From Wikipedia, the free encyclopedia
பார்படோசு (Barbados; பார்படோஸ்) என்பது அமெரிக்கக் கண்டத்தில் கரிபியன் பிரதேசத்தில், மேற்கிந்தியத் தீவுகளின் சிறிய அண்டிலிசில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு ஆகும். இது கரிபியன் தீவுகளில் மிகவும் கிழக்கே அமைந்துள்ளது. இத்தீவின் நீளம் 34 கிமீ (21 மைல்கள்), ஆகக்கூடிய அகலம் 23 கிமீ (14 மை), பரப்பளவு 432 கிமீ2 (167 ச.மைல்) ஆகும். இது வடக்கு அத்திலாந்திக்கின் மேற்கே, வின்வர்டு தீவுகள் மற்றும் கரிபியக் கடலில் இருந்து 100 கிமீ (62 மை) கிழக்கே அமைந்துள்ளது.[7] பார்படோசு வின்வர்டு தீவுகளுக்குக் கிழக்கே, சிறிய அண்டிலிசின் ஒரு பகுதியாக, நிலநடுக்கோட்டில் இருந்து அண்ணளவாக 13° வடக்கே அமைந்துள்ளது. இது செயிண்ட் லூசியா, செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் நாடுகளுக்கு 168 கிமீ கிழக்கேயும், மர்தினிக்கில் இருந்து 180 கிமீ தென்-கிழக்கேயும், டிரினிடாட் மற்றும் டொபாகோவில் இருந்து 400 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. பார்படோசு முதன்மை அத்திலாந்திக் சூறாவளி மண்டலத்திற்கு வெளியே உள்ளது. இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் பிரிஜ்டவுண் ஆகும்.
பார்படோசு Barbados | |
---|---|
குறிக்கோள்: "பெருமையும் தொழிலும்" | |
நாட்டுப்பண்: "ஏராளமான மற்றும் தேவைப்படும் நேரத்தில்" | |
தலைநகரம் | பிரிஜ்டவுண் 13°06′N 59°37′W |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
பிராந்திய மொழிகள் | பஜன் கிரியோல் |
இனக் குழுகள் (2010[1]) |
|
சமயம் |
|
மக்கள் |
|
அரசாங்கம் | ஒருமுக நாடாளுமன்ற அரசியல்சட்டக் குடியரசு |
• குடியரசுத் தலைவர் | சான்டிரா மேசன் |
• பிரதமர் | மியா மொட்லி |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
• மேலவை | மேலவை |
• கீழவை | அரசுப் பேரவை |
விடுதலை | |
• ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | 30 நவம்பர் 1966 |
• ஐநாவில் இணைவு | 7 திசம்பர் 1966 |
• குடியரசு | 30 நவம்பர் 2021 |
பரப்பு | |
• மொத்தம் | 439 km2 (169 sq mi) (183-வது) |
• நீர் (%) | negligible |
மக்கள் தொகை | |
• 2019 மதிப்பிடு | 287,025[2] (182-வது) |
• 2010 கணக்கெடுப்பு | 277,821[3] |
• அடர்த்தி | 660/km2 (1,709.4/sq mi) (15-வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2019 மதிப்பீடு |
• மொத்தம் | $5.398 பில்லியன் |
• தலைவிகிதம் | $18,798[4] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2019 மதிப்பீடு |
• மொத்தம் | $5.207 பில்லியன் |
• தலைவிகிதம் | $18,133[4] |
மமேசு (2019) | 0.814[5] அதியுயர் · 58-வது |
நாணயம் | பார்படோசு டாலர் ($) (BBD) |
நேர வலயம் | ஒ.அ.நே−4 (அ.நே.வ) |
வாகனம் செலுத்தல் | இடது[6] |
அழைப்புக்குறி | +1 -246 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | BB |
இணையக் குறி | .bb |
ஆரம்பத்தில் அமெரிக்க இந்தியர்களும், பின்னர் 13-ஆம் நூற்றாண்டு முதல் கலிநாகோ மக்களும் இங்கு குடியேறினர். பார்படோசு 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் எசுப்பானியக் கப்பலோட்டிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, காசுட்டில் பேரரசுக்காக உரிமை கோரப்பட்டது. பார்படோசு முதல் தடவையாக 1511 இல் எசுப்பானிய நிலவரை படத்தில் காட்டப்பட்டது.[8] 1532 முதல் 1536 வரை போர்த்துகல் பேரரசு இத்தீவுக்கு உரிமை கோரியது, ஆனாலும் 1620 இல் அதனைக் கைவிட்டது. ஒலிவ் புளொசம் என்ற ஆங்கிலேயக் கப்பல் இங்கு 1625 மே 14 இல் வந்திறங்கியது. அக்கப்பலில் வந்தவர்கள் இத்தீவை இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னருக்காக உரிமை கோரினர். 1627 இல், இங்கிலாந்தில் இருந்து முதலாவது நிரந்தரக் குடியேறிகள் இங்கு வந்தனர். அன்று முதல் இத்தீவு ஆங்கிலேயர் வசமானது. பின்னர் பிரித்தானியக் குடியேற்ற நாடானது.[9] இக்காலகட்டத்தில், தீவின் தோட்டங்களில் பணிபுரிந்த ஆப்பிரிக்க அடிமைகளின் உழைப்பை நம்பி, இந்தக் குடியேற்ற நாடு ஒரு தோட்டப் பொருளாதாரத்தில் இயங்கியது. இத்தீவில் அடிமை வணிகம் 1807 இல் அடிமை வணிகச் சட்டத்தின் மூலம் தடைசெய்யப்படும் வரை தொடர்ந்தது. 1833 இல் அடிமை ஒழிப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதியில் பார்படோசில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு இறுதி விடுதலை கிடைத்தது.
இத்தீவின் மொத்த மக்கள் தொகை 287,010 ஆகும். இவர்களில் பெரும்பான்மையானோர் ஆப்பிரிக்க வம்சாவழியினர் ஆவர். ஓர் அத்திலாந்திக்குத் தீவாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், பார்படோசு கரிபியனின் ஒரு பகுதியாகமே இது கருதப்பட்டு, அதன் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.[10]
1966 நவம்பர் 30 இல், பார்படோசு ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தை அரசியாக ஏற்றுக் கொண்டு, பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது. 2021 அக்டோபரில், பார்படோசின் முதலாவது குடியரசுத் தலைவராக சான்டிரா மேசன் அறிவிக்கப்பட்டார். 2021 நவம்பர் 30 இல் பார்படோசு ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டு, நாட்டுத் தலைவர் பதவி எலிசபெத் மகாராணியிடம் இருந்து சாண்டிரா மேசனுக்கு வழங்கப்பட்டது.[11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.