தமிழ் மொழியின் 12 உயிரெழுத்துக்களில் மூன்றாம் எழுத்து. From Wikipedia, the free encyclopedia
இ (ⓘ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாவதாக வைக்கப்பட்டுள்ள எழுத்தும் இதுவே. இது மொழியின் ஓர் ஒலியையும் அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை "இகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும் பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஈனா" என்பது வழக்கம்.
தமிழ் எழுத்துகளின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் இ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது குற்றெழுத்து எனப்படுகின்றது. குற்றெழுத்துகள் ஒரு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் ஒரு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]
தமிழில் சுட்டெழுத்துகள் மூன்று. அவை அகரம், இ, உகரம் என்பனவாகும். அவற்றுள் இகரமும் ஒன்று. இஃது அண்மைச் சுட்டைக் குறிக்கப் பயன்படுகின்றது[2]. எடுத்துக்காட்டாக இவன், இது, இங்கே போன்ற அண்மைச் சுட்டுச் சொற்களில் இ முதல் எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக்காட்டுகளில் இ சொல்லின் உள்ளேயே வருவதால் அஃது அகச்சுட்டு எனப்படுகின்றது. இ புறச்சுட்டாகவும் வருவதுண்டு. அவ்வாறு வரும்போது அது சொல்லுக்குப் புறம்பாக நிற்கும்[2]. இச்சிறுவன் (இ + சிறுவன்), இக்கோயில் (இ + கோயில்) போன்ற சொற்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துகளை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன.
தனி இ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துகளுடன் சேர்ந்தும் இ சொற்களுக்கு முதலாக வரும் என்கின்றன தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்கள்[4]. இதிலிருந்து ஙி, டி, ணி, ரி, லி, ழி, ளி றி, ஆகிய எழுத்துகள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும் தற்காலத்தில், பிற மொழிச் சொற்களை எழுதுவோர் சிலர் டி, ரி, லி போன்ற எழுத்துகளும் சொல் முதலாக வரும்படி எழுதுகிறார்கள். டிக்கட், ரிக்சா, லிவர்பூல், றியோடிஜெனிரோ போன்ற சொற்களை இவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இகரம் தனித்தும் மெய்களுடன் சேர்ந்தும் சொற்களுக்கு இறுதியில் வரும்.
இ உடன் மெய்யெழுத்துகள் சேர்ந்து இகர உயிர் மெய்யெழுத்துகள் உருவாகின்றன. மெய்யெழுத்துகள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துகளையே குறிக்கின்றன[5]. இதனால், இகரமேறிய மெய்களை எழுதும்போது அகரமேறிய மெய்யெழுத்துடனேயே இகரத்தைக் குறிக்கும் "விசிறி" எனப்படும் துணைக்குறியையும் சேர்த்து எழுதுவது மரபு.
18 மெய்யெழுத்துகளோடும் அகரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துகளையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
மெய்யெழுத்துகள் | சேர்க்கை | உயிர்மெய்கள் | ||
---|---|---|---|---|
வரிவடிவம் | பெயர் | வரிவடிவம் | பெயர் | |
க் | இக்கன்னா | க் + இ | கி | கீனா |
ங் | இங்ஙன்னா | ங் + இ | கி | ஙீனா |
ச் | இச்சன்னா | ச் + இ | சி | சீனா |
ஞ் | இஞ்ஞன்னா | ஞ் + இ | ஞி | ஞீனா |
ட் | இட்டன்னா | ட் + இ | டி | டீனா |
ண் | இண்ணன்னா | ண் + இ | ணி | ணீனா |
த் | இத்தன்னா | த் + அ | தி | தீனா |
ந் | இந்தன்னா | ந் + இ | நி | நீனா |
ப் | இப்பன்னா | ப் + இ | பி | பீனா |
ம் | இம்மன்னா | ம் + இ | மி | மீனா |
ய் | இய்யன்னா | ய் + இ | யி | யீனா |
ர் | இர்ரன்னா | ர் + இ | ரி | ரீனா |
ல் | இல்லன்னா | ல் + இ | லி | லீனா |
வ் | இவ்வன்னா | வ் + இ | வி | வீனா |
ழ் | இழ்ழன்னா | ழ் + இ | ழி | ழீனா |
ள் | இள்ளன்னா | ள் + இ | ளி | ளீனா |
ற் | இற்றன்னா | ற் + இ | றி | றீனா |
ன் | இன்னன்னா | ன் + இ | னி | னீனா |
தமிழில் இகர ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் ஒன்றுபோலவே இருந்ததில்லை. ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் இகரத்தைக் குறிக்கப் பயன்பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர்த் தமிழை எழுதுவதற்குத் தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துகள் பயன்பட்டுள்ளன.
இகரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஓர் ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் இகரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் இகரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.
கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துகளை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "பாரதி பிரெய்லி" தமிழ் எழுத்துகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஓர் எழுத்துகான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதல் வரிசையில் வலப்பக்கப் புள்ளியும், இரண்டாவது வரிசையில் இடப்பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அஃது இ யைக் குறிக்கும். இதை அருகில் உள்ள படம் காட்டுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.