From Wikipedia, the free encyclopedia
ஒலிப்பியலில், உயிரொலி (Vowel) என்பது, தொண்டைக்குழியின் ஊடாக வெளியேறும் மூச்சுக்காற்று, பேச்சுக் குழலில் எவ்விதமான தங்கு தடைகளும் இன்றி வெளியேறும்போது உருவாகும் ஒலிகளுள் ஒன்றைக் குறிக்கும். அதாவது, உயிரொலிகளை ஒலிக்கும்போது தொண்டைக் குழிக்கு மேல் எவ்வித காற்று அழுத்தமும் ஏற்படுவதில்லை. இது மெய்யொலிகளின் ஒலிப்பில் இருந்து வேறுபட்டது. மெய்யொலிகளை ஒலிக்கும்போது பேச்சுக்குழலின் ஏதாவது ஒரு பகுதியில் முழுத்தடையோ அல்லது ஓரளவு தடையோ ஏற்படுகின்றது. உயிரொலி, அசையொலியும் ஆகும். உயிரொலியைப் போன்று திறந்த, ஆனால் அசையில் ஒலி அரையுயிரொலி எனப்படுகிறது.[1][2][3]
முன் | முன்-அண்மை | நடு | பின்-அண்மை | பின் | |
மேல் | |||||
கீழ்-மேல் | |||||
மேலிடை | |||||
இடை | |||||
கீழ்-இடை | |||||
மேல்-கீழ் | |||||
கீழ் | |||||
இணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர். |
உயிரொலிகளை வேறுபடுத்திக் கூறுவதற்குப் பின்வரும் மூன்று அடிப்படையான ஒலிப்பு இயல்புகள் பயன்படுகின்றன.
அருகில் உள்ள அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி வரைபடம் இம்மூன்று காரணிகளின் அடிப்படையில் உயிரொலிகளை வகைப்படுத்திக் காட்டுகிறது. இம்மூன்றும் தவிர உயிரொலிப் பண்புக்குக் காரணிகளாக அமையும் வேறு சிலவும் உள்ளன. மெல்லண்ண நிலை (மூக்கியல்பு), குரல்நாண் அதிர்வின் வகை, வேர்நா நிலை என்பன இவற்றுட் சில.
வாய்க்குள், நிலைக்குத்துத் திசையில் நாக்கின் வெவ்வேறு நிலைகளை உயிரொலியின் உயரம் என்று குறிப்பிடுகின்றனர். நாக்கு வாய்க்குள் அண்ணத்துக்கு அண்மையில் இருக்கும் நிலை மேல் நிலை ஆகும். [இ], [உ] ஆகிய உயிர்களை ஒலிக்கும்போது இவ்வாறு நிகழ்வதைக் காணலாம். அண்ணத்திலிருந்து கூடிய தூரத்தில் கீழே நாக்கு இருப்பது கீழ் நிலை. [அ] என்னும் உயிரை ஒலிக்கும்போது இவ்வாறு ஏற்படும். இவற்றுக்கு இடையில் இருப்பது இடை நிலை. நாக்கு மேல்நிலையில் இருக்கும்போது உருவாகும் உயிரொலிகளை மேலுயிர் என்றும், கீழ் நிலையில் இருக்கும்போது உருவாகும் உயிரொலிகளை கீழுயிர்கள் என்றும் அழைக்கின்றனர். இடைநிலையில் இருக்கும்போது உருவாகும் உயிரொலிகள் இடையுயிர்கள் எனப்படுகின்றன. மேலுயிர்களை ஒலிக்கும்போது தாடை மேலெழும்பி ஏறத்தாழ மூடிய நிலையை அடைகிறது. அவ்வாறே, கீழுயிர்களை ஒலிக்கும்போது தாடை கீழிறங்கித் திறந்த நிலையை அடைகிறது. இதனால், மேலுயிரை மூடுயிர் என்றும் கீழுயிரைத் திறப்புயிர் என்றும் அழைப்பதுண்டு. இந்தச் சொற்பயன்பாடுகளே அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் பயன்படுகிறது. உயிரொலி "உயரம்" என்பது "ஒலிப்புறுப்புப் பண்பு" என்பதைவிட அஃது ஒரு "ஒலியியல் பண்பு" என்பதே பொருத்தமானது. இதனால் தற்காலத்தில், உயிரொலி உயரம் என்பதை நாக்கின் நிலையைக் கொண்டோ தாடையின் திறப்பு நிலையைக் கொண்டோ தீர்மானிப்பது இல்லை. முதல் ஒலியலைச்செறிவின் (F1) சார்பு அதிர்வெண்ணை அடிப்படையாகக் கொண்டே உயிரொலி "உயரம்" வரையறுக்கப்படுகின்றது. F1 இன் மதிப்புக் கூடும்போது, உயிரொலியின் "மேல் தன்மை" அல்லது "மூடு தன்மை" குறைகிறது. எனவே உயிரொலியின் உயரம் F1 உடன் நேர்மாறான தொடர்பைக் கொண்டுள்ளது.
அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி ஏழு வெவ்வேறு உயிரொலி உயரங்களைக் குறிப்பிடுகிறது.
எந்தவொரு மொழியிலும் உண்மையான இடையுயிர்கள், மேல்-இடையுயிரில் இருந்தோ கீழ்-இடையுயிரில் இருந்தோ வேறுபடுவது இல்லை. [e ø ɤ o] ஆகிய எழுத்துகளை மேல்-இடையுயிருக்கோ இடையுயிருக்கோ பயன்படுத்துவது உண்டு.
ஆங்கில மொழியில் உயிரொலிகளில் ஆறு வெவ்வேறு உயர வேறுபாடுகள் இருப்பினும், அவை நாக்கின் முன்-பின் நிலைகளில் தங்கியிருப்பன ஆகும். அத்துடன் இவற்றுட் பல ஈருயிர்கள். செருமன் மொழியின் சில வகைகளில் வேறு காரணிகளில் தங்கியிராத ஐந்து வெவ்வேறு உயர வேறுபாடுகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆம்சுட்டெட்டெனின் பவேரிய மொழியின் கிளை மொழியில் பதின்மூன்று நெட்டுயிர்கள் உள்ளன. முன் இதழ்விரி நிலை, முன் இதழ்குவி நிலை, பின் இதழ்குவி நிலை ஆகிய வகைகள் ஒவ்வொன்றிலும் நான்கு வெவ்வேறு உயர வேறுபாடுகளுடன் (மேல், மேல்-இடை, இடை, மேல்-கீழ் என்பன) கூடிய 12 உயிர்களுடன், ஒரு கீழ் நடு உயிரையும் சேர்த்து /i e ɛ̝ æ/, /y ø œ̝ ɶ̝/, /u o ɔ̝ ɒ̝/, /ä/ ஆகிய 13 உயிர்கள் உருவாகின்றன. இவற்றில் காணப்படும் உயர வேறுபாடுகள் நான்கு மட்டுமே.
"உயிரொலி உயரம்" என்னும் இந்தக் காரணி மட்டுமே உயிரொலிகளுக்குரிய முதன்மை அம்சமாக உள்ளது. உலகின் எல்லா மொழிகளிலும் இக்காரணி உயிரொலிகளை வேறுபடுத்துவதற்குப் பயன்படுகின்றது. முன்-பின் இயல்பு, இதழ் குவிவு-இதழ் விரிவு இயல்பு போன்ற பிற இயல்புகள் எதுவும், உயிரொலிகளை வேறுபடுத்தும் காரணியாக எல்லா மொழிகளிலும் பயன்படுவதில்லை.
உயிர்களின் முன்-பின் இயல்பு என்பது உயிரொலிகளை ஒலிக்கும்போது வாய்க்குள் நாக்கின் சார்பு நிலையைக் குறிக்கப் பயன்படுவது. [இ] போன்ற முன்னுயிர்களை ஒலிக்கும்போது நாக்கு வாய்க்குள் முன்தள்ளி இருக்கும். ஆனால், [உ] போன்ற பின்னுயிர்களை ஒலிக்கும்போது, நாக்கு வாய்க்குள் பின்தள்ளி இருக்கும். எனினும், உயிர், பின்னுயிரா முன்னுயிரா என்பதை அதன் ஒலிப்புமுறையின் அடிப்படையில் தீர்மானிப்பது இல்லை. இரண்டாவது ஒலியலைச் செறிவின் (F2) சார்பு அதிர்வெண் அடிப்படையிலேயே இது வரையறுக்கப்படுகிறது. F2 இன் மதிப்புக் கூடும்போது உயிர் கூடிய முன் இயல்பு கொண்டதாக இருக்கும்.
அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி, ஐந்து வகையான "உயிர் முன்-பின் இயல்பு"களைக் குறிப்பிடுகின்றது.
ஆங்கில மொழியில் எல்லா முன்-பின் இயல்பு வகைகளையும் சேர்ந்த உயிரொலிகள் இருந்தாலும், எந்தவொரு மொழியிலும், "உயரம்", "இதழமைவு" போன்ற காரணிகளின் துணை இல்லாமல் இந்த ஐந்து இயல்புகளின் அடிப்படையில் மட்டும் உயிர்கள் வேறுபடுவது இல்லை.
இதழ்குவிவு இயல்பு என்பது ஒலிக்கும்போது இதழ் குவிந்த நிலையில் அமைகிறதா அல்லவா என்பதை விளக்குகிறது. பெரும்பாலான மொழிகளில் இதழ்குவிவு இயல்பு, இடையுயிர் முதல் மேல்-பின்னுயிர்கள் வரையான உயிரொலிகளை வலுப்படுத்துவதாக அமைகிறதேயன்றித் தனித்துவமான ஓர் அம்சமாக அஃது அமைவதில்லை. பொதுவாகப் பின்னுயிர்களில் உயரம் கூடுதலாக இருக்கும்போது இதழ் குவிவதும் கூடுதலாக இருக்கும். எனினும், பிரெஞ்சு, செருமன், பெரும்பாலான உராலிய மொழிகள், துருக்கிய மொழிகள், வியட்நாமிய மொழி, கொரிய மொழி போன்ற சில மொழிகள் இதழ்குவிவு இயல்பையும், பின்-முன் இயல்பையும் தனித்தனியாகவே கையாளுகின்றன.
இருந்தபோதிலும், செருமன், வியட்நாமியம் ஆகிய மொழிகளிலும் கூட, இதழ்குவிவு இயல்புக்கும் பின்னியல்புக்கும் இடையே ஓரளவு தொடர்பு இருப்பதைக் காணலாம். இவற்றில், முன் இதழ்குவி உயிர்கள், முன் இதழ்விரி உயிர்களிலும் குறைந்த முன்னியல்பு கொண்டவையாகவும், பின் இதழ்விரி உயிர்கள், பின் இதழ்குவி உயிர்களிலும் குறைந்த பின்னியல்பு கொண்டவையாகவும் இருக்கின்றன. அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில், இதழ்விரி உயிர்கள், இதழ்குவி உயிர்களின் இடப்பக்கத்தில் வைக்கப்பட்டு இருப்பது இந்த நிலையைக் காட்டுவதாக உள்ளது.
பல்வேறு விதமான இதழினமாதலுக்கும் வாய்ப்புகள் உள்ளன. "இடை" தொடக்கம் "மேல்" வரையான இதழ்குவி பின்னுயிர்களில், பொதுவாக இதழ்கள் முன்புறம் நீள்கின்றன. இவ்வறு நிகழும்போது இதழ்களின் உட்புறம் வெளியே தெரியும். இது புற இதழ் குவிவு எனப்படுகின்றது. அதேவேளை, "இடை" தொடக்கம் "மேல்" வரையான இதழ்குவி முன்னுயிர்களில், இதழ்களின் விளிம்புகள் உட்புறமாக இழுக்கப்பட்டுக் குவிகின்றன. இஃது அக இதழ் குவிவு எனப்படும். எனினும் எல்லா மொழிகளிலும் இவ்வாறு அமைவதில்லை. எடுத்துக்காட்டாக, சப்பானிய மொழியில், /u/ அக இதழ் குவி பின்னுயிர் ஆகும். இஃது ஆங்கிலத்தில் உள்ள புற இதழ் குவி /u/ இலும் வேறுபட்டு ஒலிக்கும். சுவீடிய மொழி, நார்வேய மொழி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே இந்த இரண்டு வேறுபாடுகளும் ஒருங்கே காணப்படுகின்றன. இம் மொழிகளில், மேல் முன் இதழ்குவி உயிர்களில் 'அக இதழ் குவிவும், மேல் நடு இதழ்குவி உயிர்களில் புற இதழ் குவிவும் காணப்படுகின்றன. ஒலிப்பியலில் பல இடங்களில் இவ்விரண்டையும் இதழ்குவிவின் வகைகளாகக் கருதுகின்றனர். ஆனால், சில ஒலிப்பியலாளர்கள், இதை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள், குவிவு (புற இதழ் குவிவு), அழுத்தம் (அக இதழ் குவிவு), விரிவு (இதழ்விரிவு) என்பவற்றை மூன்று தனித்தனியானவையாகக் கொள்ள விரும்புகின்றனர்.
உயிரெழுத்துகள் தமிழில் பன்னிரண்டாகும். அவை- அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
</tr
எழுத்து | பெயர் | எழுத்தின் பெயர் | சொல் | பலுக்கல் (ஒலிப்பு) | பொருள் |
அ | அகரம் | a | அம்மா | amma | mother |
ஆ | ஆகாரம் | A | ஆடு | Aadu | goat |
இ | இகரம் | i | இலை | ilai | leaf |
ஈ | ஈகாரம் | I | ஈட்டி | iitti | javelin |
உ | உகரம் | u | உடை | udai | cloth/dress |
ஊ | ஊகாரம் | U | ஊஞ்சல் | Uunjal | swing |
எ | எகரம் | e | எட்டு | ettu | number eight |
ஏ | ஏகாரம் | E | ஏணி | ENi | ladder |
ஐ | ஐகாரம் | ai | ஐந்து | Ainthu | number five |
ஒ | ஒகரம் | o | ஒன்பது | onpathu | number nine |
ஓ | ஓகாரம் | O | ஓடம் | Odam | boat |
ஔ | ஔகாரம் | au | ஔவை | auvai | a olden day poet |
ஃ | அஃகேனம் | Ah | எஃகு | eHku | steel |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.