இந்தியாவின் முன்னாள் மாநிலம் From Wikipedia, the free encyclopedia
சம்மு காசுமீர் (ஆங்கிலம்: Jammu and Kashmir, டோக்ரி: جموں او کشمیر, ) இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள இயூனியன் பிரதேசம் ஒன்றாகும். லடாக் தவிர்த்த இதன் பெரும்பகுதிகள் இமயமலையின் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் அமைந்துள்ளது. சம்மு காசுமீர் மாநிலம் லடாக்கையும் சம்முவையும் காசுமீர் பகுதியையும் உள்ளடக்கிய மாநிலமாக அக்டோபர், 2019 ஆண்டு முடிய விளங்கியது.
சம்மு காசுமீர் மாநிலம்
جموں و کشمیر | |
---|---|
இந்தியாவில் அமைவிடம் | |
சம்மு காசுமீரின் வரைபடம் | |
நாடு | இந்தியா |
பகுதி | வட இந்தியா |
இந்தியாவுடன் இணைவு | 26 அக்டோபர் 1947 |
தலைநகர் | |
பெரிய நகரம் | சிறீநகர் |
மாவட்டம் | 22 |
அரசு | |
• ஆளுநர் | சத்யபால் மாலிக் (கடைசி நபர்) |
• முதலமைச்சர் | காலி |
• துணை முதலமைச்சர் | காலி |
• சட்டமன்றம் | ஓரவை (87 தொகுதிகள்) |
• மக்களவை | மாநிலங்களவை 4 மக்களவை (இந்தியா) 6 |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,22,236 km2 (85,806 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 14-ஆவது |
ஏற்றம் | 327 m (1,073 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,25,41,302 |
• தரவரிசை | 19-ஆவது |
• அடர்த்தி | 56/km2 (150/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-JK |
ம.மே.சு. | 0.601 (medium) |
HDI rank | 17-ஆவது (2005) |
படிப்பறிவு | 66.7% (21st) |
ஆட்சி மொழி(கள்) | உருது, ஆங்கிலம்[1] |
இணையதளம் | jk |
சம்மு காசுமீர் மாநிலம், வடக்கிலும் கிழக்கிலும் சீனாவை எல்லையாகவும், தெற்கில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களை எல்லையாகவும், வடக்கிலும், மேற்கிலும் பாக்கித்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காசுமீர் மற்றும் வடக்கு நிலங்கள் பகுதியை எல்லையாகவும் கொண்டுள்ளது. சம்மு, காசுமீர், லடாக் ஆகியவை இதன் மூன்று பெரும் பிரிவுகள். சம்மு பகுதியில் இந்து மதத்தினரும், காசுமீர் பகுதியில் இசுலாமியரும், பெருபான்மையினராக உள்ளனர். இலடாக்கில் பௌத்தர்களும் இஸ்லாமியரும் ஏறத்தாழ சம எண்ணிக்கையில் உள்ளனர். இயற்கை அழகு நிறைந்த மலைகள் இம்மாநிலத்தில் உள்ளது. முன்பு ஒரே நிலப்பகுதியாக ஆளப்பட்டு வந்த இந்தியா காசுமீர் மாநிலத்தின் சில பகுதிகள் குறித்து பாக்கித்தானுடன் காசுமீர் பிரச்சினை, சியாச்சின் பிணக்கு மற்றும் சீனாவுடன் அக்சாய் சின் பிணக்குகள் கொண்டுள்ளது. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காசுமீர் பகுதி சம்மு காசுமீர் என்ற பெயரில் மாநிலமாக ஆளப்படுகிறது. இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைப் பாக்கிஸ்தான் நாட்டவரும், சீன நாட்டவரும் ” இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர்” என்றே குறிப்பிடுகின்றனர்.[2] ஐக்கிய நாடுகள் போன்ற பன்னாட்டு அமைப்புகள் இதனை “இந்தியாவால் நிருவகிக்கப்படும் காசுமீர்” என்று அழைக்கின்றன.[3]
சம்மு காசுமீர் மாநிலத்தைப் புவியியல் அடிப்படையில் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்: சம்மு, காசுமீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக். கோடைகாலத்தில் சிரீநகர் தலைநகராகவும், குளிர்காலத்தில் சம்மு நகர் தலைநகராகவும் செயல்படுகிறது. மிக அழகான மலைப்பாங்கான நில அமைப்பையும், ஏரிகளையும் கொண்ட காசுமீர் பள்ளத்தாக்கு, புவியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. சம்மு பகுதியில் உள்ள எண்ணற்ற கோவில்களும், மசூதிகளும் ஆயிரக்கணக்கான இந்து மற்றும் இசுலாமிய சமய புனிதப் பயணிகளை ஈர்க்கின்றன. லடாக் பகுதி தொலைதூர மலை அழகையும், நீண்ட பெளத்த கலாச்சாரத்தையும் கொண்டு இருப்பதால் "குட்டி திபெத்" என்று அழைக்கப்படுகிறது.
ஆகத்து 2019-இல் கொண்டு வரப்பட்ட 2019 சம்மு காசுமீர் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் லடாக்கும், சம்முவும் காசுமீரும் தனித்தனி ஒன்றியப் பகுதிகளாக மாற்றப்பட்டன.
சம்மு மற்றும் காசுமீர் பகுதியை முதன்முறையாக மொகலாய பேரரசர் அக்பர் 1586 ஆம் ஆண்டில், தமது படைத்தலைவர்களான பகவன் தாஸ், முதலாம் இராமசந்திரா ஆகியோரை கொண்டு வென்றார். மொகலாய படை காசுமீர் பகுதியை ஆண்டு வந்த துருக்கிய ஆட்சியாளரான யூசூப் கான் படையை வென்றது. இப்போருக்கு பின், அக்பர் முதலாம் LPஇராமசந்திராவை ஆளுநராக நியமித்தார். முதலாம் இராமசந்திரா, அப்பகுதியில் கோயில் கொண்ட இந்து தேவதையான ஜம்வா மாதாவின் பெயரில் ஜம்மு நகரை நிறுவினார்.
1780 ஆம் ஆண்டு, முதலாம் ராமச்சந்திராவின் வழித்தோன்றலான ரஞ்சித் தியோவின் மறைவுக்கு பின், சம்மு காசுமீர் பகுதி சீக்கியரால், ரஞ்சித் சிங் என்பவரால் பிடிக்கப்பட்டது. அதன்பின் 1846 வரை சீக்கிய ஆதிக்கத்திலிருந்து வந்தது.[4] ரஞ்சித் தியோவின் கிளையில் தோன்றிய குலாப் சிங் சீக்கிய அரசரான ரஞ்சித் சிங்கின் அவையில் முக்கிய பங்காற்றி, பல போர்களில் வெற்றி பெற்றமையை அடுத்து ரஞ்சித் சிங், 1820 இல் குலாப் சிங்கை ஜம்மு பகுதியின் ஆட்சியாளராக அறிவித்தார். மிகத் திறமையான பல படைத்தலைவர்களைக் கொண்ட குலாப் சிங் மிக விரைவாகத் தனது செல்வாக்கை உயர்த்தினார். படைத்தலைவர் சொரோவார் சிங் மூலம் காசுமீருக்கு கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் உள்ள லடாக் பகுதியையும், பால்டிசான் பகுதியையும் கைப்பற்றினார். (இது தற்போது பாக்கித்தானின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு நிலமாகும்) [4]
1845 ஆம் ஆண்டில் முதலாவது ஆங்கிலேய- சீக்கிய போர் வெடித்த போது, போரில் எவ்வித பங்கும் கொள்ளாமல் இருந்த குலாப் சிங், 1846 ஆம் ஆண்டு நடைபெற்ற சொப்ரோன் போருக்குப் பின் இருதரப்புக்கும் அமைதியை கொண்டு வரும் நடுநிலையாளராகவும், ஆங்கிலேய ஆலோசராகவும் மாறினார். இதன் விளைவாக இரண்டு உடன்பாடுகள் ஒப்பு கொள்ளப்பட்டன. முதலாவது ஒப்பந்தத்தின் படி, ஆங்கிலேயர் போரால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்கு (1.5 கோடி ரூபாய் ) ஈடாக மேற்கு பஞ்சாப் பகுதியைத் தம்வசம் கொண்டனர். இதன் மூலம் பஞ்சாப் பேரரசு தனது பெருமளவு நிலப்பகுதியை இழந்தது. இரண்டாவது ஒப்பந்தத்தின் படி ஜம்மு மன்னர் குலாப் சிங் முன்பு பஞ்சாப் பேரரசைச் சார்ந்த நிலப்பகுதியில் உள்ளடக்கிய காசுமீர் பகுதியை சுமார் 75 இலட்சம் ரூபாய்க்கு பிரித்தானிய இந்தியா அரசிடமிடமிருந்து வாங்கினார்.[5] புதிய ஜம்மு காஷ்மீர் இராச்சியம் நிறுவப்பட்டது.[4] 1857 குலாப் சிங்கின் மறைவுக்கு பின் அவரது மைந்தன் ரன்பீர் சிங் மேலும் பல பகுதிகளை வென்று ஜம்மு காஷ்மீர் இராச்சியத்துடன் இணைத்தார்.
ரன்பீர் சிங்கின் பேரன் ஹரி சிங் 1925 ஆம் ஆண்டு அரியணை ஏற்றபோது, இந்திய விடுதலை போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டு இருந்தது. 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தியப் பிரிவினையின் போது இரு நாடுகளும் அப்போதைய இந்தியாவில் இருந்த அனைத்து சிற்றரசர்களும் தம் விருப்பப்பட்டு தாம் விரும்பும் படி இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணையவோ, அல்லது சில குறிப்பிட்ட பகுதிகளில் தனி நாடாகச் செயல்படவோ ஒப்புக் கொண்டன. 1947 ஆம் ஆண்டு காசுமீர் அரசின் மக்கள்தொகையில் சுமார் 77% இசுலாமியர் வாழ்ந்து வந்தனர். ஒப்பந்தத்தை மீறி அக்டோபர் 20, 1947 அன்று பாக்கிஸ்தான் ஆதரவில் செயல்பட்ட பழங்குடிகள் காசுமீரைத் தாக்கிக் கைப்பற்ற முயன்றனர்.[6] ஆரம்பத்தில் பாக்கிஸ்தானை எதிர்த்துப் போராடிய காசுமீர் அரசர் ஹரி சிங், அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி இந்தியாவின் தலைமை ஆளுனர் மவுண்ட்பேட்டன் பிரபுவின் உதவியை நாடினார். காசுமீரை இந்தியாவுடன் இணைக்க முன்வந்தால் உதவ இயலும் என்ற மவுண்ட்பேட்டன் பிரபுவின் நிபந்தனையின் பேரில், இந்தியாவுடன் இணையும் உடன்பாட்டு ஆவணம் கையெழுத்து ஆனது.[7] ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் இந்திய போர்வீரர்கள் மேற்படி பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தும் ஆணையுடன் காசுமீருக்குள் நுழைந்தனர். ஆனால், அவ்வாணைப்படி புதிய ஆக்கிரமிப்பை மட்டுமே தடுக்க வேண்டும். ஏற்கனவே பாக்கிஸ்தான் ஆக்கிரமித்த பகுதியைத் திரும்பப் பெறும் முயற்சி செய்யப்பட மாட்டாது. இம்முயற்சியின் போது இந்தியா இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவைக்கு கொண்டு சென்றது. ஐநா தீர்மானத்தில், பாக்கிஸ்தான் தாம் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேறவும், இந்தியா, மக்கள் எந்த நாட்டுடன் வாழ விரும்புகிறார்கள் என்பதை அறியும் வகையில் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வழி கூறப்பட்டது. பாக்கிஸ்தான் தான் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேற மறுத்து விடவே, இந்தியாவும் ஐநாவின் கண்காணிப்பில் பொது வாக்கெடுப்பு நடத்த விழையவில்லை.
இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளின் அரசாங்க உறவுகள் பாதிப்படைந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையே மூன்று போர்கள் காசுமீர் பகுதியில் நடந்துள்ளன. அவையாவன, இந்திய-பாகிஸ்தான் போர், 1965, வங்காளதேச விடுதலைப் போர் மற்றும் கார்கில் போர். முந்தைய காசுமீர் நிலப்பகுதியில் 60 விழுக்காடு பகுதியை இந்தியாவும், ஆசாத் காசுமீர் மற்றும் வடக்கு நிலங்கள் என்று அழைக்கப்படும் 30 விழுக்காடு பகுதியைப் பாக்கிஸ்தானும், 1962 ஆம் ஆண்டுக்குப் பின் 10 விழுக்காடு பகுதியைச் சீனாவும் நிர்வகிக்கின்றன.
இது போன்று கிழக்கு பகுதியும் எல்லைப் பிரச்சனையில் சிக்குண்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் கடைசியிலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இங்கிலாந்து, திபெத், ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே காசுமீர் எல்லைபற்றிய பல உடன்படிக்கைகள் ஏற்பட்டாலும், அவைகளில் எதிலும் சீனா உடன்படாமல் விலகி இருந்தது. பின் 1949 இல் சீன பொதுவுடைமை கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய பின்னரும் சீனா தம் காசுமீர் எல்லை கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை. 1950 களில் துவக்கத்தில் சீனப் படை லடாக் நிலப்பரப்பின் வட கிழக்கு பகுதியில் தமது ஆக்கிரமிப்பைத் துவக்கியது.[9] 1956–57 ஆண்டுகளுக்குள் அக்சாய் சின் பகுதியில் சிஞ்சியாங்-மேற்கு திபெத் ஆகியவற்றை இணைக்கும் முழுமையான இராணுவ சாலையை அமைத்து விட்டது. இச்சாலை அமைப்பதை பற்றி எவ்வித தகவலையும் அறியாத இந்தியா, பின்னர், அதுபற்றி அறிந்த போது, அப்பகுதி தமது பகுதியாகக் கோரியது. இதுவே இரு நாடுகளுக்கும் இடையே அக்டோபர் 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற சீன- இந்திய போருக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 1962 ஆம் ஆண்டுக்குப் பின் அக்சாய் சின் பகுதி முழுமையான சீனக் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும், அதனைத் தொடர்ந்த சில காசுமீர் பகுதிகளை (காரகோரம் ஒப்பந்தம்) பாக்கிஸ்தான் சீனாவுக்கு இலவசமாக 1963 ஆண்டு கொடுத்தது.
1957 இல் மாநிலத்தின் அரசியல் சாசனம் இயற்றப்பட்டது முதல் புகழ்பெற்ற காசுமீரத் தலைவர் சேக் அப்துல்லா மறைந்த 1982 வரை இடையிடையே அமைதியும், அதிருப்தியும் மாறி வந்த சம்மு காசுமீர் மாநிலத்தில்[10] 1982 ஆம் ஆண்டுக்குப் பின் அமைதியின்மை தலைதூக்கியது.[11] 1987 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடந்த குளறுபடிகளும், பாக்கிஸ்தான் உளவு துறையின் மறைமுக ஆதரவும் மேலும் அமைதியின்மையை உருவாக்கியது.[12] அதன் பின் தொடர்ச்சியாகத் தீவிரவாதிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையே மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இருதரப்புமே அதிக அளவில் மனித உரிமை மீறல் குற்றங்களை தொடர்ந்து புரிவதாகக் கூறப்படுகிறது. இக்குற்றங்களில் படுகொலைகள், தடுத்து வைத்தல், கற்பழிப்பு, கொள்ளையிடுதல் ஆகியவையும் அடங்கும்.[13][14][15][16][17]. இருப்பினும், தீவிரவாதிகளின் ஆதிக்கம் 1996 ஆண்டு முதல் படிப்படியாகக் குறைந்து வருகிறது.[18]
சம்மு காசுமீர் இயற்கை வனப்புமிக்க பல பள்ளத்தாக்குகளைக் கொண்டுள்ளது. அவற்றில் சிறப்புமிக்கவை காசுமீர் பள்ளத்தாக்கு, தாவி பள்ளத்தாக்கு (Tawi), செனாப் பள்ளத்தாக்கு, பூன்ஞ் பள்ளத்தாக்கு, சிந்து பள்ளத்தாக்கு மற்றும் லிடர் பள்ளத்தாக்கு (Lidder) ஆகியவை. காசுமீர் பள்ளத்தாக்கு சுமார் 100 கிமீ அகலத்துடன் 15520 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இமயமலை காசுமீர் பள்ளத்தாக்கை லடாக் நிலப்பகுதியிலிருந்து பிரிக்கிறது. பீர் பஞ்சால் (Pir Panjal) மலைத்தொடர் இப்பள்ளத்தாக்குப் பகுதியை மேற்கிலும் தெற்கிலும் சூழ்ந்து வட இந்திய சமவெளியையும் காசுமீர் பள்ளத்தாக்கையும் பிரிக்கிறது. வட கிழக்குப் பகுதியில் இப்பள்ளத்தாக்கு இமயமலை வரை தொடர்கிறது. மக்கள்தொகை அடர்த்தி அதிகமான அழகிய காசுமீர் பள்ளத்தாக்கு கடல் மட்டத்திலிருந்து சுமார் 1850 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்க அதன் அருகில் உள்ள பீர் பஞ்சால் மலைத்தொடர் ஏறத்தாழ 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது.
இமயமலை ஆறுகளில் ஒன்றான ஜீலம் ஆறு மட்டுமே காசுமீர் பள்ளத்தாக்கு வழியே பாயும் பெரிய ஆறாகும். சிந்து ஆறு, தாவி ஆறு, ராவி ஆறு மற்றும் செனாப் ஆறு ஆகிய ஆறுகள் இம்மாநிலத்தில் பாயும் மற்றைய இமயமலை ஆறுகள். சம்மு காசுமீர் பல இமயமலை பனியாறுகளை (Himalayan glaciers) தன்னகத்தே கொண்டுள்ளது. சராசரியாகக் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5753 மீட்டர் உயரத்திலிருக்கும் உலகின் நீளமான இமயமலை பனியாறான சியாச்சென் பனியாறு சுமார் 70 கிலோமீட்டர் நீளம் உடையது.
சம்மு காசுமீர் மாநிலத்தின் காலநிலை அதன் மாறுபட்ட நிலவமைப்புக்கு தகுந்தவாறு இடத்துக்கிடம் மாறுபடுகிறது. உதாரணமாகத் தெற்கில் ஜம்மு பகுதியில் பருவக்காற்றுக் காலநிலை நிலவுகிறது. ஜனவரி முதல் மார்ச் வரை மாதம் சராசரியாக 40 முதல்50 மில்லி மீட்டர் வரை மழை பெறுகிறது.வேனிற் காலத்தில் ஜம்மு நகரின் வெப்பம் 40 °C (104 °F) வரையும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சில ஆண்டுகளில் பெருமழையும் பெறுகிறது (650 மில்லி மீட்டர்). செப்டம்பர் மாதத்தில் மழை குறைந்து அக்டோபர் மாதம் கடும் வெப்பத்துடன் வறண்ட வானிலை காணப்படுகிறது. இம்மாதத்தில் வெப்பம் சுமார் 29 °C ஆக இருக்கிறது.
அரபிக் கடலின் அண்மையால் ஆண்டுக்குச் சுமார் 635 மில்லி மீட்டர் மழை பெறும் ஸ்ரீநகர் பகுதி மார்ச் முதல் மே மாதங்களில் மட்டும் சுமார் 85 மில்லிமீட்டர் மழை பொழிவை பெறுகிறது . இமயமலை தொடரால் மழை மேகங்கள் தடுக்கப் படுவதால் லடாக் நிலப்பரப்பில் கடும் குளிரும், வறட்சியும் நிலவுகிறது. வருட மழைப்பொழிவு சொற்பமான 100 மில்லிமீட்டர்க்கும் குறைவாகவும், மிகக் குறைந்த ஈரப்பதமும் காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 3 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் இப்பகுதியில் குளிர்காலம் மிகக் கடுமையானது. இப்பகுதியில் இருக்கும் சான்ஸ்கர் ( Zanskar) வட்டத்தின் சராசரி ஜனவரி வெப்பநிலை சுமார் -20 °C (-4 °F) ஆகும். அதுவே, சில கடும் குளிர் ஆண்டுகளில் -40 °C (-40 °F) வரை குறையக்கூடும். கோடைக் காலத்தில் லடாக் மற்றும் சான்ஸ்கர் பகுதியில் சுமார் 20 °C (68 °F) வெப்பம் நிலவுகிறது. இருப்பினும் இரவு நேரம் குளிர் அதிகமாகவே உணரப் படுகிறது.
சம்மு காசுமீர் ஜம்மு, காசுமீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் என மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. மேலும் இம்மூன்று பகுதிகள் 22 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[19] சியாச்சின் பனியாறு, இந்திய இராணுவ கட்டுப்பாட்டில் இருப்பினும் அப்பகுதி சம்மு காசுமீர் மாநில ஆட்சிக்குள் கொண்டு வரப்படவில்லை.[19]
ஜம்மு பகுதி |
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1951 | 32,54,000 | — |
1961 | 35,61,000 | +9.4% |
1971 | 46,17,000 | +29.7% |
1981 | 59,87,000 | +29.7% |
1991 | 78,37,000 | +30.9% |
2001 | 1,01,43,700 | +29.4% |
2011 | 1,25,41,302 | +23.6% |
மூலம்:இந்திய மக்கள்தொகை கணக்கீடு [20][21] 1991 ஆண்டு மக்கள் தொகை கணக்கீடு ஜம்மு காசுமீர் மாநிலத்தில் நடத்தப் படவில்லை. 1991 மொத்த மக்கள்தொகை இடைக்கணிப்பு முறையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. |
இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே இசுலாமியர் பெரும்பான்மையினராக உள்ளனர். மாநிலத்தில் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுவோர் சுமார் 67% சதவிகிதமானோர். லடாக் நிலப்பகுதியில் பௌத்த சமயத்தைச் சார்ந்தோர் 46%. இப்பகுதி மக்கள் இந்தோ-திபெத்திய இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஜம்முவின் தெற்கு பகுதியில் உள்ளோர் பெரும்பாலும் இந்தியாவின் மற்றைய அண்டைய மாநிலங்களான ஹரியானா பஞ்சாப், டெல்லி ஆகிய பகுதிகளிலிருந்து குடியேறியவர்கள்.
புகழ்பெற்ற அரசியல் நிபுணர் அலெக்சாண்டர் எவன்ஸ் கணிப்பின் படி, 1990களில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களால் தோராயமாக 95% சதவிகித (160,000-170,000 ) காசுமீர் பண்டிட்டுகள் (காசுமீர் பிராமண சமுதாயத்தினர்) காசுமீர் பள்ளத்தாக்கு பகுதியை விட்டு வெளியேறி விட்டனர்.[22] அமெரிக்க உளவு அமைப்பான சென்டிரல் இன்டலிஜன்ஸ் ஏஜென்சி (சிஐஏ) அறிக்கையின் படி, சுமார் 300,000 காசுமீர் பிராமணர் இசுலாமியர்களின் குறிவைத்த தாக்குதல்களால் சம்மு காசுமீர் மாநிலத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.[23]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 12,541,302 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 6,640,662 மற்றும் பெண்கள் 5,900,640 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 889 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 56 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி 67.16% படிப்பறிவு ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 76.75% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 56.43% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,018,905 ஆக உள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 23.64% ஆக உள்ளது. நகர்புறங்களில் 72.62% மக்களும், கிராமபுறங்களில் 27.38% மக்களும் வாழ்கின்றனர்.[24]
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 3,566,674 (28.44%) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 8,567,485 (68.31%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 35,631 (0.28%) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 234,848 (1.87%) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 2,490 (0.02%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 112,584 (0.90%) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 1,508 (0.01%) ஆகவும் உள்ளது.
சம்மு காசுமீர் மாநிலத்தின் முதன்மை மொழிகள் : காஷ்மீரி மொழி உருது மொழி, தோக்ரி மொழி, பகாரி மொழி, பால்டி மொழி, லடாக் மொழி, பஞ்சாபி, கோஜ்ரி மொழி மற்றும் தாத்ரி மொழி ஆகியன ஆகும். பாரசீக-அரபி எழுத்துக்களால் எழுதப்படும் உருது மொழி மாநிலத்தின் அலுவல் மொழியாகும். இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டாவது மொழிகளாக உள்ளன.[25]
2019க்கு முன்புவரை இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலம் மட்டுமே இந்திய அரசியலமைப்பின் 370 வது குறிப்பின்படி பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது. இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளைத் தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்தச் சட்டமும் காசுமீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி சம்மு காசுமீர் மாநிலத்தில் செல்லாது. சம்மு காசுமீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது.[26] மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் சம்மு காசுமீர் மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.[27] சம்மு காசுமீர் மாநில பெண்கள் மற்ற மாநில ஆண்களைத் திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தாலும் அவர்கள் நிலம் வாங்க முடியும்[28][29] சம்மு காசுமீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும் [30] இவை அனைத்தும் ஆகத்து 2019-இல் கொண்டு வரப்பட்ட 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் ரத்து செய்யப்பட்டது.
இந்திய இராணுவத்தின் தரைப்படை மற்றும் விமானப்படையின் வடக்கு மண்டலத்தின் தலைமையகம் உதம்பூரில் உள்ளது.
தால் ஏரி, சோன்மார்க், பகல்கம் மற்றும் குல்மார்க் பன்னாட்டு சுற்றுலாத் தலங்களாகவும், ரகுநாத் கோயில் சங்கராச்சாரியார் கோயில், வைஷ்ணவ தேவி, அமர்நாத், சிவகோரி குகைக் கோயில்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களாக உள்ளது.
ஜம்மு[31] மற்றும் ஸ்ரீநகர்[32] விமான நிலையங்கள் வான் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை 1எ காஷ்மீரின் ஊரி நகரத்தையும் ஜலந்தர் நிலையத்தையும் இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 1டி காஷ்மீர் நகரத்துடன் லடாக்கின் லே நகரத்தை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 1பி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளை இணைக்கிறது. பீர் பாஞ்சல் மலைத்தொடரில் உள்ள பானிகால் கணவாய் பகுதியில் உதம்பூர் மாவட்டத்தின் பனிஹால் நகரத்தையும், அனந்தநாக் மாவட்டம்|அனந்தநாக் மாவட்டத்தின் காசிகுண்ட் நகரத்தை இணைக்கு ஜவகர் குகை, செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை மற்றும் பனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலைகள் உள்ளது.
ஜம்மு நகரத்துடன் பாரமுல்லாவை, கற்றா-உதம்பூர்-பனிஹால்-காசிகுண்ட்-அனந்தநாக் மற்றும் ஸ்ரீநகர் வழியாக இணைக்கும் ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை அமைக்கும் பணியில் முடிவடையும் தருவாயில் உள்ளது. தற்போது ஜம்மு - வைஷ்ணதேவி கோயில் மற்றும் பனிஹால் - பாரமுல்லா இடையே தொடருந்துகள் இயக்கப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.