தமிழ்த்தேசியத்தந்தை From Wikipedia, the free encyclopedia
"பாவலரேறு" பெருஞ்சித்திரனார் (10 மார்ச் 1933 – 11 சூன் 1995) தமிழ்நாட்டைச் சேர்ந்த தனித்தமிழ் அறிஞர், புலவர், இதழாளர் மற்றும் பெரியாரிய, பொதுவுடைமை, தமிழ்த் தேசியச் செயல்பாட்டாளர் ஆவார். தன் ஐம்பதாண்டு கால எழுத்துப்பணியில் கொய்யாக்கனி (1956), கனிச்சாறு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படைப்புகளை இயற்றினார். "மொழிஞாயிறு" என அறியப்படும் ஞா.தேவநேயப் பாவாணருடன் இணைந்து தென்மொழி இதழைத் தொடங்கி நடத்தினார்.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
பாவலரேறு பெருஞ்சித்திரனார் | |
---|---|
பிறப்பு | இராசமாணிக்கம் 10 மார்ச் 1933 சமுத்திரம், சேலம் மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 11 சூன் 1995 62) மதராசு (தற்போது சென்னை), தமிழ்நாடு, இந்தியா | (அகவை
மற்ற பெயர்கள் | துரை |
பணி | எழுத்தாளர், புலவர், தனித்தமிழ் ஆர்வலர் |
தாக்கம் செலுத்தியோர் | திருவள்ளுவர் மறைமலை அடிகளார் பெரியார் பாரதிதாசன் தேவநேயப் பாவாணர் வை. பொன்னம்பலனார் |
பின்பற்றுவோர் | மகிபை பாவிசைக்கோ ப. அருளி |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | பொற்கொடி தேன்மொழி பூங்குன்றன் பொழிலன் சித்திரச்செந்தாழை பிறைநுதல் |
உறவினர்கள் | [மருமகன்கள்] இறைக்குருவன் ப. அருளி ஆறிறைவன் கி. குணத்தொகையன் |
குமுகாய - அரசியல் களத்தில் சாதி எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, நெருக்கடி நிலை எதிர்ப்பு, தமிழீழ ஆதரவு, தனித் தமிழ்நாடு ஆதரவு ஆகிய நிலைகளில் செறிவுடன் பணியாற்றினார்.
இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவராகக் கருதப்படுகிறார் பெருஞ்சித்திரனார். இவர் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. "தமிழ்த்தேசியத்தின் தந்தை" எனவும் தமிழ்த்தேசியர்களால் போற்றப்படுகி்றார். பல்வேறு இயக்கங்களும் கல்வி அறக்கட்டளைகளும் பெருஞ்சித்திரனாரின் வழிமரபினரால் நடத்தப்படுகின்றன.
சேலம் மாவட்டம், சலகண்டாபுரத்தை அடுத்த சமுத்திரம் எனும் சிற்றூரில் 10 மார்ச் 1933 அன்று குஞ்சம்மாள் (இற.1994)[1] - தலைமைக் காவலர் துரைசாமி இணையருக்கு இரண்டாம் பிள்ளையாகவும் முதல் மகனாகவும் பிறந்தார் பெருஞ்சித்திரனார். இவருக்குப்பின் ஒரு தம்பியும் மூன்று தங்கைகளும் பிறந்தனர். மலைகள்சூழ்ந்த சமுத்திரம் ஊரின் வளம், இயற்கை மீதான நாட்டத்தை அவருக்குள் ஏற்படுத்தியது. பெருஞ்சித்திரனாரின் பாட்டனார், பிரித்தானிய இலங்கையின் (தற்போது இலங்கை) மலையகப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளியாக அமர்த்தப்பட்டு அங்கேயே காலமானவர்.[2]
இவர் பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் இராசமாணிக்கம். பின் தன் தந்தை பெயரின் முன்னொட்டை இணைத்து துரைமாணிக்கம் எனத் தொடக்க காலத்தில் வைத்துக் கொண்டார்.[3]
பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி, சேலத்திலும் ஆத்தூரிலும் அமைந்தது. தன் ஒன்பதாம் அகவையில் குழந்தை என்னும் பெயரில் கையெழுத்து ஏட்டைத் தொடங்கி நடத்தியவர், பின்பு பத்தாம் அகவையில் "அருணமணி" என்னும் புனைபெயரில் மலர்க்காடு என்னும் கையெழுத்து ஏட்டினை நடத்தினார். இவ்விதழ்களுக்கான ஓவியங்களையும் அவரே வரைந்தார்.[1]
மல்லிகை (1945) பூக்காரி (1945), இயற்கையும் தமிழும் (1947; பகுத்தறிவு திங்களிதழில் வெளியீடு - 1952) [1] என்னும் பாவியங்களைப் பள்ளிப்பருவத்தில் இயற்றினார்.[3] திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் நடத்திய "தூவல் வன்மையா நா வன்மையா?" என்ற பட்டிமன்றத்தில் பங்கேற்று "தூவலே வன்மை" என உரையாற்றிப் பரிசை வென்றார்.[1]
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, "பெரியார்" ஈ. வெ. இராமசாமி தலைமையிலான திராவிடர் கழகம் ஆகியவை நடத்திய கூட்டங்களில் பங்கேற்ற பெருஞ்சித்திரனார், தன் பதின்மூன்றாம் அகவையில் பொதுவுடைமை, பெரியாரியம் ஆகிய கொள்கைகளில் நாட்டம் கொள்ளத் தொடங்கினார். "பேரறிஞர்" கா. ந. அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) நடத்திய பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்றார்.[1]
உயர்நிலைப்பள்ளியில் சேலம் நடேசனாரும், "தமிழ் மறவர்" வை. பொன்னம்பலனாரும் (பத்தாம் வகுப்பில்) இவருக்கு ஆசிரியர்களாக விளங்கினர். தன்னைக் காட்டிலும் இளைய மாணவர்களுக்காக ஒரு "இரவுத் தனிப்பள்ளி"யை நடத்தினார்.[1]
1950-இல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பின்னர், சேலம் நகராண்மைக் கல்லூரியில் (தற்போது சேலம் அரசினர் கலைக் கல்லூரி) பயின்றார். அங்கு ஞா.தேவநேயப் பாவாணர், உலக ஊழியனார், அ. காமாட்சி குமாரசாமி உள்ளிட்டோரின் மாணவராகத் தமிழறிவு பெற்றார். மேலும் அம்பேத்கர் கருத்தியலின் மீதும் பற்றுக் கொண்டார்.[2] "பாவேந்தர்" பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கிய அவர், மல்லிகை, பூக்காரி பாவியங்களை எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்க 1949-இல் பாண்டிச்சேரிக்கு (தற்போது புதுச்சேரி) சென்றார். அப் பாவியங்களுள் ஒன்றில் குறை கண்டமையால் அந்நூல்களைப் பார்க்க மறுத்துவிட்ட பாரதிதாசன், பின்னாளில் ஒரு நூலைக் கொய்யாக்கனி (பூக்காரி-யைப் பெயர்மாற்றி) எனும் பெயரில் தம் அச்சகத்திலேயே அச்சிட்டுத் தந்தார். இந்நூலுக்குப் பாவாணர் அணிந்துரை எழுதினார்.[1]
கல்லூரிக்குப்பின் 1952 முதல் 1954 வரை சேலத்தில் கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வராகவும், கணக்காய்வராகவும் பணியாற்றினார். பின்னர், (இன்றைய) கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள ஒசூர் அருகே அஞ்செட்டி எனும் சிற்றூரில் வனத்துறையில் எழுத்தராகச் சில காலம் பணியாற்றினார்.
1954 இறுதியில் பாண்டிச்சேரிக்குச் சென்று அஞ்சல் துறையில் எழுத்தராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். அக்காலத்தில் பாரதிதாசனுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.
1959-இல் பணிமாற்றல் கிடைத்துக் கடலூருக்குச் சென்றார். அதே ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அகரமுதலித் துறையில் பணியேற்ற பாவாணரின் விருப்பப்படி 1 ஆகத்து 1959 அன்று தென்மொழி எனும் இதழைத் தொடங்கினார். அரசுப் பணியில் இருந்ததால் தன் இயற்பெயரான "துரை. மாணிக்கம்" என்பதை விடுத்துப் "பெருஞ்சித்திரன்" என்னும் புனைப்பெயரில் எழுதினார். தென்மொழியின் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர் பாவாணர் எனவும் பொறுப்பாசிரியர் பெருஞ்சித்திரன் எனவும் பெயர்கள் தாங்கி இதழ் வெளியானது. ம. இலெ. தங்கப்பா, மு. தமிழ்க்குடிமகன், வி.வி. பாளை எழிலேந்தி, செம்பியன் (எ) பன்னீர்ச்செல்வம் முதலானோர் உறுப்பாசிரியர்களாக இருந்தனர்.[4] அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களும் துணையாக இருந்தனர்.
தென்மொழி -யின் ஒவ்வொரு இதழிலும் ஆசிரியவுரைக்கு (தலையங்கம்) முன்னால் மேல் முகப்புப் பகுதியில் கீழ்க்காணும் பாடல் இடம்பெறும்:
“கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை” எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!
தென்மொழியின் 16 இதழ்கள் வெளிவந்த சூழலில் பொருளியச் சிக்கலால் இதழ் இடையில் நின்றது. பின்பு மீண்டும் 1963 முதல் வெளிவந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழாசிரியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது.
1961 முதல் 1965 வரை கடலூர் அஞ்சலகத்தில் துணை அஞ்சல் தலைவராகப் பணியாற்றினார்.
1965 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின்போது தென்மொழி சார்பில் இந்தி வல்லாண்மையை எதிர்த்துத் துண்டறிக்கைகளை அச்சிட்டுப் பரப்பினார். மேலும் அன்றைய மதராசு மாநில முதலமைச்சராக இருந்த மு. பக்தவத்சலத்துக்கு எதிராக ஒரு பாடலையும் ஆசிரியர் உரையையும் தென்மொழியில் வெளியிட்டார்.[4] இவைக்காகக் குற்றம் சாற்றப்பெற்ற இவருக்கு ரூ. 200 ஒறுப்பு அல்லது நான்கு மாதம் கடுங்காவல் சிறை என்ற தெரிவுகள் வழங்கப்பட்டன. ஒறுப்புத்தொகையைக் கட்ட மறுத்தமையால் வேலூர் மத்திய சிறைச்சாலையில் 17 நவம்பர் 1965 முதல் 16 சனவரி 1966 வரை அடைக்கப்பட்டார். சிறைத் தண்டனையைக் காரணம் காட்டி அஞ்சலகப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது ஐயை என்னும் தனித்தமிழ்ப் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார்.
சூன் 1975-இல் இந்திய அளவில் நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்தபின் 5 பிப்ரவரி 1976 அன்று பெருஞ்சித்திரனார், உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் (மிசா) சிறைப்பட்டார்.[5] அப்போது ஐயை நூலின் இரண்டாம் பகுதியை எழுதி முடித்தார். பன்னெடுங்காலமாக எழுதிக் குவித்திருந்த தமிழ் உணர்வுப் பாடல்கள் முதற்கட்டமாக முறையாகத் தொகுக்கப்பட்டு கனிச்சாறு என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக (1979) வெளிவந்தன.
இராசீவ் காந்தி படுகொலையை (1991) தொடர்ந்து எழுதிய ஒரு பாவியத்தைக் காரணம் காட்டி 26 சனவரி 1993 அன்று பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (தடா) கீழ் ஏழு மாதம் சிறைப்பட்டார்.
மொத்தம் 20 முறைக்கும் மேலாக சிறைசென்றார். அவரது சிறைவாழ்வில் பல்வேறு எழுத்துப்பணிகளைச் செய்து வெளியிட்டார். அவற்றுள் திருக்குறள் மெய்ப்பொருளுரை -யும் ஒன்றாகும்.
பெருஞ்சித்திரனார் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மாணவர்கள் படித்துப் பயன்பெறும் வண்ணம் தமிழ்ச் சிட்டு என்னும் இதழைத் தொடங்கினார். இவ்விதழில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் பாட்டுகளையும் கட்டுரைகளையும் வரைந்தார். தம்மை ஒத்த பாவலர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தினார்.
பாவாணரின் உலகத் தமிழ்க் கழகம் தோன்றியபோது அதில் இணைந்து பணிபுரிந்தவர். அதுபோல் பாவாணர் அகரமுதலி தொகுப்பதற்குப் பொருளுதவி செய்யும் திட்டத்தைத் தொடங்கி உதவியவர்.
தென்மொழிப் பணியை முழுநேரப் பணியாக அமைத்துக்கொண்ட பிறகு 10,11 சூன் 1972-இல் திருச்சிராப்பள்ளியில் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாடு ஒன்றை நடத்தினார். 1973-இல் தென்மொழி கொள்கைச் செயற்பாட்டு மாநாட்டை மதுரையில் நடத்த முயற்சி செய்தபோது சிறை செய்யப்பட்டார். இக்காலகட்டங்களில் தமிழ் உணர்வுடன் பாடல் வரைந்த உயர்செயல் நினைத்துப் பாவாணர் அவர்கள், 1973-இல் "பாவலரேறு' என்னும் சிறப்புப் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார்.
தமிழகம் முழுவதும் தென்மொழி இதழ் வழியாகவும் பொது மேடைகள் வழியாகவும் தனித்தமிழ் உணர்வைப் பரப்பிய பெருஞ்சித்திரனாரின் வினைப்பாடு உலகம் முழுவதும் பரவியது. எனவே மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் வாழ்ந்த தமிழர்களின் அழைப்பினை ஏற்று 1974-இல் மூன்று மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன்பின் கடலூரில் இருந்த தென்மொழி அலுவலகம் சென்னைக்கு மாறியது.
1977-இல் இலங்கையில் அறிஞர் கா. பொ. இரத்தினம் ஏற்பாடு செய்திருந்த திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். 1978 இல் அந்தமான் சென்று உரையாற்றித் திரும்பினார்.[6]
பெருஞ்சித்திரனார் தம் இதழ்களில் எழுதியதோடு அமையாமல் பகுத்தறிவு, தென்றல், முல்லை, வானம்பாடி தமிழ்நாடு, செந்தமிழ்ச் செல்வி, விடுதலை, உரிமை முழக்கம், தேனமுதம், சனநாயகம், குயில் முதலிய இதழ்களில் எழுதியவர்.
பெருஞ்சித்திரனாரின் பாட்டுத்திறமை முழுவதையும் காட்டுவனவாகவும், கொள்கை உணர்வினை வெளிப்படுத்துவனவாகவும் விளங்குவன இவர்தம் கனிச்சாறு நூலாகும். இந்நூலின் மூன்று தொகுதிகளுள்ளும் 1. தமிழ், 2. இந்தி எதிர்ப்பும் இன எழுச்சியும், 3. நாட்டுரிமை, 4. பொதுமை உணர்வு, 5. இளைய தலைமுறை, 6. காதல், 7. இயற்கை, 8. இறைமை, 9. பொது என்ற அமைப்பில் பாடல்கள் அமைந்துள்ளன. தமிழ்மொழியின் சிறப்பினையும் தமிழுக்கும் தமக்கும் உள்ள தொடர்பினையும் பெருஞ்சித்திரனார் சீரிய யாப்பமைப்பில் பாடியுள்ளார்.
என்மொழி, என்னினம், என்நாடு நலிகையில்
எதனையும் பெரிதென எண்ண மாட்டேன் - வேறு
எவரையும் புகழ்ந்துரை சொல்ல மாட்டேன்! - வரும்
புன்மொழி, பழியுரை, துன்பங்கள் யாவையும்
பொருட்டென மதித்துளம் கொள்ள மாட்டேன்! - இந்த(ப்)
பூட்கையில் ஓரடி தள்ள மாட்டேன்!
என்று தமிழ்மொழியின் வளர்ச்சியைவிட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் பெருஞ்சித்திரனார்.
1981-இல் பாவாணர் இயற்கை எய்திய நிகழ்வு பெருஞ்சித்திரனாருக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. மொழிப்பற்றும் இனஉணர்வும் ஊட்டி வளர்த்த தம் ஆசிரிய பெருமகனாரின் மறைவு குறித்து "பாவாணர் இரங்கல் பதிகம்", "மொழிஞாயிறு மறைந்தது" (கட்டுரை), "பாவாணர் மேல் ஒரு சூளுரைப் பாடல்" ஆகியவற்றை இயற்றினார்.
1981இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் இயக்கம் கட்டி எழுப்பினார். அதன் அடுத்த முயற்சியாக 1982இல் தமிழ்நிலம் என்னும் ஏட்டைத் தொடங்கி நடத்தினார். அதே ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி நகரில் பத்து நாள்கள் திருக்குறள் குறித்த இலக்கியச் சொற்பொழிவை மேற்கொண்டார்.
1983-84 காலகட்டத்தில் மேலை நாடுகளுக்குப் பயணம் செய்தார். 1985-இல் மலேசியாவிற்கு இரண்டாம் முறையாகப் பயணம் செய்தார்.
பெருஞ்சித்திரனார் மொழித்தளத்தில் தனித்தமிழ்க்கொள்கையையும் அரசியல் தளத்தில் தனித்தமிழ்நாடு கொள்கையையும் கொண்டவர் ஆவார். 1950களில் முதன்முதலில் வெளிவந்த இவரது தென்மொழி இதழ் தொடர்ச்சியாக இவ்விரு கொள்கைகளையும் தொடர்ந்து பரப்புரை செய்துவந்தார். தமிழர்கள் குல மத வேறுபாடுகளிலிருந்து வெளியேறித் தம்மைத்தமிழர்கள் என உணர்ந்து தமிழ்நாட்டினை தனிநாடாக ஆக்கிக்கொள்ளவேண்டும் என்பது இவரது கருதுகோள் ஆகும். தமிழக விடுதலை போலவே தமிழீழ விடுதலையையும் தொடர்ந்து ஆதரித்தும் பரப்புரை செய்தும் பெருஞ்சித்திரனார் செயற்பட்டார்.
பெருஞ்சித்திரனார் தனித்தமிழ் இயக்கத்தின் கொடிவழியில் வந்த அறிஞர் ஆவார். அவரது இதழ்கள், உரைவீச்சு ஆகியவை முழுக்கவும் தனித்தமிழிலேயே அமைந்திருந்தன. தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் தொடங்கிப் பாவாணர் ஈறாக தனித்தமிழ் அறிஞர்கள் அனைவரையும் ஏற்றுக்கொண்ட பெருஞ்சித்திரனார் அரசியல் சார்ந்து அவர்களிடமிருந்து வேறுபட்டு விளங்கினார். நேரடியாக மக்களிடம் தனித்தமிழ்க்கொள்கை வேர்கொள்ளவேண்டி அவர் கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டார். தமிழ்மரபில் சிவனிய (சைவ), மாலிய(வைணவ) சமய நெறிப்பட்ட தனித்தமிழ் அறிஞர்களின் மரபுகளிலிருந்து வேறுபட்டு மதம்சாரா (secular) தனித்தமிழ் அறிஞராக இருந்தார் என்பது இவரது தனித்தன்மையாகும். இவரது தனித்தமிழ்க்கொள்கை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களையே பெரும்பாலும் அடியொற்றி அமைந்துள்ளது. தேவநேயப் பாவாணரின் மாணவரான பெருஞ்சித்திரனார் அவரது பல்வேறு தூய தமிழ்ப்பணிகளுக்குத் துணையாய் நின்றார்.
பெருஞ்சித்திரனார் சாதியை வெறுக்கும் தமிழறிஞராக இறுதிவரை வாழ்ந்தார். அவரது சாதி எதிர்ப்புக் கருத்தியல் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் எளிய, அடித்தட்டு சாதியினரின்பால் மிகுந்த கரிசனம் கொண்டதாகவும் விளங்கியது. எம்மதங்களைத் தழுவினாலும் தமிழர் இனத்தால் தமிழரே என்பதை இவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சாதியை வைத்துத் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தும் போக்கை இவர் தொடர்ந்து கண்டித்து எழுதி வந்தார்.
" பள்ளென்போம்; பறையென்போம்;
நாட்டா ரென்போம்!
பழிதன்னை யெண்ணாமல் வண்ணா
ரென்போம்! பிள்ளையென்போம்; முதலியென்போம்; நாய்க்கர் என்போம்! பிழைநாணா தருந்ததியர், படையா
ளென்போம்! - எள்ளல்செய் திழிக்கின்றோம். தாழ்விக்
கின்றோம்!
எண்ணுங்கள், நமைத் தமிழர்
என்கின் றோமா? குள்ளமனப் பான்மையிது தொலையு மட்டும் கூசுங்கள் நாணுங்கள்தமிழ்நாட் டாரே!
சாதியை ஒழிப்பது குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்த பெருஞ்சித்திரனார் அந்தக் கருத்தியலைக் கொண்டிருந்தவர்களோடு இணக்கமான உறவையும் கொண்டிருந்தார்.
பாவலரேறு பெருஞ்சித்திரனார் தன் தொடக்க காலத்திலிருந்து தனித்தமிழ்நாட்டுக் கொள்கையைக் கொண்டிருந்தார். தமிழ்நாடு, இந்திய அரச கட்டமைப்பிலிருந்து விடுபட்டுத் தனிநாடாக உருவாகவேண்டும் என்பதைத் தென்மொழி முதல் இதழிலிருந்து வலியுறுத்திவந்தார். அதற்கான பரப்புரைகளை தன் எழுத்துகள் வழியாகவும் பேச்சுரை வாயிலாகவும் போராட்டங்கள் வாயிலாகவும் நிகழ்த்திவந்தார்.
அக்டோபர் - நவம்பர் 1974 தொடங்கி தென்மொழி-யின் ஒவ்வொரு இதழிலும் "கெஞ்சுவதில்லை" என்ற பாடலின் கீழ், ஆசிரியவுரைக்கு முன்னர் கீழ்க்காணும் செய்தி ஒரு நீள்சதுரக் கட்டத்திற்குள் இடம் பெற்றது. அவருக்குப் பின்னரும் தற்போதும் இடம் பெற்றுவருகிறது.
நம் மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி!
— இந்தியா ஒன்றாக இருக்கும்வரை இந்து மதம் இருக்கும். இந்து மதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப் பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களைவிட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களைவிட்டு விலகாதவரை, ஆரியப்பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது.. அத்தகைய பார்ப்பனீயப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாதவரை, தமிழ்மொழி தூய்மையுறாது; தமிழினம் தலை தூக்காது; தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே, இந்து மதத்தினின்றும், மதப் பூசல்களினின்றும், ஆரியப் பார்ப்பனீயத்தினின்றும் விடுபட வேண்டுமானால், நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும். ஆகவே, தமிழக விடுதலைதான் நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.
தமிழ்நாடு பொதுவுடமைக்கட்சி (மா. இலெ.) மற்றும் தமிழ்நாடு விடுதலைப்படை ஆகிய அமைப்புகளை உருவாக்கிச் செயல்பட்ட பொன்பரப்பி தமிழரசன், பெருஞ்சித்திரனாருடன் நெருங்கிய அரசியல் உறவு கொண்டிருந்தார். பெருஞ்சித்திரனார் வெளிப்படையாகவும் தமிழரசன் தலைமறைவாகவும் இருந்த காலத்திலும் அரசு ஒடுக்குமுறை மிகுந்திருந்த காலத்திலும் பெருஞ்சித்திரனார் தன் தனித்தமிழ்நாட்டுக்கொள்கையில் பின்வாங்காமல் தொடர்ந்து ஈடுபட்டார். பெருஞ்சித்திரனாரின் ஆதரவாளர்கள் தமிழரசனுக்கு நெருக்கமாகிச் செயல்பட பெருஞ்சித்திரனார் உதவினார். தமிழரசன் கூட்டிய கூட்டங்களிலும் கூட்டமைப்புகளிலும் பெருஞ்சித்திரனார் பங்கேற்றார்.
பெருஞ்சித்திரனார் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலை ஆதரவாளராக இயங்கிவந்தார். அ. அமிர்தலிங்கம், வேலுப்பிள்ளை பிரபாகரன், க. உமாமகேசுவரன் அனைவரையும் வரவேற்பவராகச் செயல்பட்டார். தொடக்கத்தில் அனைத்து இயக்கத்தவரையும் ஒரே வகையில் ஆதரித்த அவர், பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக இறுதிவரை இருந்தார். பிரபாகரனும் அவரது தோழர்களும் தமிழ்நாட்டுக்கு முதன்முறையாக வந்த காலத்தில் அவர்களைப் பாதுகாத்து வளர்த்தெடுத்தார்.
புலிகள் மீதான இந்திய அரசின் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டவுடன் இவர் கடுமையாக அதனை எதிர்த்துப் பரப்புரை செய்தார். அக்காலத்தில் இவர் எழுதிய
இதோ ஒருவன் நான் இங்கிருக்கின்றேன்
எனைச்சிறை செய்யினும் செய்க!
ஈழத்தமிழரை ஆதரிக்கின்றேன்
என் தலை கொய்யினும் கொய்க.
எனும் வரிகள் புகழ்பெற்றவையாகும்.
குருதி அழுத்தக் குறைவு, சிறுநீரகச் செயலிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெருஞ்சித்திரனார்,[5] தன் 63-ஆம் அகவையில் 11 சூன் 1995 அன்று காலை 7 மணியளவில் மதராசின் (தற்போது சென்னை) தியாகராய நகரில் காலமானார். அவரின் இறுதி ஊர்வலத்தில் 1,50,000 பேர் பங்கேற்றனர். அவர் உடல் மேடவாக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டது.[8]
25 ஏப்ரல் 1951 அன்று சேலத்தைச் சேர்ந்த செல்லம்மாள் -சின்னசாமி இணையரின் மகளான கமலத்தைத் திருமணம் செய்திருந்தார் பெருஞ்சித்திரனார்.[9] கமலம் பின்னாளில் "தாமரை" ஆனார். இவ்விணையருக்கு பொற்கொடி, பூங்குன்றன், தேன்மொழி, சித்திரச்செந்தாழை, பொழிலன், பிறைநுதல் ஆகிய பிள்ளைகள் பிறந்தனர்.
பெருஞ்சித்திரனாரின் மறைவுக்குப் பிறகு அவர் பணியைத் தாமரை அம்மையார் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். மேடவாக்கத்தில் பெருஞ்சித்திரனாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட முன்னோர் நிலத்தில் பாவலரேறு தமிழ்க்களம் என்ற நினைவகத்தை 2001-இல் தொடங்கி அதன் வழியே தமிழ்த் தொண்டாற்றி வந்தார். தென்மொழி ஏட்டையும் தொடர்ந்து நடத்தினார். இறுதியாக 7 திசம்பர் 2012 அன்று தன் 79-ஆம் அகவையில் காலமானார்.[10] பெருஞ்சித்திரனாருக்கு அருகிலேயே அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.[11]
பொற்கொடி, 1969-இல் புலவர் இறைக்குருவனைத் திருமணம் செய்தார். இவர்களுக்குத் தமிழ்ச்செம்மல் என்னும் மகனும் இசைமொழி[12][13], கயல்விழி (எ) அங்கயற்கண்ணி ஆகிய மகள்களும் பிறந்தனர். பொற்கொடி, 1991-இல் முதன்முதலாகத் திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளியை நிறுவினார்.[14] 23 நவம்பர் 2012 அன்று இறைக்குருவன் தன் 70-ஆம் அகவையில் காலமானார்.
அங்கயற்கண்ணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தில் இணைந்து 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
பேராசிரியரான பூங்குன்றன் (பி. 23 மே 1954), 1980-இல் செந்தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலி திட்டத்தில் மெய்ப்புத் திருத்துநராகத் தன் தமிழ்ப்பணியைத் தொடங்கினார்.[4] பெருஞ்சித்திரனாரின் மறைவுக்குப்பின் தென்மொழி இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். தமிழ்நாட்டு அரசின் தமிழ்- இந்திய-ஐரோப்பிய மொழிகள் வேர்ச்சொல் ஒப்பீட்டாய்வு அகராதித் திட்டத்தின் சிறப்புநிலைப் பதிப்பாசிரியராகவும் திருக்குறள் பேரவையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் செயலாற்றி வருகிறார். இவர் இணையரான கயற்கண்ணி (எ) காயத்திரி, 20 ஏப்ரல் 2021 அன்று காலை 8 மணியளவில் காலமானார்.
இவ்விணையருக்கு தமிழ்மொய்ம்பன், கதிர், நிறைமொழி ஆகிய மகன்கள் உள்ளனர்.
பெண்ணியச் செயற்பாட்டாளரான தேன்மொழி, 1980-இல் சொல்லாய்வறிஞர் ப. அருளியைத் திருமணம் செய்தார். இவ்விணையருக்கு அறிவன், தெள்ளியன் ஆகிய மகன்கள் பிறந்தனர். 2011-இல் தழல் என்ற இதழை நிறுவி அதன் பொறுப்பாசிரியராகச் செயல்பட்டார் தேன்மொழி. இறுதியாக 14 செப்டம்பர் 2020 அன்று காலை 4 மணியளவில் புதுச்சேரி திலாசுப்பேட்டையில் காலமானார்.[15]
வரலாற்றறிஞர் ஆன தெள்ளியன், தழல் இதழின் பதிப்பாசிரியராகவும் உள்ளார்.
மொழிபெயர்ப்பாளரான சித்திரச்செந்தாழை, 1983-இல் தமிழறிஞர் ஆறிறைவனைத் திருமணம் செய்தார்.[16] தற்போது ஐக்கிய அமெரிக்க மாநிலமான அரிசோனாவில் வாழ்கிறார்.[17][18] இவ்விணையருக்கு யாழிசை என்ற மகள் உள்ளார்.[8]
ஆங்கிலப் பேராசிரியரான பொழிலன் (பிற. 23 ஆகத்து அண். 1961), தமிழரசனின் படையுடன் 1986-88 காலகட்டத்தில் இணைந்து செயல்பட்டவர். கொடைக்கானல் தொலைக்காட்சிக் கோபுர குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, 1987-இல் சிறைப்பட்டார். பின்னாட்களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டமைக்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பத்தாண்டுகள் சிறையில் இருந்தபின் 25 அக்டோபர் 2013 அன்று விடுதலையானார்.[19] உசாவல், தண்டனை என மொத்தம் 14 முறை சிறைசென்றுள்ளார்.[20] தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் அமைப்பாளராகவும்[21] பெருஞ்சித்திரனார் தொடங்கிய தமிழ்நிலம் இதழின் ஆசிரியராகவும்[22] உள்ளார்.
பிறைநுதல் (பிற.அண். 1964), முனைவர் கி. குணத்தொகையனை[23] (பி.1954)[8] 1989-இல் திருமணம் செய்தார்.
குணத்தொகையன், திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் (SRM) உள்ள தமிழ்ப்பேராயத்தின் பதிப்பாசிரியராக 2005 முதல் 2018 வரை பணியாற்றினார்.[8] தற்போது தமிழ்நாட்டுக் கல்வி இயக்கத்தின் நெறியாளர்களுள் ஒருவராகவும் [8] பாவலரேறு பைந்தமிழ் பதிப்பகத்தின் இயக்குநராகவும் மாணவர்களம் திங்களிதழின் ஆசிரியராகவும் உள்ளார். இவ்விணையர், பாவலரேறு தமிழ் மன்றம் என்ற அமைப்பின் வழியே பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் தமிழறிவு, பொது அறிவு, அறிவியல் அறிவு ஆகியவற்றை வளர்க்கும் போட்டிகளை நடத்தியுள்ளனர். பொழிலனுடன் இணைந்து 1991 முதல் திருவல்லிக்கேணியில் "பஃறுளி பதிப்பகம்" நடத்தி வருகின்றனர்.[17][8]
இவர்களுக்கு சுடரொளி என்ற மகனும் ஏந்திழை என்ற மகளும்[8] உள்ளனர்.
பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஆன மேதகு 2 -வில் (2022) பெருஞ்சித்திரனாரின் பாத்திரம் ஒரு காட்சியில், பிரபாகரனையும் பிற போராளித் தலைவர்களையும் தன் இல்லத்தில் வரவேற்று ஒரு பாவியத்தைப் படித்துக் காட்டுவதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[24]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.