பிரேசர் மலை
From Wikipedia, the free encyclopedia
பிரேசர் மலை (மலாய் மொழி: Bukit Fraser; ஆங்கிலம்: Fraser's Hill) என்பது ஓர் உல்லாசப் பொழுதுபோக்கு இடமாகும். மலேசியா, பகாங் மாநிலத்தின் தித்திவாங்சா மலைத் தொடரில் இது அமைந்துள்ளது. இங்கு குளிர்மையான தட்ப வெட்ப நிலை நிலவுகிறது. மலேசியாவின் மலைகளில் இளவரசியாக விளங்கும் கோடை வாசத்தலம் பிரேசர் மலை ஆகும். கோலாலம்பூர் மாநகரில் இருந்து 103 கி.மீ. தொலைவில் கோலா குபு பாரு பட்டணத்திற்கு அருகாமையில் உள்ளது.[1] பிரேசர் மலையைச் சுற்றிலும் ஏழு மலை உச்சிகள் உள்ளன.
பிரேசர் மலை Fraser's Hill | |
---|---|
பிரேசர் மலை மணிக்கூண்டு | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,524 m (5,000 அடி) |
ஆள்கூறு | 3°42′34.00″N 101°44′0.00″E |
புவியியல் | |
அமைவிடம் | தீபகற்ப மலேசியா |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | லூயிஸ் ஜேம்ஸ் பிரேசர் |
எளிய வழி | கோலா குபு பாருவில் இருந்து ரவுப் நகருக்குச் செல்லும் வழி |
இந்த இடம் ஒரு மாசற்ற, தூய்மையான காட்டுப் பகுதி ஆகும். லூயிஸ் ஜேம்ஸ் பிரேசர் (Louis James Fraser) எனும் ஸ்காட்லாந்துகாரர் 1890-ஆம் ஆண்டுகளில் இந்த இடத்தைக் கண்டுபிடித்தார்.[2]
பிரித்தானியர்கள் மலாயாவை ஆட்சி செய்த போது, கோடை கால வெப்பத்தைத் தவிர்க்க இங்கு வந்துதங்கினர். நாளடைவில் இந்த இடம் ஓர் உல்லாச மையமாக மாறியது. 1951-ஆம் ஆண்டு மலாயா அவசரகாலத்தின் போது, சர் ஹென்றி கர்னி எனும் மலாயா உயர் ஆணையர், கம்யூனிஸ்டு பயங்கரவாதிகளால் இங்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.[3]
1970-ஆம் ஆண்டுகளில் பல குழிப்பந்தாட்டத் திடல்கள் உருவாக்கப்பட்டன. புதுக் கட்டடங்கள் கட்டப்பட்டன. பிரேசர் மலையின் இயற்கை அழகு சிதையத் தொடங்கியது. இதை அறிந்த பகாங் மாநில அரசு, 2010-ஆம் ஆண்டில் இருந்து பிரேசர் மலையில், எந்த ஒரு நிலையான கட்டடத்தையும் எழுப்பக் கூடாது என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தது.[4]