பழுப்பு நாய் விவகாரம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பழுப்பு நாய் விவகாரம் (ஆங்கிலம்: The Brown Dog affair) என்பது 1903 முதல் 1910 வரை பிரிட்டனில் பரபரப்பாகப் பேசப்பட்ட உடற்கூறாய்வு பற்றிய அரசியல் சர்ச்சையாகும். இலண்டன் பல்கலைக்கழக மருத்துவ விரிவுரைகளில் ஸ்வீடன் நாட்டுப் பெண்ணியவாதிகளின் இரகசியமாக ஊடுருவிய செயல், மருத்துவ மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சண்டை மூண்ட நிகழ்வுகள், நாய் சிலை ஒன்றுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்ட நிகழ்வு, பிரிட்டனின் அரச நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு போடப்பட்ட நிகழ்வு, அறிவியல் பரிசோதனைகளில் விலங்குகளைப் பயன்படுத்துவதைக் குறித்து விசாரிக்க இராயல் ஆணையம் நிறுவப்பட்ட நிகழ்வு என பலதரப்பட்ட நிகழ்வுகளை உள்ளடக்கியது. நாட்டையே பிளவுபடுத்திய இந்த விவகாரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்காக மாறியது.[1]
மேல்: ஜோசப் வயிட்ஹெட் வடிவமைத்த பழுப்பு நாய், பேட்டர்ஸீயின் லாட்ச்மியர் பொழுதுபோக்குத் திடலில் 1906-ல் நிறுவப்பட்டு 1910-ல் தகர்க்கப்பட்டது.கீழ்: நிகோலா ஹிக்ஸ் என்பவர் வடிவமைத்த புதிய சிலை 1985-ம் ஆண்டு பேட்டர்ஸீ பூங்காவில் நிறுவப்பட்டது. | |
நாள் | பிப்ரவரி 1903 – மார்ச் 1910 |
---|---|
அமைவிடம் | இலண்டன், இங்கிலாந்து, குறிப்பாக பேட்டர்ஸீ |
புவியியல் ஆள்கூற்று | 51°28′19″N 0°9′42″W (அசல் சிலையின் அமைவிடம்) |
கருப்பொருள் | விலங்குப் பரிசோதனை |
தொடர்புடைய நபர்கள் |
|
விசாரணை | Bayliss v. Coleridge (1903) |
Royal commission | Second Royal Commission on Vivisection (1906–1912) |
பிப்ரவரி 1903-ல் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் உடலியங்கியல் துறையைச் சேர்ந்த வில்லியம் பேலிஸ் 60 மருத்துவ மாணவர்களைப் பார்வையாளர்களாகக் கொண்ட ஒரு வகுப்பில் ஒரு பழுப்பு நிற டெரியர் நாயை சட்டவிரோதமான முறையில் உடற்கூறாய்வு செய்ததே இந்த சர்ச்சைக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது. சம்பவத்தன்று அந்த நாய்க்குப் போதுமான அளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்தது என்று பேலிஸ்ஸூம் அவரது சகாக்களும் கூறினாலும் மயக்க மருந்து கொடுக்கப்படவில்லை என்றும் உடலை அறுக்கும் போது அந்த நாய் நனவுடனும் வலியால் துடித்துக் கொண்டும் இருந்தது என்றும் அதை மாறுவேடத்தில் கண்காணித்த ஸ்வீடன் நாட்டு ஆர்வலர்கள் கூறினர். இந்த நிகழ்வு கொடூரமானதும் சட்டவிரோதமானதும் ஆகும் என்று கூறிய தேசிய உடற்கூறாய்வு எதிர்ப்பு சங்கம் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தது. ஹார்மோன்களைக் கண்டறிவதற்கு வழிவகுத்த அறிவியல் ஆராய்ச்சிகளை நாய்கள் மீது செய்த பேலிஸ், இவற்றைத் தனது நற்பெயருக்கு உண்டான களங்கமாகக் கருதி வெகுண்டு அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்து அவ்வழக்கில் வெற்றி பெறவும் செய்தார்.[2]
உடற்கூறாய்வு எதிப்பு ஆர்வலர்கள் ஒன்று திரண்டு 1906-ம் ஆண்டு பேட்டர்ஸீயில் உள்ள லாட்ச்மியர் பொழுதுபோக்குத் திடலில் பாதிக்கப்பட்ட பழுப்பு நாயின் நினைவாக வெண்கலச் சிலை ஒன்றை நிறுவினர். அந்த நினைவுச் சின்னத்தில் "இங்கிலாந்தின் மக்களே, இன்னும் எத்தனை காலம் தான் இப்படி?" என்ற பொறிக்கப்பட்ட ஒரு பலகையும் நிறுவப்பட்டது. இந்தப் பலகையைக் கண்டு ஆத்திரமடைந்த மருத்துவ மாணவர்கள் அந்த நினைவுச்சின்னத்தை தொடர்ச்சியாக சேதப்படுத்த முற்படவே, அந்த நினைவுச்சின்னத்திற்கு "நாய் எதிர்ப்பாளர்களிடமிருந்து" பாதுகாக்க வேண்டி 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது.[3] 10 டிசம்பர் 1907 அன்று, பழுப்பு நாயின் கொடும்பாவி உருவங்களை குச்சிகளில் செருகி அவற்றை அசைத்த வண்ணம் நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் மத்திய இலண்டன் வழியாக பேரணி ஒன்றை நடத்தினர். இதில் அந்த மாணவர்கள் வழியில் பெண்ணிய ஆர்வலர்கள், தொழிற்சங்கவாதிகள், 300 காவல்துறை அதிகாரிகள் எனப் பலருடனும் மோதலில் ஈடுபட்டனர். இது பின்னாளில் "பழுப்பு நாய் கலவரங்கள்" என அழைக்கப்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களில் ஒன்றாகும்.[4]
மார்ச் 1910-ல் சர்ச்சை தொடர்ந்து மேலோங்க, பேட்டர்ஸீ நகரசபையானது நான்கு தொழிலாளர்களை 120 காவல்துறை அதிகாரிகளின் துணையோடு அனுப்பி இரவோடு இரவாக சிலையை அகற்ற ஏற்பாடு செய்தது. அதன் பிறகு 20,000 நபர்களுக்கு மேல் கையொப்பங்களிட்டு சிலைக்கு ஆதரவாக மனுக்கள் அனுப்பப்பட்ட பின்னரும் நகரசபை அச்சிலையை உருக்கிவிட்டதாகக் கூறப்பட்டது.[5] 1985-ம் ஆண்டு பேட்டர்ஸீ பூங்காவில் பழுப்பு நாயின் புதிய சிலை ஒன்று உடற்கூறாய்வு எதிர்ப்பு குழுக்களால் நிறுவப்பட்டது.[6]
6 செப்டம்பர் 2021 அன்று, பழுப்பு நாயின் அசல் (முதல்) சிலை திறக்கப்பட்ட 115-வது ஆண்டு நினைவு நாளில், அசல் சிலையை மறுவடிவமைக்க வேண்டி எழுத்தாளர் பவுலா எஸ். ஓவன் ஒரு புதிய பிரச்சாரத்தைத் தொடங்கினார்.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.