சிங்களம் மட்டும் சட்டம் (Sinhala Only Act) அல்லது அதிகாரபூர்வமாக 1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம் (Official Language Act) என்பது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு சூன் 5 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி" என்ற சட்டத்தைக் குறிக்கும். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சிமொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70% பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது.
ஈழப் போராட்ட காரணங்கள் |
---|
பிரித்தானிய ஆட்சி
பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தது. அரசுப் பதவிகளுக்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது. 1936 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரிகளான என். எம். பெரேரா, பிலிப் குணவர்தனா போன்றவர்கள் ஆங்கிலத்திற்குப் பதிலாக சிங்களம், மற்றும் தமிழ் ஆகியவற்றை ஆட்சிமொழிகளாக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். நவம்பர் 1936 இல், 'இலங்கைத் தீவு முழுவதும் உள்ளாட்சிகள் மற்றும் காவல்துறை நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளிலேயே வழக்குகள் நடத்தப்பட வேண்டும்' மற்றும் 'காவல் நிலையங்களில் சாட்சிகளின் மொழிகளிலேயே வழக்குகள் பதியப்பட வேண்டும்' போன்ற சட்டமூலங்கள் அரசாங்க சபையில் கொண்டுவரப்பட்டு சட்டச் செயலாளருக்கு மேலதிக ஆணைக்காக அனுப்பப்பட்டடன. 1944 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்தனா ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களத்தை அதிகாரபூர்வமொழியாக்க வேண்டும் என அரசாங்க சபையில் கோரினார்[1]. ஆனாலும் ஆங்கிலம் தொடர்ந்து 1956 வரை ஆட்சி மொழியாக இருந்து வந்தது.
சட்டமூலம்
1948 ஆம் ஆண்டில் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்று டொமினியன் அந்தஸ்து பெற்றது. 1951 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி இலங்கை சுதந்திரக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார். இக்கட்சியின் மகாஜன எக்சத் பெரமுன கூட்டணி 1956 தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது. பண்டாரநாயக்காவின் அமைச்சரவை பதவியேற்று 53 நாட்களுக்குள் (1956, சூன் 5) சிங்களம் மட்டும் சட்டம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவளித்தது. தமிழ்க் கட்சிகள், மற்றும் சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்டுகள் எதிர்த்து வாக்களித்தனர்.
இம்மசோதா 1956 சூலை 6 இல் செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட போது 19 பேர் ஆதரவாகவும், 6 உறுப்பினர்கள் எதிர்த்தும் வாக்களித்தனர்[2].
எதிர்ப்புகள்
இச்சட்டமூலத்தின் காரணமாக அரசுப்பணியில் உள்ள தமிழர்களும் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள். சுதந்திர கட்சி ஒரு இடதுசாரி கட்சியாக இருந்தாலும் இச்சட்டத்தினை சில தமிழ், மற்றும் சிங்கள இடதுசாரி உறுப்பினர்கள் கூட எதிர்த்தனர். எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் பல போராட்டங்கள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தமிழர் பகுதிகளில் அரசின் செயற்பாடுகள் இயங்க விடாது செய்யப்பட்டன.
திருத்தச் சட்டமூலம்
தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து பண்டாரநாயக்கா அரசு 1958 செப்டெம்பர் 3 ஆம் நாள் 1958(28) என்ற திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி 'நியாயமான தமிழ் மொழிப் பயன்பாட்டை' அங்கீகரித்தது. பின்வரும் சலுகைகளை விதந்துரைத்தது:
- தமிழ்ப் பாடசாலைகளில் போதனாமொழியாகத் தமிழ்,
- தமிழர்கள் அரச சேவையில் சேர்வதற்கான போட்டிச் சோதனைகள் தமிழில் நடத்தப்படல்,
- அரச நிறுவன தொடர்பு மொழி தமிழ்,
- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரச நடவடிக்கைகள் தமிழில் இடம்பெறல்
ஆகியனவாகும்[2].
தமிழர் வாழ் பகுதிகளில் தமிழும் பயன்படுத்தப்படலாம் எனும் திருத்தம் ஏற்படுத்தப்பட்டது. சுதந்திர இலங்கையில் இனங்களுக்கிடேயே பகையை உருவாக்கிய முதலாவது சட்டமாக, இச்சட்டம் பலராலும் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.