தோலாவிரா
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
தோலாவிரா (Dholavira, குசராத்தி: ધોળાવીરા) என்பது, இந்தியாவின் மேற்கில் குசராத் மாநிலத்தில், கச் மாவட்டத்தில் உள்ள பாச்சோ தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் களம். இது புஜ் நகரத்திலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ளது. இத் தொல்லியல் களத்தில் இருந்து 1 கிமீ தொலைவில் தெற்குப் புறமாக அமைந்துள்ள தற்கால ஊரின் பெயரால் இக்களத்துக்குப் பெயர் ஏற்பட்டது. உள்ளூரில் இதற்கு கொட்டாடா டிம்பா என்ற பெயரும் உண்டு.
தோலாவிரா | |
---|---|
அமைவிடம் | |
ஆள்கூறுகள் | 23°53′10″N 70°13′30″E |
பண்பாடு | சிந்துவெளி நாகரிகம் |
நாடு | இந்தியா |
பகுதி | கட்ச் மாவட்டம், குசராத் |
பரப்பளவு | 1 km2 (0.39 sq mi) |
தோலா விரா கிராமம் கட்ச் பாலைவனத்தில் அமைந்திருந்தாலும், வளம் மிக்க மற்றும் கலாசார பன்முகத்தன்மை மிகுந்த நகரமாக இருந்துள்ளது. சிந்து சமவெளி நாகரிக மக்கள் பாலைவனத்துக்குள் ஒரு நவீன நகரத்தையே உருவாக்கியுள்ளனர்.
தோலாவிரா நகரத்திற்கு அருகில் இரு பக்கங்களிலிலும் மழைக்காலங்களில் மட்டும் நீர் ஓடும் மான்சர் மற்றும் மான்கர் என இரண்டு ஆறுகள் பாய்ந்துள்ளது. இவ்வாறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி, ஆற்று நீரை தோலாவிரா நகரத்திற்கு திருப்பி, கால்வாய், நிலத்தடி நீர்த் தொட்டிகள் கட்டமைத்து தங்களது நீர்த் தேவைகளை சமாளித்துள்ளனர். சுனாமி ஆழிப்பேரலை, தோலா விரா நகரம் அழியக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அங்கு ஆய்வு செய்தவர்கள் கருதுகின்றனர்.[1]
இத் தொல்லியல் களம், சிந்துவெளி நாகரிகத்துக்கு உரிய அரப்பா பண்பாட்டின் அழிபாடுகளைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய ஐந்து ஹரப்பா தொல்லியல் களங்களுள் ஒன்றான தோலாவிரா,[2]நாகரிகத்துக்கு உரியதாக இந்தியாவில் அமைந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த தொல்லியல் களம்.
இதன் காலத்தில் இருந்த மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாகவும் இது விளங்கியது.[3] கட்ச் பாலைவனக் கட்ச் பாலைவனக் காட்டுயிர்க் காப்பகத்துள் அடங்கிய, காதிர் பெட் தீவில் இருக்கும் இக் களத்தின் மொத்தப் பரப்பளவு 100 எக்டேர் (250 ஏக்கர்).[4] கிமு 2650ல் இருந்தே குடியேற்றத்தைக் கொண்டிருந்த இவ்விடம் கிமு 2100 அளவில் நலிவடையத் தொடங்கிற்று. குறுகிய காலம் கைவிடப்பட்டிருந்த இந்நகரம் மீண்டும் கிமு 1450 வரை இயங்கியது.[5]
1967-8 காலத்தில் ஜே. பி. ஜோசி என்பவர், எட்டு முக்கியமான அரப்பன் தொல்லியல் களங்களுள் ஐந்தாவது பெரிய இக்களத்தைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார். 1990 ஆம் ஆண்டிலிருந்து இந்தியத் தொல்லியல் ஆய்வகம் அகழ்வாய்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆய்வகத்தின் கருத்துப்படி "தோலாவிரா சிந்துவெளி நாகரிகத்தின் ஆளுமைக்குப் புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளது".[6]
தோலவிரா அகழ்வாய்வின் பணிப்பாளரான ஆர். எசு. பிசுட் இக்களத்தை ஏழு காலப் பகுதிகளாக வரையறை செய்துள்ளார்.[7]:
கால கட்டங்கள் | காலம் | |
---|---|---|
கட்டம் I | கிமு 2650–2550 | தொடக்க அரப்பன் – முதிர் அரப்பன் மாறுநிலை A |
கட்டம் II | கிமு 2550–2500 | தொடக்க அரப்பன் – முதிர் அரப்பன் மாறுநிலை B |
கட்டம் III | கிமு 2500–2200 | முதிர் அரப்பன் A |
கட்டம் IV | கிமு 2200–2000 | முதிர் அரப்பன் B |
கட்டம் V | கிமு 2000–1900 | முதிர் அரப்பன் C |
கிமு 1900–1850 | கைவிடப்பட்ட காலம் | |
கட்டம் VI | கிமு 1850–1750 | பின்நகர அரப்பன் A |
கிமு 1750–1650 | கைவிடப்பட்ட காலம் | |
கட்டம் VII | கிமு 1650–1450 | பின்நகர அரப்பன் B |
1989 ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் சார்பில், ஆர். எசு. பிசுட் என்பவர் தலைமையில் அகழ்வாய்வுகள் தொடங்கப்பட்டன. 190க்கும் 2005 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 13 ஆய்வுகள் இடம்பெற்றன. இவ்வகழ்வாய்வுகள் மூலம் இப்பகுதியின் நகர அமைப்பு, கட்டிடக்கலை தொடர்பிலான பல தகவல்களை வெளிக் கொணரப்பட்டதுடன், முத்திரைகள், மணிகள், விலங்கு எலும்புகள், பொன், வெள்ளி போன்ற உலோகங்களிலும் களிமண்ணிலும் செய்யப்பட்ட அணிகள், மட்பாண்டங்கள், வெண்கலக் கலங்கள் போன்ற பல வகை அரும்பொருட்களும் பெருமளவில் கிடைத்தன. குசராத், சிந்து, பஞ்சாப், மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் காணப்பட்ட குடியேற்றப் பகுதிகளுக்கு இடையேயான வணிகத்தில். தோலாவிரா ஒரு முக்கிய மையமாக விளங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[8][9]
இந்த நகரம் சிந்துவெளி நாகரிகத்துக்கு உரிய துறைமுக நகரமான லோத்தலை விடப் பெரியது எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது 771.1மீ (2,503 அடி) நீளமும், 616.85 (2,023.8 அடி) அகலமும் கொண்டது. அரப்பா, மொகெஞ்சதாரோ ஆகிய நகரங்களைப் போலவே இந்நகரமும் வடிவவியல் தள அமைப்பு உடைய அரண் நகர், நடு நகர், கீழ் நகர் என்னும் மூன்று பகுதிகளால் ஆனது.[10] அரண் நகரும், நடு நகரும், அவற்றுக்கே உரித்தான அரண் அமைப்புக்கள், வாயில்கள், கட்டிடப் பகுதிகள், சாலைகள், கிணறுகள், பெரிய திறந்த வெளிகள் போன்றவற்றுடன் அமைந்திருந்தன. மிகக் கவனமாக அரண் செய்யப்பட்டிருந்த அரண் நகர், நகரத்தின் தென்மேற்குப் பகுதியின் பெரும்பகுதியைக் கொண்டிருந்தது. உயரமான கோட்டை மிகவும் பாதுகாப்பாக இரட்டை மதில்களுடன் அமைந்திருந்தது.[11] இதற்கு அருகே முக்கிய அலுவலர்கள் வாழ்ந்த ஒரு பாதுகாப்பான இடம் இருந்தது.[12] பொதுவாக அரண் செய்யப்பட்டு இருந்த நகரப்பகுதியின் பரப்பளவு 48 எக்டேர் (120 ஏக்கர்). இதற்கு வெளியே இருந்த பகுதிகளும் அரண் செய்யப்பட்ட நகருடன் ஒருங்கிணைந்தவையாகவே இருந்தன. மதிலுக்கு வெளியிலும் ஒரு குடியிருப்புப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[6] இந் நகரின் குறிப்பிடத்தக்க ஒரு அம்சம் அதன் கட்டிடங்கள் ஆகும். அரப்பா, மொகெஞ்சதாரோ என்பன உள்ளிட்ட சிந்துவெளி நகரங்களில் உள்ள கட்டிடங்கள் ஏறத்தாழ முற்றிலுமாகவே செங்கற்களால் ஆனவையாக இருக்க, தோலாவிராவில் உள்ள கட்டிடங்கள் கல்லால் கட்டப்பட்டுள்ளன.[13] தோலாவிராவின் இரு பக்கங்களிலும் மழைநீர்க் கால்வாய்கள் அமைந்துள்ளன. வடக்கில் உள்ளது "மன்சார்" தெற்கில் உள்ளது "மன்கார்".
தோலாவிராவில் கண்டெடுக்கப்பட்ட மூன்றாம் கட்டத்தைச் சேர்ந்த முத்திரைகளுட் சில எழுத்துக்கள் எதுவும் இன்றி விலங்கு உருவங்களை மண்டுமே கொண்டிருக்கிறது. இவை முத்திரை உற்பத்தியின் தொடக்க நிலையைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.[5]
Seamless Wikipedia browsing. On steroids.