சிரம்பான்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சிரம்பான் என்பது (மலாய்: Seremban; ஆங்கிலம்: Seremban; சீனம்: 芙蓉) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரம். இது சிரம்பான் மாவட்டத்தில் இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி, சிரம்பான் ஒரு மாநகரமாகப் பிரகடனம் செய்யப்பட்டது.
சிரம்பான்
தலைநகரம் | |
---|---|
Seremban | |
அடைபெயர்(கள்): சுங்கை ஊஜோங் | |
தீபகற்ப மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 2°43′20″N 101°56′30″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | நெகிரி செம்பிலான் |
அமைவு | 1840 |
மாநிலத் தலைநகர் தகுதி | 1979 |
அரசு | |
• நகர முதல்வர் (யாங் டி பெர்துவா)[1] | மாசுரி ரசாலி |
பரப்பளவு | |
• Seremban | 10,200 km2 (3,939 sq mi) |
ஏற்றம் | 79 m (259 ft) |
மக்கள்தொகை (2015) | |
• Seremban | 6,20,100[2] |
• அடர்த்தி | 489.00/km2 (1,266.51/sq mi) |
• பெருநகர் | 8,24,300 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாடு இல்லை) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 70xxx, 71xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-06 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | Nxx |
இணையதளம் | சிரம்பான் நகராண்மைக் கழகம் |
இருப்பினும், சில காரணங்களினால் அந்தப் பிரகடனம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.[3] இந்த ஆண்டு இறுதியில், மலேசியாவின் 12ஆவது பெரிய நகரமாக அறிவிக்கப்படும்.[4]
சிரம்பான் மாநகரத்தின் பழைய பெயர் சுங்கை ஊஜோங். இந்த மாநகரத்தின் இடையில் ஓடும் ஆற்றின் பெயர் சுங்கை ஊஜோங்.[5] அந்த ஆற்றின் பெயரே நகரத்திற்கும் வைக்கப்பட்டது.[6]
சீனர்கள் இந்த நகரத்தை "பூ யோங்" என்று அழைக்கின்றனர். இந்த நகரத்தின் மக்கள் தொகை 555,935. மலேசியாவில் ஒன்பதாவது இடம் வகிக்கின்றது.
தீபகற்ப மலேசியாவில் பெரும்பாலான நகரங்கள், ஈயம் கண்டுபிடிக்கப்பட்டதால் உருவான நகரங்கள் ஆகும். அதே போல 1870இல் இங்கு ஈயம் கண்டுபிடிக்கப்பட்டதும், சுங்கை ஊஜோங் நகரம் உருவானது. சிரம்பான் நகரத்திற்கு அருகில் ராசா எனும் ஒரு சிற்றூர் உள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர், அங்கே ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும், அப்பகுதிக்கு பெருவாரியான அரபு, மலாய் மக்கள், சீன மக்கள் குடிபுகுந்தனர். உள்ளூர் மலாய்க்காரர்கள் பெரும்பாலும் விவசாயிகளாக இருந்தனர். காலப்போக்கில், சுரங்கத் தொழிலில் மட்டும் அல்லாமல் வர்த்தக மையமாகவும் சிரம்பான் சிறந்து விளங்கியது.
லிங்கி ஆற்றின் வழியாக கொண்டு செல்லப்பட்ட ஈயம், மலாக்கா நீரிணையில் அணைந்து இருந்த கப்பல்களில் ஏற்றப்பட்டது. ஈயத் தொழிலின் வரி வசூலிப்பு மூலமாக பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு நிறைய வருமானம் கிடைத்தது. பிரித்தானியர்களின் விதித்த கூடுதலான வரிகள், வர்த்தகர்களுக்குப் பெரும் சுமையாகவும் மாறியது.
சுங்கை ஊஜோங்கில், டத்தோ கிளானா,[7] டத்தோ ஷா பண்டார் என இரு உள்ளூர் தலைவர்கள் இருந்தனர். வரி வசூலிக்கும் உரிமைகளுக்காகவும், ஈயச் சுரங்கங்களைச் சொந்தம் கொண்டாடும் உரிமைகளுக்காகவும், அவர்கள் இடையே கடும் போட்டிகள் நிலவின.
அந்தப் போட்டிகளினால், நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நிர்வாகத் துறையில் பிரித்தானியர்கள் தலையிடுவதற்கு ஓர் எளிதான வாய்ப்பு அமைந்தது. டத்தோ கிளானா, பிரித்தானியர்களின் உதவியை நாடினார். பிரித்தானியர்களும் தங்களுடைய படைகளை அனுப்பி டத்தோ கிளானாவிற்கு உதவிகள் செய்தனர்.
அதன் பின்னர், டத்தோ கிளானாவிற்கு எதிராகச் செயல்பட்டவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். டத்தோ ஷா பண்டார் சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டார். பிரித்தானியர்களின் உதவிகளுக்காக, ஒரு பிரித்தானிய ஆளுநர் சுங்கை ஊஜோங்கின் ஆணையராக அமர்த்தப்பட்டார்.
கேப்டன் முரே என்பவர்தான் முதல் ஆணையராகும். சமய, மலாய்க் கலாசாரங்களைத் தவிர்த்த மற்றத் துறைகளுக்கு அந்த ஆணையர் ஆலோசகராக விளங்கினார். பிரித்தானியர்கள் இப்படித்தான் மலேசியாவில் பல மாநிலங்களைத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர்.
சிரம்பான் நகரம், மலாக்கா நீரிணைக் கரையில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள் பெருநிலத்தில் இருக்கிறது. அந்தப் பெருநிலத்தை லிங்கிப் பள்ளத்தாக்கு என்று அழைக்கிறார்கள். மேற்குப் பகுதியில் ‘தித்திவாங்சா’ என்று அழைக்கப்படும் மத்திய மலைத் தொடர் உள்ளது.
ரப்பர், செம்பனை பயிர் செய்வதற்கு ஏற்ற செம்புரைக்கல் மண்பகுதிகள், நெகிரி மாநிலத்தில் நிறைந்து உள்ளன. அதுவே, அந்த மாநிலம் விவசாய மையமாக அமைவதற்கு பேருதவியாகவும் இருக்கின்றன. லிங்கி ஆற்றில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்கிறது.
சிரம்பான் வெப்ப சீதோஷ்ண நிலையைக் கொண்டது. சராசரி வெப்பநிலை செல்சியஸ் 27லிருந்து 30 வரையிலானது. இருப்பினும், மிதமான தட்ப வெப்ப நிலை. ஆண்டு முழுமையும் மழை பெய்கிறது. ஆண்டு இறுதிவாக்கில், ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவது உண்டு.
மலேசியாவில் 1890 ஆம் ஆண்டுகளில் கோலாலம்பூர் – சிங்கப்பூர் புகைவண்டி போக்குவரத்து தொடங்கப்பட்டது. அந்தக் காலக் கடத்தில்தான் சிரம்பான் நகரில் ஒரு நிலையமும் உருவாக்கப்பட்டது. இன்று வரை ஒரு மாபெரும் இடை நிலையமாக சிரம்பான் நகரம் விளங்கி வருகின்றது.
மலேசியாவில் அதிகமானோர் புகைவண்டிச் சேவையைப் பயன்படுத்துவது இல்லை. எல்லோருடைய வீடுகளிலும் கார்கள் உள்ளன. அதனால், அந்தக் காலத்தின், தலையாய புகைவண்டி போக்குவரத்துச் சேவை மறக்கப்பட்டு வந்தது. ஆனால், அண்மையில் 'கம்யூட்டர்' இரயில் சேவை தொடங்கப்பட்டதால், பொதுமக்களின் பயண ஆர்வம், மறுபடியும் புகைவண்டிச் சேவையின் பக்கம் திரும்பியுள்ளது.[8]
மலேசிய அரசாங்கம் பொது போக்குவரத்துச் சேவையில் சில மலிவான திட்டங்களை அமல் படுத்தி வருகிறது. 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, பாதிக் கட்டணம் அல்லது இலவசச் சேவை. 3000 ரிங்கிட்டிற்கும் குறைவான ஊதியம் பெறுபவர்களுக்கு பாதிக் கட்டணம்.[9]
சில மாநிலங்களில், பள்ளிக் குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசமான சேவை. இப்படிப்பட்டச் சலுகைகள் வழங்கப்பட்டும் புகைவண்டி போக்குவரத்துச் சேவையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் விமான நிலையங்கள் எதுவும் இல்லை. மலேசியாவில் இரண்டே இரண்டு மாநிலங்களில் மட்டும் விமானப் போக்குவரத்துச் சேவைகள் இல்லை. நெகிரி செம்பிலான், பெர்லிஸ் ஆகியவையே அந்த இரு மாநிலங்கள் ஆகும். இருப்பினும், சிரம்பான் நகரில் இருந்து 30 நிமிடப் பயணத் தொலைவில், அதாவது 40 கி.மீ. தூரத்தில், சிப்பாங் அனைத்துலக விமான நிலையம் உள்ளது.
மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து, சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்லும் நேரத்தைக் காட்டிலும், சிரம்பானில் இருந்து அந்த அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்வது என்பது மிகவும் எளிது. தூரமும் குறைவு. நேரமும் குறைவு.[10]
சிரம்பான் நகரம் மலாய், சீன, இந்திய அருஞ்சுவைப் பொருள்களுக்கு புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. உள்ளூர் உணவு வகைகளில் ‘சியூ பாவ்’(சீனம்: 芙蓉烧包) என்பது மிகவும் புகழ் பெற்றதாகும்.[11] அந்த உணவு இட்லி போன்ற வடிவத்தில் இருக்கும்.
அந்தச் சீன இட்லியின் உள்ளே கீரைகள், கோழி இறைச்சி அல்லது வளர்ப்புப் பன்றி இறைச்சி போன்றவை கலந்து இருக்கும். மலேசியர்களுக்குப் பிடித்தமான உணவுகளில் இதுவும் ஒன்று.[12] இந்தியர்கள் சைவமான சீன இட்லிகளையே விரும்பிச் சாப்பிடுவார்கள். மலேசியாவில், பெரும்பாலான இந்தியர்கள் பன்றி இறைச்சியைச் சாப்பிடுவது இல்லை.
நாசி பாடாங் எனும் ஒரு வகையான பிரியாணி உணவும் இங்கு புகழ்பெற்றது. இது மினாங்கபாவ்காரர்களின் பரம்பரை உணவாகும். அந்த உணவில் தேங்காய்ப் பால் அதிகமாகச் சேர்க்கப்பட்டு இருக்கும். ஊசி மிளகாய்களையும் அதிகமாகச் சேர்த்து இருப்பார்கள். காரம் மிக்க உணவு. இருப்பினும் மலேசியர்கள் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.
ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து அனைத்துலக நிறுவனங்கள் நிறைய தொழில்சாலைகளைத் திறந்து உள்ளன. நீலாய், செனவாங், போர்ட்டிக்சன், போன்ற நகரங்களில் பெரிய தொழில்சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.[13]
அதிகமான வேலை வாய்ப்புகள் இருந்தாலும், உள்ளூர் மக்கள் தொழில்சாலைகளில் பணிபுரிவதை அதிகமாக விரும்புவது இல்லை.
வங்காள தேசம், நேபாளம், வியட்நாம், கம்போடியா, பாகிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மியன்மார், போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்கள் இங்குள்ள தொழில்சாலைகளில் ஆயிரக் கணக்கில் பணிபுரிகின்றனர்.
பொருளாதாரத்தைப் பொருத்த வரையில், தயாரிப்புத் துறைதான் மாநிலத்தின் முக்கியத் துறையாக விளங்கி வருகிறது. சுற்றுலா துறை (40.3%), விவசாயம் (6%), கட்டுமானம் (2.2%), சுரங்கத் தொழில் 0.3%) போன்றவை வருமானத்தை ஈட்டித் தரும் இதர தொழில்துறைகளாகும்.
சிரம்பானில் சில தனியார், பொது மருத்துவமனைகள் உள்ளன. சிரம்பான் பொது மருத்துவமனை என்று அழைக்கப்பட்டது, இப்போது துங்கு ஜாபார் பொது மருத்துவமனை என்று அழைக்கப்படுகிறது.[14] 1930இல் தோற்றுவிக்கப்பட்ட இந்த பொது மருத்துவமனையில் 800 படுக்கைகள் உள்ளன. 20க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவச் சேவை மையங்கள் உள்ளன.
2004 ஆம் ஆண்டு, சிரம்பான் நிபுணத்துவ மருத்துவமனை தோற்றுவிக்கப்பட்டது. இதில் 109 படுக்கைகள் உள்ளன. நெகிரி செம்பிலான் மகப்பேறு மருத்துவமனையும் இங்குதான் உள்ளது. இதில் 75 படுக்கைகள் உள்ளன.[15]
சிரம்பான் கான்வெண்ட் தமிழ்ப்பள்ளியில் ஆறாம் ஆண்டு பயிலும் மாணவி நித்தியலட்சுமி சிவநேசன் என்பவர், உலக இளையோர் சதுரங்கப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.[16] அந்தப் போட்டியில் 160 நாடுகள் கலந்து கொண்டன. சுலோவேனியா நாட்டின் மார்போர் நகரில் அந்தப் போட்டி நடைபெற்றது. 1667 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மலேசிய இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்த அவர், இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டு, உலக நிலையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[17]
இவர் இந்தியா, புதுடில்லியில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் சதுரங்கப் போட்டிகளில், தன்னுடைய 10வது வயதில் கலந்து கொண்டார்.[18] 2011ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ், சூபிக் பே எனும் இடத்தில் நடைபெற்ற ஆசிய இளையோர் சதுரங்கப் போட்டியிலும், 11 வது வயதில் கலந்து கொண்டார். மலேசிய இந்தியர்களின் கனவுக் கன்னியாகப் புகழ் பெற்றுள்ளார்.[19]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.