From Wikipedia, the free encyclopedia
குருதிக்குழல்கள் அல்லது குருதிக் குழாய்கள் அல்லது இரத்தக் குழாய்கள் (blood vessels) உடல் முழுவதும் இரத்தம் பாய்வதற்கு உதவும் குருதி சுற்றோட்டத் தொகுதியின் ஒரு பகுதியாகும். மூன்று பிரதான குருதிக்குழல் வகைகள் உள்ளன: இதயத்திலிருந்து இரத்தத்தினை எடுத்துச் செல்லும் தமனிகள் அல்லது நாடிகள் (இலங்கை வழக்கு); திசுக்களுக்கும் குருதிக்கும் இடையில் நீர் மற்றும் வேதிப்பொருள்களை பரிமாற்றம் செய்ய உதவும் இரத்தத் தந்துகிகள் அல்லது மயிர்க்கலன்கள்; இரத்தத்தை தந்துகிகளிலிருந்து மீண்டும் இதயத்திற்கு திரும்ப எடுத்துச் செல்லும் சிரைகள் அல்லது நாளங்கள்[1].
இரத்தக் குழாய் | |
---|---|
மனிதரின் குருதிச் சுற்றோட்டத் தொகுதியின் எளிய வரைபடம் | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | vas sanguineum |
MeSH | D001808 |
TA98 | A12.0.00.001 |
TA2 | 3895 |
FMA | 63183 |
உடற்கூற்றியல் |
குருதிக் கலன்களில் நாடிகளும், நாளங்களும் பிரதானமாக மூன்று படைகளாலான சுவரைக் கொண்டுள்ளன. நாடிகளினதும் நாளங்களினதும் கட்டமைப்பொழுங்கு ஒன்றாயினும், இவற்றுக்கிடையில் இப்படைகளில் தடிப்பு வேறுபாடு காணப்படுகின்றது. பிரதானமான இழையப் படைகள்:-
தொகுதிச் சுற்றோட்டத்திலுள்ள நாடிகள் ஆக்சிசன் செறிவு கூடிய இரத்தத்தைக் காவுகின்றன. எனினும் நுரையீரற்சுற்றோட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடிகள் எதிர்மாறாக காபனீரொக்சைட்டு செறிவு கூடிய குருதியைக் காவுகின்றன. நுரையீரலில் நுரையீரல் நாடியிலுள்ள காபனீரொக்சைட்டு நீக்கப்பட்டு ஆக்சிசன் சேர்க்கப்படுகின்றது (இது நுரையீரலிலுள்ள குருதி மயிர்க்கலன்களில் நடைபெறும்). இது நுரையீரல் நாளத்தினால் குருதிக்குக் கொண்டுவரப்படும். எனவே நுரையீரற் சுற்றோட்டத்திலுள்ள நாளங்களைத் தவிர ஏனைய நாளங்கள் பொதுவாக காபனீரொக்சைட்டு நிறைந்த குருதியைக் கடத்துகின்றன.
குருதிக்குழாய்களில் நாடியிலேயே அதிக அமுக்கத்தோடு இரத்தம் வேகமாகக் கடத்தப்படுகின்றது. இதயம் துடிப்பதற்கேற்ற படி நாடியினூடாக அமுக்க அலைகள் செல்லும். எனவே என்புக்கு அருகாக தோலுக்கு நெருக்கமாக நாடி செல்லும் இடங்களில் நாடித்துடிப்பு உணரலாம். பொதுவாக கையின் பெருவிரலுக்குக் கீழே இதனை உணரலாம். நாளங்களில் குருதியமுக்கம் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகும். எனவே கால்களில் புவியீர்ப்பு காரணமாக குருதி இதயத்தை நோக்கிச் செல்லாமல் கீழ் நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது. எனவே இதைத் தடுக்க நாளங்களில் இதயத்தை நோக்கி மட்டும் குருதியை அனுமதிக்கும் வால்வுகள் காணப்படுகின்றன. வால்வுகளில் ஏற்படும் பழுது காரணமாகவே வரிக்கோசு நாளம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. வால்வுகள் பொதுவாக நாடிகளில் காணப்படுவதில்லை.
குருதி மயிர்க்கலன்கள் மிகவும் எளிமையானவையாகும். இவற்றில் செதின் மேலணிக்கலங்களைத் தவிர வேறெந்தக் கட்டமைப்பும் காணப்படுவதில்லை. இவற்றினூடாகவே குருதிக்கும் இழையங்களுக்கும் இடையே பதார்த்தங்கள் (வாயுக்கள், ஊட்டச்சத்துக்கள் இருதிசையிலும்) பரிமாற்றப்படுகின்றன.
குருதியோட்டத்தில் குருதிக் கலன்கள் விசை வழங்குவதில்லை. நாடிக்குருதியோட்டத்துக்கான வலு இதயத்தாலும், நாளக் குருதியோட்டத்துக்கான வலு அருகிலுள்ள நாடித்துடிப்பு, வன்கூட்டுத் தசைச் சுருக்கத்தாலும் வழங்கப்படும். எனினும் குருதிக் கலன்களிலுள்ள மழமழப்பான தசைகளால் அவற்றின் விட்டத்தை மாற்றியமைக்க முடியும். மழமழப்பான தசைகள் சுருங்கும் போது விட்டம் குறைந்து குருதியோட்டம் குறையும். மழமழப்பான தசைகள் தளரும் போது விட்டம் அதிகரித்து குருதி விநியோகம் அதிகரிக்கும். இச்செயற்பாடுகள் அனைத்தும் இச்சையின்றிய வகையில் தன்னாட்சி நரம்புத் தொகுதியால் கட்டுப்படுத்தப்படுகின்றது. உடல் வெப்பநிலைச் சீராக்கம், அழற்சி தரு தூண்டற்பேறு, குருதி அமுக்கச் சீராக்கம் போன்ற ஓர்சீர்த்திட நிலை சார்ந்த செயற்பாடுகளில் குருதிக் கலன் விட்டம் மாற்றப்படும்.
Seamless Wikipedia browsing. On steroids.