குருநானக் உருவாக்கிய மதம் From Wikipedia, the free encyclopedia
சீக்கியம் (ਸਿੱਖੀ, Sikhism) அல்லது சீக் (சீக்கியர், என்ற சொலுக்கு "சீடர்", அல்லது "கற்பவர்" என்று பொருள்படும்[1][2]) என்பது இந்தியத் துணைக் கண்டத்தின் பஞ்சாப் பகுதியில் பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டின் முடிவில் தோன்றிய தர்ம சமயமாகும்.[3][4] உலகில் உள்ள முதன்மை சமயங்களில் இளைய சமயங்களில் இதுவும் ஒன்றாகும். சீக்கிய சமயத்தின் அடிப்படையான நம்பிக்கைகள், குரு கிரந்த் சாஹிப் நூலில் உள்ளன, மனிதகுலத்தின் ஒற்றுமை, தன்னலமற்ற சேவையில் ஈடுபடுவது, அனைவரின் நலனுக்கும் சமூக நீதிக்காக போராடுவது, மற்றும் நேர்மையான நடத்தை ஆகியவற்றை பொதுவாக வலியுறுத்துகிறது.[5][6][7] இது ஓரிறைக் கொள்கையை உடைய சமயமாக பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த குரு நானக் அவர்களால் 15ம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சமயமாகும்.[8] இச்சமயம் குரு நானக்கிற்குப் பிறகு தோன்றிய பத்து சீக்கிய குருக்களாலும் முன்னேற்றப்பட்டது. இது சுமார் 30 மில்லியன் சீக்கியர்களைக் கொண்டு உலகின் ஐந்தாவது பெரிய சமயமாக உள்ளது.[9][10] முதல் நான்கு மதங்களாக முறையே கிறித்தவம், இசுலாம், இந்து, பௌத்தம் போன்ற மதங்கள் இருக்கின்றன.
சீக்கிய சமயம் சிம்ரனை (குரு கிரந்த சாகிப்பின் வார்த்தைகளில் தியானம்) வலியுறுத்துகிறது, இது கீர்த்தனையோ அல்லது உள்மனதில் உச்சாடனை (கடவுளுடைய பெயரை மீண்டும் மீண்டும் சொல்லுதல்) செய்வதன் மூலம் கடவுளுடைய பிரசன்னத்தை உணரும் வழிமுறை என்கிறது, மேலும் "ஐந்து திருடர்களான" (காமம், ஆத்திரம், பேராசை, பற்று, அகந்தை) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, மதச்சார்பற்ற வாழ்க்கையை ஆன்மீக வாழ்வோடு கை கோர்த்து பிணைக்கப்பட வேண்டும் என்கிறது.[11] குரு நானக் கற்பித்தவை "செயலில், ஆக்கபூர்வமான, நடைமுறை வாழ்க்கை" அதில் "உண்மை, விசுவாசம், சுய கட்டுப்பாடு தூய்மை" மேலும் சிறந்த மனிதர் என்பவர் "கடவுளோடு ஒன்றிணைந்து, அவருடைய விருப்பத்தை அறிந்து, அதைத் தொடருவார்" என்று கூறுகிறார்.[12]
குரு நானக் தேவ் மற்றும் அவரது வழித்தோன்றல்களின் போதனைகளே சீக்கிய சமயத்தின் மூலமாகும். சீக்கியர்களின் முதல் குருவான குருநானக் தனது 30ம் வயதில் அறிவு விளக்கம் பெற்ற பிறகு, யாருடைய பாதையை நான் பின்பற்ற வேண்டும் இந்து மதமா அல்லது முஸ்லீமா, நான் கடவுளின் பாதையை பின்பற்ற வேண்டும். கடவுள் இந்து மதமும் அல்ல முஸ்லிம் மதமும் அல்ல, நான் பின்பற்ற வேண்டிய பாதை கடவுளின் பாதையாகும் என்று மக்களிடையே கூறினார். பின் அவர் தன் கருத்துகளை பயணங்கள் செய்து மக்களிடையே கொண்டு சேர்த்தார். இவருக்குப் பின் தோன்றிய சீக்கிய குருக்கள் சீக்கியத்தினை மேம்படுத்தினர்.
சீக்கியம் அனைத்து மனிதர்களும் சமத்துவமானவர்கள் என்ற கொள்கையை வலியுறுத்துகிறது. அத்துடன் சாதி, சமயம், பாலினம் போன்ற பாகுபாடுகளை நிராகரித்து இறைவனை அடைவதற்கான வழிமுறைகளைக் கூறுகிறது.
சீக்கியத்தின் கொள்கையை முதலில் மொழிந்தவரான குரு நானக்கு இந்து நூல்கள், குரான் இரண்டிலுமே உண்மைகள் இருக்கின்றன எனவும் இரண்டையும் சேர்த்தே மக்கள் பின்பற்றலாம் எனவும் கூறினார். இந்துக்களையும் முசுலீம்களையும் ஒற்றுமையாக வாழ வைப்பதே தன் நோக்கம் என கூறினார். இராமன், கிருட்டிணன், நபிகள் போன்றவர்கள் அனைவரும் இறைவனின் தூதர்கள் எனவும் உலக வாழ்க்கையைத் துறந்த துறவியையும் மனையறம் பூண்ட மக்களையும் கடவுள் ஒன்றாகவே பாவிப்பார் எனவும் கூறினார்.
குரு என்ற சொல்லானது சமஸ்கிருதத்தின் குரு என்ற சொல்லிருந்து தோன்றியதாகும். இச்சொல்லானது ஆசிரியர், வழிகாட்டுனர் மற்றும் அறிவுரையாளர் என்று பொருள்தருவதாகும். பொ.ஊ. 1469 முதல் 1708 வரையில் சீக்கியத்தின் மரபுகள் மற்றும் தத்துவங்கள் பத்து குருக்களால் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு குருவும் சீக்கிய மதத்தின் கோட்பாடுகளினை வரையரை செய்து அதன் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தனர். சீக்கிய சமயத்தினை தோற்றுவித்த குரு நானக் முதல் குருவாவர். அவருக்குப்பின் ஒன்பது குருக்கள் தோன்றினர். பத்தாவது குருவான கோவிந்த சிங் தனக்குப் பின் குருவாக சீக்கிய குருக்களின் போதனைகளை எழுத்துவடிவமாக தொகுக்கப்பட்ட நூலினை அறிவித்தார். அதனால் குரு கிரந்த் சாகிப் என்று அழைக்கப்படும் அந்நூலானது பதினோராவது குருவாக சீக்கியர்களால் மதிக்கப்படுகிறது. இந்நூல் சீக்கியர்களுக்கான ஆன்மீக வழிகாட்டியாக வேதா வாக்காக, தனித்துவமான குருவின் நேரடி உருவகமாக மாறியது.[13][14][15]
குருநானக் முதல் குரு கிரந்த சாகிப் வரையான சீக்கியகுருக்களின் பட்டியல்:[16]
சீக்கிய சமயத்தின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் 1699 -ஆம் ஆண்டில், பைசக்தி நாளில் அமிரித் சன்ஸ்கரில், எல்லா தீட்சைப் பெற்ற சீக்கியர்களும் (கால்சா சீக்கியம் என்றும் அழைக்கப்படுகிறது) நம்பிக்கையின் அடையாளமாக ஐந்து பொருட்களை எல்லா நேரங்களிலும் அணிய வேண்டும் என்று கட்டளையிட்டார். இதை “ஐந்து கே” க்கள், அல்லது “பஞ்ச காக்கர்/காக்கி” என்று சொல்கிறார்கள்.
1. கேஷ் (வெட்டப்படாத முடி, இதை பொதுவாக சுருட்டி சீக்கிய தலைப்பாகையான, டாஸ்டர் என்பதன் உள்ளே வைக்கப்படும்.) 2. கங்கா (மரத்தாலான சீப்பு, பொதுவாக தலைப்பாகையின் கீழ் அணியப்படும்.) 3. கச்சாஹெரா (இடுப்பிலிருந்து முட்டிவரை இருக்கும் ஆடை, வெள்ளை நிறத்திலிருப்பது.) 4. கடா (இரும்பாலானா கைவளையம், இது வெண்கல கைவாளாக போரில் பயன்படக்கூடியது, பெரியவை தலைப்பாகையில் அணியப்பட்டு தூக்கியெறியக்கூடிய ஆயுதமாக பயன்படுத்தப்படும்.) 5. கிர்ப்பான் (வளைந்த கத்தி)
முகலாய அரசர்களில் சிலர் சீக்கியர்களோடு நட்புறவு கொண்டும் சிலர் எதிர்த்தும் சீக்கிய குருக்களை கொன்றும் இருக்கின்றனர்.
முகலாயப் பேரரசர்களின் ஆட்சியில் சீக்கியர்கள் பெருமளவு நிலங்களை வைத்திருக்காவிட்டாலும் அவுரங்கசீப் ஆட்சியின் முடிவில் முகலாயப் பேரரசு சரிவுற்றதால் அதிலிருந்து பலம் பெறத் தொடங்கினர். அதன் பிறகு வந்த சில முகமதிய அரசர்களோடு நட்பு பாராட்டினர். அகமது ஷா என்னும் முகமதிய அரசனின் ஆட்சியில் அவனைத் துரத்திவிட்டு பஞ்சாப்பையும் சட்லெஜ் யமுனை ஆற்றாங்கரையோர நாடுகளையும் ஆண்டனர். தங்களது அரசாங்கத்தை 12 பிரிவுகளாக பிரித்துக் கொண்டனர். ஒவ்வொரு பகுதிக்கும் மிச்செல் எனப்பெயரிட்டு ஒவ்வொன்றுக்கும் ஒரு சிற்றரசரை நியமித்தனர். நாளடைவில் சுகர்சியா மிச்செலின் சர்தாராய் இருந்த இரஞ்சித் சிங்கு பஞ்சாப்பின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி பேரரசர் ஆனார்.
சீக்கிய இசை என்பது பொ.ஊ. 16ஆம் நூற்றாண்டில் குரு நானக்கால் துவக்கப்பட்ட ஒரு இசை வகை ஆகும். குரு அர்சுனர் நானக்கின் நீதிமொழிகளையும் பிற குருக்களின் நீதி மொழிகளையும் சேர்த்து ஆதி கிரந்தம் என்னும் நூலை வெளியிட்டார். சீக்கியர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் தனக்கு காணிக்கை செய்யுமாறு செய்தார். குரு அரி கோவிந்தர் ஊன் உண்பதை அங்கீகரித்தார். சீக்கியர்களின் கடைசி குருவான குரு கோவிந்தர் சீக்கியர்களை ஏற்றத்தாழ்வின்றி நடத்தினார். சாதியால் தாழ்ந்தவன் உயர்ந்தவன் எனப் பாகுபாடுக்கு உள்ளாக்காமல் எல்லோரையும் சமமாக இருக்குமாறு செய்தார். சீக்கியர் எல்லோரும் தாடி வளர்க்க வேண்டும் குத்துவாளை தரித்திருக்க வேண்டும் என்றும் முகமதியர்களை எதிர்க்க வேண்டும் எனவும் வேண்டினார்.
உலகளவில் 25.8 மில்லியன் சீக்கியர்கள் காணப்படுகின்றனர். இது மொத்த உலக மக்கள்தொகையில் 0.39% ஆகும். இந்தியாவைத் தவிர இங்கிலாந்து, கனடா, யு.எஸ், மலேசியா, கிழக்கு ஆப்ரிக்கா போன்ற மற்ற நாடுகளில் அதிக அளவில் சீக்கியர்கள் உள்ளனர். இந்தியாவில் 19 மில்லியன் சீக்கியர்கள் உள்ளனர். இது இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 2% ஆகும். இதில் 75% ஆன சீக்கியர்கள் பஞ்சாப்பில் வாழ்கின்றனர்.[17][18]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.