Remove ads
தெலங்காணா மாநிலத்தில் உள்ள மாநில பொதுப் பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
உசுமானியா பல்கலைக்கழகம் (Osmania University) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஓர் பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும். ஐதராபாத்தின் 7வது நிசாம் ஓசுமான் அலி கான், 29 ஆகஸ்ட் 1917 அன்று இதை உருவாக்க ஆணையை பிறப்பித்தார். இது தென்னிந்தியாவின் மூன்றாவது பழமையான பல்கலைக்கழகமாகும். மேலும் இது ஐதராபாத் இராச்சியத்தில் நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகமுமாகும். [2] [3] [4] ஆங்கிலம் கட்டாயப் பாடமாக இருந்தாலும், கற்பிப்பதற்கான மொழியாக உருதுவைப் பயன்படுத்திய முதல் இந்தியப் பல்கலைக்கழகமும் இதுவாகும். [5] 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, 80 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 3,700 சர்வதேச மாணவர்கள் இங்கு பயில்கின்றனர். [6]
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Lead us from Darkness to Light |
---|---|
வகை | பொதுத்துறை |
உருவாக்கம் | 1918 |
நிறுவுனர் | ஓசுமான் அலி கான் |
தரநிர்ணயம் | |
வேந்தர் | மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் (தெலங்காணா ஆளுநர்) |
துணை வேந்தர் | பேராசிரியர் டி. இரவீந்தர் யாதவ் |
கல்வி பணியாளர் | 445[1] |
மாணவர்கள் | 10,280[1] |
பட்ட மாணவர்கள் | 1,989[1] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 5,091[1] |
3,200[1] | |
அமைவிடம் | உசுமானியா பல்கலைக்கழகம் பிராதான சாலை, ஆம்பெர்பேட்டை , தாரணகா, சிக்கந்தராபாத், ஐதராபாத்து , , இந்தியா |
வளாகம் | ஊரகம் |
இணையதளம் | www |
இது உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழக அமைப்புகளில் ஒன்றாகும். அதன் வளாகங்கள் மற்றும் இணைந்த கல்லூரிகளில் 300,000 மாணவர்கள் உள்ளனர். உசுமானியா மருத்துவக் கல்லூரி ஒரு காலத்தில் உசுமானியா பல்கலைக்கழக அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தது. [7] இருப்பினும், இது இப்போது கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் உள்ளது. [8] [9] [10]
1917 ஆம் ஆண்டில், ஐதராபாத்து மாநிலத்தின் பிரதம சர் அக்பர் ஹைதாரி, தனது கல்வி அமைச்சருக்கு அனுப்பிய குறிப்பில், "இந்தியாவின் பரந்த மொழியாக இருப்பதால்", உருது மொழியை பயிற்றுவிக்கும் மொழியாகக் கொண்டு ஐதராபாத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். [11] ஏப்ரல் 26, 1917 இல், ஐதராபாத் நிசாம் ஓசுமான் அலி கான் உசுமானியா பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.[12]
பல்கலைக்கழகம் 1918 இல் பசீர் பாக்கில் உள்ள நிசாம் கல்லூரிக்கு அருகில் உள்ள கட்டிடத்தில் செயல்படத் தொடங்கியது. [13] கலை மற்றும் இறையியல் ஆகிய இரண்டு பீடங்கள் மட்டுமே தொடங்கப்பட்டன. முதல் தொகுதியில் 225 மாணவர்களும், 25 ஆசிரிய உறுப்பினர்களும் இருந்தனர். [14]
பல்கலைக்கழகத்தின் நிரந்தர வளாகத்தை அமைக்க அரசாங்கம் நகர்ப்புற திட்டமிடல் மற்றும் சமூகவியல் துறைகளில் தனது புதுமையான சிந்தனைக்காக அறியப்பட்ட பேட்ரிக் கெடெஸ் மற்றும் எட்வின் ஜாஸ்பர் ஆகியோரை அழைத்தது. [15] கெடெஸ் வருங்கால இடங்களை ஆய்வு செய்து [16] 1923 இல் தனது அறிக்கையை வழங்கினார். ஜாஸ்பர் கட்டிடத் திட்டங்களை வரைந்தார். பின்னர், நிசாம் ஜூலை 5, 1934 இல் வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார் [16] ஜாஸ்பர் ஐதராபாத்தை விட்டு வெளியேறிய பிறகு, இந்தியக் கட்டிடக் கலைஞர் ஜெய்ன் யார் ஜங் வளாகத்தின் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டார். [17]
சுதந்திரம் அடைந்து 1948 இல் ஐதராபாத் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த பிறகு, பல்கலைக்கழகம் மாநில அரசாங்கத்தின் கீழ் வந்தது. முதல் மாநில அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, மத்திய அரசு உசுமானியா பல்கலைக்கழகத்தை இந்தி மொழியாகக் கொண்ட மத்திய ப்பல்கலைக்கழகமாக மாற்றும் திட்டத்தை அறிவித்தது. இருப்பினும், இது எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. மேலும், முல்கி போராட்டத்தின் அழுத்தத்தால், திட்டம் கைவிடப்பட்டது. [18] இறுதியில், ஆங்கிலம் பயிற்று மொழியாக மாறியது. மேலும் நிசாமின் கிரீடம் பல்கலைக்கழக முத்திரையிலிருந்து நீக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டில் கல்வி நிறுவங்களுக்கான தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு இந்திய பல்கலைக்கழகங்களில் உசுமானியா பல்கலைக்கழகத்தை 22 வது இடத்தில் பட்டியலிட்டது.
அசல் முத்திரையில் நூருன் அலா நூர் என்ற சொற்றொடருடன் நிசாமின் கிரீடம் சிகரமாக இடம்பெற்றது. அதில் "நான் அறிவின் நகரம் மற்றும் அலி அதன் வாயில்" என்ற ஹதீஸையும் உள்ளடக்கி இருந்தது. [19]
தற்போதைய சின்னத்தில் தெலுங்கு மற்றும் சமசுகிருதத்தில் எழுத்துகள் உள்ளன. புதிய சின்னத்தின் இடையில் "ஐன்" என்ற உருது எழுத்து உள்ளது.
முதன்மை வளாகம் ஐதராபாத்தில் உள்ள ஒரு தலைமை அறிவுசார் மையமாகும். மேலும் அதன் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் பிவி நரசிம்ம ராவ் உட்பட பல புகழ்பெற்ற நபர்கள் உள்ளனர். மரபியல், உயிர்வேதியியல், உயிரி தொழில்நுட்பவியல், வேதியியல், பொறியியல், மேலாண்மை மற்றும் சட்டம் ஆகியவற்றின் முதன்மை வளாகத் துறைகளுக்கான சேர்க்கை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது. [21] பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் எஸ். ராமச்சந்திரம் என்பவரை மாநில அரசு நியமித்தது. பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார குழுவால் (NAAC ) 'A + ' தர அங்கீகாரம் பெற்றது. புதுதில்லியின் பல்கலைக்கழக மானியக் குழுவால் 'சிறந்த திறன் கொண்ட பல்கலைக்கழகம்' என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. [22]
பல்கலைக்கழகத்தின் பத்து உறுப்பு கல்லூரிகள் உள்ளன. பல்கலைக்கழகம் மனிதநேயம், கலை, அறிவியல், சமூக அறிவியல், சட்டம், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வணிகம் மற்றும் வணிக மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கிழக்கத்திய மொழிகள் ஆகிய படிப்புகளை வழங்குகிறது. 2001 ஆம் ஆண்டில், இந்திய அரசின் ஒரு பகுதியான பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு குழு மூலம் இதற்கு ஐந்து நட்சத்திர தகுதி வழங்கப்பட்டது. [23]
பல்கலைக்கழகம் கிட்டத்தட்ட 1600 ஏக்கர் (6 கிமீ2) வளாகத்தில் 300,000 மாணவர்களைக் கொண்டுள்ளது (அனைத்து வளாகங்கள், தொகுதியுடன் இணைந்த கல்லூரிகள் மற்றும் மாவட்ட மையங்களைக் கணக்கிடுகிறது) . இது இந்தியாவின் மிகப்பெரிய உயர்கல்வி அமைப்புகளில் ஒன்றாகும். உசுமானியாவில் சுமார் 5000 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். [24] இது நாடு முழுவதும் இருந்தும் பிற நாடுகளிலிருந்தும் மாணவர்களை ஈர்க்கிறது. [25]
உசுமானியா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, நாட்டின் சிறந்த 15 பொறியியல் பள்ளிகளில் ஒன்றாகும் [26] [27]
உசுமானியா பல்கலைக்கழகம் என்பது பல்கலைக்கழக கல்லூரிகள், தொகுதிக் கல்லூரிகள் மற்றும் இணைந்த கல்லூரிகளின் கூட்டமைப்பாகும். பல்கலைக்கழகத்தின் தொகுதிக் கல்லூரிகள் பின்வருமாறு: [28]
உசுமானியா பல்கலைக்கழகத்தின் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்களில் இந்தியாவின் 9வது பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ், [29] இந்திய அரசியல்வாதி ஜெயபால் ரெட்டி, நல்லாரி கிரண் குமார் ரெட்டி, அடோபி சிஸ்டம்ஸ் சாந்தனு நாராயண் மற்றும் மூத்த வழக்கறிஞர் சுபோத் மார்கண்டேயன் ஆகியோர் அடங்குவர்.
மற்ற முன்னாள் மாணவர்களில் ஆன்மீக வழிகாட்டி பூஜ்ய குருதேவ்ஸ்ரீ ராகேஷ்ஜி, [30] காஜா பந்தனவாஸ் பல்கலைக்கழகத்தின் சார்பு வேந்தர் சையத் முகம்மது அலி அல் உசைனி, முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் முகமது அசாருதீன், துடுப்பாட்ட வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, புதின ஆசிரியர் வெங்கடேஷ் குல்கர்னி, இந்திய அரசியல்வாதி சிவ்ராஜ் பாட்டீல், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒய். வி. ரெட்டி, வேதியியலாளர் கரிகாபதி நரஹரி சாஸ்திரி, உலோகவியலாளரும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பாட்சா ராமச்சந்திர ராவ் மற்றும் இயற்பியலாளர் ரசியுதின், விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்திய வீரரான ராகேஷ் சர்மா, இயற்பியல் ஆராய்ச்சி மாணவர் ஜார்ஜ் ரெட்டி, பிரபுக்கள் அவையின் உறுப்பினர் மற்றும் பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் ஏழாவது வேந்தரான கரன் பிலிமோரியா (உசுமானியாவிலிருந்து இளங்கலை வணிகவியலில் பட்டம் பெற்றவர்)[31] நன்கு அறியப்பட்ட நச்சுயிரியல் வல்லுநரும் நோயெதிர்ப்பு நிபுணருமான இரபி அகமது (1968 இல் உசுமானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்) ஆகியோர் அடங்குவர்.
பல்கலைக்கழகத்தின் குறிப்பிடத்தக்க முன்னாள் ஆசிரிய உறுப்பினர்களில் திராவிடவாதியும் மொழியியலாளருமான ப. கிருட்டிணமூர்த்தி, இயற்பியலாளர் சூரி பகவந்தம் மற்றும் மொழியியலாளர் மசூத் உசேன் கான் ஆகியோர் அடங்குவர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.