From Wikipedia, the free encyclopedia
இசுலாமிய அரசுப் படைகளின் பண்பாட்டுச் சின்னங்கள் மீதான அழித்தொழிப்புகள் (Destruction of cultural heritage by ISIL), சிரியா மற்றும் ஈராக்கில் இசுலாமிய அரசை நிறுவுவதற்கு போரில் ஈடுபட்ட அபூ பக்கர் அல்-பக்தாதி தலைமையிலான இசுலாமிய அரசுப் படைகள் 2014 முதல் சிரியா மற்றும் ஈராக்கில் 5,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பண்பாட்டுச் சின்னங்களை அழித்தனர்.
ஈராக்கின் மோசுல் நகரத்தை இசுலாமிய அரசுப் படைகளிடமிருந்து மீட்பதற்கு முன்னர், சூன் 2014 முதல் பிப்ரவரி 2015 முடிய உள்ள காலத்தில், இசுலாமிய அரசுப் படைகள் 28 வரலாற்று சிறப்பு மிக்க தொன்மையான அரண்மனைக் கட்டிடங்கள் வெடிகுண்டுகள் வைத்து இடித்துத் தள்ளினர்.[1] மேலும் தொல்லியல் அருங்காட்சியகத்தில் இருந்த பண்டைய வரலாற்று சிறப்பு வாய்ந்த தொல்பொருட்களை கொள்ளையடித்து கடத்தி விற்று இசுலாமிய அரசுப் படைக்கு நிதி சேகரித்தனர்.[1]
தொல்லியல் கட்டிடங்களை தகர்த்து அழித்து, அதில் உள்ள கடத்தி விற்பதற்காகவே இசுலாமிய அரசுப் படையினர் தனிப் பிரிவை (Kata'ib Taswiyya) (settlement battalions) வைத்திருந்தனர்.[2] இசுலாமிய அரசுப் படைகளின் இச்செயலை பண்பாட்டு அழித்தொழிப்பு என யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர் கண்டித்தார்.[2]
இசுலாமின் ஏக இறைவனை வழிபட வலியுறுத்தும் சலாபிசம் கொள்கைகளை கடைப்பிடிக்கும் இசுலாமிய அரசுப் படைகள், பல்வேறு உருவங்கள் கொண்ட பண்டைய பண்பாட்டு நினைவுச் சின்னங்களை அழிப்பதில் தவறில்லை என கருதினர்.[3]
2014ல் ஊடகங்களில் வெளியான செய்திகளின் படி, இசுலாமிய அரசுப் படைகள், வடக்கு ஈராக்கில் குறிப்பாக மோசுல் நகரத்தில் இருந்த சியா இசுலாமிய பிரிவு மக்களின் தொழுகைக்கான தொன்மை மிக்க மசூதிகள் மற்றும் தர்காக்களை முற்றிலும் அழித்தனர்.[4] அவைகளில் குறிப்பிடத்தக்கன: மோசுல் நகரத்தின் அல்-குப்பா உசைனியா மசூதி, ஜாவேத் உசைனியா மசூதி மற்றும் சாத் பின் அக்கீல் உசைனியா வழிபாட்டுத் தலம், Tomb of the Girl (Qabr al-Bint) in Mosul.[4] மற்றும் மத்திய காலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் நினைவு மண்டபத்தையும் அழித்தனர்.[5]
சூன் 2014ல் இசுலாமிய அரசுப் படையினர், பாத்தி அல்- கயின் எனும் வழிபாட்டுத் தலத்தை புல்டோசர் கொண்டு அழித்தனர்.[6]
24 செப்டம்பர் 2014ல், கலிபா உமர் (ரலி) காலத்தில் நாற்பது மினார்களுடன் கூடிய திக்ரித் நகரத்தின் அல்-அராபீன் மசூதியை குண்டு வைத்து தகர்த்தனர்.[7] 26 பிப்ரவரி 2015ல், நடு மொசூல் நகரத்தில் இருந்த 12-ஆம் நூற்றாண்டின் குதூர் மசூதியை வெடி வைத்து தகர்த்தனர்.[8]
சூலை 2014ல் இசுலாமிய அரசுப் படைகள் டேனியலின் கோபுரத்தை வெடி வைத்து தகர்த்தனர்.[9]
24 சூலை 2014ல் யூனுஸ் கோபுரத்தையும், மசூதியையும் வெடி குண்டுகளைக் கொண்டு அழித்தனர்.[10] 27 சூலை 2014 அன்று தீர்க்கதரிசி ஜிர்ஜிஸ் நினவிடத்தை அழித்தனர்.[11]
24 சூலை 2014ல், மோசுல் நகரத்தின் 13-ஆம் நூற்றாண்டின் இமாம் அல்-தீன் மசூதியை இசுலாமிய அரசுப் படைகள் அழித்தனர்.[2]
மார்ச் 2015ல் மொசூல் நகரத்தின், கிபி 1880ல் கட்டப்பட்ட ஹமாவு அல் குவாது மசூதியை இடித்துத் தள்ளினர்.[12] அதே ஆண்டில் மொசூல் நகரத்தின் பிற மசூதிகளை அலங்கரித்த அலங்கார வேலைப்பாடுகளையும், அழகிய குரான் வரிகளையும் நீக்கினர்.[13]
மார்சு 2015ல், இசுலாமியப் படைகள் லிபியா நாட்டின் தலைநகர் திரிப்பொலி நகரத்தின் சூபியிசம் வழிபாட்டுத் தலங்களை இடித்துத் தள்ளினர்.[14]
சூன் 2015ல் சிரியாவின் பல்மைரா நகரத்தில் முகமது இப்னு அலி மற்றும் நிசார் அபு பகாயித்தீன் ஆகியோர் நிறுவிய பண்டைய நினைவு மண்டபங்களை இடித்துத் தள்ளினர்.[15]
2016ல் அப்பாசித் கலிபா ஆட்சிக் காலத்தில், அல்-அன்பர் மாகாணத்தில் நிறுவப்பட்ட அல்-அனா மினார்களை அழித்தனர்.[16][17]
2017ல் இசுலாமிய அரசுப் படைகள் அல்-நூரி பெரிய மசூதியையும், அதன் மினார்களையும் அழித்தனர். மூன்றாண்டுகளுக்கு முன்னர், இசுலாமிய அரசுப் படைகளின் தலைவர் அபு பக்கர் அல்-பக்காதி, இதே மசூதியில் இசுலாமிய அரசை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.[18]
இசுலாமிய அரசுப் படைகள், சூன் 2014ல் மோசுல் நகரத்தில் இருந்த அனைத்து கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் பௌத்த விகாரைகள் இருந்த இடம் தெரியாத அளவிற்கு அழித்துச் சிதைத்தனர்.[19] சிதைக்கப்பட்ட தேவாலயங்கள் மற்றும் பௌத்த விகாரைகளில் புகழ் பெற்றது கன்னி மேரி தேவாலயம்[20] , டயர மர் எலியா பௌத்த விகாரை,[21][22] மொசூல் நகரத்தில் பத்தாம் நூற்றாண்டில் சால்டிய கத்தோலிக்கர்களின் புனித மர்கௌர்கஸ் தேவாலயத்தை இடித்துத்தள்ளப்பட்டது.[23],
1872ல் கட்டப்பட்ட சா காதிமா இலத்தீன் தேவாலயத்தை ஏப்ரல் 2016ல் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.[24]
உதுமானியப் பேரரசு ஆட்சிக் காலத்தில் ஆர்மீனிய இன அழித்தொழிப்பு நடவடிக்கையின் நினைவாக சிரியாவில் கட்டப்பட்ட நினைவு ஆர்மீனியா தேவாலயத்தை, 21 செப்டம்பர் 2014 அன்று இசுலாமிய அரசுப் படைகளால் வெடித்து தகர்க்கப்பட்டது.[25][26]
24 செப்டம்பர் 2014ல், ஈராக் நாட்டின் திக்ரித் நகரத்தில், ஏழாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட அசிரியர்களின் புனித தேவாலயத்தை இசுலாமிய அரசுப்படைகள் இடித்துத் தள்ளினர்.[27]
21 ஆகஸ்டு 2015ல் ஈராக்கின், ஹோம்ஸ் ஆளுநனரகததில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித எலியன் தேவாலயம் அழிக்கப்பட்டது.[28][29]
மே 2014ல், புது அசிரியப் பேரரசு காலத்திய அஜாஜா தொல்லியல் களத்தில் இருந்த சிலையை இசுலாமிய அரசுப் படைகள் தகர்த்து எறிந்தனர்.[30] அஜாஜா தொல்லியல் களத்தில் இருந்த 40% மேலான தொல்பொருட்கள் இசுலாமிய அரசுப்படைகளால் கொள்ளையடிக்கப்பட்டது.[31]
மேலும் தல் அபர் அரண்மனையை டிசம்பர் 2014 வெடி வைத்து தகர்த்தனர்.[32][33]
சனவரி 2015ல் மோசுல் நகரத்திற்கு அருகே இருந்த பண்டைய நினிவே நகரத்தின் கோட்டைச் சுவர்களையும், அதாத் அரண்மனை நுழைவாயில்களையும் உருத்தெரியாமல் அழித்தனர்.[34][35]
மேலும் சிரியா நாட்டின் அல்-றக்கா நகரத்தின் கிமு எட்டாம் நூற்றாண்டின் பண்டைய அசிரியர்களின் சிங்கச் சிற்பங்களையும், தொல்லியல் களத்தையும், இசுலாமிய அரசுப் படைகள் முற்றிலும் அழித்தனர்.[36][37]
26 பிப்ரவரி 2015 அன்று, இசுலாமிய அரசுப் படைகள் மோசுல் தொல்லியல் அருங்காட்சியகத்தில் இருந்த பண்டைய அசிரியா காலத்து ஹாத்திரா நகரத்தின் தொல்பொருட்களை அழிக்கும் காணோலியை இணையதளங்களில் வெளியிட்டனர்.[8]
அவைகளில் குறிப்பிடத் தக்ககது கருங்கல்லினால் செதுக்கப்பட்ட லம்மசு சிலையாகும்.[38]
சிரியாவின் பண்டைய அசிரியர்களின் கிமு 13-ஆம் நூற்றாண்டின் நிம்ருத் நகரத்தை 5 மார்ச் 2015ல் இசுலாமிய அரசுப் படைகளால் அழிக்கப்பட்டது.
மேலும் அசிரியப் பேரரசர் இரண்டாம் அசூர்னசிர்பால் கட்டிய அரண்மனைக் கட்டிடங்களையும் தகர்த்தனர்.[39][40]
குர்து மக்கள் வெளியிட்ட குறிப்புகளின் படி, 7 மார்ச் 2015ல் பண்டைய ஹத்ரா நகரத்தை இசுலாமியப் படைகள் இடிக்கத் துவங்கினர்.[41][42][43]
பண்டைய நினிவே நகரத்தின் இறகுகளுடன் கூடிய காளைச் சிற்பத்தின் முகத்தை இசுலாமியப் படைகள் சிதைத்தனர்.[44]
27 சூன் 2015ல் சிரியாவின் பல்மைரா நகரத்தை கைப்பற்றிய இசுலாமிய அரசுப் படைகள், அலாத்தின் சிங்கச் சிற்பங்களை அழித்தனர். மேலும் பல சிற்பங்களை கடத்திய சிலை கடத்தல்காரர்களிடமிருந்து பிடுங்கி அழித்தனர்.[45]
23 ஆகஸ்டு 2015ல் கிபி முதல் நூற்றாண்டின் பால்சமின் கோயிலை வெடி வைத்து தகர்த்தனர்.[46][47] ஆகஸ்டு 2015ல் இசுலாமிய அரசுப்படைகளால் அழிக்கப்பட்ட பல்மைரா நகரத்தின் பெல் கோயிலை வெடி வைத்து தகர்த்தனர்.[48]
சிரியா நாட்டின் தொல்லியல் துறையின் அறிக்கைப்படி, பல்மைரா நகரத்தின் இரண்டு தொல்லியல் களங்களில் இருந்த ஏழு பண்டைய கோபுரங்கள், இசுலாமிய அரசுப் படைகளால் அழிக்கப்பட்டுள்ளது.[49]
மேலும் கிழக்கு சிரியாவில் இருந்த பார்த்தியப் பேரரசு மற்றும் உரோமானியப் பேரரசு காலத்திய நகரமான தூரா-ரோபோஸ் நகரை கொள்ளையடித்தனர்.
மோசுலுக்கு தென்மேற்கே 68 கிமீ தொலைவில் உள்ள நினிவே ஆளுநரகத்தைச் சேரந்த பண்டைய ஹத்ரா எனும் கோட்டை நகரத்தை 7 மார்ச் 2015 அன்று இசுலாமியப் படைகள் வெடிகுண்டுகள் வைத்து இடித்துத் தள்ளினர்.[50] ஹத்ரா தொல்லியல் களத்தை இடித்து தள்ளிய காட்சிகளை இசுலாமியப்படைகளை காணொளியாக வெளியிட்டனர்.[51]
ஈராக்கின் மோசுல் மத்திய நூலகத்தையும், மோசுல் பல்கலைக் கழக நூலகத்தையும் மற்றும் பல்வேறு நூலகங்களை தீயிட்டும், வெடிவைத்தும் இசுலாமிய அரசுப் படைகள் தகர்த்தனர்.[52]
மேலும் கிமு 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்பொருட்கள், உதுமானியப் பேரரசு காலத்திய வரைபடங்கள் மற்றும் நூல்கள் தீயிட்டு கொளுத்தினர்.[53]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.