லௌதி அரசமரபு (ஆங்கிலம்: Lodi dynasty; பாரசீக மொழி: سلسله لودی) என்பது தில்லி சுல்தானகத்தை 1451 முதல் 1526ஆம் ஆண்டு வரை ஆண்ட ஓர் அரசமரபாகும்.[3] தில்லி சுல்தானகத்தின் ஐந்தாவது மற்றும் கடைசி அரசமரபு இதுவாகும். சையிது அரசமரபை இடம் மாற்றிய போது பக்லுல் கான் லௌதி இந்த அரசமரபை தோற்றுவித்தார்.[4]

விரைவான உண்மைகள் லௌதி அரசமரபு(தில்லி சுல்தானகம்) سلسله لودی, தலைநகரம் ...
லௌதி அரசமரபு
(தில்லி சுல்தானகம்)
سلسله لودی
1451–1526
தலைநகரம்தில்லி
பேசப்படும் மொழிகள்பாரசீகம் (அரசவை, வருவாய்ப் பதிவேடுகளின் மொழி)[1][2]
இந்தவி [1]
சமயம்
சன்னி இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
சுல்தான் 
 1451–1489
பக்லுல் கான் லௌதி (முதல்)
 1489–1517
சிக்கந்தர் லௌதி (2ஆம்)
 1517–1526
இப்ராகிம் லௌதி (கடைசி)
வரலாறு 
 தொடக்கம்
1451
 முடிவு
1526
முந்தையது
பின்னையது
சையிது வம்சம்
ஜான்பூர் சுல்தானகம்
முகலாயப் பேரரசு
சூர் பேரரசு
மூடு

பக்லுல் லௌதி

ஆப்கானிய[3] அல்லது துருக்கிய-ஆப்கானிய[5][lower-alpha 1] சையிது அரசமரபினரின் ஆட்சியைத் தொடர்ந்து லௌதி அரசமரபானது சுல்தானகத்தை பெற்றது. பக்லுல் கான் லௌதி (அண். 1451-1489) என்பவர் மாலிக் சுல்தான் ஷா லௌதியின் உடன் பிறப்பின் மகனும், அவரது மருமகனும் ஆவார். மாலிக் சுல்தான் ஷா லௌதி இந்தியாவின் பஞ்சாபின் சிர்இந்த்-பதேகர் என்ற இடத்தின் ஆளுநராக பணியாற்றினர். மாலிக் சுல்தான் ஷா லௌதிக்குப் பிறகு சையிது அரசமரபின் ஆட்சியாளர் முகம்மது ஷாவின் ஆட்சிக் காலத்தின் போது சிர்இந்தின் ஆளுநராக பக்லுல் லௌதி பதவிக்கு வந்தார். தருன்-பின்-சுல்தான் என்ற நிலைக்கு முகம்மது ஷா இவரை உயர்த்தினார். பஞ்சாபிய தலைவர்களிலேயே இவர் மிகவும் சக்தி வாய்ந்தவராகவும், ஒரு வலிமையான தலைவராகவும் திகழ்ந்தார். தன்னுடைய வலிமையான தனி நபர் குணத்தின் மூலம் ஆப்கானிய மற்றும் துருக்கிய தலைவர்களின் உறுதியாக இணைந்திராத ஒரு கூட்டமைப்பை இணைத்து வைத்திருந்தார். மாகாணங்களின் கலவர எண்ணமுடைய தலைவர்களை இவர் அடிபணிய வைத்தார். அரசாங்கத்திற்குள் ஓரளவு வலிமையை ஊட்டினார்.

தில்லியின் கடைசி சையிது ஆட்சியாளரான அலாவுதீன் ஆலம் ஷா இவருக்கு பதவி வழங்குவதற்காக தானே முன் வந்து அரியணையிலிருந்து இறங்கிய பிறகு 19 ஏப்ரல் 1451 அன்று தில்லி சுல்தானகத்தின் அரியணையில் பக்லுல் கான் லௌதி அமர்ந்தார்.[7] இவரது ஆட்சிக் காலத்தின் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது ஜான்பூர் சுல்தானகத்தை வென்றது ஆகும். ஜான்பூர் சுல்தானகத்தின் சர்கி அரசமரபுக்கு எதிராக சண்டையிடுவதில் தனது பெரும்பாலான நேரத்தை பக்லுல் செலவழித்தார். இறுதியாக அச்சுல்தானகத்தை இணைத்துக் கொண்டார். 1486இல் ஜான்பூர் அரியணையில் தனது எஞ்சியிருந்த மகன்களில் மூத்தவரான பர்பக்கை அமர வைத்தார். பீகாரின் கட்டுப்பாட்டை சர்கிகள் தொடர்ந்து பெற்றிருந்தனர். அங்கிருந்து அவர்கள் மீண்டும் ஜான்பூரை ஆக்கிரமித்தனர். ஆனால் மீண்டும் முறியடிக்கப்பட்டு பீகாருக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.[8]

சிக்கந்தர் கான் லௌதி

1479இல் ஜான்பூர் சுல்தானகத்தை (சர்கி அரசமரபு) வெல்லும் செயலை சிக்கந்தர் லௌதி முடித்து வைத்தார்.
Thumb
சிக்கந்தர் லௌதியின் கல்லறை.

சிக்கந்தர் கான் லௌதி (அண். 1489-1517) என்பவர் பக்லுல் கான் லௌதியின் இரண்டாவது மகன் ஆவார். இவரது இயற்பெயர் நிசாம் கான் ஆகும். 17 சூலை 1489இல் தனது தந்தையின் இறப்பிற்கு பிறகு சிக்கந்தர் ஷா என்ற பட்டத்துடன் இவர் அரியணையில் அமர்ந்தார். இவரை தனக்கு பிந்தைய ஆட்சியாளராக இவரது தந்தை தேர்ந்தெடுத்திருந்தார். 15 சூலை 1489 அன்று இவர் சுல்தானாக முடி சூட்டப்பட்டார். 1504இல் இவர் ஆக்ராவைநிறுவினார். தலைநகரத்தை தில்லியில் இருந்து ஆக்ராவிற்கு மாற்றினார். [9]வணிகத்திற்கு இவர் புரவலராக விளங்கினார். பெயர் பெற்ற ஒரு கவிஞராகவும் இவர் திகழ்ந்தார். கல்விக்கு ஒரு புரவலராகவும் இவர் விளங்கினார். சமசுகிருத மருத்துவ நூல்களை பாரசீகத்திற்கு மொழி பெயர்ப்பு செய்ய இவர் ஆணையிட்டார்.[10] தன்னுடைய பஷ்தூன் உயர்குடியினரின் தனி நபர் மனப்பாங்கை கட்டுப்படுத்தினார். அவர்களை ஓர் அரசு தணிக்கைக்கு அவர்களது கணக்கு வழக்குகளை தாக்கல் செய்யுமாறு கட்டாயப்படுத்தினார். இவ்வாறாக தன்னுடைய நிர்வாகத்தில் வலிமை மற்றும் ஒழுக்கத்தை இவரால் உட்புகுத்த முடிந்தது. சர்கிகளிடமிருந்து பீகாரை வென்று இணைத்துக் கொண்டது இவரது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.[11]

இப்ராகிம் லௌதி

Thumb
தில்லி சுல்தான் இப்ராகிம் லௌதியின் பெயரில் அச்சிடப்பட்ட மால்வா சுல்தானகத்தின் இரண்டாம் மகுமூது ஷாவின் (பொ. ஊ.1510-1531) நாணயம். ஆண்டு பொ. ஊ. 1520-21.

இப்ராகிம் கான் லௌதி (அண். 1517-1526) என்பவர் சிக்கந்தரின் மூத்த மகனும், தில்லியின் கடைசி லௌதி சுல்தானும் ஆவார்.[12] பல்வேறு கிளர்ச்சிகளை இப்ராகிம் எதிர் கொண்டார். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு எதிர்ப்பை மீறி ஆட்சி செய்தார். ஆப்கானியர்கள் மற்றும் தைமூரியப் பேரரசுடன் தன்னுடைய ஆட்சிக் காலத்தின் பெரும்பாலான நாட்களை சண்டையில் செலவழித்தார். லௌதி அரசமரபை அழிவிலிருந்து காப்பதற்காக முயன்று இறந்தார். 1526இல் பானிபட் யுத்தத்தில் இப்ராகிம் தோற்கடிக்கப்பட்டார்.[12] லௌதி அரசமரபின் முடிவையும், பாபுரால் (ஆட்சி 1526-1530) தலைமை தாங்கப்பட்ட முகலாய பேரரசின் தொடக்கத்தையும் இது குறித்தது.[13]

பேரரசின் வீழ்ச்சி

Thumb
ஷா மிர்
சுல்தானகம்
கங்குரா
பக்மோதுரூபர்
கந்தேசு
சுல்தானகம்
அர்குன்கள்
கல்மத்
லங்கா
சுல்தானகம்
அமர்கோட்
குசராத்து
சுல்தானகம்
மேவாத்
திரிப்வா
செரோர்
அண்.பொ. ஊ.1525இல் முகலாயப் பேரரசு நிறுவப்படுவதற்கு முன் முதன்மையான தெற்காசிய அரசியலமைப்புகள்.[14][15]

இப்ராகிம் அரியணைக்கு வந்த நேரத்தில் லௌதி அரசமரபின் அரசியலமைப்பானது வீழ்ச்சியடைந்திருந்தது. இதற்கு காரணம் கைவிடப்பட்ட வணிகப் பாதைகள் மற்றும் குன்றியிருந்த கருவூலம் ஆகியவையாகும். தக்காண பீடபூமியானது ஒரு கடற்கரை வணிக பாதையாக இருந்தது. ஆனால், 15ஆம் நூற்றாண்டின் பிந்தைய காலத்தில் பொருள் வழங்கும் வழிகள் வீழ்ச்சியடைந்திருந்தன. இந்த குறிப்பிட்ட வணிகப் பாதையின் வீழ்ச்சி மற்றும் இறுதியாக வணிகப் பாதை தோல்வியடைந்தது ஆகியவை கடற்கரை பகுதியில் இருந்து உள்ள நிலப்பகுதிகளுக்கு பொருட்கள் வழங்கும் பகுதியை வெட்டி விட்டது. உட்புறப் பகுதியில் தான் லௌதி பேரரசு அமைந்திருந்தது. வணிகப்பாதை சாலைகளில் போர் தொடங்கினால் அதில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள லௌதி அரசமரபால் இயலவில்லை. எனவே இவர்கள் வணிகப் பாதைகளை பயன்படுத்தவில்லை. இவ்வாறாக இவர்களது வணிகம் வீழ்ச்சியடைந்தது. இதே போலவே கருவூலமும் நிதியின்றி இருந்தது. உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளுக்கு பலவீனமானதாக லௌதி அரசமரபு இருந்தது.[16]

இப்ராகிம் தன்னை இகழ்ந்ததற்கு பழிவாங்குவதற்காக லாகூரின் ஆளுநரான தௌலத் கான் லௌதி காபுலின் தைமூரிய ஆட்சியாளரான பாபுரை தில்லி சுல்தானகம் மீது படையெடுக்குமாறு வேண்டினார்.[6] பானிபட் போரில் பாபுருடனான சண்டையின் போது இப்ராகிம் லௌதி கொல்லப்பட்டார். இப்ராகிமின் இறப்புடன் லௌதி அரசமரபானது முடிவுக்கு வந்தது. துணைக் கண்டத்தில் முகலாயப் பேரரசு நிறுவப்படுவதற்கு இது வழி வகுத்தது.[6]

ஆப்கானியப் பிரிவு

1517இல் அரியணைக்கு வந்த போது இப்ராகிம் எதிர் கொண்ட மற்றொரு பிரச்சனையானது பஷ்தூன் உயர் குடியினர் ஆவர். அவர்களில் சிலர் இப்ராகிமின் அண்ணன் சலாலுதீனுக்கு ஆதரவளித்தனர். கிழக்கே ஜான்பூர் பகுதியில் இப்ராகிமுக்கு எதிராக இவர்கள் ஆயுதம் ஏந்தினர். இப்ராகிம் இராணுவ ஆதரவை திரட்டினார். அந்த ஆண்டின் இறுதியில் தன்னுடைய அண்ணனைத் தோற்கடித்தார். இந்த நிகழ்வுக்கு பிறகு தன்னை எதிர்த்த பஷ்தூன் உயர்குடியினரை இவர் கைது செய்தார். புதிய நிர்வாகிகளாக தன்னுடைய சொந்த ஆட்களை நியமித்தார். பஷ்தூன் உயர்குடியினர் பீகாரின் ஆளுநரான தரியா கானுக்கு இப்ராகிமுக்கு எதிராக ஆதரவளித்தனர்.[16]

இப்ராகிமுக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கு காரணமான மற்றொரு காரணியானது இவருக்கு வாரிசு என்று எண்ணப்பட்ட யாரும் இல்லாமல் இருந்ததாகும். இவரது சொந்த உறவினரான ஆலம் கான் முகலாய படையெடுப்பாளர் பாபுருக்கு ஆதரவளித்ததன் மூலம் இப்ராகிமுக்கு துரோகம் செய்தார்.[12]

இராசபுத்திரப் படையெடுப்புகளும், உள்நாட்டு கிளர்ச்சிகளும்

மேவாரின் இராசபுத்திர தலைவரான ராணா சங்கா (ஆட்சி. 1509-1526) தன்னுடைய இராச்சியத்தை விரிவாக்கினார். தில்லியில் லௌதி மன்னரைத் தோற்கடித்தார். இராசபுதனத்தின் முதன்மையான இளவரசராக அனைத்து இராசபுத்திர இனங்களாலும் அங்கீகரிக்கப்பட்டார். லௌதி இராச்சியம் மீது படையெடுக்குமாறு பாபுரிடம் பஞ்சாப் பகுதியின் ஆளுநரான தௌலத் கான் லௌதி வேண்டினார். இப்ராகிம் லௌதியை பழி வாங்கும் எண்ணத்தில் அவர் இதைச் செய்தார். இப்ராகிம் லௌதியை தோற்கடிப்பதற்கு பாபுருக்கு தன்னுடைய ஆதரவையும் ராணா சங்கா அளிக்க முன் வந்தார்.[16]

பானிபட் போர், 1526

Thumb
பானிபட் போரும், சுல்தான் இப்ராகிமின் இறப்பும்

பஞ்சாப்பின் ஆளுநர் தௌலத் கான் லௌதி மற்றும் ஆலம் கான் ஆகியோரின் ஆதரவை உறுதி செய்த பிறகு பாபுர் தன்னுடைய இராணுவத்தை சேர்க்க ஆரம்பித்தார். பஞ்சாப் சமவெளிக்குள் நுழைந்த போது பாபுரின் முதன்மை கூட்டாளிகளான லங்கர் கான் நியாசி, பாபுரின் படையெடுப்பில் சக்தி வாய்ந்த சஞ்சுவா இராசபுத்திரர்களை இணைத்துக் கொள்ளுமாறு பாபுருக்கு ஆலோசனை கூறினார். தில்லி ஆட்சியாளர்களுக்கு எதிராக இப்பழங்குடியினத்தின் எதிர்ப்பு நிலையானது நன்றாக அறியப்பட்ட ஒன்றாக இருந்தது. அவர்களின் தலைவர்களான மாலிக் ஆசாத் மற்றும் இராஜா சங்கர் கான் ஆகியோரை சந்தித்ததற்குப் பிறகு அவர்களது இராச்சியத்தின் பாரம்பரிய ஆட்சியாளர்களாக சஞ்சுவா இனத்தவரின் பிரபலத் தன்மையை பாபுர் குறிப்பிட்டார். இந்த் மீதான தனது சேயோன் அமீர் தைமூரின் படையெடுப்பின் போது அவர்கள் அளித்த ஆதரவையும் குறிப்பிட்டார். 1521இல் அவர்களது எதிரிகளான காகர்களை தோற்கடிப்பதில் பாபுர் அவர்களுக்கு உதவி செய்தார். இவ்வாறாக அவர்களது கூட்டணியை உறுதிப்படுத்தினார். தனது தில்லி படையெடுப்பு, ராணா சங்காவை வென்றது மற்றும் இந்திய படையெடுப்பு ஆகியவற்றின் போது அவர்களை தளபதிகளாக பாபுர் பயன்படுத்திக் கொண்டார்.[சான்று தேவை]

துப்பாக்கிகளின் புதிய பயன்பாடானது எதிரி நிலப்பரப்பின் மீது பெரும் அளவிலான நிலத்தை கைப்பற்ற சிறிய இராணுவங்களுக்கு வாய்ப்பளித்தது. எதிரிகளின் நிலைகள் மற்றும் உத்திகளை வெறுமனே சோதிப்பதற்காக அனுப்பப்பட்ட சிறு குழுக்கள் இந்தியாவுக்குள் உட்புக ஆரம்பித்தன. எனினும், காந்தாரம் மற்றும் காபுல் ஆகிய இரு இடங்களில் கிளர்ச்சிகளிலிருந்து பாபுர் தப்பித்திருந்தார். வெற்றிக்கு பிறகு உள்ளூர் மக்களை அமைதிப்படுத்துவதிலும், உள்ளூர் பாரம்பரியங்களை பின்பற்றுவது, விதவைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவுவது ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.[சான்று தேவை]

அவரும், அவரது 24,000 வீரர்களைக் கொண்ட இராணுவமும் பானிபட்டிலிருந்த யுத்த களத்திற்கு முற்கால நீண்ட வகை துப்பாக்கிகள் மற்றும் சேணேவி ஆயுதங்களுடன் அணி வகுத்தது. நன்றாக ஆயுதம் கொடுக்கப்பட்ட, ஆனால் துப்பாக்கியற்ற 1,00,000 வீரர்களையும், 1,000 யானைகளையும் சேர்த்ததன் மூலம் யுத்தத்திற்கு இப்ராகிம் தயாரானார். பழமையான காலாட்படை மற்றும் அழிவை ஏற்படுத்தக் கூடிய உட்பூசல்கள் காரணமாக இப்ராகிம் பலவீனமான நிலையில் இருந்தார். அவரிடம் அதிகமான எண்ணிக்கையிலான வீரர்கள் இருந்த போதும் வெடி மருந்து ஆயுதங்களுக்கு எதிரான ஒரு போரில் அவர் அதற்கு முன்னால் என்றுமே சண்டையிட்டது கிடையாது. உத்தியியல் ரீதியாகவும் என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. ஆரம்பம் முதலே தன்னுடைய அனுகூலத்தை பாபுர் அதிகமாக்கினார். தனது 20,000 வீரர்களுடன் ஏப்ரல் 1526இல் யுத்த களத்தில் இப்ராகிம் கொல்லப்பட்டார்.[12]

பாபுரும், முகலாயர்களும் ஆட்சிப் பொறுப்பேற்றல்

இப்ராகிமின் இறப்பிற்குப் பிறகு இப்ராகிமின் உறவினர் ஆலம் கானை அரியணையில் அமர வைப்பதற்குப் பதிலாக இப்ராகிமின் நிலப்பரப்பு மீது தன்னைத் தானே அரசராக பாபுர் அறிவித்துக் கொண்டார். லௌதி அரசமரபின் முடிவை இப்ராகிமின் இறப்பு குறித்தது. இந்தியாவில் முகலாய பேரரசு நிறுவப்படுவதற்கு இது வழி வகுத்தது. எஞ்சிய லௌதி நிலப்பரப்புகள் புதிய முகலாயப் பேரரசுக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டன. பாபுர் தொடர்ந்து இராணுவப் படையெடுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.[17]

மகுமூது லௌதி

இப்ராகிம் லௌதியின் சகோதரரான மகுமூது லௌதி தன்னைத் தானே சுல்தானாக அறிவித்துக் கொண்டார். முகலாயப் படைகளை தொடர்ந்து எதிர்த்து வந்தார். 1527இல் கன்வா யுத்தத்தில் ராணா சங்காவிற்கு சுமார் 4,000 ஆப்கானிய இராணுவ வீரர்களை இவர் வழங்கினார்[18]. அந்த தோல்விக்குப் பிறகு மகுமூது லௌதி கிழக்கு நோக்கித் தப்பித்தார். மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து 1529இல் ககரா யுத்தத்தில் பாபுருக்கு சவால் ஏற்படுத்தினார்.

கட்டடக் கலை படங்கள்

மேலும் காண்க

குறிப்புகள்

  1. Herbert Hartel calls the Lodi sultans Turco-Afghan: "The Turco-Afghan sultans of the Lodi Dynasty...".[6]

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.