From Wikipedia, the free encyclopedia
எழுத்தின் வரலாறு என்பது, வரி வடிவங்களின் மூலம் மொழியைக் குறிக்கும் முறை பல்வேறு நாகரிகங்களிலும் தோற்றம்பெற்று வளர்ந்த வரலாற்றைக் குறிக்கும். உண்மையான எழுத்துமுறை மெசொப்பொத்தேமியா, சீனா, எகிப்து, நடு அமெரிக்கா ஆகிய நாகரிகப் பகுதிகளில் தனித்தனியாகத் தோன்றி வளர்ந்ததாகத் தெரிகிறது. எனினும், எகிப்து, எழுத்துமுறையின் கருத்துருவையாவது சுமேரியர்களிடம் இருந்து பெற்றிருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சீனாவினதும், மெசொப்பொத்தேமியாவினதும் எழுத்து முறைகள் இன்றைய உலகில் புழக்கத்தில் உள்ள எழுத்து முறைகளின் வளர்ச்சியில் பெருமளவு செல்வாக்கைக் கொண்டிருந்தன. மிகவும் பிற்காலத்தில் ஏறத்தாழ கிமு 900 ஆவது ஆண்டளவில் தோன்றிய நடு அமெரிக்க எழுத்து முறையைத் தவிர்த்து, ஏனைய எழுத்து முறைகள் புதிய கற்காலத்தின் எழுத்துக்கு முற்பட்ட குறியீடுகளில் இருந்து, கிமு 4ஆவது ஆயிரவாண்டு காலப் பகுதியில் நிலவிய தொடக்க வெண்கலக் காலத்தில் வளர்ச்சியடைந்தவையாகும்.[1]
எழுத்து முறைகள் |
---|
வரலாறு வரிவடிவம் பட்டியல் |
வகைகள் |
ஒலியனெழுத்து Featural alphabet அப்ஜாட் அபுகிடா அசையெழுத்து உருபனெழுத்து |
தொடர்புள்ள தலைப்புக்கள் |
படவெழுத்து கருத்தெழுத்து |
கிமு 4ஆம் ஆயிரவாண்டில் வளர்ந்த எழுத்து முறைகளைத் திடீர்க் கண்டுபிடிப்புக்களாகக் கருத முடியாது. இவை இவற்றுக்கு முந்திய காலத்திலிருந்த குறியீட்டு முறைகளிலிருந்து தோன்றியவையாகும். இக் குறியீட்டு முறைகள் முறையான எழுத்து முறைகள் அல்லாவிட்டாலும், அவை எழுத்துகளுக்கு உரிய சில சிறப்பம்சங்களைத் தம்மகத்தே கொண்டிருந்தன. இவை பொருட்குறிப்பு வரிவடிவங்களையோ அல்லது நினைவுக் குறியீடுகளையோ தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்குப் பயன்படுத்தின. எனினும் இவை நேரடியான மொழி சார்ந்த உள்ளீடுகளைக் கொண்டிருக்கவில்லை. இந்த முறைகள் தொடக்கப் புதிய கற்காலத்தில் கிமு 7 ஆவது ஆயிரவாண்டு காலப் பகுதியில் உருவாகின.
குறிப்பாக, வின்கா குறியீடுகள் (Vinča signs) கிமு 7 ஆம் ஆயிரவாண்டில் எளிமையான குறியீடுகளில் இருந்து தொடங்கி, கிமு 6 ஆவது ஆயிரவாண்டு முழுதும் படிப்படியாகச் சிக்கல்தன்மை பெற்று கிமு 5 ஆம் ஆயிரவாண்டு அளவில் தார்த்தாரியா வில்லைகளில் காணப்படும் வடிவங்களாக வளர்ச்சியடைந்ததைக் காட்டுகின்றன. தார்த்தாரியா வில்லைகளில் குறியீடுகள், எழுத்துக்கள் எழுதப்படுவது போன்று ஒழுங்கான வரிசையில் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடியும். ஆறாம் ஆயிரவாண்டுக்கு உரியதாகக் கருதப்படும் டிசுப்பிலியோ வில்லையும் இதைப் போன்றதே. எகிப்து, சுமேரியா ஆகிய பண்டைய அண்மைக் கிழக்குப் பகுதிகளின் ஆப்பெழுத்துக்கு முந்திய பட எழுத்துக்கள் இவ்வாறான குறியீடுகளில் இருந்து வளர்ந்தவையே. இதனால் எக் காலத்தில் முறையான எழுத்து முறை தோற்றம் பெற்றது என்பதைக் குறிப்பாகக் கூற முடியாது. பழைய குறியீடுகள் குறிக்கும் பொருள் என்ன என்பதும் தெரியாமல் இருப்பதால் இவ்வாறு அறிந்து கொள்வது மேலும் கடினமாகிறது.
2003 ஆம் ஆண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆமையோடுகளில் சியாகு எழுத்துக்கள் (Jiahu Script) செதுக்கப்பட்டிருந்தன. கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பு முறையைப் பயன்படுத்தி இது கிமு ஆறாம் ஆயிரவாண்டைச் சேர்ந்தது என அறியப்பட்டுள்ளது. இந்த ஆமையோடுகள், வட சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் சியாகு என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 24 புதை குழிகளுள் கண்டுபிடிக்கப்பட்டன. சில தொல்லியலாளர்கள் இது கிமு 2 ஆவது ஆயிரவாண்டைச் சேர்ந்த ஒராக்கிள் எலும்பு எழுத்துக்களோடு (Oracle bone script) ஒத்திருப்பதாகக் கருதினர். எனினும் பல பிற ஆய்வாளர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
கிமு 4 ஆவது தொடக்கம் 3 ஆவது ஆயிரவாண்டு காலப்பகுதியைச் சேர்ந்த சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் குறியீடுகளும் இவ்வாறான எழுத்துக்கு முந்திய காலக் குறியீடுகளாக இருக்கக் கூடும் எனச் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
வெண்கலக் காலத்தில் உலகின் பண்பாடுகள் பலவற்றில் எழுதும் வழக்கம் உருவானது.
தொடக்ககால சுமேரிய எழுத்துமுறை, பண்டங்களைக் குறிக்கப் பயன்பட்ட களிமண்ணால் செய்யப்பட்ட அடையாள வில்லைகளில் இருந்து தொடங்கியது. கிமு 4 ஆவது ஆயிரவாண்டின் முடிவில் இது கணக்கு வைக்கும் ஒரு முறையாக மாற்றம் பெற்றது. இம்முறையில் ஒரு வட்ட முனை கொண்ட எழுத்தாணியால் ஈரமான களிமண் வில்லைகளில் அழுத்தி எண்களைக் குறிப்பிட்டு வந்தனர். இம் முறையில் ஏற்பட்ட வளர்ச்சியைத் தொடர்ந்து, படிப்படியாக, எண்களுடன் எண்ணப்பட்ட பொருள் என்ன என்பதைக் குறித்துக்காட்ட அப்பொருளின் படத்தையும் வரைந்தனர். இப் படம் கூரிய எழுத்தாணியால் அக் களிமண் தகட்டில் வரையப்பட்டது. இது பட எழுத்தாக உருவானது. கிமு 2700 - 2500 காலப்பகுதியில் வட்ட முனை எழுத்தாணியும் கூரிய எழுத்தாணியும் கைவிடப்பட்டு ஆப்புவடிவ எழுத்தாணி புழக்கத்துக்கு வந்தது. இதனால் இவ்வாறு எழுதப்பட்ட எழுத்து முறை ஆப்பெழுத்து என அழைக்கப்பட்டது. தொடக்கத்தில் உருபனெழுத்துக்களை (logogram) மட்டுமே எழுதப் பயன்பட்ட இம் முறை பின்னர் ஒலியன் கூறுகளையும் குறிக்கப் பயன்பட்டது. கிமு 2600 ஆம் ஆண்டளவில் சுமேரிய மொழியின் அசைகளையும் குறிக்கத் தொடங்கிய ஆப்பெழுத்து முறை இறுதியாக உருபனெழுத்துக்கள், அசைகள், எண்கள் என்பவற்றுக்கான பொது எழுத்துமுறையாக ஆனது. கிமு 26 ஆம் நூற்றாண்டு தொடக்கம் இந்த எழுத்து முறையை அக்காடிய மொழியை எழுதுவதற்கும் பயன்படுத்தினர். அங்கிருந்து இவ்வெழுத்து முறை உர்ரிய மொழி (Hurrian), இட்டைட்டு (Hittite) ஆகிய மொழிகளுக்கும் பரவியது. உகாரிட்டிய மொழி, பழம் பாரசீகம் ஆகிய மொழிகளும் ஆப்பெழுத்துப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு முறையையே பயன்படுத்தின.
எகிப்தியப் பேரரசைப் பேணிக் காப்பதற்கு எழுத்து இன்றியமையாததாக இருந்தது. எழுத்தறிவு கல்விகற்ற எழுதுவோர் என்னும் ஒரு பிரிவினரிடையே மட்டும் நிலவியது. குறிப்பிட்ட பின்னணியைக் கொண்டோரே எழுதப் பயின்று கோவில்கள், அரச மற்றும் படைத்துறைச் சேவைகளில் சேர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். "புனிதஎழுத்து" (hieroglyph) எனப்பட்ட இம்முறை கற்பதற்கு மிகவும் கடினமானது. பிந்திய நூற்றாண்டுகளில், எழுதுவோரின் நிலையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டுமென்றே இதனை மேலும் கடுமையாக்கினர்.
சுமேரிய எழுத்து முறைக்குப் பின்னரே எகிப்திய எழுத்துமுறை புழக்கத்துக்கு வந்ததாகவும், சுமேரிய எழுத்துக்களின் செல்வாக்கினாலேயே எகிப்திலும் இம்முறை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வேறு சிலர் அத்தகைய செல்வாக்குக்கான சான்றுகள் குறைவே என்றும், எகிப்திய எழுத்து முறை சுமேரியத் தொடர்பின்றித் தனியாகவே உருவாகியிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
சீனாவில் பழைய அரச வம்சங்கள் பற்றிய தகவல்கள் பல அவர்கள் விட்டுச் சென்ற எழுத்து ஆவணங்கள் மூலமே தெரிய வந்துள்ளன. சாங் வம்சக் காலத்தில் இருந்து, இத்தகைய எழுத்துக்கள் எலும்பு, வெண்களம் ஆகியவற்றினாலான கருவிகளில் காணப்படுகின்றன. ஆமையோடுகளில் எழுதப்பட்டவற்றின் காலம் கரிமக் காலக்கணிப்பின் மூலம் கிமு 1500 என அறியப்பட்டுள்ளது. எழுதுவதற்குப் பயன்பட்ட பொருள் என்ன என்பதைப் பொறுத்து அது என்ன வகையான ஆவணம் என்பதையும் எவ்வாறு பயன்பட்டது என்பதையும் கண்டுகொள்ள முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அண்மைக் காலக் கண்டுபிடிப்புக்கள் சீன எழுத்து முறைகளின் காலத்தை கிமு 6000 ஆண்டுக் காலப்பகுதி வரை கொண்டு செல்வதாகக் கருதப்படுகின்றது. இந்த ஆமையோடுகளில் உள்ள சியாகு எழுத்து, பன்போ எழுத்து ஆகிய எழுத்துக்கள் உண்மையான எழுத்துக்கள் எனக் கருதுவதற்கான சிக்கல்தன்மை கொண்டவைதானா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. உண்மையான எழுத்துக்களாக இருப்பின், இவை உலகின் முதல் எழுத்து முறை எனக் கருதப்படும் மெசொப்பொத்தேமிய ஆப்பெழுத்துக்களுக்கு 2000 ஆண்டுகள் முந்தியவையாக இருக்கும். எனினும் பெரும்பாலும் இவை ஐரோப்பிய வின்சா எழுத்துக்களை ஒத்த எழுத்துக்கு முந்திய குறியீடுகளாகவே இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது.
இதுவரை வாசித்துப் புரிந்துகொள்ளப்படாத முந்திய ஈலமிய எழுத்துக்கள் கிமு 3200 ஆண்டுக் காலப்பகுதியிலிருந்து காணப்படுகின்றன. இது 3 ஆவது ஆயிரவாண்டுக் காலப் பகுதியில் நீள் ஈலமியமாக மாறியது. இது பின்னர் அக்காடிய மொழியில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஆப்பெழுத்து முறையினால் மாற்றீடு செய்யப்பட்டது.
அனத்தோலிய எழுத்துமுறை மேற்கு அனத்தோலியாவில் உருவானது. முதன் முதலாக கிமு 20 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் இருந்து லூவிய அரச முத்திரைகளில் காணப்படுகின்றன. இவ்வெழுத்து முறை லூவிய மொழியை எழுதப் பயன்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.