தில்லி சுல்தானகத்தின் தளபதி மற்றும் ஆட்சியாளர் (1150-1210) (ஆட்சி. 1206-1210) From Wikipedia, the free encyclopedia
குத்புத்தீன் ஐபக் (Qutb ud-Din Aibak) (பாரசீக மொழி: قطبالدین ایبک), (1150 – 14 நவம்பர் 1210) என்பவர் கோரி சுல்தான் முகம்மது கோரியின் ஒரு தளபதி ஆவார். வட இந்தியாவில் கோரி நிலப்பரப்புகளுக்கு இவர் பொறுப்பேற்று இருந்தார். 1206இல் முகம்மது கோரியின் அரசியல் கொலைக்குப் பிறகு இவர் தில்லி சுல்தானகத்தை (1206–1526) நிறுவினார். அடிமை அரசமரபை தொடங்கினார். இது சுல்தானகத்தை 1290 வரை ஆண்டது.
குத்புத்தீன் ஐபக் | |
---|---|
லாகூரின் அனார்கலி பசாரில் குத்புத்தீன் ஐபக்கின் சமாதி | |
தில்லியின் முதல் சுல்தான் | |
ஆட்சிக்காலம் | 25 சூன் 1206 – 14 நவம்பர் 1210 |
முடிசூட்டுதல் | 25 சூன் 1206, கசரே உமாயூன், லாகூர் |
முன்னையவர் | கோரின் முகம்மது |
பின்னையவர் | ஆராம் ஷா |
பிறப்பு | 1150 துருக்கிசுத்தான் |
இறப்பு | 14 நவம்பர் 1210 (அகவை 60) லாகூர், தில்லி சுல்தானகம் (தற்கால லாகூர், பாக்கித்தான்) |
புதைத்த இடம் | அனார்கலி பசார், லாகூர் |
துருக்கிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர் குழந்தையாக இருந்த போது அடிமையாக விற்கப்பட்டார். ஈரானின் நிசாபூரில் ஒரு நீதிபதியால் இவர் விலைக்கு வாங்கப்பட்டார். அங்கு இவர் வில்வித்தை, குதிரை ஏற்றம் போன்ற திறமைகளை கற்றார். காசுனியில் முகம்மது கோரியிடம் இவர் மீண்டும் ஒரு முறை இறுதியாக விற்கப்பட்டார். அரசரின் குதிரை லாயத்தில் அதிகாரி என்ற நிலைக்கு அங்கு இவர் உயர்ந்தார். குவாரசமிய-கோரி போர்களின் போது சுல்தான் ஷாவின் ஒற்றர்களால் இவர் பிடிக்கப்பட்டார். கோரி வெற்றிக்கு பிறகு இவர் விடுதலை செய்யப்பட்டார். முகம்மது கோரி இவருக்கு அதிக ஆதரவு அளித்தார்.
1192இல் இரண்டாம் தரைன் போரில் கோரி வெற்றிக்குப் பிறகு இந்திய நிலப்பரப்புக்கு பொறுப்பாளராக ஐபக்கை முகம்மது கோரி நியமித்தார். சௌகான்கள், ககதவாலர், சாளுக்கியர், சந்தேலர் மற்றும் பிற இராச்சியங்களில் உள்ள பல்வேறு இடங்கள் மீது ஊடுருவல் நடத்தியது மற்றும் வென்றது ஆகியவற்றின் மூலம் வட இந்தியாவில் கோரி அரசமரபின் சக்தியை ஐபக் விரிவாக்கினார்.
மார்ச் 1206இல் முகம்மது கோரியின் அரசியல் கொலைக்குப் பிறகு வட மேற்கு இந்தியாவில் கோரி நிலப் பரப்புகளின் கட்டுப்பாட்டுக்காக மற்றொரு முன்னாள் அடிமை தளபதியான தாசல்தீன் இல்திசுவுடன் ஐபக் சண்டையிட்டார். இந்த சண்டையின் போது இவர் காசுனி வரை முன்னேறினார். எனினும், பிறகு பின் வாங்கினார். தன்னுடைய தலைநகரை லாகூரில் அமைத்தார். முகம்மது கோரிக்கு பின் பதவிக்கு வந்த கியாசுதீன் மகுமூதுவின் முதன்மை நிலையை இவர் பெயரளவுக்கு ஏற்றுக் கொண்டார். இந்தியாவின் ஆட்சியாளராக ஐபக்கை மகுமூது அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார்.
ஐபக்கிற்கு பிறகு ஆராம் ஷா பதவிக்கு வந்தார். பிறகு ஐபக்கின் முன்னாள் அடிமையும், மருமகனுமான இல்த்துத்மிசு பதவிக்கு வந்தார். இந்தியாவின் கட்டிறுக்கமற்ற கோரி நிலப்பரப்புகளை ஒரு சக்தி வாய்ந்த தில்லி சுல்தானகமாக இல்த்துத்மிசு மாற்றினார். தில்லியில் குதுப் மினாரைக் கட்டும் பணியை தொடங்கி வைத்ததற்காக ஐபக் அறியப்படுகிறார்.
ஐபக் அண். 1150ஆம் ஆண்டு பிறந்தார்.[1] இவரது பெயரானது "குத்பல்தீன் அய்பெக்",[2] "குத்புத்தீன் ஐபெக்",[3] மற்றும் "குத்பல்தீன் அய்பக்"[4] என பலவாறாக ஒலி பெயர்க்கப்படுகிறது. இவர் துருக்கிஸ்தானிலிருந்து வந்தவர் ஆவார். ஐபக் என்று அழைக்கப்பட்ட ஒரு துருக்கிய பழங்குடியினத்தை சேர்ந்தவர் ஆவார். "நிலா" (அய்) மற்றும் "பிரபு" (பெக்) ஆகியவற்றைக் குறிக்கும் துருக்கிய வார்த்தைகளிலிருந்து இவரது பெயரான ஐபக் உருவானது என்று கருதப்படுகிறது. ஒரு குழந்தையாக இவர் தன்னுடைய குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டார். பிறகு நிசாபூரில் இருந்த அடிமை சந்தைக்கு கொண்டு சென்று குபி என்பவரிடம் விற்கப்பட்டார்.[5]
குபி அல்லது அவரது மகன்களில் ஒருவர் ஐபக்கை ஒரு வணிகரிடம் விற்றனர். அவ்வணிகர் காசுனியில் கோரி சுல்தான் முகம்மது கோரியிடம் ஐபக்கை விற்றார். சுல்தானின் அடிமை வீட்டிற்கு ஐபக் அனுப்பப்பட்டார். தன்னுடைய அடிமைகளுக்கு பரிசுகளை சுல்தான் வழங்கிய போது ஒரு முறை ஐபக் தன்னுடைய பங்கை பணியாளர்களுக்கு பிரித்து அளித்தார். இச்செயலால் மதிப்புணர்வு கொண்ட சுல்தான் இவரை உயர் நிலைக்கு உயர்த்தினார்.[5]
ஐபக் பிறகு முக்கிய பதவியான அரசரின் குதிரை லாயத்தின் அதிகாரி (அமீர்-இ அகுர்) என்ற பதவிக்கு உயர்ந்தார்.[5] குவாரசமிய ஆட்சியாளரான சுல்தான் ஷாவுடன் கோரிக்களுக்கு ஏற்பட்ட சண்டையின் போது குதிரைகளை பேணும் பொதுவான பணியின் பொறுப்பை ஐபக் ஏற்றிருந்தார். மேலும், அவற்றின் தீவனம் மற்றும் பொருட்களுக்கான பொறுப்பையும் ஏற்றிருந்தார்.[6] ஒரு நாள் குதிரைகளுக்கான தீவனத்தை சேகரித்து கொண்டிருந்த போது சுல்தான் ஷாவின் ஒற்றர்கள் இவரை பிடித்தனர். ஓர் இரும்புக் கூண்டில் இவரை வைத்தனர். இதற்கு பிறகு கோரிக்கள் சுல்தான் ஷாவை தோற்கடித்தனர். ஐபக் விடுதலை செய்யப்பட்டார். பிறகு கோரி ஐபக்கிற்கு பெருமளவு ஆதரவு அளித்தார். 1191-1192இல் இந்தியாவில் சண்டையிடப்பட்ட முதலாம் தரைன் யுத்தம் வரை ஐபக்கிற்கு பிறகு வழங்கப்பட்ட பதவிகள் குறித்து எந்த வித தகவல்களும் இல்லை.[7]
இந்தியாவில் முதலாம் தரைன் போரில் செளகான் ஆட்சியாளர் பிருத்திவிராச் சௌகானின் படைகளால் தோற்கடிக்கப்பட்ட கோரி இராணுவத்தின் தளபதிகளில் ஐபக்கும் ஒருவராவார்.[9] இரண்டாம் தரைன் யுத்தத்தில் கோரிக்கள் வெற்றி பெற்றவர்களாக உருவாயினர். கோரி இராணுவத்தில் தனது பொதுவான பொறுப்பை ஐபக் ஏற்றிருந்தார். சுல்தான் முகம்மது கோரிக்கு அருகிலேயே நின்று போரிட்டார். கோரி ஐபக்கை இராணுவத்தின் மையப்பகுதியில் நிறுத்தினார்.[10]
தரைனில் இவரது வெற்றிக்கு பிறகு முகம்மது கோரி முந்தைய சௌகான் நிலப்பரப்பை ஐபக்குக்கு கொடுத்தார். இந்தியாவின் பஞ்சாப்பின் தற்போதைய குராம் என்ற இடத்தில் ஐபக் நிறுத்தி வைக்கப்பட்டார்.[11][4] இவருக்கு எந்த விதமான பணி கொடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை. மின்ஹஜ்ஜின் கூற்றுப்படி வரி வசூலிக்கும் பணி, பக்ரி முதபீர் தளபதி பதவி என்கிறார், அசன் நிசாமி குராம் மற்றும் சமனாவின் ஆளுநராக ஐபக் பணியமர்த்தப்பட்டார் என்கிறார்.[2]
பிருத்திவிராச்சின் இறப்பிற்கு பிறகு கோரிக்களுக்கு திறை செலுத்தியவராக பிருத்திவிராச்சின் மகன் நான்காம் கோவிந்தராசனை ஐபக் நியமித்தார். சில காலத்திற்கு பிறகு பிருத்திவிராச்சின் சகோதரர் அரிராஜன் ரந்தம்பூர் மீது படையெடுத்தார். இப்பகுதியை தன்னுடைய அதிகாரி கவாமுல் முல்க்கின் கீழ் ஐபக் கொடுத்திருந்தார். ரந்தம்பூர் நோக்கி ஐபக் அணி வகுத்தார். ரந்தம்பூர் மற்றும் முன்னாள் சௌகான் தலை நகரமான அஜ்மீர் ஆகிய இடங்களிலிருந்து அரிராஜன் பின் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.[11]
செப்டம்பர் 1192இல் சாத்வான் என்ற பெயருடைய ஒரு கிளர்ச்சியாளர் முந்தைய சௌகான் நிலப்பரப்பில் இருந்த, நுசுரதுத்தீனால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த அன்சி கோட்டையை முற்றுகையிட்டார்.[12] ஐபக் அன்சியை நோக்கி அணி வகுத்தார். இது சாத்வான் பகாருக்கு பின் வாங்கும் நிலையை ஏற்படுத்தியது. பகாரில் நடந்த யுத்தத்தில் சாத்வான் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.[12]
மேலே குறிப்பிடப்பட்டுள்ள சாத்வானின் கிளர்ச்சி குறித்த தகவலானது சமகால எழுத்தாளர் அசன் நிசாமியிடம் இருந்து பெறப்படுகிறது. எனினும், 17ஆம் நூற்றாண்டின் பெரிஷ்தா என்ற வரலாற்றாளர் இந்த கிளர்ச்சி 1203ஆம் ஆண்டு நடந்ததாகக் குறிப்பிடுகிறார். தன்னுடைய தோல்விக்கு பிறகு குசராத்து எல்லைக்கு சாத்வான் பின்வாங்கியதாக குறிப்பிடுகிறார். ஐபக் குசராத்து மீது படையெடுத்த போது சாளுக்கிய மன்னன் இரண்டாம் பீமனின் ஒரு தளபதியாக சாத்வான் பின்னர் கொல்லப்பட்டார் என்று குறிப்பிடுகிறார்.[13] வரலாற்றாளர் தசரத சர்மாவின் கூற்றுப்படி குசராத்தின் எல்லைக்கு அருகில் உள்ள பகார் என்ற மற்றொரு இடத்துடன் சாத்வான் கொல்லப்பட்ட பகார் பகுதியை பெரிஷ்தா குழப்பிக் கொண்டிருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். மற்றொரு பகுதியானது பான்ஸ்வாரா மற்றும் துங்கர்பூருக்கு அருகில் உள்ளது.[14] வரலாற்றாளர் எ. கே. மசூம்தார் சாளுக்கிய மன்னர் பீமனை பீமசிம்மாவுடன் பெரிஷ்தா குழப்பிக் கொண்டிருக்கலாம் என்று குறிப்பிடுகிறார். கரதர கச்சா பட்டவலி என்ற நூல் பீமசிம்மா 1171ஆம் ஆண்டு அன்சியின் ஆளுநராக இருந்தார் என்று குறிப்பிடுகிறது. இவ்வாறாக சாத்வான் பீமசிம்மாவின் ஒரு தளபதியாக இருந்திருக்கலாம் மற்றும் தன்னுடைய எசமானருக்காக கோட்டையை மீண்டும் பெற முயற்சித்து இருக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது.[15]
என்றி மியர்சு எல்லியட் என்ற வரலாற்றாளர் சாத்வானை ஜாட் இன மக்களின் ஒரு தலைவர் என்று எண்ணுகிறார். பிந்தைய எழுத்தாளர்களாலும் இது குறிப்பிடப்படுகிறது.[16] நிசாமி இதை குறிப்பிடவில்லை. சாத்வான் மற்றும் ஜாட் ஆகிய சொற்களுக்கிடையே உள்ள ஒற்றுமை மற்றும் கிளர்ச்சி நடந்த இடம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எல்லியட் குறிப்பிடுகிறார் என்று தோன்றுகிறது.[17] எஸ். எச். கோடிவாலா என்ற வரலாற்றாளாரின் கூற்றுப் படி, சாத்வான் என்பது நூல்களில் உள்ள சகவான் என்ற சொல்லுடன் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்கிறார். இந்த கிளர்ச்சியாளர் ஒரு வேளை பிருத்திவிராஜனின் தளபதியான ஒரு சௌகானாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[18][15] ரீமா கூஜா என்பவர் சைத்ரா என்ற பெயரின் மருவிய ஒரு வடிவமாக இது இருந்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.[19]
சாத்வானை தோற்கடித்ததற்கு பிறகு இவர் குராமுக்கு திரும்பி வந்தார். தோவாப் மீது படையெடுக்க ஆயத்தங்களை மேற்கொண்டார். 1192இல் மீரட் மற்றும் பரன் (தற்போதே புலந்தசகர்) ஆகியவற்றின் கட்டுப்பாட்டை இவர் பெற்றார். அங்கிருந்து பின்னர் ககதவால இராச்சியத்திற்கு எதிராக தாக்குதல்களை தொடங்கினார்.[12] 1192இல் தில்லியின் கட்டுப்பாட்டை பெற்றார். தொடக்கத்தில் தில்லியின் தோமர மன்னரை ஒரு திறை செலுத்தியவராக இவர் விட்டுச் சென்றார். 1193இல் துரோகக் குற்றம் சாட்டி தோமர மன்னரை இவர் பதவியிலிருந்து நீக்கினார். தில்லியின் நேரடி கட்டுப்பாட்டை பெற்றார்.[20]
1193இல் கோரி தலைநகரான காசுனிக்கு ஐபக்கை சுல்தான் முகம்மது கோரி வருமாறு அழைத்தார்.[21] கிட்டத்தட்ட சமகால வரலாற்றாளரான மின்ஹஜ் ஏன் என்று விளக்கவில்லை. ஆனால், 14ஆம் நூற்றாண்டு வரலாற்றாளர் இசாமி ஐபக்கின் விசுவாசம் குறித்து சுல்தானுக்கு சிலர் சந்தேகத்தை தூண்டியதாக குறிப்பிடுகிறார். வரலாற்றாளர் கே. எ. நிசாமி, இசாமியின் குறிப்பை ஏற்கத்தக்கதல்ல என்று குறிப்பிடுகிறார். இந்தியாவில் மேற்கொண்ட கோரி விரிவாக்கத்திற்கு திட்டமிடுவதற்காக ஐபக்கின் உதவியை பெறுவதற்காக சுல்தான் அழைத்திருக்கலாம் என்ற கோட்பாட்டை முன் வைக்கிறார்.[21]
ஐபக் காசுனியில் சுமார் ஆறு மாதங்களுக்கு தங்கினார். 1194இல் இந்தியாவிற்கு திரும்பிய பிறகு யமுனை ஆற்றைக் கடந்தார். தோர் இராபுத்திரர்களிடமிருந்து கோலியை (தற்போதைய அலிகர்) கைப்பற்றினார்.[21][22]
இதே நேரத்தில், இந்தியாவில் ஐபக் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அரிராஜா முந்தைய சௌகான் நிலப்பரப்பின் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றார்.[11] தில்லிக்கு இவர் திரும்பியதற்குப் பிறகு அரிராஜாவுக்கு எதிராக ஐபக் இராணுவத்தை அனுப்பினார். தோல்வி உறுதி என்ற நிலையில் அரிராஜா தற்கொலை செய்து கொண்டார்.[23] அஜ்மீரை ஒரு முஸ்லிம் ஆளுநருக்கு கீழ் இறுதியாக ஐபக் கொடுத்தார். கோவிந்தராஜனை ரந்தம்பூருக்கு இடம் மாற்றினார்.[12]
1194இல் முகம்மது கோரி இந்தியாவுக்கு திரும்பி வந்தார். 50,000 குதிரைகளைக் கொண்ட ஓர் இராணுவத்துடன் யமுனை ஆற்றைக் கடந்தார். சந்தவார் போரில் ககதவால மன்னர் ஜெயச்சந்திரனின் படைகளை தோற்கடித்தார். ஜெயச்சந்திரன் போரில் கொல்லப்பட்டார். யுத்தத்திற்குப் பிறகு முகம்மது கோரி கிழக்கு நோக்கிய தனது முன்னேற்றத்தை தொடர்ந்தார். ஐபக் இந்த இராணுவத்தில் முன் வரிசை படையில் இருந்தார். வாரணாசியானது (காசி) கைப்பற்றப்பட்டது.[24][25][26] புத்த நகரமான சாரநாத்தும் இந்நேரத்தில் சூறையாடப்பட்டது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.[26][27] கோரிக்கள் ககதவால இராச்சியம் மீதான முழுமையான கட்டுப்பாட்டை பெறாத போதிலும், இந்த வெற்றியானது அப்பகுதியில் இருந்த பல இடங்களில் இராணுவ நிலையங்களை நிறுவ இவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கியது.[21]
சந்தவார் வெற்றிக்கு பிறகு கோலியில் தனது நிலையை வலுப்படுத்துவதை நோக்கி ஐபக் தன்னுடைய கவனத்தை திருப்பினார். [21]முகம்மது கோரி காசுனிக்கு திரும்பிச் சென்று இருந்தார். ஆனால், 1195-96இல் இந்தியாவுக்கு திரும்பி வந்தார். அப்போது பயானாவின் பாடி ஆட்சியாளரான குமாரபாலனை தோற்கடித்தார். பிறகு குவாலியர் நோக்கி அணி வகுத்துச் சென்றார். அங்கு உள்ளூர் பரிகர ஆட்சியாளரான சல்லகணபாலன் இவரது முதன்மை நிலையை ஏற்றுக் கொண்டார்.[28]
இதே நேரத்தில், அஜ்மீருக்கு அருகில் வாழ்ந்த மேர் பழங்குடியினங்கள் கோரி ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். தெற்கே குசராத்தை ஆண்ட சாளுக்கியர்களால் ஆதரவளிக்கப்பட்ட மேர்கள் அப்பகுதியில் ஐபக்கின் கட்டுப்பாட்டிற்கு ஒரு கடினமான அச்சுறுத்தலாக விளங்கினர். இவர்களுக்கு எதிராக ஐபக் அணி வகுத்தார். ஆனால், அஜ்மீருக்கு பின் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அஜ்மீருக்கு கோரி தலைநகரான காசுனியிலிருந்து வலுவூட்டல் படைகள் வந்ததற்கு பிறகு பின் வாங்கும் நிலைக்கு மேர்கள் தள்ளப்பட்டனர்.[12]
1197இல் அபு மலையில் சாளுக்கிய இராணுவத்தை ஐபக் தோற்கடித்தார். கிட்டத்தட்ட இரு தசாப்தங்களுக்கு முன்னர் கசரதா யுத்தத்தில் முகம்மது கோரியின் தோல்விக்கு இவ்வாறாக இவர் பழி வாங்கினார் என்று கூறப்படுகிறது.[29] ஐபக்கின் இராணுவமானது பிறகு சாளுக்கிய தலை நகரான அன்கில்வாராவுக்கு அணி வகுத்தது. தற்காப்பில் ஈடுபட்டிருந்த மன்னரான இரண்டாம் பீமன் நகரத்திலிருந்து வெளியேறினார். நகரமானது படையெடுப்பாளர்களால் சூறையாடப்பட்டது.[28] அன்கில்வாரா மீதான ஐபக்கின் ஊடுருவலை "குசராத்தை வென்றதாக" மின்ஹஜ் குறிப்பிடுகிறார். ஆனால், இந்நிகழ்வு கோரி பேரரசுடன் குசராத்து இணைக்கப்படுவதற்கு இட்டுச் செல்லவில்லை.[29] 16ஆம் நூற்றாண்டு வரலாற்றாளரான பெரிஷ்தா இப்பகுதியில் கோரி சக்தியை நிலை நிறுத்த ஒரு முஸ்லிம் அதிகாரியை ஐபக் நியமித்தார் என்று குறிப்பிடுகிறார். அதே நேரத்தில், இப்னு-இ அசீர் புதிதாக கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பை திறை செலுத்திய இந்துக்களுக்கு ஐபக் கொடுத்தார் என்று குறிப்பிடுகிறார். எது எவ்வாறாயினும், இப்பகுதி மீதான கோரிக்களின் கட்டுப்பாடானது நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. தங்களது தலை நகரத்தின் கட்டுப்பாட்டை சீக்கிரமே சாளுக்கியர்கள் மீண்டும் பெற்றனர்.[28]
1197-98இல் தற்போதைய உத்தரப் பிரதேசத்தில் இருந்த பதாவுனை ஐபக் வென்றார். கோரி கட்டுப்பாட்டிலிருந்து தவறியிருந்த முன்னாள் ககதவால தலைநகரமான வாரணாசியின் கட்டுப்பாட்டையும் மீண்டும் பெற்றார். 1198-99இல் சந்தர்வல் மற்றும் கன்னோசி ஆகிய இடங்களை இவர் கைப்பற்றினார். சந்தர்வல் என்பது எந்த இடம் என்று அடையாளப்படுத்தப்படவில்லை. இது ஒரு வேளை சந்தவார் என்ற இடத்தை குறிப்பிடப்பட்ட சொல்லாக இருந்திருக்கலாம். பிறகு இவர் சிரோகை கைப்பற்றினர். இது ஒரு வேளை இராசத்தானின் நவீன சிரோஹியாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாரசீக வரலாற்றாளர் பக்ரி முதாபீரின் (அண். 1157-1236) கூற்றுப் படி, 1199-1200இல் தற்போதைய மத்திய பிரதேசத்தில் இருந்த மால்வாவையும் ஐபக் கைப்பற்றினார். எனினும், வேறு எந்த ஒரு வரலாற்றாளரும் இத்தகைய படையெடுப்பு நடந்ததாக குறிப்பிடவில்லை. எனவே மால்வா மீது வெறுமனே ஊடுருவலை மட்டும் ஐபக் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[28]
இதே நேரத்தில், மற்றொரு முக்கிய கோரி அடிமை தளபதியான பகாவல்தீன் தொக்ரில்[30] (இவரது பெயர் பகாவுத்தீன் துக்ரில் என்றும் ஒலி பெயர்க்கப்படுகிறது) குவாலியர் கோட்டையை முற்றுகையிட்டார்.[31] மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட பிறகு தற்காப்பாளர்கள் ஐபக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோட்டையை ஐபக்கிடம் சரணடைய வைத்தனர்.[32]
1202இல் ஐபக் நடு இந்தியாவின் சந்தேல இராச்சியத்தின் ஒரு முக்கியமான கோட்டையாக திகழ்ந்த கலிஞ்சரை முற்றுகையிட்டார். சந்தேல ஆட்சியாளரான பரமார்த்தி ஐபக்குடன் பேச்சுவார்த்தைகளை தொடங்கினார். ஆனால், ஓர் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் முன்னரே பரமார்த்தி இறந்து விட்டார். சந்தேல முதலமைச்சரான அஜயதேவன் எதிர்ப்புகளை மீண்டும் தொடங்கினார். ஆனால், கோட்டைக்கு நீர் வழங்கும் வழிகளை கோரிக்கள் வெட்டிவிட்ட பிறகு பேச்சுவார்த்தை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார். அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சந்தேலர்கள் அஜய்கருக்கு இடம் மாறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்களது முந்தைய வலுவூட்டல் பகுதிகளான கலிஞ்சர், மகோபா, மற்றும் கஜுராஹோ ஆகியவை கோரிக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. இவை அசன் அர்னலால் ஆளப்பட்டன.[33]
இதே நேரத்தில், கோரி தளபதியான பக்தியார் கல்ஜி கிழக்கு உத்தர பிரதேசம் மற்றும் பீகார் பகுதிகளில் இருந்த சிறு ககதவால தலைவர்களை அடிபணிய வைத்தார்.[34] புத்த மடாலயங்களை அழித்ததையும் உள்ளடக்கியிருந்த தன் பீகார் படையெடுப்புக்கு பிறகு கல்ஜி பதாவுனுக்கு வந்தார். ஐபக்கை சந்தித்தார். அப்போது தான் கலிஞ்சர் மீதான தனது வெற்றிகரமான படையெடுப்பை ஐபக் முடித்திருந்தார். 23 மார்ச் 1203 அன்று கல்ஜி ஐபக்கிற்கு போரில் கொல்லப்பட்ட பொருட்களை கொடுத்தார். இதில் 20 பிடிக்கப்பட்ட யானைகள், ஆபரணங்கள் மற்றும் பணம் ஆகியவை அடங்கியிருந்தன.[35] பக்தியார் சுதந்திரமாக செயல்பட்டார்.[36][29] 1206இல் அவரது இறப்பின் போது ஐபக்கிற்கு கீழ் பணியாற்றும் ஒரு தளபதியாக அவர் இல்லை.[37]
தனது அதிகாரத்திற்கு வந்த பல்வேறு சவால்களை தொடர்ந்து 1204இல் குவாரசமியர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளிடம் அந்த்குத் யுத்தத்தில் முகம்மது கோரி தோல்வியடைந்தார். லாகூர் பகுதியில் கோகர் தலைவர்களால் நடத்தப்பட்ட ஒரு கிளர்ச்சியை ஒடுக்க ஐபக் கோரிக்கு உதவி புரிந்தார். பிறகு தில்லிக்கு திரும்பினார்.[38] 15 மார்ச் 1206இல் முகம்மது கோரி அரசியல் கொலை செய்யப்பட்டார். பல்வேறு நூல்கள் இச்செயலுக்கு காரணமாக கோகர்கள் அல்லது இசுமாயிலிகளை பலவாராக குறிப்பிடுகின்றன.[39]
மின்ஹஜின் தபாகத்-இ நசீரி நூலின் படி, தெற்கே உஜ்ஜைனின் எல்லைகள் வரை இருந்த நிலப்பரப்பை ஐபக் வென்றார்.[40] 1206இல் சுல்தான் முகம்மது கோரியின் இறப்பு நடந்த நேரத்தில் கீழ்கண்ட பகுதிகளை இந்தியாவில் கோரிக்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக மின்ஹஜ் குறிப்பிடுகிறார்:[41]
எனினும், இந்த அனைத்து பகுதிகளிலும் கோரி கட்டுப்பாடானது சமமான அளவுக்கு வலிமையுடையதாக இல்லை. இதில் குவாலியர் மற்றும் கலிஞ்சர் போன்ற சில பகுதிகளில் கோரி கட்டுப்பாடானது பலவீனமானது அல்லது இல்லாமலேயே போனது.[42]
சுல்தான் முகம்மது கோரியின் ஆட்சியின் போது கிழக்கு இந்தியாவில் இருந்த பீகார் மற்றும் வங்காளத்தின் பகுதிகள் கல்சி இனத்தவரால் வெல்லப்பட்டன. இதற்கு கோரி தளபதியான பக்தியார் கல்சி தலைமை தாங்கினார். 1206ஆம் ஆண்டு தேவ்கோட் என்ற இடத்தில் தன்னுடைய உதவியாளர் அலி மர்தான் கல்சி என்பவரால் பக்தியார் கொல்லப்பட்டார். இதே நேரத்தில் சுல்தான் முகம்மது கோரியும் அரசியல் கொலை செய்யப்பட்டார். இறுதியாக பக்தியாரின் மற்றொரு உதவியாளரான முகம்மது சிரான் கல்சி அலி மர்தானை பிடித்தார். கிழக்கு இந்தியாவில் கல்சிக்களின் தலைவர் ஆனார். அலி மர்தான் தில்லிக்கு தப்பிச் சென்றார். கல்சி விவகாரங்களில் தலையிடுமாறு ஐபக்கை அவர் இணங்க வைத்தார். கல்சிக்கள் முகம்மது கோரியின் அடிமைகள் கிடையாது. எனவே இவ்விவகாரத்தில் தலையிடுவதற்கு ஐபக்குக்கு எந்த அதிகாரப்பூர்வமான உரிமையும் இல்லை. இருந்த போதிலும் தன்னுடைய உதவியாளரும், அவத்தின் ஆளுநரான கைமசு ருமியை வங்காளத்தில் இருந்து லக்னௌதி என்ற இடத்துக்கு அணி வகுத்துச் செல்லுமாறு ஐபக் அறிவுறுத்தினார். கல்சி அமீர்களுக்கு பொருத்தமான வரி வசூலிக்கும் இக்தாக்களை கொடுக்குமாறு கூறினார்.[43]
கைமசு ருமி தேவ்கோட்டின் உரிமையை பக்தியாரின் மற்றொரு உதவியாளரான குசாமுதீன் இவாசு கல்சிக்கு வழங்கினார். முகம்மது சிரான் மற்றும் பிற கல்சி அமீர்கள் இம்முடிவில் உடன்படவில்லை. அவர்கள் தேவ்கோட்டை நோக்கி அணி வகுத்தனர். எனினும், அவர்களை ருமி தீர்க்கமாகத் தோற்கடித்தார். ஒரு சண்டையில் சிரான் பிறகு கொல்லப்பட்டார். பிறகு ஐபக் லக்னௌதியை அலி மர்தானுக்கு வழங்கினார்.[43]
அசன் நிசாமி எழுதிய சம கால நூலான தசுல் மாசிரானது தரைனில் தன்னுடைய வெற்றிக்கு பிறகு இந்தியாவில் தன்னுடைய பிரதிநிதியாக ஐபக்கை முகம்மது கோரி நியமித்தார் என்று பரிந்துரைக்கிறது. குராம் மற்றும் சமானா ஆகிய இடங்களின் ஆளுநர் பதவியும் ஐபக்கிற்கு கொடுக்கப்பட்டது என்று அசன் நிசாமி குறிப்பிடுகிறார்.[44]
மற்றுமொரு சம கால வரலாற்றாளரான பக்ரி முதாபீர் 1206இல் தன்னுடைய இந்திய நிலப்பரப்புகளுக்கு பொறுப்பாளராக ஐபக்கை அதிகாரப் பூர்வமாக முகம்மது கோரி நியமித்தார் என்று குறிப்பிடுகிறார். கோகர் கிளர்ச்சியை ஒடுக்கியதற்கு பிறகு காசுனிக்கு திரும்பும் வழியில் இதை அவர் செய்தார் என்று குறிப்பிடுகிறார். இந்த வரலாற்றாளரின் கூற்றுப் படி ஐபக் மாலிக் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டார். சுல்தானால் இந்திய நிலப்பரப்புகளுக்கு வெளிப்படையான வாரிசாக நியமிக்கப்பட்டார்.[45]
வரலாற்றாளர் கே. ஏ. நிசாமியின் கருத்தியலின் படி இந்தியாவில் தனக்கு பிந்தைய ஆட்சியாளராக ஐபக்கை சுல்தான் முகம்மது கோரி என்றுமே நியமிக்கவில்லை. சுல்தானின் இறப்பிற்கு பிறகு இந்த அடிமை தளபதி இப்பதவியை பேச்சு வார்த்தைகள் மற்றும் ராணுவ சக்தியை பயன்படுத்தியதன் மூலம் பெற்றார் என்கிறார். சுல்தானின் எதிர்பாராத மரணமானது அவரது முதன்மையான மூன்று அடிமை தளபதிகளான ஐபக், தாசல்தீன் இல்திசு மற்றும் நசீரத்தீன் கபாச்சா ஆகியோருக்கு சக்தி வாய்ந்த நிலையைக் கொடுத்தது.[37] தன்னுடைய கடைசி ஆண்டுகளின் போது சுல்தான் தன்னுடைய குடும்பம் மற்றும் தனது ராணுவ தலைவர்களிடம் நம்பிக்கை இழந்திருந்தார். தன்னுடைய அடிமைகளை மட்டுமே நம்பினார்.[46]
சுல்தானின் இறப்பு நடந்த நேரத்தில் தன்னுடைய தலைமையகத்தை ஐபக் தில்லியில் பெற்றிருந்தார். சுல்தானின் இறப்பிற்கு பிறகு இறையாண்மையுள்ள ஆட்சியாளராக பதவியை பெறுமாறு லாகூரின் குடிமக்கள் ஐபக்கிடம் வேண்டினர் என்று கூறப்படுகிறது. இவர் தன்னுடைய அரசாங்கதி லாகூருக்கு இடம் மாற்றினர். 25 சூன் 1206 அன்று அலுவல் பூர்வமாக இல்லாமல் அரியணைக்கு ஐபக் வந்தார். ஆனால் இறையாண்மையுள்ள ஆட்சியாளராக இவருக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரமானது மிகப் பிந்தைய காலமான 1208-1209இல் கிடைத்தது.[47][4]
இதே நேரத்தில் காசுனி மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளில் சுல்தானின் அடிமைகள் சுல்தானின் உயர் குடியினருடன் கோரி பேரரசின் கட்டுப்பாட்டுக்காக சண்டையிட்டனர். முகம்மது கோரியின் அண்ணன் மகன் கியாசுதீன் மகுமூது அரியணைக்கு வர அடிமைகள் உதவி புரிந்தனர்.[48] மகுமூது தனது ஆட்சியை நிலை நிறுத்திய போது ஐபக்கும் பிற அடிமைகளும் அவரது அரசவைக்கு தூதுவர்களை அனுப்பினர். தங்களுக்கு விடுதலை அளிக்குமாறும், பல்வேறு கோரி நிலப் பரப்புகள் மீது ஆட்சி செய்ய அங்கீகாரம் வழங்குமாறும் வேண்டினர்.[41] வரலாற்றாளர் மின்ஹஜின் கூற்றுப் படி, இல்திசை போலல்லாமல் ஐபக் மகமூதுவின் பெயரில் நாணயங்களை அச்சிட்டார்.[49][4]
ஐபக்கின் மாமனாரான இல்திசு இந்தியாவிலிருந்த கோரி நிலப்பரப்புகளை கட்டுப்பாட்டில் வைக்க விரும்பினார். காசுனியின் ஆட்சியாளராக சுல்தான் மகுமூது இவரை உறுதிப்படுத்திய பிறகு, இவரை விடுதலை செய்ததற்கு பிறகு பஞ்சாப் பகுதியை நோக்கி அப்பகுதியின் கட்டுப்பாட்டைப் பெறும் எண்ணத்தில் இல்திசு அணி வகுத்தார். ஐபக் இல்திசுவுக்கு எதிராக அணி வகுத்தார். கோகித்தானுக்கு பின் வாங்கும் நிலைக்கு இல்திசு தள்ளப்பட்டார்.[42] காசுனியின் கட்டுப்பாட்டை ஐபக் பெற்ற பிறகு தன்னுடைய பிரதிநிதி நிசாமுதீன் முகம்மதுவை பிரோசு கோக்குவில் இருந்த மகுமூதுவின் தலைமையகத்திற்கு ஐபக் பிறகு அனுப்பினார். தனக்கு அங்கீகாரம் கொடுப்பதற்கான பணியை விரைவுபடுத்துமாறு வேண்டினார்.[41]
1208-1209இல் ஐபக்கிற்கு ஒரு விழா குடையை மகுமூது வழங்கினார்.[49] ஐபக்கிற்கு அங்கீகாரம் வழங்கினார். இதே நேரத்தில் ஐபக்கிற்கு விடுதலையும் இவர் வழங்கியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.[41] மின்ஹஜின் தபாகத்-இ நசீரி நூலின் படி, ஐபக்கை ஒரு "சுல்தானாக" மகுமூது அங்கீகரித்தார். வரலாற்றாளர் அசன் நிசாமியும் ஐபக்கை ஒரு "சுல்தான்" என்றே அழைக்கிறார்.[49] ஐபக்கின் பெயரில் நாணயங்கள் அச்சிடப்பட்டதாக நிசாமி குறிப்பிடுகிறார். ஆனால் இதை உறுதிப்படுத்தும் வேறு எந்த ஓர் ஆதாரமும் கிடைக்கப் பெறவில்லை.[4] ஐபக்கால் அச்சிடப்பட்ட நாணயங்கள் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.[4] எஞ்சியுள்ள நாணயங்களும் இவரை "சுல்தானாக" குறிப்பிடப்பட்டவில்லை.[49]
மின்ஹஜின் கூற்றுப் படி ஐபக் கவலையின்றி செயல்பட ஆரம்பித்தார். காசுனியில் தன்னுடைய நேரத்தை களிப்பில் செலவழித்தார். காசுனி மக்கள் ஐபக்கை நகரத்திலிருந்து வெளியேற்றுவதற்காக வருமாறு இல்திசை வேண்டினர். காசுனிக்கு அருகில் இல்திசு வந்த போது ஐபக் அச்சம் கொண்டார். சங்கீ சுர்க் என்று அழைக்கப்பட்ட ஒரு குறுகலான மலைக் கணவாய் வழியாக இந்தியாவுக்கு ஐஅப்க் தப்பினார். இறுதியாக இல்திசுவிடம் இருந்து தன் நிலப்பரப்புகளை பாதுகாப்பதற்காக ஐபக் தன்னுடைய தலைநகரத்தை லாகூருக்கு மாற்றினார்.[42]
காசுனிக்கு ஐபக்குடன் வந்த அலி மர்தான் கல்சி இல்திசுவால் பிடிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார். அவர் ஏதோ ஒரு முறையில் தன்னுடைய விடுதலையை உறுதி செய்து இந்தியாவுக்கு திரும்பினார். வங்காளத்திலிருந்த லக்னௌதி என்ற இடத்திற்கு ஐபக் அவரை அனுப்பினார். அங்கு அலி மர்தான் கல்சிக்கு உதவியாளராக இருக்க உசாமுதீன் இவாசு ஒப்புக் கொண்டார். கிழக்கு இந்தியாவிலிருந்த ஐபக் நிலப்பரப்புக்கு ஆளுநராக இவ்வாறாக அலி மர்தான் உருவானார். ஒட்டு மொத்த பகுதியையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.[43]
ஆட்சியாளராக அங்கீகரிக்கப்பட்டதற்குப் பிறகு ஐபக் புதிய நிலப்பரப்புகளை வெல்வதில் கவனம் செலுத்தாமல் தன்னுடைய கட்டுப்பாட்டில் ஏற்கனவே இருந்த நிலப்பரப்புகளில் தன்னுடைய ஆட்சியை நிலை நிறுத்துவதில் கவனம் செலுத்தினார். 1210இல் லாகூரில் சோவ்கனை (குதிரை மீது அமர்ந்து விளையாடும் செண்டாட்டத்தின் ஒரு வகை) விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு குதிரையிலிருந்து இவர் கீழே விழுந்தார். சேணத்தின் முன்புறத்தில் இருக்கும் உருண்டையான பகுதி இவரது விலா எலும்புகளை கிழித்ததால் உடனடியாக இறந்தார்.[43]
அனைத்து சம கால வரலாற்றாளர்களும் ஐபக்கை ஒரு விசுவாசமான, ஈகை குணம் கொண்ட, துணிச்சலான மற்றும் எளிமையான மனிதன் என்று புகழ்கின்றன.[7] மின்ஹஜின் கூற்றுப் படி இவரது ஈகை குணமானது "இலட்சங்களைக் கொடுப்பவர் (தாமிர நாணயங்களில்)" என்ற பெயரை இவருக்கு பெற்று தந்தது.[50] "துருக்கியர், கோரிக்கள், குராசானியர், கல்சிக்கள் மற்றும் இந்துஸ்தானியர்" ஆகியோரை உள்ளடக்கியிருந்த ஐபக்கின் படை வீரர்கள் விவசாயிகளிடம் இருந்து ஒரு புல் இதழையோ அல்லது சிறு உணவு துணுக்கையோ கட்டாயப்படுத்தி பெறுவதற்கு தைரியம் வராதவர்களாக இருந்தனர் என்று பக்ரி முதாபீர் குறிப்பிடுகிறார். 16ஆம் நூற்றாண்டு முகலாய வரலாற்றாளர் அபுல் பாசல் "அப்பாவி மக்களை இரத்தம் சிந்த வைத்ததற்காக" காசுனியின் மகுமூதுவை விமர்சிக்கிறார். ஆனால் ஐபக்கை "நல்ல மற்றும் சிறந்த சாதனைகளை செய்ததற்காக" புகழ்கிறார். 17ஆம் நூற்றாண்டு வரை "இக்கால ஐபக்" என்ற சொற்றொடரானது ஈகை குணம் கொண்ட மக்களை குறிப்பிடுவதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது வரலாற்றாளர் பெரிஷ்தாவால் உறுதிப் படுத்தப்படுகிறது.[51]
ஐபக்கின் படையெடுப்புகள் பெருமளவில் மக்களை அடிமைகளாக்கியதை உள்ளடக்கியிருந்தது. அசன் நிசாமியின் கூற்றுப் படி, இவரது குசராத்து படையெடுப்பானது 20,000 மக்களை அடிமைப்படுத்துவதில் முடிந்தது. இவரது கலிஞ்சர் படையெடுப்பானது 50,000 மக்களை அடிமைப்படுத்துவதில் முடிந்தது. இர்பான் அபீப்பின் கூற்றுப் படி நிசாமியின் நூலானது முழுவதுமாக மிகைப்படுத்தப்பட்டதாக உள்ளது. எனவே இந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றுகிறது. எனினும், பிடிக்கப்பட்ட அடிமைகளின் எண்ணிக்கையானது பெருமளவிலும், காலப் போக்கில் அதிகரித்தும் இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்படுகிறது.[52]
திடீரென மரணமடைந்த ஐபக் தன் வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை. இவரது இறப்பிற்கு பிறகு லாகூரில் நிறுத்தப்பட்டிருந்த துருக்கிய அதிகாரிகள் (மாலிக்குகள் மற்றும் அமீர்கள்) ஆராம் ஷாவை இவருக்கு பிந்தைய ஆட்சியாளராக நியமித்தனர். அரியணைக்கு வருவதற்கு முன்னர் ஆராம் ஷாவின் வாழ்க்கை குறித்து எந்த வித தகவல்களும் இல்லை.[51] ஒரு கருத்தியலின் படி, இவர் ஐபக்கின் மகன் ஆவார். ஆனால் இக்கருத்தியல் மறுக்கப்படுகிறது (தனிப்பட்ட வாழ்க்கை பிரிவைக் காண்க).[53]
ஆராம் ஷா எட்டு மாதங்களுக்கு மேல் ஆட்சி செய்யவில்லை. இக்காலத்தின் போது பல்வேறு மாகாண ஆளுநர்கள் தங்களுடைய சுதந்திரத்தை தெரிவிக்க ஆரம்பித்தனர். சில துருக்கிய அதிகாரிகள் பிறகு இராச்சியத்தை கைப்பற்ற வருமாறு ஒரு பெயர் பெற்ற தளபதியும், முன்னாள் அடிமையுமான இல்த்துத்மிசை அழைத்தனர்.[54] 1197இல் அன்கில்வாரா படையெடுப்புக்கு பிந்தைய காலத்தில் ஐபக் இல்த்துத்மிசை விலைக்கு வாங்கி இருந்தார்.[44] மின்ஹஜின் கூற்றுப் படி இல்த்துத்மிசை அடுத்த ஆட்சியாளராக ஐபக் எண்ணினார். இல்த்துத்மிசை தனது மகன் என்று அழைக்கும் வழக்கம் அவரிடம் இருந்தது. பதாவுனில் வரி வசூலிக்கும் உரிமையை ஐபக் அவருக்கு வழங்கினார். இறுதியாக உயர் குடியினர் இல்த்துத்மிசை ஆராம் ஷாவுக்கு பிந்தைய ஆட்சியாளராக நியமித்தனர். ஐபக்கின் மகளை இல்த்துத்மிசுவுக்கு மணம் முடித்துக் கொடுத்தனர். அரியணைக்கு இல்த்துத்மிசின் உரிமை கோரலை ஆராம் ஷா சவாலுக்கு உள்ளாக்கினார். ஆனால் ஓர் இராணுவ சண்டையில் தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.[55] கிளர்ச்சி செய்த ஆளுநர்களை இல்த்துத்மிசு அடிபணிய வைத்தார். உறுதியற்ற முறையில் இணைக்கப்பட்டிருந்த இந்தியாவிலிருந்த கோரி நிலப்பரப்புகளை சக்தி வாய்ந்த தில்லி சுல்தானகமாக மாற்றினார்.[56]
இல்த்துத்மிசுவுக்குப் பிறகு அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆட்சிக்கு வந்தனர். பிறகு இல்த்துத்மிசின் அடிமையான பால்பன் ஆட்சிக்கு வந்தார்.[57] இந்த வரிசை மன்னர்கள் மம்லூக் அல்லது அடிமை அரசமரபினர் என்று அழைக்கப்படுகின்றனர். எனினும் இச்சொல்லானது தவறான ஒன்றாகும்.[3][57] ஐபக், இல்த்துத்மிசு, மற்றும் பால்பன் ஆகியோர் மட்டுமே அடிமைகளாக இருந்தனர். அரியணைக்கு தாங்கள் வருவதற்கு முன்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் என்று கருதப்படுகின்றனர்.[3] இந்த அரசமரபின் பிற ஆட்சியாளர்கள் தங்களது வாழ்வின் எந்த ஒரு கட்டத்திலும் அடிமைகளாக இருந்தது கிடையாது.[57]
ஐபக்கின் சமாதியானது தற்போது லாகூரில் அனார்கலி பசாரில் அமைந்துள்ளது. இந்த சமாதியானது இதன் தற்போதைய வடிவத்தில் 1970களில் பாக்கித்தானின் தொல்லியல் மற்றும் அருங்காட்சியக துறையால் கட்டப்பட்டது. அவர்கள் சுல்தானாக கால கட்டடக்கலையை மீள் உருவாக்கம் செய்ய இச்சமாதியில் முயற்சித்திருந்தனர். நவீன கட்டமைப்புக்கு முன்னர் சுல்தான் ஐபக்கின் சமாதியானது ஓர் எளிமையான வடிவத்தில் இருந்தது. இதை சுற்றி குடியிருப்பு வீடுகள் இருந்தன. இச்சமாதி மேல் ஒரு சரியான அமைப்பானது இருந்ததா என்பதை வரலாற்றாளர்கள் சந்தேகிக்கின்றனர். சில வரலாற்றாளர்கள் இந்த சமாதிக்கு மேல் ஒரு பளபளப்பான மாட விதானம் இருந்ததாகவும், ஆனால் சீக்கியர்களால் அது அழிக்கப்பட்டதாகவும் வாதிடுகின்றனர்.[58]
மின்ஹஜின் தபாகத்-இ நசீரி நூலின் சில கையெழுத்துப் பிரதிகள் ஐபக்குக்கு பின் ஆட்சிக்கு வந்த ஆராம் ஷாவின் பெயருக்கு பின் பின் ஐபக் ("ஐபக்கின் மகன்") என்ற சொற்களை குறிப்பிடுகின்றன.[54] எனினும் கவனமற்ற ஒரு எழுத்தரால் செய்யப்பட்ட தவறான ஓர் இணைப்பாக இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனெனில், தனது தரிக்-இ-ஜஹான் குஷா நூலில் அடா மாலிக் ஜுவய்னி வெளிப்படையாக ஐபக்குக்கு எந்தவொரு மகனும் இல்லை என்று குறிப்பிடுகிறார்.[53] மாறாக 14ஆம் நூற்றாண்டு வரலாற்றாளரான அப்துல் மாலிக் இசாமி ஆராம் ஷாவை ஐபக்கின் உண்மையான மகன் என்று குறிப்பிடுகிறார்.[59]
ஐபக்கின் மூன்று மகள்களைப் பற்றி மின்ஹஜ் குறிப்பிடுகிறார். முதல் மகள் முல்தானின் கோரி ஆளுநரான நசீரத்தீன் கபாச்சாவுக்கு மணம் முடித்து கொடுக்கப்பட்டார். அவரது இறப்பிற்கு பிறகு இரண்டாவது மகளும் கபாச்சாவிற்கே மணம் முடித்து கொடுக்கப்பட்டார். மூன்றாவது மகள் ஐபக்கின் அடிமையான இல்த்துத்மிசை மணந்து கொண்டார். இல்த்துத்மிசு தில்லி அரியணைக்கு ஆராம் ஷாவுக்கு பிறகு வந்தார்.[53]
நிசாபூரில் இருந்து தில்லிக்கு ஐபக்கின் ஆட்சிக் காலத்தின் போது இடம் பெயர்ந்த வரலாற்றாளரான அசன் நிசாமி ஐபக்கின் ஆட்சியின் போது மீரட் மற்றும் கலிஞ்சரில் இருந்த இந்து கோவில்கள் மசூதிகளாக மாற்றப்பட்டன என்பதைக் குறிப்பிடுகிறார். இவரது குறிப்பானது தில்லியில் உள்ள குதுப் மினார் வளாகம் மற்றும் அஜ்மீரில் உள்ள அதை தின் கா சோன்பரா மசூதி ஆகியவற்றால் உறுதிப்படுத்தப்படுகிறது. அழிக்கப்பட்ட இந்து கோயில்களின் எஞ்சியவை இவற்றை கட்ட பயன்படுத்தப்பட்டன.[60][61][62]
தனது வாழ்நாளின் ஒரு கட்டத்தில் இந்து இராணுவ வீரர்களை தனது இராணுவத்தில் ஐபக் சேர்க்க ஆரம்பித்தார். 1192இல் மீரட் முற்றுகையை நடத்திய இராணுவத்தில் இந்து இராணுவ வீரர்கள் இருந்தனர் என்பது அறியப்பட்ட ஒன்றாகும். இதே போல், 1206இல் காசுனிக்கு சென்ற போது இவருடன் சென்ற "இந்துஸ்தானின் படைகளானவை" இந்து தலைவர்களான "இராணாக்கள்" மற்றும் "தாகூர்கள்" ஆகியோரை உள்ளடக்கியிருந்தன.[63]
தில்லியில் உள்ள குதுப் மினாரின் கட்டமைப்பானது ஐபக்கின் ஆட்சியின் போது தொடங்கப்பட்டது. ஐபக் இலக்கியத்திற்கு ஒரு புரலவராக விளங்கினார். அதப் அல்-கர்ப் (போர் நியதிகள்) என்ற நூலை எழுதிய பக்ரி முதாபீர் தன்னுடைய மரபுகளின் நூல் என்ற நூலை ஐபக்கிற்கு அர்ப்பணம் செய்தார். இல்த்துத்மிசின் ஆட்சி காலத்தின் போது முடிக்கப்பட்ட அசன் நிசாமியின் தசுல் மாசிர் நூல் பெரும்பாலும் ஐபக்கின் ஆட்சியின் போது தொடங்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.