From Wikipedia, the free encyclopedia
சிறப்பு நிறைவு(Super Over)[1][2] அல்லது நீக்குவான் (Eliminator)[3][4], எனப்படுவது வரையிட்ட நிறைவுகளில் நடக்கும் ஒரு துடுப்பாட்டம் சமனில் முடியும்போது வெற்றியாளரை முடிவு செய்யப் பயன்படுத்தப்படும் முறை ஆகும்.
ஒரு போட்டியில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இருவருக்கும் ஆட்டப் புள்ளிகளை பகிர்ந்தளிக்காமல் இந்த சிறப்பு நிறைவில் வெற்றி பெற்ற அணிக்கே முழுமையான புள்ளிகளும் வழங்கப்படும். 2008ஆம் ஆண்டு சிறப்பு நிறைவு முறை முதன்முறையாக இருபது20 போட்டிகளில் பயன்படுத்தப்பட்டது. இது இதற்கு முன்னிருந்த பௌல் அவுட் முறைக்கு மாற்றாக அமைந்தது.
சமனான போட்டியொன்றில் இரு அணிகளும் மூன்று மட்டையாளர்களையும் ஒரு பந்து வீச்சாளரையும் சிறப்பு நிறைவில் விளையாட நியமிக்கின்றன. இரு அணிகளும் மீண்டும் ஆடுகளத்திற்கு வருகின்றன. ஆறு பந்துகளுக்கு, முதல் அணி பந்துவீசி களத்தடுப்புச் செய்ய இரண்டாமணியின் மட்டையாளர்கள் தங்களால் இயன்ற அளவு ஓட்டங்களை எடுக்கின்றனர். பிறகு இரண்டாம் அணி பந்து வீச முதலாமணியின் மட்டையாளர்கள் ஓட்டங்களை எடுக்கின்றனர். இறுதியாக எந்த அணி கூடுதலான ஓட்டங்களை எடுத்துள்ளதோ அந்த அணியே வென்றதாக அறிவிக்கப்படுகிறது. மட்டையாளர்கள் வழக்கமான முறைகளில் வீழ்த்தப்படுகின்றனர். ஓரணியின் இரண்டு மட்டையாளர்களும் ஆட்டமிழக்கும் போது அந்த அணியின் சிறப்பு நிறைவு முடிவுறுகிறது.
ஒருவேளை சிறப்பு நிறைவும் சமனில் முடிந்தால் எதிரணியை விட அதிக நான்குகள் அடித்த அணி வெற்ற பெற்றதாக அறிவிக்கப்படும். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வரலாற்றில் முதன்முறையாக 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் சிறப்பு நிறைவு முறை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதுவும் சமனில் முடிந்ததால் நான்குகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.
ஆட்டம் சமனான நிலையில் ஆடப்படும் சிறப்பு நிறைவிலும் ஓட்டங்கள் சமனாக இருப்பின் தங்கள் துடுப்பாட்டத்தின் போது எதிரணியை விட அதிக ஆறுகள் அடித்துள்ள அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்ற விதி முன்பு இருந்தது.[5][6] இந்த விதியானது முதன்முதலில் மே 5, 2010 அன்று 2010 ஐசிசி மகளிர் உலக இருபது20 போட்டிகளில் ஆத்திரேலிய மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இங்கிலாந்து மகளிர் துடுப்பாட்ட அணிக்கும் இடையே நிகழந்த ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டது; இதன்படி ஒரே பந்தில் ஆறுகள் அதிகம் அடித்திருந்த ஆத்திரேலியா வெற்றி பெற்றது.[6][7] பிறகு 1 அக்டோபர் 2012 அன்று இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி சிறப்பு நிறைவும் சமனில் முடிந்தால் எதிரணியை விட அதிக நான்குகள் அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இந்த சிறப்பு நிறைவு விதி முதன்முதலில் இருபது20 ஆட்டத்தில் திசம்பர் 26, 2008இல் மேற்கிந்தியத் தீவு அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையே செயற்பாட்டிற்கு வந்தது. இந்த சிறப்பு நிறைவில் மேற்கிந்தியத் தீவுகள் 25/1 எடுத்தது; பதிலுக்கு நியூசிலாந்து 15/2 எடுத்துத் தோற்றது.[8]
திசம்பர் 26, 2008 இருபது20 ஆட்டத்தில் இருபது நிறைவுகளுக்குப் பின்னதாக இரு அணிகளும் சமன் எய்தியிருந்தன.[2]
- - டேனியல் வெட்டோரி நியூசிலாந்து அணியின் "நியமிக்கப்பட்ட பந்து வீச்சாளராக" விளங்கினார்.
- - கிறிஸ் கெயிலும் சேவியர் மார்சலும் "குறு-துடுப்பாட்டத்தை" துவக்கினர்.
- - எந்த பந்தையும் எதிர்கொள்ளும் முன்னரே மார்சல் ஓட்டமெடுக்கையில் வெளியேற்றப்பட்டார்; அடுத்து வந்த சிவ்நாராயின் சந்தர்பால் மறுமுனையில் மட்டையாளராக இருந்தார்.
- - கெயில் தான் எதிர்கொண்ட ஆறு பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
- "சிறப்பு நிறைவில்" மேற்கிந்தியத் தீவுகளின் புள்ளிகள் ஆறு பந்துகளில் ஒரு இழப்புடன் 25 என இருந்தது.[9]
- - சுலைமான் பென் மேற்கிந்தியத் தீவுகளின் நியமிக்கப்பட்டப் பந்து வீச்சாளராக இருந்தார்.
- - "சிறப்பு நிறைவின்" மூன்றாவது பந்தில் நியூசி. துவக்க மட்டையாளர் ஜேகப் ஓரம் அடித்த பந்து பிடிபட்டதால் வெளியேறினார். இந்தப் பந்தை பிடிக்கும் முன்னரே மட்டையாளர்கள் முனை மாறியிருந்தனர்.
- - மூன்றாவது மட்டையாளரான ராஸ் டைலர் ஐந்தாவது பந்தில் இழப்பு வீச்சில் ஆட்டமிழந்து வெளியேற்றப்பட்டார். ஓரமின் சக துவக்க மட்டையாளர் பிரண்டன் மெக்கல்லம் ஒரு பந்தையும் எதிர்கொள்ளவில்லை.
- நியூசிலாந்து அணியின் சிறப்பு நிறைவு புள்ளிகள் ஐந்து பந்துகளில் இரண்டு இழப்புகளுக்கு 15 ஆக இருந்தது.[9]
இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி சிறப்பு நிறைவிலும் போட்டியிலும் வெற்றி கண்டது.
(இந்தக் குறிப்பிட்ட ஆட்டம் சிறப்பு நிறைவு முறைக்கான சோதனையோட்டமாக அமைந்திருந்தமையால் அலுவல்சார் முடிவு சமன் என்றே குறிப்பிடப்பட்டது.[2]
இந்த முறைமை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அலுவல்முறையில் முதன்முதலாக 2011 உலகக்கிண்ணப் போட்டியில் வெளியேறு நிலையில் செயல்படுத்தப்படுவதாக இருந்தது. [10][11] ஆனால் வெளியேறு நிலையில் ஆடப்பட்ட எந்தவொரு ஆட்டமுமே சமனில் முடியாததால் இந்த விதி செயல்படுத்தப்படவில்லை. பிறகு 2019 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் முதன்முறையாக இந்த சிறப்பு நிறைவு முறையைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
நாள் | அரங்கு | வெற்றியாளர் | புள்ளிகள் | தோல்வியாளர் | புள்ளிகள் | பஒநா | மேற். |
---|---|---|---|---|---|---|---|
14 சூலை 2019 | இலார்ட்சு, இலண்டன், இங்கிலாந்து | இங்கிலாந்து | 15/0† | நியூசிலாந்து | 15/1 | உலகக்கோப்பை இறுதி | [12] |
† இவ்வாட்டத்தில் அதிக நான்குகளை எடுத்ததால் இங்கிலாந்து வெற்றி பெற்றது (26-17).
நாள் | அரங்கு | வெற்றியாளர் | புள்ளி | தோல்வியாளர் | புள்ளி | இ20ப | மேற். |
---|---|---|---|---|---|---|---|
26 திசம்பர் 2008 | ஈடன் பூங்கா, ஓக்லாந்து, நியூசிலாந்து | மேற்கிந்தியத் தீவுகள் | 25/1 | நியூசிலாந்து | 15 அனைத்தும் இழப்பு | 1-வது | [9] |
28 பெப்ரவரி 2010 | ஏஎம்ஐ அரங்கு, கிறைஸ்ட்சேர்ச், நியூசிலாந்து | நியூசிலாந்து | 9/0 | ஆத்திரேலியா | 6/1 | 2வது | [13] |
7 செப்டெம்பர் 2012 | துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கு, துபாய், ஐக்கிய அரபு அமீரகம் | பாக்கித்தான் | 12/0 | ஆத்திரேலியா | 11/1 | 2வது | [14] |
27 செப்டம்பர் 2012 | முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி, இலங்கை | இலங்கை | 13/1 | நியூசிலாந்து | 7/1 | ஆட்டம் 13 | [15] |
1 அக்டோபர் 2012 | முத்தையா முரளிதரன் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், கண்டி, இலங்கை | மேற்கிந்தியத் தீவுகள் | 18/0 | நியூசிலாந்து | 17/0 | ஆட்டம் 21 | [16] |
30 நவம்பர் 2015 | சார்ஜா துடுப்பாடட அரங்கு, ஐக்கிய அரபு அமீரகம் | இங்கிலாந்து | 4/0 | பாக்கித்தான் | 3/1 | 3வது | [17] |
22 சனவரி 2019 | அல் எமராட் துடுப்பாட்ட அரங்கு, மஸ்கத் | கத்தார் | 6/0 | குவைத் | 5/1 | ஆட்டம் 5 | [18] |
19 மார்ச் 2019 | நியூலன்ட்சு துடுப்பாட்ட அரங்கு, கேப் டவுன் | தென்னாப்பிரிக்கா | 15/0 | இலங்கை | 5/0 | 1-வது | [19] |
31 மே 2019 | காலேஜ் அரங்கு, சென். பீட்டர் போர்ட் | யேர்சி | 15/0 | குயெர்ன்சி | 14/1 | 1வது | [20] |
25 சூன் 2019 | ராட்டர்டேம் | சிம்பாப்வே | 18/0 | நெதர்லாந்து | 9/1 | 2-வது | [21] |
5 சூலை 2019 | வெசுட் எண்ட் பூங்கா, தோகா | கத்தார் | 14 ஓட்டங்கள் | குவைத் | 12 ஓட்டங்கள் | 2-வது | [22] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.