From Wikipedia, the free encyclopedia
ஆமை அல்லது யாமை (Turtle) என்பது ஊர்வன வகுப்பைச் சேர்ந்த விலங்கு வரிசை ஆகும். இவற்றின் உடலில் முதுகுப்புறம் உள்ள தனித்துவமான குருத்தெலும்பு ஓடு ஒரு கவசம் போல் செயல்படுகிறது. இதில் மொத்தம் 356 இனங்கள் அறியப்பட்டுள்ளன.[1] ஆமைப் பிரிவின் சில இனங்கள் சுராசிக் இடைக்காலம்[2] முதலே இருந்திருப்பதாகக் கண்டறியப்பட்டடுள்ளது. எனவே இவை ஊர்வனவற்றில் பாம்புகளுக்கும் முதலையினங்களுக்கும் மூத்தன.
ஆமை புதைப்படிவ காலம்: பிந்தைய டிரையாசீக் – அண்மை | |
---|---|
Terrapene carolina | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | ஆமை |
துணைக்குழுக்கள் | |
Cryptodira | |
உயிரியற் பல்வகைமை | |
[[ஆமைக் குடும்பங்களின் பட்டியல்|14 வாழும் குடும்பங்கள்- 356 சிற்றினங்கள்]] | |
நீலம்: கடலாமைகள், கருப்பு: நில ஆமைகள் |
ஆமைகள் குளிர் இரத்த விலங்குகளாகும். அதாவது இவற்றின் உடல் வெப்பநிலையை சூழலுக்கு ஏற்ப இவற்றால் மாற்றிக்கொள்ள முடியும். இது அம்னியோடிக்கு (அம்னியோன் = கருவைச் சுற்றியிருக்கும் ஒரு வகைச் சவ்வு) வகையைச் சேர்ந்த விலங்கு. எனவே அதே வகையைச் சேர்ந்த மற்ற விலங்குகளான ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் போல இவை காற்றை சுவாசிக்கின்றன. மேலும் ஆமைகள் நீருக்குள்ளேயோ நீரையொட்டியோ வாழ்ந்தாலும் நீருக்கடியில் முட்டையிடாமல் தரையிலேயே இடுகின்றன.
உலகின் பெரிய ஆமையினமான பேராமை 200 செ.மீ (6.6 அடி) நீளம் வரையும் 900 கிலோ கிராம் எடை வரையும் வளரும். சீசல்சு தீவிலும் கலாப்பகோசுத் தீவுகளிலும் வாழும் நில ஆமைகள் 130 செ.மீ (51 அங்குலம்) நீளம் வரையும் 300 கிலோ எடை வரையும் வளருகின்றன. உலகின் சிறிய ஆமையான செர்சோபியசு சிக்னேட்டசு எனும் ஆமை தோராயமாக 8 செ.மீ (3.1 அங்) நீளமும் 140 கிராம் எடையும் இருக்கும்.
தலையை ஆமைகள் எவ்வாறு உள்ளிழுக்கின்றன என்பதைப் பொறுத்து அவை இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. கழுத்தை நேர் பின்னே இழுத்துக் கொள்பவை ஒரு வகையாகவும் தலையைத் திருப்பி பக்கவாட்டில் வைத்து இழுத்துக் கொள்பவை இரண்டாவது வகையாகவும் கூறப்படுகின்றன.
நில ஆமைகளின் கண்கள் கீழே எதிரில் உள்ள பொருட்களைப் பார்க்கும் வகையிலும் நீர் ஆமைகள் சிலவற்றின் கண்கள் தலையின் மேற்பக்கத்திற்கு அருகிலும் உள்ளன. கடலாமைகளின் கண்களுக்கு அருகில் கண்ணீர் சுரப்பிகள் உள்ளன. இவை ஆமைகள் குடிக்கும் நீரில் உள்ள மிகையான உப்பினை வெளியேற்ற உதவுகின்றன. இவற்றுக்கு பற்கள் இல்லை எனினும் வலுவான அலகும் தாடைகளும் உண்டு.
ஆமை மேலோடு, கீழோடு ஆகிய இரண்டு பாகங்களாக உள்ளது. எலும்புப் பொருட்களால் ஆன இந்த ஓடுகள் ஆமையின் உடலின் பக்கவாட்டில் இணைந்துள்ளன. இது ஆமையின் உடலுடன் ஒட்டியுள்ளதால், சில உயிரினங்கள் தங்கள் தோலை உரிப்பது போல ஆமையினால் இந்த ஓட்டில் இருந்து வெளிவரமுடியாது.
ஆமைகள் பெரும்பாலான நேரம் நீருக்கடியில் இருந்தாலும் மூச்சு விடுவதற்காக அவை நீருக்கு மேலே அவ்வப்போது வந்தாக வேண்டும். இனத்தைப் பொறுத்து ஒரு ஆமையால் ஒரு நிமிடம் முதல் ஒரு மணி நேரம் நீருக்கடியில் இருக்க முடியும்.[3] சில வகை ஆமைகள் வாழ்நாள் தரையிலேயே வாழ்கின்றன. மேலும் சில ஆமையினங்களில் அவற்றின் குளோயேக்கா (Cloaca) என்னும் பின்துளைகளில் உள்ள பாப்பில்லே எனப்படும் உறுப்பு உள்ளது. இது மீன்கள் எவ்வாறு செவுள்கள் மூலம் நீரில் கரைந்துள்ள ஆக்சிசனை எடுத்துக் கொள்கின்றனவோ அதுபோல ஆக்சிசனை எடுத்துக்கொள்ள உதவுகிறது.[4]
மற்ற ஊர்வனவற்றைப் போலவே ஆமைகளும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. இவற்றின் முட்டைகள் மென்மையாக உள்ளன. ஆமைகள் தம் முட்டைகளை நீர்நிலைக்குருகில் உள்ள உலர்ந்த (அஃதாவது ஈரமற்ற) மணல்வெளியில் இட்டு மூடி வைக்கின்றன. முட்டைகள் தாமாகவே பொரிந்து ஆமைக் குஞ்சுகள் மணலுக்கு மேலே வந்து நீரை நோக்கிச் செல்கின்றன. தாய் ஆமைகள் குஞ்சுகளைப் பராமரிப்பதில்லை.
ஆமைகள் பருவம் அடைய பல ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றன. மேலும் இவை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் முட்டையிடுகின்றன. ஆண்டு தோறும் முட்டையிடுவதில்லை. சில ஆமையினங்களில் சுற்றுச்சூழல் வெப்பம் முட்டையில் இருக்கும் கருவின் பாலினத்தை முடிவு செய்கிறது. வெப்பம் மிகுந்திருப்பின் பெண் ஆமையும் குறைந்திருப்பின் ஆண் ஆமையும் பிறக்கின்றன.
ஆமையின் உடல் உறுப்புகள் அவ்வளவு சீக்கிரம் பழுதாவது இல்லை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நூறாண்டுகள் ஆன ஆமைகளின் ஈரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றை ஆராய்ந்ததில் அவை இளம் ஆமைகளின் உறுப்பைப் போலவே இருந்துள்ளது. இதனால் மரபணு ஆய்வாளர்கள் நீண்ட வாழ்நாளைப் பற்றி அறிந்து கொள்ள இவற்றின் மரபணுக்களை ஆராய்ந்து வருகின்றனர்.[5]
ஆமைகள் பகலில் சுறுசுறுப்பாக இரை தேடிக் கொண்டிருக்கும்.[6] ஆமையின் உணவானது அது வாழும் இடத்தைப் பொருத்து மாறுபடுகிறது. நன்கு வளர்ந்த ஆமைகள் பொதுவாக நீர்வாழ் தாவரங்களை உண்கின்றன. மேலும் சிறிய பூச்சிகள், நத்தைகள், புழுக்களையும் உண்கின்றன. அரிதாக இறந்த கடல் விலங்குகளையும் தின்றதாக அறியப்படுகிறது. நன்னீரில் வாழும் சிறிய ஆமைகள் பல சிறிய மீன்கள் முதலான நீரில் வாழும் உயிரினங்களை உண்ணும் ஊனுண்ணிகளாகும். ஆமைக் குஞ்சுகளின் வளர்ச்சிக்கு புரதம் தேவை என்பதால் அவை முற்றிலும் ஊனுண்ணிகளாகவே இருக்கின்றன.
கடலாமைகள் பொதுவாக மென்மையான உடலைக் கொண்ட கடலுயிரினங்களையும் ஜெல்லி மீன் எனப்படும் கடல் இழுதுகளையும் பஞ்சுயிரிகளையும் உணவாகக் கொள்கின்றன. வலுவான தாடையைக் கொண்ட ஆமைகள் ஓடுடைய மீன்களைத் தின்கின்றன. தோணியாமை ஊனுணவைத் தின்பதில்லை. அது பெரும்பாலும் பாசிகளையே (algae) உணவாகக் கொள்கிறது.[7]
ஆமைகள் பல மனிதர்களால் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. நெகிழி கண்டுபிடிப்பதற்கு முன் ஆமையோடு கண் கண்ணாடியின் சட்டகம் செய்யப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. சில நாடுகளில் ஆமைகள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன. உணவுக்காகவும் ஆமைகளின் முட்டைகளுக்காகவும் ஆமைகள் வேட்டையாடப்பட்டன. இது சில ஆமையினங்களின் அழிவுக்கும் வழிவகுத்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.