From Wikipedia, the free encyclopedia
பார்வைக் குறைபாடு (visual impairment) என்பது கண்களில் மூக்குக்கண்ணாடி அணிவது போன்ற வழக்கமான எளிய வழிகளில் சரிசெய்ய முடியாத சிக்கல்களைக் கொண்டிருக்கும் கண்களின் காட்சிக் குறைபாட்டைக் குறிக்கும். இதை பார்வை இழப்பு என்ற பெயராலும் அழைப்பர் [1][2]. மூக்குக்கண்ணாடிகள் மற்றும் விழியொட்டு வில்லைகள் முதலானவற்றைப் பயன்படுத்தும் வசதியில்லாததால் பார்வையை இழக்கும் நிலைமையும் பார்வைக் குறைபாடு என்றே கருதுவார்கள். பெரும்பாலும் 20/40 அல்லது 20/60 அளவை விட மோசமான சிறந்த திருத்தப்பட்ட பார்வைத் திறன் கொண்ட கண்களின் நிலையை பார்வைக் குறைபாடு நிலையென வரையறுக்கப்படுகிறது . முழுமையாகப் பார்க்கும் திறனை இழந்த அல்லது கிட்டத்தட்ட பார்க்கும் திறனை இழக்க இருக்கின்ற பார்வை இழப்பு நிலையை குருட்டுத்தன்மை என அழைக்கிறார்கள். வாகனங்கள் ஓட்டுதல், படித்தல், நடத்தல், சமூகத்துடன் ஊடாடுதல் முதலான தினசரி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பார்வையற்றோர் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பார்வைக் குறைபாடு | |
---|---|
ஒத்தசொற்கள் | பார்வைக் குறைபாடு, பார்வை இழப்பு |
ஓரு வெள்ளை குச்சி, பார்வைக் குறைபாடுக்கான சர்வதேச சின்னம் | |
சிறப்பு | கண் |
அறிகுறிகள் | குறைவான பார்வைத் திறன் [1][2] |
காரணங்கள் | கண் அழுத்த நோய், கண் புரை நோய், சிதறல் பார்வை [3] |
நோயறிதல் | கண் பரிசோதனைகள் [2] |
நிகழும் வீதம் | 940 மில்லியன் / 13% (2015)[4] |
இந்த பார்வைக்குறைபாடு உடற்கூற்றியல் மற்றும் நரம்பியல் காரணிகளால் ஏற்படக்கூடிய பார்வை உணர்வுக் (:en:Visual perception) குறைவு நிலையைக் குறிக்கும். பார்வை இழப்பின் அளவை விளக்குவதற்கும் பார்வைக் குறைபாட்டை வரையறுப்பதற்கும் பல அளவீட்டு முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. வடிவ உணர்வும், பார்க்கக்கூடிய ஒளியை முற்றாகவே உணர முடியாத நிலையும் முழுமையான குருட்டுத் தன்மை எனப்படும். இதனை மருத்துவ அடிப்படையில், "என்எல்பி" (NLP) எனக் குறிப்பிடுவர் இது "ஒளியுணர்வின்மை" என்பதன் ஆங்கிலத் தொடரின் (no light perception) சுருக்கம் ஆகும். "ஒளியுணர்வு" (light perception) கொண்டவர்களால் ஒளியை இருளில் இருந்து பிரித்து அறியமுடியும். "ஒளிவீழ்ப்பு" (light projection) உணர்வு கொண்டவர்கள் ஒளி மூலத்தின் பொதுவான திசையை அறிந்து கொள்ள முடியும்.
பார்வைக் குறைபாடுகள் காரணமாக எத்தகையவர்களுக்குச் சிறப்பான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை முடிவு செய்வதற்காகப் பல நாடுகளில் அரசாங்க நீதியமைப்புக்கள் சட்டக் குருட்டுத்தன்மைக்கான விரிவான வரைவிலக்கணங்களை உருவாக்கியுள்ளன.[5] வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும் குருட்டுத்தன்மை என்பது, மிகவும் அதிகமாக இயலக்கூடிய திருத்தங்களுடன் கூடிய கண்ணின் பார்வைக் கூர்மையின் அளவு 20/200 (6/60) அல்லது அதிலும் குறைவாக இருத்தல் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. சாதாரணமான பார்வையுடைய ஒருவர் 200 அடி (60 மீட்டர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடிய பொருளொன்றைச் சட்டக் குருட்டுத்தன்மை கொண்ட ஒருவர் 20 அடி (6 மீட்டர்) தொலைவில் இருந்தே அதேயளவு தெளிவாகப் பார்க்கமுடியும் என்பதே இதன் பொருளாகும். சில பகுதிகளில், சராசரிப் பார்வைக் கூர்மை உள்ள ஒருவருடைய பார்வைப் புலம் (visual field) 20 பாகைக்குக் (இருக்கவேண்டிய அளவு 180 பாகை) குறைவாக இருந்தாலும் அவர் சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவராகக் கருதப்படுகிறார்.
பொருள்களிலிருந்து வரும் இணையான ஒளிக்கதிர்கள் சரியாக விழித்திரையின் மேல் குவிக்கப்படாமல் தோன்றும் திருத்தப்படாத ஒளிச்சிதறல் பிழைகளால் உலகளவில் 43% பார்வைக் குறைபாடு தோன்றுகிறது. கண்புரை நோயால் 33% பார்வை இழப்பும், குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயால் 2% பார்வை இழப்பும் ஏற்படுகின்றன.[6].
பின்வரும் காரணிகள் உலகம் முழுவதும் அறியப்படும் பார்வை குறைபாடுகளுக்கானப் பொதுவான காரணங்களாக உள்ளன.[7]
80% பார்வை குறைபாடு நோய்கள் முறையான சிகிச்சையால் தடுக்கக்கூடியவை அல்லது தீர்க்கப்படக்கூடியவை என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது.[3][9]
2012 ஆம் ஆண்டில் உலகில் 285 மில்லியன் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இருந்ததாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது, அதில் 246 மில்லியன் நபர்கள் குறைந்த பார்வையிழப்பும் மற்றும் 39 மில்லியன் நபர்கள் முழுமையாக பார்வை இழந்து குருட்டுத்தன்மை உடையவர்களாகவும் இருந்தனர். கண்பார்வை இழந்தவர்களில் 90% நபர்கள் வளர்ந்துவரும் நாடுகளில் காணப்படுகின்றனர் [10] வயது: பார்வைக் குறைபாடு வயதுக் குழுக்களுக்கிடையில் சமமற்ற முறையில் பரவியிருக்கிறது. குருடாக இருக்கும் அனைத்து மக்களிலும் 82 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர், இருப்பினும் அவர்கள் உலகின் மக்கள்தொகையில் 19 சதவிகிதத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 15 வயதுக்கு குறைவான குழந்தைகள் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் குழந்தைகள் பார்வையற்றவர்களாக வாழ்கின்றனர்.
மேல் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கண் நோய்களுக்கும் அதற்குத் தகுந்த சரியான மருத்துவ சிகிச்சை முறைகள் அதன் காரணிகளுக்குத் தகுந்தால் போல் உள்ளது. அவை பின்வருமாறு:
பார்வைக் குறைபாடுகள் ஒவ்வொருவருக்கும் பல்வேறு வடிவங்களில் வரலாம். அவற்றினால் ஏற்படும் பாதிப்பும் பல்வேறு அளவுகளில் மாறுபடலாம். ஒரு மனிதனுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு பார்வைத் திறன் மட்டுமே காரணம் என்று கருதமுடியாது. 20/40 என்ற நல்ல பார்வைத்திறன் கொண்ட ஒருவர் தினசரி செயல்பாடுகளில் சிரமப்படலாம். 20/200 என்ற மோசமான பார்வைத்திறன் அளவு கொண்ட ஒருவர் தினசரி செயல்பாடுகளில் எந்தவிதமான சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருக்கலாம்.
ஒரு கண்ணின் பார்வை இழப்பு என்பது காட்சி அமைப்பின் 25% குறைபாடு என்றும் அந்த நபருக்கு ஏற்படும் ஒட்டுமொத்த குறைபாடு 24% என்றும் அமெரிக்க மருத்துவ கழகம் மதிப்பிட்டுள்ளது. இரு கண்களிலும் ஏற்படும் பார்வை இழப்பு மொத்தமாக காட்சி அமைப்பின் 100% பார்வை குறைபாடு என்றும் அந்நபரின் ஒட்டுமொத்த குறைபாடு 85% என்றும் இக்கழகம் கூறுகிறது.[11].
இத்தகைய பார்வை இழப்பு நிலைக்கு வரும் சிலர் மாற்று வழிமுறைகள் ஏதும் தேடாமல் தங்களிடம் கணிசமான மீதமுள்ள பார்வையைப் பயன்படுத்தி தினசரி செயல்பாடுகளில் ஈடுபடலாம். கண் மருத்துவரை அணுகி பார்வைத்திறனை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம். ஒளியியல் கருவிகள், மின்னணு கருவிகள் மூலம் ஒளியை சரியான முறையில் விழித்திரையில் குவித்து கண்மருத்துவர் பார்வைக் குறையை சரிசெய்ய உதவுவார்.
தொழில்நுட்ப உதவிகள் பெறுவதற்கு பயிற்றுவிக்கப்பட்ட தனிநபர்களால் நடத்தப்படும் பயிற்சிகளில் பார்வை இழப்புக்கு உள்ளானவர்கள் சேர்ந்து பயிற்சிபெற்று பயனடையலாம். பார்வை புனர்வாழ்வளிப்பு நிபுணர்கள் சில நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர், இவர்களால் மீதமுள்ள பார்வை அதிகரிப்பதற்கும், தன்னந்தனியாக தினசரி செயல்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பொருளீட்டவும், சமூகத்தில் ஒருங்கிணைந்து வாழவும் அறிவுரை வழங்க முடியும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.