ஆறு பற்றிய குறிப்புகள் (ஒலிப்பு)ஆறு என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக மலைப்பகுதிகளில் தொடங்குகின்றன. ஆற்றின் இருபுறமும் உள்ள நிலப்பகுதி கரை என அழைக்கப்படுகிறது. ஆறுகள் பொதுவாக மற்றொரு ஆற்றிலோ, ஏரிகளிலோ அல்லது கடலிலோ இணைகின்றன. ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர் நிலையை அடையும் முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வரண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்றும், சிறியவை சிற்றாறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது.[1][2][3]

Thumb
ஆர்க்கான்சாஸ் ஆறு

ஆறு நீர்ச் சுழற்சியின் ஒரு கூறு ஆகும். ஆற்றில் இருக்கும் நீர் பொதுவாக மழை போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. புவி மேற்பரப்பில் வழிந்து ஓடுவதன் மூலமும், நிலத்தடி நீரை மீள்விப்பதன் மூலமும், இயற்கையான நீர் நிலைகள் நிரம்புவதன் மூலமும் மழை நீர் ஆற்றை அடைகின்றது.

தோற்றம்

ஊற்றுக்களில் இருந்தோ, ஏரிகளில் இருந்தோ, பனியாறுகள் உருகுவதன் மூலமோ, மழை நீர் வழிந்தோடுவதனாலோ அல்லது வேறு பல வழிகளிலோ ஆறுகள் உருவாகக் கூடும். பொதுவாக ஆறுகளுடன் வேறு ஆறுகள் வந்து இணைவது உண்டு. இத்தகைய ஆறுகள் சிற்றாறுகள் அல்லது துணையாறுகள் என அழைக்கப்படுகின்றன. ஆற்றில் கொண்டு செல்லப்படும் நீரின் அளவு. ஆற்றில் மேற்பரப்பில் செல்லும் நீரும், கண்ணுக்குத் தெரியாமல் நிலத்துக்குக் கீழ் செல்லும் நீரும் சேர்ந்தது ஆகும். பெரிய பள்ளத்தாக்குகளில் ஓடும் ஆறுகளில் இவ்வாறான கண்ணுக்குத் தெரியாத நீரோட்டத்தின் கூறு மேலே தெரியக்கூடிய நீரின் அளவை விடப் பெருமளவு அதிகமாக இருக்கக்கூடும்.

ஆற்றின் மூலத்தில் இருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஆறுகள் பொதுவாகக் கடலிலோ அல்லது பெரிய ஏரிகளைப் போன்ற நீர் நிலைகளிலோ கலக்கின்றன. வரண்ட பகுதிகளில் ஆற்று நீர் ஆவியாவதன் மூலம் இவ்வாறான நீர் நிலைகளை அடையு முன்னரே வறண்டு விடுவது உண்டு. சில ஆறுகள் மண்ணுக்கு ஊடாகவோ, ஊடுசெல்லவிடும் பாறைகளூடாகவோ நிலத்துக்குள் உறிஞ்சப்படுவது உண்டு. இது நிலத்தடி நீராகத் தங்கிவிடுகிறது. தொழிற்சாலைகளுக்கும், நீர்ப்பாசனத் தேவைகளுக்கும் பெருமளவில் நீரை எடுப்பதனாலும் அதன் இயற்கையான முடிவிடத்தை அடையும்முன்பே ஆறு வற்றிவிடுவதையும் காணலாம். ஆற்றுக்கு நீரை வழங்கும் பகுதி அல்லது ஆற்றினால் வடியச் செய்யப்படும் நிலப்பகுதி வடிநிலம் அல்லது நீரேந்து பகுதி எனப்படுகின்றது.

நில அமைப்பு

ஆற்றில் செல்லும் நீர் பொதுவாக அதன் கால்வாய்ப் பகுதியூடாகவே செல்கிறது. இது இரண்டு கரைகளுக்கு இடைப்பட்ட ஆற்றுப்படுகையினால் ஆனது. பெரிய ஆறுகளில் இந்த வாய்க்கால் பகுதிக்கு வெளியே வெள்ளப்பெருக்குச் சமதளம் (Flood plains) இருப்பதுண்டு. இது வெள்ளப்பெருக்குக் காலங்களில் ஆற்றுநீர் வாய்க்கால் பகுதிக்கு வெளியே செல்லும்போது உருவாவது. வெள்ளப்பெருக்குச் சமதளங்கள் ஆற்றின் கால்வாய் அளவிலும் மிகப் பெரிதாக இருப்பதும் உண்டு.

பெரும்பாலும் ஆறுகள் ஒரு வழியிலேயே செல்லுகின்றன. ஆனால் சில ஆறுகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பல வழிகளில் சென்று பின்னல் ஆறுகளாக அமைவதும் உண்டு. பெரிய அளவிலான இவ்வாறான ஆறுகள், நியூசிலாந்தின் தெற்குத் தீவு போன்ற, உலகின் சில பகுதிகளிலேயே காணப்படுகின்றன. பின்னல் ஆறுகள், அரிப்புச் சமவெளிகளிலும், சில ஆற்றுக் கழிமுகங்களிலும் அமைவதுண்டு.

பாயும் ஆறு ஒரு ஆற்றல் மூலமாகும். இதனால் இவ்வாற்றல் ஆற்றின் வாய்க்கால் மீது தாக்கி அதன் வடிவத்தை மாற்றுகிறது. பிராம் விதிப்படி (Brahm's law) ஆற்றினால் அடித்துச் செல்லப்பக்கூடிய பொருளொன்றின் திணிவு ஆற்றின் வேகத்தின் ஆறாம் அடுக்குக்கு விகிதசமம் ஆகும். இதனால், ஆற்றின் ஓட்ட வேகம் இரண்டு மடங்காக அதிகரிக்கும்போது, 64 மடங்கு அதிக திணிவுள்ள பொருளை அடித்துச் செல்லக்கூடிய ஆற்றலைப் பெறுகிறது. மலைப்பாங்கான கடினப்பாறை வலயங்களில் இதன் காரணமாக கடினப் பாறைகள் ஊடாக அரிப்பு வாய்க்கால்கள் (erosion channel) ஏற்படுவதோடு, பெரிய பாறைகள் உடைந்து மணலும், சிறு கற்களும் உருவாவதைக் காணலாம். ஆறுகள் ஓடும் பாதையின் இடைப் பகுதிகளில் அது சமதளங்களில் ஓடும்போது, கரைகள் அரிக்கப்படுவதனால் வளைவுகள் ஏற்படுவதுடன், இத்தகைய உட்புற வளைவுகளில் படிவுகளும் ஏற்படுகின்றது. ஆற்றுப் பாதைகள் தடம் (loop) போல் அமையும் இடங்களில் சில வேளைகளில் ஆறு குறுக்கே ஓடி இணைந்து ஆற்றுப் பாதையின் நீளத்தைக் குறைப்பதுடன் [[இலாட வடிவ ஏரி யையும் உருவாக்கும்.

வகைப்பாடு

ஆறுகளைக் கற்பனை செய்து பார்ப்பதற்குக் கீழ் காட்டப்படும் வகைப்பாடு உதவும் எனினும், வேறு பல காரணிகளையும் கருத்தில் கொள்ளவேண்டும். ஓட்டப்பாதையின் சரிவு புவிமேலோட்டு அசைவுகளில் தங்கியுள்ளது எனினும் ஓடும் நீரின் அளவு, காலநிலையிலும், படிவின் அளவு, நிலவியல் அமைப்பு, சரிவு என்பவற்றிலும் தங்கியுள்ளன.

இளமை ஆறு
இது கூடிய சரிவைக் கொண்டதும், குறைந்த அளவு துணையாறுகளைக் கொண்டதும், வேகமாக ஓடுவதுமான ஆறு ஆகும். இத்தகைய ஆறுகள் அகலமாக அரிப்பதிலும் ஆழமாக அரிக்கின்றன. (எகா: பிராசோஸ் ஆறு, டிரினிட்டி ஆறு, எப்ரோ ஆறு)
முதிர்ந்த ஆறு
இளமை ஆறுகளிலும் குறைந்த சரிவு கொண்ட இது குறைவான வேகத்தில் ஓடுவது. இதன் வாய்க்கால்கள் அகலமாக அரிக்கப்படுகின்றன. இவை அதிகமான துணையாறுகளைக் கொண்டிருப்பதுடன் இளம் ஆறுகளைவிடக் கூடிய நீர் வரத்தைக் கொண்டிருக்கும். (எகா: மிசிசிப்பி ஆறு, சென். லாரன்ஸ் ஆறு, தனூப் ஆறு, ஓகியோ ஆறு, தேம்ஸ் ஆறு)
பழைய ஆறு
குறைந்த சரிவைக் கொண்டிருப்பதுடன், குறைவான அரிப்பு ஆற்றலையும் கொண்டிருக்கும். வெள்ளச் சமவெளிகளைக் கொண்டிருப்பது இவற்றின் சிறப்பு இயல்பாகும். (எகா: ஹுவாங் ஹே ஆறு, கங்கை ஆறு, டைகிரிஸ் ஆறு, இயுபிரட்டீஸ் ஆறு, சிந்து நதி, நைல் ஆறு)
புத்திளமை ஆறு
புவிமேலோட்டு அசைவினால் சரிவு கூடுதலான ஆறு.

ஆறுகளின் இன்றியமையாமை

உலகின் பெரும் நாகரிகங்கள் ஆறுகளின் கரைகளிலேயே அமைந்துள்ளன. ஆறுகள் மனிதர்களுக்கு குடிநீர்த் தேவையை மட்டுமன்றி அவர்களது வாழ்வியல் தேவைகளையும் நிறைவு செய்கின்றன. வேளாண்மை, பல வகையான தொழிற்சாலைகள் (எ.கா: காகித ஆலை) ஆற்று நீரையே நம்பியிருக்கின்றன. தற்காலத்தில் ஆற்றோட்டத்தைப் பயன்படுத்தி மின்சாரமும் உருவாக்கப்படுகிறது.

ஆறுகளின் பட்டியல்

உலகின் பத்து நீளமான ஆறுகளின் பட்டியல்

  1. நைல் (6,690 கி.மீ)
  2. அமேசான் (6,452 கி.மீ)
  3. மிசிசிப்பி-மிசோரி (6,270 கி.மீ)
  4. யெனிசே-அங்காரா (5,550 கி.மீ)
  5. ஓப்-இர்டிஷ் (5,410 கி.மீ)
  6. ஹுவாங்-ஹ (மஞ்சள் ஆறு) (5,464 கி.மீ)
  7. ஆமுர் (4,410 கி.மீ)
  8. காங்கோ (4,380 அல்லது 4,670 கி.மீ)
  9. லெனா (4,260 கி.மீ)

புகழ்பெற்ற ஆறுகள்

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.