From Wikipedia, the free encyclopedia
மகாபாரதத்தில் கிருட்டிணன், பண்டைய பரத கண்டத்தின் காவியமான மகாபாரதத்தில், கிருட்டிணரின் அரசியல் தந்திரங்கள், பகவத் கீதை உபதேசம் மற்றும் குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களுக்கு ஆற்றிய உதவிகள் குறித்து கூறப்படுகிறது.
மதுராவை தலைநகராக் கொண்ட சூரசேன நாட்டின் கொடுங்கோல் மன்னரும், சொந்த தாய்மாமனுமாகிய கம்சனை கொன்று, தன் தாய்வழி தாத்தாவும், யது குல மன்னருமான உக்கிரசேனரை மீண்டும் மதுராவின் அரியணையில் அமர்த்தியதில் பாலகிருட்டிணரின் பங்கு முக்கியமானதாகும்.
வலுமிக்க மகத நாட்டு மன்னன் செராசந்தனின் மற்றும் காலயவனின் தொடர் அச்சுறுத்தல் காரணாமாக யது குலத்தின் பிரிவினர்களான விருட்சிணிகள், போசர்கள், குக்குரர்கள், அந்தகர்கள் உள்ளிட்ட 18 கிளைக் குழுவினர்கள், பரத கண்டத்தின் மேற்கிலும், மத்தியப் பகுதிகளிலும் குடியேறி, போச நாடு, ஆனர்த்தம், விதர்ப்பம், மத்சயம், சால்வம், சேதி நாடு போன்ற பகுதிகளை ஆண்டனர். கிருட்டிணரின் ஆலோசனைப்படி, சௌராட்டிரா தீபகற்பத்தின் கடற்கரையில் துவாரகை எனும் புதிய நகரை நிறுவி கிருட்டிணரைச் சார்ந்த விருட்சிணிகள் ஆண்டனர்.
குரு குல குரு நாட்டின் கௌரவர்களின் பங்காளிகளும், இந்திரப்பிரசத நாட்டு ஆட்சியாளர்களுமான பாண்டவர்களுடன் கிருஷ்ணர் நல்லுறவை வளர்த்துக் கொண்டதால் யாதவர்களின் அரசியல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. கிருட்டிணன், தனது அத்தை குந்தியின் மகன்களாக பாண்டவர்களில் வீமன் மற்றும் அருச்சுனன் ஆகியவர்களின் துணையுடன், யாதவர்களின் பெரும் பகைவனும், மகத நாட்டின் மன்னருமான செராசந்தனைக் கொன்றார். குருச்சேத்திரப் போரில் கௌரவர்களை வீழ்த்த கிருட்டிணன், பாண்டவர்களுக்கு அரசியல் மற்றும் போர்த் தந்திரங்களை கற்றுக் கொடுத்தார். மேலும் அருச்சுனனுக்கு பகவத் கீதை உபதேசித்தார்.
தீர்த்த யாத்திரையின் பொருட்டு துவாரகைக்கு வந்திருந்த பாண்டவ அருச்சுனனுக்கு, தன் தங்கையான சுபத்திரையை திருமணம் செய்து வைத்ததன் மூலமும், துரியோதனனின் மகள் இலக்கனையை தனது மகன் சாம்பனுடன் மணம் செய்து வைத்தன் மூலமும், யது குலம் மற்றும் குரு குலத்திற்கு இடையே ஏற்பட்ட பிணைப்பு, இரு குலத்தினரின் அரசியல் மற்றும் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. பாண்டவர்களுக்குப் பின்னர், கிருட்டிணனின் தங்கை சுபத்திரையின் மகன் அபிமன்யுவின் வழித்தோன்றல்களான பரிட்சித்து மற்றும் சனமேசயன் குரு நாட்டின் அரியணை ஏறினர்.
காந்தாரியின் சாபத்தின் படி, குருச்சேத்திரப் போர் முடிந்த 36 ஆண்டுகளுக்குப் பின்னர், துவாரகையில் யாதவ குலத்தினர் தங்களுக்குள் நடந்த மௌசலப் போரில், கிருட்டிணன், பலராமன், உத்தவர், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் தவிர யாதவர்களில் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடிந்தனர். யாவர்கள் போரிட்டு அழிவதற்கு முன்னர் உத்தவருக்கு பகவான் கிருட்டிணர், கீதா உபதேசம் செய்தார்.
துவாரகை நகரம் கடலில் மூழ்கியதை கண்ட பிறகு கிருட்டிணர், செரன் எனும் வேடுவனால் தவறாக அம்பெய்தப்பட்டதால் சட உடலை நீக்கி விட்டு வைகுந்தம் எழுந்தருளினார்.
மகாபாரத காவியத்தில் கிருஷ்ணன், பலராமனுடன் முதன் முறையாக, திரௌபதியின் சுயம்வரத்தில் தான் பாண்டவர்களை அடையாளம் காணுகிறார்.
தனது அத்தை குந்தி, குரு நாட்டின் பாண்டுவுக்கு வாக்கு பட்டதால், யது குல கிருஷ்ணர் தனது தங்கை சுபத்திரையை, குரு நாட்டின் அருச்சுனனுக்கு திருமணம் செய்து வைத்தார். மேலும் துரியோதனின் மகளான இலக்குமனையை, தனக்கும்-ருக்குமணிக்கும் பிறந்த சாம்பனுக்கு திருமணம் முடித்து வைத்தார். இதனால் யாதவ குலத்திற்கும், குரு குலத்திற்கும் நல்லுறவு ஏற்பட்டது.
கௌரவர்களுக்கும் - பாண்டவர்களுக்கும், குரு நாட்டை பிரித்து வழங்கப்பட்ட போது, பாண்டவர்களுக்கு, யமுனை ஆற்றின் கரை அருகே, காடுகள் அடர்ந்த பகுதி கிடைத்தது. கிருஷ்ணரின் ஆணையால், இந்திரனால் அனுப்பிவைக்கப்பட்ட
மயன் எனும் அசுரக் கலைஞர் தமிழ் சங்,கத்துக்கு சங்கப்பலகை செய்தவரும் ஆவார். மயன் காடுகள் நிறைந்த பகுதியை இந்திரப்பிரஸ்தம் எனும் புதிய நகரத்தை அமைத்துக் கொடுத்தான்.[1]
கிருஷ்ணரின் ஆலோசனையின் படி, வீமன், கம்சனின் மாமானாரும், யாதவர்களின் எதிரியுமான மகத நாட்டு மன்னன் ஜராசந்தனை மல்யுத்தப் போரில் கொன்று விடுகிறார்.
தருமன் நடத்திய இராசசூய வேள்வியின் போது, ஒரு நாட்டிறகு மன்னன் என்ற பெருமை அற்றவனாகிய கிருஷ்ணருக்கு முதல் மரியாதை தரக்கூடாது என்று கிருஷ்ணனின் அத்தை மகனும், பகையாளியுமான [[சிசுபாலன் கூறியதுடன், நூறு முறைகளுக்கும் மேலாக கிருஷ்ணனை அவதூறாக தூற்றினான். சிசுபாலனின் தாய்க்கு கண்ணன் அளித்த வரத்தின் படி, இறுதியில் சிசுபாலனை தனது சக்கராயுதத்தால் சிசுபாலனின் தலையை கொய்தார்.
உருக்மியின் கூட்டாளியான சால்வனுடன் இணைந்து, கண்ணன் இல்லாத நேரத்தில் துவாரகை நகரை தாக்கி, வசுதேவரை கொன்ற செய்தி அறிந்து துவாரகை வந்த கிருட்டிணன் தனது சக்கராயுதம் கொண்டு சால்வ நாட்டு மன்னரை கொன்றுவிடுகிறார்.
பாண்டவர்கள் சூதாட்டத்தில், திரௌபதியை பணயமாக வைத்து கௌரவர்களிடம் இழந்ததால், பீஷ்மர், துரோணர், விதுரன் மற்றும் மன்னர் திருதராட்டிரன் இருந்த நிறைந்த அவையில் திரௌபதியின் சேலையை உருவி மானபங்கப்படுத்த துச்சாதனன் முயன்ற போது, திரௌபதியின் அபயக்குரலைக் கேட்ட கண்ணன், திரௌபதியை பல வண்ணங்கள் உடைய அற்புதமான துணிகளால் மூடி, திரௌபதியின் மானம் காத்தார்.
துரியோதனனின் தூண்டுதலின் பேரில், துர்வாச முனிவர் தனது ஆயிக்கணக்கான சீடர்களுடன், வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த பாண்டவர்களிடம் விருந்தாளியாக வந்த நேரத்தில், சூரிய பகவான் வழங்கிய பாத்திரம் கழுவி வைக்கப்பட்டு விட்டதால், இனி அதிலிருந்து அமுது கிடைக்காது; எனவே சீடர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற துர்வாசர் உணவு கிடைக்காத காரணத்தால் நம்மை சபித்து விடுவார் என வருந்திய திரௌபதி, இந்த இக்கட்டிலிருந்து மீள கண்ணனை மனதால் வேண்டினாள். கிருஷ்ணன் உடனே அவ்வனத்தில் தோன்றி, திரௌபதியிடமிருந்து சோற்றுப் பானையை வாங்கி, அதில் ஒட்டியிருந்த சிறு கீரையையும், ஒரு பருக்கை அரிசையையும் உண்டு பசியாறியதன் விளைவால், ஆற்றில் குளிக்கச் சென்றிருந்த துர்வாசரும், அவரது சீடர்களும் அங்கேயே பசியாறினர். பீமன் துர்வாசரை அழைக்கச் சென்ற போது, துர்வாசரும், அவரது சீடர்களும் அங்கிருந்து ஓடி விட்டதாக, ஆற்றாங்கரையில் பொதுமக்கள் கூறினர். கண்ணனின் அருளால் பாண்டவர்களும் திரௌபதியும் துர்வாச முனிவரின் சாபத்திலிருந்து தப்பித்தனர்.
கௌரவர்களுடன் போரைத் தவிர்க்க விரும்பிய பாண்டவர்கள், தாங்கள் வாழ்வதற்கு குறைந்தது ஐந்து கிராமங்களையாவது திருதராட்டிரனிடம் கேட்டுப் பெற கிருஷ்ணனை அத்தினாபுரத்திற்கு தூது அனுப்பினர். சூதாட்டத்தில் நாட்டை இழந்த பாண்டவர்களுக்கு ஊசி முனை அளவிற்கும் இடம் கூட தர முடியாது என துரியோதனன் ஆணவத்துடன் கூறியதால், இனி போரில் தான் இழந்த நாட்டை பெற முடியும் என பாண்டவர்களிடம் கிருஷ்ணர் கூறினார்.
குருச்சேத்திரப் போரில், துரியோதனன் தலைமையிலான கௌரவர் அணிக்கு கிருதவர்மன் தலைமையிலான யாதவப் படைகளை வழங்கிவிட்டு, தான் போரில் ஆயுதங்கள் ஏந்தாமல், பாண்டவர்களுக்கு ஆதரவாக அருச்சுனனின் தேரை ஓட்டச் சம்மதித்தார்.[2]
கண்ணனின் போர்த் தந்திர ஆலோசனையின் பேரில், குருச்சேத்திரப் போரில் வீழ்த்த முடியாத பீஷ்மர், துரோணர், ஜயத்திரதன், கர்ணன், சல்லியன் மற்றும் துரியோதனாதிகளை, அருச்சுனனும், வீமனும் வீழ்த்தியதால் பாண்டவர் அணி வெற்றி கொண்டது.
பெண்களிடமும், திருநங்கைகளிடமும் போர் செய்ய விரும்பாத பீஷ்மரை வீழ்த்த, சிகண்டியை முன்னிருத்தி, பின்புறத்தில் அருச்சுனன் நின்று பீஷ்மர் மீது அம்புகளை எய்யுமாறு ஆலோசனை கூறினார் கண்ணன். அதன்படியே பத்தாம் நாள் போர் அன்று, பீஷ்மரின் முன் சிகண்டியை முன்னிருத்தியதால், பீஷ்மர் தனது வில்லை எறிந்து விட்டு சிகண்டியுடன் போரிடாமல் தேரில் நின்று விட, சிகண்டியின் பின்புறத்திலிருந்து அருச்சுனன் எறிந்த கனைகளால், பீஷ்மர் உடல் முழுவதும் துளைக்கப்பட்டு அம்புப் படுக்கையில் கிடத்தப்பட்டார்.
துரோணர் உயிருக்கு உயிரான தன் மகன் அஸ்வத்தாமன் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த கண்ணன், பதினைந்தாம் நாள் போரின் போது, போர்க்களத்தில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் எனும் பொய்ச் செய்தியை தருமன் மூலம் துரோணரிடம் கூறும் படி ஆலோசனை வழங்கினான் கண்ணன். அதன் படியே தருமனும், அஸ்வத்தாமன் என்ற யாணை இறந்து விட்டது, என்ற சொல்லில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்ற சொற்களை அதிக ஒலியுடனும், யானை என்ற சொல்லை மிக மெலிதாக துரோணரிடம் கூறினார். ஆனால் துரோணர் தனது மகன் அஸ்வத்தாமன் போரில் இறந்து விட்டான் என்று நம்பி மனமுடைந்த துரோணர் தன் கை போர்க்கருவிகளை விட்டு விட்டு, போர்க்களத்தில் தேரில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்து விட்டார். துரோணரை கொல்வதற்காக பிறந்த திருட்டத்துயும்னன், துரோணரின் தலையை தன் வாளால் கொய்தான்.
அபிமன்யுவின் மரணத்திற்கு மூல காரணமான சிந்து நாட்டு மன்னன் ஜெயத்திரதனை சூரியன் மறைவதற்குள் கொல்வேன் என சபதமிட்டான் அருச்சுனன். ஆனால் துரோணரின் தலைமையிலான கௌரவப் படைகள் ஜெயத்திரதனை சூழ்ந்து கொண்டு நின்று போரிட்டதாலும்; அருச்சுனை கொல்ல சபதமிட்ட திரிகர்த்த நாட்டு மன்னர் சுசர்மன் தலைமையிலான சம்சப்தகர்களை வீழ்த்திய பின்னர், ஜெயத்திரதனை கொல்வதற்காக அருச்சுனன் புறப்படும் போது, கிருஷ்ணன் தனது சக்கராயுதத்தால் சூரியனை மறைத்து விட்டார். எனவே அன்றைய போர் முடிந்ததாக இரு அணியினரும் கருதிய வேளையில், ஜெயத்திரதன் மகிழ்ச்சியுடன் அருச்சுனன் முன் வந்து நின்றான். கிருஷ்ணன் தனது சக்கராயுதத்தை திரும்பப் பெற்றவுடன், சக்கராயுதத்தால் மறைக்கப்பட்ட சூரியனை மீண்டும் வெளிப்பட்டது. கிருஷ்ணரின் அறிவுரைப்படி, அருச்சுனன் தன் எதிரில் நின்றிருந்த ஜெயத்திரதன் மீது தொடர் கனைகளை எறிந்து, ஜெயத்திரதனின் தலையை அவன் தந்தையின் மடியில் விழ வைத்தார். மடியில் விழுந்த தலையை யார் தலை என அறியாது, அவன் தந்தை தரையில் தள்ளியதால் அவன் தந்தை தலை வெடித்து மாண்டார். (ஜெயத்திரனின் தந்தை பெற்ற வரமொன்றின்படி ஜெயத்திரதன் தலையை யார் தரையில் தள்ளினாலும் தள்ளுபவர் தலை சுக்கு நூறாக வெடித்து விடும்.)
குருச்சேத்திரப் போருக்கு முன்னரே கர்ணனின் தெய்வீக சக்திகளை குந்தி மற்றும் இந்திரன் வாயிலாக பறித்துவிட்டான் கண்ணன். கண்ணன், குந்தியை கர்ணனிடம் அனுப்பி, நானே உன் தாய் என்ற உண்மையை உணரச் செய்தார். பின் குந்தி கேட்ட வரங்களின் படி, பாண்டவர்களில் அருச்சுனன் தவிர மற்றவர்களை கொல்வதில்லை என்றும், நாகாஸ்திரத்தை அருச்சுனன் மீது ஒரு முறைக்கு மேல் எய்வதில்லை என்றும் வரம் அளித்தான்.
கண்ணன், கர்ணனின் கவச குண்டலங்களை பறிக்க, இந்திரனை ஒரு சாது வேடத்தில் தானமாக கேட்க கர்ணனிடம் அனுப்பினார். கர்ணனும், தான் பிறக்கும் போதே உடலுடன் ஒட்டிப் பிறந்த கவச குண்டலங்களை அறுத்து இந்திரனுக்கு தானமாக கொடுத்துவிட்டார். கவச குண்டலங்களை இழந்த கர்ணனை, குருச்சேத்திரப் போரில் கொல்வது அருச்சுனனுக்கு எளிதாகிவிட்டது. காண்டவ வனத்தை எரித்தன் மூலம் தன் நாக இனத்தை அழித்த அருச்சுனனை பழி வாங்க துடித்துக் கொண்டிருந்த தட்சகன் மகன் நாக அஸ்திர வடிவில் கர்ணனின் அம்புறாத்தூணில் இருந்தான். ஒரு முறை கர்ணன் நாகாஸ்திரத்தை அருச்சுனனின் கழுத்தை நோக்கி குறி பார்த்து எய்தியதை அறிந்த கிருஷ்ணர், முன்யோசனையுடன் தேரை காலால் அழுத்தி தரையில் ஒரடி பள்ளத்தில் இறங்கச் செய்ததால், நாகஸ்திரம் அருச்சுனனின் கழுத்தை கொய்வதற்கு பதிலாக தலைப்பாகையை பறித்துச் சென்றது.
கர்ணனின் தேர்ச்சக்கரம் தரையில் அழுந்தியதை, கர்ணன் மீண்டும் தூக்கி நிலைநிறுத்தும் நேரத்திற்குள், கண்ணனின் ஆலோசனையின் படி, அருச்சுனன் கர்ணனின் மீது கனைகளை ஏவிக் கொன்றான்
பதினெட்டாம் நாள் போரின் மதியத்திற்குள், கௌரவ படைத்தலைவர் சல்லியன் தருமனால் கொல்லப்பட்டதை அறிந்த துரியோதனன், போர்க்களத்திலிருந்து வெளியேறி அருகில் உள்ள ஒரு மடுவிற்குள் ஒளிந்து கொண்டான். பின்னர் துரியோதனன் இருக்குமிடத்திற்கு கிருஷ்ணரும், பாண்டவர்களும் வந்தனர். வீமனும் துரியோதனனும் கதாயுதம் கொண்டு நேருக்குக் நேர் மோதினர். மோதலில் ஒரு கட்டத்தில் வீமன் அழிவின் விளிம்பு நிலைக்குச் சென்று கொண்டிருந்த நேரத்தில், கிருஷ்ணரின் அறிவுரையின் படி, வீமன், கதாயுதப் போரின் விதிகளை மீறி, துரியோதனனனின் இரு தொடைகளையும் உயிர் போகும் அளவுக்கு அடித்து பிளந்து விட்டான்.
பதினெட்டாம் நாள் போர் முடிந்த இரவில் அஸ்வத்தாமன், பாண்டவர்களின் பிள்ளைகளான உப பாண்டவர்களையும், அபிமன்யுவின் மனைவி உத்தரையின் வயிற்றில் இருந்த கருவை கொன்றழித்தான். இதனால் பாண்டவர்களுக்கு வாரிசு அற்ற நிலை ஏற்பட்டது. எனவே கிருஷ்ணர் உத்ரையின் கருவில் இறந்த குழந்தை பரீட்சித்துவுக்கு உயிர் கொடுத்து பாண்டவர்களின் பரம்பரையை காத்தார்.
குருச்சேத்திரப் போர் முடிந்த பின்னர், பாண்டவர்கள் திருதராட்டிரனைக் காணச் சென்றனர். திருதராட்டிரன் தருமனை கட்டியணைத்த பின்னர், வீமனை வரச் சொன்னார். கிருஷ்ணர், வீமனைப் போன்ற ஒரு இரும்பினால் ஆன சிற்பத்தை, திருதராட்டிரன் முன் நிறுத்தினார். திருதராட்டிரன் தன் பிள்ளைகள் நூறு பேரைக் கொன்ற வீமன் மீது அடங்காத ஆத்திரத்திரத்துடன், இரும்புச் சிலையை வீமன் எனக்கருதி மிக அதிக இறுக்கத்துடன் அணைத்துக் கொண்ட போது, இரும்புச் சிலை உடைந்து சிதறிவிட்டது. பின்னர் வீமனை கொன்று விட்டோமே என புலம்பிய திருதராட்டிரனுக்கு, கண்ணன் வீமன் உயிருடன் உள்ளான் எடுத்துக் கூறினார்.
குருச்சேத்திரப் போர் துவங்குவதற்கு சற்று முன்னர் பீஷ்மரையும், துரோணரையும் போர்க்களத்தில் நேரில் கண்டவுடன் போரிட மறுத்த அருச்சுனனுக்கு, கிருஷ்ணன் பகவத் கீதையை உபதேசித்து, கர்ம யோகத்தின் படி நடந்து சத்திரியனுக்குரிய மனவுறுதியுடன் துவங்கிய போரினை முடித்து வைக்க ஊக்கிவித்தான்.[3][4][5]
மௌசல பருவத்தில் யாதவர்கள் தங்களுக்குள் தாங்களே போரிட்டு அழிந்து கொண்டிருந்த நேரத்தில், கிருஷணன் தனது அவதார நோக்கம் முடிந்து, வைகுண்டத்திற்கு எழுந்தருளும் வேளையில், கிருஷ்ணரின் பக்தரும், நண்பரும், நெருங்கிய உறவினருமான உத்தவருக்கு, ஞான உபதேசம் அருளினார்.[6][7][8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.