From Wikipedia, the free encyclopedia
அழகு (Beauty) , விலங்கு பொருள், நபர் அல்லது இடம் இவற்றின் பண்பு சார்ந்த இன்பம் அல்லது திருப்தியை அளிக்கும் ஒரு புலனுணர்வு அனுபவம் ஆகும். அழகியல், கலாச்சாரம், சமூக உளவியல் மற்றும் சமூகவியல் ஆகியவற்றின் பகுதியாக அழகு ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு "சிறந்த அழகு" என்பது போற்றப்படக்கூடிய ஒரு பொருளைக் குறிக்கின்றது, அல்லது ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்தில் அழியாத தன்மை கொண்ட மிகச்சரியான அம்சங்களைக் கருத்தில் கொண்டுள்ளதாக அமைகிறது. அழகு என்னும் உணர்வின் அனுபவம் பெரும்பாலும் சில உறுப்படிகளின் பொருள் விளக்கமாகவும் இயற்கையுடன் இயைபும் சமநிலையும் கொண்டதாகவும் தொடர்புபடுத்தப்படுகிறது. கவர்ச்சி மற்றும் நலம் சார்ந்த உணர்வுகளுக்கு இந்நிலை வழிவகுக்கிறது. இவ்வுணர்வு ஒர் அகநிலை அனுபவமாக இருப்பதால், "இரசிப்பவரின் கண்களில் அழகு இருக்கிறது " என்று கூறப்படுகிறது"[1]. பொருட்கள், மனிதர்கள் மற்றும் நிலப்பரப்பு தொடர்பானவற்றின் அழகியல் சார்பான புலனுணர்வுகள் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளன என்பதற்கு ஏற்ற பொருத்தமான சான்றுகள் உள்ளன. மனித மரபணுக்களின் மேம்பட்ட வாழ்க்கைக்கான வாய்ப்புகளை இவை காணப்படும் அழகான இடங்களில் காணப்படுவதாகக் கருதப்படுகிறது[2][3].
பண்டைய கிரேக்க பெயர் சொல்லான κάλλος, kallos, என்பதற்கும் பெயர் உரிச்சொல்லான καλός, kalos. என்பதற்கும் பொருத்தமான ஆங்கில மொழிபெயர்ப்புச் சொல் "beauty" அல்லது "beautiful" எனக் கருதப்பட்டது. இருப்பினும் kalos என்பதற்கு அழகு அல்லது மிகச் சிறந்த என்ற பொருளில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்போக்கால் உடலியல் அல்லது பொருளியல் அம்சங்களைத் தாண்டி விரிவான பொருளை இச்சொல் தனதாக்கிக் கொண்டது. இதேபோல kallos என்ற சொல்லும், பாலுணர்வை வெளிப்படுத்தும் ஆங்கிலச் சொல்லான பியூட்டியிலிருந்து மாறுபட்ட பொருளில் பயன்படுத்தப்பட்டது [4]. இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தில் ஒன்றான கொயின் கிரேக்க மொழியில், ஆங்கிலச் சொல்லான பியூட்டிபுல் என்ற சொல்லுக்கு சமமான சொல்லாக ὡραῖος, hōraios என்ற சொல் கருதப்படுகிறது. ὥρα, hōra,என்ற சொல்லிலிருந்து சொற்பிறப்பியல் மூலமாக ஒரு பெயர் உரிச்சொல்லாக இது வருவிக்கப்படுகிறது. எனவே கொயின் கிரேக்க மொழியில் அழகு என்பது ஒன்றின் நேரத்துடன் தொடர்புடையதாக உள்ளது [5]. எனவே இதன்படி ஒரு பழுத்த பழம் அந்நேரத்தில் அழகானதாகக் கருதப்பட்டது. முதிய பெண் ஒருவர் இளம் பெண்ணாகத் தோற்றமளிக்க முயற்சிப்பதும் அல்லது இளம் பெண் முதியவராகக் காட்சியளிக்க முயற்சிப்பதும் அழகு என்று கருதப்படுவதில்லை. தூய கிரேக்க மொழியில் இச்சொல் இளமை, பழுத்த அல்லது முதிய வயது உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டதாக உள்ளது[5].
மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவரரான சாக்கிரட்டீசுக்கு முந்தைய பித்தாகரசு போன்ற மெய்யியலார்களின் படைப்புகளில் அழகு தொடர்பான ஆரம்பகால மேற்கத்திய தத்துவக் கோட்பாடுகள் காணப்படுகின்றன. பித்தாகரசு சார்ந்த சிந்தனையாளர்கள், அழகுக்கும், கணிதத்துக்கும் வலுவான தொடர்பு இருப்பதாக நம்பினர். அதிலும் குறிப்பாக தங்க விகிதம் எனப்படும் விகிதவியல் அளவு கொண்ட பொருட்கள் கூடுதல் அழகுள்ளனவாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் [6]. பண்டைய கிரேக்க கட்டிடக்கலையும் சமச்சீர் மற்றும் விகிதாசாரப் பார்வையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அழகு குறித்த மற்ற எல்லா கருத்திற்கும் மேலாக எண்ணம் அழகாக இருப்பதே அழகு என்ற கோட்பாட்டை பிளேட்டோ முன்வைத்தார் [7]. அழகுக்கும் நல்லொழுக்கத்திற்கும் இடையே தொடர்புள்ளது என்றும் அழகாக இருப்பதே நல்லொழுக்கத்தின் நோக்கம் என்றும் [8] தன் வாதங்களை வெளிப்படுத்தினார்.
பண்டைய மெய்யியலும், கிரேக்க மெய்யியலாளர்களின் கோட்பாடுகளின்படி உருவாக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் சிற்பங்களும் ஐரோப்பாவில் மறுமலர்ச்சியை உருவாக்கின. சிறப்பு மிக்க மனித அழகு குறித்த பார்வை பாரம்பரியத் தனிச்சிறப்புகளுடன் மீளுருவாக்கம் செய்யப்பட்டது. பெண்களின் அழகான தோற்றத்தினை உறுதி செய்யும் நிபந்தனைகளில் பாரம்பரிய அழகுக்கோட்பாடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. கோதிக் காலத்தின்போது, அழகின் பாரம்பரிய அழகியல் நெறிமுறை பாவத்துடன் தொடர்புடையது என்று நிராகரிக்கப்பட்டது. பின்னர் மறுமலர்ச்சி மற்றும் மனிதநேய சிந்தனையாளர்கள் இந்தப் பார்வையை நிராகரித்தனர், மேலும் பகுத்தறிவு ஒழுங்கும் இணக்கங்களின் விகிதமும் சேர்ந்த ஒரு விளைபொருளாக அழகு கருதப்பட்டது. கியார்கியோ வசாரி போன்ற மறுமலர்ச்சிக் கலைஞர்களும், கட்டிடக் கலைஞர்களும் கோதிக் கால அழகியல் பார்வை பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்றும் காட்டுமிராண்டித்தனமானது என்றும் விமர்சித்தனர். கோதிக் கலையின் பார்வையானது 19 ஆம் நூற்றாண்டில் கற்பனைவாதம் தொடங்கும் வரை நீடித்தது.
மேற்கத்திய மெய்யியலும், பண்பாட்டுச் சிறப்புகளும், பகுத்தறிவும் ஆதிக்கம் செலுத்திய அறிவொளிக் காலத்தில் அழகு என்பதும் ஒரு தத்துவப்பொருளே என்ற கோட்பாடு வளர்ச்சி கண்டது. உதாரணமாக, இசுகாட்லாந்தைச் சேர்ந்த மெய்யியலாளர் பிரான்சிசு அட்ச்சன், ’ஒற்றுமையும் பன்முகமும்’ மற்றும் ’பன்முக ஒற்றுமை" என்பதே அழகு என்று வாதிட்டார் [9]. யான் கீட்சு போன்ற ரோமானியக் கவிஞர்களும் இக்கோட்பாட்டை ஆதரித்தனர்.
அழகு என்பது உண்மை, உண்மையே அழகு,
அனைத்திலும்
பூமியில் அறிந்திருக்க வேண்டியதும் உண்மையே.
புனைவியம் என்பது, 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் உருவாகி வளர்ந்த கலை, இலக்கிய, அறிவுசார் இயக்கம் ஆகும். உலகின் பெரும்பாலான பகுதிகளில் இது 1800 - 1850 காலகட்டத்தில் உச்சநிலையில் இருந்தது. [10] காட்சிக் கலைகள், இசை, இலக்கியம், போன்ற துறைகளில் இக்காலம் மிகவும் வலுவானதாக இருந்ததுடன், வரலாற்றுவரைவியல்,[11] கல்வி,[12] இயற்கை அறிவியல்[13] ஆகிய துறைகளிலும் இக்காலம் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியது. அழகியல் அனுபவத்தின் உண்மையான மூலங்களாக வலுவான உணர்வுகளை இக்காலலட்ட இயக்கம் முன்னிலைப்படுத்தியது. குறிப்பாகக் கட்டுப்படுத்தப்படாத இயற்கையையும், அதன் கவர்ச்சியான பண்புகளையும் எதிர்கொள்ளும்போது அனுபவிக்கும் அச்சம், திகில், பிரமிப்பு போன்ற உணர்வுகள்மீது புனைவியம் கூடிய அழுத்தம் கொடுத்தது. இது நாட்டுப்புறக் கலைகளுக்கு ஒரு கண்ணியமான இடத்தை வழங்கியதுடன், தன்னிச்சைத் தன்மையை ஒரு விரும்பத்தக்க இயல்பாகவும் ஆக்கியது. அழகின் பாரம்பரிய பொருளுக்கும் உன்னதமான மேம்பட்ட பொருளுக்கும் இடையிலான வேறுபாடுகளை புனைவியக் காலத்தைச் சேர்ந்த எட்மண்டு பர்க்கு முன்மொழிந்தார்.
20 ஆம் நூற்றாண்டில் அழகியலுக்கு எதிரான பின்நவீனத்துவக் கலைஞர்களாலும், தத்துவஞானிகளாலும் அழகியல் நிரகாரிப்பு அதிகரித்து உச்சத்தில் இருந்தது[14]. அவ்வாறு இருந்தபோதிலும் அழகு பின்நவீனத்துவத்தின் மையப்பொருளாக இருந்தது. பிரெடரிக் நீட்சே முயற்சியே அழகு என வாதிட்டார் [15].பின்நவீனத்துவத்தில் அழகினை நிராகரித்த சிந்தனையாளர்கள் மீண்டும் அழகுக்கு முக்கியத்துவம் அளித்தனர். அமெரிக்க பகுத்தறிவு மெய்யியலாளர் கை சர்கெல்லோ தனது புதிய அழகுக் கோட்பாட்டில் அழகு என்பது ஒரு முக்கியமான தத்துவ கருத்து என்பதை மீண்டும் உறுதிப்படுத்த முயற்சித்தார் [16][17]. அழகு என்பது சமூகநீதியுடன் தொடர்புடையது என்று எலினை சுகரியும் வாதிட்டார்.
அழகு என்பது வெளி அழகுடன் சேர்ந்து ஆளுமை, கருணை, நேர்மை, மரியாதை, நேர்த்தி, இலட்சியம் போன்ற அக அழகுகளையும் உள்ளடக்கியது என்பது தனியர் அல்லது சமூக உடன்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பார்வையாகும். இந்த உளவியல் காரணிகளின் அடைப்படையில் உடலியல் பண்புகளும் மதிப்பிடப்படுவது இன்றைய அழகியல் கோட்பாடாகும். பண்பாட்டு மதிப்புகள் மாறுவதற்கேற்ப அழகுக்கான வரையறைகளும் காலப்போக்கில் மாறின. ஓவியங்கள் அழகுக்கான பல்வேறு தரங்களை வரலாற்று ரீதியாக,பரந்த அளவில் காட்டுகின்றன. இருப்பினும், ஒப்பீட்டளவில் மென்மையான தோல், பொருத்தமான உடல் கட்டமைப்பு மற்றும் வழக்கமான அம்சங்கள் ஆகியவை கொண்ட இளம் வயதினர் பாரம்பரியமாக வரலாற்றில் மிகவும் அழகானவர்களாக கருதப்படுகின்றனர். சராசரித்தனமே உடல் அழகை வெளிப்படுத்துகிற வலிமையான குறியீடாகக் கருதப்படுகிறது [18][19][20][21][22][23][24][25][26][27][28][29][30][31].
சராசரி மனிதர்களின் பிம்பங்களை ஒன்றாக்கி கலவையான தொகுப்பு மனிதனை உருவாக்கும் போது அவன் படிப்படியாக அழகான மனித உருவத்தை நெருங்குகின்றான். அவனே பேரழகனாகவும் அறியப்படுகின்றான். சார்லசு டார்வினின் உறவினர் பிரான்சிசு கால்டன் 1883 ஆம் ஆண்டில் முதன்முதலில் இதை கவனித்திருக்கிறார். சைவ உணவுக்காரர்களின் முகங்களையும் குற்றவாளிகளின் முகங்களையும் ஒப்பிட்டு இவர்களுக்கென்று தனிப்பட்ட முகவொற்றுமைகள் உள்ளனவா என்று இவர் ஆராய்ந்து கொண்டிருந்தபோது கலப்பு முகங்கள் கவர்ச்சிகரமாக இருப்பதாக உணர்ந்தார்[32]. ஆராய்ச்சியாளர்கள் அதிக கட்டுப்பாட்டில் உள்ள நிலைமைகளிலும் இம்முடிவுகளின் விளைவை மீண்டும் அடைந்தனர். கணினி உருவாக்கிய தொடர் முகங்களின் கணித சராசரியானது தனிப்பட்ட முகங்களைக் காட்டிலும் மிகவும் சாதகமானதாக மதிப்பிடப்படுகிறது [33]. பாலின உயிரினங்கள் பொதுவான தோற்றம் அல்லது சராசரி அம்சங்களைக் கொண்டுள்ள இணைகளால் ஈர்க்கப்படுகின்றன, ஏனென்றால் மரபணு அல்லது பெறப்பட்ட குறைபாடுகள் இல்லாத ஒரு நிலையை அளிக்கும் என நம்பப்படுகிறது. பாரம்பரியமாகவே இந்த நம்பிக்கை அனுகூலமாக இருந்துவருவதாகவும் விவாதிக்கப்படுகிறது [18][34][35][36]. அழகான முகங்களை விரும்பும் போக்கு மழலைப் பருவத்திலேயே தோன்றிவிடுகிறது என்பதற்கான சான்றுகளும் உள்ளன. அனேகமாக மரபியல் ரீதியாகப் பெறப்பட்ட உள்ளுணர்வாகவும் இது இருக்கலாம் [25][26][27][28][37] மற்றும் கவர்ச்சிக்காக நிறுவப்பட்ட விதிகள் வெவ்வேறு பாலினத்தினர் மற்றும் கலாச்சாரங்கள் முழுவதிலும் ஒத்திருக்கின்றன [38][39][39].
அழகான பெண்களின் அம்சமாகக் கருதப்படும் குறுகிய இடுப்பளவு விகிதம் 0.70 என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இத்தகைய அழகிய உடல் கட்டமைப்புள்ள பெண்கள் மற்ற பெண்களைக் காட்டிலும் அதிக அழகுள்ளவர்களாக கருதப்படுவதாக உடலியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதிகப்படியான பெண்மை இயக்குநீர் சுரப்பு இதற்கு காரணாமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தங்கள் இணையைத் தேர்ந்தெடுப்பதில் ஆண்களின் ஆழ்மனதில் இத்தகைய மதிப்பீட்டு நிபந்தனைகள் இருப்பது உண்மையாகும் [40].
அழகையும் அழகற்றதையும் தீர்மானிப்பதில் ஊடகங்களில் பார்க்கப்படும் படங்கள் மக்களின் மனதைப் பாதிக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. மிக மெல்லிய உடலமைப்புடன் உள்ள விளம்பர மாதிரிப்பெண்களால் சமூகத்திலுள்ள பெண்களிடம் உணவுக் குறைபாடுகள் தோன்றுவதாக சில பெண்ணியவாதிகளும், மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர் [41]. திரைப்படங்களில் தோன்றும் வெண்மை நிறப்பெண்களின் ஆதிக்கத்தால் சமூகத்தில் உள்ள பெண்களிடம் ஐரோப்பியமைய்ய அழகுக் கோட்பாடும், தாழ்வுமனப்பான்மையும், இனவாதமும் தோன்றுவதற்குக் காரணமாகின்றன என்றும் சிலர் வாதிடுகின்றனர் [42] and internalized racism.[43].
கருப்பே அழகு என்ற கலாச்சார இயக்கம் இந்த கருத்தை அகற்ற முயன்றது [44]. அழகு அனைத்து வடிவங்கள். நிறங்கள், அளவுகள் என்ற அனைத்து அம்சங்களில் இருந்தும் அழகு பிறக்கிறது என்று நிற எதிர்ப்பும் பன்முகத்தன்மையும் கொண்ட பாக்கித்தானிய வழக்கறிஞரான பாத்திமா லோதி கூறுகிறார் [45].
ஆண்களின் அழகு என்பது சப்பானில் 'பிசோன்னென்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. பிசோன்னென் என்பதன் பொருள் தனித்தன்மை வாய்ந்த பெண்ணிய அம்சங்களைக் கொண்ட ஆண்கள் என்பதாகும். சப்பானில் அழகுக்கான தரநிலையை உருவாக்குகின்ற உடல் பண்புகள் மற்றும் பொதுவாக பாப் கலாச்சாரச் சிலைகளாக காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இந்த காரணத்திற்காகவே சப்பானில் அழகியல் தொழில் பல பில்லியன் டாலர் முதலீட்டுத் தொழிலாக வளர்ச்சியடைந்துள்ளது.
அழகு ஒப்பீடு ஒரு தரத்தை அளிக்கிறது, மற்றும் அதை அடைய முடியாது போது கோபமும் அதிருப்தியும் ஏற்படுகின்றன. சிறந்த அழகு என்ற தரத்திற்குப் பொருந்தாதவர்கள் தங்கள் சமூகங்களுக்குள்ளிருந்து விலக்கி வைக்கப்படலாம். அக்ளி பெட்டி என்ற நகைச்சுவை தொலைக்காட்சி நாடகத்தில், கவர்ச்சியற்ற ஒரு பெண் எதிர்கொள்ளும் துன்பங்கள் சமுதாயத்தின் அசைக்கமுடியாத இம்மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றன. ஒரு நபர் அவரின் அழகு காரணமாக துன்புறுத்தலுக்கும் இலக்காகலாம். மலேனா என்ற இத்தாலியத் திரைப்படம், ஒரு இத்தாலியப் பெண்ணுக்கு அவளுடைய அழகு ஏற்படுத்தும் துன்பங்களையும், அவள் தான் வாழும் சமூகத்தால் எத்தகைய இன்னல்களை அனுபவிக்கிறாள் என்றும் சொல்கிறது. அழகாகக் கருதப்படும் பெண்களின் நேர்காணல்கள் மூலம் பெண்களுக்கான ஆசிகள், சாபங்கள் இரண்டையும் ’கண்களுக்குள் அழகின் தரிசனம்’ என்ற ஆவணப்படம்.ஆராய்கிறது.
சாதாரணத் தோற்றம் கொண்ட மாணவர்களைவிட அழகிய தோற்றம் கொண்ட மாணவர்கள் ஆசிரியர்களிடம் அதிக மதிப்பெண்கள் பெறுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், அழகுள்ளவர்கள் அதிகமாகப் பொருள் ஈட்டுவதாகவும், அழகற்றவர்கள் குற்றவாளிகளாகும் சதவீதம் அதிகமென்றும் சமூகத்தில் கருத்துகள் நிலவுகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.