From Wikipedia, the free encyclopedia
நிகழ்த்து கலை (performing art) என்பது அரங்கொன்றில் கலைஞர், ஒருவர் அல்லது பலர், தமது முகம், உடல் அல்லது இருப்பு கொண்டு நிகழ்த்துவதற்குரியதான கலை வடிவம் ஆகும். இது ஓவியம், சிலைவடிப்பு, சிற்பம் மற்றும் எழுத்து போன்ற பிற ஊடகங்களில் தமது கலைத்திறமையை வடிப்பதிலிருந்து வேறுபட்டதாகும். இத்தகைய பாகுபாடு ஆங்கில வழக்கில் 1711 முதல் இருந்து வருகிறது. இது பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாயினும் பார்வையாளர்கள் முன்னிலையில் நேரடியாக நிகழ்த்திக் காட்டும் கலைவடிவையே குறிக்கும்.[1]
நுண்மையான உறுப்புகளையும், நுண்ணிய திறன்களையும், நுண்ணிய உணர்வுகளையும் கொண்டது நுண்கலை. கவிதை, இசை, ஆடல், ஓவியம் முதலியன இதனுள் அடங்கும். ஒரு கலைஞனின் நுண்கலை வடிவின் சிறப்புக் கூறுகள் பார்வையாளர்களின் மத்தியில் வெளிப்படுத்தப்படும்போது அது நிகழ்த்து கலையாக வடிவம் கொள்கிறதெனலாம். பல்வேறு நிகழ்த்து கலைகள் நெகிழ்தன்மை கொண்ட கலைகளாக அறியப்படுகின்றன. அரங்கினில் நிகழ்த்தப்படும் கலைவடிவங்கள் இவ்வகையில் அடங்குகின்றன. நடனம் நவீன நடன சகாப்தத்தில் நெகிழ்தன்மை கொண்ட கலையாகவே சில நேரங்களில் குறிப்பிடப்படுகிறது. நிகழ்த்து கலை என்பது கீழ்க்காண்பவைகளை உள்ளடக்கிய ஒன்றாகும்.
பார்வையாளர்களின் முன்னால் கலைகளை நிகழ்த்திக் காட்டும் நடிகர் அல்லது கலைஞர் 'நிகழ்த்து கலைஞர்' எனப்படுகிறார். நடிகர், நகைச்சுவையாளர், நடனமாடுவோர், மாயவித்தைக்காரர், இசைக்கலைஞர், பாடகர், பலகுரல் கலைஞர், பேச்சாளர் போன்றோர் இவ்வகையினர் ஆவர்.கலை நிகழ்த்துவோர் ஏற்கும் பாத்திரத்திற்கேற்ப தனது உடல் மொழி, உடை, ஒப்பனை இன்னபிறவற்றை அமைத்துக் கொள்வர். கலை நிகழ்த்துவோர் மட்டுமன்றி அவர்களுக்குப் பக்கத் துணையாயிருக்கும் பாடலாசிரியர், மேடை அமைப்பாளர் ஆகியோரும் நிகழ்த்துகலைக்குத் தேவை.[2]
அரங்கம் என்பது கலைவடிவின் ஓர் அங்கமாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓர் கலைஞர் தனது நுண்கலைத்திறன் மூலம் கற்பனையான ஒரு நிகழ்வை உயிரோட்டமுள்ளதாக அங்கிருக்கும் பார்வையாளர்களின் முன்னர் அரங்கேற்றும் இடமாகும்.[3] நடிப்பு, பார்வையாளர்களின் முன் கதையை வெளிப்படுத்தும் திறன், பேச்சு, குறிப்பு, இசை, நடனம், ஒலி மற்றும் காட்சிக்கலவை ஆகியவையும் நிகழ்த்துகலையின் முக்கிய அங்கங்களாகும். இவற்றில் ஏதேனும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவைகள் நிகழ்த்து கலைக் கூறுகளாகும். மேலும் கூடுதலாக நாடகங்களின் நிலையான பாணி கொண்ட கதைவசனங்களையும் கொள்ளலாம். இவற்றுடன் கூட்டாக அரங்கு என்பது நிகழ்த்து கலையின் ஓர் முக்கிய அங்கமாக அரங்கம் அமைகிறது. இசையரங்கு, ஓபரா, பாலே நடன அரங்கு, மாயவித்தை அரங்கு, இந்திய பரத நாட்டிய அரங்கம், நகைச்சுவையரங்கம், தற்காலிக அரங்கம், நிலையான அரங்கம், நவீன அரங்கமென நிகழ்த்தும் கலைக்கேற்ப அரங்கங்கள் வடிவம் கொள்கின்றன. சில நேரங்களில் தெருவோரங்களில் அல்லது தெருக்கள் கூடுமிடங்களில் நிகழ்த்து கலைகளில் ஏதேனுமொன்று நிகழ்த்தப்பட்டால் அவ்விடமே அரங்கமாக அமைகிறது.
நடனம் என்பதைக் குறிக்க ஆங்கிலத்தில் 'டான்ஸ்' என்ற பழம் பிரெஞ்சுச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இது சமூகம் அல்லது ஆன்மீகம் அல்லது நிகழ்த்திக் காட்டப்படும் கலைவடிவங்களில் வழங்கப்படும் அல்லது வெளிப்படும் மனித இயக்கத்தினை அல்லது அசைவினைப் பொதுவாகக் குறிக்கப் பயன்படும் 'டான்சியர்' என்ற பிரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்டதாகும்.
மேலும் நடனம் என்பது மனிதர்களுக்கிடையே அல்லது விலங்குகளுக்கிடையே வாய்மொழியாக வெளிப்படுத்த முடியாதவைகளை உடல்மொழியின் மூலம் வெளிப்படுத்துவதற்காகப் பயன்படும் ஒரு வழிமுறையாகும். நடன அமைப்பு(Choreography) என்பது நடனத்தைக் கரு அல்லது கதைக்கேற்ப அமைப்பதைக் குறிக்கும். இவ்விதம் நடனம் அமைத்துத் தருபவர் நடன அமைப்பாளர் எனப்படுவார்.
நடனம் என்பதன் வரையறையானது, சமூகம், கலாச்சாரம், அழகியல், கலை, தார்மீக நெறிமுறைகள் மற்றும் சில வாழ்வியல் இயக்கங்கள் ஆகிவற்றைச் சார்ந்தே அமைகின்றது. சில நாட்டுப்புற நடனங்கள் முறைப்படுத்தப்பட்டு, சில கலை நுணுக்கத் திறன் நுட்பங்கள் இணைக்கப்பட்டு நடனங்களாகின்றன. எடுத்துக்காட்டாகப் பாலே நடனத்தைக் குறிப்பிடலாம். விளையாட்டுகளில் ஜிம்னாஸ்டிக், சறுக்கு விளையாட்டு, நடனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட நீச்சல் ஆகியவையும் நடன வகையுள் அடங்கும். சில ஒழுங்குகளுடன் கூடிய தற்காப்புக் கலைகளான சிலம்பம், கடா போன்றவையும் சில நேரங்களில் நடனத்துடன் ஒப்பிடப்படுகின்றன.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் செவ்வியல் காலத்தில் கிரேக்கத்தில் நிகழ்த்து கலை தொடங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது [4]. சாஃப்போக்ளீசு என்ற துயரக் கவியெழுதும் கவிஞனால் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் சில நேரங்களில் நடனத்துடன் கூடிய கவிதை வடிவங்களைத் தந்தார். பின்னர் வந்த காலங்களில் இது நகைச்சுவையுடன் கூடியதாகப் பரவலாக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டது. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் வரலாற்றில் கருப்புகாலம் எனப்பட்ட காலங்களில் பெரும்பாலும் இக்கலை முடிவுக்கு வந்ததெனக் கூறலாம். பின்னர் 9ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இக்கலையானது ரோமன் கத்தோலிக்கச் சபையினரால் சில வரையறைகளுக்குட்படுத்தப்பட்டுப் புனித நாட்கள் அல்லது சில முக்கிய நிகழ்வுகளில் இது நிகழ்த்தப்பட்டது.[5]
பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்த்துகலையானது மற்ற கலை வடிவங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுப் புத்துணர்வு பெற்றது. இத்தாலியில் தொடங்கிய இதன் மறுமலர்ச்சி ஐரோப்பாவெங்கும் பரவியது. இதன் கூறுகள் சில நடனங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுப் புதிய நடன வடிவங்கள் தோற்றம் பெற்றன. 1581 இல 'டொமினிக்கோ டெ பியாசின்சா'என்பவர் முதன் முதலாக நடனம் என்ற சொல்லுக்குப் பதிலாகப் பாலே என்ற சொல்லாட்சியினைப் பயன்படுத்தினார். இதன்பிறகு பாலே நடனம் முறையாகக் கற்பிக்கப்பட்டது.[6]
பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் முன் முயற்சியின்றித் தயார் செய்யும் இக்கலை ஐரோப்பாவில் மிகவும் புகழ்பெற்றது. இக்கால கட்டத்தில் இங்கிலாந்தில் இசை, நடனம், நவீன உடையலங்காரங்களுடன் அரங்குகளில் நிகழ்த்திக்காட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வில்லியம் ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவ்வாறு முறைப்படுத்தப்பட்ட நிகழ்த்து கலையானது வளர்ச்சியடைந்தது.
1597 களில் முதன் முறையாக ஓபெரா எனப்படும் நிகழ்த்து கலை உருவாக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டு முழுவதும் ஓபெரா பெரும்பாலும் ஐரோப்பாவில் பிரபுத்துவம் கொண்டோருக்கான ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக நிகழ்த்தப்பட்டது. பின்னர் அது நகரங்களில் வாழும் மிகப்பரவலான மக்கள் மத்தியில் ஐரோப்பா முழுவதும் பரவியது.
பதினேழாம் நூற்றாண்டில் இத்தாலியில் புராசீனியம் வளைவுகள் கொண்ட பாரம்பரிய வடிவமைப்புடைய அரங்குகள் அமைக்கப்பட்டன. இவ்வடிவுடைய அரங்கங்களே இன்றளவிலும் உள்ளன. இதற்கிடையில் இங்கிலாந்தில் பூரித்தான்கள் நடிப்புக்குத் தடை விதித்தனர். இதனால் 1660 வரை நிகழ்த்துகலைகளுக்குத் தடை நீடித்தது. அதன் பிறகு பிரெஞ்சு மற்றும் ஆங்கில நாடகங்களில் பெண்கள் பங்கேற்று நடிக்கத் துவங்கினார்கள். பிரான்சில் பதினேழாம் நூற்றாண்டுகளில் நடனக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதே நேரத்தில் அமெரிக்கக் காலனி நாடுகளில் முதல் முதலாக நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன.
பதினெட்டாம் நூற்றாண்டில் ஓபெரா எனப்படும் இசை நாடகங்கள் உருவாக்கம் பெற்று அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வகை நாடகங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. மொசார்ட், தி மேரியேஜ் ஆப் ஃபிகாரோ, டான் கியோவணி ஆகியவை பதினெட்டாம் நூற்றாண்டில் குறிப்பிடத் தக்க ஓபெரா நாடகங்களாகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லுட்விக் வான் பீத்தோவன், ரொமான்டிக் மூவ்மெண்ட் ஆகியவை முதன் முதலாக மிகப்பிரம்மாண்ட அளவில் உருவாக்கம் பெற்ற இசை நாடகங்களாகும். இருபதாம் நூற்றாண்டில் ரிச்சர்ட் வானரின் சில இசை நாடகங்கள கலையில் முழுவடிவமாகக் கருதப்பட்டன.
பத்தொன்பதாம் நூற்றாண்டினைப் பொதுவாக நிகழ்த்து கலையின் வளர்ச்சிக் காலமாகக் கொள்ளலாம். சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளிலும், தொழினுட்பத்திலும் இக்கலைகள் வளர்ச்சிபெற்றதெனலாம். திரையரங்குகளில் வாயுவிளக்குகளின் பயன்பாடு, கேலி நாடகங்கள், பாடியபடியே ஆடுதல், பல்வேறுபட்ட திரையரங்குகள், பாலே நடனம், ஆண்களே நிகழ்த்திக்கொண்டிருந்த இவ்வித கலைகளில் பெண்களும் ஈடுபட்டு முன்னேறியமை ஆகியவற்றினை இதற்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாலே நடனத்திற்கான சில விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் தோன்றியதால் நவீன நடனங்கள் தோற்றம் பெற்றன.இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'கான்ஸ்டண்டைன் ஸ்டானிச்லாவ்ஸ்கி' என்பவர் சில நவீன முறைகளைப் புகுத்தி நடிப்பில் ஒரு புரட்சியைத் தோற்றுவித்தார். திரைகளிலும் மேடைகளிலும் நடிக்கும் நடிகர்களிடம் இதன் தாக்கம் இன்றுவரை காணப்படுகிறது. இக்காலத்தில் மேடை நாடகங்களில் தோன்றும் பொருட்களின் அல்லது நடிகர்களின் மீது ஒளியைப் பாய்ச்சும் உத்தியும் புனைவுகள் எதுவுமற்ற உண்மைச் சம்பவங்களைக் கூறும் நாடகங்களும் மேடைகளில் அரங்கேற்றப்பட்டன.
1909-1929 களில் செர்ஜி டியாகிலேவ் என்பவரால் புதிய நடன உத்திகள் புகுத்தப்பட்டு தோற்றம்பெற்ற ரூசேஸ் பாலே நடனத்தால் நிகழ்த்துகலைகளில் ஒரு புரட்சி ஏற்பட்டது. முக்கியமாக நடன வடிவமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள், அரங்க வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியால் இக்கலை புத்துணர்ச்சியும் புதுவாழ்வும் பெற்றது. இதனால் மேற்கத்திய உலகில் பாலே நடனம் மட்டுமல்லாமல் பிற நிகழ்த்துகலைகளும் பரவலாக்கப்பட்டதெனலாம்.
தாமஸ் ஆல்வா எடிசன் அசையும் படத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டறிந்தார். இது ஹாலிவுட்டில் திரைப்படத் தொழில் வளர்ச்சிக்ககுக் காரணமாக அமைந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் இருபத்தொன்றாம் நூற்றாண்டு வரை இன்றளவும் திரைப்படங்கள் நிகழ்த்துகலைகளில் ஒரு முக்கிய இடத்தை ஆக்கிரமித்துள்ளன எனலாம்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 'ரிதம் அன்ட் புளூஸ்' எனப்பட்ட துள்ளலுடன் கூடிய ஆப்பிரிக்க-அமெரிக்க பாரம்பரிய இசையானது மிகப்பரந்த அளவில் உலகெங்கும் புகழ்பெற்றது. இது இசையில் ஒரு புதிய பாணியைத் தோற்றுவித்தது, 1930 களில் 'ஜீன் ரொசென்தல்' மேடைகளில் நவீன ஒளி வடிவத்தை அறிமுகப்படுத்தினார். இது மேடையில் இயற்கையாகத் தோன்றும் ஒளியை மாற்றிப் புதிய உத்திகளைத் தந்தது. ஐக்கிய அமெரிக்காவின் பிராடுவே அரங்கு இதனால் அமெரிக்காவின் ஒரு முக்கிய நினைவுச்சின்னமாகக் கருதப்பட்டது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மேற்கத்திய உலகில் பாலே, ஓபெரா ஆகிய கலை வடிவங்கள் எழுச்சி பெற்று உயர்ந்த இடத்தைப் பெற்றன. 1960 களில் நிகழ்த்துகலைகளில் நவீனத்துவம் புகுத்தப்பட்டு பேரளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1950 களில் ராக் அன்ட் ரோல், ரிதம் அன்ட் புளூஸ் ஆகியவை இசையுலகில் அசைக்கமுடியாத பொழுதுபோக்கு இசைகளாக மாறின. இதன் பின்னர் பல்வேறு இசைவடிவங்கள் உருவாக்கப்பட்டு அனைத்துத் தரப்பு மக்களும் கேட்டு இரசிக்கும்படியாக மாறியது.
பண்டைய எகிப்திய நாகரிகத்தில் கி.மு. 2000 முதலே அரங்க நிகழ்வுகள் பதியப் பட்டு வந்துள்ளது. இந்நாகரிகத்தில் திருவிழாக் காலங்களில் 'ஓசிரிஸ்' எனப்படும் கடவுளின் வரலாறு நாடகமாக நடித்துக் காண்பிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இதனால் நாடகங்களுக்கும் சமயங்களுக்கும் உள்ள நீண்ட கால உறவினை இதன் மூலம் அறியலாம்.
மத்திய இசுலாமிய நாடுகளில் பொம்மலாட்டம் எனப்பட்ட நிகழ்த்துகலை வடிவங்கள் மிகம் புகழ் பெற்றிருந்தன. கைகளில் பொம்மையை வைத்து ஆட்டும் கைப்பாவைக் கூத்து திரையில் பின்புறம் பொம்மைகளை வைத்து ஆட்டும் 'நிழற்பாவைக் கூத்து பொம்மலாட்ட பொம்மைத் தயாரிப்பு மற்றும் ' தாஜியா என அழைக்கப்பட்ட நேரலை உணர்ச்சி மிகு நாடகங்கள் புகழ்பெற்றிருந்தன.[7]இசுலாமிய வரலாற்று நாயகர்களைப் பற்றிய தாஜியா நாடகங்கள் மீண்டும் மீண்டும் பலமுறை நடத்தப்பட்டன. குறிப்பாக ஷியா இசுலாமிய நாடகங்கள் ஷாகீத், தியாகமே உருவான அலியின் மகன்களாகிய ஹசன் இபின் அலி, ஹுசைன் இபின் அலி ஆகியோரைப் பற்றிய வரலாற்றினைக் கொண்டதாகவே இருந்தன. மத்திய இசுலாமிய நீதி இலக்கியங்களில் அகார்ஜா' எனப்படும் மத சார்பற்ற நாடகங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆயினும் இவை பொம்மலாட்டம் மற்றும் தாஜியா நாடகங்களை விட மிகக் குறைந்த அளவே நிகழ்த்தப்பட்டன.[8]
ஈரானில் நிகழ்த்து கலைகள் அரங்குகளில் பல்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்பட்டன. 'நகாலி' எனப்படும் கதை கூறுதல், ருஹவுசி, ஷியா-பாசி, பர்தேகானி, மரெகெ கிரி(வெறும் கரங்களாள் கல்லுடைத்தல், தோள்களால் சங்கிலியை அறுத்தல், பாம்புகளைக் கொண்டு வித்தைக் காட்டுதல் முதலிய நிகழ்த்து கலைகள் மரெகெ கிரி என்றழைக்கப்படுகின்றன) ஆகியன அவற்றுள் சிலவாகும்[7].
கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு இந்தியாவில் வேதகால மக்களின் மத நம்பிக்கைகளே அக்கால நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நாடகங்களின் ஒரு முக்கியக் கூறாக இடம்பெற்றிருந்தது. இந்த நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் அம்மக்களின் நடனம், உணவு, மத நம்பிக்கை மற்றும் அன்றாட வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தன. இதுவே பின்னர் வளர்ச்சி பெற்ற செவ்வியல் கலைகளிலும் பிரதி பலித்தது. இந்தோ-ஆரியப் பழங்குடியினர் மத்தியில் பரவியிருந்த சில சமய நம்பிக்கைகள் அவர்களின் கலைகளில் வெளிப்பட்டதாகப் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர்களான டி.டி. கோசாம்பி, தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, ஆத்ய ரங்காச்சார்யா ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்களுள் சிலர் விலங்குகளைப் போலவும் சிலர் வேட்டைக்காரர்கள் போலவும் சித்தரித்துக் கொண்டனர். அவர்கள் ஆடு, எருமை, மான், குரங்கு போன்ற பாலூட்டிகளாகப் பாவனை செய்து கொண்டும் அவர்களை வேட்டைக்காரர்கள் துரத்துவது போலவும் நடித்துள்ளனர்.[9]
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு- இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பரதமுனி[10] எழுதிய பரத நாட்டிய சாஸ்திரம் இந்தியாவில் நாடகம், நடனம், நடிப்பு, மற்றும் இசை ஆகியவற்றை ஆய்வு செய்து எழுதப்பட்ட நூலாகும்.[11] இந்து இந்திய நிகழ்த்து கலைகளின் இலக்கணமாகத் திகழ்கிறது. அரிஸ்டாட்டில் எழுதிய பொயடிக்ஸ் என்ற நூலுடன் ஒப்பிடப்படுகிறது. பரதமுனி 'இந்திய நாடகக் கலையில் தந்தை' என அழைக்கப்படுகிறார். இவருடைய நாட்டிய சாஸ்திரம் என்ற நூல் ஒரு நாடகத்தின் முறையான விதிமுறைகளுடன் கூடிய கலை நுணுக்கங்களைப் பற்றிய விரிவான ஆய்வின் ஒரு முதல் முயற்சியாக அமைகிறது. ஒரு நாடகத்தில் என்ன அமைய வேண்டும் என்பதை விட ஒரு நாடகத்தை எவ்வாறு சிறந்த முறையில் சித்தரிக்கலாம் என அந்நூல் எடுத்தியம்புகிறது. பரத முனியின் கூற்றுப்படி ஒரு நாடகம் என்பது மனிதன் மற்றும் அவனுடைய செயல்பாடுகள்(லோக விருத்தி) போலச் செய்தல்முறையில் நாடகத்தில் அமைய வேண்டும். மனிதன் மற்றும் அவனுடைய செயல்பாடுகள் அரங்குகளில் மதிப்பிடத் தக்க வகையில் அமைய வேண்டும். நாடகம் என்பது சம்ஸ்கிருதத்தில் ரூபகா எனக் குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் 'சித்தரித்தல்' என்பதாகும்.
இந்திய இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகியவை இந்தியாவில் உருவான முதல் நாடகங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவ்விதிகாசங்கள் இன்றளவும் இந்திய நாடகக் கலைகளுக்கு உத்வேகம் அளிக்கின்றன. இவ்விதிகாசகங்களில் கூறப்பட்டுள்ள கதைகள் மற்றும் கிளைக்கதைகள் இன்றைய நாடகங்களின் கருவாகத் தொடந்து வருகின்றன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த 'பாசா' என்பவரது நாடகங்களுக்கு இராமாயண மகாபாரத இதிகாசங்களே பெரிதும் உத்வேகம் அளித்துள்ளன.
கி.மு. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த காளிதாசர் இந்தியாவின் சிறந்த நாடகாசிரியராகக் கருதப்படுகிறார்[12]. மாளவிக்காக்னி மித்ரம்(மாளவிகாவும் அக்னிமித்ரரும்), விக்ரமூர்வசியா(விக்ரமாதித்யனுக்கும் ஊர்வசியும்), சாகுந்தலம் ரகுவம்சம்ஆகியன இவரது புகழ்பெற்ற இன்பியல் நாடகமாகும். இதில் சாகுந்தலம் என்பது மகாபாரததில் வரும் ஒரு புகழ்பெற்ற கிளைக்கதையாகும். இநாடகம் ஆங்கிலம் மற்றும் ஜெர்மனி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாசாவுடன் ஒப்பிடுகையில் காளிதாசரை ஒரு சிறந்த நாடகாசிரியர் என்றே கூறலாம்.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த 'பாவாபூதி' என்பவர் ஒரு சிறந்த நாடகாசிரியராக அறியப்படுகிறார். மாலதி-மாதவன், மகாவீரசரித்திரம், உத்தர ராமசரித்திரம் ஆகியன இவரது படைப்புகளில் குறிப்பிடத் தக்கன. இவற்றில் பின்னிரண்டும் ஒன்றுக்கொண்டு தொடர்புடைய, இராமாயணக் கதையைத் தழுவிய நாடகங்களாகும். 606-648 களில் இந்தியாவின் தலைசிறந்த மன்னனாக விளங்கிய ஹர்ஷவர்த்தனன் நகைச்சுவை நாடகமான 'ரதனாவளி', 'பிரியதர்ஷிகா', புத்தசமய நாடகமான 'நாகநந்தனா' ஆகிய மூன்று நாடகங்களை எழுதியுள்ளார். இடைக்கால இந்தியாவில் நிறைய நாடகங்கள் தோற்றம் பெற்று புத்துயிர் கொண்டன எனலாம்.
இந்தியாவில் பல நிகழ்த்து கலைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக மணிப்புரி, கதக், ஒடிசி, பரதநாட்டியம், மோகினியாட்டம், கதகளி ஆகிய ஏழும் செவ்வியல் நடனங்களாகப் புகழ்பெற்றவையாகும். குறிப்பாகத் தென்னிந்தியாவில் கேரளாவில், கதகளி, சாக்கைக் கூத்துஆகியனவும், ஆந்திராவில் குச்சுப்புடி, தமிழகத்தில் பரத நாட்டியம், தெருக்கூத்து, கரகாட்டம் போன்ற கலைகளும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இக்கலைகளில் புகழ்பெற்ற கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.[13][14]
சீனாவில் கி.மு.1500 களின் தொடக்க காலத்தில் சாங் வமிச காலத்தில் சீனர்கள் இசை மற்றும் கழைக்கூத்து போன்ற நிகழ்த்துகலைகளை பொழுதுபோக்கிற்காக நிகழ்த்திய குறிப்புகள் உள்ளன. டாங் வமிசம் ஆயிரம் பொழுதுபோக்குகளின் காலம் எனச் சிலசமயங்களில் அறியப்படுகிறது. இச்சகாப்தத்தில் டாங் வமிச அரசர் 'யுவான்சாங்' சீனாவில் நடிப்புக்காக ஒரு பள்ளியை நிறுவினார்.[15] 'பியர் கார்டன் என்றழைக்கப்பட்ட இப்பள்ளி[15] நாடகம் குறிப்பாக இசையைப் பிரதானமாகக் கொண்ட நடிப்புக்கலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.[16]
ஹான் வமிச காலத்தில் முதன் முதலாக அரங்குகளில் நிழற்பாவைக் கூத்து என்ற நிகழ்த்து கலை சீனாவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இந்நிழற்பாவைக் கூத்து இரு வேறுபட்ட வடிவங்களில் நிகழ்த்தப்பட்டன. அவை தென்கண்டனீயக் கலை, வடபீகிங் கலை ஆகியனவாகும். இவ்விரண்டு வடிவங்களும் பொம்மைகள் உருவாக்குதல், இயக்குதல் ஆகியவற்றில் மாறுபட்டவைகளாகும். இரண்டும் சாகசங்களும் கற்பனைகளும் நிறைந்த ஒரு பொதுவான பாணியில் நிகழ்த்தப்பட்டன.[17] அரிதாக இவை அரசியல் பிரசாரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டன. கண்டனீய பொம்மைகள் அளவில் பெரியவை. அடர்ந்த நிழல்களை உருவாக்குவதற்காக இவை தடித்த தோல்களால் செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட சில வண்ணங்களை அடையாளத்திற்காகப் பயன்படுத்துகின்றனர். கருப்பு நேர்மையையும், சிவப்பு வண்ணம் வலிமையையும் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. கண்டனீய பொம்மைகளின் தலைப்பகுதியில் கம்பிகள் செங்குத்தாக இணைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. அதனால் இவை இயக்கப்பட்டு நிழல்கள் உருவாக்கப்படும்போது பார்வையாளர்களின் கண்களுக்கு இக்கம்பிகள் தெரிவதில்லை.
பீகிங்ஸ் பொம்மைகள் சிறியனவாகவும் மிகவும் நேர்த்தியாகவும் தயாரிக்கப்படுவன. இவை மெல்லிய தோலால் ஒளிபுகும் வகையில் உருவாக்கப்படுகின்றன.[18] வழக்கமாகக் கழுதையில் அடிவயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட தோலால் செய்யப்படுகின்றன. வண்ணமயமான நிழல்களை உருவாக்குவதற்காக இவற்றுக்குத் துடிப்பான நிறங்களில் வண்ணமடிக்கப்படுகிறது. மிகவும் மெல்லிய ஒரு கம்பியின் மூலம் பொம்மைகள் இயக்கப்படுகின்றன. இவை பொம்மையின் கழுத்துப்பகுதியில் பொம்மைகளுக்கு இணையாகக் காலர் மூலம் 90° க்கு இணைக்கப்படுவதால் எளிதாக இயக்க முடிகிறது. எனவே இவை நிழல்களை உருவாக்கும்போது பார்வையாளர்களின் கண்களுக்குப் புலப்படுமாயினும் பொம்மைகளின் நிழல்களில் எந்த விதமான இடையூறாகவும் இராது. பொம்மைகளின் கழுத்துப்பகுதியில் இவை இணைக்கப்படுவதால் ஒரே உடலில் பலவேறு தலைப்பகுதியை இணைத்துப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இத்தலைகள் பயன்படுத்தப் படாத நேரங்களில் அவை ஒரு மெல்லிய மஸ்லின் துணியால் செய்யப்பட்ட புத்தகம் போன்ற அமைப்பிலோ துணியால் செய்யப்பட்ட பெட்டியிலோ பாதுகாக்கப்படுகின்றன. பொம்மைகளின் தலைகள் எப்பொழுதும் இரவில் தனியாகக் கழற்றி வைக்கப்படுகின்றன, ஏனெனில் பொம்மைகளை அப்படியே விட்டுவிட்டால் அவை இரவில் உயிர்பெற்று எழுந்துவிடும் என்பது சீனர்களின் நம்பிக்கையாகும். இன்னும் சிலர் இப்பொம்மைகள் மீண்டும் உயிர்பெற்று வராமலிருக்கும் பொருட்டு அதன் தலைகளை ஓரிடத்திலும் அதன் உடல்களைத் தொலைவில் உள்ள மற்றோரிடத்திலும் பாதுகாத்து வைக்கின்றனர்.
பதினோறாம் நூற்றாண்டில் நிழற்பாவைக் கூத்தானது சீனாவில் கலைகளின் உச்ச நிலையை அடைந்து அரசாங்கத்தின் ஓர் இன்றியமையாதக் கருவியாக மாறியது. சாங் வமிச காலத்தில் கழைக்கூத்து வித்தைகளும், இசையும் புகழ்பெற்றிருந்தன. யுவான் வமிச ஆட்சியில் இவை மேலும் வளர்ச்சியடைந்தன. இக்காலத்தில் இவை ஐந்து அல்லது ஆறு கலையமைப்புகளுடன் அதிநவீனப்படுத்தப்பட்டது. யுவான் நாடகம் சீனா முழுவதும் பரவி அதன் பிராந்தியக் கலைகளுடன் இணைந்து எண்ணற்ற வடிவங்களில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. பீகிங் ஓபரா என அறியப்படும் இன்றளவும் புகழ்பெற்ற நிகழ்த்துகலை இவற்றுள் ஒன்றாகும்.[19]
தாய்லாந்தில் நிகழ்த்துகலையானது இடைக்காலத்தில் அதன் பாரம்பரிய வடிவங்களுடன் இந்தியக் காப்பியங்களை அடிப்படையாகக் கொண்டு மேடை நாடகமாக உருப்பெற்றதெனலாம். தாய்லாந்தின் தேசியக் காப்பியமாக ராமகீன் என்பது இந்திய இதிகாசமான இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இது இன்றளவும் தாய்லாந்தில் மிகவும் புகழ்பெற்றதாகும்
கம்போடியாவின் பழைமையான தலைநகரமான அங்கோர் வாட்டில் உள்ள ஆலயத்தில் இந்திய இதிகாசமான இராமாயணம், மகாபாரதம் ஆகிய காப்பிய நிகழ்வுகள் அவ்வாலயத்தின் சுவர்களிலும் அதன் வளாகத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று நினைவுச் சின்னங்கள் இந்தோனேசியாவின் போராபுதூரிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.[20]
பதினான்காம் நூற்றாண்டில் ஜப்பானில் சிறு மற்றும் மோசமான நகைச்சுவை நிகழ்வுகளை நடத்துவதற்காகச் சிறு நாடக நிறுவனங்கள் இருந்தன. இந்நிறுவனங்கள் ஒன்றின் இயக்குநராக இருந்த 'கான் அமி'(1333-1384) என்பவரது மகன் 'ஜிஅமி மொட்டோக்கியோ' (1358-1443) என்பவர் ஒரு மிகச்சிறந்த குழந்தை நட்சத்திரமாகக் கருதப்படுகிறார். கான் அமியினுடைய நிறுவனமானது ஜப்பானின் சோகன் எனப்படும் பாரம்பரியப் படைத்தளபதியான 'அஷிககா யோஷிமிட்சு' (1358-1408)[21] என்பவருக்காக நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது.[22] அச்சமயத்தில் அவர் ஜிஅமியிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க தனது கலைக்கான ஒரு கல்விச் சபையை அவர் நிறுவினார். தனது தந்தைக்குப் பிறகு ஜிஅமி இக்கலையை தனக்கே உரித்தான ஒரு தனியான பாணியில் நிகழ்த்தி வந்தார்.[23] இதுவே இன்று ஜப்பானில் 'நோஹ்'அல்லது நொஹாகு[24] என்றழைக்கப்படும் கலையாகும்.[25] இது முகபாவனைகளில் நடிப்புக்கலையை வெளிப்படுத்தும் பாண்டமைம் எனப்படும் கலையும் இசையுக்திகளும் கலந்து வழங்கப்படும் பல நூறாண்டுகளாகப் புகழ்பெற்ற ஜப்பானிய நிகழ்த்துகலையாகும்.[23]
ஜப்பானில் நீண்ட காலத்துக்குப் பிறகு உள்நாட்டுப் போர்களுக்கும், அரசியல் சீர்குலைவுகளுக்கும் முடிவுகட்டி ஒன்றுபட்ட ஜப்பான் உருவாகப் படைத்தளபதி டொகுகவாஇயாசு(1600-1668)காரணமாக அமைந்தார்.[23] ஜப்பானில் தீவிரமாக வளர்ந்துவரும் கிறிஸ்துவ மததிற்கு முடிவுகட்ட வேண்டி எச்சரிக்கையாக ஜப்பானுக்கும் ஐரோப்பா மற்றும் சீனாவுக்குமான அனைத்து தொடர்புகளையும் துண்டித்து, ஜப்பானில் கிறிஸ்துவ மதத்தைத் தடை செய்தார். நாட்டில் அமைதி திரும்பியதும் கலாச்சாரமும் பண்பாடும் கலந்த பொழுதுபோக்குகளை நடுத்தர மக்கள் நாட ஆரம்பித்தனர். ஜப்பானில் 'புன்ராகு'[26] என்றழைக்கப்படும் நிஞ்யோ ஜொரூரி என்ற நிகழ்த்துகலையானது முதல் முதலில் நிகழ்த்தப்பட்டது. நிஞ்யோ ஜொரூரி எனப்படும் கலையின் நிறுவனரும் முதன்மைப் பங்களிப்பாளருமான சிக்காமட்சு மான்சீமான் (1653-1725) என்பவர் இக்கலையை ஓர் உயிரோட்டமானதாக மாற்றியமைத்தார். நிஞ்யோ ஜொரூரி என்பது பொம்மலாட்டப் பொம்மைகளால் நிகழ்த்தப்படும் உயர்தரமான பாணியுள்ள ஓர் நிகழ்த்துகலையாகும். இன்றைய காலத்தில் இப்பொம்மைகள் மனித வடிவில் மூன்றில் ஒருபங்கு உடையவையாகத் தயாரிக்கப்படுகின்றன. இப்பொம்மைகளை இயக்குபவர் இதற்காகவே தனது வாழ்நாளை முழுவதும் அர்ப்பணிப்பவராக இருப்பார். பொம்மைகளின் தலை மற்றும் வலது கைகளை இயக்குபவர் இந்நிகழ்ச்சியின் முதன்மைக் கலைஞராவார். இவர் நிகழ்வின்போது தனது முகத்தைப் பார்வையாளர்களுக்குக் காட்டலாம். ஆனால் பொம்மைகளின் மற்ற பாகங்களை இயக்கும் கலைஞர்கள் தங்களை ஒரு கருப்பு உடையால் மறைத்துக்கொள்ள வேண்டும். இவர்கள் பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரியமாட்டார்கள். மேலும் நிகழ்வின் உரையாடல் முழுமையும் ஒருவரால் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. இவர் வெவ்வேறு பாத்திரங்களுக்கு ஏற்றாற்போலத் தனது குரலை மற்றும் பாவனைகளை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துவார். சிக்காமட்சு தனது வாழ்நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். இவை இன்றளவும் ஜப்பானில் நிகழ்த்தப்படுகின்றன.
புன்ராக்குவுக்குப் பிறகு குறுகிய காலத்தில் உருவானது கபுக்கி எனப்படும் கலையாகும்.[27] பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ஓகுனி என்பவர் இக்கலையில் மிகவும் புகழ்பெற்று அதன் இலக்கணமாகத் திகழ்ந்த நடிகை ஆவார். கபூக்கியின் பாடுபொருள் நோஹ் மற்றும் புன்ராகுவிலிருந்து தோற்றம் பெற்றதாகும். இதனுடைய துடிப்பான நடன அசைவுகள் புன்ராகுவிலிருந்து எடுக்கப்பட்டன. கபூக்கி சிறிதளவு நோஹ் போலவும் புன்ராக்குவிலிருந்து பெரிதளவு வேறுபட்டும் உள்ள கலையாகும். இக்கலைஞர்கள் நடனம், பாட்டு, முகபாவணை, மற்றும் உடல் வளைவு வித்தைகள் ஆகியவற்றில் பயிற்சியளிக்கப்படுகின்றனர். கபுக்கி முதன் முதலில் இளம்பெண்கள் மட்டும் பங்கு கொண்ட கலையாகும். அதன்பின்னர் இளைஞர்களாலும் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் அனைவராலும் நிகழ்த்தப்பட்டன. மேடையில் பெண் வேடம் தரிக்கும் ஆணுக்கு ஒரு பெண்ணுக்கான நளினம், முகபாவனை மற்றும் அங்க அசைவுகள் மிகச்சரியாக அமைய சிறப்புப் பயிற்சிகள் தரப்படுகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.