நசீரல்தீன் முகம்மது (Nasir al-Din Muḥammad, பாரசீக மொழி: ناصرالدین محمد) (மார்ச் 6, 1508 - சனவரி 27, 1556) என்பவர் இரண்டாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் தன் பட்டமான உமாயூன் என்ற பெயரால் பொதுவாக அறியப்படுகிறார். இவர் இன்றைய கிழக்கு ஆப்கானித்தான், பாக்கித்தான், வட இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய பகுதிகளை 1530-1540 வரையும், பின் மீண்டும் 1555-1556 வரையும் ஆண்டார். இவரது தந்தை பாபுர். இவருக்கு அடுத்து இவரது மகன் அக்பர் ஆட்சிக்கு வந்தார். தனது தந்தை பாபுரைப் போலவே இவரும் தனது இராச்சியத்தை ஆரம்பத்தில் இழந்தார். பிறகு பாரசீகத்தின் சபாவித்து அரச மரபின் உதவியுடன் அதனை திரும்பப் பெற்றார். 1556இல் உமாயூனின் இறப்பின் போது முகலாயப் பேரரசானது கிட்டத்தட்ட 10 இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியிருந்தது.
உமாயூன் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பாடிஷா அல்-சுல்தான் அல்-ஆசம் [1] | |||||||||
அக்பர்நாமா நூலிலுள்ள உமாயூனின் ஓவியம், 1602-04 | |||||||||
இந்துஸ்தானின் பேரரசர் | |||||||||
முதல் ஆட்சி | 26 திசம்பர் 1530 – 17 மே 1540 | ||||||||
முடிசூட்டுதல் | 29 திசம்பர் 1530, ஆக்ரா | ||||||||
முன்னையவர் | பாபுர் | ||||||||
பின்னையவர் | சேர் சா சூரி (சூர் அரசமரபு) | ||||||||
வாரிசு | அல் அமன் மிர்சா | ||||||||
இரண்டாம் ஆட்சி | 22 சூன் 1555 – 27 சனவரி 1556 | ||||||||
முன்னையவர் | அடில் ஷா சூரி | ||||||||
பின்னையவர் | அக்பர் | ||||||||
பிறப்பு | நசீரல்தீன் முகம்மது [2] 6 மார்ச் 1508 காபூல், தில்லி சுல்தானகம் (தற்கால ஆப்கானித்தான்) | ||||||||
இறப்பு | 27 சனவரி 1556 47) சேர் ஓய்வுக் கூடம், தில்லி, முகலாயப் பேரரசு (தற்கால இந்தியா) | (அகவை||||||||
புதைத்த இடம் | |||||||||
பட்டத்து இராணி |
| ||||||||
மனைவிகள் | |||||||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||||||
| |||||||||
மரபு | பாபுர் குடும்பம் | ||||||||
அரசமரபு | தைமூர் குடும்பம் | ||||||||
தந்தை | பாபுர் | ||||||||
தாய் | மகம் பேகம் | ||||||||
மதம் | சியா இசுலாம் | ||||||||
கையொப்பம் |
திசம்பர் 1530இல் தனது தந்தைக்குப் பிறகு உமாயூன் இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்த முகலாயப் பகுதிகளுக்கு ஆட்சியாளராக தில்லி அரியணைக்கு வந்தார். ஆட்சிக்கு வந்த போது உமாயூன் ஓர் அனுபவமற்ற ஆட்சியாளராக இருந்தார். அப்போது இவருக்கு வயது 22 ஆகும். இவரது ஒன்று விட்ட சகோதரரான கம்ரான் மிர்சா தங்களது தந்தையின் பேரரசின் வடக்குக் கோடிப் பகுதிகளான காபூல் மற்றும் காந்தாரம் ஆகியவற்றைப் பெற்றிருந்தார். இந்த இரு ஒன்று விட்ட சகோதரர்களும் கசப்புணர்வு கொண்ட எதிரிகளாக உருவாயினர்.
உமாயூன் முகலாயப் பகுதிகளை சேர் சா சூரியிடம் இழந்தார். ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சபாவித்து அரசமரபின் உதவியுடன் அதனைத் திரும்பப் பெற்றார். பாரசீகத்தில் இருந்து திரும்பிய உமாயூன் தன்னுடன் ஒரு பெரிய பாரசீக உயர்குடியினரின் பரிவாரத்துடன் வந்தார். முகலாய அவைக் கலாச்சாரத்தில் ஏற்படப்போகும் ஒரு முக்கியமான மாற்றத்தை இது சமிக்ஞையாகக் காட்டியது. முகலாய அரசமரபின் நடு ஆசியப் பூர்வீகமானது பாரசீகக் கலை, கட்டடக்கலை, மொழி மற்றும் இலக்கிய தாக்கத்தால் பெருமளவு மாறியது. உமாயூனின் காலத்திலிருந்து பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பாரசீகக் கையெழுத்துப் பிரதிகள் இந்தியாவில் கிடைக்கப் பெறுகின்றன. இறுதியாக உமாயூன் ஒரு மிகக் குறுகிய காலத்திலேயே தனது பேரரசை விரிவாக்கினார். இதன் மூலம் தனது மகன் அக்பருக்கு ஒரு பெரும் மரபை விட்டுச் சென்றார்.[6][7][8][9]
பின்னணி
நசிருதீன் முகம்மது என்ற இயற்பெயருடன் பாபுருக்கும் அவரது விருப்பத்துக்குரிய மனைவியான மகம் பேகத்திற்கும் 6 மார்ச் 1508 அன்று செவ்வாய்க் கிழமையில் உமாயூன் பிறந்தார். அபுல் பசல் என்பவரின் கூற்றுப்படி, மகம் உண்மையில் குராசானின் சுல்தான் உசைன் மிர்சாவின் உயர் குடியினக் குடும்பத்துடன் தொடர்புடையவர் ஆவார். மேலும், அவர் சேக் அகமது சமியுடன் உறவுமுறை உடையவராக இருந்தார்.[10][11]
செங்கிஸ் கானின் காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்ட ஒரு பொதுவான நடு ஆசியப் பழக்கமாக இருந்த போதிலும், தன்னுடைய பேரரசின் நிலப்பரப்புகளை தனது இரு மகன்களுக்கு இடையே பிரித்துக் கொடுக்கும் பாபுரின் முடிவானது இந்தியாவில் வழக்கத்திற்கு மாறான ஒன்றாக இருந்தது. முதல் மகனுக்கு அரசைக் கொடுக்கும் பழக்கங்களைக் கொண்ட பெரும்பாலான முடியாட்சிகளைப் போல் இல்லாமல் தைமூரியர்கள் செங்கிஸ் கானின் உதாரணத்தைப் பின்பற்றினர். தமது ஒட்டுமொத்த இராச்சியத்தையும் தம் முதல் மகனுக்குத் தைமூரியர்கள் கொடுக்கவில்லை. எனினும், இந்த அமைப்பின் கீழ் ஒரு சிங்கிசித்து மட்டுமே இறையாண்மைக்கும், மன்னனாக அதிகாரத்திற்கும் உரிமை கோர முடியும். செங்கிஸ் கானின் வழி வந்த எந்த ஓர் ஆணும் அரியணைக்குச் சரி சமமான உரிமை கொண்டவராக இருந்தார். எனினும், தைமூரியர்கள் சிங்கிசித்துகளாக இருக்கவில்லை.[12] செங்கிஸ் கானின் இறப்பின் போது அவரது பேரரசானது அவரது மகன்களுக்கு இடையே அமைதியாகப் பிரித்துக் கொள்ளப்பட்டது. அதே நேரத்தில், செங்கிஸ் கானுக்குப் பின் வந்த ஒவ்வொரு வழித்தோன்றலும் அரியணைக்கு வரும் போதும் அது கிட்டத்தட்ட எப்போதுமே உடன் பிறப்புகளின் கொலையில் முடிந்தது.[13][page needed]
தைமூர் தன் நிலப்பரப்புகளைப் பீர் முகம்மது, மீரான் ஷா, கலில் சுல்தான் மற்றும் சாருக் ஆகியோருக்கு இடையே பிரித்தார். இது குடும்பத்துக்குள்ளான போருக்கு இட்டுச் சென்றது.[12][full citation needed] பாபுரின் இறப்பின் போது, உமாயூனின் நிலப்பரப்புகளே குறைந்த பாதுகாப்பு உடையவையாக இருந்தன. பாபுர் நான்கு ஆண்டுகள் மட்டுமே ஆட்சி செய்தார். அனைத்து உயர் குடியினருமே உமாயூனை உரிமை கொண்ட ஆட்சியாளராகக் காணவில்லை. உண்மையில், ஆரம்பத்தில் பாபுருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது உயர் குடியினரில் சிலர் பாபுரின் மைத்துனரான மகதி கவாஜாவை ஆட்சியாளராக அமர வைக்க முயற்சித்தனர். இந்த முயற்சி தோல்வியில் முடிந்த போதும், பின் வரும் பிரச்சினைகளின் ஓர் அறிகுறியாக இது இருந்தது.[14][full citation needed]
ஆரம்ப ஆட்சி
முகலாயப் பேரரசின் அரியணைக்கு உமாயூன் வந்த போது இவரது சகோதரர்களில் பலர் இவருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர். மற்றொரு சகோதரரான கலில் மிர்சா (1509-1530) உமாயூனுக்கு ஆதரவாக இருந்தார். ஆனால், அரசியல் கொலை செய்யப்பட்டார். 1538இல் தனது சகோதரருக்காக ஒரு சமாதியைப் பேரரசர் கட்டத் தொடங்கினார். எனினும், பாரசீகத்திற்குத் தப்பும் நிலைக்கு வந்ததால் இவரால் அதை முடிக்க இயலவில்லை. இந்தக் கட்டடத்தை சேர் சா சூரி அழித்தார். உமாயூன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கொண்ட பணிகள் இதில் நடைபெறவில்லை.[சான்று தேவை]
உமாயூனுக்கு இவரது நிலப்பரப்புகளுக்கு எதிராக இரண்டு முக்கிய எதிரிகள் இருந்தனர்: தென்மேற்கே குசராத்தின் சுல்தான் பகதூர் மற்றும் கிழக்கே பீகாரில் கங்கையாற்றின் பக்கவாட்டில் குடியமர்ந்திருந்த சேர் சா சூரி (சேர் கான்). உமாயூனின் முதல் படையெடுப்பானாது சேர் சா சூரியை எதிர்கொள்வதாக இருந்தது. இந்தத் தாக்குதல் பாதி அளவை எட்டியிருந்த போது உமாயூன் இதைக் கைவிட்டு விட்டு குசராத் மீது கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. குசராத்தில் அகமது ஷாவிடம் இருந்து வந்த ஓர் அச்சுறுத்தலை இவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. குசராத்து, மால்வா, சம்பனேர் மற்றும் மாண்டுவின் பெரிய கோட்டை ஆகியவற்றை வெற்றிகரமாக உமாயூன் இணைத்தார்.[15]
உமாயூனின் ஆட்சியின் முதல் ஐந்து ஆண்டுகளின் போது பகதூரும், சேர் கானும் தங்களது ஆட்சியை விரிவாக்கினர். போர்த்துக்கீசியர்களுடன் கிழக்கில் ஏற்பட்ட அங்கொன்றும் இங்கொன்றுமான சண்டைகளால் எனினும் சுல்தான் பகதூர் அழுத்தத்தை எதிர்கொண்டார். உதுமானியப் பேரரசு மூலம் முகலாயர்கள் வெடிமருந்து ஆயுதங்களைப் பெற்ற அதே நேரத்தில், போர்த்துக்கீசியர்களிடமிருந்து ஒரு தொடர்ச்சியான ஒப்பந்தங்கள் மூலம் பகதூரின் குசராத்தானது வெடிமருந்து ஆயுதங்களைப் பெற்றது. வடமேற்கு இந்தியாவில் ஓர் உத்தி ரீதியிலான கால் ஊன்றலை நிறுவ போர்த்துக்கீசியர்களுக்கு இது வழி வகுத்தது.[16]
1535இல் போர்த்துக்கீசிய உதவியுடன் முகலாய நிலப்பரப்புகளின் மீது ஒரு தாக்குதலுக்காக குசராத்தின் சுல்தான் திட்டமிடுவது பற்றி உமாயூனுக்குத் தெரிய வந்தது. பகதூருக்கு எதிராக ஓர் இராணுவத்தைத் திரட்டி உமாயூன் அணி வகுத்தார். மாண்டு மற்றும் சம்பனேர் ஆகிய கோட்டைகளை ஒரு மாதத்திற்குள்ளாகவே கைப்பற்றினார். எனினும், தனது தாக்குதலை மேலும் தொடருவதற்குப் பதிலாகப் படையெடுப்பை உமாயூன் நிறுத்தினார். தான் புதிதாக வென்ற நிலப்பரப்பை நிலைப்படுத்தினார். அதே நேரத்தில், சுல்தான் பகதூர் தப்பித்தார். போத்துக்கீசியரிடம் தஞ்சம் அடைந்தார்.[17]
சேர் சா சூரி
குசராத் மீது உமாயூன் அணி வகுத்ததற்குப் பிறகு சீக்கிரமே முகலாயர்களிடம் இருந்து ஆக்ராவின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பை சேர் சா சூரி கண்டார். முகலாயத் தலைநகர் மீது ஒரு சீக்கிரமான மற்றும் தீர்க்கமான முற்றுகையை நடத்தும் நம்பிக்கையில் தனது இராணுவத்தைத் திரட்ட ஆரம்பித்தார். இந்த அச்சமூட்டக் கூடிய செய்தியை அறிந்த உடன், உமாயூன் ஆக்ராவுக்குத் தனது துருப்புக்களைச் சீக்கிரமே அணி வகுக்கச் செய்தார். உமாயூன் தற்போது பெற்றிருந்த நிலப்பரப்புகளின் கட்டுப்பாட்டைச் சீக்கிரமே பகதூர் மீண்டும் பெறுவதற்கு இது அனுமதியளித்தது. 1537இல் எனினும் போர்த்துக்கீசிய உயர் அதிகாரியைக் கடத்தும் ஓர் அரை குறைத் திட்டமானது ஒரு வெடிமருந்துச் சண்டையில் முடிந்தது. இந்தச் சண்டையில் சுல்தான் தோல்வியடைந்து கொல்லப்பட்டார்.[சான்று தேவை]
சேர் சாவிடம் இருந்து ஆக்ராவைத் தற்காத்துக் கொள்வதில் உமாயூன் வெற்றியடைந்த போதிலும் பேரரசின் இரண்டாவது நகரமான, வங்காள விலாயத்தின் தலைநகரமான கௌரானது சூறையாடப்பட்டது. தன்னுடைய துருப்புகள் பின் புறமிருந்து தாக்கப்படுவதைப் பாதுகாக்கும் முயற்சியாகச் சேர் சாவின் மகனால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஒரு கோட்டையான சுனாரைக் கைப்பற்ற முயற்சிக்கும் நேரத்தில் உமாயூனின் துருப்புக்கள் தாமதப்படுத்தப்பட்டன. பேரரசிலேயே மிகப் பெரியதாக இருந்த கௌரியில் இருந்த தானியக் கிடங்குகள் காலியாக்கப்பட்டன. உமாயூன் வந்த போது சாலைகளில் சிதறிக் கிடந்த இறந்த வீரர்களின் உடல்களை மட்டுமே காண முடிந்தது.[18] வங்காளத்தின் பெருமளவிலான செல்வமானது குன்றிப் போனது. போர் நடத்துவதற்கு ஒரு பெரும் அளவிலான செல்வத்தை சேர் சாவிற்கு இது கொடுத்தது.[16]
சேர் சா கிழக்கிற்குப் பின்வாங்கினர். ஆனால் அவரை உமாயூன் பின் தொடரவில்லை.[18][full citation needed] உமாயூனின் 19 வயது சகோதரான இன்டால் இவருக்கு இந்த யுத்தத்தில் உதவவும், இவரது இராணுவத்தின் பின்புறத்தைத் தாக்கப்படாமல் பாதுகாக்கவும் ஒப்புக்கொண்டார். ஆனால், தனது நிலையை இன்டால் விட்டு விட்டு ஆக்ராவிற்குத் திரும்பினார். அங்கு செயலளவில் பேரரசராகத் தன்னைத் தானே அறிவித்துக்கொண்டார். சேக் பகுலுலை அவருடன் பேச உமாயூன் அனுப்பிய போது சேக் கொல்லப்பட்டார். இது எதிர்ப்பை மேலும் அதிகமாக்கியது.[19]
உமாயூனின் மற்றொரு சகோதரரான கம்ரான் மிர்சா பஞ்சாப்பில் இருந்து தனது நிலப்பரப்புகளில் இருந்து அணி வகுத்தார். உமாயூனுக்கு உதவி புரிவதற்காக அவர் வருவது போல் தோன்றினாலும், உமாயூனின் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த பேரரசுக்கு உரிமை கோரும் நம்பிக்கை துரோக எண்ணங்களை அவர் கொண்டிருந்தார். உமாயூனைப் பதவியிலிருந்து நீக்கிய பிறகு கம்ரான் உருவாக்கும் புதிய பேரரசின் ஒரு பகுதிக்குப் பதிலாக இன்டால்[சான்று தேவை] தனது விசுவாசமற்ற அனைத்து செயல்களையும் நிறுத்த வேண்டும் என்று அவருடன் ஓர் ஒப்பந்தத்தைக் கம்ரான் ஏற்படுத்திக் கொண்டார்.[19]
சூன் 1539இல் பக்சருக்கு அருகில் கங்கை ஆற்றின் கரைகளில் சௌசா யுத்தத்தில் உமாயூனைச் சேர் சா சந்தித்தார். தங்களது நிலைக்குக் குழிகளை அமைப்பதற்காக இரு பக்கங்களும் ஏராளமான நேரத்தைச் செலவழித்தன. முகலாய இராணுவத்தின் பெரும்பாலான பகுதியான சேணேவியானது தற்போது நகர்த்த இயலாததாக இருந்தது. முகம்மது ஆசிசை தூதராகப் பயன்படுத்தி ஓரளவுக்குப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உமாயூன் முயற்சித்தார். வங்காளம் மற்றும் பீகாரைச் சேர் சா ஆட்சி செய்ய உமாயூன் ஒப்புக் கொண்டார். ஆனால், பேரரசர் உமாயூனால் ஷாவுக்கு அளிக்கப்பட்ட மாகாணங்களாகவே இவைக் கருதப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். முகலாயப் பேரரசில் முழுமையாக இணைக்கப்படுவதற்குச் சற்று குறைந்ததாக இந்நிலை திகழ்ந்தது. தங்களது நிலையைக் காப்பாற்றிக் கொள்ள இரண்டு ஆட்சியாளர்களும் தங்களுக்கு அனுகூலங்களையும் ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்தனர். சேர் ஷாவின் துருப்புக்களை உமாயூனின் துருப்புகள் துரத்தும், தாங்கள் அச்சமடைந்தது போல் சேர் ஷாவின் துருப்புக்கள் பின்வாங்கும். இவ்வாறாக, உமாயூன் மரியாதையைப் பெறுவார் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.[22][[[|முதன்மையற்ற ஆதாரம் தேவை]]]
உமாயூனின் இராணுவமானது சேர் ஷாவின் துருப்புக்களை நோக்கி முன்னேறிய போது தங்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட படி சேர் ஷாவின் துருப்புக்கள் பின்வாங்கினர். முகலாயத் துருப்புக்கள் தங்களது தற்காப்பு நடவடிக்கைகளைத் தளர்த்தின. ஒரு முறையான காவலர்களை நிலை நிறுத்தாமல் தங்களது பதுங்கு குழிகளுக்குத் திரும்பின. முகலாயர்களின் பலவீனத்தைக் கவனித்து வந்த சேர் ஷா தன்னுடைய முந்தைய ஒப்பந்தத்தைக் கைவிட்டார். அந்த நாள் இரவே முகலாய முகாமை நோக்கி அவரது இராணுவமானது முன்னேறியது. பெரும்பாலானவர்கள் தூங்கிக்கொண்டு, முகலாயத் துருப்புகள் ஆயத்தமாக இல்லாமல் இருப்பதைக் கண்டனர். அவர்கள் முன்னேறினர். பெரும்பாலானவர்களைக் கொன்றனர். காற்று நிரப்பப்பட்ட "நீர்த் தோலைப்" பயன்படுத்தி கங்கை ஆற்றை நீந்திக் கடந்ததன் மூலம் பேரரசர் உயிர் பிழைத்தார். அமைதியாக ஆக்ராவிற்குத் திரும்பினார்.[16][page needed][23] கங்கையைக் கடப்பதற்கு சம்சல்தீன் முகம்மது உமாயூனுக்கு உதவி புரிந்தார்.[24]
ஆக்ராவில்
உமாயூன் ஆக்ராவிற்குத் திரும்பிய போது தனது அனைத்து மூன்று சகோதரர்களும் அங்கு இருந்ததைக் கண்டார். உமாயூன் மீண்டும் தனக்கு எதிராகச் சதித் திட்டமிட்டதற்காக தனது சகோதரர்களை மன்னித்ததோடு மட்டுமல்லாமல், இன்டாலை அவரது வெளிப்படையான துரோகத்திற்காகவும் கூட மன்னித்தார். அமைதியான வேகத்தில் பயணத்தை மேற்கொண்ட சேர் ஷாவின் இராணுவங்கள் ஆக்ராவை நோக்கி வந்தன. சேர் ஷா நெருங்கி வந்து கொண்டிருந்தார். ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் இது ஒரு மிகுந்த அச்சுறுத்தலாக இருந்தது. ஆனால் எவ்வாறு செயல்படுவது என உமாயூனுக்கும், கம்ரானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நெருங்கி வந்த எதிரி மீது ஒரு திடீர்த் தாக்குதலை நடத்த உமாயூன் மறுத்ததற்குப் பிறகு, கம்ரான் பின் வாங்கினார். மாறாகத் தன் பெயரில் ஒரு பெரிய இராணுவத்தைத் திரட்ட முடிவு செய்தார்.[சான்று தேவை]
கம்ரான் இலாகூருக்குத் திரும்பிய போது உமாயூன் தனது மற்ற சகோதரர்கள் அசுகாரி மற்றும் இன்டாலுடன் சேர்ந்து சேர் ஷாவை ஆக்ராவுக்குக் கிழக்கே 200 கிலோ மீட்டர்கள் தொலைவில் கன்னோசி யுத்தத்தில் 17 மே 1540 அன்று சந்திப்பதற்காக அணி வகுத்தார். உமாயூன் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டார். ஆக்ராவுக்குப் பின் வாங்கினார். சேர் ஷா இவரைத் துரத்தினார். பிறகு தில்லி வழியாக இலாகூருக்கு உமாயூன் சென்றார். சேர் ஷா குறுகிய காலமே இருந்த சூர் பேரரசை நிறுவினார். தில்லியில் பேரரசின் தலைநகரத்தை அமைத்தார். முதலாம் தமஸ்ப்பின் அவையில் 15 ஆண்டுகளுக்கு நாடு கடந்து உமாயூன் வாழ்வதற்கு இது இட்டுச் சென்றது.[25]
இலாகூரில்
நான்கு சகோதரர்களும் இலாகூரில் ஒன்று கூடினர். ஆனால், ஒவ்வொரு நாளும் சேர் ஷா நெருங்கி வருவதாக அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிரிந்தை அடைந்தபோது உமாயூன் தனது ஒரு தூதுவர் மூலம் செய்தி அனுப்பினார்: "நான் உனக்காக ஒட்டுமொத்த இந்துஸ்தானையும் (அதாவது, பெரும்பாலான கங்கைச் சமவெளியை உள்ளடக்கிய, பஞ்சாபின் கிழக்கே இருந்த நிலப்பகுதிகள்) கொடுத்துள்ளேன். இலாகூரை விட்டு விடு, உனக்கும் எனக்கும் இடையில் சிரிந்த் ஓர் எல்லையாக இருக்கட்டும்". எனினும், சேர் ஷா பின்வருமாறு பதிலளித்தார், "நான் உனக்குக் காபூலை விட்டுள்ளேன். நீ அங்கு தான் செல்ல வேண்டும்". உமாயூனின் சகோதரரான கம்ரானின் பேரரசின் தலைநகராகக் காபூல் இருந்தது. தனது சகோதரருக்குத் தன்னுடைய நிலப்பரப்புகளில் எதையும் கொடுப்பதற்குக் கம்ரானுக்கு விருப்பமில்லை. கம்ரான் சேர் ஷாவைத் தொடர்பு கொண்டார். உண்மையில் தனது சகோதரருக்கு எதிராகத் தான் எதிர்ப்பில் உள்ளதாகக் கம்ரான் கூறினார். பெரும்பாலான பஞ்சாபைத் தனக்கு அளித்தால் சேர் ஷாவுடன் கூட்டுச் சேரத் தான் தயாராக இருப்பதாகக் கூறினர். சேர் ஷா இந்த உதவியை நிராகரித்தார். இது தேவையற்ற ஒன்று என்று அவர் நம்பினார். இந்தத் துரோக முன்மொழிவு குறித்த தகவலானது வாய் வழியாக அனைவர் மத்தியிலும் பரவியது. மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காகக் கம்ரானைக் கொல்லுமாறு உமாயூனுக்கு அறிவுறுத்தப்பட்டது. உமாயூன் மறுத்தார். தனது தந்தை பாபுரின், "அவர்கள் உரியவர்களாக இருந்தாலும் கூட, உனது சகோதரர்களுக்கு எதிராக எதுவும் செய்யாதே" என்ற கடைசி வார்த்தைகளைக் கூறினார்.[26]
மேலும் பின்வாங்குதல்
மேலும் தொலைவுக்குப் பின் வாங்குவது புத்திசாலித்தனமாக இருக்கும் என்றும் உமாயூன் முடிவெடுத்தார். இவரும், இவரது இராணுவமும் தார்ப் பாலைவனம் வழியாகப் பயணம் மேற்கொண்டனர். அப்போது முகலாயப் பேரரசுக்கு எதிராகச் சேர் ஷா சூரியுடன் இராவ் மால்தியோ இரத்தோர் கூட்டுச் சேர்ந்திருந்தார். ஆண்டின் மிகுந்த வெப்பமான நேரத்தில் பாலைவனம் வழியாகத் தங்களது வழிகளைத் தானும், தன்னுடைய மனைவியும் எவ்வாறு தேடிச் சென்றனர் என உமாயூன் கூறியதைப் பல நூல்கள் குறிப்பிட்டுள்ளன. இவர்களிடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களும், உணவும் குறைவாகவே இருந்தன. பாலைவனத்தில் குடி தண்ணீர் கூட ஒரு முக்கியப் பிரச்சனையாக இருந்தது. அமீதா பானுவின் குதிரை இறந்த போது (எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்), இராணிக்கு எந்த ஒருவரும் தமது குதிரையைக் கொடுக்க முன்வரவில்லை. எனவே உமாயூன் தனது குதிரையை அவருக்குக் கொடுத்தார். இதனால் ஆறு கிலோ மீட்டர்களுக்கு ஓர் ஒட்டகத்தில் அவர் பயணம் செய்தார். எனினும், பிறகு கலித் பெக் தனது குதிரையை உமாயூனுக்குக் கொடுத்தார். தன்னுடைய வாழ்வில் மிகத் தாழ்மையான நிலையாக இந்த நிகழ்வை உமாயூன் பிற்காலத்தில் குறிப்பிட்டார். சிந்து மாகாணத்திற்குத் தான் பின்வாங்கிக் கொண்டிருந்த போது தனது சகோதரர்களை தன்னுடன் இணையுமாறு உமாயூன் கேட்டார். முன்னர் எதிரியாக இருந்த இன்டால் மிர்சா தொடர்ந்து விசுவாசமாக இருந்த போதிலும், காந்தாரத்திலிருந்த தனது சகோதரர்களுடன் இணையுமாறு அவருக்கு ஆணை இடப்பட்டது. கம்ரான் மிர்சா மற்றும் அசுகாரி மிர்சா மாறாக ஒப்பீட்டளவில் அமைதியாக இருந்த காபூலுக்குச் செல்ல முடிவெடுத்தனர். குடும்பத்தில் ஒரு தீர்க்கமான பிரிவாக இது இருந்தது. சிந்தின் எமீரான உசேன் உம்ரானியிடம் இருந்து உமாயூன் உதவியை எதிர்பார்த்திருந்தார். எனவே சிந்தை நோக்கிப் பயணித்தார். இவரை உமாயூன் தான் நியமித்திருந்தார். உமாயூனுக்கு அவர் தனது கூட்டணியைத் தெரிவித்திருந்தார். மேலும் உமாயூனின் மனைவி அமீதா சிந்துப் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். அங்கு பெருமைக்குரியர் பீர் குடும்பத்தின் மகளாக அவர் இருந்தார். இவர்கள் பாரசீகப் பாரம்பரியத்தை கொண்ட, சிந்தில் நீண்ட காலமாகக் குடியமர்ந்திருந்த குடும்பம் ஆவர். எமீரின் அவைக்குச் செல்லும் வழியில் தனது கர்ப்பமான மனைவியான அமீதா மேலும் பயணம் மேற்கொள்ள இயலாத காரணத்தால் பயணத்தைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிய தேவை உமாயூனுக்கு ஏற்பட்டது. அமர்கோட் (தற்போதைய சிந்து மாகாணத்தின் ஒரு பகுதி) பட்டணத்தின் பாலைவனச் சோலையின் ஆட்சியாளரிடம் உமாயூன் அடைக்கலம் கேட்டார்.[27]
அமர்கோட்டின் இராணா பிரசாத் இராவ் உமாயூனை எதிர்பார்த்தது போலவே தனது இல்லத்திற்கு வரவேற்றார். ஏழு மாதங்களுக்குத் தஞ்சமடைந்தவர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்தார். இங்கு இராசபுத்திர உயர் குடியினரின் வீட்டில் உமாயூனின் மனைவியும், ஒரு சிந்திக் குடும்பத்தின் மகளுமான அமீதா பானு எதிர்காலப் பேரரசரான அக்பரை 15 அக்டோபர் 1542இல் பெற்றெடுத்தார். இந்தப் பிறந்த தேதியானது பரவலாக அறியப்பட்ட ஒன்றாகும். ஏனெனில், தன்னுடைய வானியலாளரை வானியல் அட்டவணைகளைப் பயன்படுத்தச் செய்தும், கிரகங்களின் அமைவை சோதிக்கவும் செய்து உமாயூன் அறிவுரைகளைக் கேட்டார். 34 வயது உமாயூனின் வாரிசாகவும், பல பிரார்த்தனைகளின் பலனாகவும் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த இந்தக் குழந்தை பிறந்தது. இந்தப் பிறப்பிற்குச் சிறிது காலத்திலேயே அமர்கோட்டிலிருந்து உமாயூனும், அவரது பரிவாரமும் சிந்துக்குப் பயணம் மேற்கொண்டனர். அக்பரை விட்டுச் சென்றனர். அக்பர் குழந்தையாக இருந்ததால் கடினமான பயணத்திற்கு அவர் தயாராகி இருக்கவில்லை. அக்பரைப் பிறகு அசுகாரி மிர்சா வளர்த்தார்.
ஒரு மாற்றத்திற்காக உமாயூன் தன்னுடைய நம்பிக்கையைப் பெற்றிருந்த மனிதனின் நடத்தையால் ஏமாற்றப்படவில்லை. சிந்துவின் ஆட்சியாளரான எமீர் உசேன் உம்ரானி உமாயூனின் வருகையை வரவேற்றார். அவர் இவருக்கு விசுவாசமாக இருந்தார். தனித்து செயல்பட்ட அர்குன்களுக்கு எதிராக பாபுருக்கு விசுவாசமாக எவ்வாறு இருந்தாரோ அவ்வாறே உமாயூனுக்கும் விசுவாசமாக இருந்தார். சிந்துவில் இருந்த போது உசேன் உம்ரானியுடன் சேர்ந்து உமாயூன் குதிரைகளையும், ஆயுதங்களையும் சேகரித்தார். இழந்த நிலப்பரப்புகளை மீண்டும் பெற உதவிய புதிய கூட்டணிகளை அமைத்தார். தன்னுடைய முகலாயர்களுடன் நூற்றுக்கணக்கான சிந்தி மற்றும் பலூச் பழங்குடியினங்களை உமாயூன் இறுதியாகச் சேர்த்தார். பிறகு காந்தாரத்தை நோக்கியும், அதற்கடுத்து காபூலை நோக்கியும் அணி வகுத்தார். முதல் முகலாயப் பேரரசரான பாபுரின் உரிமையுடைய தைமூரிய வாரிசாகத் தன்னைத் தானே தொடர்ந்து உமாயூன் அறிவித்தார். அப்போது ஆயிரக்கணக்கானோர் இவரது பக்கம் வந்தனர்.
காபூலுக்குப் பின் வாங்குதல்
சிந்து மாகாணத்தில் 300 ஒட்டகங்கள் (பெரும்பாலும் காட்டு ஒட்டகங்கள்) மற்றும் 2000 தானிய மூட்டைகளுடன் தனது பயணத்தை உமாயூன் தொடங்கியதற்குப் பிறகு சிந்து ஆற்றை 11 சூலை 1543 அன்று கடந்தார். காந்தாரத்தில் இருந்த தனது சகோதரர்களுடன் இணைவதற்குச் சென்றார். முகலாயப் பேராசை திரும்பப் பெறும், சூர் பேரரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறியும் தன்னுடைய இலக்குடன் சென்றார். உமாயூனிடம் கூட்டணிக்காக உறுதியளித்திருந்த பழங்குடியினங்களில் லெகாரி, மக்சி, ரிந்த் மற்றும் பல பிற பழங்குடியினங்கள் அடங்கும்.[28]
கம்ரான் மிர்சாவின் பெயரில் குத்பாவை அறிவிக்க முடியாது என்று மறுத்ததன் காரணமாக கம்ரான் மிர்சாவின் நிலப்பரப்பில் இண்டால் மிர்சா வீட்டுக் காவலின் கீழ் வைக்கப்பட்டிருந்தார். மற்றொரு சகோதரரான அசுகாரி மிர்சாவுக்கு உமாயூனுக்கு எதிராக ஓர் இராணுவத்தைத் திரட்டிக் கொண்டு அணி வகுக்குமாறு ஆணையிடப்பட்டது. எதிர் இராணுவம் வரும் செய்தியை அறிந்த போது அவர்களை எதிர் கொள்வதற்கு எதிராக உமாயூன் முடிவெடுத்தார். மாறாக வேறு இடத்தில் தஞ்சமடைந்தார். காந்தாரத்துக்கு அருகில் இருந்த முகாமில் அக்பர் விடப்பட்டிருந்தார். ஏனெனில், அது திசம்பர் மாதமாக இருந்தது. இந்து குஃசு மலைகளின் வழியாக அணி வகுத்துச் செல்வதில் 14 மாதக் குழந்தையை கொண்டு செல்வது என்பது மிகவும் குளிரான மற்றும் ஆபத்தான பயணமாக இருந்தது. அசுகரி மிர்சா அக்பரை வைத்துக் கொண்டார். கம்ரான் மற்றும் அசுகாரி மிர்சாவின் மனைவிகளுக்கு அக்பரை வளர்க்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அக்பர்நாமா நூலானது கம்ரான் மிர்சாவின் மனைவியாக சுல்தான் பேகத்தைக் குறிப்பிடுகிறது.[29]
உமாயூன் மீண்டு காந்தாரத்தை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பினார். அங்கு இவரது சகோதரர் கம்ரான் மிர்சா அதிகாரத்தில் இருந்தார். ஆனால் இவர் எந்த உதவியையும் அங்கு பெறவில்லை. பாரசீகத்தின் ஷாவிடம் தஞ்சம் கேட்க வேண்டிய நிலை இவருக்கு ஏற்பட்டது.[30]
பாரசீகத்தில் தஞ்சம்
பாரசீகத்தில் இருந்த சபாவித்து பேரரசில் தஞ்சம் அடைவதற்கு உமாயூன், 40 வீரர்கள், இவரது மனைவி பேகா பேகம்,[32] மற்றும் இவரது மனைவியின் உதவியாளர் ஆகியோருடன் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளைக் கடந்து பயணித்தார். இப்பயணத்தில் இவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாயினர். உணவிற்காக வீரர்களின் தலைக் கவசத்தில் குதிரை மாமிசத்தை வேக வைத்து உண்டனர். ஹெராத்தை அடைவதற்கு முன்னர் ஒரு மாதத்திற்கு இவர்கள் இவ்வாறு இன்னல்களுக்கு ஆளாயினர். எனினும், ஹெராத்தை அடைந்த பிறகு நன்றாகக் கவனித்துக் கொள்ளப்பட்டனர். நகருக்குள் நுழையும் போது உமாயூன் ஆயுதமேந்திய வீரர்களால் வரவேற்கப்பட்டார். அனைவரும் உயர் தர விருந்து மற்றும் ஆடைகளுடன் கவனித்துக் கொள்ளப்பட்டனர். இவர்களுக்குத் தங்குவதற்கு சிறப்பான முறையில் வசதிகள் செய்து தரப்பட்டன. சாலைகளில் இருந்த தடைகள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டன. ஷா தமஸ்ப் உமாயூனின் சொந்த குடும்பத்தினரைப் போல் இல்லாமல் முகலாய உமாயூனை வரவேற்று தனது தேசிய மதிப்பு வாய்ந்த விருந்தாளியாகக் கவனித்துக் கொண்டார். இங்கு உமாயூன் சுற்றி பார்ப்பதற்காக சென்ற போது பாரசீக ஓவியங்கள் மற்றும் கட்டடங்களைக் கண்டு வியந்தார்: அவற்றில் பெரும்பாலானவை தைமூரிய சுல்தானான உசைன் பய்கரா மற்றும் அவரது முன்னோர் இளவரசி கௌகர் சாத் ஆகியோரின் வேலைப்பாடுகள் ஆகும். இவ்வாறாக உமாயூனால் தனது உறவினர்கள் மற்றும் முன்னோர்களின் வேலைப்பாடுகளை நேரடியாக இரசிக்க முடிந்தது.[33]
இங்கு உமாயூன் பாரசீக சிறு ஓவியம் வரைபவர்களின் அறிமுகம் பெற்றார். கமாலுதீன் பெசாத்தின் 2 மாணவர்கள் உமாயூனின் அவையில் இணைந்தனர். அவர்களது வேலைப்பாடுகளை கண்டு வியந்த உமாயூன் இந்துஸ்தானை தான் வென்றால் தனக்காக பணியாற்றுவீர்களா என்று அவர்களிடம் வினவினார்: அவர்கள் ஒத்துக் கொண்டனர். இவ்வாறாக உமாயூன் பல்வேறு கலைகளை கவனிப்பதிலேயே தனது கவனத்தை செலுத்தினார். ஜூலை மாதம் வரை ஷாவை சந்திக்கவே இல்லை. அப்போது உமாயூன் பாரசீகத்திற்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. ஹெராத்திலிருந்து நீண்ட பயணத்திற்குப் பிறகு கஸ்வின் நகரத்தில் இருவரும் சந்தித்தனர். இந்த நிகழ்ச்சிக்காக ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு ஆட்சியாளர்களின் சந்திப்பானது இசுபகானில் உள்ள செகேல் சோதோன் (நாற்பது வரிசைகள்) அரண்மனையில் உள்ள புகழ்பெற்ற சுவர் ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
உமாயூனை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொடுத்தால் பாரசீகர்களுக்கு காந்தாரத்தை அளிக்க உமாயூனின் சகோதரர் கம்ரான் மிர்சா முன் வந்த போது தமஸ்ப் அதற்கு மறுத்தார். மாறாக ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்தார். அதில் 300 கூடாரங்கள், ஓர் ஏகாதிபத்திய பாரசீகக் கம்பளம், 12 இசைக் குழுக்கள் மற்றும் "அனைத்து வகையான மாமிசங்கள்" பரிமாறப்பட்டன. கம்ரான் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்துவதற்காக இவை அனைத்தும் மற்றும் 12,000 உயர் ரக குதிரைப்படையினரும்[சான்று தேவை] உமாயூனுடையவர்கள் என்று ஷா அறிவித்தார். உமாயூனின் படைகள் வெற்றி பெற்றால் மாறாகத் தமஸ்ப் காந்தாரம் தன்னுடையதாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் கேட்டார்.
காந்தாரமும், அதற்குப் பிறகும்
இரண்டு வார முற்றுகைக்குப் பிறகு அசுகாரி மிர்சாவிடமிருந்து காந்தாரத்தை இந்த பாரசீக சபாவித்து உதவியுடன் உமாயூன் பெற்றார். அசுகாரி மிர்சாவுக்குச் சேவையாற்றிய உயர்குடியினர் எவ்வாறு சீக்கிரமே தன்னிடம் சேவையாற்றுவதற்காக வந்தனர் என்பதைப் பின்வருமாறு உமாயூன் குறிப்பிடுகிறார், "உண்மையில் உலகின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள குடியமர்ந்துள்ளவர்கள் ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டத்தைப் போன்றவர்கள், ஒருவன் எங்கு சென்றால் மற்றவர்கள் உடனடியாக அவனைப் பின் தொடருகின்றனர்". காந்தாரமானது ஒப்புக் கொள்ளப்பட்ட படி பாரசீகத்தின் ஷாவுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் தன்னுடைய சிறு வயது மகன் முராத்தை வைசிராயாக அனுப்பி வைத்தார். எனினும், குழந்தை சீக்கிரமாகவே இறந்தது. அதிகாரத்தைப் பெறுவதற்கு தானே போதிய வலிமையுடன் இருப்பதாக உமாயூன் தனக்குத் தானே எண்ணிக் கொண்டார்.[சான்று தேவை]
தற்போது காபூலைப் பெறுவதற்கு உமாயூன் ஆயத்தமாக இருந்தார். காபூலானது இவரது சகோதரர் கம்ரான் மிர்சாவால் ஆளப்பட்டது. இறுதியில் அங்கு உண்மையான முற்றுகை நடைபெறவில்லை. ஒரு தலைவராக கம்ரான் மிர்சா வெறுக்கப்பட்டார். நகரை உமாயூனின் பாரசீக இராணுவம் நெருங்கிய போது கம்ரான் மிர்சாவின் முன்னாள் துருப்புக்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கட்சி மாறினர். உமாயூனுடன் இணைய ஓடி வந்தனர். உமாயூனின் படை பலம் பெருகியது. கம்ரான் மிர்சா பதவி விலகினார். நகருக்கு வெளியே ஓர் இராணுவத்தைச் சேர்க்க ஆரம்பித்தார். நவம்பர் 1545இல் அமீதா மற்றும் உமாயூன் தங்களது மகன் அக்பருடன் மீண்டும் இணைந்தனர். ஒரு பெரும் விருந்து நடத்தினர். அக்பருக்கு விருத்த சேதனம் செய்யப்பட்ட போது குழந்தைக்காக அவர்கள் மற்றுமொரு விருந்தையும் கூட நடத்தினர்.[சான்று தேவை]
எனினும், அதே நேரத்தில், கம்ரான் மிர்சாவை விட உமாயூன் ஒரு பெரிய இராணுவத்தைக் கொண்டிருந்தார். இவரது கையும் மேலோங்கி இருந்தது. ஆனால், இரு தருணங்களில் உமாயூனின் மோசமான இராணுவ ஊகங்கள் கம்ரான் மிர்சா காபூல் மற்றும் கந்தகாரை மீண்டும் பெறுவதற்கு அனுமதியளித்தது. அவற்றை மீண்டும் கைப்பற்றுவதற்காக மேற்கொண்ட படையெடுப்புகளை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார். நகரங்களைத் தற்காத்த துருப்புகளிடம் மென்மையாக நடந்து கொண்ட இவரது பெயர் இவருக்கு உதவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால்,கம்ரான் மிர்சா இவ்வாறு நடந்து கொள்ளவில்லை. தன்னுடைய சகோதரருக்கு உதவி செய்ததாக கம்ரான் மிர்சா நம்பிய குடிமக்களுக்கு எதிராக அட்டூழியங்களைத் தான் நகரங்களைக் கைப்பற்றி வைத்திருந்த குறுகிய காலத்திற்கு கம்ரான் மிர்சா செய்தார்.[சான்று தேவை]
இவரது தம்பி இண்டால் மிர்சாவின் முன்னர் சகோதரர்களிலேயே மிகவும் விசுவாசமற்றவராக இருந்தார். ஆனால், இவருக்காகச் சண்டையிட்டு இறந்தார். இவரது சகோதரர் அசுகாரி மிர்சா இவரது உயர்குடியினர் மற்றும் உதவியாளர்களின் ஆணையின் பேரில் சங்கிலியால் பிணைக்கப்பட்டார். ஹஜ் பயணம் மேற்கொள்ள அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. திமிஷ்குவிற்கு வெளியே பாலைவனத்தில் ஹஜ் பயணம் மேற்கொண்ட போது அசுகாரி மிர்சா இறந்தார்.[சான்று தேவை]
உமாயூனின் மற்றொரு சகோதரரான கம்ரான் மிர்சா தொடர்ந்து உமாயூன் கொல்லப்பட வேண்டும் என்று விரும்பினார். 1552இல் சேர் ஷாவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த இசுலாம் ஷாவுடன் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்த கம்ரான் மிர்சா முயற்சித்தார். ஆனால், வடக்குப் பாக்கித்தானின் காகர் இனத்தவரால் பிடித்துக் கைது செய்யப்பட்டார். காகர்கள் என்பவர்கள் பழங்குடியினக் குழுக்களில் சிறுபான்மையினராக இருந்த ஒர் இனத்தவர் ஆவர். முகலாயர்களுக்குத் தாங்கள் செய்து கொடுத்த உறுதிக்குத் தொடர்ந்து விசுவாசமாக அவர்கள் நடந்து கொண்டனர். காகர்களின் சுல்தான் ஆதாம் ஒப்படைத்தார் கம்ரான் மிர்சாவை உமாயூனிடம் ஒப்படைத்தார்.[சான்று தேவை] மன்னிக்கத் தயாராக இருந்தாலும் உமாயூன் இவரது சகோதரரின் தொடர்ந்த துரோகச் செயல்களுக்குத் தண்டனை அளிக்காமல் விட்டால் இவருடைய சொந்த ஆதரவாளர்களே கிளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும் என எச்சரிக்கப்பட்டார். எனவே, உமாயூன் கம்ரான் மிர்சாவை கண்பார்வையற்றவர் ஆக்கினார்.[34] இவ்வாறாக அரியணைக்கு உரிமை கோரும் கம்ரான் மிர்சாவின் எந்த ஒரு கோரிக்கையையும் முடித்து வைத்தார். பிறகு, இவர் கம்ரான் மிர்சாவை ஹஜ் பயணத்துக்கு அனுப்பினார். இவருடைய குற்ற செயலுக்கு பாழி நீக்கம் பெறுவார் என்று நம்பினார். எனினும், 1557இல் அறபுத் தீபகற்பத்தின் மக்காவுக்கு அருகே கம்ரான் மிர்சா இறந்தார்.[சான்று தேவை]
முகலாயப் பேரரசை மீட்டல்
1535இல் உமாயூன் குசராத்தின் ஆளுநராக இருந்த போது இவர் காம்பே (காம்பத்) என்ற இடத்திற்கு அருகில் முகாமிட்டிருந்தார். குசராத்தின் கோலிகளால் உமாயூனும் இவரது இராணுவமும் கொள்ளையடித்து சூறையாடப்பட்டது.[35][36][37][38]
1545இல் சேர் சா சூரி இறந்தார். அவரது மகனும், அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவருமான இசுலாம் ஷா 1554இல் இறந்தார். இந்த இரு இறப்புகள் அந்த அரசமரபைத் தடுமாற வைத்து நொறுங்க வைத்தது. மூன்று எதிரிகள் அரியணைக்காக தில்லி மீது அணி வகுத்தனர். அதே நேரத்தில், பல நகரங்களில் சுதந்திரத்துக்கு உரிமை கோருவதற்காக தலைவர்கள் முயற்சித்தனர். இந்தியாவுக்கு மீண்டும் அணி வகுக்க முகலாயருக்கு ஒரு கச்சிதமான வாய்ப்பை இது உருவாக்கியது.[சான்று தேவை]
உமாயூன் தனது இராணுவத்தை பைராம் கானின் தலைமைத்துவத்தின் கீழ் வைத்தார். இராணுவத் திறனற்ற உமாயூனின் செயல்பாடுகளைக் கவனிக்கும் போது இது புத்திசாலித்தனமான முடிவாகும். இது நடப்பதை முன் கூட்டியே கணிக்கும் ஒரு முடிவாக அமைந்தது. பைராம் கான் தான் ஒரு சிறந்த உத்தியாளர் என நிரூபித்தார்.
பஞ்சாப் வழியாக கிட்டத்தட்ட எந்த ஓர் எதிர்ப்புமின்றி பைராம் கான் இராணுவத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார். உமாயூனின் இராணுவங்கள் எதிர் கொண்ட ஒரே ஒரு முதன்மையான யுத்தமானது சிக்கந்தர் சா சூரிக்கு எதிராக சிர்இந்த்-பதேகர் பகுதிகளில் நடைபெற்ற யுத்தமாகும். அங்கு பைராம் கான் ஓர் உத்தியைச் செயல்படுத்தினார். வெட்ட வெளியில் தனது எதிரியிடம் சண்டையிட்டார். ஆனால், சீக்கிரமே வெளிப்படையாக அச்சம் என்று எண்ணப்படும் காரணத்தால் பின் வாங்கினார். அவர்களைத் தொடர்ந்து எதிரிகள் சென்ற போது பதுங்கு குழிகளைக் கொண்ட தற்காப்பு நிலைகளால் எதிரிகள் ஆச்சரியமடைந்தனர். எளிதாகக் கொன்றொழிக்கப்பட்டனர்.[39] 22 சூன் 1555 அன்று சிர்ஹிந்த் யுத்தத்தில் சிக்கந்தர் சா சூரியின் இராணுவங்கள் தீர்க்கமாகத் தோற்கடிக்கப்பட்டன. முகலாயப் பேரரசானது மீண்டும் நிறுவப்பட்டது.[40]
சிர்ஹிந்துக்குப் பிறகு பெரும்பாலான பட்டணங்கள் மற்றும் கிராமங்கள் படையெடுத்து வந்த இராணுவத்தை வரவேற்பதைத் தேர்ந்தெடுத்தன. தில்லிக்குச் செல்லும் வழியில் இவ்வாறான வரவேற்பு இவர்களுக்கு அளிக்கப்பட்டது. 23 சூலை 1555இல் தில்லியில் பாபுரின் அரியணையில் உமாயூன் மீண்டும் ஒரு முறை அமர்ந்தார்.[41]
கன்சதாக்களுடனான திருமண உறவுகள்
உல்வூர் புவியியல் அகராதியானது பின்வருமாறு குறிப்பிடுகிறது:
பாபுரின் இறப்பிற்கு வெகு சீக்கிரமே அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்த உமாயூன் பொ. ஊ. 1540இல் பதான் சேர் ஷாவால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பதான் சேர் ஷாவுக்குப் பின் பொ. ஊ. 1545இல் இசுலாம் ஷா ஆட்சிக்கு வந்தார். இசுலாம் ஷாவின் ஆட்சியின் போது ஒரு யுத்தமானது சண்டையிடப்பட்டது. மேவாத்தின் பிரோசுபூர் சிர்கா என்ற இடத்தில் பேரரசரின் துருப்புக்கள் தோற்றன. எனினும், இசுலாம் ஷா தன்னுடைய கட்டுப்பாட்டை இழக்கவில்லை. வரவேற்கப்படாத பதான்களில் மூன்றாமவரான அடில் ஷா பொ. ஊ. 1552இல் ஆட்சிக்கு வந்தார். திரும்பிய உமாயூனுடன் பேரரசுக்காக அடில் ஷா போராட வேண்டியிருந்தது. பாபுரின் அரசமரபை மீண்டும் நிறுவும் இத்தகைய போராட்டங்களில் கன்சதாக்கள் உண்மையில் எந்த ஒரு பங்கையும் கொண்டிருக்கவில்லை. பாபுரின் எதிரியான அசன் கானின் உடன்பிறப்பின் மகனான சமால் கானின் மூத்த மகளைத் திருமணம் செய்து கொண்டதன் மூலம் அவர்களுடன் உமாயூன் இணங்கிச் சென்றார் என்று தெரிகிறது. இதே மேவாத்தியின் ஓர் இளம் மகளைத் தன்னுடைய முக்கிய மந்திரியான பைராம் கானுக்குத் திருமணம் செய்து வைத்தார்.[42]
காசுமீரை ஆட்சி செய்தல்
உமாயூனின் அனைத்து சகோதரர்களும் தற்போது இறந்திருந்த போது இவரது இராணுவப் படையெடுப்புகளின் போது இவரது அரியணையை மற்றொரு முறை முறையற்ற வகையில் பெற முயற்சிப்பார்கள் என்ற அச்சம் இல்லாமலிருந்தது. இவரும் கூட தற்போது ஒரு பெயர் பெற்ற தலைவராக இருந்தார். இவரால் தளபதிகள் மீது நம்பிக்கை வைக்க முடிந்தது. இந்தியத் துணைக் கண்டத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகள் மீதான தனது ஆட்சியை விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தொடர்ச்சியான இராணுவப் படையெடுப்புகளை தன்னுடைய புதிதாகப் பெற்ற பலத்துடன் உமாயூன் தொடங்கினார். குறுகிய காலம் அயல் நாட்டில் வாழ்ந்த நிலையானது இவரது நம்பிக்கையைக் குறைத்ததைப் போல் தோன்றுகிறது. பாரசீகத்தில் இவர் கண்டறிந்த மிகுந்த ஆற்றல் மிக்க போர் முறைகளை இவரது இராணுவத் தலைமைத்துவமானது பின்பற்றியது.[43]
குடும்பம்
பேரரசிகள்
உமாயூன் குறைந்தது எட்டு பேரரசிகளைத் தன்னுடைய அந்தப்புரத்தில் கொண்டிருந்தார்:
- பேகா பேகம் - இவர் பாரசீகப் பூர்வீகத்தைக் கொண்டவர், உமாயூனின் முதல் மனைவி மற்றும் பட்டத்து இராணி ஆவார்
- அமீதா பானு பேகம் - இவர் பாரசீகப் பூர்வீகத்தைக் கொண்டவர், உமாயூனின் இரண்டாவது மனைவி மற்றும் பட்டத்து இராணியாக இவர் உருவானர், பிற்காலத்தில் தன்னுடைய மகனின் ஆட்சிக் காலத்தின் போது தாய்ப் பேரரசியாகத் திகழ்ந்தார்.
- மா சுச்சக் பேகம் - ஆப்கானியப் பூர்வீகத்தைக் கொண்டவர், இவர் தன்னுடைய சொந்த ஆட்சி மூலம் காபூலை ஆண்டார்
- கனிஷ் அகாச்சா
- குன்வர் பீபி - இவர் ஆப்கானியப் பூர்வீகத்தைக் கொண்டவர்
- மேவா ஜான்
- சாந்த் பீபி - இவர் ஆப்கானியப் பூர்வீகத்தைக் கொண்டவர்
- சாத் பீபி - இவர் ஆப்கானியப் பூர்வீகத்தைக் கொண்டவர்
மகன்கள்
- சகுசதா அல்-அமான் மிர்சா (1528 – 1536). முகலாயப் பேரரசின் வாரிசு; இவர் பேகா பேகத்தின் மகன் ஆவார்
- முதலாம் அக்பர் (15 அக்டோபர் 1542 – 27 அக்டோபர் 1605). அடுத்த பேரரசர்; இவர் அமீதா பானு பேகத்தின் மகன் ஆவார்
- சகுசதா மிர்சா முகம்மது அக்கீம் (29 ஏப்ரல் 1553 – 10 அக்டோபர் 1585). இவர் காபூலின் சுபேதாராக ஆட்சி புரிந்தார்; இவர் மா சுச்சக் பேகத்தின் மகன் ஆவார்
- சகுசதா மிர்சா பரூக் பல் (b. 1554). இவர் இளம் வயதிலேயே இறந்துவிட்டார்; இவர் மா சுச்சக் பேகத்தின் மகன் ஆவார்
- சசதா இப்ராகிம் சுல்தான் மிர்சா. கனிஷ் அகாச்சா
மகள்கள்
- சகுசாதி அகிகா சுல்தான் பேகம் (1531 – 27 சூன் 1539). இவர் தாய் ஒரு கைதியாக இருந்த போது இவர் பிறந்தார்; இவர் பேகா பேகத்தின் மகள் ஆவார்
- சகுசாதி பக்சி பானு பேகம் (1540 - 1596). இவர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார், ஆனால் இரண்டு முறையும் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தார்; இவர் குன்வர் பீபியின் மகள் ஆவார்
- சகான் சுல்தான் பேகம் (1544 – 1547); இவர் அமீதா பானு பேகத்தின் மகள் ஆவார்
- இரட்டை மகள்கள் (1545/1550 – 1557). இளம் வயதிலேயே இறந்து விட்டனர்; இவர்கள் அமீதா பானு பேகத்தின் மகள்கள் ஆவார்
- சகுசாதி பக்துன்னிசா பேகம் (அண். 1547 – 2 சூன் 1608). இவர் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார், இரண்டு மகன்கள் இவருக்குப் பிறந்தனர். இவர் மா சுச்சக் பேகத்தின் மகள் ஆவார்
- சகீனா பானு பேகம் (இறப்பு 25 ஆகத்து 1604). இவர் ஒரு முறை திருமணம் செய்து கொண்டார், ஆனால் இவருக்குக் குழந்தைகள் இல்லை. இவர் மா சுச்சக் பேகத்தின் மகள் ஆவார்
- அமீனா பானு பேகம் (பி. 1552); இவர் மா சுச்சக் பேகத்தின் மகள் ஆவார்
- பெயரிடப்படாத மகள் (பி. 1555) இவர் மா சுச்சக் பேகத்தின் மகள் ஆவார்
இயற்பண்பு
எட்வர்டு எஸ். ஓல்டன் என்ற வரலாற்றாளர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்; "தன்னைச் சார்ந்தவர்களுக்கு இவர் சீரான பரிவுடனும், கவனத்துடனும் நடந்து கொண்டார், தன் மகன் அக்பர், தன் நண்பர்கள், மற்றும் தன் பிரச்சினை செய்யும் சகோதரர்கள் ஆகியோருடன் மிகுந்த அன்புடன் பிணைக்கப்பட்டிருந்தார். அவர்களைக் கடுமையாக நடத்துவதில் இவர் அடைந்த தோல்வியிலிருந்தே இவரது ஆட்சியின் துரதிட்டங்கள் பெரும்பாலும் ஏற்பட்டன." அவர் மேலும் எழுதியுள்ளதாவது: "தேசங்களின் ஒரு வெற்றிகரமான ஆட்சியாளராக இவரைப் பாராட்டத் தகாத இவரது இயற்பண்பின் அதே குறைகள் ஒரு மனிதனாக நம்மை இவரை மிகவும் விரும்ப வைக்கின்றன. பாபுரின் சிறந்த படையெடுப்புகள் மற்றும் அக்பரின் தாராள அரசியல் ஞானம் ஆகியவற்றுக்கு இடையில் இவரது ஆட்சி வந்ததாலேயே இவரது புகழ் பாதிக்கப்பட்டது; ஆனால், பாபுரின் மகனாகவோ மற்றும் அக்பரின் தந்தையாகவோ இருக்க இவர் தகுதியற்றவர் கிடையாது."[44]
தன்னுடைய நடுக்கால இந்தியா நூலில் இசுடான்லி லேன்-பூல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "இவரது பெயரின் பொருள் வெற்றியாளர் (அதிர்ஷ்டமுள்ளவர்/துரந்தரர்) என்பதாகும், வரலாற்றில் உமாயூனைப் போலத் தவறாகப் பெயரிடப்பட்ட ஒரு மன்னர் கிடையாது", இவர் மன்னிக்கும் இயல்புடையவராக இருந்தார். மேலும் அவர் எழுதியுள்ளதாவது, "உண்மையில் இவர் துரதிர்ஷ்டசாலியாக இருந்தார் ... தில்லியில் இவர் தன்னுடைய அரியணையை ஆறு மாதங்களுக்கு மட்டுமே அனுபவித்திருந்தார், தன்னுடைய 49ஆம் வயதில் (சனவரி 24, 1556) தன்னுடைய அரண்மனையின் பளபளப்பாக்கப்பட்ட படிக்கட்டுகளிலிருந்து தவறி விழுந்த போது இவர் இறந்தார். தவறி விழுவதெற்கென ஏதேனும் ஒரு சந்தர்ப்பம் இருந்தால் உமாயூன் அதைத் தவறாமல் பயன்படுத்திக் கொண்டார் என்று தான் குறிப்பிட வேண்டும். இவர் தன் வாழ்வில் உருண்டு விழுந்தார், தன் வாழ்விலிருந்தும் உருண்டு விழுந்தார்."[45]
தன்னுடைய ஆட்சியை விமர்சித்ததாக இவர் தவறுதலாக எண்ணிய ஓர் இமாமை யானையின் மூலம் மரண தண்டனைக்குட்படுத்த உமாயூன் ஆணையிட்டார்.[46]
இறப்பும், மரபும்
24 சனவரி 1556இல் உமாயூன் தனது கை முழுவதும் நூல்களுடன் சேர் மண்டல் எனப்படும் தனது நூலகத்திலிருந்து படிக்கட்டில் இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது முயேசின் (தொழுகை அழைப்பாளர்) பாங்கை (தொழுகைக்கு அழைப்பு) அறிவித்தார். இந்த அழைப்பை இவர் எங்கு மற்றும் எப்போது கேட்டாலும் புனித பயபக்தி காரணமாக தலை குனிந்து முட்டியிடுவது என்பது இவருடைய வழக்கமாகும். முட்டியிட இவர் முயன்ற போது இவருடைய காலானது இவரது அங்கியில் மாட்டிக் கொண்டது. இதன் காரணமாகப் பல படிகள் இவர் தடுமாறி விழுந்தார். ஒரு கரடு முரடான பாறையின் கூர்மையான பகுதியில் இவரது தலையானது இடித்துக் கொள்ளப்பட்டது. மூன்று நாட்கள் கழித்து இவர் இறந்தார்[47]. இவரது உடலானது தொடக்கத்தில் புராணா கிலாவில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால், தில்லி மீதான ஹெமுவின் ஒரு தாக்குதல் மற்றும் புராணா கிலாவை ஹெமு கைப்பற்றியதன் காரணமாக உமாயூனின் உடலானது தப்பித்துக் கொண்டிருந்த இராணுவத்தால் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு பஞ்சாப் பகுதியின் கலனௌருக்கு இடம் மாற்றப்பட்டது. இங்கு தான் அக்பருக்கு முடி சூட்டப்பட்டது. இரண்டாம் பானிபட் போரில் இளம் முகலாயப் பேரரசர் அக்பர் ஹெமுவைத் தோற்கடித்து கொன்றதற்குப் பிறகு உடலானது தில்லியில் உள்ள உமாயூனின் சமாதியில் புதைக்கப்பட்டது. முகலாயக் கட்டடக் கலையில் முதல் மிகப் பெரிய தோட்ட சமாதியாக இது விளங்குகிறது. தாஜ் மகால் மற்றும் பல பிற இந்திய நினைவுச் சின்னங்கள் கட்டப்படுவதற்கு இது முன்னோடியாக அமைந்தது. இது இவருடைய விருப்பத்திற்குரிய மற்றும் அன்பான முதல் மனைவியான பேகா பேகத்தால் கட்டித் தரப்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.[48][49][50][51][52][53]
அக்பர் பின்னர் தன்னுடைய அத்தை குல்பதன் பேகத்தைத் தன்னுடைய தந்தை உமாயூன் குறித்த ஒரு சுயசரிதையை எழுதுமாறு கேட்டுக் கொண்டார். இது உமாயூன் நாமா என்று அழைக்கப்படுகிறது. மேலும், பாபுர் குறித்து அவர் நினைவில் கொண்டுள்ளதையும் எழுதுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நூலின் முழுப் பெயரானது அக்வல் உமாயூன் பாட்ஷா ஜமா கர்தோம் குல்பதன் பேகம் பின்ட் பாபுர் பாட்ஷா அம்மா அக்பர் பாட்ஷா.[54] பாபுர் இறந்த போது இவரது அத்தைக்கு வெறும் எட்டு வயதே ஆகியிருந்தது. 17ஆம் வயதில் அவர் திருமணம் செய்து கொண்டார். இவருடைய நூலானது எளிமையான பாரசீகப் பாணியில் எழுதப்பட்டுள்ளது.
பிற முகலாய மன்னர்களின் சுயசரிதைகளை (தைமூரின் சாபர்நாமா, பாபர் நாமா, மற்றும் அக்பரின் சொந்த அக்பர் நாமா) போன்ற நூல்களைப் போல் செழிப்பான விளக்கப்படங்களுடன் கூடிய பிரதியானது எஞ்சியிருக்கவில்லை. இந்த நூலானது ஓர் ஒற்றை உருக் குலைந்த மற்றும் சற்றே முழுமையடையாத கையெழுத்துப் பிரதியால் மட்டுமே அறியப்படுகிறது. இது தற்போது பிரித்தானிய நூலகத்தில் உள்ளது. இது 1860களில் கண்டறியப்பட்டது. அன்னெட் பெவரிச் என்ற பிரித்தானிய கிழக்கியலாளர் 1901இல் ஆங்கில மொழி பெயர்ப்பைப் பதிப்பித்தார்.[55] 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்நூலின் ஆங்கிலம் மற்றும் வங்காள மொழிப் பதிப்புகள் பதிப்பிக்கப்பட்டுள்ளன.[56]
திரைப்படமும், தொலைக்காட்சித் தொடரும்
- 1945ஆம் ஆண்டு இந்தியத் திரைப்படம் உமாயூன், அசோக் குமார் இதில் உமாயூனாக நடித்தார்
- 1997ஆம் ஆண்டு பாக்கித்தான் தொலைக் காட்சித் தொடரான பாபரில் உமாயூனாகப் பாபர் அலி நடித்திருந்தார்
மேலும் காண்க
மேற்கோள்கள்
நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.