வட்டம்
யூக்ளிடிய வடிவவியலில் ஒரு எளிய வளைகோடு / From Wikipedia, the free encyclopedia
யூக்கிளிட்டின் கேத்திர கணிதப்படி, ஒரு வட்டம் ( Circle) என்பது, ஒரு குறிப்பிட்ட புள்ளியொன்றிலிருந்து சம அளவான தூரத்தில், ஒரே தளத்திலுள்ள புள்ளிகளின் கணமாகும். குறிக்கப்பட்ட புள்ளி அவ்வட்டத்தின் "மையம்" எனவும், சம அளவான தூரம் அதன் ஆரை எனவும் அழைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து எப்பொழுதும் சமதூரத்தில் இருக்குமாறு இயங்கும் ஒரு புள்ளியின் இயங்குவரையாகவும் வட்டத்தை வரையறுக்கலாம்.
![வட்டம் - விளக்கப்படம்](http://upload.wikimedia.org/wikipedia/commons/9/91/Circle-1_%28ta%29.png)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/70/CIRCLE_LINES-ta.svg/320px-CIRCLE_LINES-ta.svg.png)
வட்ட விலகலின் மதிப்பு பூச்சியமாகக் கொண்ட கூம்பு வெட்டாகவும் வட்டத்தைக் கொள்ளலாம். ஒரு நேர் கூம்பை அதன் அச்சுக்குச் செங்குத்தான தளத்தால் வெட்டும்போது கிடைக்கும் வெட்டுமுகம் வட்டமாக இருக்கும்.
வட்டங்கள், அவை அமைந்துள்ள தளத்தை உட்புறம், வெளிப்புறம் என இரண்டாகப் பிரிக்கும் எளிமையான மூடிய வளைவுகளாகும். எல்லா வட்டங்களும் வடிவொத்தவை; அதனால், ஒரு வட்டத்தின் சுற்றளவும், அதன் ஆரையும் விகிதசமனானவை, அதுபோலவே, வட்டத்தின் பரப்பளவும் அதன் ஆரையின் வர்க்கத்துக்கு விகிதசமனானது. இவ் விகிதசமனின் மாறிலிகள் முறையே 2πயும் πயுமாகும். வட்டத்தின் சுற்றளவு "பரிதி" எனப்படும். வட்டத்தைக் குறிக்க தமிழர்கள் பரிதி என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர்.[1]