From Wikipedia, the free encyclopedia
மெல்லுடலிகள் (Mollusca) என்பவை முதுகெலும்பற்ற விலங்குகளில் இரண்டாவது மிகப்பெரிய தொகுதி ஆகும். இதுவரை சுமார் 85,000 மெல்லுடலிகள் இனம் காணப்பட்டுள்ளன. இவை மிக மெலிதான ஓடுகளைக் கொண்டு இருக்கும்.[2].
மெல்லுடலிகள் புதைப்படிவ காலம்: கேம்பிரியன் நிலை 2 - தற்போது வரை | |
---|---|
![]() | |
கரீபியன் கணவாய் Sepioteuthis sepioidea | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பெருந்தொகுதி: | Lophotrochozoa |
தொகுதி: | மெல்லுடலி L, 1758 |
Classes | |
Aplacophora | |
உயிரியற் பல்வகைமை | |
c.200,000 species[1] |
மெல்லுடலிகளில் மொத்தம் 100,000க்கும் மேற்பட்ட இனங்கள் இருந்துள்ளதாக புதைப்படிவங்களின் மூலம் அறியமுடிகிறது. மேலும் 70,000க்கும் அதிகமான சிற்றினங்கள் அற்றுப்போய்விட்டன. முத்துச்சிப்பி, கணவாய் முதலியன மெல்லுடலி வகையைச் சேர்ந்தன. வகைப்பாட்டியலில் மெல்லுடலிகள் பொதுவாக பத்து வகுப்புகளாக பிரிக்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு வகுப்புகள் முற்றிலும் அற்றுப்போய்விட்டன.
மெல்லுடலிகள் முக்கியமான முதுகெலும்பற்ற விலங்குகளாகும். இவற்றுள் மிக மெதுவாக அசையும் நத்தை தொடக்கம் மிக வேகமாக நீந்தும் இராட்சத ஸ்குயிட்டுக்களும் அடங்குகின்றன. இவற்றின் உடல் பொதுவாக வழவழப்பானதாகவும், மென்மையானதாகவும் இருக்கும். பல இனங்கள் தம்மைச் சுற்றிப் பாதுகாப்புக்காக கல்சியம் காபனேற்றாலான ஓட்டைச் சுரக்கின்றன. இவற்றின் அடிப்பகுதியில் தசையாலான பாதமொன்று காணப்படும். ஒக்டோபசு போன்ற சீபலோபோடா விலங்குகளில் இப்பாதப் பகுதியே பல கைகளாகத் திரிபடைந்திருக்கும்.
மெல்லுடலிகளில் உணவுண்பதற்காகச் சிறப்பாகக் காணப்படும் உறுப்பு வறுகி (radula) ஆகும். இவை இவ்வுறுப்பைப் பயன்படுத்தியே உணவைக் கிழித்து உண்கின்றன. இவற்றின் குருதிச் சுற்றோட்டத் தொகுதி திறந்த தொகுதியாகும். மெல்லுடலிகளில் சீபலோபோடாக்களே மிகவும் சிக்கலான உடலியல் கட்டமைப்பைக் கொண்டுள்ளன. இவற்றில் பல கைகளுள்ளன, ஓடு பலவற்றில் காணப்படுவதில்லை, மூடிய குருதிச் சுற்றோட்டம் உள்ளது, கூர்மையான நன்கு விருத்தியடைந்த கண்களும், நன்கு விருத்தியடைந்த மூளை மற்றும் நரம்புத் தொகுதியும் உள்ளன. இதனால் கடலில் ஆட்சியுள்ள உயிரினங்களில் சீபலோபோடா வகுப்பைச் சேர்ந்த ஒக்டோபசு, இராட்சத ஸ்குயிட்டு போன்ற உயிரினங்களும் அடங்குகின்றன. எனினும் பொதுவாக மெல்லுடலிகளின் உடலியல் கட்டமைப்பு அவ்வளவாக சிக்கலானதல்ல. மெல்லுடலிகள் ஆதிகால மனிதனின் உணவில் முக்கிய பங்கு வகித்தன. எனினும் தற்காலத்தில் கணவாய், மட்டி போன்றவை உணவாக உட்கொள்ளப்படுகின்றன. மெல்லுடலிகளின் மிகப் பெறுமதியான முக்கிய பயன்பாடு முத்து ஆகும்.
மெல்லுடலிகள் தமக்கென்று தனித்துவமாக மென்மூடியொன்றையும் (Mantle), தனித்துவமான நரம்புத் தொகுதியையும் கொண்டுள்ளன. பொதுவாக அனைத்து மெல்லுடலிகளும் துண்டுபடாத உடலையும் இரட்டைச் சமச்சீரையும் கொண்டுள்ளன[3]. அனைத்து மெல்லுடலிகளும் கொண்டுள்ள இயல்புகள்[4][5].:
மெல்லுடலிகளின் உடல் அமைப்பில் சுவாசம் மற்றும் கழிவுநீக்கம் நரம்பு மண்டல அமைப்புகள் அடங்கிய ஒரு குறிப்பிடத்தக்க உடற்குழி காணப்படுகிறது.பெரும்பாலான மெல்லுடலிகள் சுண்ணாம்பு ஓட்டினை (calcareous shell) கவச உறையாகக் கொண்டுள்ளன[6]. மெல்லுடலிகளானது மாறுபட்ட உடல் அமைப்புகளுடன் வளர்ச்சியடைந்துள்ளன. சிலவற்றின் பண்புகளை அனைத்து மெல்லுடலிகளுக்கும் பொருத்தி வரையறை செய்வது சிரமமானதாகும் [7].
இவை தவிர சில பண்புகள் கீழ்கண்டவாறு பல்வேறு இனங்களில் மாறுபடுகிறது
மெல்லுடலிகளின் உயிரியல் வகைப்பாட்டு இனங்களின் பண்புக்கூறுகள் | |||||||
உலகலாவிய அளவில் அறியப்படும் மெல்லுடலிகளின் பண்புகள் [4] | அப்ல கோஃபோரா[8] | பாலி பிளாகோஃ போரா[9] | மோனோ பிளாகோ ஃபோரா[10] | காஸ்ட் ரோபோடா[11] | சிபாலோ போடா[12] | பிவால்வியா[13] | ஸ்காஃ போஃபோடா[14] |
---|---|---|---|---|---|---|---|
நாக்கரம் , சுரண்டும் நாக்கு கொண்ட சிதைக்கும் பற்கள் | நியோ மெனி மார்பா வில் 20 சதவீதம் காணப் படுவது இல்லை | உண்டு | உண்டு | உண்டு | உண்டு | இல்லை | உட்புறம், உடலுக்கு அப்பால் நீட்ட முடியாது |
அகலமாக சதைப்பற்றான அடிப்பகுதி | Reduced or absent | உண்டு | உண்டு | உண்டு | கரங்களாக உரு மாறியுள்ளது | உண்டு | சிறியது முன்பக்கம் மட்டும் |
உள் உறுப்புகளின் முதுகுப்புறச் செறிவு | தெளிவாக இல்லை | உண்டு | உண்டு | உண்டு | உண்டு | உண்டு | உண்டு |
பெரிய செரிமானம் பெருங்குடல்வாய் | சில அப்லசோ ஃபோராவில் பெருங்குடல் வாய் இல்லை | உண்டு | உண்டு | உண்டு | உண்டு | உண்டு | இல்லை |
பெரிய சிக்கலான சிறுநீரகம் | எதுவுமிலை்லை | உண்டு | உண்டு | உண்டு | உண்டு | உண்டு | சிறியது, எளிமையானது |
ஒன்று அல்லது பல ஓடுகள் அல்லது தடுக்கிதழ்கள் | ஆரம்பகட்ட உயிரிகளுக்கு, உண்டு; தற்போதைய உயிரிகளுக்கு, இல்லை | உண்டு | உண்டு | நத்தை களுக்கு, உண்டு; இலையட்டை, பெரும்பாலும் உண்டு | ஆக்டோபசு, இல்லை; கணவாய் மீன், நாடிலசு நத்தை, ஸ்குவிட்டு, உண்டு | உண்டு | உண்டு |
ஓடன்டோ ஃபோர் | உண்டு | உண்டு | உண்டு | உண்டு | உண்டு | இல்லை | உண்டு |
மெல்லுடலிகளின் உடல் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன அவைகள் தலை, உடல் மற்றும் பாதம் ஆகும். முளையவியலின் அடிப்படையில் இவை புரொட்டோஸ்டோம் விலங்குகளாகும். இவற்றின் உடல் புற,இடை,அக முதலுருப் படைகளான Triploblastica விலங்குகளாகும்.
அனேகமான மெல்லுடலிகளின் சுற்றோட்டத் தொகுதி திறந்த சுற்றோட்டத் தொகுதியாகும். இவற்றில் உடற்குழி காணப்பட்டாலும் உடலுறுப்புக்களைச் சுற்றியுள்ள சொற்பளவு பாய்பொருளாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் உடலில் உடற்குழியை விட குருதிக் குழியே சிறப்பாக விருத்தியடைந்துள்ளது. இக்குருதிக் குழி நீர்நிலையியல் வன்கூடாகத் தொழிற்பட்டு மென்னுடலியின் உடலுக்கு ஓரளவு வலிமையைத் தருகின்றது. குருதியில் பிரதான ஆக்சிசன் காவியாக ஈமோசையனின் நிறப்பொருள் உள்ளது. இதில் முள்ளந்தண்டுளிகளில் உள்ள இரும்புக்குப் பதிலாக செம்பு உலோகம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மெல்லுடலிகள் தசைப்பிடிப்பான வாயையும், கைட்டினால் ஆக்கப்பட்ட வறுகியையும் கொண்டுள்ளன. வறுகியில் கைட்டினால் ஆன பற்கள் உள்ளன. இப்பற்கள் உணவுண்ணும் போது இழக்கப்பட மீண்டும் மீண்டும் வளர்வனவாகும். வறுகியைப் பயன்படுத்தி அல்காப் படைகளைச் சுரண்டி உட்கொள்ளக்கூடியதாக உள்ளது. இவற்றின் சமிபாட்டுத் தொகுதியில் சீதமும் பிசிரும் உள்ளன. சீதமும் பிசிரும் உணவை சமிபாட்டுத் தொகுதியின் உட்பகுதியை நோக்கித் தள்ளி விடுவதில் உதவுகின்றன. உட்கொள்ளப்படும் உணவில் கனியுப்புக்கள் வேறாகவும், உணவுப் பகுதி வேறாகவும் சமிபாடு செய்யப்படுகின்றன. உணவு சீக்கம் எனும் வெளியேறும் துளையற்ற பகுதியினுள் சேதன உணவு அகத்துறிஞ்சப்படுகின்றது. கனியுப்புக்களில் மேலதிகமானவை வெளியேற்றப்படுகின்றன. பிசிர்களால் உணவுத்துகள்களை வடித்துண்ணுகின்ற இருவால்விகளில் வறுகி காணப்படுவதில்லை.
பெரும்பாலான மெல்லுடலிகள் மீன்களைப் போன்று செவுள்கள்களால் சுவாசிக்கின்றன. அனேகமான இனங்களில் இரண்டு சோடிப் செவுள்கள்களும் சிலவற்றில் ஒரு செவுள் மட்டுமே காணப்படும். செவுள்கள் இறகு போன்ற வடிவத்துடன் காணப்படுகிறது. சில சிற்றினங்களில் வெவுள்கள் ஒரு பக்கம் இழையங்களைக் கொண்டுள்ளன.அவை உடலின் உட்பகுதியை இரண்டாகப் பிரிக்கிறது அதனால் தண்ணீர் கீழே அடிப் பரப்பருகே உள்ளிழுத்து, மேல் நோக்கி வெளியேறும்.செவுள்களில் உள்ள இறகு அமைப்பானது மூன்று வகையான குறு இழைத் தூவிகளைக் (cillia) கொண்டிருக்கும்.அவற்றுள் ஒன்று உட்செல்லும் நீரினை உட்பகுதிக்குள் அனுப்புகிறது. மற்ற இரு தூவிகளும் செவுள்களை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.மெல்லுடலிகளில் காணப்படும் ஆஸ்பரேடியா என்றழைக்கப்படும் கடுமணவுணரி ஏதேனும் வேதிய நச்சுக்களை அடையாளம் கண்டுகொண்டால் உடல் பகுதிக்குள் வண்டல்படிவுகளை உட்செலுத்துகிறது. மேலும் நச்சுகள் நிற்கும் வரை தூவிகள் இயங்குவதை நிறுத்துகிறது.ஒவ்வொரு செவுள்களும் உட்குழிக்குள் உள்நுழையும் குருதிக் குழாயையும் இதயத்திற்கு வெளிச்செலுத்தும் வெளிக்குழாயையும் கொண்டுள்ளன.
பெரும்பாலான இனங்கள் ஒருபாலானவை. சில நத்தையினங்கள் இருபாலானவை. மெல்லுடலிகள் முட்டையீனும் உயிரினங்களாகும். அனேகமான இனங்களில் புறக்கருக்கட்டலே நிகழ்கின்றது. கருக்கட்டலின் பின் சக்கரந்தாங்கிக் குடம்பி, வெலிஜர் குடம்பி அல்லது சிறிய முழுவுடலிகள் வெளியேறுகின்றன. சக்கரத்தாங்கிக் குடம்பிகளே அனேகமான மெல்லுடலிகளின் குடம்பிப் பருவமாகும். சக்கரந்தாங்கிக் குடம்பிகள் சிறிய உணவுத்துகள்களை வடித்துண்ணும் குடம்பிகளாகும்.
மெல்லுடலிகளின் முக்கியமான மூன்று வகைகளாவன:வயிற்றுக்காலிகள், இருவோட்டினம், தலைக்காலிகள். நத்தை முதலியன வயிற்றுக்காலி வகுப்பையும் மட்டி, கிளிஞ்சல் முதலியன இருவோட்டினத்தையும், கணவாய் முதலியன தலைக்காலி வகுப்பையும் சேர்ந்தவை [15].
வகுப்பு | உதாரணம்/ விளக்கம் | விளக்கப்பட்ட உயிர்வாழும் இனங்களின் எண்ணிக்கை[16] | வாழிடம் |
Caudofoveata[8] | புழு போன்ற விலங்குகள் | 120 | கடற்படுக்கை 200-3000 மீற்றர்கள் |
Solenogastres[8] | புழு போன்ற விலங்குகள் | 200 | கடற்படுக்கை 200-3000 மீற்றர்கள் |
Polyplacophora[9] | கைட்டோன்கள் | 1,000 | கட்டற்பெருக்குப் பிரதேசம், கடற்படுக்கை |
Monoplacophora[10] | தொப்பி போன்ற ஓடுடைய மெல்லுடலிகள் | 31 | 1800-7000 மீற்றர்கள் ஆழமான கடல் |
Gastropoda[17] | நத்தை, ஓடில்லா நத்தைகள் | 70,000 | கடல், நன்னீர், நிலம் |
Cephalopoda[18] | கணவாய், ஸ்குயீட்டு, ஒக்டோபஸ் | 900 | கடல் |
Bivalvia[19] | சிப்பி, மட்டி | 20,000 | கடல், நன்னீர் |
Scaphopoda[14] | tusk shells | 500 | 6-7000 மீற்றர்கள் ஆழமான கடற்பிரதேசம் |
Rostroconchia †[20] | இருவால்வுக்களின் மூதாதை விலங்குகள் | இனமழிந்தவை | கடல் |
Helcionelloida †[21] | நத்தை போன்ற மெல்லுடலி | இனமழிந்தவை | கடல் |
அனேகமான மெல்லுடலிகள் தாவரவுண்ணிகளாக அல்லது வடித்துண்ணிகளாக உள்ளன. தாவரவுண்ணிகள் அல்காக்களைச் தமது வறுகிகளைக் கொண்டு சுரண்டி உட்கொள்ளுகின்றன. கெல்ப் போன்ற இராட்சத அல்காக்கள் நத்தை போன்ற மெல்லுடலிகளால் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. சிப்பி போன்ற இருவால்வுக்கள் வடித்துண்ணிகளாகும். இவை தமது பூக்களூடாக உணவுத்துகள்கள் கரைந்துள்ள நீரைச் செலுத்துவதனால் உணவையும், ஆக்சிசனையும் வடித்தெடுத்து உட்கொள்கின்றன. ஒக்டோபஸ் போன்ற சீபலோபோடாக்கள் ஊனுண்ணிகளாகும். இவை தமது கைகளால் இரையைக் கைப்பற்றி பலமான தசைச்செறிவுள்ள வறுகியால் இரையைக் கிழித்து உண்கின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.