செயற்திறன்களை உள்ளடக்கிய பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் From Wikipedia, the free encyclopedia
தடகள விளையாட்டுகள் (Athletics) எனப்படுவது தடகள மைதானத்தில் இடம்பெறும் ஓடுதல், எறிதல், நடத்தல், தாண்டுதல் போன்ற செயற்திறன்களை உள்ளடக்கிய பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பெரும்பாலான இவ்விளையாட்டுகள் மிக எளிமையானவை. விலையுயர்ந்த கருவிகளையோ கட்டமைப்புக்களையோ வேண்டுவதில்லை என்பதால் இவை மிகப் பரவலாக விளையாடப்படுகின்றன. எளிதாகவும் மலிவாகவும் இருந்தபோதிலும் மனிதரின் உடல் வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை இவை சோதிக்கின்றன. இது பெரும்பாலும் தனிநபருக்கானப் போட்டியாக உள்ளது.
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு | தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம் |
---|---|
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள் | |
இருபாலரும் | ஆம் |
பகுப்பு/வகை | வெளியே அல்லது அரங்கத்தினுள் |
தற்போதைய நிலை | |
ஒலிம்பிக் | துவங்கிய 1896 ஒலிம்பிக்சிலிருந்தே |
இணை ஒலிம்பிக் | துவங்கிய 1960 மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களிலிருந்தே |
ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் இப்போட்டிகள் நடத்தப்படுவது கிமு 776இல் தொன்மைய ஒலிம்பிக்சு காலத்திலிருந்தே அறியப்படுகிறது. தற்காலத்து பல நிகழ்வுகளை தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கத்தினரின் பல்வேறு உறுப்பினர் சங்கங்கள் நடத்தி வருகின்றன.இந்த விளையாட்டுக்கள் ஒலிம்பிக் போட்டிகளிலும் மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களிலிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன.
தடகள விளையாட்டுக்களில் ஓடுதல், நடத்தல், தாண்டுதல் மற்றும் விட்டெறிதல் ஆகியன தொல் பழங்கால துவக்கங்களைக் கொண்டு மிகப் பழமையான விளையாட்டுகளாக விளங்குகின்றன.[1] தடகள விளையாட்டுகள் சகாராவிலுள்ள பண்டைய எகிப்திய கல்லறைகளில் காணலாம்; இங்கு எப் சூட் திருவிழாவில் ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்படுவதை வரைந்துள்ளனர். இதேபோன்று கிமு 2250களின் கல்லறைகளில் உயரம் தாண்டும் போட்டிகள் வரையப்பட்டுள்ளன.[2] கிமு 1800இல் அயர்லாந்தில் நடந்த தொன்மையான கெல்ட்டியத் திருவிழாக்களில் நடந்த இடயில்டெயன் விளையாட்டுக்கள் துவக்ககால விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாகும். இது 30 நாட்கள் நடந்தது. இதில் ஓட்டம், கற்கள் விட்டெறிதல் போன்ற போட்டிகள் இடம் பெற்றிருந்தன.[3] கிமு 776இல் நடந்த முதல் மூல ஒலிம்பிக் நிகழ்வில் இடம் பெற்றிருந்த ஒரே போட்டி அரங்க நீளத்திற்கு நடந்த ஓட்டப் பந்தயம் ஆகும். இது இசுடேடியான் எனப்பட்டது. பின்னர் விட்டெறிதல், தாண்டுதல் போன்ற போட்டிகளுடன் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் கிமு 500களில் பான் எல்லெனிக் விளையாட்டுக்கள் நிறுவப்பட்டன.[4]
இங்கிலாந்தில் 17 ஆவது நூற்றாண்டில் காட்சுவொல்டு ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்பட்டன.[5] புரட்சிகர பிரான்சில் 1796 முதல் 1798 வரை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்ற இலெ ஒலிம்பியாட் டெ லா ரிபப்ளிக்கு தற்கால கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னோடியாக அமைந்தது. இந்தப் போட்டியின் முதன்மை விளையாட்டாக ஓட்டப் பந்தயம் இருந்தது. பல கிரேக்க விளையாட்டும் துறைகளும் காட்சிக்கு இருந்தன. 1796இல் நடந்த ஒலிம்பியாட்டில் முதன்முறையாக மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.[6]
1812இலும் 1825இலும் சாண்டுஅர்சுட்டில் உள்ள அரச இராணுவக் கல்லூரியே இதனை முதலில் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது; இதற்கு ஆதாரம் ஏதுமில்லை. பதிவுசெய்யப்பட்ட முதல் தடகள விளையாட்டுப் போட்டிகள் 1840இல் இசுரோப்சையரின் இசுரூசுபரியில் அரச இசுரூபரி பள்ளியால் ஒழுங்கமைக்கப்பட்டது. இதற்குச் சான்றாக 1838 முதல் 1841 வரை அங்கு மாணாக்கராக இருந்த சி.டி.இராபின்சனின் மடல்கள் அமைந்துள்ளன.
இங்கிலாந்தில் 1880இல் அமெச்சூர் தடகள விளையாட்டுச் சங்கம் உருவானது. முதல் தேசிய அளவிலான இச்சங்கம் ஆண்டுதோறும் தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தத் துவங்கியது. அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் யுஎஸ்ஏ வெளியரங்க தடகள விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறத் தொடங்கின.[7] 19வது நூற்றாண்டில் இங்கிலாந்தின் சங்கம் மற்றும் பிற பொது விளையாட்டு அமைப்புகளினால் தடகளப் போட்டிகளுக்கான சீர்திருத்தங்களும் விதிமுறைகளும் முறைப்படுத்தப்பட்டன.
1886இல் துவங்கிய முதல் தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தடகளப் போட்டிகள் இடம் பெற்றன. ஒலிம்பிக் போட்டிகள் விரைவிலேயே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்புமிக்க பல்துறை விளையாட்டுப் போட்டியாக உருவெடுத்தது. தொடக்கதில் ஆண்களுக்கு மட்டுமாக இருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 1928 கோடைக்கால ஒலிம்பிக்கிலிருந்து பெண்களுக்கான நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.1960இல் உருவான மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் தடகள விளையாட்டுக்கள் முன்னிடம் பெற்றுள்ளன. ஒலிம்பிக் போன்ற சிறப்புப் போட்டிகளின்போது தடகளப் போட்டிகளுக்கு இருக்கும் முதன்மைத்துவம் பின்னர் மற்ற நேரங்களில் கிடைப்பதில்லை.
1912இல் பன்னாட்டளவிலான கட்டுப்பாட்டு அமைப்பு, பன்னாட்டு அமெச்சூர் தடகள விளையாட்டுக்கள் கூட்டமைப்பு உருவானது. இது 2001 முதல் தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம் என அறியப்படுகிறது. ஐ.ஏ.ஏ.எஃப் தனியாக உலக தடகளப் போட்டிகளை 1983 முதல் நடத்தி வருகிறது.
19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தடம் மற்றும் களப் போட்டிகள் உருவானதுடன் கல்வி நிறுவனங்கள், இராணுவ அமைப்புகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வீரர்களுக்கு இடையே போட்டிகள் நடைபெறத்தொடங்கியது.[8] பங்குபெறும் விளையாட்டு வீரர்கள் தங்கள் சிறப்புகளின் படி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகளில் போட்டியிடலாம்.ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். தடம் மற்றும் களப் போட்டிகள் உள்ளறங்கம் மற்றும் வெளிப்புறங்களில் ஆடும் போட்டிகளாகவும் உள்ளது.குளிர்காலத்தில் நிகழும் போட்டிகள் பெரும்பாலும் உள்ளறங்கத்தில் நிகழும், வெளிப்புற நிகழ்வுகள் பெரும்பாலும் கோடையில் நடைபெறுகின்றன. போட்டிகள் நடைபெறும் இடத்தை வைத்து - தடம் மற்றும் களம் ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது.
பல்வேறு ஓட்டம் நிகழ்வுகளின் பாதைகள் மூன்று பரந்த தொலைவு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: குறுகிய தூர ஓட்டம், நடுத்தர தொலைவு மற்றும் நீண்ட தூர ஓட்டம் என்று பிரிக்கப்படுகிறது.
கள விளையாட்டு நிகழ்வுகள் இரண்டு பிரிவுகள் உள்ளன. அவை தாண்டுதல் மற்றும் எறிதல்.
சாலை ஓட்டம் போட்டிகள் முக்கியமாக நடைபாதை அல்லது தார் சாலைகள் நடத்தப்படும் நிகழ்வுகள் (முக்கியமாக நீண்ட தூரம்) இயங்குகின்றன.இது பெரும்பாலும் ஒரு முக்கிய மைதானத்தின் முடிவடையும். ஒரு பொதுவான பொழுதுபோக்கு விளையாட்டாக மட்டுமில்லாமல், விளையாட்டின் உயர் மட்ட - குறிப்பாக மராத்தான் பந்தயங்கள் - தடகளத்தின் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகும். சாலை பந்தய நிகழ்வுகள் ஏறக்குறைய எந்தவொரு தூரமும் இருக்கக்கூடும், ஆனால் மிகவும் பொதுவானது மற்றும் நன்கு அறியப்பட்ட மராத்தான், அரை மராத்தான், 10 கிமீ மற்றும் 5 கி.மீ. வருடாந்திர IAAF உலக அரை மராத்தான் சாம்பியன்ஷிப் கூட இருப்பினும், தடகள மற்றும் கோடைகால ஒலிம்பிக்கில் IAAF உலக சாம்பியன்ஷிப் இடம்பெறும் ஒரே சாலை போட்டி மாரத்தான். மராத்தான் IPC தடகள உலக சாம்பியன்ஷிப் மற்றும் கோடைகால பாரலிம்பிக்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்ற ஒரே சாலையில் இயங்கும் நிகழ்வாகும். உலக மராத்தான் மாஜர்ஸ் தொடரில் பெர்லின், பாஸ்டன், சிகாகோ, லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களில் நடைபெறும் மராத்தான்கள் ஐந்து மதிப்புமிக்க மராத்தான் போட்டிகளும் ஆகும்.
புல்வெளி, வனப்பகுதி, மற்றும் பூமி தரைப்பகுதி போன்ற பரப்புகளில் திறந்த வெளிப்பகுதிகளில் போட்டிகள் நடத்தப்படுவதால், குறுக்கு தடகள விளையாட்டுகள் மிகவும் இயற்கையானது. இது ஒரு தனி மற்றும் குழு விளையாட்டு ஆகும், மேலும் புள்ளிகள் மதிப்பெண்கள் அடிப்படையில் அணிகளின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக, இலையுதிர்கால மற்றும் குளிர்காலங்களில் பொதுவாக 4 கிமீ (2.5 மைல்) அல்லது அதற்கும் மேற்பட்ட போட்டிகள் நீண்ட தூரமும் உள்ளன. குறுக்கு ஓட்டத்தில் வெற்றிகரமான விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் நீண்ட தூரம் மற்றும் சாலை நிகழ்வுகளில் போட்டியிடுகின்றனர்.
பந்தைய நடை ஓட்டம் (நடைபயிற்சி) என்பது பொதுவாக திறந்த-வெளிச் சாலையில் நடைபெறுகிறது, இருப்பினும் தடங்களிலும் அவ்வப்போது நடைபெறுகிறது.
நடை ஓட்டப்போட்டிகளில் மட்டும்தான் நீதிபதிகள் தடகள வீரர்களின் நுட்பத்தை கண்காணிக்கும் ஒரே தடகள பந்தயம்மாகும். தடகள வீரர்கள் அவர்கம்ளின் கால் முட்டு மடக்காமல் கால்களை மட்டுமே பயன்படுத்தி பந்தயங்களில் ஈடுபடுகிறார்கள்.
பந்தயவீரர்கள் எப்போதுமே தரையுடன் தொடர்பில் இருக்க வேண்டும் மற்றும் அவர்களின் முன்னேற்றக் கால் முழங்காலில் வளைக்கப்படக்கூடாது - இந்த விதிகள் பின்பற்றுவதில் தோல்வியுற்ற வீரர்கள் தகுதியிழப்பு செய்யப்படுவார்கள்.[9]
1952 முதல், மாற்றுத்திறனாளிகள்க்கான விளையாட்டுப் போட்டிகள், தனியாக நிக்ழ்ந்து வருகின்றன. International Paralympic Committee யினால் இத்தகைய போட்டிகள் ஒருங்கிணைக்கப்படுவதுடன், 1960 இலிருந்து, இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது[10][11].
ஒரே வகையான குறைபாடுள்ளவர்கள் இணைக்கப்பட்டு, அவர்களுக்கான தனித்தனி போட்டிகள் நடைபெறும்.
சக்கர நாற்காலி ஓட்டமும் இதில் ஒன்றாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.