நீளம் தாண்டுதல் (இலங்கை வழக்கு: நீளப்பாய்ச்சல் அல்லது நீளம் பாய்தல்) என்பது ஒரு தடகள விளையாட்டு ஆகும். இதில் விளையாட்டு வீரர் ஒருவர் ஓடி வந்து ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து தனது உடல்வலு, வேகம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நீண்ட தூரத்தைத் தாண்டிப் பாய முயற்சிப்பார். பாய்வதற்கான இடத்தில் செவ்வக வடிவிலான ஒரு குழி வெட்டப்பட்டு அதில் மணல் நிரப்பப்பட்டிருக்கும். அதன் ஒரு முனைக்கு அருகே பாய்தலைத் தொடங்குவதற்கான இடம் குறிக்கப்பட்டிருக்கும் இவ்விடத்தில் இதற்கெனச் செய்யப்பட்ட மரப் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இதற்கு அப்பால் வீரர்கள் ஓடு வருவதற்கான ஓடுதடம் இருக்கும். இந்த ஓடுதடத்தில் தமக்கு வசதியான ஓர் இடத்திலிருந்து வீரர்கள் வேகமாக ஓடிவந்து குறிப்பிட்ட மரப்பலகையில் காலூன்றி எழும்பிப் பாய்வார்கள். அவர்கள் பாய்ந்த தூரம் அளக்கப்படும். அதிக தூரம் பாய்ந்தவர்கள் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.
பாயும் போது வீரர்களின் காலடியின் எப்பகுதியாவது மரப்பலகையைத் தாண்டி உள்ளே இருப்பின் அப் பாய்ச்சல் விதிப்படியான பாய்ச்சலாகக் கணிக்கப்பட மாட்டாது. விதி முறைகள் கடைப்பிடிக்கப்படுவதைக் கண்காணிப்பது நடுவரின் கடமையாகும். மரப்பலகைக்குப் பின்னால் எவ்விடத்திலிருந்தும் வீரர்கள் பாயத் தொடங்கலாம். எனினும், தூரங்கள் மரப்பலைகையின் விளிம்பிலிருந்தே அளக்கப்படும். இதனால், பாய்ச்சலின் அதிக தூரம் அளக்கப்பட வேண்டுமாயின் வீரர்கள் இக் கோட்டுக்கு எவ்வளவு அண்மையில் இருந்து தொடங்க முடியுமோ அவ்வளவு அண்மையிலிருந்து பாயத் தொடங்க வேண்டும்.[1][2][3]
வடிவம்
நீளம் தாண்டற் போட்டிகளுக்கான நடைமுறை வடிவம் சந்தர்ப்பத்துக்கும், இடத்துக்கும் தகுந்தபடி மாறக்கூடும். எனினும், பொதுவாக, ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தாண்டும் வாய்ப்புக்கள் வழங்கப்படும். விதிமுறைப்படி தாண்டப்பட்ட மிகக்கூடிய தூரம் கணக்கில் கொள்ளப்படும். பெரும்பாலான போட்டிகளில் ஒவ்வொருவருக்கும் மூன்று தடவைகள் பாயும் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. பல போட்டியாளர்கள் பங்குபற்றும் போட்டிகள் இரண்டு சுற்றுக்களாக நடைபெறக்கூடும். முதற் சுற்றில் தெரிவு செய்யப்படும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் போட்டியிடுவார்கள். இறுதிச் சுற்றில் வழங்கப்படும் வாய்ப்புக்கள் முதற் சுற்றில் வழங்கப்பட்டவற்றுக்கு மேலதிகமாக வழங்கப்பட்ட வாய்ப்புக்களாகவே கணிக்கப்படுகின்றன. இதனால், இறுதிச் சுற்றில் போட்டியிடும் போட்டியாளர் ஒருவர் தாண்டும் அதிகூடிய தூரம் கணிக்கப்படும்போது, அவர் முதற் சுற்றில் தாண்டிய தூரங்களும் கணக்கில் கொள்ளப்படுகின்றன.
நீளம் தாண்டற் கூறுகள்
நீளம் தாண்டுதலில் நான்கு கூறுகள் உள்ளன.
- அணுகு ஓட்டம் (approach run)
- இறுதி இரு கவடுகள்
- எழும்புதல் (takeoff)
- பறப்புச் செயலும், இறங்குதலும். (action in the air and landing)
அணுகு ஓட்டத்தின் வேகம் கூடிய தூரம் பாய்வதற்கு முக்கியமானதாகும். இதனாலேயே பல அதிவேக ஓட்ட வீரர்கள் வெற்றிகரமான நீளம் தாண்டல் வீரர்களாகவும் உள்ளனர்.
வெளியிணைப்புக்கள்
- தடகளப் போட்டிகளில் சாதனைகள் (ஆங்கில மொழியில்)
- ஐக்கிய அமெரிக்கத் தடகள விளையாட்டுக்கள் (ஆங்கில மொழியில்)
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.