பெட்டாலிங் ஜெயா
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பெட்டாலிங் ஜெயா, (மலாய்: Petaling Jaya (PJ); ஆங்கிலம்: Petaling Jaya; சீனம்: 八打灵再也; ஜாவி: ڤتاليڠ جاي ); என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள மாநகரம். மலேசியாவில் மிகப் பெரிய நகரங்களில் பெட்டாலிங் ஜெயாவும் ஒரு நகரமாகும்.[3]
பெட்டாலிங் ஜெயா Petaling Jaya | |
---|---|
சின்னம் | |
குறிக்கோளுரை: நட்பான, உகந்த, துல்லியமான Friendly, Fast and Precise | |
ஆள்கூறுகள்: 03°05′50″N 101°38′40″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சிலாங்கூர் |
மாவட்டம் | பெட்டாலிங் மாவட்டம் |
மாநகராட்சி | பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி |
நகராட்சி | 1 சனவரி 1977 |
மாநகர்த் தகுதி | 20 சூன் 2006 |
அரசு | |
• வகை | உள்ளாட்சி |
• நிர்வாகம் | பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி |
• மாநகர முதல்வர் | முகமட் அசான் அமீர் Mohamad Azhan Md. Amir 21 அக்டோபர் 2021 |
• நகரத் துணை முதல்வர் | அசுலிண்டா அசுமான் Azlinda Azman 24 சனவரி 2020[1] |
பரப்பளவு | |
• மொத்தம் | 97.2 km2 (37.5 sq mi) |
மக்கள்தொகை (2020 [2]) | |
• மொத்தம் | 9,02,086 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 46xxx, 473xx, 474xx, 478xx, 52xxx |
மலேசியத் தொலைபேசி எண் | +603-56, +603-61, +603-62, +603-7 |
இணையதளம் | www |
தொடக்கக் காலத்தில் இந்த நகரம் மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூருக்கு ஒரு துணை நகரமாக (Satellite Town) உருவாக்கப்பட்டது. காலப் போக்கில் இரு நகரங்களும் இரு பெரும் மாநகரங்களாக வளர்ச்சி அடைந்தன. வியக்கத்தக்க மாற்றங்களைக் கண்டன. இருப்பினும் இந்தப் பெட்டாலிங் ஜெயா நகரம் இன்றும் பெரும் கோலாலம்பூர் (Greater Kuala Lumpur) பகுதியின் ஒரு பகுதியாகவே கருதப் படுகிறது.[4]
பெட்டாலிங் ஜெயாவின் கிழக்குப் பகுதியில் கோலாலம்பூர்; வடக்குப் பகுதியில் சுங்கை பூலோ (Sungai Buloh); மேற்குப் பகுதியில் சிலாங்கூரின் தலைநகரமான சா ஆலாம் (Shah Alam) மற்றும் சுபாங் ஜெயா (Subang Jaya); தெற்குப் பகுதியில் கின்ராரா (Bandar Kinrara), பூச்சோங் (Puchong) ஆகிய பெரும் நகர்ப் பகுதிகள் உள்ளன.
இந்த மாநகரத்தின் பரப்பளவு 97.2 சதுர கி.மீ. 2020-ஆம் ஆண்டின் மக்கள்தொகை புள்ளிவிவரங்களின்படி இங்கு 902,086 பேர் வசிக்கின்றனர். பெட்டாலிங் ஜெயா நகருக்கு 2006 சூன் 20-ஆம் தேதி மாநகர்த் தகுதி (City Status) வழங்கப்பட்டது.
1950-ஆம் ஆண்டுகளில், பிரித்தானிய மலாயாவின் காலத்தில், தலைநகர் கோலாலம்பூரின் மக்கள்தொகை பெருக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக, கிள்ளான் பழைய சாலைப் பகுதியில் (Old Klang Road) இருந்த எப்பிங்காம் ரப்பர் தோட்டத்தில் (Effingham Estate) 1,200 ஏக்கர் (486 எக்டர்) பரப்பளவில், பெட்டாலிங் ஜெயா நகரம் உருவாக்கப்பட்டது.[5]
பெட்டாலிங் ஜெயா நகரத் திட்டத்தை உருவாக்கியவர் பிரான்சிஸ் மெக்வில்லியம்ஸ் (Francis McWilliams) எனும் பிரித்தானியர் ஆகும்.[6]
1952-ஆம் ஆண்டில் இருந்து, பெட்டாலிங் ஜெயாவின் மக்கள்தொகை பெரும் வளர்ச்சியைக் கண்டது. பெட்டாலிங் ஜெயாவின் வளர்ச்சி "பழைய நகரம்" என்று அழைக்கப்படும் பழைய பெட்டாலிங் ஜெயா பழைய நகரம் (Old Town, Petaling Jaya) பகுதியை மையமாகக் கொண்டு 800 வீடுகளின் கட்டுமானத்துடன் தொடங்கியது.
1950-களில் மலாயாவின் பிரித்தானிய உயர் ஆணையராகவும்; பெட்டாலிங் மாவட்ட மன்றத்தின் தலைவராகவும் இருந்த சர் ஜெரால்டு டெம்பிளர் (Sir Gerald Templer); பெட்டாலிங் ஜெயா நகரத்தை உருவாக்க திட்டமிட்டார். அந்தக் கட்டத்தில் மலாயா அவசரகால நிலைமையில் இருந்தது.[5]
பொதுமக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு உதவுவதைத் தடுக்க அவர் ஒரு துணை நகரத்தை (Satellite Town) உருவாக்க விரும்பினார். அந்த வகையில் சில புதுக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. அந்தக் கிராமக் குடியிருப்பு பகுதிகள் முழுமையும் முள் வேலிகளால் பாதுகாக்கப்பட்டன.
பெட்டாலிங் ஜெயாவில் உருவாக்கப்பட்ட முதல் இரண்டு முக்கிய சாலைகள்:
மலாய் மொழியில் Jalan (ஜாலான்) என்றால் சாலை என்று பொருள்படும். பின்னர்க் காலத்தில் அந்தச் சாலைகள் பெயர் மாற்றம் கண்டன.
சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் (முதல்வர்) ஒசுமான் முகமது (Othman Mohamad) அவர்களின் நினைவாக ஜாலான் ஒசுமான் என பெயர் வைக்கப்பட்டது.[7]
1953-ஆம் ஆண்டின் இறுதி வரையில், பெட்டாலிங் ஜெயா நகரம், கோலாலம்பூர் மாவட்ட அதிகாரியால் நிர்வாகம் செய்யப்பட்டது. பின்னர் 1954-இல், பெட்டாலிங் ஜெயா நகர ஆணையம் (Petaling Jaya Town Authority) உருவாக்கப்பட்டு, என்.ஏ.ஜே. கென்னடி (N.A.J. Kennedy) என்பவர் பெட்டாலிங் ஜெயாவை நிர்வாகம் செய்தார்.
ஆகஸ்ட் 24, 1959-இல், அப்துல் அசீசு முகமது அலி (Abdul Aziz Mohd Ali) என்பவர் பெட்டாலிங் ஜெயா நகர ஆணையத்தின் தலைவராகப் பதவியேற்றார். இவர்தான் அந்தப் பொறுப்புக்கு முதல் உள்நாட்டு மலாயர் ஆவார்.
நிர்வாக ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் பெட்டாலிங் ஜெயா நகரம், கோலாலம்பூரின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டு வந்தது. இருப்பினும், 1974 பிப்ரவரி 1-ஆம் தேதி கோலாலம்பூர் மாநகரம் ஒரு கூட்டாட்சிப் பிரதேசமாக (Federal Territory) மாறிய போது, பெட்டாலிங் ஜெயா தனித்துப் போனது. பின்னர் அது சிலாங்கூர் மாநிலத்திற்குள் ஒரு நகரமாக மாறியது.
பெட்டாலிங் ஜெயாவில் ஒரு சில பகுதிகளின் வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்கியது பெட்டாலிங் கார்டன் (Petaling Garden Berhad) எனும் ஒரு தனியார் மேம்பாட்டு நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1957-இல் ஒரு மலேசியச் சீன வணிகர்க் குழுவால் தொடங்கப்பட்டது.
இந்த நிறுவனம் பெட்டாலிங் ஜெயாவில் குறிப்பாக; பிரிவு 5 (Section 5), பிரிவு 6 (Section 6), மற்றும் பிரிவு 7 (Section 7) போன்ற வீட்டுமனைப் பகுதிகளில், ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை வீட்டுமனைத் திட்டங்களாக மாற்றியது.
அதே வேளையில், தாமான் பெட்டாலிங் கிளாங் (Taman Petaling Klang); ஸ்ரீ பெட்டாலிங் (Sri Petaling) போன்ற வீட்டுமனைத் திட்டங்கள் நகரங்களாக மாறியதற்கும் அந்த நிறுவனமே மூலகாரணம் ஆகும்.[8]
அதன் பின்னர் பெட்டாலிங் கார்டன் நிறுவனம், கோலாலம்பூர் பங்குச் சந்தைக்கு (Kuala Lumpur Stock Exchange) கொண்டு வரப்பட்டது. அந்த நிகழ்வு பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே வேளையில், அந்த நிறுவனம் மலேசியாவில் பட்டியலிடப்பட்ட சொத்து மேம்பாட்டு நிறுவனங்களில் முதலாவது இடத்தையும் பிடித்தது.
2007-ஆம் ஆண்டு, பெட்டாலிங் கார்டன் நிறுவனத்தை பெர்மோடாலான் நேசனல் (Permodalan Nasional) எனும் அரசுசார் நிறுவனம் வாங்கிக் கொண்டது. அப்போது அதன் மதிப்பு RM 964 மில்லியனாக இருந்தது.[9]
தெற்கு பெட்டாலிங் ஜெயா (Southern Petaling Jaya), பிரிவு 8 (Section 8) முதல் பெட்டாலிங் ஜெயா பழைய நகரம் (PJ Old Town) வரையிலான பகுதிகள், 1953 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட முதல் குடியேற்றங்களைக் கொண்டிருந்தன. பெட்டாலிங் ஜெயாவின் விரைவான வளர்ச்சியின் காரணமாக, கோலாலம்பூர் கிள்ளான் நெடுஞ்சாலைக்கு (Federal Highway) மறுபுறம் வடக்கு பெட்டாலிங் ஜெயா (Northern Petaling Jaya) எனும் புதிய பகுதி உருவாக்கப்பட்டது.
பெட்டாலிங் ஜெயாவின் முதல் வணிக வளாகமான ஜெயா பேரங்காடி (Jaya Supermarket) 1974-ஆம் ஆண்டில், வடக்கு பெட்டாலிங் ஜெயா பிரிவு 14 (Section 14)-இல் கட்டப்பட்டது.
மலேசியாவின் 1976 உள்ளாட்சி சட்டம் (Local Government Act 1976) சனவரி 1, 1977-இல், அமலுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, பெட்டாலிங் ஜெயா உள்ளாட்சி (Petaling Jaya Town Authority) என்பது பெட்டாலிங் ஜெயா நகராட்சியாக (Petaling Jaya Municipal Council) மாறியது.
பாரிய கிராமப்புற நகர்ப்புற இடம்பெயர்வு காரணமாக பெட்டாலிங் ஜெயா வேகமாக முன்னேறியது. கிராமப் புறங்களில் இருந்து அதிகமான மக்கள் பெட்டாலிங் ஜெயாவில் குடியேறினார்கள். அதனால் சுங்கைவே, சுபாங் மாவட்டம், சுபாங் ஜெயா, செக்சன் 52 புதிய நகரம் (Seksyen 52 - New Town) போன்ற நகர்ப் புறங்கள் மிகத் துரிதமான வளர்ச்சிகளைக் கண்டன.
1997 சனவரி மாதம் பெட்டாலிங் ஜெயாவின் எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, பெட்டாலிங் ஜெயாவில் முன்பு இருந்த சுபாங் ஜெயா, யூ.எஸ்.ஜே (UEP Subang Jaya - USJ), புத்ரா அயிட்ஸ் (Putra Heights) மற்றும் பண்டார் சன்வே (Bandar Sunway) ஆகிய பகுதிகள் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட சுபாங் ஜெயா மாநகராட்சியில் (Subang Jaya City Council) இணைக்கப்பட்டன.
அதற்கு ஈடாக, பெட்டாலிங் ஜெயாவிற்கு பெட்டாலிங் நகராட்சியில் (Petaling District Council - MPPJ) இருந்து பண்டார் உத்தாமா டாமன்சாரா (Bandar Utama Damansara), சுங்கை பூலோ, புக்கிட் லாஞ்சான் (Bukit Lanjan), கோத்தா டாமன்சாரா (Kota Damansara) ஆகிய பகுதிகள் வழங்கப்பட்டன. இந்த எல்லைச் சீரமைப்பிற்குப் பின்னர் பெட்டாலிங் நகராட்சி (MPPJ) பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டது.
மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூருக்கு அருகாமையில் பெட்டாலிங் ஜெயா இருந்ததால்; நடுவண் அரசின் பல மத்திய அரசு துறைகளுக்குப் பெட்டாலிங் ஜெயா தலைமையகமாகவும் விளங்கியது.
தேசியப் பதிவுத் துறை (National Registration Department) (1958 - 2004); மலேசிய தேசிய ஆவணக் காப்பகத் துறை (Malaysian National Archive Department) (1961 - 1982) போன்ற மத்திய அரசு துறைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அவற்றில் மலேசிய வேதியியல் துறை (Malaysian Chemistry Department) (1957) மட்டுமே இன்னும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ளது.
பெட்டாலிங் ஜெயா அதிகமான ஈரத்தன்மை கொண்ட நகரங்களில் ஒன்றாகும். இங்கு சராசரியாக 30 பாகை செல்சியஸ் வெப்பமாக இருக்கும். ஆண்டு முழுவதும் அதிக மழையைப் பெறுகிறது. சராசரி மழைப்பொழிவை விட தோராயமாக 3,300 mm (130 அங்) அதிகமாகும்.
இந்த நகரத்திற்கு குறிப்பிட்ட வறண்ட காலம் எதுவும் இல்லை. ஆனாலும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் வறட்சியான மாதங்கள் ஆகும். பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் மழைப்பொழிவு 200 mm (7.9 அங்)-க்கு மேல் இருக்கும். இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழை பொதுவானது. உலகின் மிக அதிக மின்னல் தாக்கும் பகுதிகளில் ஒன்றாகும்.
உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள் காரணமாக, பெட்டாலிங் ஜெயாவும் அண்மைய காலங்களில் கடுமையான வறட்சியை அனுபவித்து வருகிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், பெட்டாலிங் ஜெயா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 32.5 (90.5) |
33.3 (91.9) |
33.5 (92.3) |
33.5 (92.3) |
33.4 (92.1) |
33.1 (91.6) |
32.6 (90.7) |
32.7 (90.9) |
32.5 (90.5) |
32.5 (90.5) |
32.1 (89.8) |
31.9 (89.4) |
32.8 (91) |
தாழ் சராசரி °C (°F) | 23.1 (73.6) |
23.5 (74.3) |
23.8 (74.8) |
24.2 (75.6) |
24.4 (75.9) |
24.2 (75.6) |
23.7 (74.7) |
23.7 (74.7) |
23.7 (74.7) |
23.7 (74.7) |
23.6 (74.5) |
23.4 (74.1) |
23.8 (74.8) |
மழைப்பொழிவுmm (inches) | 189.8 (7.472) |
210.1 (8.272) |
273.5 (10.768) |
298.9 (11.768) |
243.1 (9.571) |
128.7 (5.067) |
141.1 (5.555) |
168.9 (6.65) |
198.1 (7.799) |
280.1 (11.028) |
330.3 (13.004) |
261.2 (10.283) |
2,723.8 (107.236) |
சராசரி மழை நாட்கள் (≥ 1.0 mm) | 11 | 12 | 16 | 16 | 14 | 9 | 10 | 11 | 13 | 17 | 18 | 15 | 162 |
ஆதாரம்: உலக வானிலையியல் அமைப்பு[10] |
பெட்டாலிங் ஜெயா மாநகரம் எண்கள் இடப்பட்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. செக்சன் (Section) என்றும் அழைக்கப்படுகிறது.[11]
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Petaling Jaya; ஆங்கிலம்: Petaling Jaya City Councill); (சுருக்கம்: MBPJ); பெட்டாலிங் ஜெயா மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும்.[12]
2006 சூன் 20-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி நிறுவப்பட்டது. இந்த மாநகராட்சியின் தலைமையகம், பெட்டாலிங் ஜெயா மாநகரத்தில் உள்ளது. இதன் அதிகார வரம்பு 97 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது.
2017-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியில் 2,335 பேர் பணிபுரிந்தார்கள். இந்த மாநகராட்சியின் 2017-ஆம் ஆண்டு வரவு செலவு MYR 479,488,450 (ஏறக்குறைய 480 மில்லியன் ரிங்கிட்).[13]
2006 சூன் 26-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவுக்கு மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதில் இருந்து ஆறு மாநகரத் தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது மாநகரத் தலைவராக முகமட் அசான் அமீர் (Mohamad Azhan Md. Amir) உள்ளார். இவர் 21 அக்டோபர் 2021 முதல் பதவியில் உள்ளார்.
பெட்டாலிங் ஜெயாவில் வசிப்பவர்களுக்கு பாக்காத்தான் ஹரப்பான் (Pakatan Harapan) கூட்டணியைச் சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேவை செய்து வருகின்றனர்.
டாமன்சாரா - டோனி புவா (Tony Pua); ஜ.செ.க
பெட்டாலிங் ஜெயா - மரியா சின் அப்துல்லா (Maria Chin Abdullah); பி.கே.ஆர்.
சுங்கை பூலோ - சிவராசா ராசையா (Sivarasa Rasiah); பி.கே.ஆர்.
சுபாங் - வோங் சென் (Wong Chen); பி.கே.ஆர்.
பெட்டாலிங் ஜெயா அரங்கம் (Petaling Jaya Stadium) என்று அழைக்கப்படும் பல்நோக்கு அரங்கம் பெட்டாலிங் ஜெயாவில் உள்ளது. ஒரு முழு வசதியுடன் கூடிய இந்தப் பெட்டாலிங் ஜெயா அரங்கம்; 25,000 பேர் அமரும் வசதி கொண்டது.
மலேசியக் கால்பந்து சங்கத்தின் (Football Association of Malaysia) தலைமையகம் பெட்டாலிங் ஜெயாவில் தான் அமைந்துள்ளது.[14]
பெட்டாலிங் ஜெயாவில் 25-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவையாவன:
மலேசியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் பெட்டாலிங் ஜெயாவில் 58 தொடக்கப் பள்ளிகளும்; 28 உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளன.[15]
மலேசியாவின் முதல் தனியார் செவிலியர் கல்லூரி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அசுந்தா மருத்துவமனையில் (Assunta Hospital) உள்ளது. துன் டான் செங் லாக் செவிலியர் கல்லூரி (Tun Tan Cheng Lock College of Nursing) எனும் பெயர் கொண்ட அந்தக் கல்லூரி 1961-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
பெட்டாலிங் ஜெயாவில் போக்குவரத்து வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் நல்ல நிலையில் நன்கு வளர்ச்சி பெற்று உள்ளன. 1950-ஆம் ஆண்டுகள் தொடங்கி; 1990-ஆம் ஆண்டுகளின் முற்பகுதி வரையில் ஸ்ரீ ஜெயா (Sri Jaya) பேருந்து சேவைகள் வழங்கப்பட்டன.
நாற்பது ஆண்டு காலம் தன்னிகரற்ற சேவையாக இந்தப் பேருந்து சேவை நடைபெற்றது. பெட்டாலிங் ஜெயா வரலாற்றில் ஸ்ரீ ஜெயா பேருந்து சேவை, மறக்க இயலாதச் சுவடுகளைப் பதித்துச் செல்கிறது.
1990-களின் பிற்பகுதியில் இந்திரா கோத்தா (IntraKota) பேருந்து சேவை அறிமுகப் படுத்தப்பட்டது. இந்தச் சேவை ஸ்ரீ ஜெயா பேருந்து சேவை மற்றும் மினி பேருந்து சேவைகளுக்குப் பதிலாக கொண்டு வரப்பட்டது. அதே காலக் கட்டத்தில், பெட்டாலிங் ஜெயா - கோலாலம்பூர் பேருந்து வழித்தடங்கள் மெட்ரோபஸ் (Metrobus) மூலமாகவும் சேவை செய்யப்பட்டன.
இப்போது உள்ள பி.ஜே. சிட்டி பஸ் (PJ City Bus) சேவை; பெட்டாலிங் ஜெயா மாநகராட்சியால் இயக்கப் படுகிறது. இந்தச் சேவை பண்டார் உத்தாமா (Bandar Utama), டாமன்சரா டாமாய் (Damansara Damai) மற்றும் பெட்டாலிங் ஜெயா பழைய நகரம் (PJ Old Town) ஆகிய இடங்களில் 6 வழித் தடங்களை வழங்குகிறது.
கிளானா ஜெயா தொடருந்து சேவை (Kelana Jaya Line) எனும் கிளானா ஜெயா எளிய விரைவு தொடருந்து சேவை (PUTRA LRT) 1988-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
2006-இல், ரேபிட் கேஎல் (RapidKL) அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றைய நிலையில், பொது போக்குவரத்தை ரேபிட் கேஎல் (RapidKL) மற்றும் கோலாலம்பூர் எளிய விரைவு போக்குவரத்து சேவை (KL Light Rapid Transit System) எனும் கிளானா ஜெயா தொடருந்து சேவை (Kelana Jaya Line) வழங்குகிறது. இந்தச் சேவையில் பெட்டாலிங் ஜெயாவில் ஏழு தொடருந்து நிலையங்கள் உள்ளன.
2017-இல், புதிதாக உருவாக்கப்பட்ட எம்.ஆர்.டி. சுங்கை பூலோ - காஜாங் சேவை (MRT Sungai Buloh - Kajang Line), பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி பகுதியின் வடக்குப் பகுதி வழியாக, முத்தியாரா டாமன்சாரா (Mutiara Damansar), கோத்தா டாமன்சாரா (Kota Damansara) மற்றும் பண்டார் உத்தாமா ஆகிய நகர்ப்புறங்களைக் கடந்து செல்கிறது.
தேசிய நெடுஞ்சாலைகளுக்குச் செல்ல பெட்டாலிங் ஜெயாவில் மூன்று அணுகல் இடங்கள் உள்ளன. வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (North–South Expressway) வழியாக கோத்தா டாமன்சாரா, டாமன்சாரா, சுபாங் ஆகிய இடங்களை அடையலாம்
பெட்டாலிங் ஜெயாவின் மேற்கில் அமைந்துள்ள சுபாங் விமான நிலையம் (Sultan Abdul Aziz Shah Airport) பெட்டாலிங் ஜெயாவிற்கு வானூர்திச் சேவைகளை வழங்கி வருகிறது.
பெட்டாலிங் ஜெயாவிற்கு தற்போது நான்கு சகோதரி நகரங்கள் உள்ளன:
பெட்டாலிங் ஜெயாவில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1209 மாணவர்கள் பயில்கிறார்கள். 94 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[16]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|
BBD8452 | பண்டார் உத்தாமா | SJK(T) Ldg Effingham[17] | எப்பிங்காம் தமிழ்ப்பள்ளி | பெட்டாலிங் ஜெயா | 305 | 28 |
BBD8458 | பெட்டாலிங் ஜெயா | SJK(T) Vivekananda Petaling Jaya | விவேகானந்தா தமிழ்ப்பள்ளி (பெட்டாலிங் ஜெயா) | பெட்டாலிங் ஜெயா | 577 | 44 |
BBD8467 | பண்டார் சன்வே | SJK(T) Seaport | சீபோர்ட் தமிழ்ப்பள்ளி | பெட்டாலிங் ஜெயா | 327 | 22 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.