வங்காளதேசம் அல்லது வங்கதேசம் (Bangladesh, வங்காள மொழி: বাংলাদেশ) ஒரு தெற்காசிய நாடாகும். இது பண்டைய வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா, மியான்மர் ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும். டாக்கா இதன் தலைநகரமாகும். இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைப் போன்று, இந்நாட்டிலும் வங்காள மொழியே பேசப்படுகிறது.

விரைவான உண்மைகள் வங்காளதேச மக்கள் குடியரசுগণপ্রজাতন্ত্রী বাংলাদেশகணப்பிரஜாதந்திரி பாங்க்லாதேஷ், தலைநகரம் ...
வங்காளதேச மக்கள் குடியரசு
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
கணப்பிரஜாதந்திரி பாங்க்லாதேஷ்
Thumb
கொடி
Thumb
சின்னம்
நாட்டுப்பண்: அமர் சோனர் பங்களா
என் தங்கமான வங்காளம்
Thumb
தலைநகரம்டாக்கா
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)வங்காளம்
மக்கள்வங்காளி / வங்களதேசீ
அரசாங்கம்நாடாளுமன்றக் குடியரசு[1]
 குடியரசுத் தலைவர்
முகமது சஹாபுதீன்
 தலைமை அமைச்சர்
முகமது யூனுஸ்(ஐந்தாவது-ஆவது தலைமை ஆலோசகர்)
 முதன்மை உசாவுதுணை
அப்துல் ஹமீது
விடுதலை 
 கூற்றம்
மார்ச் 26 1971
 வெற்றி நாள்
திசம்பர் 16 1971
பரப்பு
 மொத்தம்
147,570 km2 (56,980 sq mi) (94ஆவது)
 நீர் (%)
7.0
மக்கள் தொகை
 2007 மதிப்பிடு
150,448,340[2] (7-ஆவது)
 அடர்த்தி
1,045/km2 (2,706.5/sq mi) (11-ஆவது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2020IMF[3] மதிப்பீடு
 மொத்தம்
$917.805 பில்லியன் (29-ஆவது)
 தலைவிகிதம்
$5,453 (136vவது)
ஜினி (2000)31.8
மத்திமம்
மமேசு (2007)Increase 0.547
Error: Invalid HDI value · 140-ஆவது
நாணயம்வங்காளத்தேசத் தாக்கா (BDT)
நேர வலயம்ஒ.அ.நே+6 (BDT)
 கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+6 (இல்லை)
அழைப்புக்குறி880
ஐ.எசு.ஓ 3166 குறியீடுBD
இணையக் குறி.bd
  1. Adjusted population, p.4, "Population Census 2001, Preliminary Report". Bangladesh Bureau of Statistics. 2001-08. Archived from the original on 2011-07-06. பார்க்கப்பட்ட நாள் 2008-05-09. {{cite web}}: Check date values in: |date= (help)
மூடு

இந்நாட்டின் எல்லைகள் 1947-ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையின் போது நிறுவப்பட்டது. 1947-ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப்பின், இப்பகுதி கிழக்கு பாக்கிஸ்தான் என்ற பெயரில் பாக்கிஸ்தான் நாட்டின் பகுதியாக‌ இருந்தது. இருப்பினும், இப்பகுதிக்கும் மேற்கு பாக்கிஸ்தான் பகுதிக்கும் இடையிலான தொலைவு சுமார் 1600 கிலோமீட்டர். மேற்கு பாக்கிஸ்தானுக்கும் கிழக்கு பாக்கிஸ்தானுக்கும் இடையான எந்த போக்குவரத்தும் இந்தியாவின் வழியாகவே நடைபெறவேண்டும் என்ற நிலையில், மொழி வேறுபாடு காரணமாகவும், பொருளாதரப் புறக்கணிப்பு காரணமாகவும், கிழக்குப் பாக்கிஸ்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. தனிநாடு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 1971-ஆம் ஆண்டு கிழக்கு பாக்கிஸ்தான் பகுதி இந்தியாவின் துணைக் கொண்டு வங்காளதேச விடுதலைப் போருக்குப் பின் வங்காளத் தேசம் என்ற நாடாக அறிவிக்கப்பட்டது.

இதன்பின், வங்காள தேசம், ஏழ்மை, இயற்கை அழிவுகள், பஞ்சம் ஆகிய பல இன்னல்களை மட்டுமல்லாது, அரசியல் களத்திலும் இராணுவ ஆட்சி, பேச்சுரிமை மறுக்கப்பட்ட நிலை, ஊழல் போன்ற பல துயர்களைக் கடந்து வந்துள்ளது. 1991-ஆம் ஆண்டு மீண்டும் மக்களாட்சி மலர்ந்துள்ள நிலையில் சிறிதளவு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.

வங்காளதேசம் உலகின் எட்டாவது அதிக மக்கட்தொகை கொண்ட நாடாகும். வங்காளதேசக் குடியரசு நாடாளுமன்ற சனநாயக நாடாகும். இதன் நாடாளுமன்றம் ஜாதியோ சங்சத் என அழைக்கப்படுகிறது. இந்நாடு, வளமிக்க கங்கை-பிரமபுத்திரா கழிமுகத்தில் அமைந்துள்ளதோடு, வரலாற்று மற்றும் பல்வேறு கலாசார மரபுரிமைகளையும் கொண்டுள்ளது. ஊழல் மற்றும் வறுமை போன்ற பல்வேறு பாரிய சவால்கள் காணப்பட்டாலும், 1991-இலிருந்து நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும், 1975 உடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருமானமும் இருமடங்காகியுள்ளது. வங்காளதேசம் அடுத்த பதினொரு பொருளாதார நாடுகளுள் ஒன்றாக அறியப்படுவதோடு, SAARC, BIMSTEC, OIC மற்றும் பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றின் உறுப்பினராகவும் விளங்குகிறது.

புவியியல் ரீதியாக நாடு கங்கை பிரமபுத்திரா கழிமுகத்தின் இருபக்கங்களிலும் அமைந்துள்ளது. இதனால், வருடாந்தம் வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது. மேலும் இந்நாடு வறுமை, ஊழல், மிகைமக்கட்தொகை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், வங்காளதேசம் மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் சிறப்பாக முன்னேற்றம் கண்டுள்ளது.[4] மேலும், ஆயுள் எதிர்பார்ப்பை 23 வருடங்களால் உயர்த்திக் கொள்வதிலும், கல்வியில் பால்நிலைச் சமத்துவத்தை அடைவதிலும், மக்கட்தொகை அதிகரிப்பைக் குறைப்பதிலும், தாய்சேய் நலத்தை மேம்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளது.[5][6] நாட்டின் இரு பாரிய நகரங்களான டாக்கா மற்றும் சிட்டகொங் ஆகியவை நாட்டின் அண்மைய வளர்ச்சிக்குப் பாரிய உந்துசக்தியாக விளங்குகின்றன.

Thumb
பங்களாதேஷின் தேசிய நாடாளுமன்ற வளாகத்தின் முன் பார்வை

ஆட்சிப் பிரிவுகள்

வங்காளதேச நாட்டின் நிர்வாக வசதிக்காக 64 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 64 மாவட்டங்கள், 8 கோட்டங்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது.[7]

குல்னா கோட்டத்தில் 10 மாவட்டங்களும், டாக்கா கோட்டத்தில் 13 மாவட்டங்களும், சிட்டகாங் கோட்டத்தில் 11 மாவட்டங்களும், மைமன்சிங் கோட்டத்தில் 4 மாவட்டங்களும், ரங்க்பூர் கோட்டத்தில் 8 மாவட்டங்களும், ராஜசாகி கோட்டத்தில் 8 மாவட்டங்களும், பரிசால் கோட்டத்தில் 6 மாவட்டங்களும் மற்றும் சில்ஹெட் கோட்டத்தில் 4 மாவட்டங்களும் உள்ளது. மாவட்டங்களின் விவரம்:

குல்னா கோட்டம்

1 குல்னா மாவட்டம் 2 ஜெஸ்சூர் மாவட்டம் 3 சத்கீரா மாவட்டம் 4 நராய்ல் மாவட்டம் 5 மெகர்பூர் மாவட்டம் 6 மகுரா மாவட்டம் 7 குஸ்தியா மாவட்டம் 8 சௌதங்கா மாவட்டம் 9 ஜெனிதக் மாவட்டம் 10 பேகர்காட் மாவட்டம்

டாக்கா கோட்டம்

1 கோபால்கஞ்ச் மாவட்டம் 2 டாக்கா மாவட்டம் 3 தங்காயில் மாவட்டம் 4 சரியத்பூர் மாவட்டம் 5 நரசிங்கடி மாவட்டம் 6 நாராயண்கஞ்ச் மாவட்டம் 7 முன்சிகஞ்ச் மாவட்டம் 8 மணிகஞ்ச் மாவட்டம் 9 பரித்பூர் மாவட்டம் 10 மதாரிபூர் மாவட்டம் 11 ராஜ்பாரி மாவட்டம் 12 காஜிபூர் மாவட்டம் 13 கிசோர்கஞ்ச் மாவட்டம்

சிட்டகாங் கோட்டம்

1 நவகாளி மாவட்டம் 2 லெட்சுமிபூர் மாவட்டம் 3 ரங்கமதி மாவட்டம் 4 கொமில்லா மாவட்டம் 5 காக்ஸ் பஜார் மாவட்டம் 6 சிட்டகாங் மாவட்டம் 7 பிரம்மன்பரியா மாவட்டம் 8 சந்திரபூர் மாவட்டம் 9 கக்ராச்சாரி மாவட்டம் 10 பெனி மாவட்டம் 11 பந்தர்பன் மாவட்டம்

மைமன்சிங் கோட்டம்

1 மைமன்சிங் மாவட்டம் 2 செர்பூர் மாவட்டம் 3 நேத்ரோகோனா மாவட்டம் 4 ஜமால்பூர் மாவட்டம்

ரங்க்பூர் கோட்டம்

1 ரங்க்பூர் மாவட்டம் 2 தாகுர்காவ்ன் மாவட்டம் 3 தினஜ்பூர் மாவட்டம் 4 நீல்பமரி மாவட்டம் 5 பஞ்சகர் மாவட்டம் 6 குரிகிராம் மாவட்டம் 7 காய்பாந்தா மாவட்டம் 8 லால்முனிர்காட் மாவட்டம்

ராஜசாகி கோட்டம்

1 ராஜசாகி மாவட்டம் 2 சிராஜ்கஞ்ச் மாவட்டம் 3 பப்னா மாவட்டம் 4 நத்தோர் மாவட்டம் 5 நவகோன் மாவட்டம் 6 சபாய் நவாப்கஞ்ச் மாவட்டம் 7 போக்ரா மாவட்டம் 8 ஜெய்பூர்ஹட் மாவட்டம்

பரிசால் கோட்டம்

1 பிரோஜ்பூர் மாவட்டம் 2 போலா மாவட்டம் 3 பரிசால் மாவட்டம் 4 பர்குனா மாவட்டம் 5 ஜலோகட்டி மாவட்டம் 6 பதுவாகாளி மாவட்டம்

சில்ஹெட் கோட்டம்

1 சில்ஹெட் மாவட்டம் 2 சுனாம்கஞ்ச் மாவட்டம் 3 மௌலிபஜார் மாவட்டம் 4 ஹபிகஞ்ச் மாவட்டம்

வரலாறு

பண்டைக்காலம்

Thumb
வங்காளதேசத்தின் பகர்பூரிலுள்ள சோமாபுர மகாவிகாரை. இது இந்திய உபகண்டத்தில் உள்ள விகாரைகளில் மிகவும் பெரிய விகாரையாகும். இது வங்காளத்தின் தர்மபாலனால் கட்டப்பட்டது.
Thumb
பகர்கட் மசூதி நகரிலுள்ள அறுபது மாட மசூதி. 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது ஐக்கிய நாடுகளின் உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது.

பெரும் வங்காளப் பகுதியிலுள்ள நாகரிகத்தின் எச்சங்கள் நாலாயிரம் வருட பழைமை வாய்ந்தவை.[8] இக்காலப்பகுதியில், திராவிட, திபெத்தோ-பர்ம மற்றும் ஆஸ்திரோ-ஆசிய மக்கள் இப்பகுதிகளில் வாழ்ந்தனர். "பங்க்லா" அல்லது "பெங்கால்" என்ற சொல்லின் சரியான மூலம் அறியப்படவில்லை. இருப்பினும், இப்பகுதிகளில் கி.மு. 1000ம் ஆண்டு காலப்பகுதியில் குடியேறிய திராவிட மொழி பேசும் குழுவான "பாங்"இலிருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[9]

கி.மு. 7ம்நூற்றாண்டிலிருந்து கங்கரிதாய் ராச்சியம் உருவாகியது. இது பின்னர் சிசுநாக வம்சம், நந்தர், மௌரியப் பேரரசு, சுங்கர், சாதவாகனர் மற்றும் கண்வப் பேரரசுகளின் காலப்பகுதியில், பிகாருடன் இணைந்து அப்பேரரசுகளின் கீழ் காணப்பட்டது. கி.பி. 3ம் நூற்றாண்டிலிருந்து 6ம் நூற்றாண்டு வரை குப்தப் பேரரசு மற்றும் ஹர்சப் பேரசின் ஒரு பகுதியாக இருந்தது. அதன் வீழ்ச்சிக்குப் பின், சசாங்கன் எனும் ஆற்றல் மிகு வங்காள தேசத்தவன் ஒரு சிறந்த, குறுகியகால அரசொன்றை நிறுவினான். சிறிதுகால, சர்வாதிகார ஆட்சியின்பின், வங்காள பௌத்த, பால வம்சம் நானூறு வருடங்கள் ஆட்சி புரிந்தது. இதன்பின், சிறிதுகாலம் இந்து சேன வம்சம் ஆட்சி புரிந்தது.

மத்தியகால ஐரோப்பிய புவியியலாளர்கள் கங்கைக் கழிமுகப்பகுதியில், ஒரு சொர்க்கம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இது மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், 16ம் நூற்றாண்டு வரை இந்திய உபகண்டத்திலேயே செல்வச் செழிப்புமிக்க பகுதியாக வங்காளம் காணப்பட்டிருக்கக்கூடும். இப்பகுதியின் ஆரம்பகால வரலாறு, இந்துப் பேரரசுகள், உட்பூசல்கள் மற்றும் இந்து மற்றும் பௌத்த மதங்களுக்கிடையிலான ஆதிக்கப் போட்டி என்பவற்றால் நிரம்பியது.

அராபிய முஸ்லிம் வணிகர்களால் 12ம் நூற்றாண்டளவில் வங்காளப்பகுதியில் இசுலாமிய சமயம் அறிமுகப்படுத்தப்பட்டது. சூஃபி போதகர்கள், மற்றும் அதனையடுத்த முஸ்லிம் ஆட்சி ஆகியவை இப்பகுதி முழுவதும் இசுலாம் பரவ வழி செய்தன.[10] துருக்கிய தளபதியான பக்தியார் கில்ஜி, 1204ல், சேன வம்சத்தின் லக்‌ஷ்மண் சேன் என்பவரைத் தோற்கடித்து, வங்காளத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினார். இப்பகுதி அடுத்த சில நூறு வருடங்களுக்கு பல சுல்தான்களாலும், இந்து அரசர்களாலும், நிலப்பிரபுக்களாலும் (பரோ-புய்யான்கள்) ஆளப்பட்டன. 16ம் நூற்றாண்டளவில், முகலாயப் பேரரசு வங்காளத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, டாக்கா முகலாய நிர்வாகத்தின் முக்கிய நிலையமாக உருவானது. 1517இலிருந்து, கோவாவிலிருந்த போர்த்துக்கீச வியாபாரிகள் வங்காளத்துக்கான கடல்வழியைக் கண்டுபிடித்தனர். 1537ல் மட்டும் அவர்கள் குடியேற அனுமதிக்கப்பட்டதோடு, சிட்டகொங்கில் சுங்கச் சாவடிகள் அமைக்கவும் அனுமதிக்கப்பட்டது. 1577ல், முகலாயப் பேரரசரான அக்பர், நிலையான குடியேற்றங்களை அமைக்கவும், தேவாலயங்கள் அமைக்கவும் போர்த்துக்கீசருக்கு அனுமதி வழங்கினார்.[11] ஐரோப்பிய வணிகர்களின் செல்வாக்கு அதிகரித்து, இறுதியில் 1757 பிளாசிப் போரின் பின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி வங்காளத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.[12] 1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பின், இதன் அதிகாரம் பிரித்தானிய முடியின் கீழ் வந்ததுடன், பிரித்தானிய வைஸ்ராய் இதன் நிர்வாகத்தலைவராக நியமிக்கப்பட்டார்.[13] காலனித்துவ ஆட்சியின்போது, தெற்காசியா முழுவதும் பெரும் பஞ்சங்கள் ஏற்பட்டன. இவற்றுள் 1943ன் வங்காளப் பெரும் பஞ்சம் காரணமாக 3 மில்லியன் பேர் இறந்தனர்.[14]

Thumb
லால்பாக் கோட்டை, 17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில், டாக்காவில் கட்டப்பட்டது.

18ம் நூற்றாண்டில் இந்துப் பேரரசான மராத்தியப் பேரரசு, முகலாயர்களைத் தோற்கடித்ததோடு, 1742க்கும் 1751க்கும் இடையில் வங்காளத்தின் நவாப்பின் கீழிருந்த பகுதிகளையும் அழித்தது. நவாபின் ஆட்சியின் கீழிருந்த வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளின் மீதான மராத்தியப் பேரசின் தொடர் தாக்குதல்களால் வங்காளப் பொருளாதாரம் அழிவடைந்தது. இதனால் மராத்தியப் பேரரசின் தொடர் தாக்குதல்களுக்கு அதனால் முகங்கொடுக்க முடியவில்லை. நவாப் அலி வர்தி கான் மராத்தியப் பேரரசுடன் சமாதான உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொண்டு முழு ஒரிசாவையும், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளையும், மராத்தியப் பேரரசுக்கு அளித்தான். இதற்கு மேலதிகமாக வங்காளத்தின் ஏனைய பகுதிகளிலும் பீகாரிலும் வசூலிக்கப்படும் வரியில், கால்பங்கை திறையாக(சௌத்) அளிக்கவும் ஒப்புக்கொண்டான். இது அண்ணளவாக வருடத்துக்கு, வங்காளத்திலிருந்து 20 லட்சங்களும், பீகாரிலிருந்து 12 லட்சங்களும் ஆகும்.[15][16] பனிபட்டில் முசுலீம் கூட்டுப் படைகளுடனான போரில் மராத்தியப் பேரரசின் தோல்விக்குப்பின் இப்பேரரசு மராத்தியத் தளபதியான மாதோஜி சிந்தியாவிடம் கையளிக்கப்பட்டது. இவர் மீண்டும் வங்காளம் மீது படையெடுத்தார். 1760களில், வங்காளப் பகுதிகளை ஆக்கிரமித்த பிரித்தானிய இந்தியப் பேரரசு, சௌத் வரியை வழங்குவதை நிறுத்திக் கொண்டது. இதனால் வங்காளம் மீதான மராத்தியரின் படையெடுப்பு தொடர்ந்தது. இறுதியில், 1777இலிருந்து 1818 வரை நடைபெற்ற மூன்று ஆங்கில-மராத்தியப் போர்களில் மராத்தியப் பேரரசு பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்டது.

20ம் நூற்றாண்டு

Thumb
டாக்காவிலுள்ள சாகீத் மினார்

1905க்கும் 1911க்கும் இடையில், டாக்காவைத் தலைநகராகக் கொண்டு கிழக்குப் பகுதியொன்றை உருவாக்கும் நிறைவேற்றப்படாத வங்காள மாகாணத்தை இரண்டு பகுதிகளாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.[17] 1947ல் பிரித்தானியப் பேரரசின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சமய அடிப்படையில் வங்காளம் பிரிக்கப்பட்டது. இதன் மேற்குப்பகுதி இந்தியாவுடன் இணைய கிழக்குப்பகுதி (முசுலிம் பெரும்பான்மை) டாக்காவைத் தலைநகராகக் கொண்டு கிழக்கு வங்காளம் (பின்னர் கிழக்குப் பாகிஸ்தான்) எனும் பெயரில், பாகிஸ்தானுடன் இணைந்தது.[18] 1950ல், கிழக்கு வங்காளத்தில் நிலச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மானியமுறை ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டது.[19] பொருளாதார மற்றும் மக்கட்தொகை விகிதாசாரத்தில் கிழக்குப் பகுதி செல்வாக்குச் செலுத்தினாலும், பாகிஸ்தானின் அரசாங்கமும், ராணுவமும், மேற்குப்பகுதியின் உயர் வகுப்பினரின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தது. 1952ன் வங்காள மொழி இயக்கமே கிழக்கு மற்றும் மேற்குக்கிடையிலான முதல் விரிசலாக அமைந்தது.[20] அடுத்த பத்தாண்டுகளில், பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் மத்திய அரசாங்கத்துடனான பிரச்சினைகள் அதிகரிக்கத் தொடங்கின. இக்காலப்பகுதியில், வங்காளி பேசும் மக்களின் அரசியல் குரலாக அவாமி லீக் எழுச்சி பெற்றது. 1960களில், இது சுயாட்சிக்காக கிளர்ச்சியில் ஈடுபட்டது. 1966ல் அதன் தலைவர், சேக் முஜிபுர் ரகுமான் (முஜிப்) சிறையிலிடப்பட்டார். 1969ல், வரலாறு காணாத பிரபல்யமான கிளர்ச்சியின் பின்னர் இவர் விடுவிக்கப்பட்டார். 1970ல், ஒரு பாரிய சூறாவளி கிழக்குப் பாகிஸ்தானின் கடற்கரைப் பகுதியை அழித்ததோடு, ஐந்து லட்சம் பேரையும் கொன்றது.[21] எனினும், மத்திய அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 1970 தேர்தலில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற சேக் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கட்சி[22] ஆட்சியமைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டமையால் வங்காள மக்களின் கோபம் அதிகரித்தது.

முஜிபுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டதைத் தொடர்ந்து, சனாதிபதி யாஹ்யா கான் மற்றும் ராணுவத் தலைவர்கள் ஒப்பரேசன் சேர்ச்லைட்[23] எனப்பட்ட ராணுவ நடவடிக்கையை கிழக்குப் பாகிஸ்தான் மீது நடத்தினர். இதன் மூலம், மார்ச்சு 26, 1971ல், அதிகாலை நேரத்தில், முஜிபுர் ரகுமானைக் கைது செய்தனர். யாஹ்யா கானின் இந்நடவடிக்கை மிகவும் கொடூரமானதாக இருந்ததோடு, போரின்போது இடம்பெற்ற வன்முறைகளால் பலர் இறந்தனர்.[24] இதில் முக்கிய இலக்குகளாக இருந்தோர் அறிஞர்களும் இந்துக்களுமாவர். மேலும், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அகதிகள் அருகிலுள்ள இந்தியாவுக்கு விரட்டப்பட்டனர்.[25] போரின்போது படுகொலை செய்யப்பட்டோர் தொகை முப்பதினாயிரத்திலிருந்து, மூன்று மில்லியன் வரை என மதிப்பிடப்பட்டுள்ளது.[26] ஐக்கிய அமெரிக்காவின் நேரடித் தலையீடு காரணமாக சனவரி 8, 1972ல் முஜிபுர் ரகுமான் விடுதலை செய்யப்பட்டார்.[27]

அவாமி லீக்கின் தலைவர்கள் இந்தியாவின் கல்கத்தாவில் நாடு கடந்த அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டனர். ஏப்ரல் 17, 1971ல், அது கிழக்கு பாகிஸ்தானின் குஸ்தியா மாவட்டத்திலுள்ள மெஹெர்பூரில் முறையாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டது. இதன்படி, தாஜுதீன் அஹமட் முதல் பிரதமராகவும், சையத் நஸ்ருல் இஸ்லாம் தற்காலிக சனாதிபதியாகவும் பதவியேற்றனர்.

Thumb
தேசிய தியாகிகளின் ஞாபகார்த்தச் சின்னம், 1971ன் வங்காளதேச விடுதலைப் போரில் உயிர்நீத்தோர் நினைவாகக் கட்டப்பட்டது.

வங்காளதேச விடுதலைப் போர் ஒன்பது மாதங்கள் நீடித்தது. வங்காளப் படைவீரர்களைக் கொண்ட தளபதி M.A.G. ஒஸ்மானியால் வழிநடத்தப்பட்ட, வங்காள தேசப் படைகள், 11 பகுதிகளாகப் பிரிந்து பாகிஸ்தானியப் படைகளுக்கெதிராக பாரிய கெரில்லாப் போரை தொடுத்தன. இதற்கு உதவியாக, இந்திய ராணுவத்தால் உதவி வழங்கப்பட்ட, மேஜர் ஜெனரல். சுஜித் சிங் உபன் தலைமையிலான, கதெரியா வாகினி, ஹெமாயத் வாகினி ஆகியவற்றைக் கொண்ட முக்தி வாகினி எனும் அமைப்பும் போரில் ஈடுபட்டது. இந்திய ராணுவம் டாகா பகுதியைச் சுற்றி வளைத்ததுடன் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தது. மார்ச் 19, 1972 வரை இந்திய ராணுவம் வங்காளதேசத்தில் தங்கியிருந்தது.

சுதந்திரத்தின் பின், வங்காளதேசம் அவாமி லீக்கால் ஆளப்பட்டது. தேர்தல் நடத்தப்படாமல் முஜிப் பிரதமராக ஆனார். 1973 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், அவாமி லீக் அறுதிப் பெரும்பான்மை பெற்றது. 1973 மற்றும் 1974 காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் பஞ்சம் ஏற்பட்டது.[14] மேலும் 1975ல் முற்பகுதியில், புதிதாக உருவாக்கப்பட்ட BAKSAL கட்சியை மட்டும் கொண்ட ஒருகட்சி சோசலிச ஆட்சியை ஏற்படுத்தினார். ஆகத்து 15, 1975ல், முஜிபும், அவரது குடும்பத்தினரும் இடைநிலை ராணுவத் தலைவர்களால், படுகொலை செய்யப்பட்டனர்.[28] உப- சனாதிபதி கன்டகெர் முஷ்டாக் அஹமட் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். எனினும் முஜிபின் அமைச்சரவையில் பெரிய மாறுதல்கள் ஏற்படவில்லை. நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7, 1975 ஆகிய இருதினங்களில் நடைபெற்ற ராணுவக் கிளர்ச்சிகளைத் தொடர்ந்து, நாட்டின் அதிகாரக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கை காப்பதற்காக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. முஷ்டாக் பதவி விலகியதுடன் நாட்டில் ராணுவ ஆட்சி அமுலாக்கப்பட்டது. புதிய சனாதிபதியாக முதன்மை ராணுவ நிர்வாகியும், நீதிபதியுமாகிய அபு சதம் பதவியேற்றார். இவரது பதில் நிர்வாகிகளாக மூன்று முதன்மை சேவை அதிகாரிகள் செயற்பட்டனர். 1977ல் நீதிபதி சாயெம் பதவி விலகியதைத் தொடர்ந்து, லெப்டினன்ட் ஜெனரல் சியாவுர் ரகுமான் சனாதிபதியாகப் பதவியேற்றார். இவர் பலகட்சி அரசியலை மீண்டும் கொண்டுவந்ததோடு, திறந்த சந்தைப் பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்தினார். மேலும் வங்காளதேச தேசியக் கட்சி எனும் கட்சியையும் உருவாக்கினார். 1981ல் ராணுவ அதிகாரிகளால் சியாவுர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது.[28]

மார்ச்சு 24, 1982ல் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து வங்காளதேசத்தின் அடுத்த ஆட்சியாளராக லெப்டினன்ட் ஜெனரல் ஹொசைன் மொகமட் எர்சாத் பதவியேற்றார். திசம்பர் 6, 1990ல், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்களுடன் மேற்கத்தைய சக்திகளின் (சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட பாரிய கொள்கை மாற்றம்) அழுத்தம் காரணமாக இவர் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார். இதன்பின், வங்காளத்தேசம் நாடாளுமன்ற சனநாயக ஆட்சிக்கு மாறியது. சியாவின் விதவை மனைவியான, காலிதா சியா வங்காளதேச தேசியக் கட்சியை வழிநடத்தி, 1991 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றார். இதன்மூலம், வங்காளதேச வரலாற்றிலேயே முதலாவது பெண் பிரதமரானார். எவ்வாறாயினும், முஜிபின் மகள்களில் ஒருவரான சேக் ஹசினாவால் வழிநடத்தப்பட்ட அவாமி லீக் கட்சி 1996ல் நடைபெற்ற அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றது. 2001ல் நடைபெற்ற தேர்தலில் வங்காளதேச தேசியக் கட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தது.

21ம் நூற்றாண்டு

சனவரி 11, 2007ல், அவாமி லீக்கினால் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பநிலையைத் தொடர்ந்து, வங்காளதேச ராணுவ மற்றும் சிவில் கட்டமைப்புக்கள் ஒரு நடுநிலையான இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஆதரவு வழங்கின. இடைக்கால அரசாங்கமே, அடுத்த தேர்தலை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்டது. நாடு பாரியளவிலான ஊழல்,[29] ஒழுங்கின்மை மற்றும் அரசியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டது. இடைக்கால அரசாங்கம் அரசாங்கத்தின் எல்லா நிலைகளிலும் காணப்பட்ட ஊழலை வேரோடு அழிப்பதை முதன்மையாகக் கொண்டு செயற்பட்டது. இதன்படி, பல குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் ஊழல் முறைகேட்டுக்காக கைதுசெய்யப்பட்டனர். திசம்பர் 29, 2008ல் இடைக்கால அரசாங்கம் நீதியானதும் சுதந்திரமானதுமான ஒரு தேர்தலை நடத்தியது.[30] அவாமி லீக்கின் சேக் ஹசீனா இத்தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்று, சனவரி 6, 2009ல் பிரதமராகப் பதவியேற்றார்.[31]

எல்லை பிரிப்பு

2015 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் தேதி நள்ளிரவு பல நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த எல்லைப் பரிமாற்றம் தீர்க்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்புக்குழு தலைவராக தீப்திமன் சென்குப்தா செயல்பட்டார். வங்கதேச நிலப்பகுதியில் வாழும் 14,000 மக்கள் முதல் 51,000 பேருக்கு இந்திய குடியுரிமை கொடுக்கப்பட்டது. அதேபோல் வங்க தேசப்பகுதில் அமைந்துள்ள இந்தியப்பகுதில் குடியிருக்கும் 1,000 பேர் வங்க தேச குடியுரிமை பெற்றார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் 17,160 ஏக்கர் நிலம் வங்காள தேசத்திற்கும்,7,110 ஏக்கர் வங்காளப்பகுதி இந்தியாவிற்கும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.[32]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.