From Wikipedia, the free encyclopedia
வான்புலிகள் (Tamileelam Air Force - TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு. வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், 'வானோடி' என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர்.
வான்புலிகள் நடத்திய தாக்குதல், வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை அடிப்படையில் புலிகளிடம் 2-5 இலகுதர வான்கலங்கள் உண்டு எனக்கருதப்படுகிறது[15]. இவை செக் நாட்டு இசட்-143 வகை விமானங்களாக இருக்கலாம் என்று இலங்கை அரசு கருதுகின்றது.[16] இவைதவிர வான்புலிகளிடம் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய பிற வான்கலங்களும், உலங்குவானூர்திகளும் இருக்கலாம்.
முதல் தாக்குதலில் வான்கலங்களேடு பொருத்தப்பட்ட சில இணைப்புப் பாகங்கள், விமான ஓட்டிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலத்திரனிய குண்டு விடுவி மற்றும் குண்டுகள் ஆகியவை உள்ளூர் தயாரிப்புக்கள்.[17] இவை விமானங்கள் பற்றிய தொழில்நுட்ப வளம் புலிகளிடம் இருப்பதைக் காட்டுகின்றது. கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது வீசப்பட்ட 4 குண்டுகளில் 1 வெடிக்கவில்லை வெடிக்காத ஒன்றை ஆராய்ந்த இலங்கை அரச தரப்பினர் இவற்றில் பல நூற்றுக்கணக்கான உருக்கு உருளைகள் கொண்ட உள்ளூர்த் தயாரிப்பென சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் இராணுவப் புலனாய்வு ஆசிரியர் இக்பால் அத்காஸ் தெரிவித்தார்.
வான்கலத்தை இரவில் ஓட்டிச் சென்று ஓர் இலக்கை அழிக்கும் திறன் இலகுவில் பெறக்கூடிய செயற்திறன் இல்லை. மாறாக, நீண்ட கால படிப்பறிவும், பட்டறிவும் தேவை. வான்புலிகளின் இத்திறன் கட்டுனாயக்க விமானத் தளத் தாக்குதலுக்கு அடுத்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தொடக்கத்தில், வான்புலிகள் ஐப்பானிய காமிகாசெ en:Kamikaze போன்று தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தலாம் என்று இராணுவ ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் தமது முதல் தாக்குதலில் இரவில் சென்று ஒரு இலக்கை தாக்கி மீண்டதன் மூலம் இவர்களின் தாக்குதல் திறனும் முறையும் தற்கொலைத் தாக்குதல்களாக மட்டுமே அமையும் என்ற கருத்தை பொய்ப்பித்துள்ளது. விமானம் வாங்குவதில் இருக்கும் செலவு, விமான ஓட்டிகளாக பயிற்சி பெறுவதில் இருக்கும் சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்கொலைத் தாக்குதல்கள் கடைசி கட்ட நடவடிக்கைகளாகவே இடம்பெறலாம் என்று தற்போது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.[18] எதிர்காலத்தில் பிளிற்ஸ்கிறீக் en:Blitzkrieg முறையான தாக்குதல் நடவடிக்கைகளிலும் வான்புலிகள் ஈடுபடலாம் என்று கருதப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் வான்புலிகளின் கரும்புலிகள் பெப்ரவரி 20, 2009 அன்று சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியதாக விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இத்தாக்குதலில் வான் புலிகளின் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகியோர் வீரமரணம் அடைந்ததாக புலிகள் தெரிவித்தனர்[14]. ஆனாலும் இரண்டு வானூர்திகளும் சுட்டு வீழத்தப்பட்டதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெலவின் கூற்றை மேற்கோள் காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது[19]. வானோடியின் உடலும் கைப்பெற்றப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
வான்புலிகளின் தோற்றத்துக்கு தலைமை ஏற்றவராக கருதப்படும் கேணல் சங்கர் "சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்தார். அதன் பின்னர் கனடா சென்ற அவர், அங்கு ஏர் கனடா விமான நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றியுள்ளார்."
வான்புலிகள் பிரான்சிலும் ஐக்கிய இராச்சியத்திலும் ஓட்டுனர் பயிற்சியைப் பெற்றிருக்கலாம் என்று பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அதாஸ் "Intelligence sources" முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கின்றார்.[20]
இந்த தொழில் நுட்பத்தை மலேசியாவில் இலங்கைத் தமிழ் பின்புலத்தைக் கொண்டவரால் இயக்கப்படும் ஒரு விமான பராமரிப்புப் பயிற்சி கல்லூரியிலும் விடுதலைப் புலிகள் பெற்றிருக்கலாம் என கருத்துப்பட The Island பத்திரிகையும் Asia Tribune தகவல்கள் வெளியிட்டுள்ளன.[21]
இரணைமடு பகுதியில் பெரிய விமானங்களும் வந்து இறங்கக் கூடிய அளவு ஓடுதளம் ஒன்று இருப்பதை செய்மதிப் படங்கள் மூலம் உறுதி செய்யக்கூடியதாக உள்ளது. இந்த விடயம் 2005 ஆண்டளவில் தெரியவந்தது. சிறிய ஓடுதளம் முல்லைத்தீவின் வேறு பகுதிகளிலும் இருக்கலாம்.
கவிஞர் புதுவை இரத்தினதுரை வான்புலிகளின் முதல்தாக்குதலை முன்வைத்து எழுதிய "முகிலைத் துளைத்த தமிழனும் இறக்கை முளைத்த கவிஞனும்" என்ற கவிதை பல தமிழர்களின் மனநிலையை பிரதிபலித்தது எனலாம்.
“ | ஈழத்தமிழன் இறக்கை கட்டி முகிலினுக்குள் |
” |
— கவிஞர் புதுவை இரத்தினதுரை |
இவை மட்டுமல்லாது இந்திய இராணுவ ஆய்வாளர் ஒருவர் தனது குறிப்பில் 'இறக்கை கட்டிய பயங்கரவாதம்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.[சான்று தேவை]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.