From Wikipedia, the free encyclopedia
இராக்கி கர்கி (Rakhigarhi / Rakhi Garhi), இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தின் மேற்கில் காக்கர் ஆற்றின் சமவெளியில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரம் ஆகும். சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய காலத்தின் எச்சங்களைக் கொண்ட இத்தொல்லியல் களம், தில்லியிலிருந்து வடமேற்கே 150 கிமீ தொலைவில் உள்ளது.[2][3] 80 – 105 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இராக்கிகடி தொல்லியல் களம், அரப்பா மற்றும் மொகஞ்சதாரோ தொல்லியல் களங்களை விடப் பெரியதாகும்.
இராக்கிகர்கி | |
---|---|
மாற்றுப் பெயர் | இராக்கிகர்கி |
இருப்பிடம் | இராக்கிகடி, ஹிசார் மாவட்டம், அரியானா, இந்தியா |
ஆயத்தொலைகள் | 29°17′35″N 76°6′51″E |
வகை | தொல்லியல்களம் |
பரப்பளவு | 80 – 105 ஹெக்டேர்[1] |
வரலாறு | |
கலாச்சாரம் | சிந்துவெளி நாகரீகம் |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1963, 1997–2000, 2011-தற்போது வரை |
சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய இராக்கிகடி தொல்லியல் களம் கிமு 6420 – 6230 மற்றும் கிமு 4470 – 4280 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். பின்னர் இப்பகுதியானது, கிமு 2600 – 1900களில் உச்சத்திலிருந்த சிந்துவெளி நாகரீகத்தின் ஒரு பகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.[4] இத்தொல்லியல் களம் காகர் ஆற்றிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது.[5]
இராக்கிகடி தொல்லியல் களம் 105 ஹெக்டேர் நிலப்பரப்பில்[6][7] உள்ள ஏழு மலைக் குன்றுகளைக் கொண்டுள்ளது.[8]
இராக்கிகடி தொல்லியல் களத்தை 2011 முதல் டெக்கான் முதுநிலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மற்றும் அரியானா மாநில தொல்லியல் துறையும் இணைந்து தொடர்ந்து அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இத்தொல்லியல் அகழாய்வில் கண்டெடுத்த தொல்பொருட்கள் குறித்த விவரங்கள் அரசால் வெளியிடப்படுகிறது.
மே, 2012ல் இராகி கர்கி தொல்லியல் களத்தை, அழிவின் விளிம்பு நிலையில் உள்ள, ஆசியாவின் பத்து தொல்லியல் களங்களில் ஒன்றாக உலகாளவிய பாரம்பரிய நிதியம் அறிவித்துள்ளது.[9][10]
ராகி கர்கி தொல்லியல் களத்தைச் சுற்றி தனி நபர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர்.[11]
இத்தொல்லியல் களத்திற்கு அருகே காளிபங்கான் குணால், பாலு மற்றும் பிரானா போன்ற சிந்துவெளி நாகரீகத்திற்கு முந்தைய தொல்லியல் களங்கள் உள்ளன.[12]
தொல்லியல் அறிஞர் ஜான் மெக்லிண்டோசு கருத்துப்படி, இத்தொல்லியல் களம், வேதங்களில் கூறியுள்ள, சிவாலிக் மலைத்தொடரில் உற்பத்தியாகும் திரிஷ்டாவதி ஆற்றுச் சமவெளிகளில் உள்ளது.[13]
முதலில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1963, 1997–2000களில் இராக்ககடி தொல்லியல் களத்தை அகழ்வாய்வு செய்தது. 2000-ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணா அகழாய்வு செய்த போது ஓரு பெண்ணிடம் எலும்புக் கூட்டை கண்டு பிடித்தார்.[14] இந்த எலும்புக் கூடு தற்போது தேசிய அருங்காட்சியகம், புது டில்லியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பின்னர் 2011 முதல் டெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம் மற்றும் அரியானா அரசின் தொல்லியல் துறையும் இணைந்து இத்தொல்லியல் களத்தை அகழ்வாய்வு செய்து வருகிறது. அகழாய்வில் 11 மனித எலும்புக் கூடுகள் மற்றும் தொல் பொருட்கள் கண்டெக்கப்பட்டன.[15] கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளை மரபணு சோதனை செய்வதற்கு உதவியாக, தென் கொரியா நாட்டின் சியோல் தேசிய மருத்துவப் பல்கலைகழகம் அகழாய்வுப் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டது.
இராக்கி கடி தொல்லியல் களத்தில் கிடைத்த ஆறு தொல்பொருட்களை, 2014ல் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு பரிசோதனை செய்ததன் மூலம், இத்தொல்லியல் களம் கிமு 6420 – 6230 மற்றும் கிமு 4470 – 4280 ஆகிய இரண்டு காலங்களுக்கு இடைப்பட்டது என அறியப்பட்டுள்ளது.[12]
இராக்கிகடி தொல்லியல் களத்தை அகழாய்வு செய்கையில் 1.92 மீட்டர் அகலம் கொண்ட வீதிகளுடன் கூடிய நகர அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. காளிபங்கானில் கிடைத்த மட்பாண்டங்கள் போன்றவையே இங்கும் கிடைத்துள்ளன.
குழிகளைச் சுற்றியுள்ள சுவர் அமைப்புகள் ஈமச் சடங்குகளுக்கானது என அறியப்படுகிறது. சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வடிகால்களும், சுடுமட்சிலைகளும், எடைக்கற்களும், வெண்கலப் பொருட்களும், சீப்பு, செப்பு உலோக மீன் தூண்டில்கள், இரும்பு ஊசிகள் மற்றும் சுடுமண் முத்திரைகளும் கிடைத்துள்ளது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளி முலாம் பூசப்பட்ட வெண்கலப் பாத்திரங்கள் கிடைத்துள்ளது. ஒரு தங்கப்பட்டறையில் துருத்தியும், பட்டைத் தீட்டப்படாத 3,000 நவரத்தினக் கற்கள் கிடைத்துள்ளது. ஒரு புதைகுழியில் மண்டையோட்டுடன் கூடிய 11 எலும்புக் கூடுகளும், ஈமப் பாத்திரங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில், மூன்று பெண் எலும்புக் கூடுகளின் மணிக்கட்டுகளில் சங்கு வளையல்கள் இருந்தன.[16]
ஏப்ரல், 2015ல் எலும்புக்கூடுகளை கதிரியக்க கரிமப் பரிசோதனை முடிவில், அவை 4,500 ஆண்டுகளுக்கு முந்தையது என அறியப்பட்டுள்ளது.[17] மேலும் அக்கினி குண்ட அமைப்புகள் இராகி கர்கியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முதிர் அரப்பா (கிமு 2600 – 2000 ) காலத்திய தானியக் களஞ்சியம் இராக்கிகாடி தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 7 செவ்வக மற்றும் சதுர அறைகளுடன் கூடிய களிமண் - செங்கற்களால் ஆன இத்தானியக் களஞ்சியம் தரையில் பொதித்து நிறுவப்பட்டுள்ளது. புழு, பூச்சிகள் அரிக்காதவாறும், ஈரப்பதம் புகாதவாறும் தானியக் களஞ்சியத்தின் அடிப்பரப்பில், சுண்ணாம்புடன் கூடிய உலர் புற்கள் பரப்பி வைத்துள்ளனர்.[18]
இராக்கிகடி தொல்லியல் களத்தில் முதிர் அரப்பா காலத்திய 8 கல்லறைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் செங்கற்களால் மூடப்பட்ட கல்லறைகளுக்கு நடுவில் ஒரு கல்லறையில் ஒரு மரச் சவப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது.[19]:293 புதைக்கப்பட்டிருந்த மனித எலும்புக் கூட்டின் வயிற்றுப் பகுதியில் ஒட்டுண்ணிகளின் முட்டைகள் காணப்பட்டன. இவ்விடத்தின் மனிதத் தோற்றத்தை அறிய எலும்புகளும், ஒட்டுண்ணிகளின் முட்டைகளும் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.[20] [21]
இத்தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளில் இரண்டை மரபணு சோதனை செய்ததில், அம்மரபணுகள், தமிழ்நாடு மற்றும் கேரளா மலைக்காடுகளில் வாழும் இருளர் பழங்குடி மக்களின் மரபணுவுடன் மிகவும் ஒத்துள்ளது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[22] மேலும் இம்மரபணுக்கள் ஆரியர்களின் மரபணுவுடன் சிறிதும் ஒத்துப்போகவில்லை எனவும் ஆய்வில் தெரியவருகிறது.[23]
சிந்துவெளி நாகரீகத்தின் ஒரு தொல்லியல் களமான இராக்கிகடியில், அரியானா மாநில அரசு ஒரு தொல்லியல் அருங்காட்சியகத்தை நிறுவியுள்ளது. அதில் இராக்கிகடி தொல்லியல் களத்தில் கிடைத்த தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[24]
Seamless Wikipedia browsing. On steroids.