From Wikipedia, the free encyclopedia
எருசலேம் பற்றிய நிலைப்பாடுகள் (Positions on Jerusalem) என்பது யூதம், கிறித்தவம் மற்றும் இசுலாம் ஆகிய மதங்களின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்து, சிறப்புடைய பழம்பெரும் நகராகிய எருசலேம் எந்த நாட்டின் அல்லது ஆளுகையின் கீழ் வரவேண்டும் என்பது குறித்து, பன்னாட்டளவில் நிலவுகின்ற சட்டரீதியான மற்றும் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளைக் குறிக்கும்.[1] பன்னாட்டுச் சட்டத்தின்கீழ் எருசலேம் எந்நிலை பெறவேண்டும் என்பது குறித்து நாடுகளிடையேயும் வல்லுநர்களிடையேயும் கருத்து ஒற்றுமை இல்லை.[2] பெரும்பான்மையான உலக நாடுகள் எருசலேம் நகரை இசுரயேல் நாட்டின் தலைநகராக ஏற்பதில்லை. பல நாடுகள் எருசலேம் நகர் இசுரயேலுக்கு உரிமைப்பட்டதல்ல என்று கூறுகின்றன. ஐ.நா.வின் பெரும்பான்மையான நாடுகள், எருசலேம் பன்னாட்டு நிலை கொண்ட நகராக இருக்கவேண்டும் என்று ஐ.நா. அளித்த பரிந்துரையை ஏற்கின்றன.[3]
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
1967இல் நடைபெற்ற ஆறு நாள் போர் என்று அழைக்கப்படுகின்ற சண்டையின்போது இசுரயேல் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்துக்கொண்டது. அது சட்டத்துக்கு முரணானது என்று ஐ.நா. அவையின் பெரும்பான்மை உறுப்பினர் நாடுகள் கருதுகின்றன. "ஒன்றுபட்ட, முழுமையான எருசலேம்" இசுரயேலின் தலைநகராக இருக்கும் என்று இசுரயேல் 1980இல் அறிக்கை விடுத்தது. அதையும் பெரும்பான்மை நாடுகள் ஏற்பதில்லை. என்றாலும், மேற்கு எருசலேம் இசுரயேலின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதுபற்றிப் பெரும்பான்மை நாடுகள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.[4] இவ்வாறு, வெளிநாட்டுத் தூதரகங்கள் இசுரயேல் நாட்டில் டெல் அவீவ் (Tel Aviv) நகரிலும் அதைச் சூழ்ந்த பகுதிகளிலும் அமைந்துள்ளன.
பாலத்தீன ஆட்சியமைப்பும் (Palestinian National Authority) இசுரயேலும் எருசலேமின் நிலைபற்றிப் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வரவேண்டும் என்னும் பரிந்துரை இன்னும் நிறைவேறவில்லை. பாலத்தீன ஆட்சியமைப்பின்படி, எருசலேம் (அல்-குட்சு - Al Quds) வருங்கால பாலத்தீன தன்னுரிமை நாட்டின் தலைநகர் ஆகும்.
ஆனால், இசுரயேலின் பிரதமரான பென்யமின் நெத்தன்யாகு இறுகிய நிலைப்பாடு வெளியிட்டார். அவர் கருத்துப்படி, "எருசலேம் யூத மக்களுக்கு உரிமைப்பட்டது. அது நித்திய காலமும் இசுரயேலின் இறையாண்மைக்கு உட்பட்டே இருக்கும்." "[5]
பிற நிறுவனங்களும் நாட்டு சமூகங்களும் எருசலேம் நகரம் பன்னாட்டு நிலை கொண்ட நகரமாக விளங்கவேண்டும் என்று கருத்துத் தெரிவிக்கின்றன.[6]
1517ஆம் ஆண்டிலிருந்து எருசலேம் ஓட்டோமான் பேரரசின் பகுதியாக இருந்தது. 1830இலிருந்து எருசலேமில் யூதர் பெரும்பான்மையினராக இருந்துள்ளனர்.[7]
19ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய அரசுகள் எருசலேமில் தம் செல்வாக்கைப் பரப்பத் தொடங்கின. அவற்றுள் சில நாடுகள் எருசலேமின் கிறித்தவ புனிதத் தலங்களுக்குப் பாதுகாப்பு அளித்துப் பராமரிக்கத் தொடங்கின. பல நாடுகள் எருசலேமில் அரசுத் தூதரக அலுவலகங்களை ஏற்படுத்தின.
முதலாம் உலகப் போருக்குப்பின், 1917இல் பிரித்தானிய அரசு எருசலேமைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. நேச நாடுகளின் முக்கிய உறுப்பு நாடுகள் எருசலேம் நகரம் ஆபிரகாமிய மதங்களுக்கு (யூதம், கிறித்தவம், இசுலாம்) முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, அது "மனித நாகரிகத்துக்குப் புனிதமான அறக்கட்டளை" போல உள்ளது என்று ஏற்றுக்கொண்டு, எருசலேம் நகர் குறித்து ஏற்கெனவே நடைமுறையில் இருந்த உரிமைக் கோரிக்கைகளும், உடைமைக் கோரிக்கைகளும் மதித்து ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் பன்னாட்டு உத்தரவாதம் அமைய வேண்டும் என்று ஒத்துக்கொண்டன.[8]
எருசலேமைத் தன் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்குமுன், 1948 மே மாதத்தில், பிரித்தானிய அரசு பாலத்தீனப் பகுதி குறித்து அரபு மக்களுக்கும் யூத மக்களுக்கும் இடையே நிலவிய உடைமைக் கோரிக்கையைத் தீர்த்துவைக்குமாறு ஐக்கிய நாடுகள் அவையைக் கேட்டுக்கொண்டது. 1947, நவம்பர் மாதம் ஐ.நா. "181ஆம் தீர்மானம்" என்னும் முடிவை வெளியிட்டது. அதன்படி, பாலத்தீனப் பகுதி அரபு நாடு என்றும் யூத நாடு என்றும் இரு நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டும். எருசலேம் நகரம் "தனி நிலப்பகுதி" (corpus separatum) என்னும் சட்ட நிலை, அரசியல் நிலை பெறவேண்டும். அது ஐ.நா. அவையால் நிர்வகிக்கப்படும். அது 1947இல் வெளியிடப்பட்ட "பாலத்தீனத்தைப் பிரிப்பது பற்றிய ஐ.நா. திட்டம்" என்னும் ஆவணத்தின்படி அரபு நாடு மற்றும் யூத நாடு ஆகியவற்றின் கட்டுப்பாட்டுக்கு உட்படாவகையில் அமையும். இதுவே ஐ.நா. வெளியிட்ட "181ஆம் தீர்மானம்" என்னும் முடிவின் சுருக்கம்.[9]
யூதர்களின் தரப்பைச் சார்ந்த பிரதிநிதிகள், அரபு மக்கள் மேற்கூறிய தீர்மானத்தை ஏற்பதாக இருந்தால் தாங்களும் அதை ஏற்பதாக ஒத்துகொண்டனர். ஆனால் அரபு பிரதிநிதிகளும் அரபு நாடுகளும் ஐ.நா. தீர்மானம் சட்ட முரணானது என்று கூறி அதை நிராகரித்தன.[2]
இசுரயேல் தன்னை முழு இறையாண்மை கொண்ட நாடாக 1948 மே மாதம் அறிவித்து விடுதலைப் பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து அண்டைய அரபு நாடுகள் இசுரயேல் மீது படையெடுத்தன. இவ்வாறு, எருசலேம் குறித்து ஐ.நா. வெளியிட்ட தீர்மானம் செயல்படாமல் மடிந்தது. 1949இல் போர்முடிவு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, எருசலேம் நகரின் கீழ்ப்பகுதி யோர்தான் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள்ளும், எருசலேம் நகரின் மேற்குப் பகுதி இசுரயேல் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வந்தன.[10] இரு தரப்பினரும் ஒருவர் மற்றொருவர் நடைமுறையில் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த பகுதிகளை ஏற்றனர்.[11] எருசலேம் நகரம் பன்னாட்டுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐ.நா. வெளியிட்டிருந்த தீர்மானத்தைப் பொறுத்தமட்டில், இசுரயேலுக்கும் யோர்தானுக்கும் இடையே ஏற்பட்ட போர்முடிவு ஒப்பந்தம் பன்னாட்டுச் சட்ட முறைமை கொண்டதாக ஏற்கப்படவில்லை.[12]
உடனடியாக இசுரயேல், "எருசலேம் நகரம் இசுரயேல் நாட்டுக்கே உரித்தான பகுதி என்னும் வகையில் அது நித்திய காலத்துக்கும் இசுரயேலின் தலைநகராகவே இருக்கும்" என்று அறிக்கையிட்டது. 1950 இல் யோர்தான் கிழக்கு எருசலேமை தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஐக்கிய இராச்சியம் மற்றும் பாக்கிஸ்தான் நாடு ஆகியவை இதனை ஏற்றுக் கொண்டன.[13] வேறு எந்த உலக நாடும் யோர்தானோ அல்லது இசுரயேலோ எருசலேமில் ஆட்சி செய்வதை சட்டரீதியாக ஏற்கவில்லை.[10]
ஐக்கிய நாடுகளின் பொதுப்பேரவை கீழ்வருமாறு கூறியுள்ளது: "எருசலேம் நகரம் தனிப்பட்ட ஆன்மிக, சமயம் சார்ந்த மற்றும் கலாச்சாரக் கூறுகளைக் கொண்ட நகரம் என்பதால் அவற்றைப் பாதுகாக்கும் வகையில் பன்னாட்டு சமூகம் வழியாகச் செயல்படுகின்ற உரிமை ஐ.நா.வுக்கு உண்டு."[15] இந்த ஐ.நா. நிலைப்பாட்டுக்கு அடிப்படையாக அமைவது 1947, நவம்பர் 29ஆம் நாள் ஐ.நா. பொதுப்பேரவை வெளியிட்ட "181ஆம் தீர்மானம்" ஆகும். அது கூறியது: "எருசலேம் நகரம் ஒரு தனி நிலப்பகுதியாக ஏற்படுத்தப்பட வேண்டும். அது பன்னாட்டு நிர்வாகத்தின் கீழ் ஐ.நா. நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும்."[16]
இந்த நிலைப்பாட்டை ஐ.நா. பொதுப்பேரவை, 1948ஆம் ஆண்டு அரபு-இசுரேலி போருக்குப் பின்னரும் அறிவித்தது (ஐ.நா. பொதுப்பேரவையின் 303ஆம் தீர்மானம்). மேலும், 1979இல் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையும் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்துவதாகத் தெரிகிறது.[17]
இசுரயேல் எருசலேம் நகரைத் தனது தலைநகராக அறிவித்தது சட்டபூர்வமாகச் செல்லாது என்பது ஐ.நா. பொதுப்பேரவையின் நிலைப்பாடு ஆகும். அது ஐ.நா. பொதுப்பேரவையின் 2009ஆம் ஆண்டு தீர்மானம் 63/30 என்னும் அறிவிப்பிலிருந்து தெரிகிறது. அந்த தீர்மானம் பின்வருமாறு கூறுகிறது: "ஆக்கிரமிப்பு நாடாகிய இசுரயேல் எருசலேம் திருநகரின்மீது தனது சட்டங்கள், சட்ட உரிமை, நிர்வாகம் சார்ந்தவற்றைத் திணிப்பது சட்டப்படி செல்லாது. இத்தகைய சட்டமுரணான, தன்னிச்சையான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்துமாறு இசுரயேல் கேட்டுக்கொள்ளப்படுகிறது."[15]
இதுவரை, ஐ.நா. பாதுகாப்பு சபையின் ஆறு தீர்மானங்கள் இசுரயேல் எருசலேமைக் கையகப்படுத்தியது சட்டத்துக்கு முரணானது என்று அறிவித்துள்ளன. பாகுபடாத எருசலேம் இசுரயேலின் தலைநகராக நித்திய காலமும் இருக்கும் என்று இசுரயேல் 1980இல் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த அறிவிப்பு பன்னாட்டுச் சட்டத்தை மீறியது ஆகும் என்றும், அதனால் எருசலேமிலிருந்து பன்னாட்டுத் தூதரகங்கள் இடம்பெயர்வதே நல்லது என்றும் ஐ.நா. பாதுகாப்பு சபை தனது 1980ஆம் ஆண்டு தீர்மானம் 478இல் அறிவித்தது.
எருசலேம் நகரின் மேற்குப்பகுதியைத் 1948ஆம் ஆண்டில் தனக்கு உரியதாகப் பெற்றதால், அதன் மீது இறையாண்மை தனக்கு உண்டு என்று இசுரயேல் நாடு உரிமைபாராட்டுகிறது. பாலத்தீனக் குடியேற்றத்தை விட்டுவிட்டு பிரித்தானிய நாடு சென்றதால், போர்க்காலத்தின்போது எருசலேம் பகுதி எந்தவொரு இறையாண்மையின் கீழும் இருக்கவில்லை. அப்போது இசுரயேல் அங்கு நுழைந்து அதைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தது.[10]
1967இல் ஆறு நாள் போர் என்னும் சண்டையின்போது, இசுரயேல் கிழக்கு எருசலேமைக் கைப்பற்றி அங்கு தனது ஆட்சியையும் நிர்வாகத்தையும் நிறுவி, புதிய நகராட்சி எல்லைகளையும் வரையறுத்தது. எருசலேம் நகரில் அமைந்துள்ள புனித தலங்களுக்குப் பயணியர் சென்றுவருவதற்கான பாதுகாப்பையும் இசுரயேல் அளித்தது. அச்சமயத்தில் இசுரயேல் ஐ.நா.வுக்குக் கொடுத்த தகவலில், தான் கிழக்கு எருசலேமை ஆக்கிரமித்துப் பிடித்துக்கொள்ளவில்லை என்றும், நிர்வாகத்தின் பொருட்டும் நகராட்சி எல்லைகளை வரையறுக்கும் பொருட்டும் நடவடிக்கை எடுத்ததைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை என்றும் கூறியது. ஆனால், இசுரயேலின் உச்ச நீதி மன்றம் பின்னர் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இசுரயேல் கிழக்கு எருசலேமைத் தனது இறையாண்மைக்கு உட்பட்ட பகுதியாகக் கருதிச் செயல்பட்டது தெளிவாகவே தெரிந்தது.
இசுரயேல் தனது நிலைப்பாட்டைக் கீழ்வருமாறு வெளியிட்டது: "யோர்தான் நாடு எருசலேம் நகரின் கிழக்குப் பகுதியை ஆக்கிரமித்து 1948இல் கையகப்படுத்திக்கொண்டது. எனவே அதற்கு இறையாண்மை கோர முடியாது. ஆனால் இசுரயேலோ 1967இல் தற்காப்புப் போரில் ஈடுபட்டு அப்பகுதியைப் பெற்றுக்கொண்டதால், அப்பகுதியின்மீது அதிக வன்மையோடு உரிமைபாராட்ட முடியும்."[10]
1980 சூலை மாதத்தில் இசுரயேலிய நாடாளுமன்றமான கினேசட், நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் ஓர் அம்சமாக "எருசலேம் சட்டம்" என்றொரு சட்டம் இயற்றி, "ஒன்றுபட்ட எருசலேம் இசுரயேலின் தலைநகர் ஆகும்" என்று அறிக்கையிட்டது.[18] இசுரயேலின் நாட்டுத்தலைவர் அலுவலகம், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் எருசலேமில் அமைந்துள்ளன.
2010, நவம்பர் மாதத்தில் இசுரயேலிய நாடாளுமன்றம் மற்றுமொரு சட்டத்தை இயற்றியது. கிழக்கு எருசலேம் சார்பான மற்றும் கோலான் நிலப்பகுதி தொடர்பான உடைமையுரிமையை இசுரயேல் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றால் அதற்குமுன் பொதுமக்களின் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தின் 60 உறுப்பினரின் இசைவு பெறப்பட்டிருக்கவேண்டும் என்றும் அச்சட்டம் கூறுகிறது.[19]
ஐ.நா. அவை "எருசலேம் பன்னாட்டு நிர்வாகத்தின்கீழ் இருக்கவேண்டும்" என்று தீர்மானம் இயற்றியதற்குப் பன்னாட்டுச் சட்டமுறையில் எந்த ஆதாரமும் இல்லை என்று இசுரயேல் கருதுகிறது. மேலும், ஐ.நா.வின் நிலைப்பாடு எந்த நாட்டையும் கட்டுப்படுத்தாத ஒரு பரிந்துரை மட்டுமே. அப்பரிந்துரையின் செயல்படு காலமும் கடந்துவிட்டது. அதாவது, அரபு நாடுகள் ஐ.நா.வின் 181ஆம் தீர்மானத்தை மீறி, இசுரயேல் நாட்டின்மீது சட்டமுரணாகப் படையெடுத்த நேரத்திலிருந்து ஐ.நா.வின் பரிந்துரை மடிந்துபட்டது. இது இசுரயேலின் நிலைப்பாடு. எருசலேமைத் "தனிப்பகுதி" (corpus separatum) என்று கருதுவதற்கான பன்னாட்டு ஒப்பந்தமோ, உடன்படிக்கையோ, புரிதலோ எக்காலத்திலும் இருந்ததில்லை என்று இசுரயேல் கூறுகிறது.[20]
இசுரயேலில் ஆட்சிசெய்த அரசுகள் மாறியபோது, எருசலேம் பற்றி அந்த அரசுகள் கொண்டிருந்த நிலைப்பாடும் அவ்வப்போது மாறிவந்துள்ளது. இசுரயேலி பிரதமராய் இருந்த இட்சாக் ரபீன் (Yitzhak Rabin) ஓஸ்லோ உடன்படிக்கையில் (Oslo Accords) கையெழுத்திட்டார். அதில் எருசலேமின் வருங்கால சட்டநிலை கருத்துப்பரிமாற்றத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் என்றுள்ளது. ஆனால், அதே நேரத்தில் ராபின், "எருசலேம் நகரை ஒருபோதும் பிரிக்கப்போவதில்லை" என்றும் கூறினார். பின்னர், 1995இல் பள்ளிச் சிறுவர் குழுவினரிடம் பேசும்போது ராபின், "இசுரயேலின் இறையாண்மையின் கீழ் இருக்கின்ற ஒன்றுபட்ட எருசலேமைக் கைவிட்டால் அமைதி ஏற்படும் என்று யாராவது கூறினால், அதற்கு நாம் அளிக்கின்ற பதில், 'அப்படிப்பட்ட அமைதி எங்களுக்கு வேண்டாம்' என்பதே" என்று கூறினார்.
பிரதமர் ராபினுக்குப் பின் பதவி ஏற்ற பிரதமர் பென்யமின் நெத்தன்யாகு என்பவரும் மேற்கூறிய நிலைப்பாடு கொண்டவராகவே இருந்தார். அவருக்குப் பின் பதவியேற்ற பிரதமர் ஏகுட் பாராக் என்பவர், தேர்தல் பரப்புரையில் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக, "எருசலேம் பிரிக்கப்படுவது தேவை என்றால் அதற்கும் அணியமாய் இருக்கிறோம்" என்று கூறினார். இவ்வாறு விட்டுக்கொடுக்கும் மனநிலையோடு பேசிய முதல் இசுரயேலி பிரதமர் பாராக் மட்டுமே.[21] பின்னர் பதவியேற்ற பிரதமர் ஆரியேல் ஷாரோன் (Ariel Sharon) "எருசலேம் எக்காலத்திற்கும் யூத மக்களின் பிளவுபடாத தலைநகராக இருக்கும்" என்று சூளுரைத்தார்.[22] பின் பதவியேற்ற பிரதமர் ஏகுட் ஓல்மெர்ட் என்பவர், தற்போது இசுரயேலி இறையாண்மையின் கீழ் உள்ள அரபு குடியேற்றங்களைப் பிரித்துக் கொடுக்கவும், கோவில் மலை பகுதியைப் பன்னாட்டு அறக்கட்டளை ஒன்றின்கீழ் கொணரவும் ஆதரவு தெரிவித்தார்.
ஆனால், அதன் பின் பிரதமரான பென்யமின் நெத்தன்யாகு கடினப்போக்கு கொண்டவர். அவர் கூற்றுப்படி, "ஒன்றுபட்ட, முழுமையான எருசலேம் நகரம் நித்திய காலத்துக்கும் இசுரயேலின் தலைநகராகவே இருக்கும். எந்த சமயத்தைச் சார்ந்தவர்களும் எருசலேமுக்கு வந்து போகலாம்."
கிழக்கு எருசலேம் இசுரயேல் நாட்டினால் ஆக்கிரமித்துக் கைப்பற்றப்பட்ட பகுதி என்று ஐ.நா. பாதுகாப்பு அவை தனது 242ஆம் தீர்மானத்தில் கூறியிருப்பதைப் பாலத்தீனிய ஆட்சியமைப்பு தன் நிலைப்பாடாகக் கொண்டுள்ளது. பாலத்தீன நாட்டின் தலைநகரம் கோவில் மலை உட்பட்ட கிழக்கு எருசலேம் முழுவதும் ஆகும் என்றும், மேற்கு எருசலேம் எந்நிலையது என்பதற்கு குறித்துப் பேச்சுவார்த்தையின்படி முடிவுசெய்யலாம் என்பதும் பாலத்தீனிய நிலைப்பாடு. இருந்தாலும், "எருசலேமைத் 'திறந்த நகர்' (open city) என்று கொள்வது, அல்லது வேறு தீர்வுகளைக் காண்பது எப்படியென்று பேச்சுவார்த்தை நடத்துவது தனக்கு ஏற்புடையதே என்றும் பாலத்தீனம் கூறுகிறது.
1988ஆம் ஆண்டு பாலத்தீனிய விடுதலை இயக்கம் (PLO) வெளியிட்ட "பாலத்தீனிய விடுதலைப் பிரகடனத்தில்" (Palestinian Declaration of Independence) எருசலேம் பாலத்தீன நாட்டின் தலைநகரம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் பாலத்தீனிய ஆட்சியமைப்பு, எருசலேமைத் தன் தலைநகராக அறிவித்துச் சட்டம் இயற்றியது. அச்சட்டம் யாசிர் அரபாத்தால் 2002இல் அமலாக்கப்பட்டது. காண்க:[23]
பாலத்தீனிய நாட்டு ஆட்சியமைப்பின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு இது: "எருசலேம் 'திறந்த நகராக' இருக்கும். அது தனித்தபகுதிகளாகப் பிரிக்கப்படாமல் இருக்கும். சமயம் தொடர்பான இடங்களைப் பாதுகாத்தல், அவற்றைச் சந்தித்து வழிபாடு நடத்தவரும் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், அதற்கான சுதந்திரம் வழங்கல் அனைத்திற்கும் பாலத்தீன அரசு பொறுப்பு ஏற்கும்."[24]
ஒரு நிலப்பகுதியை வன்முறையால் கையகப்படுத்துவது சட்ட முரணானது என்னும் கொள்கையின் அடிப்படையிலும், ஐ.நா. பாதுகாப்பு அவையின் 242ஆம் தீர்மானத்தின் அடிப்படையிலும் ஐரோப்பிய ஒன்றியம், பேச்சுவார்த்தைகளின் விளைவாக எருசலேமின் நிரந்தர நிலை பற்றிய தீர்வு ஏற்படுவதற்குத் தடையாக அமையக்கூடுமான நடவடிக்கைகளை எதிர்க்கிறது. சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒத்துக்கொண்டாலன்றி, எருசலேம் தொடர்பான எல்லை வரையறைகள் 1967க்கு முந்திய நிலைப்படி அமைய வேண்டும் என்பதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாடு.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளுள் பின்வருவனவும் அடங்கும்: கிழக்கு எருசலேமில் பாலத்தீன ஆட்சியமைப்பு தனது நிறுவனங்களை மீண்டும் ஏற்படுத்த வழி திறக்கப்பட வேண்டும். குறிப்பாக, "கிழக்கு இல்லம்" (Orient House), வர்த்தக இல்லம் (Chamber of Commerce) ஆகியவை இந்த நிறுவனங்களுள் அடங்கும். வேலைக்கு அனுமதி வழங்கல், கல்வி மற்றும் மருத்துவ வசதி பெற வாய்ப்புகள், கட்டடங்கள் எழுப்ப அனுமதி, வீடுகள் தகர்த்தல், வரிவிதிப்பு, செலவினங்கள் போன்ற துறைகளைப் பொறுத்தமட்டில் கிழக்கு எருசலேமில் பாலத்தீனியருக்கு எதிராகச் செயல்படாதிருக்க வேண்டும் என்று இசுரயேலி அரசு கேட்டுக்கொள்ளப்படுகிறது."[29]
2010, மார்ச்சு 21ஆம் நாள், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைத் துறை பிரதிநிதியான காதரின் ஆஷ்லி (Catherine Ashley) என்பவர் பின்வருமாறு கூறினார்:
"ஐரோப்பிய ஒன்றியம் தனது கொள்கையை சென்ற திசம்பர் மாதம் அறிக்கையிட்டது. அதன்படி, அமைதியும் பாதுகாப்பும் நிலவுகின்ற பாலத்தீனம் மற்றும் இசுரயேல் என இரு நாடுகள் அருகருகே உருவாகும் தீர்மானத்தை அது ஆதரிக்கிறது. 1967இல் இருந்த எல்லைக் கோட்டின்படி, கிழக்கு எருசலேம் மற்றும் காசா நிலப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கி மேற்குக் கரையில் செயல்படக்கூடுமான பாலத்தீன நாடு உருவாக வேண்டும். எருசலேம் நகரம் பாலத்தீனம் மற்றும் இசுரயேல் ஆகிய இரு நாடுகளுக்கும் உரிய தலைநகராக மாறக்கூடிய விதத்தில் வழி காணப்பட வேண்டும்."
- ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைத் துறை பிரதிநிதி காதரின் ஆஷ்லி[30]
"எருசலேம் நகரம்" எந்த எல்லைகளைக் கொண்டதாக ஐக்கிய நாடுகள் அவை வரையறுத்து, அந்நகரை ஒரு "தனிநிலமாக" (corpus separatum) அறிவித்ததோ, அதையே ஐக்கிய அமெரிக்கா நாடுகளும் குறிப்பிடுகிறது. அதன்படி, "சட்டப்பூர்வமாக" (de jure) எருசலேம் நகரம் "பாலத்தீன நில ஆட்சியை" (Palestine Mandate) சார்ந்தது; அதன்பின் அந்நகரம் வேறு எந்த இறையாண்மைகொண்ட நாட்டின் ஆளுகையின்கீழும் வந்ததில்லை.[37][38] 1989-1993 ஆண்டுகளில் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ் (George H. W. Bush) பின்வருமாறு கூறினார்: "கிழக்கு எருசலேமில் புதிய குடியேற்றங்கள் கட்டப்படுவது சரி என்று அமெரிக்க ஐக்கிய நாடுகள் கருதவில்லை"[39] மேலும், எருசலேம் பிளவுபடுவதையும் தான் விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
2008ஆம் ஆண்டு, சூன் மாதம் ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பராக் ஒபாமா பின்வருமாறு கூறினார்: "எருசலேம் இசுரயேலின் தலைநகராகத் தொடர்ந்து இருக்கும். அது பிளவுபடாமலும் இருக்கவேண்டும்."[40] கிழக்கு எருசலேமில் வாழ்ந்த பாலத்தீனியரைப் பாதிக்கும் விதத்தில் ஜீலோ மற்றும் ராமத் ஷ்லோமோ பகுதிகளில் இசுரயேலி குடியேற்றம் விரிக்கப்படுவதையும், மக்கள் வீடுகளிலிருந்து அகற்றப்படுவதையும், வீடுகள் தரைமட்டமாக்கப்படுவதையும் ஒபாமா அரசு கண்டனம் செய்துள்ளது.[41][42][43]
ஐ.நா. பாதுகாப்பு அவை 478ஆம் தீர்மானத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து, எருசலேமில் தங்கள் தூதரகங்களை அமைத்திருந்த 13 நாடுகள் அங்கிருந்து தம் தூதரகங்களை இடம்பெயர்த்து, முக்கியமாக டெல் அவீவ் நகருக்குக் கொண்டுசென்றன. அவ்வாறு எருசலேமிலிருந்து தூதரகங்களை அகற்றிய நாடுகள் இவை:
மேற்கூறிய நாடுகளுள் கோஸ்ட்டா ரிக்கா மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகள் 1984இல் தங்கள் தூதரகங்களை மீண்டும் எருசலேமுக்கு மாற்றின. பின்னர் 2006இல் கோஸ்ட்டா ரிக்கா தன் தூதரகத்தை மீண்டும் ஒருமுறை டெல் அவீவ் நகருக்குக் கொண்டுசென்றது. ஒரு சில வாரங்களுக்குப் பின் எல் சால்வடோர் நாடும் அவ்வாறே தனது தூதரகத்தை டெல் அவீவுக்கு மாற்றியது.[65][66] தற்போது பன்னாட்டுத் தூதரகம் எதுவும் எருசலேமில் இல்லை. பராகுவாய் மட்டும் எருசலேமுக்கு மேற்கே 10 கி.மீ தூரத்திலுள்ள மெவாசரெத் சீயோன் என்னும் இடத்தில் தன் தூதரகத்தைக் கொண்டுள்ளது.[67] பொலீவியாவும் அவ்வாறே செய்தது, ஆனால் 2009இல் இசுரயேலோடு தூதரக உறவுகளை முறித்துக்கொண்டது.[67][68] உலக நாடுகளுள் பல 1940களிலும் 1950களிலும் இசுரயேலை இறையாண்மை கொண்ட தனி நாடாக ஏற்றன. ஆனால் மேற்கு எருசலேம் மீது இசுரயேல் நாட்டுக்கு இறையாண்மை உண்டு என்று அவை ஏற்கவில்லை. Consular Corps of the Corpus Separatum என்னும் பெயர்கொண்ட பன்னாட்டு "தனிநிலப்பகுதி துணைத் தூதரகம்" ஒன்று எருசலேமில் அமைந்துள்ளது.
சில நாடுகள் எருசலேமில் "துணைத் தூதரகங்கள்" (consulates) அமைத்துள்ளன. அந்த நிறுவனங்கள் பிரித்தானியக் கால பாலத்தீனத்தின் சட்டநிலை கொண்டவை (Mandate Palestine) என்றும், அந்த நிலப்பகுதி எந்தவொரு நாட்டின் இறையாண்மைக்கும் உட்படவில்லை என்றும் மேற்கூறிய நாடுகள் கூறுகின்றன.[12]
நெதர்லாந்து அரசு எருசலேமில் ஓர் அலுவலகத்தை நடத்துகிறது. அது முக்கியமாக இசுரயேலி குடிமக்களுடைய தேவைகளுக்காக உள்ளது. எருசலேமில் துணைத் தூதரகம் அமைத்துள்ள பிற நாடுகள் இவை:
இசுரயேலின் குடியரசுத் தலைவர் எருசலேமில் தங்கியிருப்பதாலும், அங்குதான் அவர் அயல்நாட்டுத் தூதர்களின் பதவி ஆவணத்தைப் பெறுவதாலும், அயல்நாட்டுத் தூதர்கள் டெல் அவீவ் நகரிலிருந்து பயணம் செய்து எருசலேம் வந்து அங்கு தம் ஆவணத்தைச் சமர்ப்பிக்கிறார்கள்.
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தூதரகம் டெல் அவீவ் நகரிலும், துணைத் தூதரகம் "தனிப்பகுதி" நிலைப்படி (Consular Corps of the Corpus Separatum) எருசலேமிலும் உள்ளது.[70] அமெரிக்காவின் நாட்டுச் சட்டப்படி, ஒரு நிலப்பகுதியில் அன்னிய இறையாண்மையை ஏற்று ஒப்புதல் அளிக்கும் பொறுப்பு அமெரிக்க முதல்வருக்கு மட்டுமே உரிய பொறுப்பு ஆகும்.[71] அமெரிக்க நாடாளுமன்றம் (Congress) ஒன்றுபட்ட எருசலேம் நகரத்தை இசுரயேலின் தலைநகராக ஏற்பது பொருத்தம் என்றும், அமெரிக்க தூதரகத்தை எருசலேமில் நிறுவுவது பொருத்தம் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. அத்தீர்மானங்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை மற்றும் கீழவை தம் விருப்பத்தைத் தெரிவிப்பதாக அமைகின்றனவே ஒழிய, கட்டுப்படுத்தும் திறன் (binding effect) கொண்டவை அல்ல.
1995இல் பாராளுமன்றம் நிறைவேற்றிய "எருசலேம் தூதரகச் சட்டம்" (Jerusalem Embassy Act) என்னும் தீர்மானம் இவ்வாறு உள்ளது: "எருசலேம் இசுரயேலின் தலைநகராக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஐக்கிய அமெரிக்க நாடுகளின் இசுரயேல் தூதரகம் எருசலேமில் 1999, மே 31ஆம் நாளுக்கு முன் நிறுவப்பட வேண்டும்." இத்தீர்மானம் அமெரிக்க முதல்வரின் அதிகாரத்தில் தலையீடுபோல் அமையக்கூடும் என்பதால் சட்டத்திற்கு முரணானது என்று அமெரிக்க நீதித்துறை கூறியது.[72]
டெல் அவீவ் போன்ற ஒரு நகரத்தில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது என்னும் ஒரே காரணத்தின் அடிப்படையில் அந்த நகரைத் தலைநகராக அமெரிக்கா கருதுகிறது என்று பொருளாகாது. வெளியுறவுச் சட்ட வல்லுநர்கள் கூற்றுப்படி, அமெரிக்க நாடாளுமன்றம் எருசலேமில் தூதரகம் அமைக்கவேண்டும் என்று வற்புறுத்துவதாக இருந்தால், அமெரிக்க அரசு எருசலேமில் இன்னொரு தூதரகத்தை அமைத்துவிட்டு, அதே நேரத்தில் எருசலேமை இசுரயேலின் தலைநகராகக் கருதவில்லை என்று வாதாட முடியும்.[73] அமெரிக்கா தனது துணைத் தூதரகத்தை எருசலேமின் பகுதியாகிய டால்பியோட் (Talpiot) என்னுமிடத்திற்கு மாற்றி, அங்கு எருசலேமிலும் பாலத்தீன நிலப்பகுதிகளிலும் வாழும் குடிகளுக்கு நுழைவுரிமை வழங்கல், வர்த்தகம் மேம்படுத்தல் போன்ற அரசு சேவைகளில் ஈடுபட்டுள்ளது.[74]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.