பிற்கால பாண்டிய மன்னர்களுள் ஒருவர் From Wikipedia, the free encyclopedia
அதிவீரராம பாண்டியர் பிற்கால பாண்டிய மன்னர்களுள் ஒருவர். 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்[1] ஏறக்குறைய 40 ஆண்டுகள் (1564–1604) ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவர் ஒரு அரசர் என்பதோடன்றித் திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். வடமொழியிலும், தமிழிலும் தோன்றிய, நளன் கதை கூறும் நூல்களைத் தழுவி நைடதம் என்னும் நூலை இவர் இயற்றினார். இது சிறந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தவிர நீதிகளை எடுத்துக் கூறும் வெற்றி வேற்கை என்னும் நூலையும், காசி காண்டம், கூர்ம புராணம், மாக புராணம் ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார். இவற்றுடன் கொக்கோகம் எனப்படும் காமநூலையும் தமிழில் தந்துள்ளார்.[1]
மிகுந்த இறை பக்தி கொண்டவரான இவர், பல கோயில்களையும் கட்டுவித்துள்ளார். தென்காசியில் இருக்கும் சிவன்கோயில் ஒன்றும் விஷ்ணு கோயில் ஒன்றும் இவற்றுள் அடங்குவனவாகும். இவருக்குச் சீவலமாறன் என்னும் பெயர் உண்டு என்பதை 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் சிதம்பரநாத கவி என்பவர் இவரைப்பற்றி இயற்றிய சீவலமாறன் கதை என்னும் நூலால் அறியமுடிகிறது.
ஏறக்குறைய 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் மதுரையில் ஆட்சி செலுத்தி வந்த பாண்டியர் பெருமை அந்நூற்றாண்டின் பிறபகுதியில் சிதைவுற்றது. டெல்லி அரசரின் தளபதி மாலிக்காபூரின் படையெடுப்பாலும், விஜய நகர வேந்தரின் படைத்தளபதி கம்பணவுடையாரின் போர்களினாலும் பாண்டியர் குடி சிதறுண்டது. அக்குடியினரில் ஒரு கிளையினர் திருநெல்வேலிப் பகுதியைத் தம் வசப்படுத்தித் தென்காசியில் இருந்துகொண்டு அதனை ஆண்டு வந்தனர்.
இக்கிளையினர் மதுரையில் ஆண்டு வந்த நாயக்க மன்னர்களுக்கு அடங்கியிருந்ததாகத் தெரிகிறது. இவர்களுள் ஒருவரே அதிவீரராம பாண்டியர். இவர் கோ ஐடிலவர்மன் திரிபுவன சக்கராத்தி கோனேரின்மை கொண்டான் திருநெல்வேலிப் பெருமாள் வீரவெண்பா மாலையான் தன்மப் பெருமாள் குலசேகரதேவர் நந்தனாரான அழகம் பெருமாள் அதிவீர ராமரான ஸ்ரீவல்லபதேவர் என்று கல்வெட்டொன்றில் அழைக்கப்படுகிறார். ஸ்ரீவல்லபன் என்னும் பெயர் சீவலன் என்றும் சிதைந்து வழங்கப்படுகிறது. இவரைப் பற்றி சீவலமாறன் கதை என்ற ஒரு நூலும் உண்டு. இவருக்கு இராமன், வீரமாறன் என்ற வேறு பெயர்களும் உண்டு.
வீரவெண்பாமாலை சூடிய தந்தையின் மைந்தரான இவ்வரசர் புலவர்களைப் போற்றியும் தாமே கவிபாடும் திறமை பெற்றும் விளங்கினார். சேறை ஆசு கவிராயரும் திருவண்ணாமலைப் புலவர் சிதம்பரநாதரும் புதுக்கோட்டை நைடதம் இராமகிருஷ்ணரும் சிவந்த கவிராசரும் இவரால் ஆதரிக்கப்பட்டனர். ஆசு கவிராச சிஙகம் என்ற சேறை ஆசுகவிராசதை காளத்திநாதர் கட்டளைத்துறை என்ற நூலைப் பாடும்படி செய்வித்தவர் இவரே என்றும் கூறுவர்.
இவர் சிவ பக்தியிலும் சிறந்திருந்தார். தென்காசிப் பெரிய கோயிலுக்கு மேற்பகுதியில் இவர் தம் தந்தை பெயரால் ஒரு சிவாலயத்தைக் கட்டினார். இதனருகில் ஒரு திருமால் கோயிலும் இவரால் கட்டப்பட்டது. இதனால் இவருடைய பொது நோக்கு விளங்கும். இவர் 1564 முதல் 1603 வரை அரசக் கட்டிலில் இருந்தார். இவருக்குப் பட்டமெய்தியவர் இவருடைய பெரிய தந்தையின் குமாரரான வரதுங்க பாண்டியர் ஆவார்.
அதிவீரராம பாண்டியர் இயற்றியனவாகக் கூறப்படும் நூல்கள் நைடதம், காசிக் காண்டம், கூர்மபுராணம், கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவை வெண்பாவந்தாதி, கருவைக்கலித்துறையந்தாதி, வெற்றி வேற்கை என்பனவாகும். இவையன்றிக் கொக்கோகம் என்ற காம நூலையும் இலிங்க புராணம் என்ற நூலையும் இவர் பாடினார் என்பர்.
வடமொழியில் ஸ்ரீஹர்ஷர் என்பவர் பாடிய நைஷதம் என்ற நூல், அம்மொழியில் நளோதயம் என்ற நூல், புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பா ஆகிய நூல்களை எல்லாம் ஆதாரமாகக் கொண்டு அதிவீரராம பாண்டியர் நைடதம் என்ற தம்நூலை இயற்றினார்.
இது வடமொழியிலுள்ள பதினெண் புராணங்களில் ஒன்றாகும். இதனை தமிழில் மொழிபெயர்த்து 3717 திருவிருத்தங்களில் இந்நூலை அதிவீரராம பாண்டியர் அமைத்துள்ளார்.
கங்கைக் கரையில் உள்ள காசியின் பெருமையை உரைக்கும் நூல். பதினெண் புராணங்களுள் சிறந்தது எனப்படும் ஸ்கந்த புராணத்தின் உள்ள சங்கர சங்கிடைக்குட்பட்ட காண்டங்களுள் ஒன்றான காசிக்காண்டத்தை தமிழில் மொழி பெயர்த்து இந்நூலை இயற்றியுள்ளார்.
கரிவலம்வந்தநல்லூர் என்பதே கருவை என்று மருவி வழங்கி வருகிறது. இங்கு எழுந்தருளியுள்ள சிவனின் மேல் பதிற்றுப் பத்தந்தாதி, வெண்பாவந்தாதி, கலித்துறையந்தாதி ஆகிய மூன்று நூல்களை இவர் பாடியுள்ளார். இதன் பாடல்கள் திருவாசகம் போன்றே மனதை உருக்கச் செய்வதால் இது திருவாசகத்தோடு ஒப்பிடப்படுகிறது.
இது 136 அடிகளைக் கொண்ட ஒரு நீதி நூலாகும். 9 பகுதிகளை உடையதாய், உலகத்தார் அறிய வேண்டும் என இன்றியமையா நீதிகளை, மிக எறிய சொற்களில், படிப்பவர் மனதிலே ஊன்றுமாறு செறிவுடன் யாக்கப்பட்டுள்ளது.
நறுந்தொகை, கொக்கோகம், இலிங்க புராணம் ஆகியவை இவர் இயற்றியவை என்றும் இவருடையவை அல்ல என்றும் இருவேறு கருத்துகள் ஆராய்ச்சியாளர்களிடன் உண்டு.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.