மேல்கோட்டை செல்வநாராயணர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மேல்கோட்டை செல்வநாராயணர் கோயில் அல்லது மேல்கோட்டை திருநாராயணர் கோயில் (Cheluvanarayana Swamy Temple) இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா வருவாய் வட்டத்தில் மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம் எனும் மலையூரில் அமைந்துள்ளது. இங்குள்ள மலைக்குன்றின் மீது யோக நரசிம்மர் உறைந்துள்ளார். மூலவர் பெயர் திருநாராயணர்; உற்சவர் பெயர் செல்வநாராயணர் (செல்வபிள்ளை); தாயார் பெயர், ஶ்ரீ யதுகிரி நாச்சியார். தல தீர்த்தம் கல்யாணி, தல மரம் இலந்தை.[1]
பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், மைசூரிலிருந்து 51 கி. மீ. தொலைவிலும், பெங்களூருவிலிருந்து 133 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இராமானுசர் இங்கு பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்துள்ளார். அவரின் முயற்சியால் மண்ணில் புதையுண்ட செல்லப்பிள்ளை (கன்னடத்தில் செலுவ நாராயணா) கோயில் அடையாளங் காணப்பட்டு ஹொய்சாள அரசன் விட்டுணுவர்த்தனின் உதவியோடு நிருமாணம் செய்து "திருநாராயணபுரம்" என அழைக்கும்படி செய்தார்.
இராமானுசர் தாம் தங்கியிருந்த காலத்தில் நியமித்த தினசரி, வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர வழிபாட்டு நியமங்களே இன்றும் இக்கோயிலில் பின்பற்றப்படுகின்றன.
பங்குனி மாதப் பூச நட்சத்திரத்தில் நடைபெறும் 'வைரமுடிச் சேவை' விழாவில், இராமானுசர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவ மூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து வைரமுடிச் சேவை கொண்டாடுகின்றனர். பின் தங்கத்தாலான கருட வாகனத்தின் மீது நான்கு மாடவீதிகளில் உபய நாச்சிமார்களுடன் எழுந்தருளச் செய்யப்படுகிறது. இவ்வைரமுடிச் சேவை இப்போதும் இரவுப்பொழுதிலே தொடங்கி விடியும் முன் முடிக்கப்பட்டுவிடுகிறது.[2]
ஒருமுறை உற்சவ மூர்த்தியான செல்லப்பிள்ளையை தில்லி முகலாய மன்னனிடமிருந்து இராமானுசர் மீட்டுக் கொண்டுவரும் வழியில் எதிர்ப்பட்ட கள்ளர் கூட்டத்திடமிருந்து இப்பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி உற்சவ மூர்த்தியையும் இராமானுசரையும் காத்தனர். இதற்குக் கைம்மாறாக இராமானுசரின் ஆணைக்கிணங்க, தேர்த்திருவிழாவின் அடுத்த நாளிலிருந்து மூன்று நாள்கள் "திருக்குலத்தார் உற்சவம்" கொண்டாடப்படுகிறது.
இங்குள்ள கல்யாணி தீர்த்தத்திலிருந்து 400 படிகள் ஏறினால் மலைக்கோட்டை யோகநரசிம்மரைத் தரிசிக்கலாம். இவரது சன்னதிக்குச் செல்ல ஒன்பது படிக்கட்டுகள் உள்ளன. யோகநரசிம்மரின் கட்டளைப்படி நவக்கிரகங்கள் இங்குப் படிகளாக இருப்பதாக ஐதீகம். நரசிம்மரைத் தரிசித்தவர்க்கு கிரகதோசம் அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதீகம். மலையில் இராமானுசரின் பாதம் உள்ளது.[சான்று தேவை] இங்குள்ள கல்யாணி தீர்த்தம், வராக அவதாரத்தின் போது உருவானது. மாசிமாதத்தில் கங்கை இந்தத் தீர்த்தத்துக்கு வருவதாக ஐதீகம். தீர்த்தக்கரையில் பிந்துமாதவன், நாராயணன், இலட்சுமிநரசிம்மர், மாருதி சன்னதிகள் உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.