கிமு 478 இல் நிறுவப்பட்ட [1] இடெலியன் கூட்டணி (Delian League) ஏதென்சின் தலைமையின் கீழ் 150 மற்றும் 330 [2] வரையிலான உறுப்பினர்களைக் கொண்ட கிரேக்க நகர அரசுகளின் சங்கமாக இருந்தது. கிரேக்கத்தின் மீதான இரண்டாவது பாரசீக படையெடுப்பின் முடிவில் பிளாட்டியா போரில் கிரேக்க கூட்டணியின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் பாரசீகப் பேரரசு படையெடுத்து வந்தால் தொடர்ந்து போராடுவதே இதன் நோக்கமாக இருந்தது. [3]

Thumb
கிமு 431 இல் பெலோபொன்னேசியன் போருக்கு முன் இடெலியன் கூட்டணி.

கூட்டணியின் நவீன பெயரானது இதன் அதிகாரப்பூர்வ சந்திப்பு இடமான [4] இடெலோசு தீவில் இருந்து வந்தது. அங்கு உள்ள கோவிலில் மாநாடுகள் நடைபெற்றன மேலும் கூட்டமைப்பின் கருவூலமும் அங்கேயே இருந்தததால் ஒரு குறியீட்டாக இப்பெயரால் அழைக்கப்படுகிறது. [5] பெரிக்கிளீசு அதை கிமு 454 இல் ஏதென்சுக்கு மாற்றினார்.

இந்த கூட்டணியின் பொதுவான நோக்கங்கள் என்பவை: பாரசீக ஆதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த கிரேக்க நகர அரசுகள் மீண்டும் அவர்களின் ஆதிக்கதுக்கு உட்படாமல் பாதுகாத்தல், பாரசீகத்தின் ஆதிக்கத்தில் இருந்து இன்னும் விடுபடாத கிரேக்க இராச்சியங்களை விடுவித்து அவற்றிற்கு பாதுகாப்பு அளித்தல், பாரசீக படையெடுப்பினால் ஏற்பட்ட துன்பங்களுக்கு பழிவாங்க அவர்களுக்கு துன்பங்களை ஏற்படுத்துதல் போன்றவை ஆகும்.

டெலியன் கூட்டணியின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக வலிமையான கடற்படை தேவைப்பட்டது. அதற்காக சொந்தமாக கடற்படை வைத்திருக்கிற பணக்கார கிரேக்க நகர அரசுகளான சாமோஸ், சியோஸ், லெஸ்போஸ் நாக்சோஸ், தாசோஸ் போன்றவை கப்பல்களையும் அதற்கான தளவாடங்களையும் வழங்கின. சொந்தமாக கடற்படை இல்லாத சிறிய அரசுகள் போர்க் கப்பல்களுக்கு பதிலாக ஆண்டுதோறும் கூட்டணிக்கு போரோஸ் எனப்படும் மகமைத் தொகையை செலுத்தவேண்டும். இத்தொகையானது அரசுகளின் செல்வ நிலையைப் பொறுத்து அதன் மதிப்புக்கு ஏற்றவாறு விதிக்கப்பட்டது. இதை நேர்மைக்கு பேர்போன அரிசுடடைடீசு நிர்ணயித்தார். மேலும் மொத்தத் தொகை 460 டாலெட்டுகள் எனவும் அவரால் நிர்ணயிக்கப்பட்டது. இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இந்த மொத்தத் தொகை சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மாறாமல் இருந்தது. ஆனால் நகர அரசுகள் செலுத்தவேண்டிய தொகையை குறித்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசீலனை செய்யப்பட்டு தேவைப்பட்டால் திருத்தி அமைக்கப்பட்டன.

கூட்டணியில் உறுப்பினர்களாக உள்ள எல்லா அரசுகளுக்கும் சமமான அந்தஸ்து கொடுக்கப்பட்டன. ஒரு இராச்சியத்துக்கு ஒரு வாக்கு என்று அளிக்கப்பட்டது. என்றாலும் ஏதென்சுக்கு மிகுதியான செல்வாக்கு என்பது நடைமுறையில் இருந்தது. கூட்டணியின் மகமைத் தொகையை வசூலிக்க எல்லெனோட்டோமியி எனப்படும் பத்து அதிகாரிகள் நியமிக்கபட்டனர். இந்த பத்துபேரும் ஏதெனியர்களேயாவர். இவர்கள்தான் கூட்டணியின் கருவூலத்திற்கு பாதுகாப்பாளர்க இருந்தனர். மேலும் கூட்டணியின் கடற்படைக்கு தலைமை வகித்தவர்களும் ஏதெனியர்களேயாவர். ஆக அனைத்தும் ஏதென்சின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன.

கூட்டணி தொடக்கத்திற்குப் பிறகு, கூட்டணியின் நிதியை ஏதென்ஸ் தனது சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தத் தொடங்கியது. இது ஏதென்சுக்கும் கூட்டமைப்பின் வலிமை குறைந்த உறுப்பினர்களுக்கும் இடையே மோதல்களுக்கு வழிவகுத்தது. கிமு 431 வாக்கில், இந்த கூட்டணிக்கும் எசுபார்டன் மேலாதிக்கத்துடன் உருவாக்கப்பட்ட பெலோபொன்னேசியன் கூட்டணிக்கும் இடையில் பெலோபொன்னேசியன் போர் ஏற்பட்டது. கிமு 404 இல் எசுபார்த்தன் தளபதியான லைசாந்தரின் வழிகாட்டுதலின் கீழ் போரின் முடிவில் கூட்டணி கலைக்கப்பட்டது.

குறிப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.