From Wikipedia, the free encyclopedia
மக்களாட்சி அல்லது ஜனநாயகம் (Democracy) என்பது "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்" என வரைவிலக்கணம் கொண்டது. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்ற அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சிக்கு வரையறையை கூறினார். தற்போது உலகில் உள்ள மிகப்பெரும்பாலான நாடுகளில் இந்த முறையே கைகொள்ளப்படுகிறது. பொதுவாக ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் சார்பாளர்களைத் (சார்பாளிகளைத், பிரதிநிதிகளைத்) தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளிகள் தனிக்கட்சியாகவோ அல்லது மற்ற சார்பாளிகளுடன் சேர்ந்து கூட்டணியாகவோ ஆட்சி செய்வர்.
மக்களாட்சியில் சட்ட சமத்துவம், அரசியல் சுதந்திரம் மற்றும் சட்ட விதிமுறை ஆகியவை முக்கிய அம்சங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன..[1][2] இந்த நியமங்கள் எல்லா தகுதியுள்ள குடிமக்களுக்கும் சட்டத்திற்கு முன் சமமாக இருப்பதுடன், சட்டப்பூர்வ செயல்முறைகளுக்கு சமமான அணுகலைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, மக்களாட்சியில் ஒவ்வொரு வாக்குக்கும் சமமான எடை உள்ளது.[3][4] தகுதிவாய்ந்த குடிமக்களின் சுதந்திரம் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியன பொதுவாக ஒரு அரசியலமைப்பின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன..[5][6]
மக்களாட்சிக்கு மூன்று அடிப்படைக் கோட்பாடுகள் தேவைப்படுகிறது: 1) உயர்ந்த கட்டுப்பாடு, அதாவது அதிகாரத்தின் மிகக் குறைந்த அளவிலான இறையாண்மை. 2) அரசியல் சமத்துவம், 3) தனிநபர்களும் நிறுவனங்களும் உயர்மட்ட கட்டுப்பாட்டின் முதல் இரண்டு கொள்கைகள் மற்றும் அரசியல் சமத்துவம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல்களை மட்டும் கருத்தில் கொள்ளும் சமூக நெறிகள்.[7]
உலகத்தில் பல பகுதிகளிலும் உள்ள அரசியல் கோட்பாடுகளில் மக்களாட்சி என்பது ஒரு சிறந்த ஆட்சிமுறை என்று மிகப்பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.[8][9] மக்களாட்சி என்பது பொதுமக்கள் எனவும் பலம் எனவும் பொருள்கொள்ளப்பட்டது..[8]
பழங்கால கிரேக்க ரோமானிய அரசுகளில் மக்களாட்சி கொள்கை பின்பற்றப்பட்டது. மக்களாட்சி என்பது ஏதென்ஸ் பாரம்பரிய நகரத்தில் உள்ள தத்துவ சிந்தனை குறிக்க பயன்பட்டது. ஏதென்ஸ் நகர மக்கள் அனைவரும் வாக்களிக்க தகுதி இருந்தது.[10] தர நிர்ணய வாக்குப்பதிவு ஏதென்ஸ் ஸ்பார்ட்டாவில் கி.மு. 700-இல் நடைபெற்றது.
இடைக்காலத்தில் மக்களாட்சி முறையில் சில இடர்பாடுகள் ஏற்பட்டன. ஆனால் அமெரிக்க விடுதலைப் போர், பிரெஞ்சுப் புரட்சி, உருசியப் புரட்சி மற்றும் இந்திய சுதந்திரப்போர் ஆகியவை மன்னராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி என்ற புரட்சிக் கருத்திற்கு செயல்வடிவம் கொடுத்தன. அதனடிப்படையில் மக்களாட்சி முறை பல நாடுகளில் ஏற்பட்டது.
ஐக்கிய ராச்சியத்தின் முதல் நாடாளுமன்ற அவை 1707-இல் அமைக்கப்பட்டது. அந்த அவை இங்கிலாந்து மற்றும் சுகாட்லாந்து இணைப்பு நடவடிக்கை மூலம் அமைக்கப்பட்டது.[12] சுமாராக 3 சதவீத உறுப்பினர்கள் மட்டுமே வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[13] பின்னர் 18-ஆம் நூற்றாண்டில் சுவீடன் நாட்டின் நாடாளுமன்ற அவை அதிகாரம் பெற்ற அமைப்பாக மாறியது. 18-ஆம் நூற்றாண்டில் அமெரிக்க நாட்டில் ஆண்களுக்கு மட்டுமே வாக்களிக்க உரிமை இருந்தது.[14] 1787-இல் அமெரிக்க அரசாங்கம் மனித உரிமைகளுக்கான சட்டதிருத்தங்களைக் கொண்டு வந்தது. ஆனால் கடைநிலை சேவை ஊழியர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன.[15] 19-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் வட அமெரிக்க அரசில் முழு மக்களாட்சி தத்துவம் நடைமுறைப்படுத்தப்பட்டது.[16]
20-ஆம் நூற்றாண்டில் மத ரீதியாகவும், மறு காலனியாக்கம் காரணமாகவும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற புரட்சிகள் காரணமாகவும் பனிப்போர் காரணமாகவும் மக்களாட்சி முறை பல்வேறு நாடுகளில் வேரூன்றியது.[17] லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆசியாவிலும் மக்களாட்சி முறை சிறப்பாக தொடங்கியது. உலகப்புகழ் காலத்தில் ஹிட்லர் ஆட்சியில் ஜெர்மனியிலும் முசோலினி ஆட்சியில் இத்தாலியிலும் ஜப்பானிலும் மக்களாட்சி நசுக்கப்பட்டது.[18]
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ஆம் நாளை மக்களாட்சி நாளாக ஐக்கிய நாடுகள் அவை 2007-இல் அறிவித்தது.[19]
மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமாக்ரசி (Democracy) என்பர். டெமாக்ரசி என்ற சொல் டெமோஸ் (Demos) கிராட்டோஸ் (Kratos) என்ற இரண்டு சொற்களிலிருந்து தோன்றியது. டெமோஸ் என்பதற்கு மக்கள் என்றும் கிராட்டோஸ் என்பதற்கு அதிகாரம் அல்லது ஆட்சி என்றும் பொருள்.
"மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்" என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோ குறிப்பிடுகிறார்.[20] அரிஸ்டாட்டில் மக்களாட்சி ஏழ்மை நிலையிலுள்ளோர் தங்களுக்காக நடத்தும் ஆட்சி என்றும் கூறுகிறார்.[20][21]"மக்களே மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி" என்று முன்னாள் அமெரிக்க குடியரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூறுகிறார்.
மக்களாட்சி முறையில் நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி என இருவகைகள் உள்ளன.
நேரடி மக்களாட்சியில் அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் நேரிடையாக பங்கேற்கின்றனர். அரசாங்கத்தில் தீர்மானங்களை உருவாக்கும் வகையில் மக்கள் நேரிடையாக தொடர்பு கொண்டிருந்தனர்.
பழங்கால கிரேக்க ரோமானிய நாடுகளில் இம்முறையான மக்களாட்சி நடைபெற்றது. இம்முறையான மக்களாட்சி இடைக்காலத்தில் இத்தாலிய அரசுகளிடையே புதுப்பிக்கப்பட்டது. பழங்கால இந்தியாவில் நேரடி மக்களாட்சிக் கருத்துப்படி கிராம பஞ்சாயத்து முறை செயல்பட்டு வந்தது.
20-ஆம் நூற்றாண்டில் பெரிய நாடுகளில் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு காரணம், மக்கள் தொகைப் பெருக்கமே ஆகும்.
மறைமுக மக்களாட்சி முறையில் மக்கள் அவர்களின் சார்பாளிகளைத் (பிரதிநிதிகளைத்) தேர்ந்தெடுக்கின்றனர். இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்கள் ஆட்சி அமைத்து அரசாங்கத்தை நடத்துகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளிகள் மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். உலகின் பல நாடுகளில் இம்முறையே பின்பற்றப்படுகிறது.
தேர்தலின் போது அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை நன்றாக ஆராய்ந்து பார்த்துத் தமது வாக்கினைப் பயன்படுத்துவதனால் நாட்டிற்குப் பொருத்தமான ஆட்சியாளர்களைத் தெரிவுசெய்யும் வாய்ப்பு வாக்காளருக்குக் கிடைக்கின்றது. அத்துடன் அதிகாரத்திற்கு வந்தபின்பு ஆளும் கட்சியினால் செயற்படுத்தப்படும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து அவதானத்துடன் இருப்பது மக்களின் கடமையாகும். இதற்காக மக்கள் சிறந்த அரசியல் அறிவுடையோராக இருக்க வேண்டியுள்ளது.
அதேபோன்று அரசியல் அறிவு படைத்த புத்திசாதுரியமான மக்களை கொண்ட சமூகத்தின் அங்கத்தவர்கள் தமது உரிமைகளை அனுபவிப்பதோடு பிறரது உரிமைகளுக்கும் மதிப்பளிப்பவர்களாகவும் விளங்குவர். இதன் காரணமாக சமூக முரண்பாடுகள் மற்றும் வன்முறைகளை ஒழிப்பதற்கும், குற்றச் செயல்கள் துஷ்பிரயோகங்களற்ற சமூகமொன்றை உருவாக்குவதற்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது.
மக்களாட்சியில் பிரதேச மட்டம் தொடக்கம் தேசிய மட்டம் வரை ஆட்சி நிர்வாகத்தை நடாத்துவதற்காக பிரதிநிதிகள் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். அவ்வாறு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களின் முக்கிய பணி தேசிய அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு ஆட்சியை மேற்கொள்வதாகும். தலைவர்கள் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் பொறுப்பு வாய்ந்த விதத்திலும் செயற்படுவதே மக்களின் எதிபார்ப்பாகும். அத்துடன் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதானது மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கும், தேசிய அபிவிருத்திக்கும் காரணமாகலாம்.
நாட்டை ஆட்சி செய்வதற்குச் சட்டதிட்டங்கள் அவசியமானவை. அது போன்று சகலருக்கும் பொதுவான சட்ட ஒழுங்கொன்று செயற்படல் சட்டத்திற்குக் கீழ்ப்படிவுள்ள சமூகமொன்று உருவாகுவதற்கு அடிப்படையாக அமையும். சட்டத்தின் கீழ்ப்படிதல், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஆகியன மக்களாட்சி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணிகளாகும். சமூகப் பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் என்பன நீதிமன்றங்கள் சுதந்திரமாகச் செயற்படுவதிலும் மக்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதிலுமே தங்கியுள்ளன.
மக்களாட்சி முறையில் சில அறிஞர்கள் குறைகளைக் கூறுகின்றனர். மக்களாட்சி முறை வாக்காளர்களின் பகுத்தறிவை பேணுவதில்லை எனவும் வாக்காளர்கள் பலதரப்பட்ட வேட்பாளர்களை பல வகையிலும் ஆராய்வதில்லை எனவும் வாதிடுகின்றனர். மக்களாட்சி முறையில்றை முடிவுகள் தாமதமாக எடுக்கப்படுவதாக கூறுகின்றனர். இல்லாத சீனா பொருளாதார முன்னேற்றத்தில் வேகமாக முன்னேறுவதாக வாதிடுகின்றனர்.[22]
புகழ்பெற்ற தத்துவ ஞானி பிளேட்டோவின் கூற்றுப்படி "ஜனநாயகம் என்பது ஒரு அழகிய வடிவமான அரசாங்கமாகும். இது பல்வேறுபட்ட கோளாறுகள் நிறைந்தவையாகவும், சமமானவற்றுக்கு சமமானவையாகவும் உள்ளன".[23]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.