From Wikipedia, the free encyclopedia
சி. டி. ராஜகாந்தம் (சனவரி 26, 1917 - 1999) தமிழ்நாட்டின் ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகை. 1940கள்-1950களில் பல திரைப்படங்களில் நடித்தவர்.
ராஜகாந்தம் 1917 ஆம் ஆண்டு (தமிழ் நாட்காட்டியில், நள ஆண்டு தை 15) கோயம்புத்தூரில் திரவியம் ஆசாரியார், மருதாயி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். தந்தை கோவையில் தோல்மண்டி வைத்து வணிகம் செய்து வந்தவர். ராஜகாந்தம் ஐந்து வயதாக இருக்கும் போதே தந்தை இறந்து விட்டார்.[1] பதினைந்து வயதில் 1932 ஆம் ஆண்டில் கோயமுத்தூர் இலக்குமி மில்லில் பணியாற்றிக் கொண்டிருந்த அப்புக்குட்டி ஆசாரி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார் தாயார்.[1]
கோயமுத்தூரில் இருந்த ராஜகாந்தத்தின் வீடு மிகப் பெரியது. 1933 இல் அப்போது பிரபலமாக இருந்த எஸ். ஆர். ஜானகி என்பவர் தனது நாடகக் குழுவினருடன் கோவை வந்து மருதாயி அம்மாளின் வீட்டில் தங்கினர்.[2] தங்கியிருந்த காலத்தில் ராஜகாந்தத்திற்கு எஸ். ஆர். ஜானகியுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தாயின் அனுமதியுடன் அவர் ஜானகியின் நாடகக் கம்பனியில் சேர்ந்தார். ஜானகியின் தூக்குத்தூக்கி நாடகத்தில் தோழியின் பாத்திரம் ஒன்று ராஜகாந்தத்திற்குக் கொடுக்கப்பட்டது.[1] இப்படியாக சில துணைப் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த போது 1933 இல் ராஜலட்சுமி என்ற குழந்தைக்குத் தாயானார். அதன் பின்னர் அழைப்பின் பேரில் மட்டும் சில நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்தார்.[1]
1939 ஆம் ஆண்டில் வெளியான மாடர்ன் தியேட்டர்சின் மாணிக்கவாசகர் திரைப்படத்தில் சிறு பாத்திரம் ஒன்றில் 20 ரூபாய் சம்பளத்தில் நடிக்கும் வாய்ப்பு ராஜகாந்தத்திற்குக் கிடைத்தது. மாணிக்கவாசகரில் ராஜகாந்தத்தின் நடிப்புத் திறமையைக் கண்ட அன்றைய நகைச்சுவை நடிகர் காளி என். ரத்னம் அவரைத் தனது படங்களில் நகைச்சுவைத் தோழியாக நடிப்பதற்குத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். இருவரும் இணைந்து உத்தம புத்திரன் (1940) திரைப்படத்தில் நடித்தனர். இது மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தொடர்ந்து ஊர்வசி, சூர்யபுத்திரி, பக்த கௌரி, மாயாஜோதி, தயாளன், சபாபதி, சிவலிங்க சாட்சி, மனோன்மணி, சதி சுகன்யா, கங்காவதார், அல்லி விஜயம், பஞ்சாமிருதம், பிருதிவிராஜ், காரைக்கால் அம்மையார், திவான் பகதூர் மற்றும் பல திரைப்படங்களில் நடித்தார். சில படங்களில் பாடியும் நடித்தார்.[1]
ராஜகாந்தத்திற்கு குணசித்திர பாகத்தைக் கொடுத்த படம் பர்மா ராணி. இதில் பிரித்தானிய உளவாளியாக இருந்த வாத்தியாரம்மா வேடம் ராஜகாந்தத்திற்கு கிடைத்தது. நியூட்டோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட ஏகம்பவாணன் திரைப்படத்தில் முதற்தடவையாக கே. சாரங்கபாணியுடன் இணைந்து நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார்.[1]
ராஜகாந்தம் தானே ஒரு நகைச்சுவை நாடகக் குழுவை ஆரம்பித்து சில நாடகங்களில் நடித்து வந்தார். ராஜகாந்தத்தின் ஒரேயொரு மகளான ராஜலட்சுமி பின்னணிப் பாடகரும், வானொலிப் பாடகருமான திருச்சி லோகநாதனை மணந்தார்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.