தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் From Wikipedia, the free encyclopedia
தொகுளுவ மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன்[1] (T. M. Soundararajan, மார்ச் 24, 1922 - மே 25, 2013) என்பவர் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர். 2003இல் பத்மசிறீ விருதைப் பெற்ற சௌந்தரராஜன் நாற்பது ஆண்டுகள் தமிழ்த் திரைப்படங்களில் பாடினார். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல பக்தி பாடல்களையும் பாடினார்.[2]
டி. எம். சௌந்தரராஜன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | டி. எம். சௌந்தரராஜன் |
பிறப்பு | மார்ச்சு 24, 1922 |
பிறப்பிடம் | மதுரை, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | மே 25, 2013 91) சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை
தொழில்(கள்) | திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் |
சௌராட்டிரக் குடும்பத்தில் மதுரையில் தொ. அ. மீனாட்சி ஐயங்கார் என்பவரின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் சௌந்தரராஜன். தொகுளுவ என்ற குடும்பப் பெயரும் தந்தையின் பெயரும் சேர்த்து டி. எம். சௌந்தரராஜன் என்று அழைக்கபட்டார். சிறுவயதிலிருந்தே இசைமீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். பள்ளி இறுதிவரை படித்த சௌந்தரராஜன், பின்னர் இசையை பயிலத் துவங்கினார். 1946 இல் சுமுத்திரா என்பவரைத் திருமணம் புரிந்தார். பிரபல வித்துவான் பூச்சி சிறீனிவாச ஐயங்காரின் மருமகன் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறையாக கர்நாடக இசை பயின்றார். பல ஆண்டுகள் மேடைகளில் கச்சேரி செய்து வந்தார். அந்நாலில் உச்ச நட்சதிரமாக இருந்த தியாகராஜ பாகவதரின் பாடல்களை மேடைகளில் பாடி தன் திறமையை மெருகேற்றிவந்தார். இவரை சுந்தரராவ் நட்கர்னி என்பவர் தனது கிருஷ்ண விஜயம் (1950) திரைப்படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடலைப் பாடவைத்து பின்னணி பாடகராக அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து மந்திரி குமாரி, தேவகி, சர்வாதிகாரி போன்ற படங்களில் பாடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. தேவகி படத்தில் அவர் பாடி நடித்திருந்தார். என்றாலும் இவருக்கு பட வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கவில்லை.
1954 இல் தூக்குத் தூக்கி திரைப்படம் சௌந்தர்ராஜனுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதில் சிவாஜிகணேசனுக்காக பாடிய பாடல்கள் அனைத்தும் சிறப்பாக பேசப்பட்டன.[3]
சிவாஜி கணேசன், ம. கோ. இராமச்சந்திரன் ஆகியோர் நடித்த துவக்கக்கால படங்களில் அவர்களுக்கு பின்னணி பாடியவர்களின் குரலுக்கும், அந்த நாயகர்களின் குரலுக்கும் அவ்வளவாக ஒற்றுமை இருக்கவில்லை. பாடகர்களின் குரல் தனித்தே ஒலித்தது. ஆனால் டி. எம். சௌந்தரராஜன் பின்னணிப் படகராக வந்த பிறகு சிவாஜி கணேசன், ம. கோ. இராமச்சந்திரன் போன்றோரின் குரலுக்கு ஏற்ப பாடுபவராக இருந்தார். அவை அந்த நடிகர்கள் பாடுவதுபோலவே இருந்தது. இவர் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் நாகேஷ் உட்பட பல முன்னணி திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான, தனித் தனி குரலில் பாடி, அந்த நடிகர்களின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலை நிறுத்தும் ஆற்றல் இவருக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் இவரை புகழ்ந்து வருகின்றனர் வீரம், காதல், சோகம், துள்ளல், தத்துவம், நையாண்டி மற்றும் கிராமிய மணம் கமழும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 2500க்கு மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இன்றைய முன்னணி திரைப்பட நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியவர்களுக்கும் பாடியுள்ளார்.
2010ல் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக உருவான “செம்மொழியான தமிழ்மொழியாம்” என்ற பாடலே டி. எம். சௌந்தரராஜன் இறுதியாக பாடிய பாடலாகும்[4].
1962 ஆம் ஆண்டு வெளியான பட்டினத்தார் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமான பட்டினத்தாராக இவர் நடித்துள்ளார். அருணகிரிநாதர் எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்து, முருகக் கடவுள் மீது இவர் பாடிய “முத்தைத்தரு பத்தித் திருநகை” எனும் பாடல் குறிப்பிடத்தக்க புகழடைந்தது.
இதயக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2013 மே 25-ம் தேதி மாலை 3.50 மணிக்கு அவர் சென்னையில் காலமானார்.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.