பின்னர் இராமரையும் சீதையையும் அறிமுகப்படுத்துகிறார்.
இராமசரிதமானஸின் கதை பின்னரே தொடங்குகிறது. அது முனிவர்கள் யாக்யவல்க்கியர் மற்றும் பரத்வாஜர் சந்திக்கும் இடத்தில் தொடங்குகிறது. பரத்வாஜர் யாக்யவல்க்கியரிடம் இராமரின் கதையைக் கூறுமாறு கேட்கிறார். யாக்யவல்க்கியர் சிவன் இந்த கதையைப் பார்வதிக்குக் கூறியதிலிருந்து தொடங்குகிறார். (சதியின் தற்கொலை, அவள் தந்தை தக்ஷனின் தியாகம், பார்வதியாக சதியின் மறுபிறவி, பார்வதி சிவன் திருமணக் கதை). சிவன் இராமன் பூமியில் அவதாரம் செய்ததற்கான ஐந்து காரணங்களைக் கூறுகிறார். இதில் ஒவ்வொரு கதையும் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது. இதில், இராமர் ஒவ்வொரு முறையும் பூமியில் அதர்மத்தை அழிப்பதற்காகவே அவதரித்ததாகக் குறிப்பிடுகிறார். பின்னர், இராவணன் மற்றும் அவரின் தம்பிகளின் பிறப்பைப் பற்றி விவரிக்கிறார். இதன் பின்னர் இந்த கதை சிவன், யாக்யவல்க்கியர், கக்புஷுந்தி மற்றும் துளசிதசரின் பார்வையிலிருந்து கூறப்படுகிறது.
கதை பிரம்மலோகத்திற்கு நகர்கிறது. பிரம்மா மற்றும் பிற தேவர்கள் இராவணனின் கொடுமை தாளாமல் அவனை அழிப்பதற்கு வழிகள் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். வழி காண இயலாமல், சிவனைக் குறித்து இராவணனை அழிக்கக் கூடிய கடவுள் இருக்கும் இடத்தைக் காட்டுமாறு தவம் செய்கிறார்கள். சிவன் அவர்களிடம் அந்த கடவுள் எல்லாருடய இதயத்திலும் இருப்பதாக கூறுகிறார். பின்னர், அனைத்து தேவர்களும் பிரம்மத்தை நோக்கி தவம் இயற்றுகிறார்கள். அப்போது, பிரம்மன் மனமிரங்கி அவர்கள் முன் வானில் தோன்றி, இராவணனை அழிக்கக் கூடிய பரம்பொருள் சூரிய குலத்தில் தோன்றுவான் எனக் கூறி மறைகிறார்.
கதை அயோத்திக்கு நகர்கிறது. ஒரு நாள், தசரதன், அயோத்தியின் மன்னன் தனக்கு வயதாகி விட்டதாலும், தன்னுடய அரியணைக்கு வாரிசு இல்லை என்பதாலும் கவலை கொள்கிறார். இதைத் தனது குடும்ப குருவான வசிஷ்டரிடம் கூறி, இதற்கு ஒரு வழி கூறுமாறு கேட்கிறார். அதற்கு வசிஷ்டர், தசரதனுக்கு நான்கு குழந்தைகள் பிறக்கும் என்று கூறுகிறார். பின்னர், ரிஷ்ய சிருங்கரை அழைத்து குழந்தை பாக்கியம் அருளும் புத்ராகம் யாகத்தைச் செய்யுமாறு கூறுகிறார். துளஸிதாஸர் இராமர் சித்திரை மாதத்தில் சுக்ல பக்ஷத்தில் பிறந்ததாகக் கூறுகிறார்.
கதையில் இப்போது இராமரும் அவரது சகோதரர்களும் இளம்பாலகனாகக் காட்டப்படுகிறார்கள். அப்போது விஷ்வமித்ரர் தசரதனின் அரண்மனைக்கு வருகிறார். அவரை தசரதன் அன்புடன் வரவேற்கிறார். முனிவர் விஷ்வமித்ரர் காட்டில் பல்வேறு யாகங்களைச் செய்து வசிக்கிறார். அப்பொழுது, மாரீசன் மற்றும் சுபாகு என்று இருவர் அந்த யாகங்களைக் கெடுப்பதாகவும், இராமன் அதர்மத்தை அழிப்பதற்காகவே பூமியில் அவதரித்தார் என்பது தனக்கு தெரியும் என்றும், தசரதனின் மகன்களை அந்த அரக்கர்களை அழைத்துச் செல்ல வந்துள்ளதாகக் கூறுகிறார். தயங்கிய தசரதன், பின்னர் ஒருவாறு அனுப்புகிறார். இராமர் மாரீசனையும் இலக்குவன் சுபாகுவையும் வதம் செய்கிறார்கள்.
கதையில் பின்னர் ஆசிரியர் அகல்யையின் சாபவிமோசனத்தைப் பற்றி விவரிக்கிறார். அது முடிந்த பின்னர், இராமர், இலக்குவன் மற்றும் விஷ்வமித்ரார் விதேக நாட்டின் அழகான தலைநகரமான மிதிலையை அடைகிறார்கள். அங்கு, மிதிலை மன்னன் ஜனகர் அவர்களை அன்புடன் வரவேற்கிறார். அவருக்கு இராமரின் பிறவி காரணத்தை அறிந்து கொள்ள முடிகிறது. பின்னர், சகோதரர்கள் இருவரும் அந்த அழகான நகரத்தைச் சுற்றிப் பார்க்கச் செல்கிறார்கள். அங்கு, ஜனகரின் தோட்டத்தில் இராமரும் சீதையும் முதல் முறை சந்திக்கிறார்கள்.
இதனிடயே, ஜனகர், சீதைக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்தார். இராமரை முதன்முதலாக பார்த்த உடனேயே அவர் மேல் காதல் வயப்பட்ட சீதை கௌரி மாதாவிடம் இராமரே தனக்கு கணவனாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள். ஜனகரும் சுயம்வரத்திற்கு, இராமரையும் இலக்குவனையும் அழைத்தார். அங்கு, சீதையை மணக்க விரும்புபவர் சிவனின் தனுசை முறிக்க வேண்டும் என்று நிபந்தனை அமைத்தார். பலர் முயன்றும் முடியாது போக, ஜனகர் இந்த பூமியில் வீரம் மிக்க ஆண்மகனே இல்லையா என வியந்து கூறினார். இதனால் சினந்த இலக்குவன், சூர்ய குலத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கும் கூட்டத்தில் இவ்வாறு பேசலாகாது எனக் பதில் கூறினான். அவனை சாந்தப்படுத்திய இராமர், அந்த தனுசை முறித்தார். அதனால் வந்த சப்தத்தில் தவம் கலைந்த பரசுராமர், சிவனின் தனுசை முறித்தது யார் என்ற கோபத்துடன் சுயம்வரம் நடக்கும் இடத்திற்கு வந்தார். அங்கு இலக்குவனும் பரசுராமரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சாந்தப்படுத்திய இராமர், நடந்ததை அவரிடம் எடுத்துக் கூறினார். இராமரின் பிறவி நோக்கத்தை அறிந்த பரசுராமர் அவரை வணங்கி விட்டு அங்கிருந்து தவம் செய்யச் சென்றார். சுயம்வரத்தின் முறைப்படி சீதை வெற்றி மாலையை இராமர் கழுத்தில் சூடி இராமரை மணந்தாள்.
எனினும், தந்து அன்பு மகளுக்கு விமரிசையாக திருமணம் நடத்த ஜனகர் எண்ணினார். எனவே, தசாதரனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் இராமர் சீதை திருமணம் குறித்து அயோத்திக்கு தூது விடுத்தார். அளவிடற்கரிய சீர் வரிசையுடன், இராமரின் கும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள், மானிட ரூபத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவர்கள் உட்பட அனைவரும் மிதிலையை நோக்கிச் சென்றனர்.
இதுவரை இந்த உலகம் கண்டிராத அளவிற்கு திருமணம் நடந்த பின்னர், இராமரும் சீதையும் கொண்டாட்டங்களுடன் குதூகலத்துடன் அயோத்திக்குத் திரும்பினர். [48]
அயோத்தி அத்யாயம்
அயோத்தி நகரம் இராமரும் சீதையும் மிதிலையிலிருந்து திரும்பி வந்ததால் பூமியிலுள்ள சொர்க்கம் போன்று இருப்பதாகக் கூறுகிறார் துளஸிதாஸர். வயது முதிர்ந்த தசரதன் இராமரை மன்னராக பட்டாபிஷேகம் செய்ய எண்ணினார். இது தேவர்களை மிகுந்த வருத்தத்திற்குள்ளாக்கியது. ஏனெனில், இராமர் அயோத்தியில் தங்கி விட்டால் இராவண வதம் நடக்காது என்று அவர்கள் எண்ணினர். ஆதலால், அவர்கள் சரஸ்வதி தேவியை வணங்கினர்.
மன்னர் தசரதனுக்கு மூன்று மனைவிகள். அதில் கோசலை தான் பிரதான இராணி. கைகேயி பரதனின் தாய்; சுமித்ரா சத்ருக்னன் மற்றும் இலக்குவனின் தாய். சரஸ்வதி தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, கைகேயியின் சேவகியான மந்தரையின் மனம் மாற்றினாள். மந்தரை கைகேயியிடம், இராமர் மன்னராவத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், பரதன் மன்னர் ஆவதே மிகச் சிறந்தது என்றும் கூறினாள். அப்பொழுது பரதன் கைகேயியின் நாட்டில் தனது மாமனைச் சந்திக்கச் சென்றிருந்தான். மந்தரையின் போதனையால் கைகேயியும் மனம் மாறினாள். மந்தரை தசரதன் கைகேயிக்கு தர வேண்டிய இரு வரங்களை நினைவு கூறினாள். கைகேயி அரசவையில் தசரதனுக்காகக் காத்திருந்தாள். எல்லோரும் மகிழ்ச்சியாக பட்டாபிஷேக வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும் போது, கைகேயி அரசவையில் நின்று கொண்டிருப்பதைக் கண்ட தசரதன் வியந்தான். கைகேயி கடுமையான குரலில், தசரதன் தனக்கு அளிக்க வேண்டிய இரு வரங்களை நினைவு படுத்தினாள். அவற்றை இப்போது கேட்பதாகவும் பரதன் நாடாள வேண்டும்; இராமர் 14 ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் என்று கூறினாள். தசரதன் மன்றாடியும் கைகேயி கேட்காது போக, சுமந்த்ரனை அழைத்து இராமரை வரச் செய்தார்.
இராணி கைகேயி இராமரிடம் அந்த வரத்தைப் பற்றி கூறினாள். இராமர் திருமாலின் அவதாரம் எனினும், அவதாரத்தின் நோக்கத்தை இவ்வாறே நிறைவேற்ற இயலும் என்று தன்னுடைய சித்தியின் வார்த்தையை ஏற்றுக்கொண்டார். மக்கள் கைகேயிக்கு எதிராக தங்களுடைய வெறுப்பைப் பதிவு செய்தார்கள். இராமர் எவ்வளவோ மறுத்தும் இலக்குவனும் சீதையும் உடன் வருவோம் என்று கூறியதால் அவர்களையும் அழைத்துச் சென்றார். மூவரும், தசரதனை வணங்கிச் சென்றனர்.
அயோத்தி மக்களும் இவர்களுடன் வருவோம் என்று கூற, மூவரும், சுமந்த்ராவும் மக்களைச் சமாளித்து, நடு இரவில் காட்டிற்குச் சென்றனர். அங்கு, ஸ்ரீங்கவெரபுராவைத் தாண்டிச் சென்ற பொது நிஷத நாட்டு மன்னன் குகனைக் கண்டனர். பின்னர், கங்கை, [[யமுனை ஆறு|யமுனை], சரஸ்வதி சந்திக்கும் ப்ரயாக் நகரை அடைந்தனர். அங்கு இராமர் பரத்வாஜரைச் சந்தித்தார். அங்குள்ள யமுனா நதிக்கரை மக்கள் தன்மீது வைத்துள்ள அன்பால் மிகவும் பூரிப்படைந்தார். பின்னர், இராமாயணத்தின் ஆசிரியரான வால்மீகி மகரிஷியை அவரது ஆஷ்ரமத்தில் சந்தித்தார். வால்மீகி இராமரின் சுயரூபம் அறிந்து இராமரைப் பாடல்களால் துதித்து வணங்கினார். இந்த இடத்தில், சித்ரகூட நகரத்தின் அழகை மிக அழகாக துளசிதாஸர் வர்ணிக்கிறார்.
பின்னர், இராமர் சுமந்த்ராவை அயோத்திக்கு அனுப்பினார். சுமந்த்ரவிற்குத் திரும்பிச் செல்ல விருப்பமும் இல்லை, திரும்பிச் சென்றால் மக்கள் ஏசுவர் என்று வருந்தினான். திரும்பி வந்த அவனைப் பார்த்த தசரதன், இராமரைக் குறித்து விசாரித்தார். இராமரைப் பிரிந்த துயர் தாளாமல், இராமரின் பெயரைக் கூறியவாறே தசரதன் இறந்தார்.
முனிவர் வசிஷ்டருக்கு இராமர் திரும்பி வரப்போவதில்லை என்று தெரிந்ததால், பரதனையும் சத்ருக்கனனையும் அழைத்து வரச் செய்தார். நடந்தது அனைத்தையும் அறிந்த பரதன், தான் அயோத்தியில் இல்லாது போனதே எல்லாவற்றிற்கும் காரணம் என்று கூறி, தாயின் மேல் கோபம் கொண்டான். சத்ரருக்னன் ஆத்திரத்தால், மந்தரையைத் தாக்கினான். பின்னர்,கோசலையின் நிலை கண்டு மிகவும் மனம் வருந்தி,மன்னிப்பு கோரினார். கோசலை அவர்கள் இருவரையும் நாட்டை ஆளுமாறு கூறினாள். பரதன் தன்னால் ஒரு போதும் இராமரின் இடத்தில் நாடாள முடியாதென்றான். தசரதனின் இறுதிச் சடங்குகள் முடிந்து, பரதனும், சத்ருகனனும் நாட்டிற்கு இராமரை அழைத்து வரச் சென்றார்கள். அவர்களுடன், அரச குடும்பமும், நாட்டு மக்கள் பலரும் சென்றனர்.
மக்கள் படையைக் கண்ட நிஷத நாட்டு மக்கள் இராமரைத் தாக்க வந்திருப்பார்களோ என்று சந்தேகப்பட்டனர். குகன் பரதனிடம் படையோடு காட்டிற்கு வந்த காரணத்தைக் கேட்டு தெரிந்து கொண்டான். பரதன் இராமரிடம் கொண்ட அன்பைக் கண்டு குகன் நெகிழ்ந்து போனான். பின்னர், மக்கள் சித்ரகூடத்தை நோக்கிச் சென்றார்கள். அங்கு இலக்குவனும் பரதனின் படையைக் கண்டு சந்தேகித்து பரதன் மேல் கோபம் கொண்டான். அங்கு வந்த இராமர், பரதனைப் புகழ்ந்து பேச, இலக்குவன் தன் எண்ணத்தை எண்ணி நாணினான். சகோதரர்கள் அனைவரும் அங்கு ஒன்று கூடினர். தந்தையின் பிரிவை எண்ணி அனைவரும் வருந்தினர்.
பரதன் எவ்வளவோ முயன்றும், இராமர் தன் தந்தை மற்றும் சித்தியின் சொல்லின் பேரில், காட்டிலேயே இருப்பதாகக் கூறினார். எனவே பரதன், தன்னால் நாடாள முடியாது என்று கூறி, இராமரின் பாதுகைகளை வைத்து நாடாளுவேன் என்று அவைகளை பெற்றுச் சென்றான். மிகுந்த மனவருத்ததுடன் அயோத்தி திரும்பிய பரதன், இனி இராமர் வரும் வரை நந்திக்ராமத்தில் இருக்கப் போவதாகக் கூறினான். [49]
கானக அத்யாயம்
இராமர், சீதை, இலக்குவன் காட்டில் நடந்து அத்ரி என்ற ஒரு முனிவரின் குடிலை அடைகிறார்கள். அத்ரி அவர்களை அன்புடன் வரவேற்கிறார். அத்ரியின் மனைவி அனுஸ்யா சீதாதேவியை வரவேற்றாள். அனுஸ்யா மனைவியின் கடமைகளை சீதையிடம் விவரிக்கிறார்.
இராமர், சீதை, இலக்குவன் காட்டினுள் மேலும் நடந்து விராதனைச் சந்திக்கிறார்கள். விராதன் சீதையைச் சிறை பிடிக்க முயற்சித்தான். இராமர் அவனைக் கொன்று ஒரு பள்ளத்தில் புதைக்கிறார். பின்னர், அவர்கள் சரபங்க முனிவரின் ஆஷ்ரமத்திற்குச் செல்கிறார்கள். அந்த முனிவர் கூறியபடி, சுதீக்ஷ்ண முனிவரின் ஆஷ்ரமத்தில் தங்குவதற்காக செல்கிறார்கள். அங்கே தவம் கலைந்து எழுந்த முனிவர், இராமரின் வருகைக்காகவே அவர் காத்திருந்ததாகவும், அதற்காக வேற்று கிரகங்களுக்குச் செல்லும் வாய்ப்பு வந்தும் செல்லாது இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
பின்னர், மூவரும் அகஸ்த்ய முனிவரைச் சந்தித்து வணங்குகிறார்கள். அவர் தெய்வீகமான ஆயுதங்களை இராமருக்கு அளித்து தண்டகா வனம் செல்லும் பொது தேவைப்பட்டால் உபயோகிக்குமாறு கூறினார். அங்கே இராமர், ஜடாயுவைச் சந்தித்தார். ஜடாயு அந்த மூவருடன் அகஸ்த்யரின் சொல்லுக்கேற்ப மிக அழகான பஞ்சவடி என்ற கிராமத்தை அடைந்தனர். இலக்குவனுக்கு நடந்தது அனைத்தும் நினைவுக்கு வர, கைகேயியைத் தகாத வார்த்தைகளால் பேசினான். அவ்வாறு பேசலாகத்து என இராமர் சமாதானம் கூறினார்.
அப்போது, அரக்கன் இராவணனின் தங்கை சூர்ப்பனகையைக் கண்டனர். இராமரைப் பார்த்த மாத்திரத்தில் அவர் மேல் காதல்வயப்பட்டாள் அவள். இராமரிடம் இனிமையாக பேசியபோது, இராமர் தான் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றார். இலக்குவனும் அவளை நிராகரிக்க, சீதையைத் தாக்கத் தொடங்கினாள் அவள். வெகுண்ட இலக்குவன் அவள் காது மடல்களையும் மூக்கையும் அறுத்தான். அவமானப்பட அவள், தன்னுடைய சகோதரர்கள் காரா, துசானா, திரிசிரா இருக்கும் இடத்தைச் சென்றடைந்தாள். அவளின் கோலத்தைக் கண்ட அவர்கள், இராமரைக் கொல்ல முயற்சித்தனர். இராமர் அவர்கள் மூவரையும் வென்றார்.
வருந்திய சூர்ப்பனகை இலங்கையிலுள்ள இராவணனைச் சந்தித்தாள். இராவணன் தன்னுடைய பால்ய ஸ்நேகிதனான மாரீசனை அழைத்தார். மாரீசன் தங்க மானாக மாறினால், சீதையைக் கடத்தி விடலாமென்று சதி செய்தான். மாரீசன் இராமரின் பலத்தை அறிந்தவனாதலால், (பால காண்டம்) பயம் கொண்டு இருப்பினும், செய்யாது போனால், இராவணன் கொன்று விடுவான் என்பதால், ஒப்புக்கொண்டான். இராவணனும் மாரீசனும் இராமர் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றனர்.
மாரீசன் மாய மானாக மாறி சீதையின் கவனத்தை ஈர்த்தான். இராவணனின் எண்ணத்தை அறிந்திருந்த இராமர், சீதையின் நிழலை அவ்விடத்தில் இருக்கச் செய்து, சீதையை ஒளிந்திருக்குமாறு கூறினார். சீதை மீண்டும் மீண்டும் அந்த மாய மான் தனக்கு வேண்டுமென்று நச்சரித்தாள். இராமர் அந்த மானைத் தேடி ஆஷ்ரமத்திலிருந்து வெகு தூரம் சென்றார். இராமரின் குரலில், மாரீசன் இலக்குவனிடம் உதவி வேண்டுமென்று குரல் கொடுத்தான். சீதை அந்த குரலைக் கேட்டு, கதறி அழுதாள்;இலக்குவனை இராமருக்கு உதவுமாறு ஆணையிட்டாள். அந்த சமயம், இராவணன் ஒரு யாசிக்கும் இசைவாணராக சீதையிடம் வந்தார். யாசகம் அளிக்க வந்த சீதையை இராவணன் கடத்திச் சென்றான். அதைக் கண்ட ஜடாயு இராவணனோடு போரிட்டான். இராவணன் மிகுந்த பலசாலி ஆதலால்,இராவணன் ஜடாயுவின் சிறகை வெட்டி வீழ்த்தினான். இராமரும் இலக்குவனும் திரும்பி வந்து சீதை இல்லாததைக் கண்டு வருந்தினர். சீதையைத் தேடிச் செல்லும்போது, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஜடாயுவைக் கண்டனர். ஜடாயுவின் வாயிலாக உண்மை அறிந்த அவர்கள், ஜடாயுவிற்கு மோட்சம் அளித்தனர். பின்னர், செல்லும் வழியில் சபரியின் ஆஷ்ரமத்தைக் கண்டனர். சபரி தன்னுடய கண்ணீரால், இராமரின் பாதங்களைக் கழுவினாள். பின்னர், சுவைத்துப் பார்த்து இனிக்கும் பழங்களை மட்டுமே இராமருக்குக் கொடுத்தாள். இராமர் அவளுக்கும் மோட்சம் அளித்தார். சகோதரர்கள் இருவரும் பாம்பாசரோவர் ஏரியை நோக்கி நடந்து சென்றனர். [50]
கிஷ்கிந்தா அத்யாயம்
ரிஷ்யமுக மலையின் உச்சியிலிருந்து, சுக்ரீவன் இராமரும், இலக்குவனும், மலையின் அடிவாரத்தில் இருப்பதைக் கண்டார். அனுமனிடம், தன்னுடைய சகோதரன் பாலி அனுப்பிய ஆட்களாக இருப்பரோ என வினவினார். அனுமன் பிராமணனாக வடிவம் எடுத்து அவர்களை அணுகினார். இராமரின் சுயரூபத்தை அறிந்த அனுமன் அவரின் புண்ணிய பாதங்களில் விழுந்து ஆசி பெற்றார். இதை சுக்ரீவனிடம் எடுத்துக் கூறிய அனுமன், அவர்களோடு சேர்ந்து சீதையைத் தேடும் பணியில் இறங்கினார். அப்பொழுது, சுக்ரீவன் தன்னுடைய தமையன் பாலியால் தான் ஏமாற்றப்பட்டத்தைக் கூறினார். இராமர் பாலியை வாதம் செய்து, கிஷ்கிந்தா நாட்டின் மன்னராக சுக்ரீவனையும், இளவரசாரக பாலியின் மகன் அங்கதனையும் பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அதோடு சீதையைக் கண்டுபிடிக்க உதவுவதாக அளித்த உறுதியை சுக்ரீவன் மறந்தான். இராமர் கடுங்கோபம் கொண்டு, இலக்குவனை சுக்ரீவனை அழைத்து வருமாறு சொன்னார். இலக்குவன் அரசவையில் நுழைந்து அந்த நகரைச் சாம்பலாக்குவதாக சபதமிட்டார். பயந்த சுக்ரீவன், இராமரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரினார். சுக்ரீவன் உடனே, கரடிப் படையையும் குரங்கு படையையும் எல்லா திசைகளிலும் தேடுமாறு ஏற்பாடு செய்தார். அனுமனால் மட்டுமே சீதையைக் கண்டுபிடிக்க இயலுமென்று இராமர் எண்ணினார். எனவே, இராமர் அனுமனிடம், சீதையின் பிரிவு தன்னை மிகவும் வாட்டுவதாகக் கூறி கணையாழியைக் கொடுத்தார். அங்கதன், நளன், கேசரி, ஜாம்பவான் மற்றும் அனுமன் தெற்குத் திசையை நோக்கிச் சென்றனர். கரையை அடைந்த அவர்கள், ஜாம்பவானும் அங்கதனும் கரையின் அருகே ஒரு குகையைக் கண்டனர். அந்த குகையில் ஜடாயுவின் அண்ணனான சம்பாதி வசிப்பதைக் கண்டனர். சம்பாதி வானரப் படையிடம் சீதை அசோக வனத்தில் இலங்கையில் இருப்பதாகக் கூறினார். அந்த தீவு 400 மைல் தொலைவில் இருப்பதாகவும், அந்த தூரத்தைக் குதித்துத் தாண்டக் கூடிய ஒருவரால் மட்டுமே அங்கே சென்றடைய முடியுமென்று கூறினார். அனுமனால் மட்டுமே அதைச் செய்ய முடியுமென்று ஜாம்பவான் முடிவு செய்தார்.[51]
மகிழ்ச்சியான காண்டம்
ஜாம்பவானின் கருத்தை ஏற்று அனுமன், அருகிலிருந்த மலையின் உச்சியின் மீதேறி, வானில் பறக்கலானர். இடையில் பாம்புகளின் தாயான சுரசையின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். சமுத்ர அரக்கி அனுமனை பறவை என்றெண்ணி பிடிக்க நினைத்தது. அவளை வென்று அனுமன், இலங்கையின் கரையில் இறங்கினார். அங்கு மிக அழகான தோட்டங்களையும், குளங்களையும், எரிகளையும் கண்டார். அனுமன் இராமரை எண்ணி சிறிய உருவம் எடுத்து இலங்கையில் நுழைந்தார். அங்கு அரக்கி லங்கினியை கைககளால் தாக்கி பூமியில் விழச் செய்தார். அனுமன் அரண்மனைகளிலும் தோட்டங்களிலும் தேடினார். பின்னர் ஸ்ரீ ஹரியின் நாமம் கேட்கும் இடத்தை நோக்கி நடந்தார். அது இராவணனின் தம்பி விபீஷணனுடையது. அங்கு சென்று, இராமரின் புராணத்தை அனுமன் கூறினார். பின்னர் அசோக வனத்தில் சீதையைக் கண்டார். சீதை அமர்ந்திருந்த மரத்தின் கிளையில் அமர்ந்து, அடுத்து என்ன செய்வதென்று யோசித்தார்.
இராவணன் சீதையை நோக்கி வருவதையும் தன்னை ஒரு முறை பார்க்குமாறு கெஞ்சுவதையும் கண்டார். இராவணன் சீதையின் தலையை அறுப்பதாக் கூறியும் சீதை அஞ்சவில்லை. இராவணனின் மனைவி மண்டோதரி அவனைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றாள். அனுமன், இராவணன் மீதிருந்த சினத்தை மிகுந்த பிரயாசைக்குப் பின் அடக்கிக் கொண்டார். பின்னர், அனுமன், இராமரின் துதிகளை மெல்லிய குரலில் பாடினார்.பின்னர் தான் யார் என்று சீதையிடம் கூறி, கணையாழியை அளித்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் சீதை அனுமனை ஆசீர்வதித்து பல வரங்கள் அளித்தாள்.
அனுமன் சீதையிடம் தான் மிகுந்த பசியுடன் இருப்பதாகக் கூறி, அந்த தோட்டத்திலிருந்து பழங்கள் புசிக்க அனுமதி கேட்டார். பாதி பழங்கள் உண்டு, பலவற்றை அழித்தார். இராவணனுடைய மகன் அக்ஷயாவை வதம் செய்தார். வேண்டுமென்றே இந்த்ரஜீத்திடம் பிடிபட்டுக்கொண்டவர், இராவணனின் அரண்மனைக்குச் சென்றார். அங்கே இராவணன் அனுமனைக் கொல்லுமாறு ஆணையிட்டான். விபீஷணன் அனுமன் ஒரு தூதன், தூதனைக் கொல்லக் கூடாதென்று நினைவுகூர, இராவணன் அனுமனை அவமானப்படுத்த அனுமனின் வாலிற்குத் தீ வைத்தான். அனுமன் ராம நாமாவைக் கூறக் கூற, அனுமனின் வால் நீண்டுக்கொண்டே சென்றது. அதனைக் கொண்டு இலங்கைக்கு தீ வைத்தார். பின்னர், கடலில் தீயை அணைத்து, சீதை நலமாக இருக்கிறாரா என்று பார்த்துக்கொண்டார். சீதையிடம் மறுமுறை இராமருடன் சந்திப்பதாக உறுதி அழைத்தார். பின்னர், இராமர், அங்கதன், ஜாம்பவாநனிடம் நடந்ததைக் கூறி இலங்கை நோக்கி படையுடன் கிளம்பினார்.
இதனிடையே, இலங்கையில்,மண்டோதரியும் விபீஷணனும் சீதையைத் திருப்பி அனுப்புமாறு இராவணனை வேண்டினார். இராவணன் விபீஷணனை அவமானப்படுத்தித் திருப்பி அனுப்பினார். விபீஷணன் இராமருடன் சேர்ந்து கொண்டார். விபீஷணன் இராமரின் பாதங்களில் வீழ்ந்து ஆசிபெற்று, இராமரிடம் அடைக்கலம் கோரினார். கடலை எவ்வாறு கடக்கலாமென்று அனைவரும் ஆலோசித்தனர். அப்போது கடல் தேவதைகள், இராமரிடம் வானர சகோதரகள் நிலா மற்றும் நளா கடலைத் தாண்ட வரம் பெற்றிருப்பதாகக் கூறினார்.[52]
இலங்கா அத்யாயம்
ஜாம்பவான் அந்த சகோதரர்கள் நிலா மற்றும் நளாவைப் பாலம் காட்டுமாறு ஆணையிட்டடார். அவர்கள் அந்த மலை முழுவதையும் கொண்டும் பாலம் அமைத்தார்கள். இராமர் சிவனுக்காக இராமேஸ்வரத்தில் ஒரு கோவில் கட்ட வேண்டுமென்று எண்ணினார். பால வேலை முடிவடைந்தவுடன், இராமரின் படைகள் பாலத்தைக் கடந்து, இலங்கை அடைந்து, சுவேலா என்ற மலையின் அருகில் ஓய்வெடுத்தனர். இதை அறிந்த இராவணன் மேலும் கோபம் கொண்டான். மண்டோதரி இராவணனின் உயிருக்கு ஆசைப்பட்டு, சீதையைத் தீர்ப்பி அனுப்பி விடுமாறு கோரினாள். இராவணன் இராமரின் பலத்தை உதாசீனப்படுத்தி, மண்டோதரியைச் சாந்தமாக்கினான். பின்னர், அவன் மகன் பிரகஸ்தானும், தாயைப் போன்றே கூற, அது பலனில்லாது போனது.
இதனிடயே, இராமர் ஜாம்பவானிடம் என்ன செய்வது என்று கேட்டார். ஜாம்பவான் அங்கதனைத் தூது அனுப்பலாமென்று கூறினார். இராவணனின் அரசவையில் அங்கதன் சென்று, இராவணன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இதுவே தருணம் என்றும்,இல்லை எனில் போர் தொடங்கும் என்றான்.
முதல் நாள் போர் மிகவும் கொடுமையாக நடந்தது. இராவணன் தன்னுடைய படையில் பாதியை இழந்தான். இராவணனின் மகன் இந்த்ரஜித், இலக்குவனை சிறந்த ஆயுதத்தால் தாக்க, இலக்குவன் படுகாயமடைந்தான். அனுமன் சுஷேனா என்ற மருத்துவரை அழைத்து வந்தார். அவர் இலக்குவனைக் குணப்படுத்த இமாலய மலையில் கிடைக்கும் சஞ்சீவினி மூலிகையை எடுத்து வர வேண்டுமென்றார். அனுமன் அதனை எடுத்து வருவதாக இராமருக்கு உறுதி அளித்தார். அவரைத் தடுத்து நிறுத்த இராவணன் காலநேமி என்ற அரக்கியை அனுப்பினார். அவளை எளிதில் வென்ற அனுமன், மலையை கண்டு, மருந்து அதில் கண்டுபிடிக்க இயலாது போக, மலையைச் சுமந்து இலங்கை அடைந்தார்.
அனுமன் மிகுந்த வேகத்தோடு இலங்கை வந்து கொண்டிருக்கும் போது, நந்திக்ராமம் அருகில் பராதனால் தவறுதலாகத் தாக்கபட்டார். பின்னர், நினைவு திரும்பி, பரதன் இராமரின் தம்பி என்று அறிந்து கொண்டார். இலங்கையில் , சஞ்சீவனி மருந்தினால் சூஷேனா இலக்குவனைக் குணப்படுத்தினார். இராமர் மிகுந்த அன்புடன் அனுமனை ஆரத் தழுவினார். இலக்குவனின் உடல்நிலை சரி ஆனதை அறிந்த இராவணன் சினம் கொண்டு கும்பகர்ணனை எழுப்பினார். இராமர் ஒரே அம்பால் அவனை வீழ்த்த, இராவணன் பயந்து போனான். பல்வேறு சக்திகளை வேண்டி இந்த்ரஜித் தவம் மேற்கொண்டான். அனுமனும் அங்கதனும் அதனை முறியடித்தனர். இலக்குவன் இந்த்ரஜித்தை வதம் செய்தான். இராமர் எத்தனையோ அம்புகள் எய்தும் இராவணன் மரிந்து போகாது போக, அவனை எவ்வாறு கொள்ள வேண்டும் என்று விபீஷணனிடம் வினவினான். பின்னர், அவ்வாறே இராவணனைக் கொன்றான்
இராவணனுடைய இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், விபீஷணனிற்கு இலங்கையின் அரசனாக பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. அனுமன் இந்த் செய்தியை அசோக வனத்திலிருக்கும் சீதையிடம் சென்று கூறினார். முடிவில், இராமரும் சீதையும் ஒன்று கூடினர். அனைவரும் அயோத்திக்குத் திரும்ப எண்ணினர். இராமர், சீதை, இலக்குவன் மற்றும் சில மூத்த வானரர்கள் இராவணனின் புஷ்பக விமானத்தில் ஏறிச் சென்றனர்.[53]
இன்று, இராமர் அயோத்திக்குத் திரும்பி வருவதற்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. தம்பி பரதன் மிகுந்த கவலயோடு இருக்கிறான். அவன் 14 ஆண்டுகள் நந்திக்ராமத்தில் கண்ணீர் விட்டபடியே வாழ்ந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.அனுமன் பரதனைச் சந்தித்து அவர்கள் வந்து கொண்டிருப்பதாகக் கூறினார். பரதன் இந்த நற்செய்தியை அயோத்திக்குச் சென்று அனைவரிடமும் கூறினான். புஷ்பக விமானம் வந்து இறங்கியவுடன், மக்கள் அனைவரும் “ஸ்ரீராமசந்திரமூர்த்திக்கு ஜெயம்” என்று கூவினர். இராமரும், சீதையும் இலக்குவனும் வசிஷ்டரின் பாதம் தொட்டு ஆசி பெற்றுக்கொண்டனர். இறுதியில் , இராமர் பரதனை ஆரத் தழுவிக் கொண்டார். பின்னர், பட்டாபிஷேகத்தில் இராமர் மன்னராக முடி சூடிக் கொண்டார். அப்போது, சிவன் வந்து அந்த விழாவைக் கௌரவித்தார். பின்னர், எந்நாளும் இராமரின் பக்தனாக தான் இருக்க வேண்டுமென்று வாரம் பெற்றுக்கொண்டார். முடிவாக, இராமருக்கு இரட்டைக் குழந்தைகள் இலவன், குசன் இருக்கிறார்கள் என்றும், மற்ற சகோதரர்களுக்கும் இரு புதல்வர்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாரத முனிவரும் சனக முனிவரும் அயோத்திக்கு வந்து அந்த அழகான நகரத்தைக் கண்டனர். பின்னர், கக்புஷுன்டியின் சுயசரிதையில், கலியுகம் எவ்வாறு இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. இதனுடன் பார்வதியும் சிவனும், கக்புஷுன்டியும் கருடனும் உரையாடலை முடித்துக் கொண்டனர். யாக்யவல்க்கியரும் பரத்வாஜரும் உரையாடலை முடித்துக் கொண்டதாகக் கூறப்படவில்லை. இதனுடன், துளஸிதாஸர் இந்த நூலை முடித்துக் கொள்கிறார். [54] சமஸ்க்ருதத்திலுள்ள ருத்ராஷ்டகம் இந்த காண்டத்தின் ஒரு பகுதி.
பால காண்டத்தில், சிவன் இராமரின் கதையை பார்வதி தேவியிடம் கூறுவதாக எழுதப்பட்டிருந்தது. அப்பொழுது இராமர் பூமியில் அவதரித்ததற்கான ஐந்து காரணங்களைக் கூறுகிறார்.
எப்பொழுதெல்லாம் தர்மம் குறைந்து அதர்மம் உலகில் பெருக்கத் தொடங்குகிறதோ, அப்போதெல்லாம் இறைவன் ஒரு அவதாரத்தில், பூமியைக் காப்பாற்றுவான் என்று பார்வதியிடம் சிவன் கூறுகிறார். அந்த அரக்கர்களை அழித்து, பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவான் இறைவன் என்கிறார். இதுவே இராமாவதாரத்தின் முதன்மையான நோக்கம்.
சகோதரர்கள் ஜயன் விஜயன் இருவரும் பகவான் விஷ்ணுவின் வாயிற்காப்போர்கள். சனக முனிவர் மற்றும் அவரின் சகோதரர்களின் சாபத்தால் இருவரும் அரக்க குலத்தில் பிறக்க நேரிடுகிறது. அவர்கள் ஹிரண்யகசிபுவும் ஹிரண்யாக்ஷனும் ஆவர். இறைவன் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷனையும், நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவையும் அழித்தார். ஹரி தானே இவர்களை அழித்த போதும், சாபத்தின்படி இவர்கள் மூன்று பிறவி எடுக்க வேண்டுமென்பதால், இவர்கள் மோட்சம் அடையவில்லை. எனவே அவர்கள் இராவணனாகவும் கும்பகர்ணனாகவும் மறுபிறவி எடுத்தனர். ஹரி, இவர்களை அழிக்க இராமராக மனிதப் பிறவி எடுத்தார். [55][56]
நாரத முனி பகவான் விஷ்ணுவை நினைத்துக் கொண்டே இமாலய மலையில் நடந்து சென்றார். அங்கு அவர் ஆழ்ந்த தியானத்திற்குச் சென்றார். அவரின் தவத்தைக் கண்ட இந்திரன் எங்கே தனது இந்திரலோகப் பதவிக்கு அபாயம் ஏற்பட்டு விடுமோ என்று பயந்தான். இந்திரன் காமதேவனை அழைத்து, நாரதரின் தவத்தைக் கலைக்குமாறு கூறினார். அவர் நறுமணமுள்ள மலர்கள், தென்றல், தேவலோகத்துப் பெண்கள் கொண்டும் கலைக்க முயற்சித்தார். ஆனால், அவை எதுவும் நாரதரைக் கலைக்கவில்லை. தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, நாரதரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரினார் காமதேவன். இதை சிவனிடம் பெருமையாக நாரதர் கூறினார். சிவன் இக்கதையை ஹரியிடம் சொல்லக் கூடாதென்றார்.
விஷ்ணுவைச் சந்தித்த நாரதர், கர்வத்தோடு சிவனின் வார்தையையும் மீறி இக்கதையைக் கூறினார். விஷ்ணு மேலும் நாரதரைப் புகழ, அளவில்லா கர்வத்தோடு நாரதர் கிளம்பினார். ஹரி லக்ஷ்மி தேவியிடம் தான் ஒரு திட்டம் வகுத்திருப்பதாகக் கூறி மாயையைத் தொடங்கினார். விஷ்ணு ஒரு மிக அழகான நகரத்தை உருவாக்கினார். அந்த நகரத்தின் மன்னர் ஷீலாநிதி, அவரின் அழகான மகள் விஷ்வமோகினி. நாரதர் ஆர்வத்துடன் அந்த நகரைச் சென்றடைந்தார். அங்கே அந்த மன்னனின் மகள் மீது காதல் கொண்டார். மன்னர் ஒரு தகுதியானவற்கே தன் மகளைத் தருவதாகக் கூறினார். நாரதர் இளவரசி தன்னைத் தேர்ந்தெடுக்க திட்டம் தீட்டினார்.
நாரதர் ஹரியிடம் அளவில்லா அழகை வரமாகக் கேட்டார். ஹரி நாரதருக்கு எது நன்மையோ அதையே செய்வதாகக் கூறினார். உண்மையில், இராமர், நாரதரை ஒரு குரங்கைப் போல மாற்றினார். அரசவையிலிருந்த அனைவரும் அதைக் கண்டும் ஏதும் கூறவில்லை. கோபம் கொண்ட இளவரசி நாரதரை வெறுத்தாள். கண்ணாடியில் தன் முகம் கண்ட நாரதர், வைகுண்டத்திற்குச் சென்று ஹரியைத் தகாத வார்தைகளால் பேசினார் : “ஒரு குரங்கைப் போல நீ என்னை மாற்றியதால் குரங்குகள் உன்னுடைய தோழர்கள் ஆவார்கள். என்னை நீ வருத்தியதால், உன் மனைவியைப் பிரிந்து வருந்துவாய்” என்றார். ஹரியும் அதனை ஏற்றுக் கொண்டு, மாயையைக் கலைத்தார்.
நாரதர் விஷ்வமோகினி உட்பட அனைத்தும் மாயை என்று அறிந்து கொண்டு சாபத்தை அழிக்குமாறு கூறினார். ஹரி அது தனது விருப்பம் என்று கூறி, எல்லா பாவங்களில் இருந்து விடுபட, ஹரி நாமாவைச் சொல்வதே சிறந்தது என்றார். நாரதர் தன்னுடைய இடத்திற்குச் சென்று நாமஸ்மரணை செய்யத் தொடங்கினார்.[57]
ஸ்வயம்புவா மனுவின் மனைவி ஷதரூபா. மனு பல ஆண்டுகள் உலகை ஆண்டு, இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றினான். ஹரியின் பக்தனான அவன், ராஜ்யத்தை மகனிடம் கொடுத்து விட்டு, மனைவியுடன் காட்டில் சென்று தவம் செய்ய எண்ணினான். இருவரும் சரயு நதிக்கரையில் அமர்ந்து பன்னிரெண்டு எழுத்து மந்திரத்தை ஜபித்தனர். [58] சிலர் அந்த மந்திரம் ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்ற மும்மூர்த்திகளை அழைக்கும் மந்திரம் என்கிறார்கள்[59] இராமபத்ராசார்யா அந்த மந்திரம் இராமருக்கும் சீதைக்குமான மந்திரம் என்கிறார். [60]
இருவரும் முதலில் உணவையும், நீரையும் தியாகம் செய்தனர். பின்னர், காற்றைத் தியாகம் செய்ய எண்ணினர். பிரம்மா, விஷ்ணு, சிவன் அவர்களை அழைத்தும், முடிவில் அவர்கள் உறுதியாக இருந்தனர். அப்பொழுது, சொர்க்கத்திலிருந்து என்ன வரம் வேண்டுமென்று ஒரு குரல் கேட்டது. இராமரும் சீதையும் அழகான உருவத்தில் அவர்கள் முன் தோன்ற, பெருமகிழ்ச்சி அடைந்த இருவரும் தங்களுடைய எல்லா ஆசைகளும் நிறைவேறி விட்டதாகக் கூறினர். [61] இறுதியாக, தனக்கு ஒரு நெடு நாள் ஆசை இருப்பதாகவும், இறைவன் தனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்பதே அது என்றும் கூறினான் மனு.
இறைவன் அதை நிறைவேற்றுவதாகக் கூறினார். ஷதரூபாவும் அதுவே தன்னுடைய ஆவல் என்றாள். இறைவன் அவர்கள் இருவரையும் இந்திரனின் தலைநகரத்தில் வசிக்கச் செய்தார்.
பின்னர், இருவரும் சிறிது காலத்திற்குப் பின், அயோத்தி மன்னன் தசரதானாகவும் கோசலையாகவும் பிறப்பார்கள் என்றார் இறைவன். அவர்கள் இருவருக்கும் மகனாக தானே அவதரிப்பதாகவும் கூறினார். [62]
இராமர் பிறப்பதற்கு முன், யாக்யவல்க்கியர் பரத்வஜாரிடம் பிரதாப்பானுவின் கதையைக் கூறினார். கைக்கெய் என்ற நகரத்தின் மன்னன் சத்யகேது. அவருக்கு, பிரதாப்பானுவ, அரிமர்த்தனா என்று இரு புதல்வர்கள். அவரின் பிரதான மந்திரி தர்மருசி. சத்யகேது தனது ராஜ்யப் பொறுப்பை பிரதாப்பானுவிடம் ஒப்புவிக்க, பிரதாப்பானு உலகையே வெல்கிறார்.
ஒரு முறை அவர் கானகத்திற்குச் செல்லும் பொது ஒரு கொடிய கரடியைக் கண்டார். அந்த கரடி காலகேது;அது அவரை விட்டு வெகு தூரம் செல்கிறது. பிரதப்பானு அதனைத் துரத்திக் கொண்டு வெகு தூரம் செல்கிறார். அப்போது தாகம் எடுக்க, அருகிலிருக்கும் ஒரு போலி முனிவரின் ஆஷ்ரமத்திற்குச் செல்கிறார். முன் நடந்த ஒரு சம்பவத்தால் கோபம் கொண்டிருந்த முனிவர், அவரை அவமானப்படுத்த எண்ணினார். முனிவரை அடையாளம் காணாத மன்னர், முனிவர் வரம் கேட்டவுடன், மறைந்து போகவும், இளமையோடு இருக்கவும் வரம் கேட்டார். ஆனால், அவை நிறைவேற, பல பிராமணர்களை உணவளித்து மகிழ்விக்க வேண்டுமென்றார் முனிவர்.
முனிவர் மன்னரை ஓய்வெடுக்கச் சொல்லி, உணவு தயாரிக்கச் செல்வதாகக் கூறினார். மன்னர் மூன்று நாள் காத்திருந்தும் முனிவர் வராது போக, காலகேது ஒரு பூசாரியாக வந்து, மன்னரை அவையில் சந்தித்து, முனிவர் அவனை உணவு சமைக்க அனுப்பியிருப்பதாகக் கூறினார். மன்னர் எல்லா பிராமணர்களையும் அழைத்தார். அவர்கள் உண்ணும் முன், அந்த உணவு சுத்தம் இல்லாதது, அனைவரும் ஓடி விடுங்கள் என்று வானிலிருந்து ஒலி கேட்க, அனைவரும், மன்னரைச் சபித்தனர். அப்போது அந்த குரல், மன்னரின் மீது பிழை இல்லை என்று கூறி, சாபத்தைத் திரும்பப் பெற இயலாது என்பதால், அடுத்த பிறவியில், சாபத்தின் பலனை அவர்கள் அனுபவிக்கக் கடவது என்றது.
சினம் கொண்ட மன்னர் காலக்கேதுவைத் தேடினார். அங்கு அவனைக் காணாது வருந்திய போது, பிராமணர்கள், அடுத்த பிறவியில் இறைவனே அவனை அழிப்பார் என்றார். சாபத்தின் படியே, அண்டை நாட்டு படையெடுப்பில் பிரதாப்பானு, அரிமர்த்தம், தர்மருசி ஆகியோர் மாண்டனர்.
பிரதாப்பானு இராவணனாகவும், அரிமர்த்தம் கும்பகர்ணனாகவும், தர்மருசி விபீஷணனாகவும் மறுபிறவி எடுத்தனர். மூவரும், கடுந்தவம் செய்து பல வரங்கள் பெற்றனர்-இராவணன் மனிதப் பிறவி மற்றும் குரங்குப் பிறவிகளால் மட்டுமே தன்னைக் கொல்ல முடியும் என்றும், கும்பகர்ணன் ஆறு மாதம் இடை விடாத உறக்கம் வேண்டுமென்றும், விபீஷணன் ஹரியின் மேல் அளவற்ற பற்று வேண்டும் என்றும் வரங்களைப் பெற்றனர். [63]
பல்வேறு கவிஞர்கள் இந்நூல் எதிர்பாராத இடத்தில் முடிவு பெற்றதாகக் கூறுகின்றனர். வால்மீகியின் உத்தர காண்டத்தில் இராமரின் ஆட்சியில் சீதை கானகம் செல்வது, அயோத்தி மக்கள் புரஞ்சொல்வது போன்றவைக் கூறப்பட்டுள்ளது. சீதை அன்னை பூமா தேவியிடம் தன்னை அழைத்துக் கொள்ளுமாறு கூறி, இராமரை விட்டுச் செல்வதாக எழுதியுள்ளார். ஆனால், இந்த நூலில் எவையும் குறிப்பிடப்படவில்லை. காத கார் மொராரி பாபு, துளஸிதாஸர் நூலை சீதையின் கவலையோடு முடிக்க விரும்பாததே காரணம் என்கிறார். துளஸிதாஸர், சீதையை தன்னுடைய தாயாகவும் உலகின் தாயாகவும் வர்ணிக்கிறார். சீதை ஏற்கனவே தேவையான அளவிற்குத் துன்புற்றத்தால், மகிழ்ச்சியுடன் நூலை நிறைவு செய்கிறார். சிலர், இந்த நூலின் பாலகாண்டத்தை மட்டுமே கூறுகிறார்கள். ஏனெனில், அதில் இராமர், சீதையின் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்துள்ளது. [64]
சித்திரை மாதத்தின் ஒன்பதாம் நாள், சூரியன் மத்யமமாக இருக்கும்; அதிகம் வெயிலோ குளிரோ இல்லாத காலம், இதமான காற்று வீசும் காலம். காட்டில் பூ பூக்கும் காலம், ஆறுகள் பெருக்கெடுத்து ஓடும் காலம். பிரம்மா இராமர் பிறக்க இதுவே சரியான நேரம் என்று குறிக்கிறார். தேவர்கள் அனைவரும் மிக உன்னதமான இராமரின் பிறப்பைக் காண வானில் கூடுகிறார்கள். தேவர்கள் இறைவனின் துதியைப் பாட அவை வானில் எதிரொலிக்கிறது.
இங்கே இராம் ஜனம் ஸ்துதி என்ற புகழ்பெற்ற பாடல் எழுதப்பட்டுள்ளது..[65] கோசலை நான்கு கரங்களுடன் கரிய நிரத்துடன் பிறந்த குழந்தை கண்டு குதூகலிக்கிறாள். பல்வேறு ஆபரணங்கள் அணிவித்து, அழகின் கடல் என்று கொஞ்சுகிறாள். கோசலை கைகளைக் குவித்துப் பாடுகிறாள் “எல்லை அற்றவனே, உன்னை நான் எவ்வாறு துதிப்பேன். வேதங்களும் புராணங்களும் நல்லொழுக்கத்தின் ஆலயம் நீ என்று வர்ணிக்கின்றது. லக்ஷ்மி தேவிக்கு கடவுள் நீ; அனைத்து மக்களாலும் நேசிக்கப் படுபவன் நீ;என் நன்மைக்காக்கத் தோன்றியுள்ளாய்;உன் உடம்பின் ஒவ்வொரு துளையும் பல பிரபஞ்சங்களை அடக்கியுள்ளது;நீ என்னுடைய வயிற்றில் தங்கினாய் என்று எண்ணுகையில் நான் தடுமாறுகிறேன்”. இராமர் சிரித்தபடியே கோசலையின் முந்தைய பிறவியைப் பற்றி கூறி தன்னை மகனாக ஏற்றுக் கொள்ளுமாறு கூறினார். கோசலை இராமரை ஒரு சாதாரண குழந்தையாக மாறக் கேட்டுக் கொண்டாள். பரம்பொருளான இராமர், ஒரு சிறு குழந்தையாக மாறி, அழத் தொடங்கினார்.
துளஸிதாஸர், இந்த பாடலைப் பாடும் எவரும் மனித வாழ்க்கையிலிருந்து விடுபட்டு வைகுண்டம் அடைவர் என்கிறார். இந்த பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல், இராமரின் பிறந்த நாள் அன்று பாடப் படுகிறது.
அகல்யை கௌதம ரிஷியின் மனைவி. அவளின் அழகைக் கண்டு அவள் மேல் ஆசைப்பட்டான் இந்திரன். நிலாவினை சேவலாக மாற்றி, சூரியன் உதிக்கும் முன்னரே கூவச் செய்தான். விடிந்ததாக நம்பிய ரிஷியும் நீராட கங்கையைச் சென்றடைந்தார். அப்போது ரிஷியின் ரூபத்தில் இந்திரன் அங்கு வந்தான். சிறிது நேரத்திற்குப் பின் வந்த ரிஷி, நடந்ததை அறிந்து சினம் கொண்டு, இந்திரன், சந்திரனுக்கு சாபம் அழித்தார். இந்திரன் தேவலோகம் இழந்து, ஆயிரம் தாமரைகளால் பூஜித்து சாபத்தை முடித்தான். ரிஷி அகலிகையைக் கல்லால் மாறிவிடும்படி சபித்தார். ஒரு பாவமும் செய்யவில்லை என்று அவள் கூறிய பின், இராமர் அவளுக்கு சபாவிமோசனம் அளிப்பார் என்றார்.
இராமர், மிதிலைக்கு சீதையைக் காண செல்லும் பொது, கௌதம ரிஷியின் ஆஷ்ரமத்தை அடைந்தனர். விஷ்வமித்ரார், அகலிகையின் கதையைச் சொல்ல, இராமர், கல்லைத் தனது கால்களால் தொட்டு, அகலிகைக்கு விமோசனம் அளித்தார். அவள் இராமரின் கால்களில் விழுந்து, இராமரைத் தரிசித்தது தனது புண்ணியம் என்று கூறி கண்ணீரால் அவர் பாதங்களைக் கழுவினாள். பின்னர், அவளது கணவனின் வீட்டிற்குத் திரும்பினாள்.
பாலகாண்டத்தில், சிவன் இராமகதையைப் பார்வதியிடம் கூறுவது கூறப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில், யாக்யவல்க்கியர் பரத்வாஜரிடம் கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது.
திரேதா யுகத்தில், சிவன் சதியுடன் அகஸ்த்ய ரிஷியைச் சந்திக்கச் சென்றார். சிவனின் வரவால் மகிழ்ந்த அகஸ்த்ய ரிஷி, இராமரின் கதையைக் கூறினார். சிவன் மிகுந்த மகிழ்வுடன் அதைக் கேட்டுக் கொண்டு, திரும்பிச் சென்றார். அதே சமயம், இராமர் பூமியில் அவதரித்து சீதை, இலக்குவனுடன் தண்டக வனத்தில் சென்று கொண்டிருந்தனர். இறுதியில், சிவன், சீதையைத் தேடிக் கொண்டிருக்கும் இராமரைக் கண்டார். “உலகின் மீட்பரான இராமரை நான் வணங்குகிறேன்;அவரே சத்தியமானவர்;பேரின்பம் அளிப்பவர்; உன்னதமானவர்”. சதி இராமரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை; சிவன் எதற்காக ஒரு மானிடரைப் போற்றுகிறார் என்று வியந்தாள். அனைத்தையும் அறிந்த சிவன், சதி மனதில் இருக்கும் சந்தேகத்தையும் அறிந்து, அந்த மானிடர் அகஸ்த்ய ரிஷி புகழ்ந்த இராமர் என்றும், சந்தேகம் இன்னும் இருந்தால், சோதித்துப் பார்க்கச் சொல்கிறார். சதி சீதையாக இராமர், இலக்குவன் முன் தோன்றுகிறாள். சிவன் எங்கே என்று இருவரும் அவளிடம் வினவ, அவர்களின் பெருமையை எண்ணி, தன்னை நொந்து கொள்கிறாள். இதை எவ்வாறு சிவனிடம் கூறுவது என்று வருந்துகிறாள்.
சிவன் சதியிடம் எவ்வாறு அவள் சோதித்தாள் என்று வினவுகிறார். சதி தான் சோதிக்கவில்லை என்றும் இராமரைப் புகழ்ந்தாள் என்றும் அனைத்தும் அறிந்த சிவனிடம் கூறுகிறாள். சினம் கொண்ட சிவன், இனி சதிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறி, வாழை மரத்தின் அடியில் தவ்ம் மேற்கொள்கிறார். தன் தவறை எண்ணி வருந்திய சதி, சிவனின் கால்களில் வீழ்ந்து அழ, விஷ்ணுவின் லீலைகளை சிவன் கூறத் தொடங்கினார்.
சிவன் விஷ்ணுவின் கதைகளைக் கூறிக் கொண்டிருக்கையில், வானில் கொண்டாட்டங்கள் தெரிகிறது. அது என்னவென்று சதி கேட்க, அது அவளுடைய தந்தை தக்ஷன் ஏற்பாடு செய்த யாகம் என்று சிவன் கூறுகிறார். கடவுள் மீது தக்ஷன் வெறுப்பு கொண்டதால் பிரம்மா, விஷ்ணு, சிவனை அவன் அழைக்கவில்லை என்கிறார். தான் சென்று வர அனுமதி கேட்டாள் சதி. அழைப்பு இல்லாததால் செல்ல வேண்டாம் என்றார் சிவன். சொல் கேளாமல், சதி சென்றாள். துளஸிதாஸர் ஒரு பெண்ணுக்கும் அவள் தந்தைக்குமான தொடர்பு மிக உறுதியானது என்கிறார்.
சதியை அவளது அன்னை தவிர யாரும் வரவேற்கவில்லை. தக்ஷன் கண்டுகொள்ளவும் இல்லை. சதி சிவனுக்கு மரியாதை செய்யாததைக் கண்டு வெகுண்டாள். சிவனே இந்த உலகின் தந்தை; அனைவரையும் படைத்தவர் அவரை அவமதிக்கலாகாது என்று கூறி நெருப்பில் வீழ்ந்து மாண்டாள். இதை அறிந்த சிவன் வீரபத்ரனை அங்கே அனுப்பினார். அவர் யாகத்தையும் தக்ஷனையும் அழித்தார். சதி சாகும் தருவாயில் விஷ்ணுவிடம் தான் மீண்டும் சிவனுக்கு மனைவியாக வேண்டுமென்று வேண்டிக்கொண்டாள். இமாசலுக்கும் மேனாவிற்கும் மகளாக பார்வதியாக பிறந்தாள்.
பார்வதி பிறந்து பல வருடங்களுக்குப் பின்னர், நாரத முனி அவளின் பெற்றோர் இமாச்சல் மற்றும் மேனாவைச் சந்தித்தார். இமாச்சல் தன்னுடைய புதல்வியின் வருங்காலம் என்னவென்று கேட்டார். நாரதர், பார்வதி பல கலைகள் கற்று, மிகுந்த அன்பு கொண்ட ஒருவனை மணப்பாள் என்றார். அவனுடன் பல காலம் மகிழ்ச்சியுடன் வாழ்வாள் என்றார். ஆனால், அவளை மனம் முடிப்பவன், சடாமுடி தரித்த உடைகள் அணியாத ஒரு முனிவராக இருப்பார் என்றார். இதைக் கேட்டு பெற்றோர்கள் வருந்தினாலும், பார்வதி விஷ்ணுவின் வாக்கு மெய்யாவதால் மகிழ்ந்தாள். நாரதர் அப்படிபட்ட ஒருவர் சிவன் தான் என்று கூறி, பார்வதியைத் திருமாலைத் தியானிக்குமாறு கூறினார். பார்வதி சிவனை அடைய கடுந்தவம் இயற்றினாள். உடல் மெலிந்து மிகவும் மோசமான நிலையில் இருந்த அவளைக் கண்ட பிரம்மா இது வரை உலகில் இவ்வாறு யாரும் தவம் செய்தது இல்லை என்று மெச்சி தவத்தை நிறுத்தி, தந்தையுடன் செல்லுமாறு கூறினார்.
சதி மரித்த பின், சிவன் ஹரியின் நமதைக் கூறிக் கொண்டே தவம் செய்தார். அப்போது இராமர்,சிவனிடம் பார்வதியை மணக்குமாறு கூறினார். இதை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், சிவன் மறுக்க முடியாமல் தவத்தைத் தொடர்ந்தார். அப்போது, தாரகன் என்ற அரக்கன் மக்களைத் துன்புறுத்தி வந்தான். சிவனின் புதல்வனால் மட்டுமே அவனை அழிக்க முடியுமென்று அறிந்த பிரம்மா சிவனைப் பார்வதியை மணக்குமாறு கூறினார். சிவனின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினார்கள். அவன் பூவினால் ஆன ஐந்து அம்புகளை சிவனின் மார்புகளின் மீது வீசினான். தவம் கலைந்து வெகுண்டு எழுந்த சிவன், மன்மதனை எரித்துச் சாம்பலாக்கினார். இதைக் கேட்ட மன்மதனின் மனைவி ரதி, மயங்கி விழுந்தாள். அதைக் கண்டு மனமிறங்கிய சிவன், உடலில்லாமல் அவன் அனைவரையும் ஆளுவான் என்று வரம் அளித்தார். கிருஷ்ணாவதாரத்தின் போது, அவன் பிரத்யும்னா என்று மீண்டும் பிறப்பான் என்றார். பின்னர், பிரம்மாவும் மற்ற கடவுளும் தன்னுடைய கண்களால் சிவனின் திருமணத்தைப் பார்க்கும் வரம் கேட்டனர். விஷ்ணுவின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவன் பார்வதியை மணக்க ஒப்புக்கொண்டார். பிரம்மா சிவனின் திருமணத்தை ஏற்பாடு செய்தார்.
சிவனுக்கென்று குடும்பம் இல்லை; எனவே அவருடைய சேவகர்கள் திருமணத்தை ஏற்பாடு செய்தனர். பாம்பினாலான கிரீடமும், தோடும், காப்பும், கொண்டு தலையையும் கழுத்தையும் அலங்கரித்துக் கொண்டார். தான் உடல் முழுவதும் சாம்பலைப்பூசிக் கொண்டு, சிங்கத்தின் தோலால் போர்த்திக் கொண்டார். இவ்வாறாக அவர் திருமண மண்டபம் நோக்கி நடந்து செல்ல, பிரம்மா, விஷ்ணு, கந்தர்வர்கள், தேவர்கள் தொடர்ந்து வந்தனர். திருமணம் முடிந்து, அவர்களுக்கு கார்த்திகேயன் என்ற மகன் பிறந்து தாரகனை வதம் செய்தார்.
பிந்தா பிரசாத் கத்திரி என்ற உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த நூலை ஆங்கிலக் கவிதையாக இந்தி இராகத்திலேயே மொழி பெயர்த்துள்ளார்.
பிரெட்ரிக் கிரௌஸ் என்பவர் “துளசிதாசரின் இராமாயணம்” என்று இந்த நூலை மொழி பெயர்த்துள்ளார். அது அச்சிடப்பட்டுள்ளது.[66]
மொராரி பாபுவின் மங்கள இராமாயணம் இராமர் கதைகளில் மேற்கோள் காட்டப்படுகிறது. அந்த நூலில் பிரார்தனைப் பாடல்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும், எல்லா பாடல்களின் ஆழ்ந்த அர்த்தமும் கொடுக்கப்பட்டுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.