மாலத்தீவு (Maldives) அல்லது மாலத்தீவு குடியரசு இந்தியப் பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளாலான தீவு நாடாகும். இது இந்தியாவின் இலட்சத்தீவுகளுக்கு தெற்கேயும் இலங்கையிலிருந்து சுமார் 700 கி.மீ. தென்மேற்காகவும் அமைந்துள்ளது. 90,000 ச.கி.மீ. பரப்பளவுள்ள இத்தீவின் மக்கள் தொகை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 920 ஆகும். மொத்தம் 26 பவளத்தீவுகளில் 1,192 தீவுகள் காணப்படுவதோடு இவற்றில் சுமார் 200-இல் மட்டும் மனிதக் குடியேற்றங்கள் காணப்படுகிறன. தீவுகளால் அமைந்த மாலைபோல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்றும் சமஸ்கிருத மொழியில் "மாலத்வீப"(தீவுகளின் மாலை)என்றும் குறிப்பிடப்படுகிறது. வேறு சிலரின் கருத்துப்படி இது "மகால்" என்ற அரபு மொழிச் சொல்லின் மரூஉ ஆகும். சோழர்கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டன. 1153இல் இசுலாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலைத்தீவுகள் 1558-இல் போர்த்துக்கேயரிடமும், 1654 டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியிடமும் பின்பு 1887 முதல் பிரித்தானியரிடமும் அடிமைப்பட்டது. 1965-ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. 1968-இல் சுல்தான் ஆட்சியிலிருந்து குடியரசாக மாறியது. குடியரசான மாலைத் தீவுகளின் முதல் குடியரசுத் தலைவர் சுல்தான் ஆட்சியில் பிரதமராக இருந்த இப்ராகிம் நசீர் ஆவார்.

விரைவான உண்மைகள் மாலத்தீவு குடியரசுދިވެހިރާއްޖޭގެ ޖުމުހޫރިއްޔާ. திவேஹி ராஜ்ஜெய்கே ஜும்ஹூரியா, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...
மாலத்தீவு குடியரசு
ދިވެހިރާއްޖޭގެ ޖުމުހޫރިއްޔާ. திவேஹி ராஜ்ஜெய்கே ஜும்ஹூரியா
Thumb
கொடி
Thumb
சின்னம்
நாட்டுப்பண்: கவ்மீ மீ எகுவெரிகன் மட்டி(தேச ஒற்றுமையால் நாட்டை வணங்குகிறோம்)
Thumb
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
மாலே
ஆட்சி மொழி(கள்)திவெயி
அரசாங்கம்குடியரசு
 அரசுத்தலைவர்
முகமது வாகித் அசன்
விடுதலை
 ஐ.இ.-இடமிருந்து
சூலை 26 1965
பரப்பு
 மொத்தம்
298 km2 (115 sq mi) (204-ஆவது)
 நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
 சூலை 2005 மதிப்பிடு
329,000 (176-ஆவது1)
 2006 கணக்கெடுப்பு
298,842
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
 மொத்தம்
$2.569 பில்லியன் (162-ஆவது)
 தலைவிகிதம்
$7,675 (79-ஆவது)
மமேசு (2003)0.745
உயர் · 96-ஆவது
நாணயம்றவுஃபியா (MVR)
நேர வலயம்ஒ.அ.நே+5
அழைப்புக்குறி960
இணையக் குறி.mv
1 2005 ஐநாவின் மதிப்பீட்டின் அடிப்படையில்.
மூடு

வரலாறு

கடலுக்குக் கீழ் ஒரு நீண்ட மலைத் தொடராகக் காணப்படும் இப்பகுதி ஒரு காலத்தில் நிலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும், அங்கு மக்கள் வசித்திருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. அங்கு வழங்கப்படும் மொழி, கலாசார, வாய்மொழி ஒப்பீட்டு வரலாறுகள் சங்க காலத்திலேயே அதாவது கி.மு. 300-ல் மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள் எனவும் அவர்கள் தமிழர்கள் எனவும் சொல்கின்றன.[1]

மாலைத்தீவுகளின் தொல்பொருள் ஆய்வுபற்றிய மேற்குலக கவனம் எச்.சீ.பீ. பெல் என்ற இலங்கை பொதுப்பணிகள் ஆனையாளரின் பின்னரே தொடங்கியது. பெல் அவர்கள் பயணம் செய்த கப்பல் உடைந்ததன் காரணமாக 1879 இல் மாலைத்தீவுக்கு முதன்முதலாக வந்தார். பின்னர் பல முறை, அங்கிருந்த பௌத்த சிதைவுகளை ஆராயும் நோக்கில் அங்கு திரும்பினார். கிபி 4வது நூற்றாண்டில் தேரவாத பௌத்தம் இலங்கையிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டது. கிபி 12ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் சமயம் வரும் வரை, பௌத்தம் இங்கு முக்கிய சமயமாக நிலவியது.

1980களின் நடுப்பகுதியில் மாலைத்தீவு அரசு தொல்பொருள் ஆராய்ச்சிக்கு இடமளித்தது. இவ்வாறு முதல் அனுமதி பெற்றவரான எயெரதாள் என்ற ஆய்வாளர் "ஏவிட்டா"(திவெயி: ހަވިއްތަ) என்ற சிறு மேடுகளை ஆய்வு செய்து இஸ்லாமிய காலத்துக்கு முன்னதான கலாச்சரமொன்றைக் கண்டுபிடித்தார். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சிலைகளும் ஏனைய தொல்பொருட்களும் இப்போது மாலே தொல்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

எயெரதாள் அவர்களின் ஆய்வுகளின்படி கிமு 2000 காலப்பகுதியிலேயே மாலைத்தீவு கடல் வழி வியாபாரத்தில் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. அவரின் கருத்துப்படி சூரிய வணக்கம் செய்த கடலோடிகளே மாலைத்தீவின் முதல் குடிகளாவர். இப்போதும் இங்குள்ள பள்ளிவாசல்கள் மக்கா நோக்கிப் பாராமல் கிழக்கு நோக்கியே காணப்படுகின்றமை இதற்கு ஒரு சான்றாகும். கட்டிடப் பொருள் தட்டுப்பாடு காரணமாகப் புதிய கலாச்சாரங்கள் தோன்றும் போது பழைய கலாச்சாரத்தின் கட்டிடங்களின் அத்திவாரத்திம் மீதே புதிய கட்டிடங்கள் எழுப்பட்டன. இதனால் எயெரதாள் இப்பள்ளிகள் முன்னைய சூரிய வணக்க கோவில்கள்மீது எழுப்பப்பட்டன எனக் கருதுகின்றார்.

மாலைத்தீவின் வரலாற்றின்படி சிங்கள இளவரசன் கொயிமலா என்பவர் தனது மனைவியான இலங்கை அரசனின் மகளோடு கப்பலில் செல்லும் போது சதுப்பு நிலத்தில் கப்பல் சிக்கி அவர்கள் மாலைத்தீவில் தங்கும்படியாயிற்று. அவ்விளவரசன் இலங்கைக்கு திரும்பாமல் மாலைத்தீவிலிருந்து ஆட்சி செய்தான். அவன் முதலாவது சுல்தானெனக் கொள்ளப்படுகிறார். அதற்கு முன்னர் கிராவரு என்பவர்கள் மாலைத்தீவை ஆண்டார்கள். இவர்கள் தங்களைத் தமிழரின் வழித்தோன்றல்களெனக் கூறுகின்றனர்.

இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு முன்னர் மாலைத்தீவினர் பௌத்த மதத்தையே பின்பற்றினார்கள். மாலைத்தீவின் கலாச்சாரமானது பல கடல்வழி வியாபாரிகளின் தாக்கத்தைக் கொண்டது. இது வரலாற்றில் பெரும் பகுதி சுதந்திர இஸ்லாமிய நாடாக இருந்தது எனினும் 1887 முதல் 1965 யூலை 25 வரை பிரித்தானிய முடியின் கீழான அரசாகக் காணப்பட்டது. விடுதலைக்குப் பிறகு 1968 ஆம் ஆண்டு சுல்தான் ஆட்சி முறை கலைக்கப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது.

1988 இல் இலங்கை தமிழ் ஆயுதக் குழு ஒன்று மாலைத்தீவை கைப்பற்றியது. மாலைத்தீவு அரசின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தியா தனது விமான மற்றும் கடல் படைகளை அனுப்பி மாலைதீவைச் சில மணித்தியாளங்களுக்குள் கைப்பற்றியது.[2][3]

2004 டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அலைகளால் தீவு பெரிதும் பாதிக்கப்பட்டது. 1-4.5 மீட்டர் உயரமான அலைகள் தாக்கின.[4]

பொருளாதாரம்

மாலைத்தீவுகளின் தலா வருமானம் 1980களில் அதிகூடிய வளர்ச்சியான 26.5 சதவீதத்தைக் காட்டியது, இது 1990களில் 11.5 சதவீத வளர்ச்சியை அடைந்தது. இப்போதும் அது பேணப்படுகிறது.

சுற்றுலாத் துறையும் மீன்பிடிக் கைத்தொழிலும் மாலைத்தீவுகளின் பொருளாதாரத்தின் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. கப்பல் மற்றும் வங்கி, உற்பத்தி துறைகளும் முக்கிய பங்களிப்பைச் செய்கின்றன. தெற்காசியாவில் இரண்டாவது கூடிய தலா வருமானத்தைக் கொண்டது. மாலைத்தீவுகளின் முக்கிய வாணிப நாடுகள் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா என்பனவாகும்.[5].

மீன்பிடி

மாலைத்தீவுகளின் பொருளாதாரம் மீன்பிடி மற்றும் கடல் சார் துறைகளில் முக்கியமாகத் தங்கியுள்ளது. மீன்பிடித்தல் மக்களின் முக்கிய தொழிலாக இருந்துவருகிறது. அரசு மீன்பிடிகைத்தொழிலின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவி செய்கிறது.

1974 ஆம் ஆண்டில் பாராம்பரிய "டோனி" என்ற தோணிகள் இயந்திர படகுகளுக்கு மாறியமை மீன்பிடி கைத்தொழிலினதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியினதும் முக்கிய மைல்கல்லாகும். 1977 இல் மீன்களைத் தகரப் பேணியில் அடைக்கும் தொழிற்சாலையொன்று யப்பானிய உதவியோடு பெளிவரு தீவில் நிறுவப்பட்டமை இன்னுமொரு முக்கிய நிகழ்வாகும். மனிதவள அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு பகுதியாக 1980 களில் மீன்பிடி தொடர்பான கல்வி பாடசாலை கல்வியில் ஒரு அங்கமாகச் சேர்க்கப்பட்டது. இன்று மீன்பிடிக் கைத்தொழில், மாலைத்தீவுகளின் மொத்த தேசிய உற்பத்தியில் 50 சதவீதத்துக்கு மேல் பங்களிப்புச் செய்கிறது. மேலும் நாட்டின் தொழிலாளர் படையில் 30% பேர் மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபடுகின்றனர். வெளிநாட்டு வருவாயில் சுற்றுலாத்துறைக்கு அடுத்தபடியாக அதிக வருவாயைக் கொடுக்கிறது.

சுற்றுலாத் துறை

Thumb
தலைநகரம் மாலே

சுற்றுலாத் துறையின் வளர்ச்சி நாட்டின் பரவலான வளர்ச்சிக்கு வித்திட்டது. அது மறைமுகமாகப் பல வேலைவாய்ப்புகளை வழங்கியது. இன்று மொத்த தேசிய உற்பத்தியின் 20% வழங்கும் சுற்றுலாத்துறை, நாட்டுக்குக் கூடிய வெளிநாட்டு வருவாயைப் பெற்றுக் கொடுக்கும் துறையாக விளங்குகிறது. 86 சுற்றுலாதலங்களுக்கு 2021 ஆம் ஆண்டு சுமார் 13,000,00 சுற்றுலா பயணிகள் மாலத்தீவு சுற்றுலா பேக்கேஜ் மூலம் வருகை தந்துள்ளனர்.

குடிசைக் கைத்தொழில்

சுற்றுலாத்துறையின் வளர்ச்சி நாட்டின் பாரம்பரிய குடிசைக் கைத்தொழில்களின் வளர்ச்சியை மறைமுகமாக அதிகரித்தது. பாய் இழைத்தல், நெசவு, சிற்பம், கயிறு திரித்தல் போன்ற கைத்தொழில்கள் முக்கிய வளர்ச்சியைக் கண்டன.

அரசியல்

மாலைத்தீவுகளின் அரசியல் அதிபர் முறை குடியரசு என்ற சட்ட வரம்புக்குள் நடைபெறுகின்றது. அதிபர் அரசின் தலைவராகப் பணியாற்றும் அதேவேளை அமைச்சர் சபையையும் அவரே நியமிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. பாராளுமன்றத்தில் நடைபெறும் இரகசிய வாக்கெடுப்பு மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனினும் இதனை மக்கள் கருத்துக்கணிப்பு மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

மாலைத்தீவுகளின் பாராளுமன்றம் (மசிலிசு) 50 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி முறைப் பாரளுமன்றமாகும். ஒரு பவளத்தீவுக்கு இரண்டு ஆண்கள் வீதம் மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதோடு, மிகுதி 8 பேரை அதிபர் நேரடியாக நியமிப்பார். மாலைத்தீவுகள் மக்கள் கட்சி இதுவரையும் பாராளுமன்றத்தை வைத்திருந்த போதிலும் 2005 க்குப் பிறகு பிற கட்சிகளும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டன.

நிருவாக அலகுகள்

Thumb
நாசாவின், மாலைதீவுகளின் செயற்கைக் கோள் படம்

மாலைதீவுகளின் 26 பவளத்தீவுகளும் இருபது நிர்வாகப் பவழத்தீவுகளாகவும் ஒரு நகரமாகவும் பிரிக்கப்பட்டு நிர்வாகிக்கப்படுகிறது.[6] மாலைத்தீவுகளில் பெரியதும் உலகிலே மிகப்பெரியதுமான பவழத்தீவு, ஞாவியானி பவழத்தீவு என்பதாகும்.

ஒவ்வொரு பவளத்தீவுக்கும் ஒரு தலைவர் அதிபரால் நேரடியாக நியமிக்கப்படுவதோடு அவற்றில் காணப்படும் தீவுகளுக்கு ஒவ்வொரு தலைவர் வீதமும் அதிபரால் நியமிக்கப்படுவர். இவர்கள் கூட்டாகப் பவளத்தீவுகளின் நிர்வாகத்துக்கு அதிபருக்குப் பதில் கூறவேண்டியவர்களாவர்.

புவியியல்

மாலைத்தீவுகள் உலகிலேயே தட்டையான நாடு என்ற சாதனைக்குரிய நாடாகும். இங்கு நிலம் 2.3 மீற்றர் மட்டுமே உயர்கிறது. கட்டுமானங்கள் காணப்படும் பிரதேசங்களில் செயற்கையாக நிலம் சில மீற்றர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் கடல் மட்டம் சுமார் 20 சதம மீட்டர் உயர்ந்தது, இது தொடந்து உயரும் என்பதே பொதுவான கருத்தாகும், எனவே இது மாலைத்தீவின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

2004 டிசம்பர் 26 இல் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் பேரலை காரணமாக மாலைத்தீவின் சில பகுதிகள் நீருள் மூழ்கிப் பலர் வீடுகளை இழந்தனர். இப்போது மாலைத்தீவுகளின் நிலப்பட வரைஞர்கள் மாலைத்தீவுகளின் வரைபடத்தை மீள வரைகின்றனர். இது அரசும் மக்களும் என்றோ ஒரு நாள் மாலைத்தீவுகள் முற்றாக உலக வரைபடத்திலிருந்து இல்லாது போய்விடுமென அஞ்சச் செய்கிறது.

மக்கள் கணிப்பியல்

மாலைத்தீவு மக்கள் பல கலாச்சாரங்களின் கலப்பினால் உருவானவர்காளாவர். முதலாவது குடியேற்றவாசிகள் தென் இந்தியாவிலிருந்து வந்தவர்களாவார். 4ஆம் 5ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையிலிருந்து வந்த இந்தோ-ஆரிய மக்கள் அடுத்ததாக இங்கு வந்தவர்களாவார். கிபி 12வது நூற்றாண்டில் மலாய தீவுகள், கிழக்காப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கு குடியேறினர். இன்றைய மாலைத்தீவினர் இம்மக்கள் அனைவரதும் கலப்பில் உருவான பல்கலாச்சாரக் கலப்பு மக்களாவர்.


மாலைத்தீவுகளின் ஆட்சி மொழி திவெயி மொழியாகும், இது ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழியாகும். இம்மொழி சிங்களத்துடன் நெருங்கிய தொடர்புடைய மொழியாகும். ஆங்கிலம் வாணிபத்துறையில் பரவலாகப் பாவனையில் உள்ளதுடன் இப்போது பாடசாலைகளிலும் போதனா மொழியாக வளர்ச்சி கண்டுவருகின்றது.

இந்திய சாதி முறைக்கு ஒத்த, சில சமுதாய படிமுறையாக்கம் இத்தீவுகளில் காணப்படுகிறது. ஆனால் அவ்வளவு இறுக்கமாகப் பின்பற்றப்படுவதில்லை. ஒருவரின் தரம், தொழில் செல்வம், இஸ்லாம் மீதான பற்று போன்ற வேறு பல காரணிகளில் தங்கியுள்ளது. சுற்றுலாத்தலங்கள் மக்கள் குடியிருப்புகள் அற்ற தீவுகளில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையான தொடர்புகள் விரும்பப்படுவதில்லை.

கலாச்சாரம்

மாலைத்தீவுகளில் இஸ்லாம் இந்திய வாணிப சமுதாயத்தைத் தவிர்த்த ஏனைய மாலைத்தீவினர் சுன்னி இஸ்லாம் மதப்பிரிவை சேர்ந்தவர்களாகும். மாலைத்தீவில் சட்டவரைவு கிடையாது, மாறாக இஸ்லாமிய சட்டம் நேரடியாக அமுலில் உள்ளது. இஸ்லாம் மதம் வழிபாடுகளுக்கு, பள்ளிவாசல்கள் முக்கிய நிலையங்களாகும். முஸ்லிம்களின் முக்கிய நாளான வெள்ளிக் கிழமைகளில் மதிய நேரத்துக்குப் பின்னர் வியாபார நிலையங்கள் மூடப்படுகின்றன. மாலைத்தீவில் மொத்தம் 724 பள்ளிவாசல்களும் 266 பெண்களுக்கான பள்ளிவாசல்களும் உள்ளன. மாலேயில் உள்ள பெரிய பள்ளிவாசல் பாக்கிஸ்தான், புருனை, மலேசியா, பாரசீக வளைகுடா பகுதி நாடுகள் இணைந்து பணவுதவி செய்து கட்டப்பட்டதாகும் இங்கு இஸ்லாமிய மையம் அமைந்துள்ளது.

ஐவேளை தொழுகையின் போது வேலைத்தளங்களும் கடைகளும் 15 நிமிடத்துக்கு மூடப்படும். மேலும் முஸ்லிம்கள் விரதம் இருக்கும், ரமழான் மாதத்தில் சகல உணவகங்களும் பகல் வேளையில் மூடப்படும். மற்றைய இஸ்லாமிய நாடுகளுடன் நேரடித் தொடர்பைப் பல நூற்றாண்டுகளாகக் கொண்டிருக்காதபடியால் இங்கு பழைய சமயங்களின் நம்பிக்கைகள் இஸ்லாம் சமயத்தோடு சேர்த்து பேணப்பட்டுள்ளன. அசுத்த ஆவிகள்பற்றிய நம்பிக்கை இவ்வாறான ஒன்றாகும். இதற்கு இவர்கள் பல மந்திர தந்திரங்களைப் பின்பற்றுகின்றார்கள்.

மாலைத்தீவுகளின் இசை

மாலைத்தீவுகளில் ஏனைய கலாச்சார அம்சங்களைப் போலவே அதன் இசையும் காலங்காலமாக மாலைத்தீவுகளுக்கு வந்த பிற காலாசாரங்களின் பாதிப்பைத் தன்னிடம் கொண்டுள்ளது. இதன் இசையில் மலேசிய, இந்திய, கிழக்காபிரிக்க அரபு தாக்கத்தை முதன்மையாகக் காணலாம்.

மிகப் பிரசித்தமான உள்ளூர் இசை "போடுபெரு" என அழைக்கப்படுகிறது. இது மாலைத்தீவுகளில் 11ஆம் நூற்றாண்டளவில் ஆரம்பித்ததாகக் கருதப்படுகிறது. இது கிழக்காபிரிக்க சாயலைக்கொண்டுள்ளது. இது ஒரு நடன இசையாகும். தலைமைப் பாடகர் ஒருவரோடு, கூட 15 பேர் கொண்ட குழுவினரால் இசைக்கப்படும். இக்குழுவில் மணி மற்றும் கிடை தவாளிப்புகள் வெட்டப்பட்ட மூங்கில் இசைகருவிகளாகப் பயனபடுத்தப்படும். போடுபெரு பாடல்கள் மெல்லிசையில் ஆரம்பித்துப் பின்னர் வேக இசைக்கு மாறும் அதேவேளை நடனத்தின் வேகமும் அதிகரிக்கும். பாடல் வரிகள் பலதரப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கும். சிலவேலைகளில் கருத்துகளற்ற சத்தங்கள் கொண்டும் பாடல்கள் அமைக்கப்படுவதுண்டு.

பாரசீக வளைகுடாவில் இருந்து வந்த அரேபியர்களால் கிபி 17வது நூற்றாண்டில் கொண்டுவரப்பட்டதாகக் கருதப்படும் "தாரா" இசை மாலைத்தீவுகளின் இன்னொரு முக்கிய இசை வகையாகும். இதில் சுமார் 22 பேர் இரண்டு நிரல்களில் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து இசைப்பார்கள். ஆண்கள் மட்டுமே இதனை இசைப்பது வழக்கமாகும். போடுபெரு இசைகளைப் போலவே இதுவும் மெல்லிசையாக ஆரம்பித்து வேக இசையாக மாறும்.

"கா ஒடி லாவா" என்பது உடல் உழைப்பு தேவையான வேலைகளின் முடிவில் இசைக்கப்படும் பாடலாகும். இது முதலாவது முகம்மது இமாதுதீன் (1620-1648), என்ற சுல்தானின் காலத்தில் மாலே கோட்டைச் சுவர் கட்ட உதவிய தொழிளாலருக்காக எழுதப்பட்டதாகும்.

20ம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் மூன்றாம் முகம்மது சமூசுதீன் என்ற சுல்தான "இலங்கிரி" என்ற இசைவடிவை அறிமுகப்படுத்தினார். இது தாரா இசையிலிருந்து திருத்தியமைக்கப்பட்டதாகும்.

"பொலிமாலாஃபாத் நெசுன்" என்ற பாடல் சுல்தானுக்குப் பரிசுகள் வழங்கும்போது பாடப்படும் பாடலாகும். சுமார் 24 பெண்கள் இப்பாடல்களை இசைப்பது வழக்கமாகும். 1968இல் குடியரசான பிறகு சுல்தான் ஒருவர் இல்லாத காரணத்தால் இது இசைக்கப்படுவதில்லை.

விடுமுறை நாட்கள்

மாலைத்தீவுகளில் இசுலாமிய நாட்காட்டி புழக்கத்தில் உள்ளது. விடுமுறை நாட்கள் அந்நாட்காட்டியின்படி கணிக்கப்படுவதால் கிரெகொரியின் நாட்காட்டி யில் விடுமுறை நாட்கள் வருடாவருடம் வேறுபடுவதோடு ஒரு கிரெகொரியின் ஆண்டில் ஒரே விடுமுறை இரண்டு முறை வருவதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு.[7]

மேலதிகத் தகவல்கள் மாலைத்தீவுகளின் பொது வங்கி விடுமுறை நாட்கள், நாள் ...
மாலைத்தீவுகளின் பொது வங்கி விடுமுறை நாட்கள்
நாள்பெயர்நாட்கள்குறிப்புகள்
ஜனவரி 1புத்தாண்டு1
வேறுபக்கூடியதுஹஜ் பெருநாள்1
வேறுபடக்கூடியதுஈதுல் அழ்ஹா4ஆபிரகாம் தனது மகன் இஸ்மாயிலை பலியிட ஆயத்தமாவதைக் குறிக்கும்
வேறுபடக்கூடியதுஇசுலாமிய புத்தாண்டு1
வேறுபடக்கூடியதுமீலாதுந் நபி1நபிகளின் பிறந்த நாள்
வேறுபடக்கூடியதுதேசிய நாள்1
வேறுபடக்கூடியதுஇஸ்லாம் மதத்தைத் தழுவிய நாள்1
ஜூலை 26சுதந்திர நாள்2
வேறுபடக்கூடியதுரமதான்1ரமழான் மாத ஆரம்பம்
வேறுபடக்கூடியதுஈதுல் பித்ர்3ரமழான் மாதம் முடிந்ததும்
நவம்பர் 3வெற்றி நாள்1
நவம்பர் 11குடியரசு தினம்2
மூடு

அவசரநிலை

2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 03 ஆம் திகதி இதன் தலைநகர் மாலியில் நிறுத்திவைக்கப்பட்டுருந்த சுமை வண்டியில் ராணுவ ஆயுதங்கள் ஏறாளமாக கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக துணை அதிபர் ஒரு மாதத்திற்கு அவசர நிலை அறிவித்தார். [8]

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.