From Wikipedia, the free encyclopedia
நாட்காட்டி என்பது, நாளைக் காட்டுவது என்ற பொருளைக் கொடுத்தாலும்; இது உண்மையில்; சமூக, சமய, வணிக, நிர்வாக நோக்கங்களுக்காக நாட்களை ஒழுங்கு படுத்தும் ஒரு முறை ஆகும்.
காகிதத்தில் அச்சிடப்படும் நாட்காட்டிகள், உலகம் முழுதும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. தற்போது நவீன முறையில் உருவாக்கப்படும் கணினிகள், மடிக்கணிகள் போன்றவற்றில் உள்ள நாட்காட்டிகளில் எதிர்வருகின்ற நிகழ்வுகள் மற்றும் பணிகளை ஞாபகம் செய்வதற்கான அமைப்புகள் உள்ளன. இவை குறிக்கப்பட்ட நாளில், குறித்த நேரத்தில் ஓசை எழுப்பி பயனருக்கு ஞாபகம் செய்கின்றன. இவ்வசதி புதிய தொழில்நுட்பம் அடங்கிய கைபேசியிலும் உள்ளது.
நாட்காட்டி என்பது திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பாக கூட அமையலாம், உதாரணமாக நீதிமன்ற நாட்காட்கள் இந்த வகையைச் சார்ந்தவை.
'கலண்டே' என்னும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து உருவானதே 'காலண்டர்' என்ற ஆங்கிலச் சொல் ஆகும். 'கலண்டே' என்றால் 'கணக்கினைக் கூட்டுவது' என்று பொருள். கலண்டே (kalendae) என்பதானது இலத்தீனில் ஒவ்வொரு மாதங்களில் வருகின்ற முதல்நாளின் பெயராகும்.[1] தமிழில் நாட்காட்டி என்பது, நாள் + காட்டி நாட்களை காட்டுகின்ற என்ற பொருளில் வழங்கப்பெறுகிறது.
முழுமையான நட்காட்டியானது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தேதிகளை கொண்டுள்ளது. இதனால் வார சுழற்சி என்பது மட்டும் முழுமையான நாட்காட்டி என்றாகிவிடுவதில்லை. ஒரு வருடத்திற்குளான நாட்களை கணக்கில் கொள்வதற்காக வருடத்திற்கு பெயரிடுதல் என்ற முறை அவசியமாகிறது.
குறிப்பிட்ட தேதிகளை கணக்கிட்டு எளிமையான நாட்காட்டி அமைப்பு உருவாக்கப்பெற்றுள்ளது.
ஒரு நிலை சுழற்சிகளை கொண்டிருக்கும் நாட்காட்டி :
இரு நிலை சுழற்சிகளை கொண்டிருக்கும் நாட்காட்டி :
கால நிகழ்வுகளின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட சுழற்சிகளுடைய நாட்காட்டிகள் -
மிகவும் பொதுவான நாட்காட்டியானது ஒன்றிக்கும் மேற்பட்ட சுழற்சி வகைகளை உள்ளடக்கியது. இது பல நாட்காட்டிகளின் எளிமையான உறுப்புகளையும், செயல்பாடுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உதாரணமாக ஹீப்ரூ நாட்காட்டியானது ஏழு நாட்களை உடையது வாரம் என்ற விதியை உடையது. அதனால் ஏழு நாட்களை கொண்ட வாரம் என்பது ஹீப்ரூ நாட்காட்டின் ஒரு சுழற்சி முறையாகும். மிகவும் எளிமையான இதனை மேற்கத்திய சமூகம் பயன்படுத்திக் கொண்டுள்ளது.
அத்துடன் கிரெகொரியின் நாட்காட்டியானது வாரம் ஏழு நாள் என்ற முறையினை கொண்டுள்ளதல்ல. எனவே மேற்கத்திய நாடுகளில் பயன்பாட்டிலுள்ள நாட்காட்டியில் கிரெகொரியின் மற்றும் எபிரேய நாட்காட்டிகள் பயன்படுத்துதலில் சில சிக்கல்கள் உருவாகின்றன. பொதுவாக இரு வகையான நாட்காட்களை பயன்படுத்தும் பொழுது ஏற்படும் ஒழுங்கின்மையை தவிர்க்க,. மேற்கத்திய நாட்காட்டியான பொது நாட்காட்டியில் கிரெகொரியின் நாட்காட்டியின் தேதி மற்றும் ஹீப்ரூ நாட்காட்டியின் வாரநாள் என இரண்டும் இடம் பெற்றுள்ளன.
சூரிய நாட்காட்டி (solar calendar) சூரியனை வலம் வரும் புவியின் நிகழிடத்தைப் பொறுத்து நாட்களை அமைத்த நாட்காட்டி யாகும்.மாறாக வான்வெளியில் நகர்வதாக உணரப்படும் சூரியனின் நிகழிடத்தை கொண்டு அமைக்கப்பட்ட நாட்காட்டி என்றும் கூறலாம்.
சூரிய நாள்காட்டி ஒவ்வொரு சூரிய நாளி்ற்கும் ஒரு நாள் ஒதுக்கப்பெறுகிறது. ஒரு சூரிய நாள் என்பது சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை கணக்கிடப்படும். இரவு நேரம் என்பது சூரிய அஸ்தமனத்திலிருந்து மறு சூரிய உதயம் வரை கணக்கிடப்பெறும்.
சந்திர நாட்காட்டி சூரிய நாட்காட்டியின் அலகுகளிலிருந்து மிகவும் மாறுபட்டது. சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்டதனால் பூமத்திய ரேகை அருகேயிருக்கும் பகுதிகளுக்கும் பெருத்த மாறுபாடில்லாத நாள்காட்டியாக இருக்கிறது.
சூரியசந்திர நாட்காட்டிகள் சந்திர நாட்காட்டி போன்று மாதங்கள் சந்திரனின் பிறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் ஓர் கூடுதலான இடைச்செருகல் மாதத்தை கொண்டு சூரிய ஆண்டுடன் ஒருங்கிணைக்கின்றன.
நாட்காட்டி, நாட்களைச் சேர்த்துக் கிழமைகள், மாதங்கள், ஆண்டுகள் எனவாக்கி அவற்றுக்கு பெயர்களும் வழங்குவதன் மூலம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளுக்கும் கொடுக்கப்படும் பெயர் தேதி அல்லது "திகதி" எனப்படுகிறது. நாள், மாதம், ஆண்டு முதலிய காலப் பகுப்புக்கள், பொதுவாகச் சூரியன், சந்திரன் முதலியவற்றின் இயக்கங்கள் போன்ற வானியல் தோற்றப்பாடுகளுக்கு இயைபாக இச்செய்திகள் அமைந்துள்ளன எனினும் அவை துல்லியமாகப் பொருந்திவர வேண்டியது இல்லை. இவற்றுட் பல பிற நாட்காட்டிகளை மாதிரியாகக் கொண்டு தமக்குப் பொருத்தமாக அமையும்படி உருவாக்கப்பட்டவை.
பண்டைக் காலத்தில் இருந்தே பல நாடுகளிலும் தமக்கென நாட்காட்டிகளை உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர். தொடக்க காலத்தில் புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை அடிப்படையாக வைத்தே நாட்காட்டிகள் உருவாக்கப்பட்டன. நைல் நதியில் ஆண்டு தோறும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடிப்படையாகக் கொண்டு பண்டைய எகிப்தியர்கள் நாட்காட்டியை உருவாக்கினார்கள். இந்தியாவில் பருவ நிலை மாற்றங்களை வைத்தும் சூரியன் மற்றும் சந்திரனின் மாற்றங்களை வைத்தும் காலத்தைக் கணக்கிட்டார்கள்.இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுபவை கிரெகொரியின் நாட்காட்டி எனப்படுகிறது.. நாட்காட்டி என்பது ஒரு நாளின் தொடர்பான தகவல்களைக் கொடுக்கும் ஒரு பொருளையும் குறிக்கின்றது. பொதுவான வழக்கில், நாட்காட்டி என்பதன் மூலம் புரிந்து கொள்ளப்படுவதும் இதுவே. பொதுவான நாட்காட்டிகள் காகித்ததால் செய்யப்பட்டவை. தற்காலத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய மின்னணு நாட்காட்டிகளும் உள்ளன.
நாட்காட்டிகள் மொழி, சமயம், பண்பாடு போன்றவற்றின் அடிப்படையில் பலவகைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. இதுபோல் நாட்காட்டிகள் தினசரி, மாதம் போன்ற கால அமைப்பின் அடிப்படையிலும் தனித்தனி வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று.
இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி "ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6 வது நூற்றாண்டில் டயனீசியஸ் எக்சீகுவஸ் (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.
கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த ரோமானிய நட்காட்டியில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் சேர்க்கப்பட்டன. கிரகோரியின் நாட்காட்டியானது 'ஜூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது.அதாவது கிபி.1752 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து கழிக்கப் பட்டது.மேலும் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.
இசுலாமிய நாட்காட்டி அல்லது முஸ்லிம் நாட்காட்டி அல்லது ஹிஜ்ரி நாட்காட்டி (அரபு மொழி: التقويم الهجري; அத்-தக்வீம் அல்-ஹிஜ்ரீ; பாரசீகம்: تقویم هجری قمری தக்வீமே ஹெஜிரே கமரீ) இது ஓர் சந்திர நாட்காட்டி ஆகும். இது ஆண்டிற்கு 12 சந்திர மாதங்களைக் கொண்டு 354 அல்லது 355 நாட்களைக் கொண்டுள்ளது. இந்த நாட்காட்டி கிரெகொரியின் நாட்காட்டியுடன் பல முஸ்லிம் நாடுகளில் நிகழ்வுகளைப் பதிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. இசுலாமிய சமய புனிதநாட்களையும் பண்டிகைகளையும் கணக்கிட முஸ்லிம்கள் உலகெங்கும் இந்த நாட்காட்டியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நாட்காட்டியின் துவக்கம் ஹிஜிரா, அதாவது இசுலாமிய இறைதூதர் முகம்மது நபி அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிலிருந்து மதீனாவிற்கு இடம் பெயர்ந்த ஆண்டாகும். 'ஹிஜிரத்' என்ற அரபி வார்த்தைக்கு 'இடம் பெயர்தல்' எனப் பொருள்படும். ஹிஜிரி ஆண்டு H - ஹிஜ்ரி அல்லது AH (இலத்தீனத்தில் Anno Hegirae என்பதன் சுருக்கம்) எனவும் ஹிஜிராவிற்கு முந்தைய ஆண்டுகள் BH (Before Hegirae) எனவும் வழங்கப்படும்.[2]
இந்து நாட்காட்டி என்று குறிப்பிடப்படும் நாட்காட்டி காலவோட்டத்தில் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் மாறுபட்டுள்ள பல நாட்காட்டிகளாகும்.இந்தியத் தேசிய நாட்காட்டி அவற்றில் ஒன்றாகும்.வானியல் அறிஞர்களான ஆரியபட்டா(கிபி 499) மற்றும் வராகமிகிரர் (6ஆம் நாற்றாண்டு) வடிவமைத்த பஞ்சாங்கம் என்ற அடிப்படையில் இவை அமைந்தவை. இது திதி, வாரம், இருபத்தியேழு நட்சத்திரம், யோகம், கர்ணம் ஆகிய அலகுகளை கொண்டுள்ளது.
எதியோப்பியாவில் தற்போதும் தேசியப் பயன்பாட்டில் இருக்கும் ஒரு நாட்காட்டியே எதியோப்பியன் நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி நாளாந்தப் பயன்பாட்டிலும், அலுவலகங்களில் அதிகாரபூர்வமாகவும், முதன்மையாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த நாட்காட்டியின்படி, ஒவ்வொரு ஆண்டிலும், 30 நாட்களைக்கொண்ட 12 மாதங்கள் இருக்கும். ஒரு ஆண்டின் 13ஆவது மாதம் 5 நாட்களைக் கொண்டிருப்பதுடன், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நெட்டாண்டு 13 ஆவது மாதத்தில் 6 நாட்களைக் கொண்டிருக்கும்.[3]. கிரிகோரியன் நாட்காட்டியின் ஆண்டு எண்ணிக்கையிலிருந்து, 8 ஆண்டுகள் பின்னால் எதியோப்பியன் நாட்காட்டியின் ஆண்டு இருக்கிறது. அதாவது கிரிகோரியன் நாட்காட்டியில் 2017 ஆம் ஆண்டில், எதியோப்பியாவில் 2009 ஆம் ஆண்டு பயன்பாட்டில் இருக்கும். அத்துடன், அந்த நாட்காட்டியின்படி, பொதுவாக புத்தாண்டானது, கிரிகோரியன் நாட்காட்டியின் செப்டம்பர் மாதத்தின் 11 அல்லது 12 ஆம் நாள் வருகிறது.[4] [5]
கிட்டத்தட்ட அனைத்து நாட்காட்டி முறையும் தொடர்ச்சியான நாட்களை மாதங்களாகவும் அதே போல வருடங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.சூரிய நாட்காட்டியில் ஒரு வருடம் பூமியின் தோராயமான வெப்பமண்டல ஆண்டாகவும் (அதாவது பருவங்களின் ஒரு முழு சுழற்சிக்கான நேரம் எடுக்கும் நேரம்), பாரம்பரியமாக விவசாய நடவடிக்கைகளை திட்டமிடுவதற்காக ஏற்படுத்தப்பட்டது.சந்திர நாட்காட்டியில், மாதம் கிட்டத்தட்ட சந்திரப்பிறை சுழற்சியைச் அடிப்படையாகக் கொண்டுள்ளது. தொடர்ச்சியான நாட்கள் மற்ற காலங்களின் குழுவாக அதாவது வாரம் போன்ற பிரிவுகளாக இருக்கலாம்.
வெப்பமண்டல நாட்காட்டி ஆண்டில் நாட்களின் எண்ணிக்கை முழு எண்ணாக இல்லை, ஏனெனில் சூரிய நாட்காட்டி வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு நாட்களைக் கொண்டிருக்க வேண்டும்.உதாரணமாக, நெட்டாண்டுகளில் (leap year) கூடுதலாக ஒரு நாளைச் சேர்ப்பதன் மூலம் இது கையாளப்படுகிறது.அதே போன்றதொரு முறையே சந்திர நாட்காட்டியிலும் பின்பற்றப்படுகிறது.இது பொதுவாக இடைச்செருகல் என அறியப்படுகிறது. சூரிய நாட்காட்டியாக இருந்தாலும், சந்திர நாட்காட்டியாக இருந்தாலும்,முழு ஆண்டையும் சம நாட்கள் கொண்ட மாதங்களாக பிரிக்க முடியாது.
கணித நாட்காட்டியானது குறிப்பிட்ட கண்டிப்பான விதிகளின் அடிப்படையில் அமைந்ததாகும்.உதாரணம் தற்போதைய யூத நாட்காட்டி. இத்தகைய நாட்காட்டிகள் விதிகள் அடிப்படையிலான நாட்காட்டிகள் என்றழைக்கப்படுகின்றன.இவை எளிதாக கையாளக்கூடியதாக இருப்பது இதன் அனுகூலமாகும். துல்லியத்தன்மையில் தொய்வு இதன் குறைபாடாகும். மேலும், நாட்காட்டி தொடக்கத்தில் மிகவும் துல்லியமாக இருந்தாலும், அதன் துல்லியம் காலப்போக்கில் மெதுவாக குறைந்து, புவியின் சுழற்சியால் மாற்றங்கள் ஏற்படுகிறது.இத்தகைள மாற்றங்கள் துல்லியமான கணிதக் நாட்காட்டிகளின் வாழ்நாளை ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் என்றளவில் வரம்பைக் கட்டுப்படுத்துகிறது.
வானியல் நாட்காட்டி நிகழ்ந்துகொண்டிருப்பதை உற்றுநோக்கல் முறையை அடிப்படையாக கொண்டது.இசுலாமிய நாட்காட்டி மற்றும் பழைய யூத நாட்டிகளை உதாரணங்களாகக் கூறலாம்.அத்தகைய நாட்காட்டிகள் ஒரு கவனிப்பு அடிப்படையிலான நாட்காட்டியாகவும் குறிப்பிடப்படுகிறது.இவ்வகை நாட்காட்டிகள் நிலைத்த துள்ளியத்தோடு இருப்பது அனுகூலமாகும்.
நாட்காட்டிகள் முழுமையானதாகவோ அல்லது முழுமையற்றதாகவோ இருக்கக்கூடும்.முழுமையான நாள்காட்டி ஒவ்வொரு தொடர்ச்சியான நாளினை பெயரிடும் வழிமுறையை வழங்குகிறது, அதே நேரத்தில் முழுமையற்ற நாள்காட்டியில் அத்தகைய வழிமுறைகள் இல்லை.ஆரம்ப ரோமானிய நாட்காட்டி முழுமையற்ற நாட்காட்டிக்கும்,கிரெகொரியின் நாட்காட்டி முழுமையான நாட்காட்டிக்கும் உதாரணங்களாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.