From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் தொலைத் தொடர்புப் பிணையம் தொலைபேசிப் பயனர்களின் (நிலைத்த மற்றும் நகர்பேசிகள்) மொத்த எண்ணிக்கையின்படி உலகின் இரண்டாவது மிகப்பெரும் பிணையமாக விளங்குகிறது.[3] பெரும் தொலைபேசி நிறுவனங்களாலும் அவற்றிற்கிடையேயான கடும் போட்டியாலும் உலகிலேயே மிகக் குறைந்த அழைப்புக் கட்டணங்களைக் கொண்ட நாடாகவும் விளங்குகிறது. சூன் 2012இல் 137 மில்லியன் இணையப் பயனர்கள் உள்ள இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரும் இணையப் பயனர் தளத்தைக் கொண்டுள்ளது.[4][5] தொலைபேசி, இணையச்சேவை, தொலைக்காட்சி என்பன இந்தியத் தொலைதொடர்புத் துறையின் முதன்மை அங்கங்களாக உள்ளன.
இந்தியாவில் தொலைத் தொடர்பு | ||
---|---|---|
வருமானம் (மொத்தம்) | $ 33,350 மில்லியன்[1] | |
தொலைபேசி | ||
தொலைபேசி சந்தாதாரர்கள் (மொத்தம்) (2012) | 960.9 மில்லியன் (மே 2012) | |
நிலைத்த பேசிகள் (மே 2012) | 31.53 மில்லியன் | |
நகர் பேசிகள் (2012) | 929.37 மில்லியன் | |
மாதாந்திர தொலைபேசி சேர்க்கைகள் (நிகர) (மே 2012) | 8.35 மில்லியன் | |
தொலைபேசி அடர்த்தி (2012) | 79.28 % | |
ஊரக தொலைபேசி அடர்த்தி | 33 %[1] | |
2012இல் திட்டமிட்ட தொலைபேசி அடர்த்தி | 84 % | |
இணைய அணுக்கம் | ||
வீட்டு அணுக்க விழுக்காடு (மொத்தம்), 2012 | 10.2% வீடுகளில் (137 மில்லியன்) | |
வீட்டு அகலப்பாட்டை அணுக்க விழுக்காடு | 1.18% வீடுகளில் (14.31 மில்லியன்) | |
அகலப்பாட்டை இணையப் பயனர்கள் | 14.31 மில்லியன் (மே 2012)[2] | |
இணையச் சேவை வழங்கிகள் (2012) | 155 | |
நாட்டின் குறியீடு அதியுயர் ஆள்களப் பெயர் | .இந்தியா | |
அலை பரப்பல் | ||
தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையங்கள் (2009) | 1,400 | |
வானொலி ஒலிபரப்பு நிலையங்கள் (1997) | 800 |
நவீனப் படுத்தப்பட்டுவரும் தொலைபேசித் துறை அடுத்தத் தலைமுறை பிணையத்திற்கு மாறும்வகையில் அதிநவீன தொலைபேசி பிணைய மைய அங்கங்களாக எண்ணிம தொலைபேசியகங்கள், நகர்பேசி நிலைமாற்றி மையங்களையும் ஊடக மின்வாயில்களையும் சமிக்ஞை மின்வாயில்களையும் அமைத்து வருகிறது; இவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் வகையில் ஒளியிழை அல்லது நுண்ணலை வானொலி தொடர் பிணையங்களும் அமைக்கப்படுகின்றன. பிணையத்தின் மையத்துடன் சந்தாதாரர்களை இணைக்கும் அணுக்கப் பிணையம், செப்புக் கம்பிவடங்கள், ஒளியிழை வடங்கள் மற்றும் கம்பியில்லா தொழில்நுட்பங்கள் என பல்வகைப்பட்டு உள்ளது. தொலைக்காட்சித் துறையில் புதிய தொழில்நுட்பமான டி.டி.எச் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தனியார்த்துறையில் பண்பலை ஒலிபரப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அத்துறை மிகுந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இந்தியத் தொலைத்தொடர்புக்கு நாட்டின் இந்திய தேசிய செயற்கைக்கோள் தொகுதி மிகுந்த உதவியாக உள்ளது. இத்தொகுதி உலகில் உள்நாட்டு செயற்கைக்கோள் தொகுதிகளிலேயே மிகப்பெரும் பிணையங்களில் ஒன்றாக விளங்குகிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பல்வேறு வகைப்பட்ட தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களால் தொலைபேசி, இணையம், வானொலி, தொலைக்காட்சி சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.[6]
இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் அரசின் தனியுரிமையாக இயங்கிவந்த தொலைத்தொடர்புத் துறை 1990களில் அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகளால் தனியார்த் துறைக்கு திறந்து விடப்பட்டது; இதன்பிறகு இது விரைவாக வளர்ச்சி யடைந்து உலகின் மிகவும் போட்டி மிகுந்த மற்றும் மிக விரைவாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்புச் சந்தையாக விளங்குகிறது.[7][8] 2001இல் 37 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டிருந்த இத்துறை 2011இல் 846 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது; கடந்த பத்து ஆண்டுகளில் இருபது மடங்கு வளர்ந்துள்ளது.[1]
மே 2012இல் 929.37 மில்லியன் நகர்பேசிப் பயனர்களின் தளத்தைக் கொண்டுள்ள இந்தியா உலகின் மிகுந்த நகர்பேசிகளைக் கொண்ட நாடுகளில் இரண்டாவதாக உள்ளது.[6] சூன் 2012இல் 137 மில்லியன் இணையப் பயனர்களைக் கொண்டுள்ள இந்தியா உலகளவில் இணையப் பயன்பாட்டாளர்களில் மூன்றாவதாக விளங்குகிறது.[4][5]
இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் மொத்த வருமானம் 2010-11 நிதியாண்டில் 7% வளர்ச்சி கண்டு ₹2,83,207 கோடி (US$35 பில்லியன்) ஆக உள்ளது.[9]
தொலைத்தொடர்புத் துறை நாட்டின் சமூக பொருளியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளது. சிற்றூர்ப் பகுதிகளுக்கும் நகரியப் பகுதிகளுக்கும் இடையே இருந்துவந்த எண்ணிமப் பிரிவை குறுக்க குறிப்பிடத்தக்க பங்காற்றி உள்ளது. மேலும் அரசின் வெளிப்படைத் தன்மையை கூட்டும் வண்ணம் மின்னாளுகையை அறிமுகப்படுத்த உதவி உள்ளது. இந்திய சிற்றூர்ப் பகுதி மக்களுக்கு பரவலான மக்கள் கல்வி வழங்க அரசு தற்கால தொலைத்தொடர்பு வசதிகளை பயன்படுத்தி வருகிறது.[10] பேரிடர் காலங்களில் நிவாரண உதவிகளை ஒருங்கிணைக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தொலைத்தொடர்பு சாதனங்களை மாநில/மாவட்ட ஆட்சியாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் வரலாறு தந்தி அறிமுகமான நாளிலிருந்தே துவங்குகிறது. இந்தியாவின் அஞ்சல் மற்றும் தந்தித் துறைகள் உலகிலேயே பழமையான துறைகளில் ஒன்றாகும். 1850இல் கொல்கத்தாவிற்கும் டயமண்டு ஆர்பருக்கும் இடையே முதல் சோதனைமுக தந்தி கம்பித்தடம் இழுக்கப்பட்டது. இது 1851இல் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அப்போது பொதுத்துறை அலுவலகத்தின் ஒரு சிறு மூலையில் புதியதாக உருவாக்கப்பட்ட அஞ்சல் தந்தி துறை இயங்கியது.[11]
பின்னர், நவம்பர் 1853இல் கொல்கத்தாவையும் பெஷாவரையும் இணைத்தும் ஆக்ரா, மும்பை, சென்னை, உதகமண்டலம், பெங்களூரு ஆகியவற்றை இணைத்தும் 4,000 மைல்கள் (6,400 km) தொலைவிற்கு தந்திக் கம்பங்கள் நடும் பணி துவக்கப்பட்டது. இதனை முன்னெடுத்துச் சென்ற வில்லியம் ஓ'ஷாஹ்னெசி பொதுத்துறை பொறியாளராவார். தமது காலத்தில் இந்தியாவில் தந்தி மற்றும் தொலைபேசி சேவைகளை மேம்படுத்த இவர் பெரும் பணி ஆற்றியுள்ளார். 1854ஆம் ஆண்டில் தந்திச் சேவைகள் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட பின்னர் ஓர் தனித்துறை ஏற்படுத்தப்பட்டது.
1890இல், இரு தொலைபேசி நிறுவனங்கள், (ஓரியன்டல் டெலிபோன் கம்பனி, ஆங்கிலோ-இந்தியன் டெலிபோன் கம்பனி) இந்தியாவில் தொலைபேசி இணைப்பகங்களை நிறுவிட அப்போதைய இந்திய அரசை வேண்டினர். தொலைபேசி சேவை அரசுமயமாக்கப்பட்டு அரசே இச்சேவையை நிறுவிடும் எனக் கூறி அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் 1891இல் அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டு இங்கிலாந்தின் ஓரியன்டல் டெலிபோன் கம்பனிக்கு கல்கத்தா, பம்பாய், மதராசு மற்றும் அகமதாபாத் நகரங்களில் தொலைபேசி இணைப்பகங்கள் அமைக்க அனுமதித்தது; முதல் முறையாக தொலைபேசிச் சேவை துவங்கியது.[12] 28 சனவரி 28, 1892இல் கல்கத்தா, பம்பாய், மதராசு தொலைபேசி இணைப்பகங்கள் திறக்கப்பட்டன. "மத்திய இணைப்பகம்" எனப் பெயரிடப்பட்ட கல்கத்தா இணைப்பகத்தில் துவக்கத்தில் 93 சந்தாதாரர்கள் இருந்தனர்.[13]
அலைப்பரப்பல் வளர்ச்சி: வானொலி ஒலிபரப்பு 1927இல் அறிமுகமானாலும் 1930இல்தான் அரசுத்துறையில் மேற்கொள்ளப்பட்டது. 1937இல் இந்த அமைப்பிற்கு அனைத்திந்திய வானொலி எனப் பெயர் சூட்டப்பட்டது. 1957 முதல் இது ஆகாசவாணி என அழைக்கப்படுகிறது.[15] 1959இல் குறைந்த நேர தொலைக்காட்சி சேவை அறிமுகப்படுத்தபட்டாலும் முழுநேர ஒளிபரப்பு 1965இல் துவங்கியது. இந்திய அரசின் தகவல் மற்றும் அலைப்பரப்புத் துறை இதனையும் தொலைக்காட்சிச் சேவைகள் வழங்கிய தூர்தர்சனையும் மேற்பார்வையிட்டு வந்தது. 1997இல் ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாக பிரசார் பாரதி அமைக்கப்பட்டது. அனைத்திந்திய வானொலியும் தூர்தர்சனும் இதன் அங்கங்களாக அமைந்தன.[10]
தாராளமயமாக்கலுக்கு முந்தைய புள்ளிவிவரங்கள்: பிரித்தானியர் காலத்தில் நாட்டின் அனைத்து முதன்மை நகரங்களும் பேரூர்களும் தொலைபேசிச் சேவையால் இணைக்கப்பட்டிருந்தும் 1948இல் இயங்கிய மொத்த தொலைபேசிகளின் எண்ணிக்கை 80,000ஆக மட்டுமே இருந்தது. விடுதலைக்குப் பிறகு தொலைபேசி வளர்ச்சி ஓர் தகுதிநிலை குறியீடாகவே பார்க்கப்படதால் இந்திய அரசினால் போதுமான நிதியாதரவு தர இயலவில்லை. 1971இல் தொலைபேசிகளின் எண்ணிக்கை 980,000ஆக இருந்தது; 1981இல் இது 2.15 மில்லியனாக உயர்ந்தது; தாராளமயமாக்கப்பட்ட கொள்கை கொணரப்பட்ட 1991ஆம் ஆண்டில் 5.07 மில்லியனாக இருந்தது. இவை பெரும்பாலும் கூடிய மூலதனத்தையும் தொழிலாளர்களையும் சார்ந்த நிலைத்த தொலைபேசிகளாக இருந்தன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.