இந்துக் கடவுள் கிருட்டிணனின் மனைவி From Wikipedia, the free encyclopedia
இராதை (Radha) இராதிகா என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு இந்துக் கடவுள்களில் ஒருவரும் கிருட்டிணனின் பிரதான மனைவியும் ஆவார். இவர் அன்பு, மென்மை, இரக்கம் மற்றும் பக்தி ஆகியவற்றின் தெய்வமாகவும் கருதப்படுகிறார். இவர் கிருட்டிணனின் பெண் தோழியாகவும் ஆலோசகராகவும் இருக்கிறார். இவர் மூலப்பிரகிருதி எனவும் அவதார பேரழகி எனவும் இந்துக்கள் நம்புகின்றனர்.[11][12][13][14][15] இராதை கிருட்டிணனின் அனைத்து அவதாரங்களிலும் உடன் தோன்றுகிறார்.[16][17] ஒவ்வொரு ஆண்டும் இராதாட்டமி அன்று இராதையின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.[18][19]
இராதா | |
---|---|
பஞ்சப் பிரகிருதி[1]-இல் ஒருவர் | |
புனேவிலுள்ள அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தின் கோவிலில் இராதை | |
அதிபதி | பிரகிருதி, ஆதி தெய்வம்,[2][3] தாய் தெய்வம்,[4] சக்தி,[5] அன்பு, இரக்கம் மற்றும் பக்தியின் தெய்வம்[6] மேலான் தெய்வம்[7][8] |
வேறு பெயர்கள் | ராதாதேவி, அனுராதா, ராதிகா, மாதவி, கேசவி, சிறீஜி, சியாமா, கிசோரி, மோனல், சிம்ராதை, கிரண், திரிசரி, பிரபாவதி |
தேவநாகரி | राधा |
சமசுகிருதம் | இராதா |
வகை | |
இடம் | கோலாகா, பிருந்தாவனம், பர்சானா, திருப்பரமபதம் |
மந்திரம் |
|
துணை | கிருட்டிணன் |
பெற்றோர்கள் |
|
நூல்கள் | பிரம்ம வைவர்த்த புராணம், தேவி பாகவத புராணம், நாரத புராணம், பத்ம புராணம், கந்த புராணம், சிவமகாபுராணம், கீத கோவிந்தம், கோபால தபனி உபநிடதம், கார்க சம்கிதா, பிரம்ம சம்கிதா, சைதன்ய சரிதம்ரிதா |
விழாக்கள் | இராதாட்டமி, ஹோலி, சரத் பூர்ணிமா, கார்த்திகை பூர்ணிமா, கோபாஷ்டமி, லத்மர் ஹோலி, ஜூலன் பூர்ணிமா |
அரசமரபு | யது குலம்-சந்திர குலம் |
இவருக்கு கிருட்டிணனுடனான உறவில், காதலி மனைவி என இரட்டை பிரதிநிதித்துவம் உள்ளது. துவைதாத்துவைதம் இராதையை கிருட்டிணனின் நித்திய மனைவியாக வணங்குகின்றன.[20][21][22][23] இதற்கு நேர்மாறாக, கௌடிய வைணவம் போன்ற மரபுகள் இவரை கிருட்டிணனின் காதலியாகவும் தெய்வீக மனைவியாகவும் மதிக்கின்றன.[24][22]
இராதா வல்லப சம்பிரதாயம் மற்றும் அரிதாசி சம்பிரதாயத்தில், இராதை மட்டுமே பிரம்மமாக வணங்கப்படுகிறார்.[25]மற்ற இடங்களில், நிம்பர்க சம்பிரதாயம், புஷ்டிமார்க்கம், மகாநாம சம்பிரதாயம், சுவாமிநாராயண் சம்பிரதாயம், வைணவ-சஹாஜியா, மணிப்பூரி வைணவம் மற்றும் சைதன்யருடன் தொடர்புடைய கௌடிய வைணவ இயக்கங்களில் கிருட்டிணனுடன் அவரது முக்கிய துணைவியாக இராதை வணங்கப்படுகிறார்.[26]
இராதை விரஜபூமியில் வாழ்ந்த கோபியர்களின் தலைவியாக விவரிக்கப்படுகிறார்.[22] மற்ற கோபியர்கள் அனைவரும் வழக்கமாக ராதாவின் பணிப் பெண்களாகக் கருதப்படுகின்றனர். இவர் பல இலக்கியப் படைப்புகளுக்கு ஊக்கமளித்துள்ளார். மேலும் கிருட்டிணனுடன் இவரது இராசலீலை நடனம் பல வகையான கலை நிகழ்ச்சிகளுக்கு ஊக்கமளித்துள்ளது.[27][28][29]
இந்து மதத்தின் வைணவ மரபுகளில் இராதை ஒரு முக்கியமான தெய்வம். இவருடைய குணாதிசயங்கள், வெளிப்பாடுகள், விளக்கங்கள் மற்றும் பாத்திரங்கள் பிராந்தியத்தின் அடிப்படையில் மாறுபடுகிறது. இராதை கிருட்டிணனுடன் உள்ளார்ந்தவர். ஆரம்பகால இந்திய இலக்கியங்களில், இவரைப் பற்றிய குறிப்புகள் பரவலாக காணப்படவில்லை. பதினாறாம் நூற்றாண்டில் பக்தி இயக்கத்தின் சகாப்தத்தில், கிருட்டிணன் மீதான இவரது அசாதாரணமான காதல் வெளிப்பட்டதால், இராதை மிகவும் பிரபலமானார்.[30][31]
ஜெயதேவரின் 12ஆம் நூற்றாண்டு சமசுகிருத இலக்கியமான கீத கோவிந்தத்திலும்[32][33][34][35] நிம்பர்காச்சாரியரின் தத்துவப் படைப்புகளிலும்[36] இராதையின் முதல் முக்கிய தோற்றம் வெளிப்படுகிறது.
இராதா, உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள கோகுலத்திற்கு அருகில் அமைந்துள்ள இராவல் என்ற சிறிய ஊரில் பர்சானாவின் யது குல ஆட்சியாளரான விருசபானுவுக்கும் அவரது மனைவி கீர்த்திதாவுக்கும் பிறந்தார்.[37][38][39] ஆனால் இவர் பர்சானாவில் இவர் வளர்ந்ததாக கூறப்படுகிறது.[40] பிரபலமான புராணத்தின்படி, யமுனை ஆற்றில் மிதந்து வந்த தாமரையில் இராதாவை விருசபானு கண்டுபிடித்தார். இராதை கிருட்டிணனை விட ஒன்பது மாதங்கள் மூத்தவர்.[41]நாட்டுப்புறக் கதைகளின்படி, கிருட்டிணன் தன் முன் தோன்றும் வரை இராதா உலகத்தைப் பார்க்க கண்களைத் திறக்கவில்லை.[42]
பிரம்ம வைவர்த்த புராணம் மற்றும் கர்க சம்கிதை ஆகியவை பிருந்தாவனத்தை விட்டு வெளியேறும் முன் கிருட்டிணன் பண்டீர்வன் காட்டில் பிரம்மனின் முன்னிலையில் இராதையை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்று குறிப்பிடுகின்றன. பிருந்தாவனத்தின் புறநகரில் அமைந்துள்ள பண்டீர்வன், இராதா கிருஷ்ண திருமணத் தலம், இவர்களது திருமணம் நடந்த இடமாகக் கருதப்படுகிறது.[43][44][45][46]
இராதை இந்து மதத்தின் முக்கிய மற்றும் கொண்டாடப்படும் தெய்வங்களில் ஒருவராகும். இவருடன் தொடர்புடைய பண்டிகைகளின் பட்டியல் பின்வருமாறு -
இராதா ஜெயந்தி என்றும் அழைக்கப்படும் இராதாட்டமி, இராதை அவதரித்த ஆண்டு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியில், இவ்விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. கிருட்டிண ஜெயந்திக்கு 15 நாட்களுக்குப் பிறகு, இராதா சமூக வாழ்க்கையை நிர்வகிக்கும் கலாச்சார-மத நம்பிக்கை அமைப்பின் ஒரு அம்சமாக இருப்பதைக் குறிக்கிறது.[47] இவ்விழா குறிப்பாக விரஜபூமி பகுதியில் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் கொண்டாடப்படுகிறது.[48] பர்சானா இராதையின் பிறப்பிடமாக கருதப்படுவதால் அங்குள்ள இராதா ராணி கோவிலில் இந்த விழா பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. பர்சானாவைத் தவிர, உலகெங்கிலும் உள்ள பிருந்தாவனம் மற்றும் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஏனெனில் இது பல வைணவப் பிரிவினருக்கு முக்கிய திருவிழாவாகும்.[49]
கோலி' அல்லது ஹோலி அல்லது அரங்கபஞ்சமி என்று அழைக்கப்படும் பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சுரிநாம், கயானா, தென்னாப்பிரிக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, இங்கிலாந்து, மொரீசியசு மற்றும் பிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது. இந்தியாவின் மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த-உற்சவம் ("வசந்தகாலத் திருவிழா") என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் விரஜ் சமூகத்தினரால் கிருட்டிணனுடன் தொடர்புடைய மதுரா, பிருந்தாவனம், நந்தகோன், பர்சானா ஆகிய நகரங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஹோலிப் பண்டிகை காலத்தில் அவை நடைபெறும் 16 நாட்களும் இந்த நகரங்கள் சுற்றுலாத்தளங்களாக இருக்கும்.[50]
சரத் பூர்ணிமா என்பது இலையுதிர் காலத்தின் முழு நிலவைக் குறிக்கிறது. இந்த நாளில், பிருந்தாவனத்தின் பசு மேய்க்கும் பெண்களான ராதை மற்றும் கோபியர்களுடன் இராச லீலை என்ற அழகான நடனத்தை கிருட்டிணன் ஆடுவதை பக்தர்கள் கொண்டாடுகிறார்கள்.[51] இந்த நாளில், கோவில்களில் இராதா கிருட்டிணன் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து, மலர் மாலைகள் மற்றும் பளபளக்கும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுகிறார்.[52]
வைணவ மதத்தில், கார்த்திகை பூர்ணிமா, இராதையை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. பிரம்ம வைவர்த புராணத்தின் படி, கிருட்டிணனும் இந்த நாளில் இராதையை வணங்குவார் என நம்புகின்றனர்.[53] இராதா கிருட்டிணன் கோவில்களில், கார்த்திகை மாதம் முழுவதும் இது கடைபிடிக்கப்படுகிறது. மேலும் இந்த விழாவைக் கொண்டாடும் வகையில் இராசலீலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.[54]
இராதாவும் கிருட்டிணனும் பல வகையான கலை நிகழ்ச்சிகள் மற்றும் இலக்கியப் படைப்புகளுக்கு ஊக்கமளித்துள்ளனர். [27] பல நூற்றாண்டுகளாக, இவர்களின் காதல் ஆயிரக்கணக்கான நேர்த்தியான ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது காதலனை பிரித்தல் மற்றும் இணைதல், ஏக்கம் மற்றும் கைவிடுதல் ஆகியவற்றை சித்தரிக்கிறது.[27] [55]
மிகவும் பிரபலமான இந்திய பாரம்பரிய நடனமான மணிப்புரி இராசலீலை முதன்முதலில் 1779 ஆம் ஆண்டில் மன்னர் பாக்யச்சந்திரன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. மன்னன் இராதா கிருட்டிணனின் இராசாலீலையில் ஈர்க்கப்பட்டு, மகா இராசலீலை, குஞ்ச் இராசலீலை மற்றும் வசந்த ராசலீலை என நடனத்தின் மூன்று வடிவங்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் மணிப்பூரின் கலை மற்றும் கலாச்சாரத்தில் அடுத்தடுத்த மன்னர்களால் நித்ய ராசலீலை மற்றும் வேத ராசலீலை ஆகிய இரண்டு வகையான ரசங்கள் சேர்க்கப்பட்டன. இந்த நடன வடிவங்களில், நடனக் கலைஞர்கள் இராதை, கிருட்டிணன் மற்றும் கோபியர்களின் பாத்திரத்தை சித்தரிக்கின்றனர். இந்த நடன வடிவங்கள் மணிப்பூர் மாநிலத்தில் இன்றும் பரவலாக உள்ளன. மேலும் அவை மேடைகளிலும் கார்த்திகை பூர்ணிமா மற்றும் சரத் பூர்ணிமா (முழு நிலவு இரவுகள்) போன்ற மங்களகரமான நிகழ்வுகளிலும் நிகழ்த்தப்படுகின்றன.[56][57]
மற்றொரு இந்திய பாரம்பரிய நடன வடிவமான கதகளியும் வைணவம் மற்றும் இராதா கிருட்டிணன் அடிப்படையிலான கீத கோவிந்த பாரம்பரியத்தின் தாக்கத்தால் இந்த நடன வடிவத்தின் பரிணாம வளர்ச்சியில் பங்களித்தது. வட இந்திய கதக் நடனத்தின் முக்கிய கருப்பொருள் இராதை மற்றும் கிருட்டிணனின் தோற்றம் மற்றும் நீண்ட கதைகளில் உள்ளது. கிருட்டிணன் மற்றும் அவரது பிரியமான இராதையின் புனிதமான காதல், கதக் நடனத்தின் அனைத்து அம்சங்களிலும் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும், இசை, உடைகள் மற்றும் இறுதியாக கதக் நடனக் கலைஞரின் பாத்திரம் பற்றிய விவாதங்களின் போது இவை தெளிவாகத் தெரியும்.[58]
இராசியா என்பது உத்தரபிரதேசத்தின் விரஜபூமி பிராந்தியத்தில் உள்ள பிரபலமான இந்திய நாட்டுப்புற இசை வகையாகும். இது பொதுவாக விரஜ் பகுதியின் கிராமங்கள் மற்றும் கோவில்களில் பண்டிகைகளின் போது நிகழ்த்தப்படுகிறது. [59] இராசியாவின் பாரம்பரிய பாடல்கள் இராதை மற்றும் கிருட்டிணனின் தெய்வீக சித்தரிப்பு மற்றும் அன்பை அடிப்படையாகக் கொண்டவை. இவை அடிக்கடி இராதாவின் பெண் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டு கிருட்டிணனும் இராதாவும் ஊர்சுற்றுவதையும் சித்தரிக்கின்றன.[60]
சைதன்யர், வல்லபாச்சார்யர், சண்டிதாஸ் மற்றும் வைணவத்தின் பிற மரபுகளில் உள்ள கோவில்களின் மையமாக இராதா மற்றும் கிருட்டிணன் உள்ளனர். [61] இராதா பொதுவாக கிருட்டிணனுக்கு அருகில் நிற்பதாகக் காட்டப்படுகிறது. [61]
உலகின் அனைத்து முக்கிய நகரங்களிலும் இஸ்கான் அமைப்பு மற்றும் சுவாமிநாராயண் சம்பிரதாயத்தால் இராதா கிருட்டிணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல கோவில்கள் உள்ளன. கிருபாலு மகாராஜால் நிறுவப்பட்ட அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஆஸ்டினில் உள்ள இராதா மாதவ் தாமில் உள்ள ஸ்ரீ ராசேஸ்வரி ராதா ராணி கோயில் மேற்கு அரைக்கோளத்தில் உள்ள மிகப்பெரிய இந்து கோயில் வளாகங்களில் ஒன்றாகும். இது வட அமெரிக்காவில் மிகப்பெரியது.[62] [63] [64]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.