பண்டைக் கால இந்திய இராச்சியம் From Wikipedia, the free encyclopedia
குரு இராச்சியம் (Kuru kingdom) (சமசுகிருதம்: कुरु) என்பது இரும்புக் கால வட இந்தியாவில் அமைந்திருந்த ஒரு வேத கால இந்தோ-ஆரியப் பழங்குடியினக் கூட்டமைப்பு ஆகும். தற்போதைய மாநிலங்களான அரியானா, தில்லி, மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. இது நடு வேத காலத்தின்[1][2] (அண். 1200 – அண். 900 பொ. ஊ. மு.) போது தோன்றியது. இந்தியத் துணைக்கண்டத்தில் முதன் முதலாக பதியப்பட்ட அரசு நிலை சமூகமாகக் குரு இராச்சியம் திகழ்கிறது.[3][4][5]
குரு இராச்சியம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அண். பொ. ஊ. மு. 1200–அண். பொ. ஊ. மு. 500 | |||||||||||||
தலைநகரம் | அசந்திவதம் (தற்போதைய அசந்த்), அத்தினாபுரம் மற்றும் இந்திரப்பிரஸ்தம் (தற்போதைய தில்லி) | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | வேத கால சமசுகிருதம் | ||||||||||||
சமயம் | பண்டைய வேத சமயம் | ||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
இராஜா | |||||||||||||
• 12ஆம்–பொ. ஊ. மு. 9ஆம் நூற்றாண்டுகள் | பரிட்சித்து | ||||||||||||
• 12ஆம்–பொ. ஊ. மு. 9ஆம் நூற்றாண்டுகள் | சனமேசயன் | ||||||||||||
சட்டமன்றம் | சபா | ||||||||||||
வரலாற்று சகாப்தம் | இரும்புக் காலம் | ||||||||||||
• தொடக்கம் | அண். பொ. ஊ. மு. 1200 | ||||||||||||
• குரு இராச்சியம் குரு மற்றும் வத்ச இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டது | பொ. ஊ. மு. 900 | ||||||||||||
• முடிவு | அண். பொ. ஊ. மு. 500 | ||||||||||||
நாணயம் | கர்சபணம் | ||||||||||||
| |||||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
ஆரம்ப வேத காலத்தின் சமயப் பாரம்பரியத்தை குரு இராச்சியமானது தீர்க்கமாக மாற்றியமைத்தது. அக்கால சடங்கு பாடல்களை வேதம் என்று அழைக்கப்பட்ட சேகரிப்பாக சீரமைத்தது. இந்திய நாகரிகம் மீது தமது நிலையை பெற்ற புதிய சடங்குகளான இசுரதா சடங்குகளை[3] இது முன்னேறியது. இசுரதா சடங்குகள் "செவ்வியல் கூட்டிணைப்புகள்"[5] அல்லது "இந்து கூட்டிணைப்புகள்"[6] என்று அழைக்கப்பட்ட கூட்டிணைப்புகளுக்கு பங்களித்தன. பரிட்சித்து மற்றும் சனமேசயன்[3] ஆகியோரின் ஆட்சிக் காலங்களின் போது நடு வேத காலத்தின் முதன்மையான அரசியல் மற்றும் பண்பாட்டு மையமாக இது உருவானது. ஆனால், பிந்தைய வேத காலத்தின் (அண். 900 – அண். 500 பொ. ஊ. மு.) போது இதன் முக்கியத்துவம் வீழ்ச்சியடைந்தது. பொ. ஊ. மு. 5ஆம் நூற்றாண்டின் மகாஜனபாத காலத்தின் போது "நாகரிகத்தில் பின் தங்கியதைப் போன்றதொரு நிலையை"[5] அடைந்தது என்று குறிப்பிடப்படுகிறது. எனினும், குரு நாட்டவர் குறித்த பழக்க வழக்கங்கள் மற்றும் புராணக் கதைகள் பிந்தைய வேத காலத்திற்குள்ளும் தொடர்ந்தன. இவை மகாபாரத காவியத்திற்கு அடிப்படையாக அமைந்தன.[3]
குரு இராச்சியம் குறித்து அறிந்து கொள்ள பொதுவான சமகால ஆதாரங்கள் வேதங்கள் ஆகும். இக்காலத்தின் போதான வாழ்க்கை முறையின் தகவல்கள், வரலாற்று ரீதியான நபர்கள் மற்றும் நிகழ்வுகளின் மறைமுகக் குறிப்புகள் ஆகியவற்றை வேதங்கள் உள்ளடக்கியுள்ளன.[3] வேத இலக்கியம் குறித்த மொழி ஆய்வால் உறுதிப்படுத்தப்படுகின்ற குரு இராச்சியத்தின் காலம் மற்றும் புவிவியல் விரிவானது இதை தொல்லியல் ரீதியாக சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாட்டுடன் தொடர்புபடுத்துகிறது.[5]
குரு நாடானது வடமேற்கு இந்தியாவில் அமைந்திருந்தது. கங்கையாறு முதல் கிழக்கே பாஞ்சாலம் வரையும், சரசுவதி ஆறு முதல் மேற்கே ரோகிதகா நாட்டின் எல்லை வரையும், வடக்கே குலிந்த அரசு, தெற்கே சூரசேனம் மற்றும் மத்சயத்தை எல்லையாகக் கொண்டும் இது அமைந்திருந்தது. குரு இராச்சியத்தால் முன்னர் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடமானது தற்போதைய தானேசர், தில்லி, மற்றும் பெரும்பாலான மேல் கங்கை தோவாப்பை உள்ளடக்கியிருந்தது.[7]
குரு நாடும் அதனுள் குரு-ஜங்கலா ("குரு வனம்"), முதன்மையான குரு நிலப்பரப்பு மற்றும் குருச்சேத்திரம் ("குரு களம்") என்று பிரிக்கப்பட்டிருந்தது.[7]
குரு நாட்டுக்குள் ஓடிய ஆறுகளில் அருணா, அம்சுமதி, இரன்வதி, அபயா, கெளசிகி, சரசுவதி மற்றும் திருசத்வதி அல்லது ரக்சி ஆகியவை அடங்கும்.[7]
குரு இனமானது நடு வேத காலத்தின் போது[1][2] (அண். 1200 – அண். 900 பொ. ஊ. மு.) உருவாக்கப்பட்டது. பத்து மன்னர்களின் போருக்குப் பிறகு பாரத மற்றும் பிற புரு இனங்களுக்கிடையேயான கூட்டணி மற்றும் இணைப்பின் ஒரு விளைவாக இஃது உருவாக்கப்பட்டது.[3][8] குருச்சேத்திரப் பகுதியில் தங்களது சக்தி மையத்தைக் கொண்டிருந்த குரு நாட்டவர் வேத காலத்தின் முதல் அரசியல் மையத்தை உருவாக்கினர். தோராயமாக 1200 - 800 பொ. ஊ. மு. வரையிலான காலத்தின் போது வலிமையுடையவராக விளங்கினர். முதல் குரு தலைநகரமானது அசந்திவதம் ஆகும்.[3] இஃது அரியானாவில் உள்ள தற்போதைய அசந்த் என்ற இடத்துடன் அடையாளப்படுத்தப்படுகிறது.[9][10] பிந்தைய இலக்கியங்கள் முதன்மையான குரு நகரங்களாக இந்திரப்பிரஸ்தம் (தற்போதைய தில்லியுடன் அடையாளப்படுத்தப்படுகிறது) மற்றும் அத்தினாபுரத்தைக் குறிப்பிடுகின்றன.[3]
இருக்கு வேத காலத்திற்குப் பிறகு வேத இலக்கியத்தில் குரு நாட்டவர் முதன்மையாகக் குறிப்பிடப்படுகின்றனர். ஆரம்ப இந்தோ ஆரியர்களின் ஒரு பிரிவினராக குரு நாட்டவர் தோன்றினர். கங்கை யமுனை தோவாப் மற்றும் தற்போதைய அரியானாவை இவர்கள் ஆட்சி செய்தனர். பிந்தைய வேத காலத்தின் போது இவர்களது கவனமானது பஞ்சாபில் இருந்து வெளிப்புறமாக இருந்த அரியானா மற்றும் தோவாப் ஆகிய பகுதிகளின் மீது மாறியது.[11]
அரியானா மற்றும் தோவாப் பகுதியில் சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாட்டுக் குடியிருப்புகளின் அதிகரித்து வந்த எண்ணிக்கை மற்றும் அளவால் இந்தப் போக்கு உறுதிப்படுத்தப்படுகிறது. குருச்சேத்திர மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் ஒரு மிகுந்த சிக்கலான முழுவதுமாக நகரமயமாக்கப்பட்ட மூன்றடுக்குக் காலத்தை 1000 முதல் பொ. ஊ. மு. 600 வரையிலான காலகட்டத்தில் காட்டுகின்றன. ஒரு சிக்கலான தலைமைத்துவ இராச்சியம் அல்லது வளர்ந்து வந்த ஆரம்ப அரசு குறித்து இது பரிந்துரைக்கிறது. எஞ்சிய கங்கைச் சமவெளி முழுவதும் காணப்படும் இரண்டடுக்குக் குடியிருப்புப் போக்கிலிருந்து இது மாறுபடுகிறது. கங்கைச் சமவெளியில் சில "சாதாரண மையப் பகுதிகளாக" இருந்த இவை எளிமையான தலைமைத்துவ இராச்சியங்களின் இருப்பைப் பரிந்துரைக்கின்றன.[12] இந்தப் பெரும்பாலான மட்பாண்டப் பண்பாட்டுத் தளங்கள் சிறிய விவசாயக் கிராமங்களாக இருந்த போதிலும் பல தளங்கள் ஒப்பீட்டளவில் பெரிய குடியிருப்புகளாக வளர்ந்தன. அவை பட்டணங்களாக வகைப்படுத்தப்படக்கூடிய அளவுக்கு இருந்தன. இதில் பெரிய பட்டணங்கள் வாய்க்கால்கள் அல்லது அகழிகளால் காப்பரண் பெற்றும், குவிக்கப்பட்ட மணலுடன் மர தடுப்புகளை அகழிகளின் கரைகளில் கொண்டும் இருந்தன. இருந்த போதிலும் பொ. ஊ. மு. 600ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரிய நகரங்களில் தோன்றிய சிக்கலான காப்பரண்களை விட இவை சிறியதாகவும், எளிமையானதாகவும் இருந்தன.[13]
அதர்வண வேதம் (20.127) பரிட்சித்துவை "குரு நாட்டவரின் மன்னர்" என்று புகழ்கின்றது. வளர்ச்சியடைந்து கொண்டிருந்த, செழிப்பான நாட்டின் மகா ஆட்சியாளர் என்று குறிப்பிடுகிறது. சதபத பிராமணம் போன்ற பிற பிந்தைய வேத நூல்கள் பரிட்சித்தின் மகன் சனமேசயன் அசுவமேத யாகத்தைச் செய்த ஒரு மகா துரந்தரர் என்று குறிப்பிடுகிறது.[14] இந்த இரண்டு குரு மன்னர்கள் குரு அரசை நிலைப்படுத்துவதில் ஒரு தீர்க்கமான பங்கையும், இசுரதா சடங்குகளை முன்னேற்றுவதில் பங்களிப்பையும் ஆற்றினர். மகாபாரதம் போன்ற பிந்தைய புராணங்கள் மற்றும் பாரம்பரியங்களில் முக்கிய நபர்களாகவும் இவர்கள் தோன்றுகின்றனர்.[3]
வேதப் பாரம்பரியமற்ற சல்வா (அல்லது சல்வி) பழங்குடியினத்தால் தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு குரு நாட்டவர் வீழ்ச்சியடைந்தனர். வேதப் பண்பாட்டின் மையமானது பிறகு கிழக்கு நோக்கி உத்தரப் பிரதேசத்தின் பாஞ்சால நாட்டிற்கு இடம் பெயர்ந்தது. பிந்தைய குரு மன்னரின் உடன் பிறப்பின் மகனாக பாஞ்சாலத்தின் மன்னனான கேசின் தல்பியா இருந்தார்.[3] வேத காலத்திற்குப் பிந்தைய சமசுகிருத இலக்கியத்தின் படி, குருக்களின் தலைநகரமானது பின்னர் கீழ் தோவாப்பிலிருந்து கெளசம்பிக்கு இடம் மாற்றப்பட்டது. அத்தினாபுரமானது வெள்ளத்தால் அழிக்கப்பட்டதற்குப் பிறகு,[1] குரு குடும்பத்திலேயே மாற்றங்கள் ஏற்பட்டதற்குப் பிறகு[15][16][note 1] தலைநகரமானது இடம் மாற்றப்பட்டது. வேத காலத்திற்குப் பிந்தைய காலத்தில் பொ. ஊ. மு. 6ஆம் நூற்றாண்டில் குரு அரசமரபானது குரு மற்றும் வத்ச ஜனபாதங்களாகப் பரிணாமம் அடைந்தது. இந்த இரு ஜனபாதங்களும் மேல் தோவாப்/தில்லி/அரியானா மற்றும் கீழ் தோவாப் ஆகியவற்றை முறையே ஆண்டன. குரு அரசமரபின் வத்ச பிரிவானது கெளசம்பி மற்றும் மதுராவில் மேலும் பிரிவுகளாகப் பிரிந்திருந்தது.[18]
பௌத்த நூல்களின் படி, பிந்தைய வேத காலம் மற்றும் அதையடுத்த காலங்களில் கோரவியா என்றழைக்கப்பட்ட ஒரு தலைவரால் ஆளப்பட்ட ஒரு சிறிய அரசாகக் குரு மாறியிருந்தது. இந்த கோரவியா யுத்தித்திலா (யுதிசுதிரா) கோத்தத்தைச் சேர்ந்தவராக இருந்தார்.[19][20] முதன்மையான குரு ஆளும் அரசமரபானது கோசம்பிக்கு இடம் மாறியதற்குப் பிறகு குரு நாடு பல்வேறு சிறு வேள் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இந்தபட்டா மற்றும் இசுகரா ஆகிய இடங்களில் இருந்தவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்ந்தன. புத்தரின் காலத்தில் இந்த சிறிய அரசுகள் ஒரு குரு கணசங்கத்தால் (குடியரசு) இடம் மாற்றப்பட்டன.[21]
குரு இராச்சியம் அல்லது 'குரு பிரதேசமாக' ஒன்றிணைக்கப்பட்ட பழங்குடியினங்கள் பெரும்பாலும் பகுதியளவு நாடோடிகளாக, மேய்ச்சல் வாழ்க்கை முறையைக் கொண்டிருந்த பழங்குடியினங்களாக இருந்தன. எனினும், இவர்களது குடியிருப்பானது மேற்கு கங்கை ஆற்றுச் சமவெளிக்கு இடம் மாறிய போது அரிசி மற்றும் பார்லியை குடியமர்ந்து விவசாயம் செய்வது முக்கியமான பணியாக உருவானது. இக்காலத்தைச் சேர்ந்த வேத இலக்கியமானது அதிகப் படியான விவசாய உற்பத்தி வளர்ச்சி மற்றும் தனிச் சிறப்புடைய கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தோற்றத்தைக் குறிப்பிடுகிறது. இரும்பானது முதன் முதலில் சியாம ஆயசா (श्याम आयस, பொருள்: "கருப்பு உலோகம்") என்று இக்காலத்தைச் சேர்ந்த ஒரு நூலான அதர்வண வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு முக்கியமான உருவாக்கமானது நான்கு பிரிவையுடைய வர்ண அமைப்பாகும். இருக்கு வேத காலத்தில் இருந்த ஆரியர் மற்றும் தசர் என்ற ஈரடுக்கு அமைப்பை இஃது இடம் மாற்றியது. பிராமணப் புரோகிதர் மற்றும் சத்திரிய உயர்குடியினர்களால் ஆளப்பட்ட ஆரிய பொது மக்கள் (தற்போது வைசியர்கள்) மற்றும் தச பணியாளர்கள் (தற்போது சூத்திரர்கள்) ஆகியோர் தனி வர்ணங்களாகப் பிரிக்கப்பட்டனர்.[3][23]
குரு மன்னர்கள் ஓர் எளிமையான நிர்வாகத்தின் உதவியுடன் ஆட்சி புரிந்தனர். இந்நிர்வாகத்தில் புரோகிதர், கிராமத் தலைவர், இராணுவத் தலைவர், உணவு விநியோகிப்பாளர், தூதுவர், அறிவிப்பாளர் மற்றும் ஒற்றர்கள் ஆகியோர் உள்ளடங்கியிருந்தனர். இவர்கள் கட்டாயத் திறையை (பாலி) தங்களது குடிமக்களில் பொதுவானோர் மற்றும் பலவீனமான அண்டைப் பழங்குடியினகளிடமிருந்தும் பெற்றனர். இவர்கள் அடிக்கடி ஊடுருவல்களையும், படையெடுப்புகளையும் தங்களது அண்டை நாட்டவருக்கு எதிராக நடத்தினர். குறிப்பாகக் கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இதை நடத்தினர். அரசாள்வதில் உதவி புரிவதற்காக மன்னர்களும், அவர்களது புரோகிதர்களும் வேத சமயப் பாடல்களைச் சேகரிப்புகளாகச் சீரமைத்தனர். தற்போது பாரம்பரிய இசுரதா சடங்குகள் எனப்படும் ஒரு புதிய வகைச் சடங்குகளைச் சமூக ஒழுங்கை நிலைநாட்ட முன்னேற்றினர். உயர்குடியினர் மிகவும் சிக்கலான பூசைகளைச் செய்ய முடிந்தது. பல பூசைகள் (சடங்குகள்) தம் மக்கள் மீது மன்னரின் நிலையை முதன்மையாகப் போற்றுவதற்காக நடத்தப்பட்டன. வட இந்தியாவில் தன்னுடைய ஆட்சியை நிலைநாட்ட ஒரு சக்தி வாய்ந்த மன்னருக்கு ஒரு வழியாக அசுவமேத யாகம் திகழ்ந்தது.[3]
குரு நாட்டவர் இரு வகையான அரசவையைக் கொண்டிருந்தனர்:
இந்த தேசத்தில் குளிர், பனி அதிகமாக இருக்காது, மழை மாத்திரம் சித்திரை, வைகாசி மாதம் முதல் புரட்டாசி மாதம் முடிய விடாமல் பெய்துகொண்டே இருக்கும்.
இந்த தேசத்தின் வடக்கேயும், மேற்கேயும் பெரிய மலைகள் உண்டு, இம்மலைகளில் பனி பெய்துகொண்டும், மலையின் அடிவாரத்திலிருந்து பரந்து விரிந்த காடுகளும், அவைகளில் வெண்மையான எருமைகளும், பசுக்களும், வெண்மையான குதிரைகளும் ஏராளமாய் இருக்கும்.
இந்த தேசத்தில் நெல், கோதுமை, கரும்பு முதலியனவும், தாம்பரம், பித்தளை முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களை அம்மக்கள் பயன்படுத்தினர்.
அத்தினாபுரம் இத்தேசத்தின் முக்கிய நகராகும். இந்நகரத்தில் சிற்ப சாத்திர முறைப்படி கட்டிய கோட்டைகள், பெரிய, பெரிய அரண்மனைகள், இருந்துள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.