பண்டைய கிரேக்க நகரம் From Wikipedia, the free encyclopedia
பைசாந்தியம் (Byzantium அல்லது Byzantion, கிரேக்கம்: Βυζάντιον ) என்பது ஒரு பண்டைய கிரேக்க நகர அரசாகும். இது பாரம்பரியக் காலத்தின் பிற்பகுதியில் கான்ஸ்டண்டினோபில் என்றும், தற்காலத்தில் இசுதான்புல் என்றும் அறியப்படுகிறது. பைசாந்தியப் பேரரசின் ஆயிரம் ஆண்டு வரலாற்று காலத்தில் கான்ஸ்டாண்டினோப்பிளின் கிரேக்கப் பெயரான பைசான்டியனும் அதன் லத்தீன்மயமாக்ககபட்ட பைசான்டியமும் அவ்வப்போது மாறுபட்ட அளவுகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வந்தது. [1] [2] கிமு 7 ஆம் நூற்றாண்டில் மெகாராவில் இருந்து கிரேக்கர்கள் பைசாந்தியத்துக்கு குடியேறினர். இது கி.பி 1453 இல் உதுமானியப் பேரரசால் கைப்பற்றப்படும் வரை இங்கு கிரேக்க மொழியே பேசப்பட்டது. [3]
மெகாராவின் பைசாஸ் (ஏதென்சுக்கு அருகிலுள்ள ஒரு நகர அரசு) ஏஜியன் கடல் வழியாக வடகிழக்கில் பயணம் செய்தபோது நகரத்தை நிறுவினார் என்று பாரம்பரியக் கதை கூறுகிறது. எரோடோட்டசின் குறிப்புகளின்படி பொதுவாக இது கிமு 667 இல் நிறுவப்பட்டதாக வழங்கப்படுகிறது. சால்சிடனுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நகரம் நிறுவப்பட்டதாக அவர் கூறுகிறார். ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்குப் பிறகு அதுபற்றி எழுதிய யூசிபியஸ், சால்சிடன் நிறுவப்பட்டதை கிமு 685/4 என்று குறிப்பிடுகிறார். ஆனால் அவர் பைசாந்தியம் நிறுவப்பட்டதை கிமு 656 என்று குறிப்பிடுகிறார். எரோடோடசின் தேதியே பின்னர் முதலாம் கான்ஸ்டன்டைனால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் 333 மற்றும் 334 ஆண்டுகளுக்கு இடையில் பைசாந்தியத்தின் 1000 வது ஆண்டு விழாவைக் கொண்டாடினார்.[4]
பைசாந்தியம் கருங்கடலின் ஒரே நுழைவாயிலில் அமைந்திருப்பதால் இது முக்கியமாக வர்த்தக நகரமாக இருந்தது. பைசாந்தியம் பின்னர் சால்சிடனைக் கைப்பற்றியது.
பாரசீக பேரரசின் மன்னர் முதலாம் டேரியசால் (ஆ்ட்சிக் காலம் கி.மு, 522-486 ) சித்தியன் போர்த் தொடரின் போது (கிமு 513) பாரசீகப் பேரரசால் இந்த நகரம் கைப்பற்றப்பட்டது. மேலும் இது ஸ்குத்ராவின் நிர்வாக மாகாணத்தில் சேர்க்கப்பட்டது. திரேசில் உள்ள மற்ற நகரங்களுடன் ஒப்பிடும்போது நகரத்தில் அகாமனிசியத்தின் கட்டுப்பாடு எப்போதும் நிலையானதாக இல்லை என்றாலும், செஸ்டோசுடன், போஸ்பரஸ் மற்றும் தார்தனெல்சு நீரிணையில் ஐரோப்பிய கடற்கரையில் உள்ள முதன்மையான அகாமனிய துறைமுகங்களில் ஒன்றாக இது கருதப்பட்டது.[5]
பெலோபொன்னேசியப் போரின்போது கிரேக்கப் படைகளால் பைசாந்தியம் முற்றுகையிடப்பட்டது. ஏதென்சின் முற்றுகையின் போது ஏதென்சுக்கு தானிய விநியோகத்தை துண்டிப்பதற்கான எசுபார்த்தாவின் போர் வியூகத்தின் ஒரு பகுதியாக, ஏதெனியர்களை அடிபணிய வைக்க, கிமு 411 இல் எசுபார்த்தா நகரத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டது. கிமு 408 இல் ஏதெனியன் இராணுவம் பின்னர் நகரத்தை மீட்டெடுத்தது, எசுபார்த்தாக்கள் தங்கள் குடியேற்றத்துக்கு தொடர்ந்து பின்வாங்கினர்.[6]
கி.பி 196 இல் இந்த நகரமானது உரோமானியப் படைகளால் முற்றுகையிடப்பட்டது அதனால் நகரம் பெரும் சேதத்தை அடைந்தது. அதன்பிறகு பைசாந்தியப் பேரரசரான செப்டிமியஸ் செவெரஸால் மீண்டும் நகரம் கட்டமைக்கப்பட்டது. மேலும் இதன் முந்தைய செழிப்பை விரைவாக அடைந்தது. இது செப்டிமியஸ் செவெரசின் காலத்தில் பெரிந்தசுடன் இணைக்கப்பட்டது. உத்திநோக்கு மற்றும் மிகவும் தற்காப்புக்குரிய (கிட்டத்தட்ட எல்லா பக்கங்களிலும் நீரால் சூழப்பட்டிருப்பதால்) பைசாந்தியத்தின் அமைவிடம் உரோமானிய பேரரசர் கான்ஸ்டன்டைனை ஈர்த்தது. அவர் கி.பி 330 இல், நோவா ரோமா என அழைக்கப்படும் ரோமின் அமைப்பினால் ஈர்க்கபட்டு ஒரு பேரரசின் குடியிருப்பாக இதை மீண்டும் உருவாக்கினார். அவரது மரணத்திற்குப் பிறகு, இந்த நகரம் கான்ஸ்டண்டினோபில் என்று அழைக்கப்பட்டது (கிரேக்கம் Κωνσταντινούπολις, கான்ஸ்டான்டினோபோலிஸ், "கான்ஸ்டன்டைன் நகரம்").
பேரரசு மற்றும் இதன் இருப்பிடமானது, ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களுக்கு இடையேயான இணைப்பாக பாலமாக கான்ஸ்டான்டினோப்பில் இருந்தது. இது ஒரு வணிக, கலாச்சார மற்றும் இராஜதந்திர மையமாக இருந்தது. மேலும் பல நூற்றாண்டுகளாக பைசாந்தியப் பேரரசின் தலைநகராக இருந்தது. இந்த நகரத்தை ஏராளமான நினைவுச்சின்னங்கள் அலங்கரித்தது, அவற்றில் சில இன்றும் உள்ளன. இந்த இடத்தின் அமைவிடத்தைக் கொண்டு, கான்ஸ்டான்டிநோபிள் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான முக்கிய வணிகப் பாதைகளையும், மத்தியதரைக் கடலில் இருந்து கருங்கடலுக்கான பாதையையும் கட்டுப்படுத்தியதாக இருந்தது. 1453 மே 29இல், இந்நகரம் உதுமானிய துருக்கியர்களிடம் வீழ்ந்தது, மீண்டும் ஒரு சக்திவாய்ந்த அரசாக உதுமானியப் பேரரசின் தலைநகராக மாறியது. துருக்கியர்கள் இந்த நகரத்தை "இஸ்தான்புல்" என்று அழைத்தனர் (அது அதிகாரப்பூர்வமாக 1930 வரை மறுபெயரிடப்படவில்லை என்றாலும்); பெயர் "ஈஸ்-டென்-பொலின்" என்பதிலிருந்து வந்தது. இன்றுவரை இது துருக்கியின் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக உள்ளது, இருப்பினும் அங்காரா இப்போது தேசிய தலைநகராக உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.