ஏதெனிய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
ஆல்சிபியாடீசு (Alcibiades, AL-sib-EYE-ə-deez (listen) ; கிரேக்கம்: Ἀλκιβιάδης ; சு. கிமு 450 – 404 ) என்பவர் ஒரு முக்கியமான ஏதெனிய அரசியல்வாதி, பேச்சாளர், தளபதி ஆவார். பெலோபொன்னேசியப் போருக்குப் பிறகு முக்கியத்துவம் குறைந்த அல்க்மேயோனிடேயின் வம்சாவளியில் கடைசியானவர் இவராவார். அந்தப் போரின் இரண்டாம் பாதியில் இவர் ஒரு மூலோபாய ஆலோசகர், இராணுவத் தளபதி, அரசியல்வாதி என முக்கிய பங்குகளை வகித்தார்.
ஆல்சிபியாடீசு | |
---|---|
ஆல்சிபியாடீசுக்கு சாக்கிரடீசு போதிக்கிறார் (1776) பிரான்சுவா-ஆண்ட்ரே வின்சென்ட் | |
பிறப்பு | கிமு அண். 450 ஏதென்ஸ், கிரேக்கம் |
இறப்பு | கிமு 404 (45-46 வயதில்) எலாஃபோஸ் மலை, பிரிஜியா, அகாமனிசியப் பேரரசு (தற்கால துருக்கி) |
சார்பு | ஏதென்சு எசுபார்த்தா (கி.மு 415–412 ) பாரசீகம் (412–411 BC) |
தரம் | தளபதி (ஸ்ரடிகெஸ்) |
போர்கள்/யுத்தங்கள் |
பெலோபொன்னேசியன் போரின் போது, ஆல்சிபியாடீசு தனது அரசியல் விசுவாசத்தை பலமுறை மாற்றிக்கொண்டார். கிமு 410 களின் முற்பகுதியில் இவர் ஏதென்சில், ஆக்கிரமிப்பு வெளியுறவுக் கொள்கையை ஆதரித்தார் மேலும் சிசிலியன் படையெடுப்பின் முக்கிய ஆதரவாளராக இருந்தார். இவரது அரசியல் எதிரிகள் இவர் தெய்வங்களை அவமதித்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து விசாரணைக்கு அழைத்தபோது, இவர் எசுபார்த்தாவுக்கு தப்பிச் சென்றார். அங்கு அவர் போர் உத்தி ஆலோசகராக பணியாற்றினார். ஏதென்சுக்கு எதிரான பல முக்கிய போர்த் தொடர்களை முன்மொழிந்தார் அல்லது மேற்பார்வையிட்டார். இருப்பினும், ஆல்சிபியாடீசுக்கு எசுபார்த்தாவிலும் பலமான எதிரிகள் உருவாகினர். அதனால் இவர் பாரசீகத்திற்குச் சென்றார். ஏதெனிய அரசியல் கூட்டாளிகள் இவரை திரும்ப அழைக்கும் வரை அங்கேயே பாரசீக ஆளுநர் திசாபெர்னசின் ஆலோசகராக பணியாற்றினார். பின்னர் இவர் பல ஆண்டுகள் ஏதெனியன் தளபதியாக (சிரடிகெசு) பணியாற்றினார். ஆனால் இவரது எதிரிகள் இறுதியில் இரண்டாவது முறையாக நாடுகடத்துவதில் வெற்றி பெற்றனர்.
சிசிலியன் போர்ப் பயணம் நிசியாசின் தலைமைக்கு பதிலாக ஆல்சிபியாடீசின் தலைமையின் கீழ் இருந்திருந்தால், அந்தப் போர் பயணம் அதன் இறுதியில் பேரழிவு தரும் விதமாக இருந்திருக்காது என்று அறிஞர்கள் வாதிடுகின்றனர்.[1] இவர் எசுபார்த்தாவிற்கு சேவை செய்த காலங்களில், ஏதென்சுக்கு எதிரான செயல்களில் ஆல்சிபியாடீசு குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். திசெலியாவை கைப்பற்றுதல் மற்றும் பல முக்கியமான ஏதெனியன் கூட்டணி அரசுகளின் கிளர்ச்சிகள் போன்றவை இவரது பரிந்துரையின் பேரில் அல்லது அவரது மேற்பார்வையின் கீழ் நிகழ்ந்தன. எவ்வாறாயினும், தனது சொந்த நகரத்திற்கு மீண்டும் அழைக்கப்பட்டவுடன், ஏதென்சுடன் சமாதானத்தை நாடுவதற்கு எசுபார்த்தாவை வழிக்கு கொண்டுவந்த ஏதெனியன் வெற்றிகளின் இவர் முக்கிய பங்கு வகித்தார். இவர் வழக்கத்திற்கு மாறான தந்திரோபாயங்களை விரும்பினார், முற்றுகையால் அல்லாமல் துரோகம் அல்லது பேச்சுவார்த்தை மூலம் பெரும்பாலும் நகரங்களை வென்றார்.[2] ஆல்சிபியாடீசு எந்த அரசுக்கு விசுவாசமாக இருக்கிறாரோ அந்த அரசுக்கு தனது இராணுவ மற்றும் அரசியல் திறமைகளால் ஆக்கத்தை தேடித்தருவதை இவர் அடிக்கடி நிரூபித்தார். ஆனால் இவரது செயல்பாட்டால் சக்திவாய்ந்த எதிரிகளை உருவாக்கும் நிலை இருந்ததால் இவர் நீண்ட காலம் ஒரே இடத்தில் இருக்க முடியவில்லை என்பதை உறுதி செய்தது.
ஆல்சிபியாடீசு ஏதென்சில் பிறந்தார். இவரது தந்தை, கிளீனியாஸ் என்பவராவார்.[3] இவரது குடும்பம் எசுபார்த்தன் பிரபுத்துவத்துடன் விருந்தினர் நட்புறவின் மூலம் பழைய தொடர்புகளைக் கொண்டிருந்தது, மேலும் "ஆல்சிபியாடீசு" என்ற பெயர் எசுபார்த்தன் வம்சாவளியைச் சேர்ந்தது.[4][5] ஆல்சிபியாடீசின் தாயாரான தீனோமாச்சே, செல்வாக்கு மிக்க அல்க்மேயோனிட் குடும்பத்தின் தலைவரான மெகாகிளஸின் மகளாவார்.[6] புகழ்பெற்ற பெரிகிள்சு மற்றும் அவரது சகோதரர் அரிஃப்ரான் ஆகியோர் இவரது உறவினர்கள்.[7] இவரது தாய்வழி தாத்தாவான, ஆல்சிபியாடீசு என்பவர் கிமு ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரபலமான அரசியலமைப்பு சீர்திருத்தவாதியான கிளீசுத்தனீசுவின் நண்பராவார்.[8] கொரோனியா போரில் (கிமு 447) கிளீனியாசு இறந்த பிறகு, பெரிகிள்சு மற்றும் அரிஃப்ரான் ஆகியோர் இவரது பாதுகாவலர்களாக ஆனார்கள்.[9]
புளூடாக்கின் கூற்றுப்படி, ஆல்சிபியாடீசு சாக்கிரட்டீசு உட்பட பல பிரபலமான ஆசிரியர்களைக் கொண்டிருந்தார். மேலும் சொல்லாட்சிக் கலையில் நன்கு பயிற்சி பெற்றவராக இருந்தார். [lower-alpha 1] இருப்பினும், இவரது ஒழுங்கற்ற நடத்தைக்காக இவர் குறிப்பிடப்பட்டார். இது பண்டைய கிரேக்க மற்றும் லத்தீன் எழுத்தாளர்களால் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிடப்பட்டது. சாக்கிரடீசு ஆல்சிபியாடீசை ஒரு மாணவராக ஏற்றுக் கொண்டார் என்று நம்பப்பட்டது. ஏனெனில் அவர் தவறான வழிகளில் இருந்து ஆல்சிபியாடீசை மாற்ற முடியும் என்று நம்பினார். ஆல்சிபியாடீசு எப்பொழுதும் தவறான வழியில் செல்பவர் என்றும், சாக்கிரடீசு அவருக்கு ஒழுக்கத்தை கற்பிப்பதில் தோல்வியுற்றார் என்று செனபோன் குறிப்பிட்டார்.[13]
கிமு 432 இல் பொடிடியா சமரில் ஆல்சிபியாடீசு கலந்துகொண்டார். அங்கு சாக்கிரட்டீசு இவரது உயிரைக் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது.[14] கிமு 424 இல் டெலியம் சமரில் சாக்கிரட்டீசை மீட்பதன் மூலம் ஆல்சிபியாடீசு பின்னர் அவரது ஆதரவை மீண்டும் பெற்றார். ஆல்சிபியாடீசு சாக்கிரட்டீசுடன் குறிப்பாக நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார், அவரை இவர் போற்றி மதித்தார்.[15][16] புளூடார்க் மற்றும் பிளேட்டோ [17] ஆகியோர் ஆல்சிபியாடீசை சாக்கிரட்டீசின் பிரியமானவர் என்று விவரிக்கிறார்கள். ஆல்சிபியாடீசு "சாக்கிரட்டீசை மட்டும் பயந்து வணங்கினார். மேலும் அவரது மற்ற ஆதரவாளர்களை இகழ்ந்தார்" என்று கூறினார்.[18]
ஆல்சிபியாடீசு பணக்கார ஏதெனியனியரான இப்போனிகசு என்பவரின் மகளான இப்பாரெட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி தன்னுடன் பெருமளவில் வரதட்சணையைக் கொண்டு வந்தார். இது ஆல்சிபியாடீசின் ஏற்கனவே இருந்த கணிசமான குடும்ப செல்வத்தை மேலும் அதிகரித்தது.[4] புளூடார்க்கின் கூற்றுப்படி, இப்பாரெட் தனது கணவரை நேசித்தார், ஆனால் அவள் அவரை விவாகரத்து செய்ய முயன்றாள். ஏனெனில் அவர் வேசிகளுடன் பழகினார். ஆனால் அவள் நீதிமன்றத்தில் நேர்நிற்பத்தை இவர் தடுத்தார். இவர் அவளை நீதிமன்றத்தில் பிடித்து நெரிசலான அகோரா வழியாக அவளை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.[19] :185 இவர் இறக்கும் வரை இவருடன் வாழ்ந்தாள். இந்த இணையருக்கு இளைய ஆல்சிபியாடீசு என்ற மகனும், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருந்தன.[20] ஆல்சிபியாடீசு தனது உடல் கவர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் புகழ் பெற்றவராக இருந்தார்.[4]
நிக்கியாசு அமைதி உடன்பாடு கையெழுத்தான பிறகு, ஆக்ரோசமான ஏதெனியன் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கத் தொடங்கியபோது ஆல்சிபியாடீசு முதன்முதலில் முக்கியத்துவம் பெற்றார். அந்த ஒப்பந்தமானது, எசுபார்த்தாவிற்கும் ஏதென்சுக்கும் இடையில் ஒரு அமைதி ஒப்பந்தம் பெலோபொன்னேசியன் போரின் நடுவில் கையெழுத்தானது. ஏழு ஆண்டுகால சண்டையின் முடிவில் இரு தரப்பினரும் எந்த ஒரு தீர்க்கமான நன்மையையும் பெறாத நிலை இருந்தது. துசிடிடீசு குறிப்புகளின் படி,[21] வரலாற்றாசிரியர்களான அர்னால்ட் டபிள்யூ. கோம் மற்றும் ரஃபேல் சீலி ஆகியோர் நம்பிக்கையின்படி எசுபார்த்தன்கள் அந்த உடன்படிக்கையை நிசியாசு மற்றும் லாச்சிசு ஆகியோரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தியதால் ஆல்சிபியாடீசு கோபமடைந்தார், அவர் இளைஞர் என்பதால் அவரைப் பொருட்படுத்தவில்லை என்ற குறையும் அவருக்கு இருந்தது.[22][23]
உடன்படிக்கையின் விளக்கத்தின் மீதான சர்ச்சைகளால், எசுபார்த்தன்கள் ஏதென்சுக்கு தூதர்களை அனுப்புவதற்கு காரணமாயிற்று. அவர்கள் எக்லோசியில் (ஏதெனியன் சட்டமன்றம்) பேசுவதற்கு முன்பு அவர்களை ஆல்சிபியாடீசு இரகசியமாகச் சந்தித்தார்.[24] எசுபார்த்தாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களின் இராசதந்திர நிலையை கைவிடுமாறும், அதற்கு ஈடாக ஏதெனிய தனது செல்வாக்கின் மூலம் அவர்களுக்கு உதவுவதாகவும் இவர் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.[25] ஆல்சிபியாடீசின் திட்டத்துக்கு எசுபார்த்தன் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர். எசுபார்த்தன்களுடன் அமைதி உடன்பாட்டை எட்ட விரும்பிய ஏதெனிய தலைவரான நிசியாசிடமிருந்து தங்களை விலக்கிக்கொண்டனர்.[24] அடுத்த நாள், சட்டமன்றத்தின் போது, ஆல்சிபியாடீசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த எசுபார்த்தா என்ன அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கியுள்ளது என்று கேட்டார். அவர்கள் இவரிடம் ஒப்புக்கொண்டபடியே, தாங்கள் முழுமையான, சுதந்திரமான அதிகாரங்களுடன் வரவில்லை என்று பதிலளித்தனர். இது முந்தைய நாள் அவர்கள் கூறியதற்கு நேர் முரணாக இருந்தது. இதைக்கொண்டு ஆல்சிபியாடீசு அவர்களின் குணாதிசயங்களைக் கண்டிக்கவும், அவர்களின் நோக்கங்களில் ஐயத்தை ஏற்படுத்தவும், அவர்களின் நம்பகத்தன்மையை அழிக்கவும் இதை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார். இந்த தந்திரமானது அமைதி பேச்சுவார்த்தையில் நல்ல முடிவை எட்ட விரும்பிய நிசியாசை சங்கடப்படுத்திய அதே வேளையில் ஆல்சிபியாடீசின் நிலைப்பாட்டுக்கு வலிமை சேர்த்தது. பின்னர் ஆல்சிபியாடீசு படைத்தலைவராக நியமிக்கப்பட்டார். ஆர்கோசு, மாண்டினியா, எலிசு மற்றும் பெலோபொன்னீசில் உள்ள பிற அரசுகளுக்கு இடையே ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கு அதிகரித்து வரும் தன் அரசியல் அதாகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டார். இதன் வழியாக பிராந்தியத்தில் எசுபார்த்தாவின் ஆதிக்கத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கினார்.[26] இருப்பினும், இந்த கூட்டணி இறுதியில் மாண்டினியா போரில் தோற்கடிக்கப்பட்டது.[27]
கிமு 416-415 ஆண்டுகளில் ஏதெனிய அரசியல்வாதிகளான ஐபர்போலோசு மற்றும் மறுபுறம் நிசியாசு மற்றும் ஆல்சிபியாடீசு இடையே ஒரு சிக்கலான அரசியல் போட்டி நடந்தது. ஐபர்போலோசு தனக்கு எதிராக உள்ள இந்த சோடிகளில் ஒருவரை ஆசிட்ராசி (நடுகடத்தல்) செய்ய முயன்றார். ஆனால் நிசியாசும், ஆல்சிபியாடீசும் தங்கள் செல்வாக்கை ஒன்றிணைத்து ஐபர்போலோசை நாடுகத்ததுமாறு மக்களைத் தூண்டினர்.[27] நிசியாசு, ஆல்சிபியாடீசு என ஒவ்வொருவரும் தங்களை ஆதரவாளர்களுக்கு ஐபர்போலோசை நடுகடத்த வாக்களிக்குமாறு உத்தரவிட்டனர். அதன்படியே நிகழ்வுகளும் நடந்தேரி அவர் நடுகடத்தப்பட்டார்.[23]
கிமு 416-415 இல் மெலோசைக் கைப்பற்றுவதில் ஈடுபட்ட தளபதிகளில் ஆல்சிபியாடீசு ஒருவரல்ல. ஆனால் மெலோசின் வயதுவந்த ஆண்கள் கொல்லப்பட்டனர். மேலும் பெண்களும், குழந்தைகளும் அடிமைப்படுத்த விடுக்கபட்ட ஆணையின் ஆதரவாளராக புளூட்டார்க் இவரைக் குறிப்பிடுகிறார்.[28] ஆல்சிபியாடீசை நடுகடத்த வலியுறுத்தும் ஒரு சொற்பொழிவில், "அகெய்ன்சிட் ஆல்சிபியாடீசு" என்பவர் மெலோசில் அடிமைப்படுதப்பட்ட பெண்களில் ஒருவருக்கு ஆல்சிபியாடீசுக்கு குழந்தை பிறந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.[29]
கிமு 415 இல், சிசிலியன் நகரமான செகெசுடாவின் பிரதிநிதிகள் (கிரேக்கம்: Egesta) செலினசுக்கு எதிரான போரில் ஏதெனியர்களின் ஆதரவைக் கோர ஏதென்சுக்கு வந்தார். இந்த போர் முயற்சி குறித்த விவாதங்களின் போது, நிசியாசு இதில் ஏதெனியன் தலையீட்டை கடுமையாக எதிர்த்தார். போர்த்தொடர் மிகவும் விலைதரக்கூடியதாக இருக்கும் என்றும், போர்ப் பயணத்தின் முக்கிய ஆதரவாளராக இருந்த ஆல்சிபியாடீசின் தன்மை மற்றும் நோக்கங்களை தாக்கி பேசினார்.[31] மறுபுறம், பாரசீகப் போர்களைப் போலவே, இந்த புதிய போர்த்தொடர் ஏதென்சுக்கு செல்வத்தைக் கொண்டு வந்து சேர்த்து பேரரசை விரிவுபடுத்தும் என்று ஆல்சிபியாடீசு வாதிட்டார். ஆல்சிபியாடீசு தனது உரையில் (மிகவும் நம்பிக்கையான, பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி) ஏதெனியர்கள் பிராந்தியத்தில் கூட்டாளிகளை ஒன்று சேர்த்தது, சிசிலியின் மிகவும் சக்திவாய்ந்த நகரமான சிராக்கூசாவில் தங்களது ஆட்சியை திணிக்க முடியும் என்று கணித்தார்.[32] போர் திட்டத்திற்கு ஆல்சிபியாடீசின் உற்சாகமான வாதங்கள் இருந்தபோதிலும், நிசியாசின் வாதங்களும் சேர்ந்து, ஒரு சாதாரண போர் முயற்சியை ஒரு பெரிய போர்த்தொடராக மாற்றி, சிசிலியை கைப்பற்றுவது சாத்தியமானதாகவும் பாதுகாப்பானதாகவும் தோன்ற வைத்தனர்.[33] இவரது ஆலோசனையின் பேரில் கப்பற்படையின் அளவு 60 கப்பல்களில் இருந்து [34] "140 கப்பல்களாகவும், 5,100 வீரர்கள் மற்றும் சுமார் 1300 வில்லாளர்கள், கவணாளிகள், இலகுரக ஆயுதம் ஏந்தியவர்கள்" என படைபலம் கணிசமாக அதிகரிக்கப்பட்டது.[35] சிசிலியன் போர்ப் பயணம் பெரிக்கிள்ஸ் மேற்கொண்ட அனைத்தையும் விஞ்சியது என்று மெய்யியலாளர் லியோ ஸ்ட்ராஸ் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.[36] நிசியாசு ஆல்சிபியாடீசு மற்றும் லாமச்சசு ஆகியோருடன் தளபதியாக நியமிக்கப்பட்டார். அவர்கள் மூவருக்கும் சிசிலியில் இருக்கும்போது ஏதென்சின் நலன்களுக்காக எதையும் செய்யலாம் என்று முழு அதிகாரம் வழங்கப்பட்டது.[37]
போருக்கான தயாரிப்புகள் மேற்கொள்ளபட்டு வந்த நிலையில் ஒரு நாள் இரவில் எர்மாய் எனப்படும் எர்மெசு கடவுளின் தலைகள் கொண்ட சிலைகள் ஏதென்சு முழுவதும் சிதைக்கப்பட்டன. இது ஒரு மத விரோத செயலாக இருந்தது. இதை செய்ததாக ஆல்சிபியாடீசுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் இது போர் பயணத்திற்கான ஒரு கெட்ட சகுனமாக பார்க்கப்பட்டது. ஏதெனிய அரசியல் தலைவர்களான ஆண்ட்ரோகிள்சு, ஆல்சிபியாடீசு மற்றும் அவரது நண்பர்கள் சிலைகளை இப்படிச் சிதைத்ததாகவும், சமயச் சடங்குகளின் கேலி செய்ததாகவும் குற்றம் சாட்டி பொய் சாட்சிகளைப் பயன்படுத்தியதாக புளூடார்க் குறிப்பிடுகிறார். பின்னர் இவரது எதிரிகள், அவர்களில் முக்கியமானவர்களான ஆண்ட்ரோகிள்சு மற்றும் சிமோனின் மகன் தெசலசு ஆகியோர் ஆல்சிபியாடீசு திட்டமிட்டபடி போருக்கு செல்ல வேண்டும் என்றும் போர்த் தொடரிலிருந்து திரும்பியவுடன் விசாரணைக்கு நேர்நிற்க வேண்டும் என்றும் வாதிடுவதற்காக பேச்சாளர்களை பட்டியலிட்டனர். ஆல்சிபியாடீசு அவர்களின் நோக்கங்களில் சந்தேகம் கொண்டிருந்தார், மேலும் தனது பெயரை இதிலிருந்து நீக்கும் விதமாக உடனடியாக விசாரணைக்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.[30] இந்தக் கோரிக்கை இவரின் அரசியல் எதிரிகளால் நிராகரிக்கப்பட்டது, விசாரணையை பின்னர் வைத்துக் கொள்ளலாம் என்றும் முதலில் படை புறப்பட்டடும் என்றனர். இந்நிலையில் கடற்படை புறப்பட்டது.[38]
ஆல்சிபியாடீசு சந்தேகித்தபடி, அவர் ஏதென்சில் இல்லாத நிலையில் அவரது எதிரிகள் உற்சாகமடைந்தனர். மேலும் அவர்கள் இவரது மற்ற செயல்கள் மற்றும் கருத்துகள் குறித்து குற்றம் சாட்டத் தொடங்கினர். மேலும் ஆல்சிபியாடீசின் இந்த நடவடிக்கைகள் சனநாயகத்திற்கு எதிரான சதித்திட்டத்துடன் தொடர்புடையவை என்றும் குற்றம் சாட்டினர்.[39] துசிடிடீசின் கூற்றுப்படி, ஏதெனியர்கள் எப்போதும் பயத்தில் பீடிக்கபட்டு இருந்தனர் மேலும் எல்லாவற்றையும் சந்தேகத்திற்குரிய வகையிலேயே எடுத்துக் கொண்டனர்.[40] கடானியாவுக்கு கடற்படை வந்தபோது, ஆல்சிபியாடீசு மீது எர்மை சிதைத்தது, சடங்குகளை அவதூறு செய்தது போன்ற குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைக்கு ஏதென்சுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு கப்பலொன்று வந்தது.[40] அதற்கு மறுப்பேதும் கூறாத ஆல்சிபியாடீசு தனது கப்பலிலேயே ஏதென்சுக்கு அவர்களைப் பின்தொடர்ந்து வருவதாக கூறினார். ஆனால் வழியில் துரி என்னும் இடத்தில் ஆல்சிபியாடீசு தனது குழுவினருடன் தப்பிச்சென்றார். இவர் தப்பிச் சென்ற செய்தி ஏதென்சுக்கு எட்டியது. அதனால் இவர் இல்லாமலேயே இவர் மீதான விசாரணை நடைபெற்று இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் இவரது சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடியவர்களைக் கொல்பவர்களுக்கு ஒரு தாலந்து பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.[41] இதற்கிடையில், சிசிலியில் உள்ள ஏதெனியன் படை, சில துவக்க வெற்றிகளுக்குப் பிறகு, மெசினாவுக்கு எதிராக நகர்ந்தது சென்றது. அங்கு தளபதிகள் நகரத்திற்குள் உள்ள தங்கள் இரகசிய கூட்டாளிகள் அதைக் காட்டிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஆல்சிபியாடீசு, மெசினாவில் உள்ள சிராகுசன்களின் நண்பர்களுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்து, அவர்கள் ஏதெனியர்களுக்கு உதவி கிடைப்பதைத் தடுப்பதார்.[42] சிறிது காலத்திற்குப் பிறகு போரில் இலாமச்சசு இறந்ததால், சிசிலியன் போரின் தளபதி பொறுப்பு நிசியாசின் கைகளில் வந்து சேர்ந்தது. அவர் துசிசிடிடீசால் போற்றப்பட்டார் (இருப்பினும் ஒரு நவீன அறிஞர் அவரை ஒரு சிறந்த இராணுவத் தலைவராகக் கருதவில்லை [1] ).
துரியில் இருந்து தப்பிச் சென்ற பிறகு, ஆல்சிபியாடீசு எசுபார்த்தன்களை உடனே தொடர்புகொண்டு, "தனக்கு அடைக்கலம் அளித்தால், தான் முன்பு எதிரியாகச் செய்த அனைத்துத் தீங்குகளையும் விட பெரிய உதவியையும், சேவையையும் அவர்களுக்குச் செய்வதாக உறுதியளித்தார்".[43] எசுபார்த்தன்கள் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஆல்சிபியாடீசை ஏற்றுக்கொண்டனர். இந்த சேர்க்கை காரணமாக, ஏதெனியர்கள் இவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதித்து, இவருடைய சொத்துக்களையும் பறிமுதல் செய்தனர்.[44][45] எசுபார்த்தாவில் நடந்த விவாதத்தில், சிராகூசை விடுவிக்க ஒரு படையை அனுப்பலாமா என்று ஆல்சிபியாடீசு பேசினார். மேலும் ஏதெனியர்கள் சிசிலி, இத்தாலி, கார்த்திச்சு போன்றவற்றை கைப்பற்றுவார்கள் என்று நம்புவதாக எசுபார்த்தன் எபோர்களிடம் ஏதெனியன் திட்டத்தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தினார்.[46] யேல் வரலாற்றாசிரியர் டொனால்ட் ககன், ஆல்சிபியாடீசு வேண்டுமெற்றே ஏதெனியர்களின் திட்டங்களை பெரிதுபடுத்தியதி கூறியதாக நம்புகிறார். இதனால் தன்னால் எசுபார்த்தன்கள் பெருமளவில் நன்மையை அடைவதாக நம்பவைத்தார்.
ஆல்சிபியாடீசு எசுபார்த்தாவின் இராணுவ ஆலோசகராக பணியாற்றினார். மேலும் எசுபார்த்தன்கள் பல முக்கியமான வெற்றிகளைப் பெற உதவினார். பத்து மைல்கள் (16 கிமீ) தொலைவில் உள்ள திசெலியாவில் ஒரு நிரந்தர கோட்டையை கட்டுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார்.[47] இதைச் செய்வதன் மூலம், எசுபார்த்தன்கள் ஏதெனியர்களை அவர்களின் வீடுகள், பயிர்கள், சுனியத்தின் வெள்ளி சுரங்கங்களிலிருந்து முற்றிலும் துண்டித்தனர்.[48] இது அட்டிகாவில் ஏதென்சுடனான போரை புதுப்பிக்கும் ஆல்சிபியாடீசின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த நடவடிக்கை ஏதென்சுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏதெனியக் குடிமக்கள் நகரத்தின் நீண்ட சுவர்களுக்குள் ஆண்டு முழுவதும் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர். இதனால் அவர்கள் உணவுக்காக கடல்வழி வர்த்தகத்தையே முழுமையாக நம்பியிருக்கும் நிலை உண்டானது. ஏதென்சு சிக்கல்களில் சிக்கியிருப்பதைக் கண்டு, டெலியன் கூட்டணி உறுப்பினர்கள் கிளர்ச்சியைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினர். சிசிலியில் ஏதென்சுக்கு ஏற்பட்ட பேரழிவுகரமான தோல்வியைத் தொடர்ந்து, ஆல்சிபியாடீசு எசுபார்த்தன் கடற்படையுடன் ஐயோனியாவுக்குச் சென்று பல முக்கியமான நகர அரசுகளை கிளர்ச்சி செய்யத் தூண்டி அதில் வெற்றி பெற்றார்.[49][50]
எசுபார்த்தாவுக்கு இத்தகைய மதிப்புமிக்க பங்களிப்புகளை செய்தபோதிலும், இரண்டாம் அகிசு ஆட்சியின்போது ஆல்சிபியாடீசு எசுபார்த்தன் அரசாங்கத்தின் ஆதரவை இழந்தார்.[51] எசுபார்த்தாவின் அரசியான அகிசின் மனைவி திமேயாவுக்கு பிறந்த மகனான இலியோடிசைட்சு என்பவர் ஆல்சிபியாடீசுக்கு பிறந்தவன் என்று சிறிது காலத்திற்குப் பிறகு பலர் நம்பினர்.[52][53] எசுபார்த்தன் இராணுவத்துடன் மன்னர் அகிசு போர் நடவடிக்கைக்காக எசுபார்த்தாவிலிருந்து சென்றிருந்த நேரத்தை சாதகமாகப் பயன்படுத்திய ஆல்சிபியாடீசு, அவரது மனைவி திமோனாசாவை மயக்கினார் என்று மாற்றுத் தகவல் ஒன்று கூறுகிறது.[19] :207
இவருடன் நல்லுறவில் இருந்த எபோர் எண்டியசு ஓய்வு பெற்ற பிறகு ஆல்சிபியாடீசின் செல்வாக்கு மேலும் குறைந்தது.[54] எசுபார்த்தன் கடற்படை தளபதி ஆசிடியோக்கசு, இவரைக் கொல்ல உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த உத்தரவைப் பற்றிய எச்சரிக்கை செய்தியைப் பெற்ற ஆல்சிபியாடீசு, பெலோபொன்னேசியப் படைகளுக்கு கிமு 412 இல் நிதி உதவி அளிக்க வந்த பாரசீக ஆளுநர் சாட்ராப் டிசாபெர்னசுடன் சென்றுவிட்டார்.[55]
உள்ளூர் பாரசீக அரசவைக்கு வந்தவுடன், ஆல்சிபியாடீசு சக்திவாய்ந்த ஆளுநரின் நம்பிக்கையைப் பெற்றார். மேலும் பல கொள்கை பரிந்துரைகளை செய்தார், அவை நல்ல வரவேற்பைப் பெற்றன. துசிடீசின் கூற்றின்படி, ஆல்சிபியாடீசு உடனடியாக திஸ்சாபெர்னசுக்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யத் தொடங்கினார். இவரது வற்புறுத்தலின் பேரில், ஆளுநர் பெலோபொன்னேசியன் கடற்படைக்கு அவர் கொடுத்து வந்த பொருளதவியைக் குறைத்து, அவற்றை ஒழுங்கற்ற முறையில் வழங்கத் தொடங்கினார்.[55] கடைசியாக, மிக முக்கியமாக, பாரசீகக் கடற்படையை மோதலுக்குக் கொண்டுவர அவசரப்பட வேண்டாம் என்று இவர் ஆளுநரிடம் கூறினார். ஏனெனில் போர் நீண்ட காலம் இழுத்துச் செல்வதால் வீரர்கள் மிகவும் சோர்வடைவார்கள். அதனால் பின்னர் பாரசீகர்கள் சண்டையிட்டு அப்பகுதிகளை எளிதாகக் கைப்பற்ற முடியும் என்பதாகும்.[56]
பாரசீகத்தில் இருந்த பல கிரேக்க பிரபுக்களில் ஒருவராக ஆல்சிபியாடீசு இருந்தார். அவர்கள் தங்கள் நாட்டில் நிலைமை தலைகீழாக மாறியதைத் தொடர்ந்து அகாமனிசியப் பேரரசில் தஞ்சம் புகுந்தனர். ஆல்சிபியாடீசு போல அங்கு தஞ்சமடைந்த பிரபல கிரேக்கர்கள் தெமிசுடோகிள்சு, தெமராடோசு அல்லது கோங்கிலோசு ஆவர்.[57] துசிடீசின் கூற்றின் படி (Thuc.8.47), ஆல்சிபியாடீசு அகாமனிசிய மன்னருக்கு (இரண்டாம் டேரியசு) ஆலோசனை கூறினார். எனவே இவர் மன்னரை சந்திக்க சூசா அல்லது பாபிலோனியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கலாம்.[57][58]
ஏதென்சுக்கு இவரை திரும்ப அழைப்பதற்க "தீவிர சனநாயகவாதிகள்" ஒருபோதும் உடன்பட மாட்டார்கள் என்று ஆல்சிபியாடீசு கருதினார்.[59] எனவே, இவர் சமோசில் இருந்த ஏதெனியன் தலைவர்களுடன் செய்திப் பரிமாறம் மேற்கொண்டார். ஏதென்சில் உள்ள சிலவர் ஆட்சிக்கான ஆதரவாளர்கள் தனக்கு சாதகமான நிலையை ஏதெசில் கொண்டுவர முடிந்தால் தான் ஏதென்சுக்குத் திரும்புவதாகவும். அப்போது பாரசீகப் பணத்துடன், தன்னுடன் 147 கப்பல்களைக் கொண்ட பாரசீக கடற்படையையும் கொண்டு அழைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.[60] மிகவும் செல்வாக்கு மிக்க இராணுவ அதிகாரிகளை தன் வழிக்கு கொண்டுவருவதில் ஆல்சிபியாடீசு ஈடுபட்டார். மேலும் அவர்களிடம் மூன்று தனது மூன்று கட்ட திட்டங்களை அளித்தார். அந்த மூன்று திட்டங்களாவன: ஏதெனியன் அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டும், ஆல்சிபியாடீசை திரும்பப் அழைத்துக்கொள்ள வாக்களிக்கப்பட வேண்டும், மேலும் பாரசீக ஆளுநர் திசாபெர்னஸ் மற்றும் பாரசீக மன்னரை ஏதென்சுக்கு ஆதரவாக திருப்ப வேண்டும் போன்றவை ஆகும். ஏதெனியன் கடற்படையில் உள்ள பெரும்பாலான அதிகாரிகள் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். துசிடிடீசின் கூற்றுப்படி, சமோசில் உள்ள ஏதெனியன் தளபதிகளில் ஒருவரான பிரினிச்சஸ் மட்டுமே இத்திட்டங்களை எதிர்த்தார்.[61] மற்றொரு தளபதியான திராசிபுலசு இச்சதியில் கொண்ட ஈடுபாடு தெளிவாக தெரியவில்லை. [lower-alpha 2] இருந்தாலும் ஆல்சிபியாடீசின் எண்ணம் முழுமையாக நிறைவேரவில்லை.
கடைசியில் பணக்காரப் பிரிவினர் ஏதென்சில் சனநாயகத்தை தூக்கியெறிந்து நானூறு பேரடங்கிய சிலவர் ஆட்சியைத் திணிப்பதில் வெற்றி பெற்றனர். இதில் தலைவர்களில் பிரினிச்சஸ் மற்றும் பிசாந்தர் ஆகியோர் அடங்குவர். மேலும் சமோசில், சதிகாரர்களால் தூண்டப்பட்ட இதேபோன்ற புரட்சி அவ்வளவு சீராக முன்னேறவில்லை. சாமோசில் இருந்த சனநாயகவாதிகள் சதித்திட்டத்தைப் பற்றி அறிந்து, எச்சரிக்கை அடைந்தனர். தளபதிகள் லியோன், தியோமெடன், திரையராக் திராசிபுலஸ், திராசில்லஸ் ஆகியோர் பொதுவாக ஏதெனியன் படையினரின் ஆதரவுடன், சாமியான் சனநாயகவாதிகள் அங்கு அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்ற 300 சாமியான் சிலவர் ஆட்சியின் ஆதரவக்குழுக்களைத் தோற்கடித்தனர்.[64] மேலும், சமோஸில் உள்ள ஏதெனியன் துருப்புக்கள் தங்களை ஒரு அரசியல் கூட்டமாக உருவாக்கி, தங்கள் தளபதிகளை பதவி நீக்கம் செய்து, திராசிபுலஸ் மற்றும் திராசில்லஸ் உட்பட புதியவர்களைத் தேர்ந்தெடுத்தனர்.[65]
சிறிது காலத்திற்குப் பிறகு, திராசிபுலசில் கூடியிருந்த துருப்புக்களை ஆல்சிபியாடீசை நாடு கடத்தலில் இருந்து திரும்ப அழைக்க வற்புறுதப்பட்டனர். பின்னர் ஆல்சிபியாடீசை மீண்டும் அழைதுவர கப்பலில் சென்று அவருடன் சமோசுக்குத் திரும்பினார். இவரை திரும்ப அழைத்து வந்ததன் நோக்கம் எசுபார்த்தன்களுக்கு உள்ள பாரசீக ஆதரவை இல்லாமல் ஆக்குவதாகும். ஏனெனில் ஆல்சிபியாடீசு பாரசீக ஆளுநர் திசாபெர்னசுடன் பெரும் செல்வாக்கைக் கொண்டிருப்பதாக அப்போது நம்பப்பட்டது.[66] ஏதென்சில் உள்ள சர்வாதிகார ஆட்சியை வீழ்த்துவதற்கு அவரது உதவியைப் பயன்படுத்துவதற்காக ஆல்சிபியாடீசை இராணுவம் அழைத்துவந்ததாக புளூடார்க் கூறுகிறார்.[67]
கூடியிருந்த துருப்புக்களிடம் தனது முதல் உரையில், ஆல்சிபியாடீசு தனது நாடுகடத்தலின் சூழ்நிலைகளைப் பற்றி கசப்புடன் குறைபட்டார். ஆனால் பேச்சின் பெரும்பகுதி பாரசீக ஆளுநர் திசாபெர்னசிடம் தனக்கு உள்ள செல்வாக்கைப் பற்றி பெருமை பேச்சாகவே இருந்தது. ஏதென்சில் உள்ள சிலவர் ஆட்சியினருக்கு தன்னைப் பற்றிய அச்சத்தை உண்டாக்குவதும், சாமோசில் உள்ள இராணுவத்தில் தனது செல்வாக்கை அதிகரிப்பதுமே இவரது உரையின் முதன்மை நோக்கங்களாக இருந்தது. இவரது உரையைக் கேட்ட துருப்புக்கள் உடனடியாக இவரை திராசிபுலஸ் மற்றும் பிறருடன் தளபதியாகத் தேர்ந்தெடுத்தனர். இராணுவத்தினர் ஒரே நேரத்தில் பிரேயசு மீது படை யெடுத்தும், ஏதென்சின் சிலவர் ஆட்சிக்குழுவினரைத் தாக்க முன்மொழிந்தனர்.[68] இந்த விசயத்தில் முதன்மையாக ஆல்சிபியாடீசு, திராசிபுலசு உடன் சேர்ந்து, அவர்களை அமைதிப்படுத்தினர். மேலும் இந்த திட்டத்தில் உள்ள முட்டாள்தனத்தை அவர்களுக்கு சுட்டிக்காட்டி, இது ஏதென்சில் உள்நாட்டுப் போரைக் காரணமாகி ஏதென்சு போரில் உடனடியாக தோல்வியடைய வழிவகுக்கும் என்றனர்.[67] ஆல்சிபியாடீசு ஏதெனியன் தளபதிகளில் ஒருவராக மீண்டும் பதவியேற்றதற்குப் பிறகு, நானூறு அரசாங்கம் தூக்கியெறியப்பட்டு, மிதவாதளைக் கொண்ட நெகிழ்வுத் தன்மையுள்ள பலவர் ஆட்சியாக மாற்றப்பட்டது. அது இறுதியில் சனநாயகத்திற்கு வழிவகுத்தது.[69]
ஆல்சிபியாடீசு தளபதியாக ஆனபிறகு கப்பல்களின் ஒரு பிரிவினருடன் பாரசீக ஆளுநர் திசாபெர்னெசை நோக்கி பயணித்தார். புளூடார்க்கின் கூற்றுப்படி, இந்தப் பயணத்தின் நோக்கம் பெலோபொன்னேசியர்களின் உதவிக்கு பாரசீக கடற்படை வருவதைத் தடுப்பதாகும்.[67] பாரசீகக் கடற்படை ஆசியா மைனரின் அஸ்பெண்டசில் இருப்பதாகவும், ஆல்சிபியாடீசு அந்தக் கப்பற்படையை தங்கள் தரப்புக்குச் சார்பாக கொண்டு வரவோ அல்லது எதிராக வருவதைத் தடுக்கவோ முயன்றதாக புளூடார்க்கின் கருத்துடன் துசிடிடீஸ் உடன்பட்டார். ஆனால் துசிடிடீஸ் அதற்கு மேலும் ஊகிக்கிறார், பயணத்தின் உண்மையான காரணம் திசாபெர்னசுக்கு தனது புதிய நிலையை தெரிவித்து, அவர் மீது உண்மையாகவே செல்வாக்கைப் பெற முயற்சித்தது ஆகும்.[68] வரலாற்றாசிரியரின் கூற்றுப்படி, திசாபெர்னஸ் கடற்படையை கொண்டு வர எப்போதும் விரும்பவில்லை என்பதை ஆல்சிபியாடீசு நீண்ட காலமாக அறிந்திருந்தார்.[70]
சாமோசில் இருந்த ஏதெனியப்படைகள் ஏதென்சுக்கு எதிராக கிளம்பிய இராச்சியங்களை ஒவ்வொன்றாக அடக்கத் தொடங்கியது. வடக்கே எல்ப்லெஸ்ப்பாண்டில் ஏதென்சின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்த சிசிகஸ் இராச்சியம் கி.மு. 411 இல் ஏதென்சுக்கு எதிரான கலகத்தில் இறங்கியது. அதனை ஆல்சிபியாடீசு தலைமையிலான ஏதெனியக் கடற்படை ஒடுக்கியது. இந்நிலையில் சிசிகசுக்கு ஆதரவாக எசுபார்த்தன் கடற்படை விரைந்து வந்தது. இதன் விளைவாக கிமு. 410 இல் இரு கடற்படைகளுக்கும் இடையில் சிசிகஸ் சமர் என்னும் சமர் நடநத்து. அப்போரில் எசுபார்த்தன் கடறைபடை அடியோடு நாசமாக்கப்பட்டது. இதன்பிறகு எசுபார்த்தாவுக்கு எதிராக பல போர்களில் கலந்துகொண்டார்.
சனநாயப் பிரிவினரின் ஆட்சியின் அழைப்புக்கு இணங்க ஆல்சிபியாடீசு கிமு. 407 ஆம் ஆண்டு ஏதென்சுக்கு திரும்பினார். அதாவது நாடுகடத்தப்பட்ட எட்டாவது ஆண்டு திரும்பினார். மக்கள் இவரை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். இவருடைய துரோகங்களை மறந்து போர்திறமையை போற்றினர். நாடுகடத்தலிப்போது பறிமுதல் செய்யப்பட்ட இவரது சொத்துக்கள் இவரிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன. பிரதம படைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். போரை நடத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும் ஆல்சிபியாடீசுக்கு வழங்கப்பட்டன.
புரட்சி செய்த இராச்சியங்களை மீண்டும் ஏதென்சின் அதிகாரத்துக்குள் கொண்டுவர சாமோஸ் தீவு நோக்கி நூறு கப்பபல்கள் கொண்ட பெரும் படைகள் ஆல்சிபியாடீசு தலைமையில் சென்றன. இந்தப் படைகளின் பெரும்பகுதியை நோட்டியம் துறைமுகத்தில் தன் உதவிப் படைத் தளபதியான அண்ட்டியோக்கஸ் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, போரில் எவ்வித தலையீடும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டு, ஒரு சிறு படையுடன் போசியா என்ற இடத்திற்கு ஆல்சிபியாடீசு சென்றார்.
நோட்டியம் துறைமுகத்துக்கு அருகில் எசுபார்தன் தளபதி லைசாந்தர் தலைமையில் கடற்படை தங்கி இருந்தது. ஆல்சிபியாடீசு தர்ரவரை மீறி அண்ட்டியோக்ககஸ் எசுபார்த்தன் கடற்படையை வம்பிக்கிழுத்தார். போரில் ஏதெனியக் கடற்படை தோல்வியுற்றது போரில் அண்ட்டியோக்ககஸ் இறந்தார்.
இந்தச் செய்தி ஏதென்சுக்கு எட்டியது. ஆல்சிபியாடீசு எப்படி அண்ட்டியோக்ககஸ் வசம் படையை ஒப்புவித்துச் செல்லலாம் என்ற கேள்வி எழுந்தது. இதை சாக்காக பயன்படுத்திய இவரது எதிரிகள் இவரை படையின் தலைமையில் இருந்து விடுவித்தனர். தலைமைப் பதவியில் நீக்கப்பட்டது தெரிந்த மீண்டும் ஏதென்சுக்குத் திரும்பாத ஆல்சிபியாடீசு, திரேசியன் செர்சோனீசில் தான் ஏற்படா செய்து வெஐத்திருந்த இடத்திற்கு சென்றுவாட்டார். அந்தத் தோல்வி சிறியதாக இருந்தபோதிலும், ஆல்சிபியாட்ஸ் மட்டுமின்றி அவரது கூட்டாளிகளான திராசிபுலஸ், தெரமெனெஸ், கிரிடியாஸ் ஆகியோரையும் இது களத்திலிருந்து அகற்றியது.[72] அந்த நேரத்தில் ஏதென்சில் இருந்த மிகவும் திறமையான தளபதிகள் இவர்களாவர். இவர்கள் அகற்றப்படதால் ஈகோஸ்போடாமியில் ஏதென்சின் முழுமையான தோல்விக்குப் பிறகான அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏதென்சு சரணடைய வழிவகுத்தது.[73]
நாடுகடத்தப்பட்ட ஆல்சிபியாடீசு ஈகோஸ்ப்பொட்டாமியில் ஏதெனியன் முகாமுக்கு அருகிலுள்ள தனது கப்பல் கோட்டையகத்தில் வசித்து வந்தார். ஈகோஸ்போட்டாமி சமருக்கு முன்பு, ஏதெனிய கப்பல்கள் கூடியிருந்த கடற்கரைக்கு வந்திறங்கி, தளபதிகளுக்குப் பல ஆலோசனைகளை வழங்கினார். முதலில், இந்த இடத்தில் இருந்து கடற்படையை அழைத்துக் கொண்டு எதிரிலுள்ள பாதுகாப்பான துறைமுகமான செஸ்டோசுக்கு சென்றுவிடுமாறு ஆலோசனை கூறினார். இரண்டாவதாக, பல திரேசிய மன்னர்கள் தனக்கு இராணுவத்தை வழங்க முன்வந்ததாக குறிப்பிட்டார். தளபதிகள் தனக்கும் போர் வழிநடத்துதலில் உரிய பங்கை அளித்தால், ஏதெனியர்களுக்கு உதவியாக அவர்கள் அளிக்கும் இராணுவத்தைப் பயன்படுத்துவதாக கூறினார். இருப்பினும், தளபதிகள் இந்த வாய்ப்பையும், அவரது ஆலோசனையையும் நிராகரித்தனர். அவர்களால் அலட்சியப்படுத்தப்பட்டதால் ஆல்சிபியாடீசு தனது இருப்பிடத்துக்குத் திரும்பினார்.[74] சில நாட்களுக்குப் பிறகு, லைசாந்தரால் ஏதெனியக் கடற்படை அழிக்கப்படது.
ஈகோஸ்ப்பொட்டாமி போருக்குப் பிறகு, எசுபார்த்தாவுக்கு எதிராக பாரசீக மன்னர் அர்தசெர்க்சின் உதவியைக் கோரும் நோக்கத்துடன் ஆல்சிபியாட்ஸ் ஹெலஸ்பாண்டைக் கடந்து ஹெலஸ்போன்டைன் ஃபிரிஜியாவில் தஞ்சம் புகுந்தார்.[75] ஆல்சிபியாடெஸ் பல கிரேக்க பிரபுக்களில் ஒருவராக அங்கு இருந்தார். அவர்கள் தாயகம் தலைகீழாக மாறியதைத் தொடர்ந்து அகாமனிசியப் பேரரசில் தஞ்சம் புகுந்தனர். இவரைப் போல தஞ்சம்புகுந்த மற்ற பிரபலமானவர்கள் தெமிஸ்டோகிள்ஸ், ஹிப்பியாஸ், கோங்கிலோஸ் தெமிஸ்ட்டோக்ளீஸ் ஆகியோர் ஆவர்.[57] பொதுவாக, அவர்கள் அகாமனிசிய அரசர்களால் விரும்பி வரவேற்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக நில மானியங்களையும் அளித்தனர். மேலும் ஆசியா மைனரின் பல்வேறு நகரங்களை ஆட்சி செய்தனர்.
முரண்பட்ட தரவுகள் இருப்பதால், ஆல்சிபியாடெசின் மரணம் பற்றிய தகவல் உறுதியற்றதாக உள்ளது. இவற்றில் பழமையான தரவுகளின்படி. இவரது மரணத்துக்கு எசுபார்த்தன் மற்றும் குறிப்பாக லைசாந்தரே பொறுப்பு எனப்படுகிறது.[78]
கிமு 404 இல், இவர் பாரசீக நீதிமன்றத்திற்குச் செல்லவிருந்தபோது, இவரது இல்லம் சுற்றி வளைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. தப்பிக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையிலும் இவர் தன்னைக் கொல்லவந்தவர்களை நோக்கி கையில் கத்தியை ஏந்தியபடி விரைந்தார். அப்போது எதிகளின் அம்பு மழையால் கொல்லப்பட்டார்.[79] அரிசுடாட்டிலின் கூற்றுப்படி, ஆல்சிபியாடீசு இறந்த இடம் ஃபிரிஜியாவில் உள்ள எலாஃபஸ் மலையாகும்.[80]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.